பொன் மனச் செல்வி!
செல்வி. ஜெ. ஜெயலலிதா
செல்வி. ஜெ. ஜெயலலிதா
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து தீவிர சிகிச்சை அளித்து வருவதாக அப்பல்லோ மருத்துவமனை அறிவித்துள்ளது.
தற்போதைய முதல் அமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான, ’அம்மா’, ‘புரட்சித் தலைவி’ என்று அன்பாக தொண்டர்களால் அழைக்கப்பெறும் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் அரசியலில் நுழைவதற்கு முன்னர் தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களின் மூலம் தன்னுடைய கலையுலகச் சாதனையை நிரூபித்தவர். செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்களின் தனிச் சிறப்பென்பதே, அவர் எந்தத் துறையில் நுழைந்தாலும் அத்துறையின் எல்லைவரை சென்று சாதிக்கும் வல்லமைப் பெற்ற, தோல்வியைக் கண்டுத் துவளாத, துணிச்சல்மிகு பெண்மணி என்றால் அது மிகையாகாது. ஃபீனிக்ஸ் பறவை போல, அழிக்க, அழிக்க, அந்தச் சாம்பலிலிருந்து மேலும், மேலும் புத்துணர்வுடன் உயிர் பெற்று வரும் வல்லமை கொண்டவர் இந்தப் பன்முக நாயகி. அந்த வகையில் பெண்குலத்திற்கே பெருமை சேர்க்கும், தன்னம்பிககை எனும் மகுடம் சூடிய இரும்புப் பெண்மணி, தாய்மை முலாம் பூசிய தங்க மங்கை,
செல்வி ஜெயலலிதா அம்மையார் தமிழ்நாடு, திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் என்ற ஊரை பூர்வீகமாகக் கொண்டவர். கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டம், மேல் கோட்டை என்னும் கிராமத்தில் 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் நாள் பிறந்தார். இவருடைய தாத்தா ஸ்ரீரங்கம் கோவிலில் அர்ச்சகராக இருந்திருக்கிறார். இவரது பாட்டி திருமதி யதுகிரி அம்மையாரும் மிகவும் பிரபலமாக வாழ்ந்தவர். சோழர் காலத்தில் பல வைணவக் குடும்பங்கள் வெளியேற்றப்பட்ட போது இவருடைய குடும்பமும் வெளியேறியுள்ளது. மேல்கோட்டையில் கோமளவல்லி என்று பெயர் சூட்டப்பட்ட இவரின் பெற்றோர் திரு ஜெயராம் மற்றும் சந்தியா தம்பதியினர். திருமதி சந்தியா அவர்களும் பிரபலமான திரைப்பட நடிகை. தன்னுடைய 4ஆவது வயதிலேயே நாட்டியம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தவர். பரத நாட்டியம், கதக்களி, மோகினியாட்டம், மணிப்புரி போன்ற அனைத்து நாட்டியக் கலைகளிலும் முறையாகப் பயின்றுத் தேர்ந்தவர். நூறு முறைகளுக்கும் மேலாக நாட்டிய நிகழ்ச்சிகளை அரங்கேற்றியவர். இவருடைய ஈடு, இணையற்ற அழகு வதனம் இவரை திரைப்பட நாயகியாக பிரபலப்படுத்தியது. 1964ஆம் ஆண்டில் ’சின்னாட கொம்பே’ என்ற இவர் நடித்த கன்னடப் படம் இவரை ஒரே நாளில் திரையுலகின் உச்சாணிக் கொம்பில் ஏற்றி வைத்தது.
செல்வி ஜெயலலிதா அவர்களின் ஆரம்பக்கல்வி, பெங்களூருவில் பிஷப் காட்டன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கியது. பிறகு அவருடைய குடும்பம் தமிழ் நாட்டிற்கு குடிபெயர்ந்ததால் , சென்னையில் பிரபல சர்ச் பார்க் ஆங்கிலப் பள்ளியில் அவர்தம் கல்வி தொடர்ந்தது. பள்ளியில் தலை சிறந்த மாணவியாக அனைத்து ஆசிரியர்களின் கருத்தைக் கவர்ந்தவராக இருந்தார். மேல்நிலைக் கல்வியை முடித்தவுடன், சட்டக் கல்வி கற்க பேராவல் கொண்டிருந்த அம்மையார், தம் குடும்பச் சூழல் காரணமாக, கல்வி கற்கும் ஆர்வத்தைக் கைவிட வேண்டியதாகியது. கல்லூரி வாழ்க்கை என்பது சென்னை ஸ்டெல்லா மேரிக் கல்லூரியில், ஒரு நாளுடனேயே முடிந்து விட்டது. தம் அத்தை வித்யாவதி என்பவரின் வழியைப் பின்பற்றி தாமும் திரைப்படத்தில் நடிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது, இந்த அழகு தேவதைக்கு!
