Friday, December 6, 2019

இணைந்த கோடுகள்! - கோகுலம் கதிர் இதழில்









வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்?

கணவன், மனைவியின் ஏற்றத் தாழ்வுகள் குறித்த கவியரசு கண்ணதாசனின் அற்புதமான வரிகள்!


சுவர்கத்தில் மட்டுமே நிச்சயிக்கப்படுவதாக நம்பப்பட்ட திருமணங்கள் இன்று பணியிடம், தகவல் மையம், இடைத்தரகர் போன்று பல்வேறு இடங்களில், பல்வேறு காரணங்களின் அடிப்படையில் நிச்சயிக்கப்பட்டு, அதே வேகத்தில் முறிவும் ஏற்பட்டு சமூக கலாச்சாரங்களின் சீரழிவிற்கும் காரணமாகிவிடுகின்றன. இயந்திரமயமாக மாறிவரும் சமுதாயத்தின் தேவைகளும், அது நிறைவேறுவதற்கான போராட்டங்களும் பல நேரங்களில் பலரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிடுகின்றன. பெண்களைப் பொறுத்தவரை திருமணம் என்பது வாழ்க்கையின் பலவிதமான திருப்பங்களை ஏற்படுத்தக்கூடிய கனவுகள், கற்பனைகள், பருவம் ஏற்படுத்தும் எதிர்பார்ப்புகள் என்று மண நாளை எதிர்நோக்கி காத்திருக்கச்செய்கிறது.
கடந்த இரண்டு பத்தாண்டுகளாக விவாகரத்து செய்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளன என்று சமீபத்திய  ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவாகரத்து விகிதங்கள் அதிகரித்த போதிலும், நகர்ப்புறங்களில் உள்ள 1.1% பெண்கள் மட்டுமே விவாகரத்து செய்யப்படுகிறார்கள். பெண்களின் உரிமைகள் முன்னேறியுள்ள நிலையில், உலகெங்கிலும் உள்ள குடும்பங்கள் அன்பு மற்றும் ஒற்றுமைக்கான இடமாக மாறியிருந்தாலும் அடிப்படை மனித உரிமை மீறல்கள் மற்றும் பாலின ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கும் ஒரு இடமாகவும் உள்ளதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.
அனைத்துப் பகுதிகளிலும் பெண்களின் திருமண வயது அதிகரித்துள்ள அதே நேரத்தில் பிறப்பு விகிதங்கள் குறைந்துவிட்டன. பெண்கள் பொருளாதார சுதந்திரத்தை அதிகளவில் பெற்றுள்ளனர். உலகளாவிய விவாகரத்து விகிதம் 1960 முதல் 251.8% வரை அதிகரித்துள்ளதாக ஐ.நா தெரிவிக்கின்றது.
இந்தியாவில் விவாகரத்து விகிதம் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. 1000 திருமணங்களில் 13 பேர் மட்டுமே விவாகரத்து பெறுகிறார்கள். விவாகரத்து என்பது  வெட்கக்கேடான ஒரு விசயமாகக் கருதப்படுகிறது. இதனால் பல பெண்கள் இன்னல்களுக்கும் உள்ளாகின்றனர்.
இந்தியப் பெண்கள் பொதுவாகவே தங்கள் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள் போன்ற அனைத்தையும் தங்கள் மதம் சார்ந்தே கடைபிடிக்கிறார்கள். சென்ற தலைமுறையின் பெண்கள் கூட, வீட்டில் கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார் என்று அனைவரின் தேவைகளை நிறைவு செய்துகொண்டு, அமைதியாக பூசை, துளசிச் செடியை வலம் வருதல், ஓரளவிற்குப் படித்தவர்கள் என்றால் வீட்டுக் கணக்குகள், கணவனுக்குச் சின்ன உதவிகள் செய்வது போன்றவற்றில் மட்டும் பங்கெடுத்துக்கொண்டு மிக அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்கள். பழமைவாதத்தில் பாங்காக குடும்பத்திற்கு அடங்கிய மருமகளாக, குழந்தைகளின் பாசமிகு தாயாக, இப்படி ஒரு கட்டுப்பாடான வாழ்க்கையில் சுகம் கண்டவர்கள். ஆனால் இன்றைய கால மாற்றங்கள் சென்ற தலைமுறையின் நம் பெற்றோர் அனுபவித்த ஒரு அமைதியான வாழ்க்கை என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அவர்களிடம் பெரிய சொத்து, அதிக செல்வம் இல்லாவிட்டாலும்  இன்றைய இக்கட்டான இயந்திர வாழ்க்கை அன்று இல்லை. எளிய வாழ்க்கை முறையால், பொருளாதார பற்றாக்குறையால் மனநிம்மதி கெட்டு, உடல் நலக் குறைவும் ஏற்படும் அவல நிலை அன்று இல்லை. உள்ளதைக்கொண்டு மகிழ்ச்சியாக வாழக் கற்றிருந்தார்கள்.
நம் இந்தியக் கலாச்சாரம் பொருத்தவரை ஒரு திருமணம் என்பது இரண்டு குடும்பங்களுக்கான உறவு. இரண்டு வேறுபட்ட கலாச்சாரங்கள் இணையும்போது சில நேரங்களில் சில பிரச்சனைகள் தலைதூக்குவது இயற்கை. பல நேரங்களில் சிறிய பிரச்சனைகள் கூட மனம் விட்டு பேச முடியாமல் தடுக்கும் ஈகோவினால் பெரும் இடைவெளியை ஏற்படுத்தி, நாளடைவில் நிரந்தரப் பிரிவிற்குக்கூட வழிவகுத்துவிடுகின்றன.
திருமணம் முடிந்த கையுடன் இரண்டு குடும்பங்களுக்கும் அளவிற்கு அதிகமான எதிர்பார்ப்புகள் வர ஆரம்பித்துவிடுகின்றன. புதிய மருமகள் வரும்போதே குடும்ப பராமரிப்பு, சமையல் கலை என அனைத்திலும் மிகப்பெரும் வல்லுநராக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு, அப்பெண் எத்தகைய பெரிய பதவியிலோ அல்லது கல்வியாளராகவோ இருந்தாலும் சில அற்ப விசயங்களைக்கூட பெரிதாக்கி அதன் மூலம் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட விரும்பும் குறுகிய மனப்பான்மை கொண்டவர்களாக உள்ளனர்.
பல உறவுகள் தோல்வியில் முடிவதற்கான காரணம் அடிப்படை நம்பிக்கையும், பொறுமையும் இல்லாத தன்மையுமே. இன்றைய இளைஞர்கள் (இரு பாலரும்) ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் கால அவகாசம் கூட இல்லாமல் பொறுமையின்றி உறவுகளை எளிதாக உடைத்து விடுகின்றனர். இரு தரப்பினரும் விட்டுக்கொடுக்கவோ அல்லது தமது தவறை ஒப்புக்கொள்ளவோ தயாராக இருப்பதில்லை.
தேவையற்ற ஐயம் குழப்பத்தை ஏற்படுத்திவிடுகிறது. பெண் திருமணத்திற்கு முன் வேலை பார்த்த அதே நிறுவனம், அதே பணியிடம், அதே வருமானம் என்றாலும் புகுந்த வீட்டாருக்கு அது குறித்த பலப்பல ஐயங்கள் உருவாகி  தேவையற்ற குழப்பங்களையும் ஏற்படுத்திவிடுகிறது.
பெரும்பாலான குடும்ப  நல வழக்கறிஞர்களின் கருத்தின்படி பெண்ணைப் பெற்றவர்கள் தங்கள் மகள் கணவன் வீட்டில் ஆதிக்கம் செலுத்தக் கூடியவராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தங்கள் மகளுக்கு பலவிதமான அறிவுரைகளை வழங்கி மேலும் குழப்பத்தை அதிகப்படுத்திவிடுகிறார்கள். இதே நேரத்தில் கணவனின் பெற்றோரும் மருமகள் முழுவதுமாக தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்து அதற்கேற்றார்போல் அப்பெண் மீது பல கருத்துகளை திணிப்பது போன்ற செயல்களால் அப்பெண் ஒரேயடியாக திருமண உறவிலிருந்தே விட்டுவிலக நினைப்பது இயல்பாகிறது. பல நேரங்களில் பெற்றோர் தங்கள் சுயநலத்திற்காக தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தையே பணயம் வைக்கிறோம் என்பதை உணருவதில்லை.
