தமிழ் இலக்கியப் பணியில் கிட்டத்தட்ட 38 ஆண்டுகளாக தொய்வில்லாத ஒரு தொடர்ந்த பயணம் வாய்த்திருப்பதற்கு இறையருளும், தமிழன்னையின் கடைக்கண் பார்வையும் மட்டுமே காரணம். சிறுகதைத் தொகுப்பு, புதினம், கட்டுரைத் தொகுப்பு, கவிதைத் தொகுப்பு, வரலாற்று ஆய்வு, மொழிபெயர்ப்புப் புதினம், மொழிபெயர்ப்புக் கவிதைகள் தொகுப்பு என தமிழ் இலக்கியங்களின் பல்வேறு தளங்களிலும் 35க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டாகிவிட்டது. பள்ளிகள், கல்லூரிகளில் தொடர்ந்து சொற்பொழிவாற்றி வருவதோடு, மாணவர்களுக்கு படைப்பாற்றல் பயிற்சியும் வழங்கி வருகிறேன். ஆனால் இப்போதுதான் முதல் முறையாக ஒரு ஆங்கில நூல் எழுதியுள்ளேன். இதுவரை பல நூல்களுக்கு வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர், கல்விக்கோ. முனைவர் விசுவநாதன் அவர்கள் அணிந்துரை அல்லது விரிவான வாழ்த்துரை வழங்கி கௌரவித்துள்ளார்கள். இந்த ஆங்கில நூலுக்கு வாழ்த்துரை வாங்க பலப்பல நாட்கள் காத்திருந்தாலும், தமது இடைவிடாத பணிக்கிடையிலும் நூலை முழுமையாக வாசித்து அழகாக வாழ்த்துரை வழங்கி என்னை உற்சாகப்படுத்தி தொடர்ந்து பணியாற்றும் உத்வேகத்தையும் அளித்துள்ளார். உண்மையில், தேர்வெழுதிய ஒரு மாணவி பேராசிரியரின் மதிப்புரைக்குக் காத்திருக்கும் ஒரு படபடப்பான சூழலில்தான் காத்திருக்க நேரிட்டது. ஆனாலும் இந்த அற்புதமான வாழ்த்துரை உள்ளம் குளிரச் செய்தது.
அணிந்துரை கேட்டால் அனாவசியமாக, ஓராண்டுக்கும் மேல் ஆகும் பரவாயில்லையா, காத்திருக்க இயலுமா என்று கேட்கும் அறிஞர் பெருமக்களும் இருக்கத்தானே செய்கிறார்கள் ..
குறள் 625
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்
No comments:
Post a Comment