Wednesday, November 25, 2015

விசுவரூபம்!

பவள சங்கரி






நல்லதாக ஒன்று வாங்க வேண்டும்
ஏன் இருப்பதற்கு என்னவாம்?
வண்ணம் பலவாய் இருந்தாலும்
திண்ணம் சமமாய் இருந்தாலும்
வடிவம் வேறான தோற்றம் 
அத்தனையும்  அசலில்லா நகல்கள்!

சற்றேனும் எதனுடனோ பொருந்தியிருக்கலாம்
எல்லாமே போகமும் மோகமும் தேடுவன
தங்கக்கூண்டில் அடைக்கத் துடிப்பன
முளைக்கத் துடிக்கும் சிறகை 
கிளைக்காமல் தடுக்கும் வளிவீச்சு
துள்ளலை எள்ளலாய் முடக்குவன
விள்ளலாய் வாழ்ச்சியை துய்ப்பன!

பொன்னில் மஞ்சளும் வெண்மையும்
வேறானாலும் திடமும் களமும் வேறல்ல
மஞ்சள்பொன் தொன்மையென்றால்
வெள்ளைப்பொன் நவீனம்தான்
மஞ்சளோ வெள்ளையோ எதானாலென்ன
முடங்கியதும் முடக்குவதும் தரத்தினாலே


விசுவரூபம் காட்டுமந்த ஒன்று வேண்டும்
விகாரமனம் வெளிப்படும் அதுவும் வேண்டும்
விடையில்லா வினாக்களை விடுவிக்கவும் வேண்டும்
விட்டிலாய் வீழாமல் காக்கவும் வேண்டும்.

பகடைகளாய் உருட்டுவோர் பதம்காட்ட வேண்டும்
பத்மவியூகம் அமைப்போர் நிறமும்காட்ட வேண்டும்
பழவினைகள் போக்குவோர் திறமும்காண வேண்டும்
பசப்புகள் பற்றாகாமல் விலகவும் வேண்டும்.

மாறுவேடங்கள் மாறாத மந்திரச் சொற்கள்
கூறுமடியார்போல் கூரான தந்திரச் சாடல்கள்
வீறுகொண்டெழும் வீணரின் விவகார நிந்தனைகள்
சேறுவீசும் சிற்றறிவின் சிலுமிசங்கள்
அனைத்தும் அசலான நகலுக்கு
அறச்சீற்றம் கொள்வதன்றி வடிகாலேதுமில்லையே?






1 comment:

  1. /// மஞ்சள்பொன் தொன்மையென்றால்
    வெள்ளைப்பொன் நவீனம்தான் ///

    அருமை....

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...