Friday, November 16, 2018

அழகு!





கீச்சிடும் புள்ளின் தேனோசையின் அதிர்வு
துயில் கலைத்ததும் கனவின் சொச்சமும்
விழியில் காட்சியாகி விரியும் கணமும்
பனியில் பூத்த சிறுமொட்டின் அழகியலும்

துள்ளித் திரியும் சிறுமுயலின் பரவசமும்
வஞ்சமும் காழ்ப்பும் வசவுமில்லா நேசமும்
தஞ்சமென சிறுவங்கும் மாடமாளிகை போகமும்
அன்றையப் பொழுதை இதமாய் தன்வசமாக்கி 

என்றனையும் ஆட்கொண்டு ஆழ்மன தியானமாக்கி
அல்லல் யாவையும் அசட்டையாய் நீக்கி
தொல்லைகள் இல்லா புவியை உருவாக்கி
அழகில் தியானம் அறிவில் தெளிவு மனதில் உறுதி!

மங்கும் மாலையிலும் மயக்கமில்லை மனதுக்கு
 என்றுமில்லை நிரந்தரத் துயில் சூரியனுக்கு
இன்றுபோய் உதயமாகி வருவாய் நாளை
 பணிந்திருந்து பக்குவமாய் இயங்குவாய்  ஆக்கப்பூர்வமாய்!


-----------------------------------------

Monday, November 5, 2018

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!




தேளின் குணம் .....



நல்லவராய் வாழ்வது என்பது இன்றைய காலகட்டத்தில் அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதை விளக்கும் புத்தத் தத்துவக் கதைகளில் ஒன்று. தேளின் குணம் கொட்டுவது என்று தெரிந்தும் தேளையும் அரவணைக்க நினைப்பது நல்லவனின் விதி! 

ஒரு முறை ஆற்றைக்கடக்க யாரேனும் தனக்கு உதவ மாட்டார்களா என்று போவோர் வருவோரிடமெல்லாம் வேண்டி நிற்கிறது ஒரு தேள். தேளின் குணமறிந்து பல உயிரினிங்களும் அதை மறுத்து, தப்பித்தால் போதுமென்று கடந்து செல்லும்போது, ஆற்றைக் கடக்க முனையும் ஒரு ஆமை மட்டும் இந்தத் தேளின் மீது பரிதாபம் கொண்டு தன் மீது ஏற்றிக்கொண்டு செல்கிறது. சிறிது தூரம் அமைதியாக வந்த தேள் சும்மா இருக்கமாட்டாமல் ஆமையின் ஓட்டின் மீது மெல்ல கொட்டிப்பார்க்கிறது. ஆமைக்கு ஓடு என்பதால் உறைக்கவில்லை. மீண்டும், மீண்டும் கொட்டிப் பார்த்துவிட்டு, “என்னடா இந்த ஆமையிடம் ஒரு அசைவும் இல்லையே ... 4 முறைகள் கொட்டியும் எந்த அசைவும் இல்லையே என்ற ஆச்சரியத்தில், பொறுக்க முடியாமல் அந்த ஆமையிடமே கேட்டு விடுகிறது. அதற்கு ஆமையும், ஓ நீ என்னைக் கொட்டியதே எனக்குத் தெரியாதே ...  என் ஓட்டின் மீது கொட்டினால் எனக்கு வலிக்காதே ..” என்றது அப்பாவியாய். அதற்கு அந்த தேளும் விடாமல், அப்ப உனக்கு எங்க கொட்டினால் வலிக்கும் என்று ஆர்வமாகக் கேட்க, அந்த ஆமையும் என் கழுத்துப் பகுதியில் கொட்டினால் மட்டுமே என்னால் வலியை உணர முடியும்” என்று சொல்லியவாறே கழுத்தை உள்ளிழுக்க முனைந்தது. அதற்குள் தேளும் ஆமையின் கழுத்தைப் பார்த்து கொட்டுவதற்கு முயல, கோபம் கொண்ட ஆமை சட்டென்று தண்ணீரில் மூழ்க, தேள் இறந்து மிதக்க ஆரம்பித்தது ... 

Sunday, October 7, 2018

கலாச்சார மாற்றங்களின் பாதிப்பா? – ADHD (Attention deficit hyperactivity disorder)



கலாச்சார மாற்றங்களின் பாதிப்பா? - ADHD (Attention deficit hyperactivity disorder)
21ஆம் நூற்றாண்டின் நவீன உலகின் இயந்திரத்தனமான வாழ்க்கை உலகளவில், தனி மனித வசதி வாய்ப்புகளையும், பொருளாதார முன்னேற்றத்தையும் வாரி வழங்கியிருப்பதை யாரும் மறுக்கவியலாது. உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்ட நிலையில் கலாச்சாரப் பரிமாற்றங்களும் வெகு இயல்பாகிவிட்டதைக் காண முடிகின்றது. இதனால் நன்மைகள் எந்த அளவிற்கு உள்ளதோ அதே அளவிற்கு சில பிரச்சனைகளையும் எதிர்கொள்ளத்தான் வேண்டியுள்ளது. குறிப்பாக குழந்தைகளின் மீது திணிக்கப்படும் சுமைகள் சற்று அதிகம் என்றே தோன்றுகிறது. விடுமுறைகளைக்கூட முழுமையாக அனுபவிக்க முடியாத வகையில் அவர்களின் ஓட்டம் அந்த குழந்தைத் தன்மையையே பறித்து விடுவதையும் காணமுடிகின்றது. தன் குழந்தைதான் எல்லாவற்றிலும் முதன்மையாக இருக்கவேண்டும் என்ற பேராவல் பல பெற்றோர்களுக்கு ஒரு போட்டி மனப்பான்மையை உருவாக்கிவிடுகின்றது. இதன் விளைவாக தாயின் வயிற்றில் கரு உருவாக ஆரம்பித்த உடனே குழந்தையின் மூளை வளர்ச்சிக்காகவும் சேர்த்து மருந்துகளை எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கும் பழக்கம் இன்று பரவலாகிக் கொண்டிருக்கிறது. இயற்கைக்கு மாறான இது போன்ற செயல்பாடுகளால் தற்போது வருகிற நோய்களும் நவீன மருத்துவத்திற்கு சவாலாகவே இருக்கின்றன. 



குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ADHD (Attention deficit hyperactivity disorder) என்ற கவனப் பற்றாக்குறை அறிகுறிகள் குறித்த ஆயிரக்கணக்கான அதி நவீன ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும் இன்று வரை இது குறித்து பொது மக்களுக்கு ஒரு தெளிவான விழிப்புணர்வு இல்லை என்பதே வருத்தத்திற்குரிய செய்தி. இத்தகைய நீண்ட ஆராய்ச்சி வரலாறு இருந்த போதினும், ADHD குறித்து பல முரண்பாடுகள் மற்றும் தவறான வழிகாட்டுதல்களுக்குக் காரணமாக அமைந்துள்ளது. ADHD ஒரு பொதுவான குழந்தை பருவ உளவியல் மன நோய் அறிகுறியாகவும், வலுவான மரபணு, நரம்பியல்-உயிரியல், மற்றும் நரம்பியல் அடிப்படையிலான குறைபாடாகவும் உள்ளது . இது கவனக்குறைவு மற்றும் உயர் செயல்திறன் ஆகியவற்றின் அறிகுறிகளால் வகைப்படுத்தப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) hyperkinetic நோய் (HD) என்ற பெயரில், இந்த நோய்க்கான ஒத்த செயல்பாடு அளவுகோல்களை பட்டியலிடுகின்றது.
ADHD என்ற குறைபாடு பற்றி எப்படி கண்டறியப்பட்டது என்றும் இது குறித்து பலதரப்பட்ட கருத்துகள் உலவுவதன் காரணம் குறித்தும் அறியும் முன்பு இதன் வரலாற்று பின்புலம் குறித்து சற்றேனும் அறிதல் அவசியம். வெகு சமீப காலமான 1987 களில் தான் இந்த குறைபாடு அதிகமாகக் கவனம் கொள்ளப்பட்டுள்ளது. முதலில் 3%  அமெரிக்கக் குழந்தைகள் இந்த கவனச் சிதறல், அதீத செயல்பாட்டுக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருந்தனர். 2000த்தில் இந்த எண்ணிக்கை 7% ஆக எகிறியது. இதுவே 2014 களில் 11% ஆக எச்சரிக்கை மணி ஒலித்தது. இந்த குறைபாடுகளின் அறிகுறிகளுடன் போராடுவதற்காக, பாதிக்கப்பட்ட  3/2 குழந்தைகளுக்கு மிக சக்தி வாய்ந்த மருந்துகளான Ritalin மற்றும் Adderall போன்ற மருந்துகள் மிகக் குறைந்த பருவமான மூன்று வயதிற்குள்ளாகவே கொடுக்கப்பட்டுள்ளன. இதே காலகட்டங்களில் பிரான்சு, பின்லாந்து, இங்கிலாந்து, சப்பான் போன்ற நாடுகளில் 1 சதவிகிதத்திற்கும் குறைவாகவே குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்தது ஆச்சரியமேற்படுத்தியது. மற்ற மேலை நாடுகளைக் காட்டிலும் அமெரிக்கக் குழந்தைகளை மட்டும் அதிகமாகப் பீடித்திருக்கும் காரணங்களையும் மற்றும் மூளையில் இயற்கையாகவே பிறவியிலேயே ஏற்படும் பிரச்சனையா என்று கண்டுபிடிப்பதற்கும் ஆய்வுகள் நடத்தப்பட்டன. குழந்தைகளின் இந்த குறைபாடு மரபு வழியில் வருவதா அல்லது குழந்தைகளிடம் இயற்கையாகத் தோன்றும் பழக்க வழக்கங்களா அல்லது அதிக மன அழுத்தம் ஏற்படுத்தும் எதிர்வினையா போன்ற வினாக்கள் பெரும் சவாலாக இருந்துள்ளன. இதைவிட முக்கியமான சவாலாக இருந்தது, அதிக சக்தி வாய்ந்த மருந்துகளிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்றி, குறைபாடுகளையும் சரி செய்வதற்கு மாற்று உபாயங்கள் ஏதும் உள்ளனவா என்பதைக் கண்டறிவதுதான். இந்த வினாக்களுக்கான விடையாக, மெரிலைன் வெட்ஜ் என்ற ஆய்வாளர், ‘இன்றைய உளவியல்’ என்ற சஞ்சிகையில்  வெளியிட்ட, “பிரான்சு நாட்டு குழந்தைகள் மட்டும் ஏன் ADHD யால் பாதிக்கப்படவில்லை” என்ற தனது ஆய்வுக் கட்டுரையில், சிகிச்சை முறைமைகள், வளர்ப்பு முறை, உணவுப்பழக்கம், கல்வி முறை போன்ற ஆக்கபூர்வமானவற்றை விவாதித்துள்ளார். இந்த ஆய்வுகள் பிரான்சு நாட்டிற்கு மட்டுமன்றி இந்தியா போன்ற நாடுகளிலும் இது போன்று பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக மிக அரிதாக இருந்த காலகட்டம் அது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போதய காலகட்டங்களில் இது போன்ற குறைபாடுகள் இந்தியக் குழந்தைகளுக்கும் மிக அதிகமாகப் பரவி வருவது அதிர்ச்சியேற்படுத்துவதாகவே உள்ளது. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைப்பாடு மட்டுமே இன்றும் உள்ளதையும் மறுக்க இயலவில்லை. 
ADHD குறைபாடு என்பதன் அறிகுறிகள் என்ன?
கவனமின்மை
1. பெரும்பாலும் கூர்ந்து கவனம் செலுத்தத் தவறுதல் அல்லது பள்ளிப் பாடங்களில் கவனமின்மையால் தவறு செய்வது அல்லது அன்றாட கடமைகள், மற்ற செயல்பாடுகளில் கவனம் செலுத்தாமல் இருப்பது.
2. பெரும்பாலும் பணிகள் செய்யும் நேரங்களில் கவனத்தைத் தக்க வைத்துக்கொள்வதிலோ அல்லது விளையாட்டு செயல்பாடுகளிலோ சிரமம் மேற்கொள்வது.
3. பெரும்பாலான நேரங்களில் நேரடியாகப் பேசும்போது கவனம் செலுத்தாதது போன்ற தோற்றம்.
4. பெரும்பாலும் பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்தாமலும், வீட்டுப் பாடங்களை முடிக்காமலோ அல்லது பணி செய்யும் இடத்தில் கவனமில்லாமல் கடமை தவறுவது (எதிர்ப்பு நடவடிக்கையாக இல்லையென்றாலும், அறிவுறுத்தல்களையோ, ஆணைகளையோ சரிவரப் புரிந்து கொள்ள இயலாமையால்)
5. பெரும்பாலும் பணிகள் அல்லது செயல்பாடுகளை நிறுவுதலில் சிரமம் ஏற்படுவது.
6. பெரும்பாலும் மூளைக்கு வேலை கொடுக்கும் செயல்பாடுகளைத் தவிர்ப்பது, விருப்பமில்லாமல் இருப்பது அல்லது பள்ளிப்பாடங்கள், வீட்டுப் பாடங்களில் கவனம் செலுத்தாமல் செய்ய மறுப்பது.
7. பெரும்பாலும் விளையாட்டு சாமான்கள் அல்லது பென்சில், பேனா, புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் போன்றவற்றை தொலைத்து விடுவது.
8. சுற்று வட்டாரத் தடைகளால் எளிதில் கவனச் சிதறல் உண்டாவது.
9. அன்றாட பழக்கங்களையும் மறந்து விடுவது.