அம்மையாரின் கலையுலக சாதனைகள் :
ஒரு திரைப்படக் கலைஞராக மிகப் பிரபலமானது இவருடைய வாழ்க்கை. 1961 ஆம் ஆண்டில் , முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் வி.வி. கிரி அவர்களின் புதல்வர் திரு சங்கர் கிரி அவர்கள் தயாரித்த ‘எபிசில்’ (Epistle) என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ளார். கன்னடத்தில் இவருடைய முதல் படமே மிகச் சிறந்த வெற்றி கண்டது. ‘ மனசுலு மமதலு’ என்று இவர் நடித்த முதல் தெலுங்குப் படமும் மிகப் பிரபலமானது. தெலுங்குப் பட உலகின் ‘கனவுக் கன்னி’ ஆனார். 1965ஆம் ஆண்டில் ‘வெண்ணிற ஆடை’ என்ற இயக்குநர் ஸ்ரீதரின் திரைப்படத்தின் மூலம், வியத்தகு அளவில் தமிழ்த் திரையுலகையும் ஆக்கிரமித்தார். இப்படம் இவருடைய குழந்தைத்தனமான் நடிப்பினாலும், கள்ளமற்ற அமைதி தவழும் முக அமைப்பினாலும், மிகவும் பிரபலமானது. அதற்குப் பிறகு, சவாலே சமாளி, சூரியகாந்தி, யார் நீ, நான், தெய்வ மகன், பாக்தாத் பேரழகி, நீ, மேஜர் சந்திரகாந்த், கந்தன் கருணை, தேடி வந்த மாப்பிள்ளை போன்ற பல்வேறு படங்களின், மிக வித்தியாசமான கதாப்பாத்திரங்கள் மூலமாகவும், வெற்றிப்படங்களின் மூலமாகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர். திரு.எம்.ஜி.ராமச்சந்திரன், நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன், போன்ற பல முன்னனி நடசத்திரங்களுடன் இணைந்து நடித்தவர்.
திரையுலகின் உச்சாணியில் இருந்த மிகப் பிரபலமான நடிகரான திரு எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களுடன் , ஆயிரத்தில் ஒருவன், காவல்காரன், அடிமைப் பெண், நம் நாடு, குடியிருந்த கோயில், ஒளி விளக்கு, தலைவன், கணவன் போன்ற பல திரைப்படங்களில் நடித்து வெற்றி வாகை சூடியவர். அதேபோல், செவாலே சிவாஜியுடனும், கலாட்டா கல்யாணம், எங்க மாமா, சுமதி என் சுந்தரி, பட்டிக்காடா பட்டணமா போன்ற பல வெற்றிப் படங்களில் இணைந்து திரையுலகையே நிமிரச் செய்தவர். 1960 – 70களில் தன்னுடைய கள்ளமற்ற சிரிப்பு மற்றும் அபரிமிதமான அழகு, குரல் வளம் மூலம் தமிழக திரையுலக இரசிகர்களைத் தம் வசம் முழுவதுமாகக் கட்டி வைத்திருந்தார் என்றாலும் அது மிகையாகாது.
நாயகுடு விநாயகுடு , ஆதர்ச குடும்பம், அக்கா தம்முடு, பார்ய பிட்டலு, பிரம்மச்சாரி, நவராத்திரி, ஸ்ரீகிருஷ்ண விஜயம், கூடாச்சாரி 116 ஆகியத் திரைப்படங்கள் மூலமாக தெலுங்குத் திரையுலகையும் ஆக்கிரமித்திருந்தார். இவருடைய இரண்டாவது கன்னடப் படமான , நனா கர்த்தவ்யா மாபெரும் வெற்றி கண்டதும் குறிப்பிடத்தக்கது.
1977 ஆம் ஆண்டில், தமிழக அரசினால் , ‘ கலைமாமணி’ விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். இவர் ‘இசாத்’ என்ற இந்தித் திரைப்படத்தில் தர்மேந்திராவுடன் நடித்த படமும் வெற்றி வாகை சூடியது. இவர் இறுதியாக நடித்து வெளிவந்தது 1980 ஆம் ஆண்டில் வெளிவந்த ,’ நதியைத் தேடி வந்த கடல்’ என்ற தமிழ் திரைப்படம்.
சகலகலாவல்லியான ஜெயலலிதா அம்மையார், பின்னனிப் பாடல்கள் பாடுவதிலும் வல்லவர் என்பதை 1969 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘அடிமைப் பெண்’ என்ற திரைப்படத்தில் இவர் பாடிய , ‘அம்மா என்றால் அன்பு’ என்ற, திரு வாலி இயற்றிய, திரு கே.வி. மகாதேவன் இசையமைத்த பாடல் மூலம் நிரூபித்தார் இந்த சாதனைப் பெண்மணி. அத்துடன் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல் மற்றும் ரண்டார்கை, சங்கர்-கணேஷ் ,டி,ஆர். பாப்பா ஆகியோரின் இசையமைப்பில், பிரபலப் பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எல்.ஆர் ஈசுவரி , பி.சுசீலா போன்ற பிரபல இசைக்கலைஞர்களுடன், அடிமைப்பெண், சூரியகாந்தி, வந்தாளே மகராசி, வைரம், திருமாங்கல்யம் போன்ற திரைப்படங்களில் பின்னனிப் பாடல்கள் பாடியும் வெற்றி கண்டிருக்கிறார், தனக்கென்று ஒரு தனிப்பட்ட இரசிகர் கூட்டத்தை பெருமளவில் திரள வைத்திருந்ததில் இவருக்கு இணை இவரே என்பதே நிதர்சனம்.
இப்படித் திரை உலகில் பல்வேறு சாதனைகள் புரிந்தவர் அரசியல் களத்தையும் விடுவதாக இல்லை. , நெருங்கிய வட்டத்தில் அம்மு என்ற செல்லப் பெயர் கொண்ட, இந்த பாரதி கண்ட புதுமைப் பெண், தம் வாழ்க்கையின் முன்னோடிகளாக கொண்டுள்ளவர்கள், தன் பள்ளித் தலைமை ஆசிரியை அன்னை செலின், தம் திரையுலக வாழ்க்கையின் வழிகாட்டியாகத் தாய் சந்தியா மற்றும் அரசியல் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள். அன்னை இந்திராவும், மார்கரெட் தாட்சரும் இவரை மிகவும் கவர்ந்தவர்கள்.
