என் சொந்தம் ஏதுமில்லையா?
மரணப் படுக்கையில் இறுதி மூச்சோடு போராடிக் கொண்டிருந்த ஒருவனுக்கு இறைவனின் காட்சி கிடைக்கிறது. வந்தவர் கையில் ஒரு பெட்டி இருந்தது. 

கடவுள், “சரியப்பா. நேரம் வந்துவிட்டது. புறப்படு” என்றார்.

அதிர்ச்சியடைந்த அந்த மனிதன், “அதற்குள்ளாகவா.. நான் முடிக்க வேண்டிய திட்டங்களும், கடமைகளும் நிறைய இருக்கின்றனவே ...?”

”அதெல்லாம் முடியாது. கிளம்பு கிளம்பு”

”அந்த பெட்டியில் என்ன இருக்கிறது சாமி?” என்றான் அவன் ஆவலாக.

“எல்லாம் உன் உடமைகள்தான்” என்றார் கடவுள்.

”ஓ, என் உடமைகளா? என் பணம், சொத்து, துணிமணிகளா?” என்று கேட்டான்.

அதற்கு கடவுள், “அதெல்லாம் உன் உடமைகள் அன்று. அனைத்தும் இந்த பூமிக்குச் சொந்தமானது’ என்றார்.

”அப்போது என் நினைவுகளா அவை அனைத்தும்” என்றான்.

“இல்லையே. அது எப்படி உனக்கு சொந்தமாகும்? அவையனைத்தும் காலத்தினுடையதல்லவோ?” என்றார்.

”ஓ, அப்போது அவை என் தனித்திறமைகளாகத்தான் இருக்கும் அல்லவா?” என்றான்.

“இல்லையில்லை. அவையெல்லாம் சூழ்நிலைகளுக்குச் சொந்தமானதல்லவோ?” என்றார் கடவுள்.

”என் சொந்த பந்தங்களும், நட்புகளுமா அவை?” என்றான்.

“இல்லவேயில்லை. அவர்களெல்லாம் வழிப்போக்கர்கள் தானே?” என்றார்.

”என் மகன், மனைவி?”

”இல்லையப்பா. அவர்கள் உன் இதயத்திற்கு அல்லவா சொந்தமானவர்கள்?” என்றார்.

“அப்போது என் உடலா சாமி?” என்றான் அவன்.

”அடடே, அது இந்த மண்ணிற்கும், புழுதிக்கும் சொந்தமானதன்றோ?” என்றார்.

“என் ஆன்மாவா ஐயனே?” என்றான்.

”அது எனக்கு சொந்தமானதப்பா?” என்றார்.

அந்த மனிதனுக்கு அதிர்ச்சியும், ஐயமும் மேலிட, கடவுளின் கையிலிருந்த பெட்டியை வெடுக்கென்று பிடுங்கப் போனான் அவன். கடவுள் சரியென்று அவனுக்கு அந்தப் பெட்டியை திறந்து காட்டினார். 

அவன் கண்ணீர் பொங்கி வழிய, காலியான அந்த வெற்றுப் பெட்டியைப் பார்த்து,  “ஐயா எனக்குச் சொந்தமானது என்று எதுவுமே இல்லையா” என்றான்.

”ஆம் மகனே. நீ வாழ்ந்த அந்த ஒவ்வொரு நொடியும் மட்டும்தான் உனக்குச் சொந்தமானது. வாழ்க்கை என்பது அந்த ஒரு நொடிதான். உனக்குச் சொந்தமானதும் அந்த ஒரு நொடிதான். அந்த நொடியில் வாழப் பழகுங்கள். உங்களுக்காக வாழப் பழகுங்கள். காம, குரோதம், அடுத்தவருக்காகக் குழி பறிப்பது என அனைத்தையும் விட்டொழித்து உங்களுக்காக மட்டும் நேர்மையாக வாழப்பாருங்கள். அப்போதுதான் முழுமையான மகிழ்ச்சி கிட்டும். அந்த மகிழ்வான நொடி மட்டுமே உங்களுக்குச் சொந்தமானது. அதை இழந்து விடாதீர்கள். நீங்கள் போராடியோ, அடுத்தவர் குடியைக் கெடுத்தோ பெற்ற செல்வம் எதுவும் உங்களோடு வரப்போவதில்லை. எதையும் உங்களோடு எடுத்துச் செல்லவும் முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்றார் கடவுள்!

Comments

  1. எப்படி வந்தோமோ அப்படியேதான் செல்கின்றோம்.
    வழக்கை என்பது வாழ்வதற்கே, அதில் ஏன் வீண் வழக்கு?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உறுமீன்

யானைக்கும் அடி சறுக்கும்.............

கண்ணதாசனின் ‘சேரமான் காதலி'