Hyperactivity - ஹைபர்ஆக்டிவிட்டி - அதீத செயல் திறன்
1. பெரும்பாலும் படபடப்பாக கை, கால்களைச் சொடுக்குவது அல்லது இருக்கையில் நெளிந்து கொண்டிருப்பது.
2. வகுப்பறையில் இருக்கையை விட்டு எழுந்து செல்வது.
3. பெரும்பாலும் தேவையில்லாமல் வேகமாக ஓடுவது அல்லது மேலே ஏறுவது.
4. பெரும்பாலும் அமைதியாக விளையாடத் தயக்கம்.
5. பெரும்பாலும் யாரோ விரட்டுவது போன்ற ஒரு அவசரகதியிலேயே செயல்படுவது.
6. பெரும்பாலும் அளவிற்கு அதிகமாகப் பேசுவது.

Impulsivity - உணர்ச்சிவசப்படுதல்
7. பெரும்பாலும் வினாக்கள் முடிக்கும் முன்னரே ஏதோ ஒரு விடையை உளறுவது.
8. பெரும்பாலும் தனது முறை வரும்வரை பொறுமை காக்க இயலாமை.
9. பெரும்பாலும் அடுத்தவருக்கு தடை ஏற்படுத்துவது அல்லது தேவையில்லாமல் உள்நுழைவது.
ஏழு வயதிற்குள் மேற்கண்ட அறிகுறிகளில் பெரும்பாலானவை தொடர்ந்து 6 மாதமாக இருந்தால் மட்டுமே இது ADHD குறைப்பாடு எனலாம்.

போட்டிகள் வெகு விரைவாக வளர்ந்துவரும் இந்த காலகட்டத்தில் குழந்தைகள் தங்கள் உயர் கல்விக்காக இளமைப் பருவத்திலிருந்தே அதிகமாக உழைக்க வேண்டியுள்ளது. இது போன்ற தருணங்களில் இந்த விதமான மருந்து மாத்திரைகள் பயன்பட்டால் அதனைத் தொடர்வதில் பெரும்பாலான பெற்றோர்களுக்கு தயக்கம் இருப்பதில்லை. நல்ல கல்லூரியில் தங்கள் பிள்ளைகள் படிக்க வழி செய்யும் வகையில் இதனைத் தங்கள் கடமையாகக் கருதும் பெற்றோரே அதிகம் உள்ளனர் என்கிறார் இவர். விளையாட்டு மைதானமாக இருக்க வேண்டிய பள்ளிப் பருவம் இந்தக் குழந்தைகளுக்கு பெரிய பந்தய மைதானமாகக் காட்சியளித்துவிடுகின்றது. தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்று எண்ணித் திட்டமிடும் பெற்றோரை தவறு சொல்ல முடியாது என்றாலும், மருந்துகளால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்த தகுந்த விழிப்புணர்வு இல்லாமல் செயல்படுவதும் நல்லதல்ல... குழந்தைகளின் எதிர்கால மகிழ்ச்சியும், வெற்றியும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அவர்களின் உடல் நலமும் என்பதையும் கருத்தில் கொள்வது அவசியம். 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய சவால் என்றே இதைப் பார்க்க முடிகின்றது. முழுவதும் மருந்துகளையே நம்பி இருப்பதைக்காட்டிலும் உளவியல் சிகிச்சை முறையை அதிகமாகத் தொடருவதே சாலச்சிறந்தது என்பதே ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. அதிகமான மருந்துகளை உட்கொண்ட குழந்தைகள் மிகவும் மந்த நிலையை வெகு விரைவில் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். இதனால் அவர்களின் கல்வி பிற்காலங்களில் கேள்விக் குறியாகவும் வாய்ப்புள்ளதை பெற்றோர் உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம். 
மன அழுத்தம், மனச்சோர்வு, அதிக எதிர்பார்ப்பினால் ஏற்படும் மன உளைச்சல், தற்கொலை எண்ணம் போன்ற குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு ஏற்படும் உணர்வுரீதியான பிரச்சனைகளுக்கு பெரும்பாலும் மருந்துகளைவிட குடும்ப உளவியல் சிகிச்சை முறையே (family therapy techniques) பாதுகாப்பானது என்பதே இந்த ஆய்வுகளின் முடிவான கருத்தாக உள்ளது. இதற்கான பல குழந்தைகளின் எடுத்துக்காட்டுகளும் இந்த ஆய்வுக் கட்டுரையில் சுட்டப்பட்டுள்ளன. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, ADHD பாதிப்பினால் அல்லலுற்ற ஒரு கலிபோர்னிய குழந்தையின் தாய் அக்குழந்தையை பள்ளியிலிருந்து நிறுத்திவிட்டு வீட்டில் கல்வி கற்க ஏற்பாடு செய்தபோது இந்தப் பிரச்சனை பெருமளவில் கட்டுப்பட்டது என்கிறார். செருமனியைச் சேர்ந்த ஒரு தாய், தம் குழந்தை ADHD பாதிப்பினால் மருத்துவமனைக்குச் சென்றபோது மருந்துகள் கொடுத்தபோது, “நாங்கள் அந்த மருந்திற்குப் பதிலாக அவளுக்கு ஒரு பியானோ வாங்கிக் கொடுத்தோம் - ஆச்சரியமான வகையில் நல்ல முடிவுகளைக் காண முடிந்தது” என்றார். 
ஆக, மருந்துகளைவிட குழந்தைகளின் உணவு முறையில் சிறு மாற்றங்கள், அவர்களுடைய சக்தியை வெளிக்கொணர ஒரு உபாயமும், படைப்பாற்றலில் கவனம் செலுத்துவதும் இந்த குறைபாட்டிற்கான சிறந்த மாற்று மருத்துவம் என்பது தெளிவாக விளங்குகிறது. இந்த ஆய்வின் முடிவின்படி ADHD என்ற குறைபாடு குழந்தைகளின் இயற்கைக்கு மாறான ஒரு நிலைப்பாடோ அல்லது மருந்தினால் குணப்படுத்தக்கூடிய ஒரு நோயோ அல்ல என்பதுதான். பல நேரங்களில் குழந்தைகள் மீது அபரிமிதமான அன்பும், பாசமும், நம்பிக்கையும் கொண்ட பெற்றோர் இயல்பான குணநலனுடன் இருக்கும் குழந்தைகளுக்கும் தேவையில்லாமல் மருத்துவ உதவியை நாடுவதும், அவர்கள் ADHD குறைபாடு என்ற ஐயத்தால் சக்தி வாய்ந்த மருந்துகளைக் கொடுப்பதும் நிகழ்ந்துவிடுவதுண்டு. பெரும்பாலும் ADHD குறைபாடு என்று பட்டயம் கட்டி மருந்துக்கு பரிந்துரை செய்வது அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளில் குழந்தைகளின் இயல்பான நடவடிக்கைகள்தான் என்பதே நிதர்சனம். கடுமையான சூழல்களால் பாதிக்கப்பட்டு எதிர்வினையாற்றும் சில குழந்தைகளை பொறுப்பாக, பொறுமையாகக் கையாளத் தெரிந்த பெற்றோரே சிறப்பான பெற்றோரின் வளர்ப்பு முறையாகக் கருத முடியும். 
இந்த ADHD குறைபாடு பரவுவதற்கான காரணம் அமெரிக்கக் கலாச்சாரம் என்பது குறைத்து மதிப்பிடக்கூடிய விசயம் அல்ல என்றாலும் உலகின் பெரும் பகுதிகளின் நவீன கலாச்சாரத்தில் வீழ்ந்து கிடக்கும் பெரும்பாலான நவீனவாதிகளின் செயல்பாடுகளாகவும் அமைந்துவிடுவது என்றும் இந்த ஆய்வாளர் தெரிவிக்கிறார். 
இயல்பாகவோ அல்லது இயல்புக்கு மாறான குழந்தைகளின் நடத்தையோ என எதுவாக இருப்பினும் அது நாம் வாழும் சமூகத்தின் பழக்க வழக்கங்களின் அடிப்படையிலேயே அமைகிறது என்பதே சத்தியம். இதை உணராத பெற்றோரே பெருங்குழப்பத்திற்கு ஆளாகி, குழந்தை வளர்ப்பை பெரும் சுமையாகக் கருதி நிம்மதி இழக்கின்றனர். ஆம், ADHD என்ற குறைபாடு பற்றி பேசும்போது நாம் முதலில் கூர்ந்து கவனம் கொள்ள வேண்டியது மருந்தில் மட்டுமல்லாமல், நாம் வாழும் சமூகம் மற்றும் அதன் கலாச்சாரம் போன்றவைகள் குறித்தும் கலந்தாலோசிக்க வேண்டும் என்பதே முக்கியம். மருந்துகளையும் தவிர்த்து சூழ்நிலை மாற்றங்கள், படைப்பாற்றலை பெருக்குவது, உளவியல் சிகிச்சை முறை போன்ற பலவகை பரந்த வெளிகள் குறித்த கருத்துகளையும் அறிந்துகொள்ளும் உரிமைகள் பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு நிச்சயம் உண்டு. இதில் குழந்தைகளின் உணவு முறையில் மாற்றம், குழந்தைகளுக்குத் தோதான பாடசாலைச் சூழல், ஊடகங்களினால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு, பெற்றோரின் பயிற்சி மற்றும் குடும்ப சிகிச்சை  போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்த வேண்டியதும் அடங்கும்.
இந்த பிரச்சனை வெகு விரைவாக வளர ஆரம்பித்தன. 1990 களில் 3 மில்லியன் அமெரிக்கக் குழந்தைகளுக்கு மட்டும் பரிந்துரைக்கப்பட்ட சக்தி வாய்ந்த மருந்துகள் 2010 காலகட்டங்களில் 10 மில்லியன்  குழந்தைகளாக உயர்ந்துவிட்டன. அவர்களை பள்ளியில் படிக்க வைப்பதே பெரும் போராட்டமாக இருந்ததால் உளவியல் சிகிச்சை முறையை தேர்ந்தெடுக்க வேண்டியதாகி இருக்கிறது. மேற்கண்ட அந்த மருந்துகள் மருத்துவ உலகிற்கு புதிதும் அல்ல. 1930 களில் மூக்கடைப்பு, அதிக பருமன் மற்றும் மனச்சோர்வு போன்றவற்றிற்காக பயன்படுத்தப்பட்டவைதான் என்கிறார். அமெரிக்கக் குழந்தை வளர்ப்பு கலாச்சாரத்தில் பெரும் மாற்றங்களை உருவாக்கிய காரணியாக இந்த மருந்துகள் செயல்பட்டிருக்கின்றன. 
பின் அதனைத் தொடர்ந்து பல்வேறு பெயர்களில், கருத்துகளில்  இந்த குறைபாடு பற்றிய விளக்கங்கள் பல விதமாகப் பரவி வரலாயிற்று. 1968 இல் DSM II என்ற உளவியல் கையேடு வெளியிட்டபோது அமெரிக்க உளவியல் கூட்டமைப்பு, குழந்தைகளிடம் காணப்பட்ட அதீத இயக்க எதிர்வினை குறித்த கண்டறிதல் மூலமாகப் பாதிக்கப்பட்ட குழந்தைகளின், கவனமின்மை, அமைதியின்மை, கவனச்சிதறல், அதீத செயல்பாடு போன்ற குறைபாடுகள் பற்றி குறிப்பிட்டிருந்தன. ஆனாலும் இதில் குழந்தைகளுக்கு பருவ வயது வரும்போது இந்த முதிர்ச்சியின்மை மறைந்துவிடக் கூடும் என்றனர். 
பின் அடுத்த கட்டத்தில் இந்த குறைபாடுகளை, மூளையில் ஏற்படும் மெல்லிய ஒழுங்கின்மை அல்லது கரிம மூளை நோய்க்குறி என்றும் குறிப்பிட்டனர். மூளையழற்சி அல்லது மூளையில் ஏற்படும் வீக்கம் காரணமாகலாம் எனப்பட்டது. இதுபோன்று பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கே இந்த அறிகுறிகள் இருந்திருக்கும் என்று எண்ணினார்கள். 