சமூக நலப் பணிகளில் அம்மையாரின் சாதனைகள்:
1981ஆம் ஆண்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் கொள்கைப் பரப்புச் செயலாளராகச் சேர்ந்ததன் மூலமாக ஆரம்பித்தது இவருடைய அரசியல் வாழ்க்கை., 1982இல் சட்ட சபையில் ‘பெண்ணின் பெருமை’ என்ற தலைப்பில் இவர் ஆற்றிய உரை திரு எம்.ஜி.ஆர் அவர்களை மிகவும் கவர்ந்தது. மாநிலங்கள் அவையில் தாம் ஆற்றிய சிறந்த உரையின் மூலமாக மறைந்த இந்தியப் பிரதமர் அன்னை இந்திராவையும் கவர்ந்தார். 1984 முதல் 89 வரை நாடாளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினராகவும்,1989-1991, 1991-1996, 2002-2006; அனைத்திந்திய அன்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராகவும், 1989இல் திரு எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு, தம்முடைய மாபெரும் மக்களாதரவுடன், தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி கண்டு முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரானார். 1991 – 1996 வரையில் முதல் பெண் முதல் அமைச்சராகப் பதவி வகித்ததும் குறிப்பிடத்தக்கது. 2001ஆம் ஆண்டில் திரும்பவும் மக்களின் பேராதரவுடன் பதவிக்கு வந்தார்.
புத்தகப் பிரியையான இவர் புத்தகங்களின் மேல் கொண்ட தீராதக் காதலினால் தனக்கென்று பிரத்யேகமாக ஒரு மாபெரும் நூலகம் வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவருடைய மிக விருப்பமான நூல் , “wild Swans” என்ற ஆங்கில நூலாகும். ஜங்க் சாங்க் என்ற சைன எழுத்தாளரால் 30 மொழிகளில் எழுதப்பட்ட நூல் இது. ஜெயலலிதா அம்மையார் 14 மொழிகளில் தேர்ச்சி பெற்ற , பன்மொழி வித்தகர் என்பதும் பாராட்டிற்குரிய விசயம்.
ஆன்மீகத்தில் பெரிதும் நாட்டம் கொண்ட ஜெயலலிதா அம்மையார் அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனில் தனிப்பெரும் அக்கரை கொண்டவர். இவருடைய ‘தொட்டில் குழந்தைத் திட்டம்’ பல ஆதரவற்ற குழந்தைகளுக்குக் காப்பிடமாக வாழ்வளித்துக் கொண்டிருக்கிறது. 1992ஆம் ஆண்டில், தமிழ் நாட்டில், சேலம், மதுரை, தேனீ, திண்டுக்கல் மற்றும் தர்மபுரி போன்ற நகரங்களில் பரவலாகக் காணப்பட்ட பெண் சிசுக் கொலையைத் தடுக்கும் வண்ணம், மிக அறிவார்ந்த செயலாக இந்தத் தொட்டில் குழந்தைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 200 தொட்டில்கள், மாவட்ட சமூக நல அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதாரத் துணை மையங்கள் போன்ற இடங்களில் வைக்கப்பட்டதன் மூலம் பெறப்பட்ட ஆதரவற்ற சிசுக்கள், மறு வாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டனர். இந்தத் திட்டத்தின் மூலமாக 2001 முதல் 2011 ஆம் ஆண்டின் பாலின விகிதம் கணக்கெடுப்பில், தர்மபுரியில் 826லிருந்து 911 ஆகவும், சேலத்தில், 851லிருந்து, 917 ஆகவும், தேனீயில், 891லிருந்து, 937 ஆகவும், திண்டுக்கல்லில், 930 லிருந்து 942 ஆகவும் உயர்வு பெற்றதும் பாராட்டிற்குரியது. மேலும், 3200 பெண் சிசுக்களும், 582 ஆண் சிசுக்களும் இத்திட்டத்தின் மூலம் காப்பாற்றப்பட்டு, 2460 குழந்தைகள் உள்நாட்டிலேயே தத்தெடுக்கப்பட்டு, 197 குழந்தைகள் வெளிநாட்டினராலும், 18 குழந்தைகள் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களாலும் தத்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அம்மையாரின் இத்திட்டம் நம் நாட்டை மட்டுமல்லாது, வெளிநாட்டவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளதும் நிதர்சனம்.
அனைத்து மகளிர் காவல் நிலையம், அதாவது, காவல் நிலையம் முழுவதும் பெண்களாலேயே நடத்தப்படுவது, இத்திட்டம் ஜெயலலிதா அம்மையாரின் ஆட்சியில் 1992ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்தியாவிலேயே 5 வது மிகப் பெரிய மாநில காவல் படை என்ற பெருமை பெற்றது தமிழ்நாட்டுக் காவல் துறை. இந்தியாவிலேயே வீடியோ திருட்டைக் கட்டுப்படுத்த ஒரு தனி படை நிறுவிய முதல் மாநிலம் என்ற பெருமையும் இவர் ஆட்சியில் பெற்றது. அனைத்து மகளிர் காவல் நிலையம், இந்தியாவில் முதன் முதலாக, ஒரு பெண் காவல் துறை ஆய்வாளர் தலைமையில், சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுப் பின் அனைத்து மாவட்டங்களிலும் விரிவடைந்தது. இந்தியாவின் முதல் பெண்கள் கமாண்டோப் படையும் , தமிழ் நாட்டில் , ஜெயலலிதா அம்மையாரின் ஆட்சியில்தான் அமைக்கப்பட்டது. 2.06.2003இல் அமைக்கப்பட்ட இந்தப் பெண்கள் கமாண்டோப் படை, ஆண்களுக்கு இணையாக அனைத்து வகையானப் பயிற்சிகளையும் மேற்கொண்டதோடு, ஆண்கள் கையாளக் கூடிய அனைத்து வகையான தானியங்கி மற்றும் அதிநவீன ஆயுதங்கள், தானியங்கிக் குண்டுகளைக் கண்டுபிடிப்பது மற்றும் அதைச் செயலிழக்கச் செய்வது, ஓட்டுநர், சவாரி மற்றும் சாகச விளையாட்டு போன்ற அனைத்துத் துறைகளிலும் தேர்ச்சி பெற்றார்கள். இவருடைய அரசியல் வாழ்க்கைச் சாதனைகளில் மேற்கண்ட இரண்டும் ஓர் மைல்கல் எனலாம்.
