Thursday, November 10, 2016

சுட்டும் விழிச்சுடர்! - கொடிது .. கொடிது...

பவள சங்கரி


நேற்று காலை செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருக்கும்போது பக்கத்தில் ஏதோ படபடவென மெல்லிய சிறகசைக்கும் ஓசை கேட்டது. சற்றே திரும்பிப்பார்த்தபோது, அழகிய அந்த அடர்நீல வண்ண பட்டாம்பூச்சி என்னருகில் சன்னல் விளிம்பில் தம் சிறகை மெல்ல ஆட்டியபடி அழகு காட்டிக்கொண்டிருந்தது. புதிய 2000 உரூபாய் நோட்டின் சுவையான செய்தியைக்கூடத் தொடரத் தோன்றாமல் அதன் அழகிலேயே இலயித்திருந்த அந்த சுகமான தருணத்தில்தான் திடீரென ஒரு இராட்சசன் பல்லி உருவத்தில் வந்து கப்பென அதன் மென்சிறகைக் கவ்வியே விட்டது. என்ன செய்வது என்று அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அது அந்த சிற்றுயிரை மேலும் தன் வயமாக்கிக்கொள்ள யத்தனித்தது. சட்டென்று சுயநினைவு வந்தவளாக அந்த இராட்சசனை விரட்டிவிட்டாலும் அடுத்த சில மணித்துளிகள் அது துடிதுடித்ததைக் காணச்சகிக்கவில்லை. எப்படியும் பிழைத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையில், செய்வதேதும் அறியாமலே உயிர் நீர் ஊற்றுவதாக எண்ணிக்கொண்டு என் விருப்ப தெய்வங்கள் அத்தனையையும் வேண்டிக்கொண்டு துளித்துளியாக நீர் தெளித்தும் பார்த்தும் ஒன்றும் பலனில்லை. இன்னும் மறக்க முடியாமல் மனபாரம் ஏற்படுத்தும் காட்சியது.. மனிதர்களின் வாழ்க்கைகூட இப்படித்தானே. எந்த நேரத்தில் வாழ்க்கை எப்படி மாறும் என்று தெரியாமலேதானே நம் விருப்பம்போல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..


நிலைமாறும் உலகில் நிலையில்லா வாழ்க்கையிது என்று தெரிந்தும் நம்மை நம்மால் நம் இயல்புகளிலிருந்து பல நேரங்களில் அது மோசமானது என்று அறிந்தும் மாற்றிக்கொள்ள முடியாமலே போய்விடுகிறது. அதற்கு நொண்டிச்சாக்கு சொல்லவும் தயாராகவே இருக்கிறோம். சமீபத்தில் என் தோழி ஒருவர் என்னிடம் மிகவும் வருந்தி சொன்ன சம்பவம் இது. 

ஒரே மகனைப் பெற்று அத்தனை அன்பையும், பாசத்தையும் கொட்டி வளர்த்த மகன் தன் குடும்பம், மனைவி, குழந்தைகள், பேரக்குழந்தைகள் என்று தன் இரத்த உறவுகளுடன் கூடிக்களித்திருக்க ஆரம்பித்தவுடன் தாய் பாரமாகி விட்டாள். தாயை முதியோர் இல்லத்தில் சேர்க்கவேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறான். அதற்கு, தங்கள் சந்தோசத்திற்கு தடையாக இருப்பதாகவும், எப்போதும் அவருடனேயே பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும், தனியாக விட்டுவிட்டு எங்கும் செல்லக்கூடாது என்று அழிச்சாட்டியம் செய்வதாகவும் பல காரணங்கள் சொல்கிறாராம். இவையனைத்திற்கும் மேலாக “எங்க அம்மா அவங்க மாமியாரை அதான் எங்க ஆத்தாவை இப்படித்தானே முதியோர் இல்லத்தில் சேர்த்தாங்க. எங்க ஆத்தாவுக்கு அவங்க பணம் கூட ஒழுங்கா கொடுக்காம, மாத்திரை மருந்துகூட சரியாக்கிடைக்காம, வேதனைப்பட்டு அனாதை மாதிரி செத்துப்போச்சு எங்க ஆத்தா. அத்தனை அதிகாரத்தோட, சொத்தோட இருந்த எங்க ஆத்தாவுக்கே கடைசீல அந்த நிலைமைதான். ஆனா நான் அப்படியா அனாதையா விடப்போறேன். நல்ல ஹோம்ல, ரூ.25,000 டெபாசிட் கட்டி சேர்க்கறேன்னுதான் சொல்றேன். அவிங்களுக்கும் அவிங்க வயசுக்குத் தகுந்த தோழிகள் (?) கிடைப்பாங்கல்ல.. நேரத்துக்கு சாப்பாடு போடுவாய்ங்க. பெரிசா வேலையெல்லாம் ஏதும் செய்ய வேணாம். அப்புறம் வேற என்ன பிரச்சனை.  நேர நேரத்துக்கு டி.வி சீரியலும் அங்க போடுவாய்ங்களாம். அது போதாதா? நாங்களும் நிம்மதியா இருக்கிறோம், அவிங்களும் சந்தோசமா இருக்க வேண்டியதுதானே. அதுக்கும் போகமாட்டேன்னு அடம் பிடிச்சாக்க என்ன செய்யிறது. இங்கேயே இருந்து உயிரை வாங்குது” என்று பஞ்சாயத்து வைத்திருக்கிறான். 
சுவற்றில் அடித்த பந்து திரும்பி வந்ததுபோல, ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பதற்கிணங்க, வயசு காலத்தில், தனக்கு இப்படியொரு நிலை வரவே வாய்ப்பில்லை என்ற கற்பனையில்  தன் மாமியாருக்குச் செய்த அதே கொடுமை இன்று தனக்கே திரும்பி வந்ததை ஏற்கவே முடியவில்லை அத்தாயினால். இப்படியொரு நிலை வரும் என்று அன்றே தெரிந்திருந்தால் ஒருவேளை அந்தத் தவறை செய்யாமல் இருந்திருப்பாரோ என்னவோ. சரி அப்படியே இருந்தாலும் இன்று தன் குடும்பத்தாரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு தாயை முதியோர் இல்லம் அனுப்பினால் மீண்டும் இதே நிலை தனக்கோ, தன் மனைவிக்கோ வராது என்பதற்கு என்ன உத்திரவாதம். தன் அம்மாவிற்கு செய்யும் இந்த துரோகத்தை சரியென்றுதானே தன் மகனும் நம்புவான் என்பதை இவர்கள் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். வழிவழியாக முதியோர் எல்லோரும் முதியோர் இல்லத்திலேயே வாழும் வழக்கத்தை இக்குடும்பத்தினர் ஏற்படுத்திக்கொள்வார்களா? அதுதானே நிதர்சனமாகப்போகிறது. 