பாதிக்கப்பட்ட குழந்தை பின் விளைவுகள் இன்றி மீண்டு வர  திட்டமிடுவது எப்படி?

ADHD குறைபாடு என்று கண்டறியப்பட்ட ஒரு குழந்தை வேறு ஏதும் பின் விளைவுகள் இல்லாத சிகிச்சை முறையாக எப்படி திட்டமிடலாம் என்று அக்குழந்தையின் தாயும், மருத்துவ ஆய்வாளரும் இணைந்து செயல்படும் முறையைக் காணலாம் ..  
பொதுவாக ஒரு குழந்தையின் நடத்தையில் வித்தியாசம் தென்பட்டால், அதாவது சம வயது உள்ள மற்ற குழந்தைகளுடன் வித்தியாசப்பட்டால் அந்த பெற்றோர் அந்தக் குழந்தை ஏதோ மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும், குழந்தையை வேதனைப்படுத்தும் அந்த ஏதோ ஒன்றை கண்டறிய வேண்டும்  என்ற எண்ணத்தில் மருத்துவரை அணுகுகிறார்கள். கோபம், மரியாதையின்மை, கவனமின்மை, அதீத செயல்பாடு போன்ற குணநலன்கள் ஒரு குழந்தையின் வாழ்வில் ஏதோ தவறு நேர்ந்திருப்பதைக் குறிக்கிறது. குழந்தைகளின் மன வளர்ச்சி முழுமையடையாத சூழலில், வறுமை, வன்கொடுமை போன்ற பல்வேறு காரணங்களால் குடும்பத்தில் ஏற்படும் மாறுபட்ட சூழல் குழந்தையின் மனநிலையை பாதிப்படையச் செய்து அது அதன் நடத்தையில் வெளிப்படுவது இயற்கை. அதாவது குழந்தைகள் கடுமையானச் சூழலில் தங்களுடைய எதிர்ப்புகளை முழுமையாக வெளிப்படுத்தும் சக்தி இல்லாதபோது இது போன்ற மாறுபட்ட நடத்தைகள் இயல்பாகிவிடுவதுமுண்டு. இதனாலேயே மருத்துவர்கள் சிகிச்சை முறையை குழந்தையின் ஆணி வேரான குடும்பத்திலிருந்து ஆரம்பிக்கிறார்கள். பள்ளியில் ஆசிரியர்கள் குழந்தைகள் மத்தியில் வித்தியாசமான நடவடிக்கை உள்ள இது போன்ற குழந்தைகளை எளிதாகக் கண்டறிய முடிவதால் பெரும்பாலும் பள்ளி ஆசிரியர்கள் மூலமாகவே பெற்றோருக்கு இது தெரிய வருகிறது. பெற்றோர் இது போன்ற சூழலை அமைதியாகக் கையாள்வதன் மூலம் குழந்தைகளின் பிரச்சனைகளை எளிதாக அணுகுவதோடு அதற்கான சரியான தீர்வையும் காண முடிகின்றது. சில காலங்கள் முன்பு குழந்தைகளின் இது போன்ற நடத்தைகளை அவர்களின் இயல்பாக எடுத்துக்கொண்ட சூழல் இன்றைய நவீன காலகட்டத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதும் உண்மை. அபரிமிதமான எதிர்பார்ப்புகளோடு வளர்க்கப்படும் குழந்தைகளின் இயல்பு நிலை பெரும்பாலான பெற்றோர்களால் ஏற்றுக்கொள்ள இயலாமல் போவதும் அந்த குழந்தைகளின் மன உளைச்சலுக்கு முக்கிய காரணமாகிவிடுகின்றது. 
பொதுவாக அமெரிக்கக் குழந்தை வளர்ப்பு கலாச்சாரத்தில் மருந்துவம் பெரும் பங்கு வகிப்பதைக் காணமுடிகின்றது. கடுமையான போட்டிகள் நிறைந்த இந்த உலகில் குழந்தைகள் அதிக உழைப்பைப் போடாமல் பகல் கனவு கண்டுகொண்டு எதையும் சாதிக்க இயலாது என்று உறுதியாக எண்ணுகிறார்கள். இந்த கலாச்சாரம் பெரும்பாலும் உலகின் அனைத்து நாடுகளிலும் இன்று தீயென பரவிக் கொண்டிருப்பதும் வேதனையான விசயம். மாணவர்கள் மத்தியிலேயே கல்வி என்ற அடிப்படையில் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கும், சுமாராக படிக்கும் மாணவர்கள் மத்தியிலும் பெரும் இடைவெளிகள் உருவாகி வருவதையும் காணமுடிகின்றது. ஒரு குழந்தை தன் மூன்று அல்லது நான்கு வயதில் பள்ளிக்குச் செல்ல ஆரம்பிக்கும்போதே ஒவ்வொரு நாளும் அதன் வாழ்வில் மெல்ல மெல்ல மாற்றங்களுக்கு அடிகோலிவிடுகின்றது என்பதே நிதர்சனம். மேல் படிப்பிற்காக குழந்தைகள் ஆரம்பக் கட்டத்திலிருந்தே கடுமையாக உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அந்த வகையில் பெரும்பாலான பெற்றோர் அந்த போட்டிகளை எதிர்கொள்ளத் தோதாக மருத்துவ உதவியையும் நாடுவது தங்கள் கடமை என்ற எண்ணத்தையும் ஏற்படுத்திக்கொள்கிறார்கள். 21ஆம் நூற்றாண்டின் நவீனத்துவம் இந்த வகையில் குழந்தைகள் வளர்ப்பில் பல எதிர்மறையான கலாச்சாரங்களையும் ஊக்குவித்துக்கொண்டு வருவதை உணர முடிகின்றது. இதில் முக்கியமாகக் காண வேண்டியது இதைப்பற்றிய முழுமையான தெளிவு இல்லாத பெற்றோர் கூட பல தவறான முன் உதாரணங்கள் மூலமாக தவறான முடிவை எடுக்கவும் துணிகிறார்கள் என்பதுதான். இதனால் மேலும் பாதிப்புக்கு உள்ளாவது தங்கள் குழந்தைகள்தான் என்ற எண்ணமே இல்லாமல் செயல்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆம் விளையாட்டு மைதானமாக குதூகலிக்க வேண்டிய குழந்தைப்பருவம் பந்தய மைதானமாக விரட்டப்படுவது துரதிருட்டவசமானது. போட்டிகள் நிறைந்த இந்த உலகில் வேலை வாய்ப்பு பெறுவதில் எத்துணை சிரமத்தை தம் குழந்தை மேற்கொள்ளப் போகிறதோ என்ற கவலை ஒவ்வொரு பெற்றோருக்கும் ஏற்படுவது இன்றைய காலகட்டத்தில் இயல்பாகிக் கொண்டுவருவதும் முக்கிய காரணமாகிவிடுகின்றது. கல்வி மட்டுமே எதிர்கால வாழ்க்கையின் ஆதாரமாக இருக்க முடியும் என்ற தீவிர எண்ணம் பெரும்பாலான பெற்றோரின் மனதில் ஆணித்தரமாகப் பதிந்து கொண்டிருக்கிற காலகட்டம் இது. இந்த மனநிலையில் வரும் பெற்றோர்களுக்கு மருத்துவர்களும் தங்கள் பங்கிற்கு பல புதிய புதிய மருந்துகளை அறிமுகப்படுத்தவும் தயங்குவதில்லை. ஆனால் பல நேரங்களில் அதன் பின் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டிருக்கிறார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 
டேவிட் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பெற்றோரின் ஒரே செல்ல மகன். தங்கள் குழந்தைக்கு ADHD குறைபாடு உள்ளது என்று அறிய வந்தபோது ஏனைய மற்ற பெற்றோரைப் போலவே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானது உண்மைதான். என்றாலும் சில நாட்களில் அதிலிருந்து மீண்டு வந்தவர்கள் இந்த குறைபாடு பற்றி ஆதியோடு அந்தமாக தகவல் திரட்ட ஆரம்பித்தவர்கள் இதற்கான தீர்வைக் கண்டறிய முற்பட்டார்கள். பல்வேறு மருத்துவர்களை அணுகி இது பற்றி பல தகவல்களை சேகரித்துக்கொண்டார்கள். இந்த குறைபாட்டிற்காக கொடுக்கப்படும் மருந்தின் வீரியம் மிக அதிகம் என்பதால் குழந்தை பல பின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதையும் அறிந்து கொள்கிறார்கள். பிற்காலத்தில் குழந்தை மேலும் மந்த நிலையை அடையக்கூடிய வாய்ப்பும் அதிகரிக்கலாம் என்பதையும் உணருகிறார்கள். இந்த நிலையில் இந்த ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியரான மருத்துவர் மெரிலைன் வெட்ஜிடம் வருகிறார்கள். இந்த குறைபாட்டிற்காக பெரும்பாலும் கொடுக்கப்படும் மருந்தின் பெயரைச் சொல்லி அதைக் கொடுப்பதால் தங்கள் குழந்தைக்கு தீர்வு கிடைக்குமா என்று கேட்கிறார்கள். 
அந்த மருத்துவரின் பதிலும் பெரும்பாலும் ஆம் என்பதுதான். பெரும்பாலான குழந்தைகளை இது போன்ற மருந்துகள் அமைதியாக்கி, அவர்களின் கவனத்தை மீட்டுக்கொடுக்கின்றது. பல குழந்தைகளுக்கு மருந்து கொடுக்க ஆரம்பிக்கும் முதல் நாளிலிருந்தே பலன் தெரிய ஆரம்பிக்கின்றது. ஆனாலும் இந்தப் பெற்றோர் மருந்து, மாத்திரைகள் இல்லாமல் இந்தக் குழந்தையை வழிநடத்த தாமும் உறுதுணையாக இருக்கமுடியும் என்று விருப்பம் தெரிவித்தபோது அவர்களும் யோசிக்க ஆரம்பித்தனர். இதற்காகக் கொடுக்கப்படும் மருந்துகளின் தன்மைகள் மற்றும் அதனால் எதிர்பார்க்கப்படும் பின் விளைவுகள் குறித்து தெளிவான விளக்கமளித்துள்ளார். உளவியல் மருத்துவர்களைப் பொறுத்தவரை இந்த மருந்துகளை பயன்படுத்துவது அவரவர் சொந்த விருப்பத்தின் பேரில், அதாவது தேவையென்றால் பயன்படுத்தலாம் என்பதுதான். இந்த மருந்துகள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு முறையில் செயல்படுவதும் கண்கூடு. சிலருக்கு உடனே பலன் தெரியும் இதே மருந்து பலருக்கு நாள்பட எடுத்துக்கொண்டும் பலனளிப்பதில் மந்தமாக செயல்படலாம். அவரவர் உடல்வாகின் அடிப்படையிலேயே மருந்துகள் செயல்படுவதும் இயற்கை. பல நேரங்களில் முன் காலத்தில் குறும்புக்கார குழந்தை என்று வகைப்படுத்தப்பட்டு அதை இயல்பாக எடுத்துக்கொண்டு பெற்றோரும், ஆசிரியருமே அக்குழந்தையை இயல்பு நிலைக்கு கொண்டுவந்தது போக இன்று நவீனக் கலாச்சாரம் என்ற போர்வையில் அதே குறும்புக்கார குழந்தைகள் கூட குறைபாடுள்ள குழந்தைகளாக மருத்துவ ஆலோசனைக்கு உட்படுத்தப்படுவது வேதனையான செய்தியாகத்தான் பார்க்க முடிகின்றது. 
குழந்தைகள் உளவியல் மருத்துவம் சார்ந்து 25 வருட அனுபவம் கொண்ட மருத்துவரும், ஆய்வாளருமான மெரிலின்  ஒரு சாதாரணமான குழந்தைத்தனம் என்ற இயல்பியலை நம் சமுதாயம் முற்றிலும் மாறுபட்ட வேறு எல்லைக்கு கொண்டு சென்றுவிட்டனர் என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருப்பது இன்றைய பெற்றோர் சமூகம் கூர்ந்து கவனம் கொள்ளத்தக்கது என்பதில் ஐயமில்லை. 