வாழ்க்கையின் அடி மட்டத்தில் இருக்கும் பெண்களுக்கு இவரின் நேசக்கரம் பல வகையில் நீண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மகளிர் சுய உதவிக் குழுக்களைப் பல வகையில் திறம்பட முன்னேற்றி வழி நடத்திச் சென்றதில், நாட்டின் பொருளாதாரத்தில் உயர்வு ஏற்பட்டதோடு, வறுமைக் கோட்டில் தத்தளித்துக் கொண்டிருந்த பல குடும்பங்கள் இன்று நல்ல முறையில் வாழ வழி காட்டிய தெய்வம் ’புரட்சித் தலைவி, அம்மா’ என்று அந்தப் பெண்களில் பலர் மனதார வாழ்த்துவதையும் கேட்க முடிகிறது. சுய உதவிக் குழுக்கள் என்பது பெண் சக்தியை ஊக்குவிக்கின்ற சத்தியமான ஒரு சமூக இயக்கம் என்றாலும் அது மிகையாகாது. இதன் மூலமாக 50 இலட்சம் மகளிர் , 3 இலட்சம் குழுக்கள், சேமிப்பு மற்றும் கடன் இணைப்பு மூலம பயன் பெறுகிறார்கள்.
இவர் ஏற்படுத்திய மழைநீர் சேகரிப்புத் திட்டம் உலகளவில், வல்லுநர்களாலும் பெரும் வரவேற்பைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றும் வறட்சியால் நிலத்தடி நீரும் வறண்டு போன பல ஊர்களிலும், இந்த மழை நீர் சேகரிப்புத் திட்டம் மூலமாக நிலத்தடி நீர் வறட்சி தவிர்க்கப்பட்டு மக்களின் முக்கிய வாழ்வாதாரமான தண்ணீர் பிரச்சனை முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது கண்கூடு.
விவசாயிகள் பாதுகாப்புத் திட்டம் மூலம், விவசாய கூலித் தொழிலாளிகள் மற்றும் கிராமப்புற சிறிய விவசாயிகளும் விரிவான சமூக பாதுகாப்புப் பெற வழி வகுக்கும் குறிப்பிட்ட சிறந்த திட்டம் என்று உலகளவில் பாராட்டும் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. புரட்சிகரமான இத்திட்டம் மூலமாக, தமிழ்நாட்டின், 1.37 கோடி விவசாயக் கூலித் தொழிலாளிகள் மற்றும் சிறு விவசாயிகள் , திருமணம், குழந்தை பிறப்பு, தரமான கல்வி, முதியோர் ஓய்வூதியம், துர்மரண நிவாரண நிதி போன்றவற்றிற்கு நிதி உதவி பெரும் வாய்ப்பும் பெரிதும் வரவேற்கப்பட்டது.
சுனாமி பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1136 கோடி அவர்தம் மறுவாழ்விற்கான நிவாரண நிதியாகவும், மீனவர்களின் படகுகள் மற்றும் வலைகள் செப்பனிடுவதற்காக ரூ.1.46 கோடியும் அளிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 10.36 இலட்சம் மீனவர்கள் இதனால் பயன் பெற்றுள்ளார்கள்.
தம்மைப் பற்றித் தாமே குறிப்பிடுகையில், “எம் வாழ்க்கையின் மூன்றில் ஒரு பகுதி என் தாயினால் ஆட்கொள்ளப்பட்டது. அடுத்த இரண்டாம் பகுதியான பெரும் பகுதி, திரு எம்.ஜி.ஆர் அவர்களினால் ஆட்கொள்ளப்பட்டது. மீதமுள்ள மூன்றாம் பகுதி எனக்காக இருந்தாலும், யாம் முடிக்க வேண்டிய கடமைகளும், பணிகளும் பல உள்ளது” என்கிறார். தம் அன்னை மற்றும் தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரின் இழப்புகள் தம்மை பெரிதும் பாதித்துள்ளதாகவும் கூறுகிறார் இந்தப் பன்மொழி வித்தகர். ஆம் ஆங்கிலத்தில் நல்ல புலமையும், பேசும் திறனும், தமிழ்,கன்னடம், மலையாளம், தெலுங்கு,இந்தி போன்ற பல மொழிகளில் தேர்ச்சியும் பெற்றவர். தம் வாழ்நாளின் மிக வேதனையானத் தருணமாக இவர் கருதுவது, ஒரு பெண்ணான தன்னை எதிர் கட்சியினர் தமிழ் நாடு சட்டசபையில் வைத்துத் தாக்கி அவமானம் ஏற்படுத்தியதையே. ‘வேத நிலையம்’ என்ற பெயர் கொண்ட இவருடைய இல்லம் போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ளது. பழைய தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலத் திரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் உள்ளவர் அம்மையார்.