இரண்டு குடும்பத்தினரின் தலையீடு இல்லாமல் கணவனும், மனைவியும் குடும்பநல ஆலோசனைகளுக்குப் பிறகு தனியாக மனம் விட்டுப் பேசினாலே பிரச்சனைகள் முடிவுக்கு வருவதோடு இருவரும் புத்துணர்வோடு மகிழ்ச்சியாக வாழத் தொடங்குவார்கள்.
பொதுவாக கணவனும், மனைவியும் மட்டும் ஒரு பிரச்சனையை எதிர்கொண்டால் அதனை எளிதாக சமாளித்து விடுவார்கள். எதுவாகினும் போகப்போக பழகிக்கொள்ளலாம் என்ற யதார்த்த மன நிலையில் புது மனைவியை எந்த விதத்திலும் சங்கடப்படுத்தக் கூடாது என்று நினைக்கலாம்.
மனநிலை என்பது மனிதருக்கு மனிதர், காலத்திற்கு காலம் மாறக்கூடியது. இரண்டு தரப்பினருக்கும் ஒரே விசயம் இரு வேறு கருத்துகளை வெளிப்படுத்தலாம். இருவரும் சம நிலையில் ஒத்துப்போக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தேவையற்றது. ஆரம்பக் கட்டத்திலேயே இதைப் புரிந்துகொள்ள முடிந்தாலும் ஈகோ குறுக்கிடும்போது விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வருவதில்லை.
சோதிடப் பொருத்தம், கல்வித் தகுதி, சொத்து மதிப்பு, வெளித்தோற்றம், குடும்பப் பாரம்பரியம் என்று அனைத்தையும் பார்ப்பவர்கள் மணமகனுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று நினைத்துப் பார்ப்பதில்லை.  சமூகத்துக்கு அஞ்சியும், குடும்பத்தில் மூத்தவர்களின் கட்டாயத்தின்பேரிலும், தகுதியின்மை, இயலாமையை மறைத்து சில திருமணங்கள் நடத்தப்படுகின்றன. ஆண்மைக் குறைபாடு உண்மையான காரணமாக இருந்தாலும் பலர், தங்களுக்கு வசதியாக வேறு காரணங்களைக் கூறி விவாகரத்துக் கோருவதும் அதிகரித்து வருகிறது. திருமணத்திற்கு முன்பு கட்டாயமாக மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டால் அது பல திருமண முறிவுகளுக்கான தீர்வாக அமையக்கூடும். பிரச்சனை வந்த பின்பு அது வெளியே தெரிந்தால் குடும்ப மானம் பறிபோய்விடும் என்பதற்காக வாய் மூடி மௌனம் காப்பதால் தவறிழைத்தவர்களைக் காப்பாற்றுவதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிடுகிறது. திருமணத்திற்கு ஆண்மை பரிசோதனை அவசியம் என்று உச்ச நீதிமன்றம் கருதுவதாக செய்திகள் வெளியாகின்றன. இந்தியாவில் 40 சதவீதம் ஆண்களுக்கு முழு அளவிலான ஆண்மை குறைவும், 60 சதவீதம் ஆண்களுக்கு ஓரளவிற்கு ஆண்மை குறைவும் (partial impotance) இருப்பதாக இந்திய செக்ஸாலஜி மருத்துவர்கள் கூட்டமைப்பு தெரிவிக்கிறது. இன்று உணவு முறைகள், வாழும் முறைகள் என அனைத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் விதவிதமான புதிய நோய்களையும் உருவாக்கியுள்ளன. இதில் மிக முக்கியமானது ஆண்களைப் பாதிக்கும் ஆண்மைக் குறைவு. சுரப்பிகளின் குறைபாடு போன்ற பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், இன்றைய பெரும்பாலான விவாகரத்திற்கான காரணம் ஆண்மைக் குறைவு என்றும் கூறப்படுகின்றன.
அன்றாடம் 70,000 குழந்தைகள் பிறக்கும் நம் இந்திய சமூகத்தில் பாலியல் கல்வி என்பது ஒரு அதிசயமான விசயம். நம் பண்டைய சமூகத்தில் காமசூத்திரம் போன்ற நூல்கள் இந்த குழப்பத்தை மிக வெளிப்படையாக தெளிவுபடுத்துகிறது. ஆனாலும் பெரும்பாலான நம் சமூகத்தில் இன்று இது சற்று பூதாகரமாகத்தான் காணப்படுகிறது. இதைப்பற்றி வெளிப்படையாகப் பேசுவதோ அல்லது விவாதிப்பதோ இயலாத காரியம். பல்வேறு பிரச்சனைகளால் ஏற்படும் ஏமாற்றங்கள் பலரின் வாழ்க்கையை ஒரு கேள்விக்குறியாக்கிவிடுகிறது. இந்த பிரச்சனைக்காக மருத்துவரை அணுகுவதுகூட இயலாத காரியமாகக் கொள்வதாலேயே பல பிரிவுகளுக்கு வித்தாக அமைந்துவிடுகின்றன. அந்த வகையில் முறைப்படுத்தப்பட்ட பாலியல் கல்வியின் தேவையும் அதிகரித்து வருகிறது.
நம் இந்தியாவில் ஒவ்வொரு நான்கு நிமிடத்திற்கும் ஒருவர் தற்கொலை செய்கிறார்கள்.  நால்வரில் மூவர் திருமணம் அல்லது குடும்பப் பிரச்சனை, விவாகரத்து செய்யத் துணிவு இல்லாமை போன்ற காரணங்களாலேயே  தற்கொலை செய்கின்றனர்.
நவீனமயமாக்கலில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை முற்றிலுமாக மறைந்து தனிக்குடும்பமாக மாறியதில் வாழ்க்கையின் அடிப்படை ஆதாரமான அன்பின் குறைபாடுகள் பல பிரச்சனைகளுக்கு காரணமாகிறது என்பது உளவியல் வல்லுநர்களின் கருத்து. காதல் விவகாரம் அல்லது பாலியல் காரணமாக பல கொலைகள் கூட நடப்பதை 2012 இன் தேசிய குற்றவியல் அறிக்கைகள் உறுதிபடுத்துகின்றன.
15 – 49 வயதிற்குள்ளான பெண்களின் மூன்றில் ஒரு பங்கினர் உடலாலும், பத்தில் ஒருவர் பாலியல் தொல்லைகளையும் அனுபவிக்கின்றனர். அதாவது ஐந்தில் இரண்டு (37%) பெண்கள் உடலளவிலோ, மனதளவிலோ திருமண வாழ்க்கையால் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
பொருளாதாரச் சுதந்திரம் அதிகம் பெறும் பெண்கள் ஆண்கள் துணையின்றி தனித்து வாழ முடியும் என்ற நம்பிக்கையும் பெற்றுவிடுகிறார்கள். இந்த சுதந்திரம் பல நேரங்களில் அவர்களுடைய பொறுமையை இழக்கும் நிலைக்கு ஆளாக்கிவிடுகிறது. பெண்களின் இந்த மனமாற்றங்களை ஆண்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் பழைய பழக்கவழக்கங்களை விட முடியாமல் அதே நினைவுகளுடனேயே இருக்கிறார்கள். மேலை நாடுகளில் குழந்தைகள் பெரும்பாலும் குடும்பத்தைச் சார்ந்து இருக்காமல் தனித்து இயங்கும் வகையில் வளர்க்கப்படுகிறார்கள். இந்திய இளைஞர்களும் இது போன்ற மேலை நாட்டு நாகரிகங்களைப் பின்பற்றத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக பிரிந்து விடுவதை எளிதானத் தீர்வாகக் கருதிவிடுகிறார்கள்.
மண முறிவிற்கான சில முக்கியமான காரணங்கள்:
·         குழந்தையின்மை – குறிப்பாக ஆண் குழந்தை இன்மை
·         உடல் துன்புறுத்தலோ, மன உளைச்சலோ ஏற்படுத்துவது (இரு பாலரும்)
·         வரதட்சணை கொடுக்க முடியாத பெண்
·         முறைபிறழ்புணர்ச்சி
·         மனநலப் பிரச்சினைகள் அல்லது தீராத நோய், உண்மையான கல்வித் தகுதிகள் அல்லது வேலை விவரங்களை பிற தரப்பினரிடமிருந்து மறைத்தல்.
·         இரண்டாவது திருமணம்
·         கற்பழிப்பு, கொலை போன்ற கொடூரமான குற்றவாளி கணவன்