ஒரு திரைப்பட தயாரிப்பாளரான டேவிட்டின் தந்தை  படைப்பாற்றல் உள்ள ஒரு குழந்தை இது போன்ற சூழல்களை எளிதில் கடந்துவிட வாய்ப்புகள் அதிகம் என்பதை உணர்ந்திருந்தார். இளம் வயதில் தனக்கும் இது போன்ற சில பிரச்சனைகள் இருந்தாலும் அது தன் பெற்றோரால் பெரிதுபடுத்தப்படாமல் இயல்பாக கையாளப்பட்டதால் தான் இன்று ஒரு சாதாரண மனிதனாக வலம் வரமுடிகிறது என்பதையும் எண்ணிப்பார்த்ததோடு, தாமஸ் ஆல்வா எடிசன், ஆல்பர்ட் ஐன்ஸ்டின் போன்ற விஞ்ஞானிகளும் ஆரம்பத்தில் இதே குறைபாடுகளுடன் பள்ளி ஆசிரியரால் வீட்டிற்கு அனுப்பப்பட்டவர்கள்தான் என்பதையும் அறிந்துகொண்டார்கள்.  மெக்கார்ட்னே போன்ற இசைக்கலைஞர் பகல் கனவு கண்டவாறு பள்ளிப்படிப்பில் கோட்டை விட்டவர், ஒரு கட்டத்தில் தீவிரமாக கிட்டார் இசையைக் கற்க ஆரம்பித்தார். வீட்டுப்பாடங்களைக்கூட கிட்டார் வாசித்துக்கொண்டே ஒழுங்காகச் செய்து முடிக்கும் வழமையும் கொண்டுவிட்டார் என்பது போன்ற பல தகவல்களை வாசித்து அறிந்தவர் தம் மகனுக்கும் மருந்து இல்லாமலே இயல்பு நிலைக்குக் கொண்டுவர வழிவகை செய்ய முடியும் என்பதையும் நம்பியதோடு அதற்கான சிறந்த திட்டமும் தீட்ட ஆரம்பித்தபோதுதான் இந்த மருத்துவர் குறித்த தகவல் அறிந்து அவரோடு சேர்ந்து தாமும் திட்டமிட, பெற்றோரின் ஒத்துழைப்புடன்  டேவிட்க்கு மருந்து இல்லாமலே மருத்துவம் பார்க்க முடிவு செய்தார். 
முதலில் அதிக அளவிலான உடற்பயிற்சியுடன் கூடியத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. உள்ளூர் விளையாட்டுக் குழுவில் சேர்த்து பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார்கள். இது போன்று ஆக்கபூர்வமான செயல்பாடுகளால் குழந்தை மெல்ல மெல்ல தேறிக்கொண்டு வந்ததைக் கண்ட பெற்றோர் முழுமையாக இதே முறையை கையாளத் தொடங்கி, வெற்றியும் கண்டதாகக் கூறுகிறார் மருத்துவர்.
ADHD (Attention deficit hyperactivity disorder) என்ற மனநலக் குறைபாடு பாதிக்கப்பட்ட குழந்தைகளை மட்டுமல்லாமல் அவர்தம்  பெற்றோர்களின் வாழ்க்கையையும் சேர்த்தே புரட்டிப்போடும் இது இன்று பெரும்பாலும் அனைத்து நாடுகளின் மருத்துவத்திற்கும் பெரும் சவாலாகவே இருந்து வருகின்றது. மருத்துவமும், தொழில்நுட்பமும் பெருமளவில் முன்னேற்றமடைந்துள்ளபோதும், இந்த குறைபாடு உலக அளவில் எதிர்காலத்தில் பெரும் பிரச்சனையாக உருவெடுக்கப்போகும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதே உண்மை. இத்தகைய குறைபாடுகளுக்கு அனைத்து நாட்டு வல்லுநர்களும் இணைந்து, நம்முடைய அனைத்து பழம்பெரும் வைத்திய முறைகளையும் ஆய்வு செய்து தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை உணரவேண்டிய காலகட்டம் இது..  :-(
பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளே அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்கிறார் அமெரிக்க ஆய்வாளர் டாக்டர் மெரிலைன் வெட்ஜ்.  அமெரிக்கக் குழந்தைகள் மிக அதிகமாக பாதிக்கப்படுவது குறித்து அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார். 13.2 % ஆண் குழந்தைகளும், 5.6 % பெண் குழந்தைகளும் அமெரிக்காவில் இந்த குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறார் ....
கவனமின்மை குறைபாடு (ADHD) ஒரு குழந்தையின் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பாதிக்கக்கூடியதாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட  குழந்தைக்கு மட்டுமா வேதனை ... உண்மையில், அது பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும், குடும்பத்திற்கும் அன்றாட வாழ்வியல் செயல்பாட்டிற்கும் இடையூறு ஏற்படுத்துகிறது. குழந்தைகளுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் ADHD இன் பாதிப்புகள் பால பருவத்திலிருந்து ஆரம்பித்து இளமைப் பருவத்திற்கும் தொடருகின்றன, கூடுதலாக, பாதிக்கப்பட்டவருக்கும் அவர்தம் குடும்ப உறுப்பினர்களுக்கும் அதிகரித்த செலவினங்களுடன் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
 தனிப்பட்ட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தக் குறைபாட்டில் கல்வியியல் சிக்கல்கள், சமூக திறன்கள் சிக்கல்கள், பலவீனமான பெற்றோர் -குழந்தை உறவுகள் போன்றவை அடங்கும். சமீபத்திய ஆய்வுகள் மூலம் 30 - 60%, பாதிக்கப்பட்டவர்கள் முதுகெலும்புக்குள் சீர்குலைவுக்கான குறிப்பிடத்தக்க அறிகுறிகள் உள்ளவர்களாக இருப்பதைச் சுட்டுகின்றன. இந்த குழந்தைகள் நீண்ட கால எதிர்மறை விளைவுகளுக்கு ஆட்படும் நிலையில் உள்ளனர். அதாவது  கல்வி கற்க இயலாமையால் வேலைவாய்ப்பு பாதிப்பு ஏற்படுவது வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்குகிறது.  ADHD இன் சிறந்த சிகிச்சை முறை என்றால் அது பள்ளி நேரங்களில் ஏற்படும் அறிகுறிகளை மட்டும் கவனம் கொள்ளாமல், குழந்தைகளோ அல்லது இளைஞர்களோ யாராக இருந்தாலும் அவர்களது குடும்பங்களின் தினசரி வாழ்க்கையை இயல்பாக வாழ முடியாமல் பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளைக் கண்டு அதற்கான தீர்வை ஏற்படுத்துவதேயாகும். ஆம், இந்த நோய்க்கான முழுமையான தீர்வுக்கான ஆய்வு என்றால் அது மொத்த குடும்பத்தின் செயல்பாடு மற்றும் நல்வாழ்வை கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டியது அவசியம்.
ADHD உடைய குழந்தைகளுக்கு வயது ஏறிக்கொண்டிருக்கும்போது அவர்களின் குறைபாடுகளும், அவர்களது குடும்பங்களில் ஏற்படும் மாற்றங்கள், செயல்திறன் செயல்பாட்டில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள்,  அவர்களின் வாழ்க்கைச் சூழலில் ஏற்படும் தனிப்பட்ட வாழ்வியல் முறைகளைப்பொருத்து இடர்பாடுகள் விளைகின்றன. குடும்பம், பள்ளி வளங்கள், வயது, அறிவாற்றல், குழந்தை அல்லது இளம் நபரின் நுண்ணறிவின் அடிப்படையில் வேறுபடும். இவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய உணர்திறன் கொண்ட சுற்றுச்சூழல் மற்றும் நோய் தாக்கத்தின் அறிகுறிகளை அறிந்து கொள்ளும் திறனும் அவசியம். உகந்த மருத்துவ உதவியும், நடத்தை மேலாண்மையும்  ADHD யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆறுதல் அளித்து சமுதாயத்தின் மீதான எதிர்மறையான விளைவுகளைக் குறைப்பதோடு அவர்களது முழு திறனையும் அடைவதற்கும்  வழிவகை செய்கிறது.
 செறிவற்ற தன்மை, அதீத செயல்பாடு, மன இறுக்கம் போன்றவைகள் வழக்கமாக இக்குழந்தைகளின் பொதுவான பண்புகள் ஆகும். வளர வளர நாடகத்தன்மையுடனான செயற்பாடுகளும், அமைதியற்ற தன்மையும் வளர்ந்துவிடுகிறது.
இதுமட்டுமல்லாமல் இந்தக் குறைபாடுகளின் தொடர்புடைய மற்ற பெரும் பிரச்சனைகளும் அதிகம். இதில் பெற்றோர், உறவினர், சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறிப்பிடத்தக்கன. பெற்றோருக்கு ஆலோசனை மற்றும் ஆதரவை வழங்குவது முக்கியம். ஒரு சாதாரண பெற்றோரின் கோரிக்கைகள் மற்றும் நடத்தை தொடர்பான ஆலோசனையுடன் பதிலளிக்காதபோது ஆரம்ப கட்டத்தில் அந்த பெற்றோர் மன அழுத்தத்திற்கு ஆளாகநேரலாம். பெற்றோர் குழந்தைகளுடன் மற்றும் அவர்களது கவனிப்பாளர்களோடு குழந்தை தொடர்புடைய செயல்பாடுகளில் கவனம் கொள்வதோ அல்லது உதவி புரிவதோ மேற்கொண்டால் அவை பெற்றோரின் மன அழுத்தத்தை குறைப்பதில் பயனுள்ளவையாக உள்ளதாகவும் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
ஆரம்பப் பள்ளி ஆண்டுகள்
இயல்பான வகுப்புத் தோழர்கள் பள்ளியில் வெற்றிகரமாக கற்றுக் கொள்ளும் திறன் மற்றும் முதிர்ச்சியை வளர்த்துக் கொள்ளத் துவங்குவதால் ADHD குறைபாடுகளுடன் உள்ள குழந்தை வித்தியாசமாக காட்சியளிக்கிறது. பெரும்பாலும் குழந்தைக்கு கல்வியில் பின்தங்கும் நிலை, அனுபவங்களை நிராகரிப்பது, குறைந்த சுயமதிப்பீடு,  குறிப்பிட்ட கற்றல் சிரமங்கள் போன்ற பிரச்சினைகள், குழந்தையின் மன நிலையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஒரு கல்வி உளவியலாளரின் மதிப்பீடு, அந்தக் குழந்தைக்கான கற்றல் திறன் மற்றும் சிரமங்களை வெளிப்படுத்த உதவும் என்பதால் அவர்கள் வகுப்பறையில் தேவையான ஆதரவையும் ஆலோசனையையும் வழங்கச் செய்யலாம். பாதிக்கப்பட்ட குழந்தைகளை மற்ற குழந்தைகள் ஒதுக்கி வைப்பதையும் தகுந்த அறிவுரைகள், ஆலோசனைகளுடன் மாற்ற முயற்சி எடுக்கவேண்டும்.
 பல குழந்தைகள் மிகவும் குறைவாகத் தூங்கும் வழக்கங்களைக் கொண்டுள்ளனர். இதனால் தூக்கம் மோசமாகப் பாதிக்கப்படும்போது இவர்களின் பகல் நேர நடத்தைகளும் கூட மோசமாகிவிடுகின்றன. இதன் விளைவாக, பெற்றோர்கள்களுக்கு சிறிதளவேனும் ஓய்வற்ற சூழல் உருவாகிவிடுகிறது; குழந்தையின் மீது முழுநேர கவனம் செலுத்தவேண்டியதாகிறது. இதனால் பல நேரங்களில் குடும்ப உறவுகள் கடுமையாக பாதிக்கப்படுவதோடு சில சந்தர்ப்பங்களில் கூடுதல் சமூக மற்றும் நிதி சிக்கல்களையும் கொண்டு வருவதில் ஆச்சரியம் இல்லை.  இதையெல்லாம் தாங்கினாலும் குழந்தைகளின் சோகமான உணர்வையோ அல்லது கோபமான நடத்தையையோ தாங்கிக்கொள்ள முடியாமல் வேதனைப்படுகிறார்கள்.
ADHD பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தை மதிப்பிடுவது எளிதன்று. இது போன்ற குழந்தைகளின் நடத்தை மதிப்பீடுகள் வழக்கமாக பெற்றோர்கள், ஆசிரியர்கள் அல்லது சுகாதார வல்லுநர்களால் செய்யப்படுகின்றன. பொதுவாக ஒரு ஆரோக்கியமான குழந்தை எப்படிப்பட்ட மன நிலையில் இருக்கும் என்பதை ஊகிக்க முடிவது போன்று ADHD குறைபாடு உடைய குழந்தைகளின் மன நிலையை ஊகிப்பது இயலாத காரியமாகலாம். காரணம் அவர்களின்  சுய மதிப்பீடு கட்டுப்பாட்டிற்குள் இருப்பதில்லை. இது போன்ற நடவடிக்கைகளால் குடும்பத்தின் அமைதிக்கு ஏற்பட்ட சீர்குலைவு காரணமாக, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடன்பிறந்தவர்களுக்கும் அந்த கவலையும் சோகமும் தொற்றிக்கொள்கின்றன. 