இவருடைய தன்னம்பிக்கை, துணிச்சல் அன்பை நாடும் உள்ளம் மற்றும் மன உறுதிக்கு ஆதாரம், 1985 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் ஒரு ஆங்கிலப் பத்திரிக்கைக்கு இவர் அளித்த பேட்டியின் ஒரு பகுதி – “ அச்சுறுத்தல்கள் மூலமாக என்னை அடிபணியச் செய்வதோ அல்லது கடுமையான நடவடிக்கை மூலம் என்னிடமிருந்து ஏதும் பெற நினைப்பதோ, என்னை மேலும் பிடிவாதமாகவும், நெகிழ்வற்றும், வளைந்து கொடுக்க இயலாமலும், மேலும் தின்மையாகவுமே மாற்றியமைக்கும். என்னிடம் நல்லபடியாகவும், தன்மையாகவும், என்னைப் புகழ்ந்து பேசியும், அமைதியாகவும், அனுசரனையாகவும் பேசுவது மூலமாக மட்டுமே என் ஒத்துழைப்பைப் பெற முடியும்” என்ற தம்முடைய வெளிப்படையான பேச்சின் மூலம், உளவியல் முறையில், தம்மைத் தாமே அறிந்து கொள்ளும் சுய விழிப்புணர்வு பெற்ற ஒரு தீர்க்கமான எண்ணமும், தெளிவான சிந்தையும், தள்ளி நின்றுத் தம்மைத்தாமே மதிப்பீடு செய்யும் வல்லமை பெற்ற மேதாவி என்பதையும் நிரூபித்துள்ளதும் கண்கூடு.
வாழ்க்கையின் வசந்தத்தைத் துய்த்து உணரும் இனிய பதின்மப் பருவமான 16 வயதுப் பருவத்தில், பள்ளிப் படிப்பை முடித்து மேற் படிப்பாக சட்டம் பயில பேராவல் கொள்ளும் ஒரு பெண்ணிடம், தாயின் மூலம், குடும்பத்தின் பொருளாதாரச் சீர்குலைவு என்ற பேரிடி வரும் போது,தம்முடைய இரண்டாம் வயதிலேயே தந்தையை இழந்து, தாய் மட்டுமே ஆதரவாக உள்ள நிலையில், குடும்பத்தைக் காக்க வேண்டிய சூழலில் திரைப்படத்தில் நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதுவும் அழகுப் பதுமையாக நிற்கும் மங்கை எடுத்தவுடன் வெண்ணிற ஆடை (கைம்பெண் உடுத்தும் ஆடை) என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது அம்மங்கையின் மனநிலை என்ன பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதை உணர முடிகிறது. தன் தாயிடம் அரிதாரம் பூசித் தன்னை நடிக்க அனுப்புவது தனக்களிக்கப்பட்ட தண்டனையாகவேத்தாம் உணர்வதாக மனம் நொந்து கூறியிருக்கிறார். வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே அடி மனதில் அழற்சி ஏற்படும் வகையில் சூழல் அமைந்துள்ளது. தனிமை பல நேரங்களில் அவரை பண்படுத்தியதன் காரணமே , அவர் எடுத்த தீர்க்கமான முடிவாக, “வாழ்க்கையில் நான் பட்ட துன்பங்களும், துயரங்களும், எனக்குப் புகட்டிய முக்கியமான பாடம் – வாழ்க்கையில் நீ நம்பக் கூடிய ஒரே ஆள் – அது நீ மட்டுமே” என்ற மிக உன்னதமான தத்துவ ஞானம்! இதிலிருந்தே வாழ்க்கையில் இவர் பட்ட துன்பங்களின் வலியும் , வேதனையும் புரிந்து கொள்ள முடிகிறது. தாம் ’பெருமைக்குரிய நண்பர்’ என்று எண்ணிய பல நண்பர்கள் தன் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இல்லாமல் போனதை எண்ணி வருத்தமும் கொண்டிருந்திருக்கிறார், இளகிய மனம் கொண்ட ,கபடமற்ற நல்லுள்ளமும், கனிவான பார்வையும் கொண்ட அம்மையார்.
மக்களால், தரமான கல்வியும், திறமையையும் கையகப்படுத்துதல் என்பது ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் மட்டுமல்லாமல் தாங்கள் விரும்பிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் வல்லமையையும் அளிப்பது கல்வி. அந்த வகையில் அம்மையாரின் சிறந்ததொரு ஆட்சியின் மூலம், கல்வித் துறையை மேம்படுத்தும் வகையில், 274 புதிய ஆரம்பப் பள்ளிகளை நிறுவினார். 2790 ஆரம்பப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக மேம்படுத்தப்பட்டுள்ளது 394 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும், 406 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும், மேம்படுத்தப்பட்டுள்ளன. 58,282 ஆசிரியர்களுக்கான காலி இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் 12 வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் வழங்கும் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றது. 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டமும் கல்விப் பணியின் குறிப்பிட்ட முன்னேற்றம் எனலாம். இவை அனைத்திற்கும் மேலாக, இந்த அரசாங்கத்தின் திட்டமான, சம்பாதிக்கும் பெற்றோரின் விபத்தின் காரணமான திடீர் இழப்பினால் வாடும் மாணவர்களுக்கு ரூ.50,000 வரை நிதி உதவி வழங்கும் திட்டம் பெரிதும் வரவேற்பைப் பெற்றதோடு, பாதிக்கப்பட்ட இளம் சிறார்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்ததோர் அருமையான திட்டம் எனலாம். குழந்தைகள் மீதும், இளம் பள்ளி மாணவர்களின் மீதும், அவர்தம் கல்வியும் சிறந்து, எதிர்கால வாழ்க்கையும் நல்ல முறையில் அமைய வேண்டும் என்ற தன்னிகரற்ற தாய்மையுள்ளமும் தெளிவாக விளங்கச் செய்யும் அம்மையாரின் பல உன்னத திட்டங்களில் இதுவும் ஒன்று.பிற்பட்ட பகுதியில் வாழும் மக்களுக்காக ‘நமது கிராமம்’ என்ற திட்டம் மூலம் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ரூபாய் 200 கோடி வரை இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வறுமை, லஞ்ச ஒழிப்பு, அகிம்சை போன்ற தம் கொள்கைகளில் உறுதியாக நிற்கும் ஒரு பெண்மணியைக் காண முடிகிறது.
