Friday, September 30, 2016

காக்கும் வரமருளும் அன்னையே!



பிள்ளைகள் பலகோடி, அத்தனையும்
உனைநாடி உன்பதம் தேடி
வாழும்வழி தாங்கும்கதி தேடும் உயிர்கள்!
சூழும்துயர் நீங்கும்சதி நாடும் மனங்கள்
காக்கும்வரம் நாளும் தரும் அன்னையே!
வீழ்த்தும் கபடம் தாக்கும் பாகாசுரன்களை
பாட்டுக்கொரு புலவனும் பாருக்கொரு ஞானியும்
ஊர்தோறும் உழவனும் சோறுக்கென சேறும்
வாழ்வுக்கொரு வீணையும் பாரதத்திற்கொரு வீரமும்
அளித்தவள் அவளே அன்னை பராசக்தி!

வினையகற்றும் வீரமாகாளியாய்
பசியாற்றும் அன்னபூரணியாய்
வழிகாட்டும் வாணியாய்
குடிகாக்கும் கோமாதாவாய்
தயைபுரியும் தாமரைக்கண்ணியாய்
மகாபைரவி, சாம்பவி, நாதரூபிணி, 
நாராயணி, ஓங்காரி, சுந்தரி,
வாராகி, திரிசூலி, அங்கையற்கண்ணி
சங்கொலி முழங்க டமருகம் ஒலிக்க
இகம்பரம் எனதனைத்தும் உமதாட்சியே
தக்கயாகப்பரணி தலைவியே தவப்பயனே
சகலகலாவல்லி சதுர்முகி சாந்தமருள்வாயே
திரிபுரமெரித்த விரிசடையோனின் நாயகியே
சகல செல்வத்துடன் புவனமனைத்தும் 
பூக்காடாய் மணம்வீச ககனமெலாம்
உன்நாமம் இசைபாட திருவடியே சரணமம்மா!
புவனமாளும் பயங்கரியே காத்தருளுமம்மா!!
வீரமுண்டு! விவேகமுண்டு! வெற்றியுமுண்டு! 
வாழ்வுமுண்டு! வரமுமுண்டு! வாழிய வாழியவே!!!

No comments:

Post a Comment