சமூகக் கட்டுப்பாடு இன்மை, எல்லையற்ற சுதந்திரம், பெரியோர்களிடமும், தங்களுக்குள்ளும் மரியாதைக் குறைவான செயல்பாடுகள், கொள்கைகளைக்காட்டிலும் சட்டதிட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தல், பொறுமையின்மை, அதிகப்படியான தற்பெருமை, கோபம், பொறாமை, பேராசை, பண்பாடு - கலாச்சாரம் போன்றவற்றிற்கு மதிப்பின்மை போன்றவைகளே இன்று நச்சு மரங்களாக வளர்ந்து அமைதியான திருமண வாழ்க்கைக்கு ஊறு விளைவிக்கின்றன.

சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை இந்தியப் பெண்களின் பெரும் பகுதியினர் கல்வியாளர்களாகவோ அன்றி வேலைக்குச் செல்லவோ இல்லாத நிலையில் திருமணத்திற்குப் பிறகு தங்கள் தேவைகளுக்காக கணவனை முழுமையாகச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். இதனைக் காரணமாகக் கொண்டு பெரும்பாலான கணவன்மார்கள் அவர்தம் கையறு நிலையைக் கருத்தில்கொண்டு தங்கள் மனைவிமார்களை மதிக்காமலும், அவமதித்தும், வரதட்சணை கேட்டும் தொல்லை கொடுத்து வந்தனர். தங்கள் அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றிக்கொள்ள இயலாத நிலையில் மணமுறிவிற்கான துணிவு இருப்பதில்லை. திருமணத்திற்குப் பின்பு கணவனைப் பிரிந்து தாய் வீட்டிற்குச் செல்லும் ஒரு பெண்ணிற்கு, ஓய்வு பெற்ற தந்தையாலோ அல்லது சகோதரர்களாலோ, அவர்களின் மனைவிமார்களாலோ எந்த விதமான பொருளாதார ஒத்துழைப்பும் கிடைப்பதில்லை.
ஆனாலும் சமீப காலங்களில் இது போன்ற சூழலில் பெருமளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்றைய பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளை எப்பாடுபட்டேனும் படிக்கவைத்து, வேலை வாங்கிக்கொடுத்து அவர்களைத் தங்கள் சொந்தக் காலில் நிற்கவும், தன்னம்பிக்கையுடன் வாழவும் பழக்கிவிடுகிறார்கள். கணவன் அல்லது அவன்தம் குடும்பத்தினராலோ ஏற்படும் பிரச்சனைகளை அவள் துணிவுடன் எதிர்கொள்ளத் தயாராகிறாள். இன்றைய பெரும்பாலான பெண்களுக்குத் தங்கள் கல்வியும், பணியும் மட்டுமே முதன்மையிடத்தைப் பெறுகிறது. அவர்கள் தங்கள் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வையும் பெற்றிருக்கிறார்கள். இந்த நிலையில் மண வாழ்க்கை நரகமானால் அதிலிருந்து விடுபடவும் அவர்கள் தயங்குவதில்லை.
பல சந்தர்ப்பங்களில் புதுமணப் பெண்கள் புதிய வாழ்க்கையின் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பெற முயல்வதோ அல்லது கணவனின் குடும்பத்தாரால் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைக்களைக்கூட சமாளிக்கும் பொறுமையோ இல்லாமல் தவறான முடிவெடுப்பதில் அவசரம் காட்டவும் செய்கின்றனர். உடனடியாக அதனை தொலைபேசி மூலம் பெற்றோருக்கும் தெரியப்படுத்தி, அவர்களையும் அழுத்தத்திற்கு உள்ளாக்கி, அதன் மூலம் தவறான அறிவுரையையும் பெற்று சூழலை மேலும் மோசமடையச் செய்துவிடுகின்றனர். சில பெற்றோர் மிக அதிகமாகவே பிள்ளைகளின் வாழ்க்கையில் தலையிட்டு சூழலை மிக மோசமாக்கிவிடுகின்றனர்.
 IPC 498-A சட்டத்தின் தவறான பயன்பாடு
இன்று விவாகரத்து வழக்குகள் மிக அதிகமாக மலிந்து விட்டதற்கான முக்கியக் காரணம், பொறுமையிழந்த பெண்கள், திருமண வாழ்க்கை அல்லது குடும்ப வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு தங்களுக்கு மிக சாதகமான சட்டங்கள் இருப்பதையும், கணவன் அல்லது மாமனார், மாமியார், நாத்தனார் என எவர் மீதும் வழக்கறிஞர், காவல்துறை, ஊடகம், பெண்கள் செல் போன்றவற்றில் புகார் அளிப்பதன் மூலம்  நடவடிக்கை எடுப்பது எளிதான காரியம் என்றும் எண்ணிவிடுகிறார்கள்.  பலர் சட்டத்தின் 498-A பிரிவைப் பயன்படுத்தி கணவனையும், அவர்களின் குடும்பத்தினரையும், வரதட்சணைக் கொடுமை, உளவியல்பூர்வமான துன்புறுத்தல் போன்ற காரணங்களைக்காட்டி பழிவாங்கத் துடிக்கிறார்கள். பல நேரங்களில் உண்மையான காரணங்களுக்காக திறந்த மனதுடன் விவாகரத்து நடந்தாலும், அடுத்து நல்ல வாழ்க்கைத்துணை அமையும் வரையில், சமூகம் அமைதியாக வாழ விடாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