தமிழக மக்களின் பேராதரவுடன், முதலமைச்சராக மூன்றாவது முறையாக பதவியேற்றுக் கொண்ட ஜெயலலிதா அம்மையார் அவர்கள், தம்மை அரியணையேற்றிய மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக, பதவியேற்ற முதல்நாளே, ஏழை எளிய மக்களுக்குப் பயன் தரும் வகையில் முத்தான ஏழு நலத்திட்டங்களுக்கு அச்சாரம் இட்டது, அவர்தம் தொண்டு உள்ளத்திற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. வறுமைக் கோட்டில் உள்ள படித்த பெண்களுக்கு திருமண நிதி உதவியாக ரூ.25,000 மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் தங்கமும் , இளநிலைப்பட்டம் மற்றும் டிப்ளமோ பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.50,000 மற்றும் 4 கிராம் தாலித் தங்கமும் வழங்குவதாகவும், முதியோர், மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், கைம்பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூ.500/ மாத ஓய்வு ஊதியம் ரூ.1,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும், பொது விநியோகத் திட்டத்தின் அரிசி பெற தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்றும் மிகக் குறைந்த் வருமானமுள்ள அட்டைதாரர்களுக்கு, 35 கிலோஅரிசியாக உயர்த்தி , இலவசமாக வழங்கப்படும் என்றும், இயற்கை சீற்றத்தினால், மீன் பிடிக்க இயலாத காலங்களில், தடை விதிக்கப்படுவதால் பாதிக்கப்படும் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1,000/- நிதி உதவியை ரூ.2,000/-மாக உயர்த்தி வழங்கப்படுமென்றும், அரசு பணியில் உள்ள தாய்மார்கள் தங்களது பச்சிளங்குழந்தைகளைப் பேணி பாதுகாக்கும் வண்ணம் மகப்பேறு காலச் சலுகையாக 6 மாத காலம் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது. அரசின் சிறப்புத் திட்டங்களைச் செம்மையோடு செயல்படுத்தவும், சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை என்ற பெயரில் துறை ஒன்றையும் துவங்கி இத்துறைக்கென தனி அமைச்சர் செயல்படுவார் என்றும் ஆணையிட்டு , நலத் திட்டங்கள் சீரிய முறையில் பாதிக்கப்பட்டவர்களைச் சென்றடையுமாறு, செயல்பட்டது பாராட்டிற்குரியது.
அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் அவர்களுடன் 2011ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 21ம் நாள் நிகழ்ந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது. சென்னை கோட்டையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இதில் இலங்கைப் பிரச்சனை, தமிழ்நாட்டில் அமெரிக்க தொழில் முதலீடு போன்ற முக்கியப் பேச்சு வார்த்தைகள் வரலாற்று சிறப்புப் பெற்றது.
உலகத்தில் உள்ள எந்த அரசியல்வாதியும் பொறாமைப்படும் அளவுக்கு அமைந்துள்ள அமோக வெற்றி, நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலின் வெற்றி என்று பாராட்டினார். முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் கடந்த கால ஆட்சியின்போது நிகழ்த்தப்பட்ட சாதனைகளுக்காகவும் பாராட்டு தெரிவித்தார் ஹிலாரி கிளிண்டன், இந்தியா-அமெரிக்கா இடையிலான வலுவான இருதரப்பு வர்த்தக உறவுகளை நினைவு கூர்ந்த முதல அமைச்சர் ஜெயலலிதா அமெரிக்கா, இந்தியாவின் 3வது பெரிய வர்த்தக பங்குதாரராகவும், இரண்டாவது பெரிய ஏற்றுமதி சந்தையாகவும், 3-வது பெரிய இறக்குமதி ஆதாரமாகவும் உள்ளதையும் , 2009-2010-ம் ஆண்டில் இந்தியா அமெரிக்காவுக்கு 30 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்தது போல்வே அமெரிக்காவில் இருந்து இந்தியா, 10 பில்லியன் டாலர் அளவுக்கு இறக்குமதி செய்தது. இந்தியாவின் நடுத்தர சந்தை வளர்ச்சியடைந்து வருவதால், வரும் ஆண்டுகளில் அமெரிக்காவின் சேவைகளை இந்தியா அதிகளவில் இறக்குமதி செய்யும் என்றார். தமிழ்நாடு, ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ உதிரிபாகங்கள் தயாரிப்பிலும் முன்னணியில் இருப்பதாகக் கூறியவர், தமிழகத்தில் ஆட்டோமொபைல் துறையில் அமெரிக்கா அதிக முதலீடுகள் செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளும் விடுத்தார். மேலும் அவர் ஆட்டோமொபைல் துறையில் தமிழ்நாடு உலக அளவில் மிகப்பெரிய மையமாக உருவாக வேண்டும் என்பதே தமிழகத்தின் இலக்காகும், அதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளது என்றார். மேலும், சிறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் போதுமான வசதிகள் ஏற்படுத்தித் தரப்படுகிறது எனவும், வாகன உற்பத்தித் துறையில் உலகளாவிய நிறுவனங்களைப் பங்கு கொள்ளச் செய்வதன் மூலம் அந்தத் துறையை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் ஹிலாரியிடம் விளக்கிக் கூறினார் முதல் அமைச்சர் ஜெயலலிதா.