ADHD சகோதரர்களிடமிருந்து கடுமையான உடல்நலம் வன்முறை, வாய்மொழி ஆக்கிரமிப்பு மற்றும் கையாளுதல் மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம் ஆக்கிரமிப்பு செயல்களால் பாதிக்கப்பட்டதாகக் கருதும் உடன்படிக்கைகள் தெரிவிக்கின்றன. அதோடு, ADHD உடன் தொடர்புடைய சமூக மற்றும் உணர்ச்சியற்ற தன்மை காரணமாக அவர்களின் ADHD சகோதரர்களைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் பெற்றோர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று உடன்பிறப்புகள் தெரிவித்தன. மேலும், ADHD அறிகுறிகளின் விளைவாக மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட சீர்குலைவு காரணமாக, பல உடன்பிறந்தவர்கள் கவலை, கவலை மற்றும் சோகமாக உணர்கின்றனர்.
எவ்வாறாயினும், சமூகம் மற்றும் குடும்ப செயல்பாட்டில் வெளிப்படையான முன்னேற்றம், குழந்தை மற்றும் அவர்தம் குடும்பத்தின் தொடர்ச்சியான வாழ்க்கைத் தரத்தை மதிப்பீடு செய்வதற்கான மேலும் பல ஆராய்ச்சிகள் தற்போதய அவசரத் தேவையாகிறது. இதற்கான முழுமையான ஆய்வுகளை அனைத்துத் தளங்களிலும் மேற்கொண்டு இந்த குறைபாடுகளினால் ஏற்படும் பிரச்சனைக்களுக்குத் தீர்வு காண்பது சவாலான காரியமாகவே உள்ளது என்பதில் ஐயமில்லை. அரசு மற்றும் பொது நல சேவை அமைப்புகளும் இணைந்து இப்பணியை மேற்கொண்டு விரைவில் செயல்படுவது அவசியமாகிறது.



Tuesday, June 12, 2018

அமெரிக்க வாசிங்டன் தமிழ் சங்கத்தில் என் நூல் வெளியீடு!



அன்பு நண்பர்களுக்கு,



வணக்கம். வருகிற ஞாயிறன்று (17 /06/2018) அமெரிக்காவின் முதல் தமிழ் சங்கமான, தலைநகர் வாசிங்டனின் தமிழ் சங்கத்தில் என்னுடைய “தமிழ் புத்தமும் கிழக்காசிய வணிகமும்” என்ற நூலின் அறிமுகமும் அவ்வமயம் என் கருத்துரைகளை வழங்கும் அற்புதமானதொரு வாய்ப்பும் அமையப் பெற்றதற்கு மிகவும் மகிழ்கிறேன். இத்தகைய அரிய வாய்ப்பை அமைத்துக்கொடுத்திருக்கும், தமிழறிஞர்களான நட்புள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.வாய்ப்பிருக்கும் நண்பர்கள் கலந்துகொள்ள வேண்டுகிறேன். சந்திக்க ஆவலாக இருக்கிறேன். நன்றி.

Sunday, June 10, 2018

வட அமெரிக்க தமிழ்சங்கப் பேரவை!



நன்றி மேகலா.

எழுத்தாளர், பத்திரிகையாளர், வல்லமை மின்னிதழின் நிர்வாக ஆசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் எனும் பன்முகப் பேராற்றல்கொண்ட திருமதி பவளசங்கரி அவர்கள் சனிக்கிழமை (ஜூன் 2, 2018) இரவு 8:30 மணியளவில் (அமெரிக்கக் கிழக்கு நேரம், EST), வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) வினாடி வினாக்குழு ஏற்பாடு செய்திருக்கும் சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றவிருக்கிறார். அனைவரையும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள வருக வருக என வரவேற்கின்றோம்! 🙏 — with Pavala Sankari.

Sunday, March 25, 2018

சித்தார்த்தா பள்ளி நிகழ்ச்சி!









நேற்று சித்தார்த்தா பள்ளி மாணவச் செல்வங்களுடன் மிக இனிமையாகக் கழிந்த பொழுதுகள்! சிறார்கள் என்ற கணிப்புடன் நம் சொற்பொழிவை மழலையாக்கத் தேவையில்லை என்று உணரச் செய்யும் இக்காலக் குழந்தைகளின் அறிவாற்றலும், புரிந்து கொள்ளும் தன்மையும் மன நிறைவை ஏற்படுத்துகிறது! மாற்றுச் சிந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டிருப்பது நம்பிக்கையளிக்கிறது!













வல்லமை தாராயோ - என்ற தலைப்பில் குழந்தைகள் மிக அழகாக கவிதை வாசித்தார்கள். நம் வல்லமை இதழ் சார்பாக குழந்தைகளுக்கு திருக்குறள் நூல் (விளக்கவுரையுடன்) பரிசாக வழங்கினோம்.

Saturday, March 24, 2018

மனிதர்கள் காத்திருக்கின்றார்கள்



பொலிகையூர் ரேகா அவர்களை முதன் முதலில், உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் (சென்னை - 2017) சந்தித்தபோது பெயர் அறிமுகமின்றியே அவர்தம் எழுத்தின் வாயிலாகவேக் கவரப்பட்டேன். மிக யதார்த்தமான எழுத்து நடையுடன், இலங்கையின் கருமையான நாட்களையும், மக்களின் அவல நிலையையும், தற்கால முன்னேற்றத்தின் அகண்ட பாதைகளின்  சுவடுகளையும் மிகவும் யதார்த்தமாக, துளியும் மிகைப்படாமல் எடுத்துரைத்த விதம் சிறப்பாக அமைந்திருந்ததால் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த அவர்தம் கருத்தரங்க உரை அனைவரையும் கவர்ந்திருந்தது.

”மனிதர்கள் காத்திருக்கின்றார்கள்”என்ற அவருடைய சிறுகதைத் தொகுப்பின் தலைப்பே பல கதைகளை உருவாக்கக்கூடியது. ஆசிரியர் இத்தொகுப்பின் ஒவ்வொரு கதையின் பாத்திரப் படைப்பையும் வித்தியாசமாக உருவாக்கியிருப்பதோடு கதை மாந்தர்களின் பெயர் சூட்டுவதிலும் ஒரு அழகியலைக் கடைபிடித்திருக்கிறார். சிற்பிகா, சங்கழகிப் பாட்டி, தமிழினி , இலக்கியா, இசையரசி, இனியா, அறிவழகன், தமிழேந்தி என்பன போன்ற மிக அழகான தமிழ் பெயர்கள் இவர்தம் படைப்புகளுக்கு அணிகலன் ஆகியுள்ளன.

இத்தொகுப்பின்முதற்படைப்பான,“மனிதர்கள் காத்திருக்கின்றார்கள்”என்ற கதை முத்தான முதல் கதையாகியுள்ளது. முதியோர் இல்லம் என்பது இன்றைய நாட்களில் மலிந்து கொண்டு வருவதாக உள்ளது.

"கண்ணகிப் பாட்டியைப் போல இங்குள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு வலி நிறைந்த பின்புலம் உள்ளது. உறவினர்கள், பிள்ளைகள்,  அயலவர்கள்  என  யாரேனும்  ஒருவர் கொண்டுவந்து சேர்த்தவர்களாகவோ அல்லது தாமாகவோ வந்து சேர்ந்தவர்களாக இருந்தனர்"

இயந்திர உலகத்தில்  பணம் சேர்ப்பதற்காய், வேறு சிக்கல்களுக்காய் பெற்றவர்களை இங்கு விடும் பிள்ளைகளை என்ன செய்வது என அவள் எண்ணம் வண்டியோடு ஓடிக்கொண்டிருந்தது.

ஆம் மனிதர்கள் காத்திருக்கின்றார்கள். அன்புக்காக, அரவணைப்புக்காக, அக்கறையான சில வார்த்தைகளுக்காக  எல்லா இடங்களிலும்   மனிதர்கள் காத்திருக்கின்றார்கள்.
உணர்வைத் தீண்டிய உன்னத படைப்பு இது!