திருமண உறவிற்குத் தடை நேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
கல்வி, தொழில், ஆரோக்கியம் போன்ற எந்த விதமான பிரச்சனைகளாக இருந்தாலும் அதை மறைக்கவோ அல்லது பொய் சொல்லி ஏமாற்றவோ கூடாது.
திருமண வாழ்க்கை என்பது வணிக ஒப்பந்தம் என்ற எண்ணம் எக்காரணம் கொண்டும் வந்துவிடக்கூடாது. ஒரு மணமகனோ அல்லது மணமகளோ திருமண உறவிற்குத் தம்மை தகுதியுடையவராக ஆக்கிக்கொன்ட பின்பே அதற்கு இணங்க வேண்டும்.

வாழ்க்கையின் சாதனைகளின் அடிப்படையில் பெருமளவிலான கனவோ, கற்பனையோ, கொள்கையோ என எதுவாகிலும் தமது சக்திக்கு உட்பட்டதாக இருக்க வேண்டுமேயொழிய அதனை திருமண உறவின் மூலம் அடைய நினைப்பது சரியான திட்டம் அல்ல. அவரவர் தகுதிக்கு ஏற்ப பெரும்பாலும் மணப்பெண் வீட்டார் இயன்ற வரதட்சணையை கொடுக்கத்தான் செய்கிறார்கள். அது போதும், போதாது என்ற விவாதம் எல்லாம் தலை தூக்க ஆரம்பித்தால் அது திருமண வாழ்க்கையின் அமைதியைப் பறித்துவிடும். திருமணத்திற்கு முன்பே மணமகனோ, மணமகளோ தமது கல்வித் தகுதிக்கும், குடும்பம், செல்வ நிலை என அனைத்திற்கும் பொருத்தமானவர்தானா என்பதை கலந்தாலோசனை செய்த பிறகே திருமண உறவிற்குள் நுழைவது உத்தமம்.

வாழ்க்கைத் துணையின் பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளின் மீதுற்ற உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள். உங்களைவிட அவர்களுடைய குடும்பத்தாரை அதிகம் நேசிப்பது இயற்கை என்பதை அவர்கள் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். வாழ்க்கைத் துணையை விவாகரத்து செய்வது போன்று சொந்த இரத்த சம்பந்த உறவுகளை விலக்க இயலாது என்பதை நினைவில் கொள்வது நலம்.

கண்மூடித்தனமான கோபக்காரராக இருக்கும் நிலையில் திருமணத்திற்கு முன்பாகவே கவுன்சிலிங் செல்வதோ அல்லது தியானப் பயிற்சி மேற்கொள்வதோ எதையேனும் செய்து சரிசெய்து கொண்டு துணைநலம் காப்பது நல்லது.

முன் காலங்களில் பெற்றோர் பார்த்து உறுதி செய்யும் திருமணங்களில் ஒருவருக்கொருவர் குடும்ப வழியில் நன்கு அறிந்தவர்களாக இருப்பதால் தோல்வி ஏற்படுவது அரிதாகத்தான் இருந்தது. தற்காலங்களில் திருமண மையங்கள், நாளிதழ்கள் போன்றவற்றின் மூலமாக முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுடன் உறவு ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் பொய், பிரட்டுகளும் மலிந்து விவாகரத்தில் சென்று முடிந்து விடுகின்றது.
காதல் மணங்களில் ஒருவரையொருவர் முழுமையாகப் புரிந்துகொள்ள வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும், ஆரம்பத்தில் நல்ல நட்பின் அடிப்படையில் ஆரம்பமாகும் வாழ்க்கை போகப்போக நல்ல துணை நலமாக மாற வேண்டும் என்றால் எந்த ஒளிவு மறைவும் இல்லாத திறந்த புத்தகம் போன்ற வாழ்க்கை முறையைப் பின்பற்றும் உறுதி கொள்ள வேண்டும்.

பின் இணைப்பு

தேராவாத புத்த தத்துவம் நீண்டு நிலைத்து நிற்கும் திருமண உறவு குறித்து இப்படிச் சொல்கிறது:


கணவன்-மனைவி இருவரும் இனிவரும் அடுத்த பிறவியிலும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி சேர்ந்து வாழ விரும்பினால், அவர்கள் மன உறுதி, நல்லொழுக்கம், தாராள மனப்பான்மை போன்றனைத்துடனும், இசைக்கு ஏற்ற தாளம் என்ற விவேகத்துடன் இருக்க வேண்டும்.
கணவனைப் பொறுத்தவரை மனைவியிடம் மரியாதையாகவும், அவளை இகழாமலும், அவளுக்கு உண்மையாகவும் இருப்பதன் மூலமும்,  அதிகாரத்தை ஒப்படைப்பது,  அலங்காரப் பொருட்களை வழங்குவது போன்றவற்றின் மூலம் திருமண உறவைத் தக்க வைத்துக்கொள்ள முடியும்.
அதேபோல ஒரு மனைவியைப் பொறுத்தவரை, அவள் தனது கடமைகளைச் சிறப்பாகச் செய்யவும், கணவரின் உறவுகள் மற்றும் உதவியாளர்களுக்கு விருந்தோம்பல் பண்பாடு காக்கவும், உண்மையுள்ளவளாகவும், கணவர் கொண்டு வருவதை பொறுப்பாக பாதுகாத்து வைப்பவளாகவும், தனது கடமைகளை நிறைவேற்றுவதில் திறமையானவராகவும், உறுதியானவராகவும் இருப்பவளாகவும் இருக்க வேண்டும்.
திருமணம் என்பது சம்பந்தப்படாத இரண்டு நபர்களின் சேர்க்கைக்கு ஒரு புதிய தொடக்கம் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். இருவரும் இயற்கையாக பரிணமிக்க ஒருவருக்கொருவர் போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டும். இருவரும் அர்த்தமுடன் பேசுவதன் மூலம் பல சிக்கல்களையும், தவறான கருத்தாக்கத்தையும் தீர்க்க இயலும். திருமணத்திற்கு முன் ஒருவருக்கொருவர் வருங்காலத்தைப் புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் சிறப்பாக வாழும் வழிமுறைகளை வகுத்துக்கொண்டு செயல்படவேண்டும்!

