Thursday, May 2, 2019

சர்வதேச நட்பின் சின்னம்! சுதந்திர தேவி சிலை!



எல்லீஸ் தீவு அருங்காட்சியகம்  நியூயார்க், அமெரிக்கா
சர்வதேச அளவில் நட்பு, விடுதலை, மக்களாட்சியினை வெளிப்படுத்தும் சின்னமாக விளங்கும் சுதந்திர தேவி சிலை, உலகின் எட்டாவது அதிசயமாகக் கருதப்படுகிறது. அமெரிக்க நாட்டின் நுழைவாயிலாக உள்ள சுதந்திர தேவி சிலை 1880 ஆம் ஆண்டில் பாரீசியர்களால் கட்டமைக்க ஆரம்பிக்கப்பட்டு, 1886 இல் நியூயார்க் நகரின் உன்னத படைப்பாகவும், உலகின் மிக உயரமான சிலை வடிவமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் மீது பிரான்சு நாடு கொண்ட நட்பின் அடையாளமாக, அமெரிக்கா சுதந்திரம் பெற்ற நூற்றாண்டு விழா பரிசாக அளிக்கப்பட்ட அதிசயம்! ‘Libertas’ என்ற உரோமாபுரி கடவுளின் உருவில் வடிவமைக்கப்பட்ட சிலை என்றும் கூறப்படுகிறது.
Liberty Enlightening The World என்று அழைக்கப்படும் இந்த பிரம்மாண்டமான சுதந்திர தேவி சிலை அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஹட்சன் ஆற்றின் துறைமுகத்தில் உள்ள லிபர்ட்டி தீவில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் சுதந்திர தேவி சிலையைக் காணவேண்டும் என்ற ஆவலில் 30 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் அமெரிக்காவிற்கு செல்கிறார்கள்.

1865இல் எடுவர்ட் டி லெபோலயி என்பவரின் தலைமையில் ஒரு அறிஞர் குழு, தங்கள் சொந்த நாட்டின் அரசியல் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க நாட்டிற்கு, சுதந்திரம் மற்றும் விடுதலையின் குறியீடாக ஒரு நினைவுப் பரிசை வழங்கி கௌரவிக்க முடிவு செய்தனர். அதற்கான சரியான நேரமாக அது அமைந்தது. ஆம், உள் நாட்டுப் போர் நிறைவடைந்து, அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டு, நாடு தமது நூற்றாண்டு விழாவை எதிர்நோக்கியிருந்தது. ஈபில் டவர் கோபுரத்தை வடிவமைத்த குஸ்ட்டேவ் ஈபிள் எனும் நபர் தான் அமெரிக்க தேவி சிலையையும் வடிவமைத்தவர்.

தேசியவாதம், செழிப்பு மற்றும் நவீன தொழில்நுட்பம் ஆகியவைகள் இந்த நினைவுச் சின்னத்தின் ஒரு சகாப்தத்தை தோற்றுவித்தது. லெபோலேயியின் இளம் சிற்பி நண்பன் அகஸ்டி பர்தோல்டிக்கு, பிரம்மாண்ட நவீன சிற்பம் உருவாக்கும் இந்த அரிய வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. இருபத்தியொரு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சமுத்திரத்தைத் தாண்டி நியூயார்க் துறைமுகத்தில் உலகிற்கு சுதந்திர விளக்கேந்தி நெடிதுயர்ந்து இன்றும் நிலையாக நின்று கொண்டிருக்கின்றது. 1886 இல் அமெரிக்காவிற்கு அர்ப்பணம் செய்த பின்பு பிரான்சு நாட்டுப் பிரதமர், இந்த சுதந்திரதேவி கடல்களுக்கு அப்பாலும் வெகு தொலைவிற்குச் சென்று நம் பிரான்சு நாட்டை மேலும் பிரமாண்டமாக்கப்போகிறாள் என்பதில் ஐயமில்லை என்று அறிவித்தார்.
ஆனால் சுதந்திர தேவியின் உருவம் ஏற்கனவே எண்ணற்றோரின் உள்ளத்திலும் வடிவமைக்கப்பட்டிருந்தது. பிற்கால 1800களின் பெருவாரியான குடியேற்றங்களுக்கு இடையில், வளர்ந்துவரும் கடுமையான குடியேற்றத் தடைச் சட்டத்தையும் மீறி, சுதந்திர தேவியின் திருவுருவம், ‘புலம் பெயர்ந்தோரின் தாய்’ என்ற ஆழமான உணர்வுகளால் ஆன கருத்தாக்கமாக, அவர்தம் இதயங்களில் ஊடுறுவிக் கொண்டிருந்தது.