முதுமை எவ்வளவு கொடிது என்று நாம் அறியாததல்ல. எத்தனை சுற்றம் அருகிலிருந்தாலும், எவ்வளவு பெரிய மருத்துவ வசதி ஏற்படுத்திக் கொடுத்தாலும் முதுமையின் இரணங்களை சுற்றி இருக்கும் எவரும் பகிர்ந்து கொள்வது சாத்தியமே இல்லை. ஆறுதலான, அன்பான வார்த்தைகள் மட்டுமே ஓரளவிற்கு அமைதியை ஏற்படுத்தலாம். அப்படிப்பட்ட நேரத்தில் அந்த அன்பும், பேரக்குழந்தைகளின் பாசமும் கூட கிடைக்காமல் தனியாக ஒரு இல்லத்தில் துரத்தி விடுவது என்பது கொடுமையிலும் கொடுமை இல்லையா? 

முதுமை நிலையில் தனிமை என்பது மிகவும் கொடிய செயல். அதுவும் வெளி உலகமே அறியாமல், குடும்பமே கோவில், குழந்தைகளே வாழ்க்கை என்று இருக்கும் சூழலில் வாழும் பெண்களுக்கு இப்படி ஒரு நிலை என்றால் அவர்களால் எப்படி சகித்துக்கொள்ள இயலும். உணவும், உடையும், உறையுளும் போதாதா என்ற கேள்வியே சித்திரவதையானது அல்லவா. அந்தத்தாய் தன்னுடைய தேவை என்ன என்பதை என்ன சொல்லி புரிய வைப்பாள். மீதமிருக்கும் சொற்ப காலங்களை, உழைத்து, உழைத்து ஓடாய் தேய்ந்துபோன உடலை சுமக்க முடியாமல் சுமப்பதோடல்லாமல், மலையாக நம்பியிருந்த தம்  சொந்த இரத்தமே தன்னைப் புரிந்து கொள்ளாத வேதனையை, மன பாரத்தையும் சேர்த்து சுமப்பதென்றால் அந்த உயிர் என்ன பாடுபடும்? இப்படியொரு மகன் இருப்பதற்கு அவள், தான் குழந்தையே பெறாத மலடியாகக்கூட இருந்திருக்கலாம் என்று சொல்வதில் எவ்வளவு ஆதங்கம் அடங்கியிருக்க வேண்டும். ஆனாலும் எந்தத் தாயும் அப்படி எண்ணிக்கூட பார்க்கமாட்டாள். தாம் பெற்ற குழந்தைகள் தம் கண் முன்னால் எந்த ஒரு சிறு துன்பத்தையும் அனுபவிப்பதை தாங்கிக்கொள்ள மாட்டாள். 