Monday, December 2, 2019

வானவில் பண்பாட்டு மையத்தின் பாரதி விழா!



வானவில் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் அன்புச் சகோதரர் திரு.இரவி கல்யாணராமன் Ravi Kalyanaraman அவர்களின் மூச்செல்லாம் பாரதியாக சுவாசித்துக்கொண்டிருப்பவரின் கடுமையான, பல்லாண்டுகால தொடர் முயற்சியால் இந்நிகழ்ச்சி தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை கலை மற்றும் பண்பாட்டு நிகழ்வாக பிரகாசிப்பது பெருமைக்குரிய செய்தி.

டிசம்பர் மாதம் என்றாலே பாரதி – பாரதி என்றாலே வானவில் மையம் என்று சொல்லும் வகையில் பல ஆண்டுகளாக கடுமையான உழைப்புடன், மிகச்சிறப்பாக பாரதிக்கு விழா எடுத்து வரும் சகோதரர் திரு இரவி அவர்கள் சென்னையிலிருந்து விரிவாக்கமாக கொங்கு மண்ணிலேயும் விழா எடுத்ததற்கு உளமார்ந்த பாராட்டையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறோம். அறிவுசார்ந்த மக்கள் வாழும் கோவை மாநகரில், தமிழரின் வெற்றிக்குத் தடையாக இருப்பது பழமை வாதமா? புதுமை மோகமா? என்ற மிகச்சிறந்த தலைப்போடு சொல்வேந்தர் சுகி.சிவம் அவர்கள் தலைமையில், ஆகச்சிறந்த பேச்சாளர்களின் அணிவகுப்புடன் பாரதியின் கருத்துகளை ஒரு ஆய்வு அரங்கமாகவே இந்த பட்டி மண்டபத்தை மாற்றியிருந்தனர். அற்புதமான இந்த தலைப்பைத் தேர்ந்தெடுத்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தவருக்குப் பாராட்டுகள்.


பாரதி வாழ்ந்த காலம் நூற்றாண்டுகளுக்கும் முன்பு என்றாலும் பாரதியின் சமூக நலம் சார்ந்த கருத்துகள் இன்றளவிலும் எந்த அளவிற்குப் பொருந்துகிறது என்பதை நிகழ்ச்சியைத் தலைமையேற்று நடத்திய மதிப்பிற்குரிய வி.ஐ.டி. வேந்தர் சப்பான், சீனா போன்ற நாடுகளின் பொருளாதாரம், தீண்டாமை, சாதி ஒழிப்பு என அனைத்து இன்றைய பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து, அவைகளை பாரதியின் கருத்துகளோடு இணைத்தது சுவாரசியம். சாதியை வைத்து சதுரங்கம் ஆடும் அரசியல் கூத்தையும் நயமாக எடுத்துரைத்த விதம் இனிமை. மத்திய அரசு, புற்றீசல்களாக மலிந்துவரும் சாதிக் குறியீடுகளை நீக்குவதற்கு ஆலோசனை செய்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்தது நல்ல செய்தி.


மொத்த அரங்கையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் வகையில் சொல்வேந்தர் சுகிசிவம் அவர்களின் அழுத்தந்திருத்தமான, உறுதியான கருத்து அமைந்திருந்தது. வள்ளுவனின் பொய்தீர் ஒழுக்கம் குறித்தும், இன்றைய நாட்டு நடப்பையும், பாரதியின் சமூக நல்லிணக்கத்தையும் ஒன்றிணைத்த வீச்சும், இராமாயணம், மகாபாரத காவியங்கள் குறித்த பாரதியின் கருத்துகளே தம் கருத்து என்பதை விளங்க வைத்த வேகம், வேதமும், கீதையும் அறியாத மொழியில் தப்புந்தவறுமாக ஓதுவதைவிட, அறிந்த மொழியில் தெளிவாக ஓதினால் பலனற்றுப் போய்விடாது என்று செல்லம்மாவிற்கு பாரதி சொன்னதே தமிழனின் பெருமை என்பதை விளக்கிய விவேகம், அனைத்திற்கும் மேலாக, ஏதோ ஒரு கட்சியைத் தழுவினால்தான் வாழ முடியும் இந்தப் பக்கமும் இல்லாமல் அந்தப் பக்கமும் இல்லாமல் இடைப்பட்டு நின்றால் எதைத்தான் சாதிக்க முடியும் என்பது பெரும்பாலானவர்களின் கருத்துதான்.. ஆனால் இடைப்பட்டு neutral ஆக இருப்பவர்களே துணிவானவர்கள், நல்லதைக் காணும்போது பாராட்டவும், தீயதைக் காணும்போது துணிவோடு சுட்டிக்காட்டும் ஆற்றலும், யாருக்காகவும் தேவையின்றி பணிந்து போகாத விழிப்புணர்வும் அந்த இடைப்பட்டு நிற்பவர்களுக்கே அதிகம் – அதுவும் குறிப்பாக எழுத்தாளர்களும், பேச்சாளர்களும் அதைத் துணிவோடு செய்யத் தகுதியானவர்கள் என்று முழுமையாக ஏற்கும் வகையில் உறுதியாக விவாதித்தார். முத்தாய்ப்பாக தமிழனின் முன்னேற்றத்திற்குத் தடை என்றால் அது, அவனுடைய தெளிவின்மைதான், பழமை வாதம், புதுமை மோகம் என்று எதையும் தள்ளி விடாமல் வேண்டுவதை ஏற்று, தேவையற்றதை நீக்கி, பாரதியின் வழி நின்று துணிந்து செயல்பட இயலாமைதான் என்று முடித்த தீர்ப்பு நியாயமாகத்தான் தெரிகிறது!


அரங்கு நிறைந்த மிகச்சிறப்பான விழாவாக அமைந்திருந்தது. அதற்காக உழைத்த அத்துணை நல்லிதயங்களுக்கும் வாழ்த்துகள். ஆரம்பமே அசத்தல் என்றே ஓங்கி உரைக்க முடிகிறது!

Tuesday, November 19, 2019

செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.



செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யின் நினைவு நாள் இன்று.



விடுதலைப் போராட்டவீரர் உயர்திரு எஸ்.பி. வெங்கடாசலம் தமது சுயசரிதையில் ..... (”இப்படிக்கு நான்” என்ற தலைப்பில் என் எழுத்து வடிவில் )