2. கானல் நீரும் கலைந்த கனவுகளும்

செடி கொடிகளில் ஆர்வம் உள்ளவர்கள் பெரும்பாலும் மென்மையான இதயம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். கதை நாயகியும் தனக்கும் அவற்றிற்குமிடையேயான பாசப் பிணைப்பு சிறிய அளவில் ஆரம்பித்துச் சிறிது காலப் பகுதிக்குள் பெருமளவில் பரவியதால் மாடிப் பகுதியையே ஒரு பசுமைத் தோட்டமாக மாற்றி வைத்திருந்த தனக்கு வேதனை ஏற்பட்ட காரணத்தைச் சொன்ன விதம் ஒரு தேர்ந்த விவசாயி தம் பயிர் பாதுகாப்பு குறித்து எடுக்கும் முயற்சிகளுக்கு சற்றும் சளைக்காத வகையில் உரம் போடுவது குறித்தும், பூச்சி மருந்து அடிப்பது குறித்தும் மிகத் தெளிவான கருத்துகளைப் பதிவு செய்துள்ளார் என்றே பாராட்ட வேண்டியுள்ளது. ‘அமிர்த கரைசல்’ உருவாக்கப்பட்ட விதமும், மீன் அமிலம் எனப்படும் இயற்கை உர உருவாக்க முறைமையும் ஆக்கப்பூர்வமானதாகவே உள்ளதை மறுக்கவியலாது.
துருக்கறைகளையே நீக்கும் அந்தக் குறிப்பிட்ட குளிர்பானத்தை வாங்கி நீர் கலக்காமல் அப்படியே தெளிக்கும் கருவி கொண்டு தெளித்துவிட்டால் மறுநாள் காலையில் பெரும்பாலும் பூச்சிகளற்ற நிலையில் இருந்த அவரைச் செடிகளையும் கண்டு வியந்து நிற்க இயலுமாம்.

“எல்லோருடைய கனவுகளையும், ஆசைகளையும் குழப்புவதற்கு அனைத்து இடங்களிலும், பலவிதமான குரங்குகள் இருக்கும் போல என்று நினைத்தபடியே விழுந்து கிடந்த மரங்களையும், செடி வளர்ப்புப் பைகளையும், பார்த்தேன். குரங்குகளின் தாக்குதலுக்குப் பின்னரும் சில செடிகள் கம்பீரமாக நிற்பதாகவே இப்போது தோன்றியது” என்ற ஆசிரியரின் சிந்தைகள் வியந்து போற்றத்தக்கது.

மனித வாழ்வும் மரம், செடி கொடிகளைப்போன்று நிலையற்றது. பிறந்தவை அனைத்தும் ஓர்நாள் அழியக்கூடியவை. இருப்பினும் இடையிலேயே பூத்துக்குலுங்க வேண்டிய தருணத்தில் உருத்தெரியாமல் அழிந்துபோகும் கொடுமையின் வலியை உணர்வுப்பூர்வமாக வடித்தெடுத்திருக்கும் அருமையான புனைவு இது!

3. 'மண் மணம்’  பழங்கதைகளை மணமும், சுவையும் மாறாமல் அழகாக வரையப்பட்ட ஓவியம்.

4. வாய்மையின் வாயாடிகள்

திருமணம் என்ற ஒரு நிகழ்வு ஒரு பெண்ணின் வாழ்வில் எத்தகையத் திருப்பு முனையாக அமைந்துவிடுகின்றது என்பதை அந்தப் பெண்ணின் பார்வையிலும், ஒரு தாயின் பார்வையிலும் மாறி மாறி பேசவைத்து இறுதியாக மிக யதார்த்தமான வசனங்களுடன் இயல்பாக முடித்திருக்கும் பாங்கு இந்தக் கதையாசிரியரின் பார்வையைத் தெளிவுற விளக்குவதாக அமைந்துள்ளது சிறப்பு.

வாழ்க்கையில், சக மனிதரின் தர்மசங்கடங்களைப் புரிந்துகொள்ளாத சில நிரந்தரமான விசாரிப்புகள் எத்தகைய காயங்களை ஏற்படுத்துகின்றன என்பதை அவைகளை உணராதவர்கள் மட்டுமல்ல, உணர்ந்தவர்களும்கூட உதாசீனப்படுத்துகின்றனர் என்பதை உள்ளம் நோக உரித்துக்காட்டியுள்ள உயர்ந்த படைப்பு.

5.  “விதி(னை)யின் தீர்ப்புகள்”

புறம் பேசும் பெண்களைச் சாடியுள்ள நல்லதொரு போக்கு இக்கதையின் சிறப்பம்சம் எனலாம்.

"எல்லாருடைய வாழ்விலும் ஒரு முன்னாள் காதல் இருக்கலாம் அதனால் எனக்கு வருகின்றவர் என்னைப்போல யாரையும் காதலிக்காமல் தன் துணைவிக்காக காத்திருந்திருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை"  .

ஆக்கப்பூர்வமான எண்ணங்களின் ஊற்றாக வெளிப்படும் படைப்பு!

“ஒரு பெண் ஏமாற்றினால் அங்கே பாதிக்கப்படுவது ஒரு ஆணின் வாழ்க்கை மட்டுமல்ல எந்தத் தவறும் செய்யாத இன்னொரு பெண்ணின் வாழ்க்கையும்தான் என்பது பலரின் பார்வையிலிருந்து மறை(ற)ந்து கிடப்பதை எண்ணிப் பெருமூச்சு விட்டவாறு விதியின் பாதையில் நடக்கத் தொடங்கினாள்.”  - முத்தாய்ப்பு!

6. தேயாத நிலவுகள்

குடும்பச் சுமைக்காகவும்,  பெற்றோரது கடமையை  முடிக்கும் நோக்கத்திற்காகவும் திருமணம் செய்து கொண்டு தங்கள் கனவுகளைத் தொலைத்துவிடுகின்ற பெண்களைப் பற்றிய ஆதங்கத்தைத் தெளிவுற விளக்கும் கதை.

7. வழக்காடும் வழக்கங்கள்

பெண்களின் இயற்கை உபாதைகளையும்கூட ஆண்களிடம் மறைக்கப்படுவதாலேயே இரு பாலருக்குமிடையே மனித இனம் என்பதையும் கடந்து வேறுபாடுகள் உருவாகி அதனால் நன்மைகளைக் காட்டிலும் தீமைகளே பெருமளவில் சமுதாயத்தில் பரவுகின்றன என்றதொரு சரியான கோணத்தை தெளிவாக உணர்த்தும் அனுபவங்களின் தொகுப்பாகவே உள்ளது இக்கதை.
“மறைத்து மறைத்து வளர்க்கப்படும் பிள்ளைகள்தான் சமூகப் பொறுப்பற்றவர்களாக, அவர்களும் நம் போன்றவர்கள் என்று எண்ணாது பெண்களை போகப் பொருளாக எண்ணும் மனநிலைக்கு  ஆளாகின்றனர்.  இது ஆண்களிடம் இருந்து மறைக்க வேண்டியதல்ல ஆண்கள் உணர வேண்டிய பெண்களின் உடல் நிலை " என்ற வாதமும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே உள்ளது.

8. களையிழந்த   காகிதங்கள்

தன் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தன்னோடு உறவாடியப் புத்தகங்களை இழக்க நேரிடும்போது ஒரு உயிர் படும் வேதனையைத் துல்லியமாக உணர்த்தியிருக்கும் இனிய படைப்பு. இழந்துவிட்ட காகிதங்களால் களையிழந்த முகங்கள்!

9. நிம்மதி

மனிதர்களின் அன்றாடப் பிரச்சனைகளில் மிக முக்கியமான ஒன்று, இயற்கை உபாதைகளைத் தீர்க்கும் தளமான கழிவறை. அதுவும் பொது இடங்களில் கழிப்பறையைப் பயன்படுத்துவோரின் அசூசையான மன நிலையைப் பிரதிபலிக்கும் குறுங்கதை இது.
சில சந்தர்ப்பங்களில் இல்லை என்பதை விடவும் இந்த நிலைமையிலாவது இருக்கின்றது என்னும் நினைப்பே நிம்மதியானதுதான்போல என்ற எண்ணம் கழிவறைக்கு மட்டுமல்ல, களைத்துப்போய் நொந்த மேனிக்கும் கூடத்தான் என்கிறாரோ?

10. தனிமைப் பறவைகள்

தனிமை என்பது ஒரு சிலருக்கே, ஒரு சில காலங்களில் மட்டுமே விரும்பி ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்று. ஒரு கூட்டுப் பறவைகள் பிரிந்து தனிக்குடும்பம் ஏற்படுத்திக் கொள்வதென்பது இயல்பான ஒன்று என்றாலும், ஒரு தாய்ப்பறவைக்கு அது மகிழ்ச்சி கலந்த வேதனை என்றே கொள்ளமுடியும். தம்மை விட்டு விலகிச்செல்லும் பந்தங்களைக் காண உள்ளம் நோகத்தான் செய்யும். உள்ளம் தொட்ட உணர்வுப்பூர்வமான புனைவு!

இந்த வகையில், கதை ஆசிரியர் பொலிகையூர் ரேகா அவர்களின் ஒவ்வொரு கதையும் வாழ்வியலின் அடிப்படையில் ஒவ்வொரு முகமாக அமைந்திருப்பது வாசிப்பவருக்கு சுவை கூட்டக்கூடியது. சிறந்த நடையும், எளிமையான மொழியும், சுவையான களங்களும் ஆசிரியரின் எழுத்தாற்றலை பறை சாற்றக்கூடியதாகவே உள்ளன. வரும் காலங்களில் பொலிகையூர் ரேகா மிகச்சிறந்த படைப்பாளர்களின் பட்டியலில் இடம் பெறுவார் என்பதில் ஐயமில்லை!

அன்புடன்
பவள சங்கரி



Thursday, March 22, 2018

4,500 ஆண்டுகள் பழமையான தமிழ்!



செருமனியில் உள்ள மாஃக்சு பிளான்க் என்ற அறிவியல் - மானுடவியல் வரலாற்று கல்வி நிறுவனமும், உத்தரகண்டின் டேராடூனில் அமைந்துள்ள இந்திய வன உயிர்க்கல்வி நிறுவனமும் இணைந்து நடத்திய மொழி சார்ந்த ஆய்வின் முடிவில், தமிழ் உள்ளிட்ட 82 மொழிகளைக் கொண்ட திராவிட மொழிக்குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது என்றும் குறிப்பாக தமிழ் மொழி மிகப்பழமையான மொழி என்றும், செழுமையோடு இன்றளவிலும் பயன்பாட்டில் உள்ள மொழி என்றும் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சமசுகிருத மொழியும் உலகின் மூத்த மொழிகளில் ஒன்றாகக் கருதப்பட்டாலும் தமிழ் மொழியின் இலக்கியங்கள், காப்பியங்கள், கல்வெட்டுகள் போன்றவைகள் சிதையாமல் உள்ளது போன்று சமசுகிருத்தத்தில் இல்லையென்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக கி.மு. முதலாம் நூற்றாண்டில் கொரிய நாட்டிற்குச் சென்று அந்நாட்டையே உருவாக்கியவள் தமிழ் நாட்டுப் பெண்ணாக இருக்கலாம் என்பதற்கும் இந்த ஆய்வு ஆதாரமாக இருக்கின்றது!






கவிக்கொலை?


அரசே கழுமரத்தில் இன்று கூட்டம் நிரம்பி வழிகிறது. 

ஏன் .. என்ன ஆச்சு இன்று மட்டும்

அரசே நீங்கள்தானே கவிதை தினம் என்று சொல்லிச்சொல்லி கவிதைங்கற பேரில் கண்டதையும், காணாததையும் கொட்டிவிட்டுப் போகும் அத்தனை அலப்பறைகளையும் கழுவில் ஏற்றச்சொல்லி உத்தரவிட்டீர்கள். 