ஒரு தாய் தம் குழந்தைகளை பாசத்தைக்கொட்டி வளர்ப்பது பிற்காலத்தில் தம்மைக் காப்பாற்றுவார்கள் என்ற சுயநலம் கருதி அல்ல. தாய்மை என்பதன் அர்த்தம் அதுவல்ல. ஆனாலும் இறுதிக் காலங்களில் குழந்தைகளின் அன்பையும், அரவணைப்பையும் தவிர அந்த முதுமை வேறு எதை எதிர்பார்க்கப்போகிறது? அந்த மகன் இதை உணர்ந்து அந்த அன்பையும், பாசத்தையும் காட்டினால் தம் குழந்தைகளும் நல்ல முறையில் வாழ்க்கையை எதிர்கொள்வார்கள், பிற்காலத்தில் தங்களுக்கும் இப்படியொரு நிலை வராது என்று புரிந்துகொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் ... 
இந்தியாவில் 60 அகவையைக் கடந்தவர்கள் 9.5 கோடி பேர் உள்ளார்கள். 2025 இல்  8.5 கோடி பேர் மேலும் இதில் இணைவார்கள். 80 அகவையைக் கடந்தவர்கள் 80 இலட்சம் பேர் இருக்கிறார்கள். மாறிவரும் குடும்ப அமைப்பு முறைகள், பொருளாதார நிர்ப்பந்தம் போன்ற சில காரணங்களால் முதியவர்களின் நிலை குடும்பத்தை விட்டு விலகியிருக்க வேண்டிய வேதனையில் தள்ளிவிடுகிறது. மன அழுத்தம், தனிமை, ஆரோக்கியக்கேடு போன்ற பலவிதமான துன்பங்களுக்கு ஆளாகிறார்கள்.  உலகெங்கும் முதியவர்களின் பராமரிப்பு என்பது பெரும் பொருளாதார சுமையாகவே பார்க்கப்படுகிறது. சப்பான் போன்ற நாடுகளில் அதிகரித்து வரும் முதியவர்களை ஆக்கப்பூர்வமான வழிகளின் பயன்படுத்துவதன் மூலம் அவர்களால் ஏற்படக்கூடிய பொருளாதார சுமையைக் குறைக்க முடியும் என்பதையும் சில நிறுவனங்களும், சமூகங்களும் செயலில் செய்து காட்டிவருகின்றன. நம் நாட்டிலும் இது போன்று ஏதேனும் ஆக்கப்பூர்வமான திட்டங்கள் செயல்படுத்துவதன் மூலம் இது போன்ற பிரச்சனைகளை கட்டுக்குள் கொண்டுவர முடியும். முதியோர்களின் அனுபவ அறிவு இளம் தலைமுறையினருக்கு உதவும் வகையில் வழிமுறைப்படுத்துவது நலம் பயக்கும்.

வயது காலத்தில் தனக்கென்று, தன்னுடைய முதுமைக் காலத்தில் பயன்படும் என்று சேமித்து வைத்துக் கொள்ளாமல், வயதான காலத்தில் பிள்ளைகள் தம்மைப் பார்த்துக் கொள்வார்கள் என்ற எண்ணத்தில் இருந்துவிடுவது அறிவீனம் என்பதையும் உணரவேண்டும். 

முதுமையை பாதிக்கக்கூடியவைகள், உடற்காரணிகள், உளக்காரணிகள் ஆகிய இருவகை. மூளையின் செயற்பாட்டின் நிலை குறைவடைதல், மூட்டுக்களில் தசைகளில் பலவீனம் ஏற்பட்டு மூட்டுக்களில் தேய்வு ஏற்படுதல், நரம்புகளில் தளர்ச்சி ஏற்படுதல், தசைகள் மெலிவடைதல், தோல்கள் சுருங்குதல், மயிர்கள் உதிர்தல், நரை ஏற்படுதல், புலனுறுப்புகளில் குறைபாடுகள் ஏற்படுதல், நோய் எதிர்ப்புச் சக்திகள் குறைவதால் தொற்று நோய்கள் ஏற்படுதல்  போன்றவை உடற்காரணிகள்.

உளக்காரணிகளைப் பொறுத்தவரையில், உடற்காரணிகளை விடவும் மீப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவைகளாகவே இருக்கும். பொதுவாக மனதளவில் பாதிப்படையக் கூடியவர்கள் அதிலிருந்து விடுபடுவது மிகவும் கடினமாக இருப்பதை பார்க்க முடிகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பினும், முக்கியமாக  இடம்பெயர்வு ஏற்படுகின்ற போது முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். பிறந்து, வளர்ந்த பூமியை விட்டும் , ஆடி விளையாடிய மண்ணை விட்டும், பழகிய உறவுகளை விட்டும், அறிமுகமற்ற இடத்திற்குச் செல்லும்போது பெருந்துன்பத்திற்கு ஆளாகிறார்கள்.

பெற்றோர் முதுமையில் எத்தகைய பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் என்பதை உணர்ந்து அவர்களது பிரச்சினைகளையும் மனோ நிலைகளையும் அறிந்து அவர்களை அன்புடன் நடத்த வேண்டிய கடமை தங்களுக்கு உள்ளது என்பதை இளமையிலேயே அவர்களுக்கு ஊட்டி வளர்க்க வேண்டியதும் அவசியமாகிறது .

No comments:

Post a Comment

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...