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்கள் வெள்ளைக்காரனுக்குப் போட்டியாக ‘இந்தியன் ஸ்ட்ரீம் நேவிகேஷன் கம்பெனி (Indian Stream Navigation Company) என்று ஒரு கப்பல் கம்பெனியை ஆரம்பித்த நேரத்திலேயே, எனது பாட்டனார் திரு. சீரங்க முதலியார், 1000 ரூபாய் கொடுத்து, கப்பல் கம்பெனியின் பங்குதாரராகத் தன்னை இணைத்துக்கொண்டார். அந்தக் கப்பல்
கம்பெனி தூத்துக்குடிக்கும், இலங்கைக்குமான சுதேசிக் கப்பலை இயக்கி, வெள்ளைக்காரக் கப்பல் கம்பெனியை முடமாக்கியது. இந்த நிலையில் வ.உ.சி., சுப்ரமணிய சிவா, பாரதியார் போன்றவர்கள் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பிரச்சாரத்தை மிகத் தீவிரமாக நடத்தி வந்தார்கள். அவர்களின் வந்தே மாதரம் என்னும் கோஷம் பட்டி தொட்டியெல்லாம் எதிரொலிக்கச் செய்தது. இதனால் ஆத்திரமடைந்த மாவட்டக் கலெக்டர் ஆஷ்துரை ராஜதுவேஷ வழக்கில் கைது செய்து இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்புக்கூற காரணமாக இருந்தார். ஒரு மனிதனுக்கு ஒரு ஆயுள்தான். ஆனால் வெள்ளை ஆட்சி இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது விசித்திரமானது. இவர்கள் சிறையில் இருக்கும்போது
இந்திய நீராவிக் கப்பல் கம்பெனியின் பங்குதாரர்களை மிரட்டி பங்குகளுக்கு அதிக பணம் தருவதாகக் கூறியும், மிரட்டியும் பெரும்பான்மையான பங்குகளை வாங்கிய பிரிட்டிஷ் கப்பல் கம்பெனி வ.உ.சி. தொடங்கிய சுதேசியக் கப்பல் கம்பெனியை மூடிவிட்டது. இந்தக் காலகட்டத்தில்தான் சீரங்க முதலியாரின் பங்குகளையும் அதிக விலைக்குக்கேட்டு, பிரிட்டிஷ் கப்பல் கம்பெனி முகவர்கள் விலை பேசினர். ஆனால் அவர் அந்த பங்குகள்
தேசபக்தியின் அடையாளச் சின்னங்கள் என்று கூறி விற்க மறுத்துவிட்டார். அந்தப் பங்குகள் நீண்டகாலம் மீனாட்சிசுந்தரம் அவர்கள் வசம் இருந்தது. . இந்த தேசபக்தி என் தந்தைக்கும், சித்தப்பாவிற்கும், என் அண்ணனுக்கும் உண்டு. அது எனக்கும் தொடர ஆரம்பித்தது. மீனாட்சி சுந்தரம் முதலியார் அவர்கள், பெரியாரோடு தொடர்பு ஏற்படுத்தி, பி.ஏ. பட்டப்படிப்பு முடித்தவுடன் காங்கிரசில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.

Saturday, October 5, 2019

அகிலாண்ட நாயகி!





அன்புறுவாய் அகிலம் ஆள்பவள் அன்னை
புன்முறுவாய் புவியாவும் பூத்துநிற்பவள் பூமாரி
நான்மறை வித்தாய் தவத்தின் சித்தாய்
கனியின் இரசமாய் கருணைக் கடலாய் காப்பவள்!

கலைமாமணிகள் நிறைந்த சபையில்
கவிமாமணிகள் காலத்தைக் கட்டியிழுத்து
கவிமாமணிகளும் கலைமாமணிகளும் இணைந்து
கசடறக் கற்பிக்க வேதத்தைத் துணைக்கழைத்தால்
தோதாய் வந்து நின்று ஊட்டிவிட்டுப்போ!

இளங்கவிகள் பெருங்கவிகளாகி பட்டமும்
பதவியும் பரிசுகளும் விருதுகளும் வினைகளும்
விருட்சங்களாய் பரந்து விரிந்து தாமரையாய்
மலர்ந்து கலைமாமணிகளையும் கவிமாமணிகளையும்
உருவாக்கி வெற்றித் திலகமிட்டு செங்காந்தளாய்
சிவந்து சிந்தித்து சிறப்புற்று சிகரமேறி சிகரமேற்றி
இருளகன்று இன்புற்று வாழ வரமளித்துவிடு!

கலைமாமணிகளும் கவிமாமணிகளும் இளங்கவிகளும்
நாளும் பெருகி நலிவுற்ற செவ்விதழ்கள் நலமுற்று
நாற்புறமும் விருந்தும் விரிவான தொகுப்பும்
விளைவித்து விளைந்து பெருமையுடன் வலம்வர
வடிவுடை நாயகி வரமருளும் தேவிநீ!

அம்புவியைக் காக்கும் அருளன்னை - கனிவுடனே
இப்புவி மாந்தரின் சங்கடம் போக்குபவளாம்
மந்திரச் சொல்லால் பணிந்து நாடாளும்
வெந்தயத்தீயின் விதியை வீழ்த்துவாளாம்!

Friday, September 13, 2019

திருக்குறளும் வாழும் வழிமுறைகளும் (the art of living)




வாழையடி வாழையாய் வாழ்வாங்கு வாழ!


முன்னுரை : அகமும் புறமும் காதலும் வீரமும் இணைந்தவையே சங்கப்பாடல்கள். இவை வீட்டையும் நாட்டையும் போற்றிய தமிழ் மக்களின் உணர்வுகளால் பின்னப்பட்ட சொற்களஞ்சியம். அந்த வகையில் சுருங்கச்சொல்லி விளங்க வைக்கும் சீரிய கருத்துகளுடன் தனிச்சிறப்புடன் படைக்கப்பட்ட ஒப்புயர்வற்ற நூல் திருக்குறள். இலக்கியம், அறம், மெய்யியல் வாழ்வியல், அரசியல், பொருளியல் போன்ற அனைத்துப் பரிமாணங்களையும் கொண்ட தெய்வீக நூல் என்றால் அது மிகையாகா. தனி மனித வாழ்வு உயரவும், சமூக முன்னேற்றம் மலரவும், எக்காலத்தும் பொருந்தும் வகையில் பல்வேறு புதிய கருத்துகளைத் தன்னகத்தே கொண்டது குறள். சாமான்ய மனிதன் முதல் சாதனையாளன் வரை அனைத்து மக்களும் மாக்கள் ஆகாமல் மகிழ்ந்து வாழ வகைசெய்யும் அற்புதப் பனுவல்கள் எளிய நடையில் படைக்கப்பட்ட நூல். சான்றாண்மையும், சமதர்மமும் நிறைந்து மனிதன் நிம்மதியுடன் வாழ வழிவகை செய்யும் உயரிய நோக்கத்துடன் தள்ளவேண்டியவற்றையும், கொள்ளவேண்டியவற்றையும் பகுத்தாய்ந்து செம்மையாக வாழ வழி சொல்லும் அற்புதக் காவியம் என்பதோடு நாட்டின் நல்லாட்சி மலர அரசியல் திட்டங்களும் அளிக்கும் ஆகச்சிறந்த படைப்பு ..