தமிழ்நாட்டில் அமெரிக்க முதலீடுகளுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஹிலாரி கிளிண்டன் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசு, தலா 300 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட 10 சூரியசக்தி பூங்காக்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது பற்றியும் அம்மையார் பேசியதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் மனிதவளம் மிகப்பெரிய சொத்தாக இருப்பதையும், மனிதவள மேம்பாட்டிற்கு கல்வி முக்கிய பங்காற்றுவதையும் சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் 2011 மற்றும் 2020 ஆண்டுகளுக்கு இடையே 10 முதல் 12 மில்லியன் அளவுக்கு வேலைவாய்ப்புகள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறிய ஜெயலலிதா, தரமான கல்வி நிறுவனங்களும், வேலைவாய்ப்புக்கான பயிற்சி அளிக்கும் அமைப்புகளும் நான்கு மடங்கு அதிகரிக்க வேண்டும் என்பதையும் தெரிவித்தார்.
ஹிலாரி கிளிண்டன், தமிழக மற்றும் அமெரிக்க தொழிற்பயிற்சி நிறுவனங்களின் பரிமாற்றத் திட்டங்களுக்கும் தாம் ஆர்வத்துடன் இருப்பதாகவும், அமெரிக்க மாணவர்கள், தமிழ்நாட்டில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் பயிற்சி பெற வர வேண்டும் என்று தாம் விரும்புவதாகவும் தெரிவித்ததும் வரவேற்கத்தக்கதாகும். தமிழகத்தில் சாலை உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணியில் தமிழகமும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டார் முதல்வர் ஜெயலலிதா அம்மையார்.
அமெரிக்கா எச்.ஒன்.பி. விசா எண்ணிக்கையை 65000 ஆயிரமாக உள்ளதை 1 லட்சத்து 95 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் அவர், இலங்கையில் போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், இன்னமும் இலங்கைத் தமிழர்கள் யாழ்ப்பாண பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதனால் அவர்களது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாமல் அவர்கள் தவிக்கின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டினார். இதற்கு கவலை தெரிவித்த ஹிலாரி கிளிண்டன், முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்புவதற்கு, அமெரிக்க அரசு பல புதுமையான, ஆக்கப்பூர்வமான திட்டங்களை ஆராய்ந்து வருவதாகவும் கூறினார். தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு, உள்ளூர் மக்களுக்குச் செய்து தரப்படும் அனைத்து வசதிகளும் இவர்களுக்கும் செய்து தரப்பட்டுள்ள்தாக அம்மையார் தெரிவித்தார். தங்கள் உடைமைகள், சொத்து, சுகம், சொந்தம், பந்தம் என அனைத்தையும் இழந்து அகதிகளாய் வந்து தஞ்சம் புகுந்துள்ள அந்த நொந்த உள்ளங்களுக்கு களிம்பிட்டு ஆற்றும் விதமாக அம்மையாரின் செயல் திட்டங்கள் அமைந்திருப்பது, பெண்மைக்கேயுரிய அவர்தம் இரக்க குணமும், கனிவான போக்கும் தெளிவாகிறது.
முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் கொண்டு வந்த முன்னோடித் திட்டங்களான தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், மகளிர் சுயஉதவிக் குழுத் திட்டம் ஆகியவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், அமெரிக்காவிற்குப் பயன்படும் வகையில், இத்திட்டங்களைப் பற்றிய தகவல்களை சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்திற்கு வழங்குமாறும் ஹிலாரி கிளிண்டன் முதல் அமைச்சர் ஜெயலலிதாவை கேட்டுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. முன்னாள் முதல் – அமைச்சர் எம்.ஜி.ஆர். கொண்டு வந்த இலவச சத்துணவு திட்டத்தையும் வெகுவாகப் பாராட்டினார் அவர்.
இலங்கையில் சம உரிமைக்காகத் தம் இன்னுயிரையும் பணயம் வைத்துப் போராடி வரும் தமிழர்களை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கையில், இலங்கை அரசு பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் மருத்துவமனைகள் மீது குண்டுகள் வீசப்பட்டு ஒட்டு மொத்த தமிழினத்தையே அழிக்கக் கூடிய கொடிய செயலை மேற்கொள்ளப்பட்டபோது, தமிழக சட்ட மன்ற வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படக் கூடிய வகையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐ.நா சபையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டுமென்றும், சிங்களருக்கு இணையாக தமிழர்களுக்கு அனைத்து குடியுரிமைகளும் வழங்கப்பட வேண்டுமென்றும், இதற்காக இலங்கை அரசின் மீது மற்ற நாடுகளுடன் இணைந்து பொருளாதாரத் தடையை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியது உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் நம்பிக்கை ஒளியேற்றி வைத்ததும் மறுக்க இயலாத உண்மை.