ஓ..  அப்படியா. கொலைக்குற்றவாளிகளின் தண்டனைகளை கொஞ்சம் தள்ளிப்போட்டு முதலில் தமிழையும், கவிதையையும் கொலை செய்யும் இந்த கவிக்குற்றவாளிகளை கழுவில் ஏற்றுங்கள்.
மன்னா புதிதாக இன்னும் பல கழுமரங்கள் தேவை ..


அப்படியே ஆகட்டும், அரசின் கஜானாவே காலியானலும் பரவாயில்லை..  

Friday, March 16, 2018

கொரியநாட்டுக் கவிக்குயில் கிம் யாங் - ஷிக் கவிதைகள் - தமிழாக்கம்







கொரியநாட்டுக் கவிக்குயில் கிம் யாங் - ஷிக் கவிதைகள் - தமிழாக்கம் - பவள சங்கரி , நூல் வெளியீடு மார்ச் 10, 2018 அன்று தமிழக அரசின் மாண்புமிகு திரு க. பாண்டியராஜன், தமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர்  அவர்களால் வெளியிடப்பட்டது. முனைவர் வி.ஜி.சந்தோசம் அவர்கள் முதற்படியைப் பெற்றார். கொரிய குடியரசுத் தூதர் திரு.ஹியூங் டே கிம் அவர்கள் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார். 87 அகவை நிரம்பிய, கொரிய தாகூர் சங்கம் மற்றும் இந்தியக் கலைக்காட்சியகம் நிறுவனர், சியோல், தென் கொரியா, முனைவர் கிம் யாங்-ஷிக் அவர்கள் நேரில் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏற்புரை வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் க.பாண்டியராஜன் அவர்களின் அற்புதமான உரை இது.

குறிவைத்து தாக்க நினைத்தாலும்
குரல்கொடுத்து காக்கச்செய்பவள் 
தமிழன்னை!



Thursday, March 8, 2018

சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகள்!



ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பது தனிமனிதர்கள் வளர்ச்சியின் அடிப்படையிலேயே அமைய முடியும். அத்தகைய தனிமனித வளர்ச்சியின் ஆணி வேராக இருப்பவர்கள் பெண்கள் மட்டுமே.ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப்பின் மட்டுமல்ல வாழ்வாதாரத்தின் அடிப்படையிலேயே பெண்தான் இருக்கிறாள் என்பதே நிதர்சனம். ஒரு சில விதிவிலக்குகள் இருந்தாலும் பெரும்பான்மையான சமூக அமைப்புகள் பெண்களின் தன்னலமற்ற சேவையின் மூலமே கட்டமைக்கப்பட்டுள்ளன. அதாவது பாலின வேறுபாடுகளின்றி, சமுதாய முன்னேற்றத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களின் பங்களிப்பும் உள்ளது. தற்போது பெண்களுக்கு ஆண்களுக்கு நிகராக சம ஊதியம், சம கல்வி, சம வேலை வாய்ப்புகள் என பல்வேறு வகையான வாய்ப்புகளும் பெருகி வருவதும் கண்கூடு. கல்வியில்லாத பெண்கள் களர் நிலம். அங்கே புல்விளையலாம்; நல்ல புதல்வர்கள் விளைவதில்லை என்கிறார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். ஒரு குடும்பத்தில் ஓர் ஆண்மகன் கல்வி கற்றால் அதனால் அவனுக்கு மட்டுமே பயனுண்டு. ஆனால் ஒரு பெண் கல்வி கற்றால் அக்குடும்பம் முழுமைக்கும் பயன்படுகிறது. அக்கல்வியால் குழந்தைகளை நன்றாகப் பேணி வளர்க்கவும் முடிகிறது. ஆம் கல்வி கற்ற பெண் தன் குழந்தைகளை சிறந்த முறையில் வளர்க்க முடிகிறது.

சமுதாய அமைப்பு என்று எடுத்துக்கொண்டால் அதில் பெண்கள் பெற்றுள்ள செல்வாக்கு மட்டுமே அந்நாட்டின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுவதாக அமையும். அத்தகைய வளர்ச்சிக்குப் பெண் கல்வி மட்டுமே அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது. அதாவது நற்பண்பை வளர்க்கக்கூடிய அறிவைப் புகட்டுவதும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை ஊக்குவிக்கக்கூடியதுமான திறன்களை உருவாக்குவதுமே பெண் கல்வியின் முக்கிய நோக்கங்களாக இருக்க வேண்டும். சிந்தையும் செயலும் ஒன்றுபட்டு இயங்க வேண்டுமாயின் கல்வியின் அவசியத்தை முதலில் உணர்தல் வேண்டும். சமுதாயத்தில் உன்னதமான மாற்றங்களை ஏற்படுத்தவல்லது என்றால் அது பெண் கல்வி மட்டுமே. ஆம் பல துறைகளிலும் ஆண்களுக்குச் சரி நிகராக முன்னேறிவரும் இன்றைய பெண்கள்தான் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றியமைக்கப் போகிறவர்கள் என்றால் அது மிகையல்ல. அத்தகைய கல்வி, இலட்சிய வேட்கை மனிதாபிமானம், சகிப்புத்தன்மை, பகுத்தறிவு முன்னேற்றம், புதிய சிந்தனையில் நாட்டம், ஆகியவற்றை முன்னெடுக்கக்கூடியதாக அமைய வேண்டும்.

ஆதிகாலந்தொட்டு பெண்கள் வீரம், விவேகம், உழைப்பு, பொறுப்பு, பொறுமை என அனைத்திலும் ஆண்களைக்காட்டிலும் சிறந்தவர்களாகவே இருந்து வந்துள்ளனர். புலியை முறத்தால் விரட்டியப் பெண்மணிகள் சங்க காலத்திலேயே இருந்துள்ளனர். வயலில் இறங்கி பாரபட்சமின்றி ஓயாது உழைத்தவர்கள் அக்காலத்திலும் இருந்தனர். ஆயினும் கல்வி கற்பதில் மட்டும் பெண்களுக்கான எல்லைக்கோடு அழுத்தமாகவே பதியப்பட்டிருந்தது.
ஆனால் இன்றைய நிலையே வேறு. “புதியதோர் உலகம் செய்வோம், கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்’ என்ற பாரதிதாசனின் வார்த்தைகளை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். சுதந்திரம் இல்லாமல் அடிமைத்தளையில் சிக்குண்டு கிடக்கும் பெண்கள் உருவாக்கும் சந்ததியினரின் துணிவும், தன்னம்பிக்கையும் கேள்விக்குறியாகிவிடுகின்றன.
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்
என்றார் பாரதி.

அதாவது, பெண்களை எண்ணத்தால், சொல்லால், செயலால் என எவ்வகையிலும் இழிவுபடுத்தும் அறிவற்ற செயலை தீயிட்டு கொளுத்த வேண்டும் என்பதே இதன் பொருள்.
ஆனால் இன்றைய நிலையில் அன்றாடம் ஊடகங்களில் பெண்கள் பலவகையிலும் இழிவுபடுத்தப்படும் செயல்பாடுகளில் முன்னணியில் நிற்கின்றன. விளம்பரங்களில் தேவையின்றி பெண்களை அரைகுறை ஆடைகளுடன், மோசமான பாலுணர்வைத் தூண்டுகின்ற உடல் மொழிகள், இரட்டை அர்த்த வசனங்கள் என்று மிகக் கேவலமாக நடத்துவதைக் காணமுடிகிறது. தொலைக்காட்சி தொடர்களில் மேலும் ஒருபடி மோசமாக, பெண்களை கலாச்சார சீர்கேடுகளை ஊக்குவிப்பவர்களாக புனையப்படுவதுதான். குடும்பத்தில் வன்முறைகளை எப்படி செயல்படுத்துவது என்பதை பெண்களைக்கொண்டு வகை வகையாகத் திட்டமிட்டு காட்சிப்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கொலை, கொள்ளை, கர்பத்தைக் கலைத்தல், பாலியல் வன்கொடுமைகள் போன்ற கொடுமைகளை சர்வ சாதாரணமாகப் பெண்கள் செய்வதுபோலக் காட்சியமைப்பதை எந்தத் தணிக்கைக் குழுவும் கண்டுகொள்வதில்லை என்பது வேதனையான விசயம். பண்பாடு மற்றும் கலாச்சார சீரழிவிற்கு மிக முக்கியமான காரணிகளில் முதன்மையாக இருப்பது ஊடகங்கள் என்பதை மறுக்கவியலாது.

ஒரு பெண்ணின் வாழ்வியல் என்பது ஆரம்பம் முதல் கல்வியில் தொடங்க வேண்டும். மகாகவி பாரதி சொல்வது போன்று,
“அதற்கு மூன்றுவிதமான உபாயங்கள் இருக்கின்றன. முதலாவது உபாயம் கல்வி; இரண்டாவது உபாயம் கல்வி; மூன்றாவது உபாயம் கல்வியே! அதாவது கல்வியைத் தவிர வேறு எல்லா விதமான உபாயமும் சிறிதேனும் பயன்படாது என்பது கருத்து”
(சக்கரவர்த்தினி கட்டுரை-பக்.83) என்கிறார்.

ஓரளவிற்கேனும் படித்த பெண்கள் சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நிற்பதோடு அரசியல் செயல்பாடுகளிலும் பங்கேற்கிறார்கள். இதனால் சமுதாயத்தில் பல நன்மைகள் விளைகின்றன. இன்று கணினித் துறையில் இருக்கும் பெண்கள் பல நாடுகளுக்கும் பயணம் செய்து தங்கள் அறிவின் மேன்மையை வெளிப்படுத்தி புகழ் பெறுகிறார்கள். அதுமட்டுமட்டுமின்றி அங்குள்ள புதுமைகளை நம் நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தவும் முனைவதன் மூலம் பாரதியின் கனவை நினைவாக்குகின்றனர்.
கல்வி, ஆளுமை, சுதந்திர உணர்வு, அச்சமின்மை, என ஆணுக்கு நிகராக அனைத்துத் துறைகளிலும் வீறுகொண்டெழுந்து வெற்றிவாகை சூடிவரும் புதுமைப் பெண்களை பரவலாகக் காணமுடிகிறது.
எதிர்படும் சவால்களனைத்தையும் சமாளிக்கும் வல்லமையையும் பெற்றிருக்கிறார்கள். ஆக சமுதாயப் புரட்சியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள எந்த தடையும் இல்லாத வகையில் பெண்கள் இன்று தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்கள்.
பொருளாதார முன்னேற்றம் என்பது மட்டுமே ஒருவரின் உண்மையான வளர்ச்சியை நிர்ணயிக்கக் கூடியதாகும். குறிப்பாக பெண்களுக்கு பொருளாதார சுதந்திரமும், முன்னேற்றமும் மிகவும் அவசியமானதாகும். இன்றைய உலகமயமாக்கல், பொருளாதார மறு சீரமைப்பு போன்றவைகளால் உலகம் முழுவதும் வேலை வாய்ப்புகள் பெருகி வருவது பெண்களுக்கும் சாதகமாகவே அமைந்துள்ளது. பலர் தொழில் துறைகளிலும், உற்பத்தித் துறைகளிலும் சாதனை புரிந்து வருகின்றனர்.
சிலகாலம் முன்பு தனியார் அல்லது அரசு நிறுவனங்களில் பணிபுரிவது மட்டுமே பெண்களின் வழமையாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்றைய நிலையில் மற்றைய உலக நாடுகளைப் போலவே இந்தியாவிலும், சமுதாயத்தில் பெண்களின் நிலையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சுய தொழில் செய்வதிலும் ஆர்வமுடன் ஈடுபட்டு வெற்றியும் கண்டு வருகின்றனர் என்பதும் மகிழ்வான செய்தி. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 14வது பிரிவின்படி அரசியல், பொருளாதாரம், சமுதாயம் ஆகிய அனைத்திலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சரி சமமான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் பெண்களின் சுதந்திரமான பொருளாதார முன்னேற்றத்திற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளையும் பாரபட்சமின்றி வழங்கவேண்டும் என்றும் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.
இத்தனைச் சட்டங்களும், கல்வியறிவும் இருந்தாலும் பெண்களுக்கு போதுமான அதிகாரங்களும் வாய்ப்புகளும் குறிப்பிட்ட மிகக்குறைந்த அளவிலேயே இருப்பதும் உண்மை. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையிலும் இந்திய சமுதாயம் ஆணாதிக்கத்திலிருந்து முழுமையாக விடுபடவில்லை என்றே சொல்லமுடிகிறது. அலுவலகங்களில் ஒரே விதமான பணிகளுக்கு ஆண்களுக்கு ஒரு விதமாகவும், பெண்களுக்கு குறைந்த அளவிலுமே சம்பளம் வழங்கப்படுகிறது. கூலி வேலை செய்யும் தொழிலிலும் இதே நிலையே உள்ளது.