உலகப் புகழ் பெற்ற தத்துவ ஞானியும், உருசிய எழுத்தாளருமான இடால்சுடாய் நமது திருக்குறளை எந்த அளவிற்கு உணர்ந்து, விரும்பி வாசித்துள்ளார் என்பதை 1906ஆம் ஆண்டில் எழுதப்பட்ட அவருடைய கட்டுரை மூலம் அறிய முடிகின்றது. அதிலும் தம்மை வெகுவாகக் கவர்ந்ததாக அவர் குறிப்பிடும் ஆறு குறட்பாக்கள், 'இன்னா செய்யாமை' அதிகாரத்தில் இடம் பெற்றுள்ள, 311, 312, 313, 314, 315, 319 ஆகிய குறட்பாக்கள் என்பதை மேற்கோள்களாகக் குறிப்பிட்டுள்ளார். இக்கட்டுரையை வாசித்த பின்புதான் நம் தேசத்தந்தை காந்தியடிகள் திருக்குறளை வாசிக்கத் தொடங்கியதோடு அவருடைய மனதில் அகிம்சை என்ற மகோன்னதமான தீபமும் ஏற்றப்பட்டுள்ளது என்பதே நிதர்சனம். காந்தியடிகளின் அறவழிப் போராட்டங்கள் அனைத்திற்கும் அடிகோலியதும் இவைகளாகத்தான் இருக்கும் என்றும் எண்ணத் தோன்றுகின்றது. ஒரு மாபெரும் நாட்டில் அகிம்சை என்ற அற்புதமான கோட்பாட்டை அறிமுகப்படுத்த வித்தாக அமைந்துள்ளதே ஐயனின் குறட்பாக்கள் என்பதே சத்தியம்.

பழிக்குப்பழி இரத்தத்திற்கு இரத்தம் என்று வாழ்நாள் முழுவதும் நிம்மதி இன்றிப் போராட்டத்திலேயே கழிக்க நினைப்பவர்கள் ஒரு நொடி ஐயனின்,

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம்செய்துவிடல்.

என்ற குறளை உள் வாங்கியிருந்தால் அவர்தம் தலையெழுத்தே மாறியிருக்காதா? இக்குறளின் பொருள், நமக்குத் தீமை செய்தவர்களை நாணித் தலைக் குனியச் செய்யும் வகையில் அவருக்கு நன்மைகளைச் செய்துவிடல் என்கிறார். எத்தகைய உளவியல்பூர்வமான அற்புதமான சிந்தைப் பாருங்கள். ஒறுத்தல் என்ற சொல்லின் வித்தியாசமான பொருளைச் சற்றுக் னம் கொண்டால் இக்குறட்பாவின் தனித்தன்மை நன்கு விளங்கும். ’இன்னா செய்யாமைஎன்பது பிற உயிர்களுக்கு எந்த வகையிலும் துன்பம் விளைவிக்காமல் இருப்பது. விலக்கத்தக்கனவற்றை விலக்கி வைப்பதோடு, தீவினையைச் செய்வதற்கு அச்சம் கொள்வதும் அவசியமானது என்பதை வள்ளுவர் பல அதிகாரங்களில் குறிப்பிட்டிருந்தாலும் அவற்றுள் இன்னாசெய்யாமை, தீவினையச்சம் போன்ற அதிகாரங்கள் பாவச் செயல்களைச் செய்ய அச்சம் கொள்ள வேண்டும் எனவும்; பிற உயிர்கட்கு, மக்கள், மாக்கள் என்ற அனைத்து உயிர்கட்கும் தீங்கு விளைவிக்காமல் இருக்க அறிவுறுத்துவது. இவ்விரு அதிகாரங்களும் பிறர்க்குத் தாம் செய்யும் தீமை தம்மையே வந்து சேரும் என்னும் ஆழமான கருத்துகளைக் கூறுகின்றன.

திருக்குறள்களை உள்வாங்கி உணர்ந்து வாசிக்கும் ஒருவரின் ஆளுமை பன்மடங்கு உயரும் வாய்ப்புகள் மிக அதிகமாவே உள்ளதை எவரும் மறுக்கவியலாது.
ஆளுமை என்றால் என்ன என்ற ஐயம் எழுவது இயற்கையே. காரணம் ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்றவாரு ஆளுமை என்பதன் பொருள் பலவகைப்படுகின்றன. பொதுவாகப் பிறரால் விரும்பப்படுவதற்கு முக்கியத்துவம் கொடுத்து, அதற்கான செயல்பாடுகளை மட்டுமே சிந்தையில் கொண்டு தமது வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொள்பவர்களே சிறந்தவர்கள் என்ற எண்ணமே நம் தமிழ் கலாச்சாரத்தில் பின்னிப் பிணைந்துள்ளதை நாம் அறிவோம். இதன் அடிப்படையில் நம் தமிழர்கள் எந்த நாட்டிற்கோ அல்லது வெகு தொலைவான ஊர்களுக்கோ சென்று குடியேற வேண்டிய சூழலிலும் தமது ஆளுமையைத் தவிர வேறு எதற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் தன்னிறைவு பெற்று வாழ முற்படுகின்றனர். பொதுவான நோக்கில் ஆளுமை என்பது ஒரு தனி மனிதரின் வசீகரிக்கும் தன்மையாகக் கருதப்படுகிறது.

ஆனால் இன்றைய தொலைக்காட்சித் தொடர்களில் நம் பண்பாடு, கலாச்சாரம் என அனைத்தும் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஐயனின் கற்பு நெறி ஒழுக்கத்தையும், பெண்ணின் பெருமையையும், புறங்கூறித் திரியாமை போன்ற குணநலன்களை நச்சென்று மண்டையில் அடித்தாற்போன்று எடுத்துரைக்க வேண்டிய நிலையில் உள்ளதை நாம் அறியாமல் இல்லை.

ஊடகங்களில் பொய் புரட்டு மட்டுமா உள்ளது? தப்பும், தவறுகளும் கூட மலிந்துதான் கிடக்கின்றன. அதையும் ஐயனின் வாக்கின் மூலம் தெளிவாகப் புரிய வைக்க வேண்டிய தேவையும் இருக்கத்தான் செய்கிறது. இன்றைய நவீன உலக வாழ்வியலில் அடுத்த வீட்டில் வாழும் சக மனிதரின் புறத்தைக்கூட அறியாமல்தானே வாழ்கிறோம். ஆனால் ஐயனின் வாழ்வியல் தத்துவங்களைப் பக்குவமாக எடுத்துரைத்தால் அடுத்தவரின் அகத்தையும் புரிந்து அன்போடு பழக வாய்ப்பமையாதா என்ன .

மனித மனம் விநோதமானதொன்று. இந்த மனம் ஒரு குரங்கு. அதாவது மரத்திற்கு மரம் தாவக்கூடிய குரங்கைப் போன்றது என்பார்கள். இந்த மனம் வெளிப்படுத்தும் நடத்தைகள் அந்தந்தச் சூழலுக்கு ஏற்ப மாறுபடுகிறது. தற்காலிகமாக நடக்கும் சில மோசமான சம்பவங்கள், அதாவது நெருங்கிய உறவில் ஏற்படும் மரணம் போன்ற நிகழ்வுகள் காரணமாக மனதில் ஏற்படும் அழுத்தம் நடத்தையிலும் மாற்றம் ஏற்படுத்திவிடக்கூடும் என்றாலும் அது போன்ற நடத்தைகள் தற்காலிகமானதுதான் என்பதால் அது மன்னிக்கப்படலாம். ஆனால் தொடர்ந்து வெளிப்படும் தேவையில்லாத எதிர்மறை நடத்தைகள் நீடித்தால் அது வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இதையெல்லாம் தவிர்க்க வேண்டியே ஐயன் வள்ளுவன் குறள் நெறியை நமக்கு வகுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். அவைகளை உள்வாங்கி உணர்ந்து வாழும் நிலையில் மன அமைதிக்கும் உத்திரவாதம் ஆகிறது. தீமைகளையே செய்வதால் கொடும் செயல்கள் தீயினும் மேலாக அஞ்சப்படும் என்கிறார் ஐயன். எவ்வளவு பெரிய பகையிலிருந்தும் தப்பிப் பிழைக்க வழியுண்டு. ஆனால் தீயச்செயலாகிய பகை என்பது விலகாது தொடர்ந்து சென்று கொன்று தீர்க்கும் எனக் கூறும் ஐயனின் குலில் ஒலிக்கும் குறள் அழிவற்றது.