அம்மையார் பெற்ற விருதுகளின் விவரம்:
1993ஆம் ஆண்டில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திடமிருந்தும் மற்றும் 2003ஆம் ஆண்டு, பாரதிதாசன் பல்கலைக்கழகத்திடமிருந்தும் டாக்டர் ஆஃப் லெட்டர்ஸ் பட்டமும், 1991இல், சென்னை பல்கலைக்கழகத்திடமிருந்து இலக்கியத்திற்கான டாக்டர் பட்டமும் , 1992ஆம் ஆண்டில் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்திடமிருந்து அறிவியலுக்கான டாக்டர் பட்டமும், 2003ஆம் ஆண்டில் தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகத்திடமிருந்து அறிவியலுக்கான டாக்டர் பட்டமும் , 2005இல் டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக் கழகத்திடமிருந்து சட்டங்களுக்கான டாக்டர் பட்டமும், பெற்று, கௌரவிக்கப்பட்டார். அதுமட்டுமன்றி, உலகளவில், உக்ரைனின், மனித உரிமைகள் பாதுகாப்புக் குழுவினரால் Golden Star of Honour and Dignity Award என்ற விருது மூலமும் கௌரவிக்கப்பட்டு, பாரத மாதாவிற்கும் பெருமை தேடித் தந்துள்ளார்..
2011 மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல் அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது தமிழ்நாட்டை மென்மேலும் உயர்த்தி, தமிழ் மக்களுக்கு அன்னையாக இருந்து அன்பு காட்டி அரவணைத்து வழி நடத்திச் செல்லும் அம்மையாரின் தொண்டு மேலும் சிறக்க வாழ்த்துவோம். இதுவரை அம்மையார் பணியாற்றியுள்ள சட்டசபைத் தொகுதிகளின் விவரம் வருமாறு:
1989 – போடிநாயக்கனூர்
1991 – பர்கூர்
2002 – ஆண்டிப்பட்டி
2006 – ஆண்டிப்பட்டி
2011 – ஸ்ரீரங்கம்
2015 – சென்னை ராதாகிருஷ்ணன் நகர்
இரண்டாவது முறையாக வெற்றிபெற்று மீண்டும் முதல்வரானார்.
1991 – பர்கூர்
2002 – ஆண்டிப்பட்டி
2006 – ஆண்டிப்பட்டி
2011 – ஸ்ரீரங்கம்
2015 – சென்னை ராதாகிருஷ்ணன் நகர்
இரண்டாவது முறையாக வெற்றிபெற்று மீண்டும் முதல்வரானார்.
மனிதராய்ப் பிறந்தவர் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஏற்ற , இறக்கங்களால் ஆனது. அதிலிருந்து தப்புவார் எவரும் இலர். ஆனால் அதனை ஒருவர் எப்படி எடுத்துக் கொள்கிறாரோ அதன் பொருட்டே அவர்தம் வெற்றியும், தோல்வியும் நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது வெற்றியைக் கண்டு இறுமாப்பு கொள்வதும், தோல்வியின் போது துவண்டு வீழ்வதும் ஓர் சாதனையாளருக்கு அழகல்ல. அந்த வகையில் தம் வாழ்க்கையில் இடறிய எத்துனையோ தடைக்கற்களையும், படிக்கற்களாக மாற்றிக் கொண்டு , தம் துணிச்சல், தைரியம், அஞ்சா நெஞ்சம், விடா முயற்சி, சுதந்திர உணர்வு, அனைத்தும் இன்றைய கால கட்டத்தில் ஒரு பெண்ணிற்கு எத்துனை அவசியம் என்பதையும் வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கும் நம் தமிழக முதல்வரை, மேலும் ,மேலும் வெற்றி வாகை சூடி, நம் தமிழ் நாட்டையும் வெற்றிப் பாதையில் வழி நடத்திச் செல்ல மனமார வாழ்த்துவோம். பெண்னாய்ப் பிறந்து விட்டோமே என்று நொந்து போய் வெம்பி, வேதனைப்பட்டு முடங்கிக் கிடந்த காலகட்டத்திலேயே, நான் பெண்ணாய்ப் பிறந்து சாதித்தவைகள் எத்தனை பாருங்கள் என்று வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கும் ஓர் எடுத்துக்காட்டு அம்மையார் ஜெயலலிதா என்றாலும் அது மிகையாகாது. சோதனைகளை சாதனையாக்கும் அவர்தம் விடா முயற்சியும், எள்ளி நகையாடும் வஞ்சகம் கொண்டோரை மோதி மிதித்து விடும் வல்லமையும் ஜான்சி இராணியின் மறு அவதாரமாக தோற்றமளிப்பதும், தனி ஒரு பெண்ணாக நின்று அத்துணை எதிர்ப்புகளையும், துணிச்சலுடன் எதிர் கொள்ளும் திறனும், பெண் சக்தி என்ற மகத்தான சக்தியின் வெளிப்பாடு என்பதும் நிதர்சனம்.
முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மக்கள் நலனில் அக்கறைகொண்டு ஏற்படுத்தியுள்ள மலிவு விலை உணவகங்களும், ‘அம்மா மருந்தகம்’, ‘அம்மா சிமெண்ட்’, போன்ற பல்வேறு திட்டங்களும் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டு செயல்பட்டுவருகின்றன.
தற்போது அப்பலோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவு, இருதய நோய் காரணமாக தீவிரச் சிகிச்சை பெற்றுவரும் எல்லோரும் அன்புடன் அழைக்கப்பெறும் அம்மா அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து மக்களுக்குப் பணியாற்ற எல்லாம் வல்ல எம்பெருமானை பிரார்த்திக்கிறோம்.
நன்றி : http://www.vallamai.com/?p=73693
No comments:
Post a Comment