Thursday, April 28, 2016

சத்தான சிறுதானிய அடை




தினம் மூன்று வேளைகளும் அரிசி உணவையே எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

சிறுதானியங்களான கம்பு, சோளம், வரகு, பனிவரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, போன்றவைகள் அதிக ஆற்றல் தரக்கூடியவைகள். அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது இவை புரதச்சத்து, நார்ச்சத்து மிகுந்தும், பைடிக் அமிலம் குறைந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின் சத்துக்களை கொண்டதாக உள்ளன. பாரம்பரிய சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், இரத்தக் கொதிப்பு போன்ற நோய்களிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம் என்பது உறுதி.


சாமை

சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர முக்கிய பங்குவகிப்பது நார்சத்து. சாமை நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் . இதனை உணவாக உட்கொள்ளும் போது நீரழிவு நோயினை கட்டுப்படுத்தவும், நோய் வராமலும் தடுத்திடவும் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

சாமையில் இரும்பு சத்து அளவிட்டால் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் அதிகம் என்பதால் இரத்தசோகை வருவதற்கான வாய்ப்பினை இது குறைக்கிறது.

நோய்களுக்கெல்லாம் மூலமாக கருதப்படும் மலச்சிக்கலை தீர்க்கிறது சாமை.
வயிற்றுக் கோளாறுக்கு சாமை நல்லதொரு மருந்தாகவும் இருக்கிறது. தாதுப் பொருட்களை உடலில் அதிகரித்து உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில் சாமையின் பங்கு அதிகம்.

வரகில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ள து. இது உடல் எடையை குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.

சாமை, வரகு, குதிரைவாலி, தினை போன்ற புன்செய் தானியங்களில் இரும்பு, மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் போன்ற தனிமங்கள் மிகுந்திருக்கின்றன.

சிறு தானியங்களால் ஆன உணவு குளுக்கோசை சிறிது, சிறிதாக நீண்ட நேரத்துக்கு வெளியிடுவதால் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. குளுட்டன் எனும்  மாவுச்சத்து இத்தானியங்களில் அறவே இல்லை என்பதால் குளுட்டன் நிறைந்த நெல்லரிசி, கோதுமை போன்ற தானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவை உண்ணும்போது உண்டாகும் களைப்பு, அமிலத்தினாலான வயிறு எரிச்சல், உடல்பருமன், புற்று நோய், வயிற்றுப்போக்கு போன்றவை சிறு தானிய உணவை உண்ணும்போது ஏற்படுவதில்லை.

ஆக ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் சிறு தானியங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது நலம்!

அடை செய்முறை:

சாமை, வரகு, குதிரைவாலி, தினை, கொள்ளு ஆகிய தானியங்களை சம அளவு எடுத்து தனித்தனியாக லேசாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

DSC_0750

அனைத்தையும் முக்கால் பதமாகப் பொடித்துக்கொள்ளவும். கொள்ளு மட்டும் தனியாகப் பொடித்து பின்பு கலந்துகொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஒரு அளவு தானியத்திற்கு இரண்டு பங்கு தண்ணீர் என்ற கணக்கில் எடுத்துக்கொண்டு அதில் அரை தேக்கரண்டி எண்ணெய், தேங்காய் துறுவல் 2 தேக்கரண்டி, தேவையான அளவு உப்பு எல்லாம் சேர்த்து, கொதி வரும்போது பொடித்த தானியக் கலவையை சிறிது சிறிதாகப் போட்டு நன்கு கிளறி விடவேண்டும்.
DSC_0751
தண்ணீர் வற்றி கெட்டியானவுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கி ஆற வைக்கவும்.
DSC_0752
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்தவுடன், தண்ணீர் தொட்டுக்கொண்டு, சிறிய அடைகளாக இட்டு, திருப்பிவிட்டு, பொன்னிறமாகப் பொறித்து எடுக்கவும்.
DSC_0762
DSC_0763
சுவையான சிறுதானிய அடை தயார். தொட்டுக்கொள்ள தக்காளி துவையல் இனிமை கூட்டும்!

1 comment:

  1. மிக அருமையாக சொன்னிர்கள்..நான் படித்ததத்தில் பிடித்தது ..
    சளி... காரணங்களும் விடுபட வழிகளும்!
    நோயில்லாத சுகமான வாழ்வை விரும்புபவர்களுக்கு manam.online/news/2016-MAY-06/Solutions-for-cold

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...