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும் (குறள் 202)

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று (குறள் 208)

ஆம். நாம் செய்த வினை நம்மைவிட்டு ஒரு சிறிதும் விலகாமல் நிழல்போல நம்மைத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

நேர்மை, உண்மை, சத்தியம் என அனைத்தையும் தங்கள் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்ட தலைவர்கள் வாழ்ந்த காலமும் நம் நாட்டில் உண்டு. அதையே நம் ஐயன் அழகுற எடுத்துரைத்துள்ளார். அது மட்டுமா - அரசியல் சாணக்கியம்,நெளிவு, சுளிவு என அனைத்தையும் அல்லவா அழகுற விளக்கியுள்ளார். இன்றைய அரசியல் தலைவர்கள் அதன்படி நடந்து வெற்றி மேல் வெற்றி பெற்றாலும் நேர்மை, உண்மை, சத்தியம் என்பதையும் சேர்த்தே கடைபிடிப்பார்களேயானால் அதுதானே நம் மக்களின் வெற்றித் திருவிழா!

சமுதாய வாழ்க்கையின் ஒழுங்கமைதிக்கு அடிகோலுவது அரசியல். ஒன்றுக்கு மேற்பட்ட மனிதரோ அல்லது குடும்பங்களோ கூடிவாழ்ந்து பொருளியலில் ஒழுங்கமைதி காக்கவும் அரசியலே துணை புரிகிறது. அந்த வகையில் நல்ல அரசியல் அமைப்புகள் உருவாகும் நாட்டில் மட்டுமே ஒழுக்கமும், மகிழ்ச்சியும், நன்மையும் நிலைபெறும்.

அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்
(அதிகாரம்:வலியறிதல் குறள் எண்:474)
அனைவரோடும் அனுசரித்து நடக்காமல். தனக்கிருக்கும் வலிமையை முழுமையாக அறியாமல், தன்னையே வியந்து தற்பெருமை கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு. 
ஆங்கு அமைவு எய்திய கண்ணும் பயம் இன்றே, வேந்து அமைவு இல்லாத நாடு. அதாவது வேந்தனோடு மேவதல் இல்லாத நாடு; மேற்கூறிய அனைத்துக் குணங்களும் நிறைந்து இருந்ததாயினும் அவற்றால் பயன் ஏதும் அன்று. ஐயனின் வாக்கின்படி நாட்டின் வளம் எத்துணைதான் பெருகியிருந்தாலும் சரியான அரசாங்கம் அமையாத போழ்தில் அவற்றால் பயனேதும் இல்லை, அப்படிப்பட்ட நாட்டில்தான் மக்கள் செல்வச் செழிப்புடனும், நல்லொழுக்கத்துடனும் வாழ்வர் என்கிறார்.
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.
எளிய காலத்தோடே நூலாராய்ந்து முறைமை செய்யாத அரசன் தனது தண்பதத்தினானே கெடுப்பாரின்றித் தானே கெடும். எண்பதமாவது வந்தவர் தங்கள் குறையைச் சொல்லுதற்கு எய்துங்காலம்; தண்பதமாவது குறையைச் சொல்லுதற்குத் தாழ்க்குங்காலம். (மணக்குடவர் உரை)

செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.
நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளை அறிந்த போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்யவேண்டும். (மு.வரதராசனார் உரை )

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.
ஊழையும் உப்பக்கம் காண்பர் - பயனை விலக்குவதாய ஊழினையும் புறங்காண்பர்; உலைவு இன்றித் தாழாது உஞற்றுபவர் - அவ்விலக்கிற்கு இளையாது வினையைத் தாழ்வற முயல்வார். (தாழ்வறுதல் - சூழ்ச்சியினும் வலி முதலிய அறிதலினும் செயலினும் குற்றம் அறுதல். ஊழ் ஒருகாலாக இருகாலாக அல்லது விலக்கலாகாமையின் , பலகால் முயல்வார் பயன் எய்துவர் என்பார், 'உப்பக்கம் காண்பர்' என்றார்.தெய்வத்தான் இடுக்கண் வரினும் முயற்சி விடற்பாலதன்று என்பது இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.) - பரிமேலழகர் உரை

 அரும்பெருஞ்செல்வங் கிடைத்துச் சிறப்பெய்துவதாயினும், பிறருக்குத் துன்பம் செய்யாமலிருப்பதே அறிவுடைமை. தான் ஒரு குற்றமும் செய்யாதிருக்கும்போதும் தனக்கு இன்னாதவற்றைச் செய்தவர்க்கும், இன்னா செய்யாமல் இருக்க வேண்டும்.

எவன் ஒருவன் பிறர் துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதாமல் இருக்கிறானோ அவனுடைய அறிவு எவருக்கும் பயனற்ற அறிவு. இன்னாது எனத் தெரிந்தும் அதை ஒருவன் பிறர்க்குச் செய்வது ஆகாது. எப்போதும், யாருக்கும் எந்த அளவிலும் இன்னா செய்யாமையே சிறப்பாகும். ஒருவன் செய்த துன்பம் அவனையே தொடர்ந்து வந்து  வருத்துமாதலின், துன்பமில்லாமல் வாழ விரும்புகிறவர்கள், பிறருக்குத் துன்பம் செய்ய எண்ண மாட்டார்கள். எந்தச் சூழ்நிலையிலும் பொறுத்தாற்றும் பண்பை மேற்கொண்டால் அது அமைதிக்கு வழிவகுக்கும்.  வாழ்வு சிறக்க ஐயன் கூறும் செய்திகள் இவை.


முடிவுரை : அந்த வகையில் அன்றாட வாழ்வியலிலும், சமூகம் மற்றும் பொது வாழ்விலும் ஐயன் வள்ளுவனின் வாக்குகளைத் தேவ வாக்காக எண்ணி வாழ்பவர்களைக் கண்டறிந்து வாக்களிக்கும் வல்லமையை நாம் பெறும் திருநாளே உலக மாந்தரின் வாழ்வின் பொன்னாள் எனக்கொள்ளலாம்! வாழ்வே ஒரு கலையாக இரசித்து வாழ ஐயனின் அருகண்மையைத் தவிர வேறு எதுதான் நமக்கு வழிகாட்டியாகப் போகிறது? இதை உணர்ந்து திருக்குறளை நம் வேதமாகக்கொண்டு வாழ்தல் இனிதன்றோ!





கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...