பெண்களும் பொறுப்பு தரப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதைவிட்டு தாமே முன்வந்து முக்கியமான பொறுப்புகளை ஏற்கவேண்டும்.
ஆயினும் பாரம்பரியமாக குடும்பம் மற்றும் நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கை வகிக்கும் பெண்களும்கூட பொருளாதார நிலையில் ஆண்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலைதான் இன்று இருக்கிறது. தடைகளைத் தகர்த்தெறிந்து சுயமாக நின்று தொழில் புரிய முன்வரும் பெண்களும் தொழிலில் சந்திக்கும் சவாலை விட பன்மடங்கு சவால்களையும் பிரச்சனைகளையும் தங்கள் சமுதாயம், குடும்பம் போன்றவற்றில் அதிகமாகவே சந்திக்க வேண்டியுள்ளது. ஆண்களைப் போன்றல்லாமல் பெண்கள் குடும்ப பொறுப்புகளையும் சேர்த்தே சுமக்க வேண்டியுள்ளது. ஆனால், அவள் தொழிலையும் கவனித்துக் கொண்டு குடும்ப பொறுப்பையும் இயல்பாக ஏற்கும் நிலையே இருக்கிறது. பல காலங்களாக பழக்கத்தில் இருக்கும் பெண்கள் மட்டுமே குடும்பம், குழந்தைகள் பராமரிப்பு என்று இருக்க வேண்டும் என்ற நிலையில் மாற்றங்கள் கொண்டுவருவது எளிதாக இருப்பதில்லை. சமுதாயத்தில் எந்த மட்டத்தில் இருக்கும் ஆண்களும் இதனை புரிந்து கொள்ள முயல்வதில்லை.
இதுமட்டுமின்றி, தேவையான அளவிற்கு உழைப்பதற்கும், சவால்களை சமாளிப்பதற்குரிய பக்குவம் பெற்றிருந்தாலும் பெண்கள் எதிலும் சுயமாக முடிவு எடுக்க முடியாத வகையில் பெற்றோர், கணவர், உறவினர்கள் என்று பலரின் தலையீடுகளை சமாளிக்க வேண்டியுள்ளது. தொழில் விசயங்களிலும் இந்த தலையீடு இருப்பதால் பல நேரங்களில் அது வெற்றி பெறுவதில் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது என்பதும் நிதர்சனம்.
வெற்றி பெற்ற பெரும்பாலான பெண் தொழிலதிபர்கள், ஆண்களை விட பன்மடங்கு அதிகமாக உழைத்தவர்களாகவோ அல்லது குடும்பத்தின் முழுமையான ஒத்துழைப்பு பெற்றவர்களாகவோ இருப்பவர்கள்.
பெண்களுக்கான சிறப்புத் திட்டங்களும், சலுகைகளும் நிறைய இருக்கின்றன. இவைகள் பற்றிய விழிப்புணர்வுடன் ஆண்களுக்கு நிகராக பெண்களும் தொழில் துவங்கி வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் தொழில் தொடங்க முன் வரவேண்டும்.
அனைத்திற்கும் மேலாக பெண்கள் தங்கள் உரிமைகளைப் பெற போராடுவதோடு தலைமைப் பண்புகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபடவும் தயங்கக்கூடாது.
ஒரு நாட்டின் புகழ் அந்த நாட்டின் மக்கள் தொகையைக் கண்டு மதிப்பிடப்படுவதில்லை. மாறாக அந்நாட்டிலுள்ள சிறந்த மேதைகள், சிந்தனையாளர்கள், நல்ல தலைவர்கள், பண்பாளர்கள் ஆகயோரின் எண்ணிக்கையைக் கொண்டே கணிக்கப்படுகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அந்த வகையில் அப்படிப்பட்ட நல்ல குடிமக்களை உருவாக்கும் தாய்க்குலத்தை சுதந்திரமாக செயல்படவும், துணிவுடன் சவால்களை எதிர்கொள்ளவும் வழியமைக்க வேண்டும்.
சேமிக்கின்ற நல்ல பழக்கமும், குடும்பத்தை சிறப்பாக நிர்வகிக்கும் திறமையும் பெண்களிடம் தான் அதிகமாக உள்ளது என்பதையும் மறுக்கவியலாது.
தற்கால பெண் சாதனையாளர்களில் மறக்க முடியாதவர்கள் என்றால், துர்காபாய் தேஷ்முக், ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்லூரி உட்பட பல கல்வி நிறுவனங்களை ஆரம்பித்தவர். ஆந்திர மகிளா பத்திரிகையின் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். அர்த்தமற்ற சமூகக் கட்டுப்பாடுகளை பெண்கள் எதிர்த்து நிற்க வேண்டும் என முழங்கியவர். நம் நாட்டில் குடும்ப நீதிமன்றங்கள் அமைய அடித்தளம் அமைத்தவர். பால் ஹாஃப்மேன் விருது, நேரு லிட்ரரி விருது, யுனெஸ்கோ, பத்மவிபூஷண் உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர். ‘சமூக சேவைகளின் அன்னை’ என்று புகழாரம் சூட்டிய இந்திரா காந்தி இவரை தனது குருவாகக் கொண்டார். இரும்புப் பெண்மணி என்று போற்றப்பட்டவரான இவர் தமது இறுதிமூச்சு வரை பெண்கள், குழந்தைகளின் நலனுக்காகவே பாடுபட்டவர்.

டாக்டர் சாந்தா, உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்தவரும் இந்திய வேளாண் ஆய்வுக்கழக குழுவின் உறுப்பினர், அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர், இந்திய புற்றுநோயியல் கழகத் தலைவர் என பல அமைப்புகளில் இணைந்து சுறுசுறுப்பாகச் செயல்பட்டவர். இவரது தன்னலமற்ற மருத்துவ சேவையால் அடையாறு புற்று நோய் மருத்துவமனை பல சாதனைகளைப் படைத்துள்ளது. 61 ஆண்டுகளாக இந்த மருத்துவமனையையே தன் வீடாக மாற்றிக் கொண்டவர். புற்றுநோய் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். மகசேசே விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண், நாயுடம்மா நினைவு விருது, அவ்வையார் விருது, அன்னை தெரசா விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். விருதுகள் மூலம் கிடைக்கும் தொகை முழுவதையும் மருத்துவமனை வளர்ச்சிக்கே செலவு செய்வது வழக்கம்.
மன நோயாளிகளின் புனர் வாழ்விற்கு வழியமைத்த டாக்டர் சாரதா மேனன் , இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் மற்றும் ஸ்கார்ப் என்னும் தொண்டு நிறுவனத்தை தொடங்கிய பெண்மணி. பத்ம பூசண் விருது, அவ்வையார் விருது ஆகியவற்றைப் பெற்றவர்.
கலைமாமணி ருக்மணி அருண்டேல் போன்றோர். தங்கள் வாழ்நாள் முழுவதும் முழுமையான அர்ப்பணிப்புடன் எதிர் நீச்சல் போட்டு சாதனை புரிந்தவர்கள் இவர்கள்!

நன்றி http://www.vallamai.com/?p=83834

Friday, February 16, 2018

தமிழ் இயக்கம் அமைப்பு உருவாக்க கலந்துரையாடல் கூட்டம் - புத்தக வெளியீடு








தமிழ் இயக்கம் அமைப்பு உருவாக்க கலந்துரையாடல் கூட்டம் 14-02-2018 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விஐடி பல்கலைக்கழக வேந்தர் கல்விக்கோ.முனைவர்.கோ.விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. தலைமை உரை ஆற்றிய வேந்தர் அவர்கள் நமது தமிழ் மொழியை சீரும் சிறப்புமாக எடுத்துச் செல்லும் வகையில் பல கருத்துகளைக் கூறினார். இது போன்ற இயக்கங்களில் இளைய தலைமுறையினரும், குறிப்பாகப் பெண்களும் பங்கேற்கும் வகையில் செயல்படவேண்டும் என்று வலியுறுத்தினார். குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதில், இந்தக் காலத்தில் பெண்கள் சோதிடம் பார்த்து பெயர் வைப்பதாகக்கூறி பெரும்பாலும் வாயில் நுழையாத வடமொழி எழுத்துகளைக்கொண்ட பெயர்களையேச் சூட்டுகிறார்கள். நம் தமிழ் மொழியின் தொன்மையையும், பெருமையையும்  அவர்கள் உணரும் வண்ணம் இந்தத் தமிழ் இயக்கம் முன்னெடுக்கப்படும். இது குறித்த தங்கள் ஆக்கப்பூர்வமானக் கருத்துகளையும் அனைவரும் பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. புலவர் பதுமனார், கவிஞர் அப்துல்காதர், திரு.சுகுமாரன் திருப்பூர் முத்தமிழ் சங்கத் தலைவர் கே.பி.கே.செல்வராஜ், திரு ஸ்டாலின் குணசேகரன், திரு.முத்துக்குமாரசாமி, ஈரோடு தங்க. விசுவநாதன் மற்றும் திரு செ.ரா. சுப்பிரமணியம் ஆகியோரும் கலந்துகொண்டு சிறந்த கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.











தொடர்ந்து நடைபெற்ற எழுத்தாளர் பவள சங்கரி அவர்களின் “கந்திற்பாவை” என்ற கவிதை நூலும், “கொரிய வளமும் தமிழ் உறவும்” என்ற ஆய்வு நூலையும்” வெளியிட்டுப் பேசிய வேந்தர் அவர்கள் கந்திற்பாவை கவிதை நூலிற்கு தாம் அணிந்துரை வழங்கியிருப்பதைக் குறிப்பிட்டார். ஆய்வு நூலைப்பற்றிக் கூறும்போது கொங்கு நாட்டிலிருந்து ஒரு பெண் சென்று கொரிய நாட்டையே உருவாக்கியிருப்பதை நூல் தெளிவாக விளக்குவதாகக் கூறினார். தொடர்ந்து ஆசிரியர் கொரிய நாட்டிற்குச் சென்று அங்கு தங்கி மேற்கொண்டு ஆய்வினை முழுமைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இவரைத் தொடர்ந்து ஆய்வு நூலை திறனாய்வு செய்து பேசிய எழுத்துச்சிற்பி சிதம்பரபாரதி அவர்கள் கொரிய மொழியில் ஆயிரக்கணக்கான தமிழ் வார்த்தைகள் இருப்பதையும், கொரிய மக்களும் தங்கள் பெற்றோரை அம்மா, அப்பா என்றே அழைப்பதையும்  ஆசிரியர் கூறுவதையும் எடுத்துரைத்து, வடகொரியா, தென்கொரியா என இரு நாடுகளும் இணைந்து ஒரே நாடாக ஆவதற்கு இந்த நூலை சமர்ப்பிப்பதாக ஆசிரியர் குறிப்பிட்டதை சிறப்பாக எடுத்துரைத்தார்.

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...