Monday, December 2, 2019

வானவில் பண்பாட்டு மையத்தின் பாரதி விழா!



வானவில் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் அன்புச் சகோதரர் திரு.இரவி கல்யாணராமன் Ravi Kalyanaraman அவர்களின் மூச்செல்லாம் பாரதியாக சுவாசித்துக்கொண்டிருப்பவரின் கடுமையான, பல்லாண்டுகால தொடர் முயற்சியால் இந்நிகழ்ச்சி தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை கலை மற்றும் பண்பாட்டு நிகழ்வாக பிரகாசிப்பது பெருமைக்குரிய செய்தி.

டிசம்பர் மாதம் என்றாலே பாரதி – பாரதி என்றாலே வானவில் மையம் என்று சொல்லும் வகையில் பல ஆண்டுகளாக கடுமையான உழைப்புடன், மிகச்சிறப்பாக பாரதிக்கு விழா எடுத்து வரும் சகோதரர் திரு இரவி அவர்கள் சென்னையிலிருந்து விரிவாக்கமாக கொங்கு மண்ணிலேயும் விழா எடுத்ததற்கு உளமார்ந்த பாராட்டையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறோம். அறிவுசார்ந்த மக்கள் வாழும் கோவை மாநகரில், தமிழரின் வெற்றிக்குத் தடையாக இருப்பது பழமை வாதமா? புதுமை மோகமா? என்ற மிகச்சிறந்த தலைப்போடு சொல்வேந்தர் சுகி.சிவம் அவர்கள் தலைமையில், ஆகச்சிறந்த பேச்சாளர்களின் அணிவகுப்புடன் பாரதியின் கருத்துகளை ஒரு ஆய்வு அரங்கமாகவே இந்த பட்டி மண்டபத்தை மாற்றியிருந்தனர். அற்புதமான இந்த தலைப்பைத் தேர்ந்தெடுத்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தவருக்குப் பாராட்டுகள்.


பாரதி வாழ்ந்த காலம் நூற்றாண்டுகளுக்கும் முன்பு என்றாலும் பாரதியின் சமூக நலம் சார்ந்த கருத்துகள் இன்றளவிலும் எந்த அளவிற்குப் பொருந்துகிறது என்பதை நிகழ்ச்சியைத் தலைமையேற்று நடத்திய மதிப்பிற்குரிய வி.ஐ.டி. வேந்தர் சப்பான், சீனா போன்ற நாடுகளின் பொருளாதாரம், தீண்டாமை, சாதி ஒழிப்பு என அனைத்து இன்றைய பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து, அவைகளை பாரதியின் கருத்துகளோடு இணைத்தது சுவாரசியம். சாதியை வைத்து சதுரங்கம் ஆடும் அரசியல் கூத்தையும் நயமாக எடுத்துரைத்த விதம் இனிமை. மத்திய அரசு, புற்றீசல்களாக மலிந்துவரும் சாதிக் குறியீடுகளை நீக்குவதற்கு ஆலோசனை செய்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்தது நல்ல செய்தி.


மொத்த அரங்கையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் வகையில் சொல்வேந்தர் சுகிசிவம் அவர்களின் அழுத்தந்திருத்தமான, உறுதியான கருத்து அமைந்திருந்தது. வள்ளுவனின் பொய்தீர் ஒழுக்கம் குறித்தும், இன்றைய நாட்டு நடப்பையும், பாரதியின் சமூக நல்லிணக்கத்தையும் ஒன்றிணைத்த வீச்சும், இராமாயணம், மகாபாரத காவியங்கள் குறித்த பாரதியின் கருத்துகளே தம் கருத்து என்பதை விளங்க வைத்த வேகம், வேதமும், கீதையும் அறியாத மொழியில் தப்புந்தவறுமாக ஓதுவதைவிட, அறிந்த மொழியில் தெளிவாக ஓதினால் பலனற்றுப் போய்விடாது என்று செல்லம்மாவிற்கு பாரதி சொன்னதே தமிழனின் பெருமை என்பதை விளக்கிய விவேகம், அனைத்திற்கும் மேலாக, ஏதோ ஒரு கட்சியைத் தழுவினால்தான் வாழ முடியும் இந்தப் பக்கமும் இல்லாமல் அந்தப் பக்கமும் இல்லாமல் இடைப்பட்டு நின்றால் எதைத்தான் சாதிக்க முடியும் என்பது பெரும்பாலானவர்களின் கருத்துதான்.. ஆனால் இடைப்பட்டு neutral ஆக இருப்பவர்களே துணிவானவர்கள், நல்லதைக் காணும்போது பாராட்டவும், தீயதைக் காணும்போது துணிவோடு சுட்டிக்காட்டும் ஆற்றலும், யாருக்காகவும் தேவையின்றி பணிந்து போகாத விழிப்புணர்வும் அந்த இடைப்பட்டு நிற்பவர்களுக்கே அதிகம் – அதுவும் குறிப்பாக எழுத்தாளர்களும், பேச்சாளர்களும் அதைத் துணிவோடு செய்யத் தகுதியானவர்கள் என்று முழுமையாக ஏற்கும் வகையில் உறுதியாக விவாதித்தார். முத்தாய்ப்பாக தமிழனின் முன்னேற்றத்திற்குத் தடை என்றால் அது, அவனுடைய தெளிவின்மைதான், பழமை வாதம், புதுமை மோகம் என்று எதையும் தள்ளி விடாமல் வேண்டுவதை ஏற்று, தேவையற்றதை நீக்கி, பாரதியின் வழி நின்று துணிந்து செயல்பட இயலாமைதான் என்று முடித்த தீர்ப்பு நியாயமாகத்தான் தெரிகிறது!


அரங்கு நிறைந்த மிகச்சிறப்பான விழாவாக அமைந்திருந்தது. அதற்காக உழைத்த அத்துணை நல்லிதயங்களுக்கும் வாழ்த்துகள். ஆரம்பமே அசத்தல் என்றே ஓங்கி உரைக்க முடிகிறது!

No comments:

Post a Comment