Sunday, January 14, 2018

சறுகும் கொடியும்! (குட்டிக்கதை)





பச்சைப்பசும் கொடி ஒன்று, சலசலத்து வீழும் சறுகுகளைப்பார்த்து, “வீழும்போதும் நீங்கள் ஏற்படுத்தும் சரசரவெனும் ஓசை எம் கூதிர்காலக் கனவுகள் அனைத்தையும் வீசியெறிந்துவிட்டது” என்றது எகத்தாளமாக.

அதற்கு அந்த சறுகு, “எதன் மீதோ படர்ந்தவாறே காலம் கழிக்கும் சுயமற்ற உன்னால் இந்தப் பிரபஞ்சத்தின் இயற்கையை எப்படி இரசிக்க இயலும்” என்றது கோபமாக.

குவிந்த சறுகுகள் அனைத்தும் பொடிப்பொடியாகி மண்ணில் கலந்து அதே மரத்தின் உரமாகி மீண்டும் வசந்தத்தில் பசுமையாய் துளிர்விட ஆரம்பித்தன. 

அந்தப் பசுங்கொடி படர்ந்திருந்த கொம்பு கால ஓட்டத்தில் களையிழந்து, கருகிப்போக, படரும் கொம்பின்றி  துவண்டுக் கிடந்த அந்த பச்சிளம் கொடியோ பரிதவித்து சுருண்டு வாடிக்கிடந்தது. துளிர்விட்ட மரமோ அக்கொடிக்கு கொழுகொம்பாய் மீண்டும் உயிரூட்ட எண்ணியது. 

ஆணவமலம் அதிர்வூட்ட அதனை ஏற்க மறுத்தக் கொடியை பரிதாபமாகப் பார்த்த மரத்திடம், மனந்தெளிந்த  கொடியோ,

“காலங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. தேவைகளும், தெரிவுகளும் விரிவடைந்து வளமாய் வாழ்வதற்கு பாதையமைக்கின்றன. ஆனாலும் சூழ்நிலையைச் சார்ந்து இருத்தல் அவசியமாகிறது. எந்தவொரு சூழலிலும் சுதந்திரம் இன்றி வாழும் அடிமை வாழ்க்கை அழகற்றது. சன்னமானதென்றாலும் என் தண்டை முறுக்கி உறுதியாக்கிக்கொண்டு தனித்தியங்குவது எனக்கும் சாத்தியமே. அதுதான் நிரந்தரத் தீர்வாகவும் இருக்கமுடியும்” என்றது.

புன்னகையோடு விடைபெற்றது மரம்.

பி.கு. இயற்கையின் அசைவுகள் ஒவ்வொன்றும் உயிரினங்களைப் பக்குவப்படுத்தும் பாடங்களின் அங்கங்களாகவே உள்ளன .

#பவளா 


No comments:

Post a Comment