சனவரி 1, 1892 ஆம் ஆண்டில் அமெரிக்க எல்லீஸ் தீவு குடிவரவு நிலையம் மூலமாக, அயர்லாந்திலிருந்து குடிபெயர்ந்த அமெரிக்காவின் முதல் குடிபெயர்வாளராக உள் நுழைந்தவர் 15 வயது அன்னி மூர் என்பவர். இவருக்கு அப்போதைய அமெரிக்க குடியேற்ற கண்காணிப்பாளர் ஜான் வேபர் மூலமாக பத்து டாலர் தங்க காசுடன் வரவேற்பளிக்கப்பட்டதாம்! அதன் பிறகு 1895இல் இவர் ஜோசப் ஆகஸ்டஸ் என்பவரை மணம் புரிந்து, நியூ யார்க் நகரில் குழந்தைகளுடன், 47 வயது வரை வாழ்ந்து மறைந்திருக்கிறார்.

முதலாம் உலகப் போரின் சமயத்தில் குடியேற்ற எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டதால் சுதந்திர தேவியின் பங்கு பரிணாமம் பெற்றது. போர் பத்திரங்கள் வாங்க வேண்டியும், இராணுவத்தில் பங்கு பெறவும் குடிகளை கேட்டுக்கொள்ளும் பளபளக்கும் சுவரொட்டிகள் அனைத்திலும் சுதந்திர தேவியின் திருவுருவமே மொத்த அமெரிக்கா என்பதாக உருவகப்படுத்தப்பட்டது. பிற்காலங்களில் சுதந்திர தேவி சிலையின் பிம்பமே அனைத்து அரசியல் செயல்பாடுகளுக்கும் தலைமை வகித்தது. அன்றிலிருந்து இன்றுவரை உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் மக்களை ஈர்த்துக் கொண்டும் இருக்கிறது.
வலது கரத்தில் தீப்பந்தமும், இடது கரத்தில், “சூலை 4, 1776” என்று எழுதப்பட்ட, அமெரிக்க விடுதலைப் போர் சரித்திரத்தைக் குறிக்கும் புத்தகமும் உள்ளன. சுதந்திர தேவியின் சிலையின் தலையில் உள்ள 7 முனைகள் கொண்ட கிரீடம் 7 கண்டங்களையும், 7 கடல்களையும் குறிக்கின்றன. பீடத்திலிருந்து சிலையின் உயரம் 93 மீட்டர் என்பதோடு சிலையின் உயரம் மட்டும் 34 மீட்டர். இந்த புகழ்மிக்க சிலை தாமிரத்தில் செய்யப்பட்டுள்ளது. இச்சிலையில் பயன்படுத்தப்பட்ட மொத்தத் தாமிரத்தின் எடை 27.2 டன். இரும்பின் எடை 113.4 டன். சிலையின் மொத்த எடை 204.1 டன்.
சுதந்திர தேவியின் சிலை குறித்து அதன் படைப்பாளர் பர்தோல்டியின் கருத்து:
அந்த பிரம்மாண்டமான சிலை வெறுமனே ஒரு சரணாலயமாக மட்டுமல்லாமல் பார்வையாளர்களின் மனதில் ஒரு ஆழமான உணர்வை உருவாக்க வேண்டும். அதுவும் அது அதன் அளவின் காரணமாக அல்ல, ஆனால் அதன் அளவைப் புரிந்துகொள்வது, அது ஆக்கிரமித்துள்ள இடத்தின் அளவிற்கு அதன் உன்னதமான தத்துவத்தை உள்வாங்கி, தாங்கிக்கொண்டு நிமிர்ந்து நிற்கும் அற்புதமாக இருக்க வேண்டும்.

இந்த கருத்தாக்கமே, இச்சிலையைக் கண்டுகளிக்க வரும் உலக மக்கள் அனைவரின் மனத்திலும் சுதந்திரம் தன் உயிர் மூச்சு என்ற ஒருமித்த கருத்தை உருவாக்கத் தவறுவதில்லை என்பதை முழுமையாக உணர முடிகின்றது! இதன் காரணமாகவே இச்சிலை உலக அதிசயங்களுள் ஒன்றாகத் திகழ்வதாகக் கொள்ள முடிகின்றது என்பதும் நிதர்சனம்!

No comments:

Post a Comment