Friday, June 10, 2016

அன்னாசி இரசம்


பவள சங்கரி


நம் தமிழகத்தின் பாரம்பரிய மதிய உணவில் இரசம்தான் முக்கியப் பங்கு வகிக்கக்கூடியது. எவ்வளவுதான் சுவையான விருந்தாக இருந்தாலும் இரசம் இல்லாவிட்டால் அந்த விருந்து நிறைவாக இருக்காது. விருந்து என்றாலே நெய், எண்ணெய், தேங்காய், சக்கரை போன்ற கொழுப்புச் சத்து அதிகமாக சேர்த்த உணவுப் பண்டங்களே மிகுதியாக இருக்கும். அந்த வகையில் உண்ட உணவு எளிதாக செரிமானம் ஆவதற்கான சிறந்ததொரு, சுவையான மருந்தே இந்த இரசம் என்றால் அது மிகையாகாது. மிளகு, சீரகம், பெருங்காயம், பூண்டு, கொத்தமல்லி, கருவேப்பிலை போன்ற பல முக்கியமான மசாலாப் பொருட்கள் சேர்க்கப்படுவதால் சுவையும், மணமும் சற்று கூடுதலாகவே இருக்கும். திருமணம் போன்ற விசேசங்கள், பெரிய உணவு விடுதிகள் ஆகிய இடங்களில் விதவிதமான இரசங்கள் இருக்கும். அதில் முக்கியமான ஒன்று அன்னாசி இரசம். அன்னாசிப் பழம் இரத்த சோகையைக் கட்டுப்படுத்தி, தொப்பையையும் குறைக்க வழிவகுக்கிறது என்பது கூடுதல் தகவல்.


பலவிதமான முறைகளில் இந்த அன்னாசி இரசம் தயாரிப்பார்கள். என்னுடைய இந்த முறை இரசத் தயாரிப்பு சற்று கூடுதல் மணமும், சுவையும் உள்ளதாகவேத் தோன்றுகிறது. ஏற்கனவே பலவிதமான முறைகளில் முயன்று இறுதியாக இந்த செய்முறையை அதன் சுவை கருதித் தேர்ந்தெடுத்தேன். இதோ உங்களுக்கும் அந்த இரகசியத்தைச் சொல்கிறேனே…
தேவையான பொருட்கள் :
அன்னாசித் துண்டுகள் – 2
தக்காளி – 2
புளித்தண்ணீர் – 2 மேசைக்கரண்டி
ரசப்பொடி – 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி – 1/8 தேக்கரண்டி
வேகவைத்த துவரம் பருப்பு – 1/2 கிண்ணம்
உப்பு – தேவைக்கேற்ப
கருவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
பொடியாக்குவதற்கு:
மிளகு – 1 தே.க
சீரகம் – 1 தே.க
பூண்டு – 4 பற்கள்
கருவேப்பிலை – 1 ஆர்க்கு
வரமிளகாய் – 1
தாளிப்பதற்கு :
எண்ணெய் – 2 தே.க
கடுகு – 1 தே.க
வெந்தயம் – 1/8 தே.க
வரமிளகாய் – 2
பெருங்காயம் – 1 சிட்டிகை
செய்முறை:
துவரம்பருப்பை நன்கு வேகவைத்து கடைந்து வைக்கவும். மிளகு, சீரகம், மிளகாய், பூண்டு, கருவேப்பிலை ஒரு கொத்து அனைத்தையும் எண்ணெய் இல்லாமல் கடாயில் வறுத்து பொடிக்கவும்.


ஒரு துண்டு அன்னாசி பழம் எடுத்து மிக்சியில் அரைத்து கூழாக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு கிண்ணம் தண்ணீரில் கொஞ்சம் புளியைக் கரைத்து வடிகட்டிக்கொண்டு, அதில் ஒரு தக்காளியும் சேர்த்து நன்கு கரைத்துக்கொள்ளவும். அதில் உப்பு, பொடித்த மிளகு, சீரகப் பொடியில் பாதியளவும், அன்னாசிக்கூழ் கலவை, ரசப்பொடி, மஞ்சள் தூள் அனைத்தையும் சேர்க்கவும். இன்னொரு தக்காளியையும், அன்னாசி துண்டையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
DSC_0755[2]
ஒரு வானலியில் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய்விட்டு தாளிக்கும் பொருட்களும், கருவேப்பிலையும் சேர்த்து, அத்துடன் மீதமுள்ள பொடியையும் சேர்த்து கிளறி அத்துடன் நறுக்கிய தக்காளி, அன்னாசியும் சேர்த்து 3-4 நிமிடங்கள் இளம் தீயில் வதக்கவும்.
அத்துடன் மற்ற தக்காளி, அன்னாசி, ரசப்பொடி கலவையும் தேவையான தண்ணீரும் சேர்த்து கொதிக்கவிட்டு, பருப்பையும் சேர்க்கவும்.
DSC_0769[1]
இரசம் நுரைத்து வரும்போது பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழைகளைச் சேர்த்து இறக்கவும்.
சுவையான அன்னாசி இரசம் தயார்!
‎6/‎10/‎16

1 comment:

  1. செய்முறையும் அருமை, படங்கள் எல்லாம் அழகு.
    சுவையான அன்னாசி ரசத்திற்கு நன்றி.

    ReplyDelete