Thursday, August 9, 2012

அடக்கமே உருவான அன்புமலர்!

அன்னை ஈ.வே.ரா. மணியம்மை

பொதுத் தொண்டில் ஈடுபடும் மகளிர் வாழ வேண்டிய நெறி முறைமைகளுக்கு ஓர் இலக்கணம் வகுக்கப்படுமேயானால் , அந்த நெறியாக, இலக்கணமாக வாழ்ந்தவர் மணியம்மையார்!

சமூக நீதி, சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, போன்ற உயர்ந்த கோட்பாடுகள் விருட்சமாக வேர் விட்டுப் படர்ந்த ஓர் இயக்கம் என்றால் அது திராவிட இயக்கம். ஆண்களின் ஆதிக்கம் கோலோச்சி நிற்கும் அரசியல் களத்தில் ஒளி வீசும் தீபமாக , திராவிட இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று , சுடர்விட்டுப் பிரகாசித்தவர் மணியம்மையார். திராவிட இயக்கத்தில் சாதி இழிவு நிலை ஒழிந்து, சமத்துவம் தழைத்தோங்கவும், திராவிட இன மக்களின் அடிமைத்தளை ஒழியவும், அவர்தம் விடுதலைக்கு ஓங்கி குரல் எழுப்பிய உத்தம ஆத்மா , அன்னை ஈ.வே.ரா மணியம்மையார்.

ஈ.வே.ரா. பெரியாரின் உற்ற துணையாக அவருடைய உடல் நலத்தைப் பேணியதோடு, அவரோடு இணைந்து கழகப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதன் காரணமாக சிறைக்கோட்டம் ஏகினாலும், மனம் தளராது, பெரியாரின் வீட்டு நிர்வாகத்தையும் கவனித்துக் கொண்டு, இடையறாத கட்சிப் பணியும் செய்து, பெரியாரின் மறைவிற்குப் பிறகும் அவர் விட்டுச் சென்ற பணிகளை செவ்வனே, திறம்பட நிர்வகித்த பெருமைக்குரிய சிறந்த பெண்மணி மணியம்மையார்.

தமிழகத்தையும், தமிழ் இன மக்களையும் அனைத்து வகைகளிலும் பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய கொள்கை கொண்டிருந்த பெரியாரை கண்ணும் கருத்துமாக பாதுகாத்த வகையில் திராவிட இயக்கத்திற்கே பெரும் தொண்டாற்றியவர் என்ற பெயர் பெற்றாலும், உண்மையான தாய்மைப் பண்பும், இளகிய உள்ளமும், சேவை மனப்பான்மையும், ஒருங்கே அமையப் பெற்ற தியாகச் சுடர்தான் மணியம்மையார். மூப்பின் விளிம்பில் இருந்த பெரியார், “ இந்த வயதிலும் சாகாமல் இருக்கிறேன் என்றால் அது இந்த அம்மாவால்தான் என்பது யாருக்கும் தெரியாது. எனது உடம்புக்கு ஏற்ற உணவு பக்குவப்படி கொடுப்பது, உடை மாற்றுவது எல்லாம் இந்த அம்மாதான்என்று மனம் நெகிழ்ந்து கூறியுள்ளதே அதற்கான சான்று.

எந்தப் பலனும் எதிர்பாராமல், சேவை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஒரு தாயாக பெரியாரை அரவணைத்துக் காத்து வந்தார். அவருடைய வாழ்க்கையின் ஆழத்தைப் புரிந்து கொண்டவர்கள், உலகில் எந்த ஒரு தாயும், இத்தகைய ஏச்சையும், பழியையும், கேலி கிண்டலையும், ஏளனமான சொற்களையும், அவதூறுகளையும் சுமந்திருப்பார்களா என்றால், இல்லை என்றே உறுதிபட உரைப்பர். அவருடைய மனம், செயல், சொல் , எண்ணம் , குறிக்கோள் அனைத்துமே தொண்டு என்பது மட்டுமே! பெண்மைக்கே உரிய விருப்பங்களான, ஆடம்பரம், அலங்காரம், படாடோபம், பகட்டு என்ற எண்ணங்கள் எதுவுமே இல்லாமல், காது, கழுத்து, மூக்கு,கை என எங்குமே எந்த அணிகலனும் அணியாமல், மிக மலிவான கைத்தறி சேலையும், அதுவும் கருப்பு வண்ண சேலையும், வெள்ளை இரவிக்கையும் மட்டுமே அணிந்து, ஆணவம், அகந்தை, அடுத்தவரை அடக்கி ஆள வேண்டும் என்ற எண்ணம் ஏதுமில்லாமல் , மிக எளிமையாக, அடக்கமே உருவமாக, இயக்கப் பணி மட்டுமே வாழ்க்கையாக வாழ்ந்து காட்டியவர் மணியம்மையார்.

தந்தை பெரியார் அவர்களின் மிக முக்கியக் கோட்பாடான, பெண்ணினத்திற்கேயுரிய, உரிமை உணர்வு, சமத்துவப் பாங்கு, சுதந்திரப்பண்பு, விடுதலை வேட்கை, கொள்கைப் பிடிப்பு, ஆர்வம், அக்கரை, எளிய தோற்றம், சிக்கன இயல்பு, சீர்திருத்தச் சிந்தனைப் போக்கு, ஏற்றமிகு நடத்தை போன்ற அனைத்து குண நலன்களும் அட்சரம் பிறழாமல் அப்படியே கடைப்பிடித்து, அவருக்குப் பின் திராவிடக் கழக தலைமைப் பொறுப்பும் ஏற்ற சீர்மிகு வெற்றிப் பெண்மணி மணியம்மையார். திறந்த புத்தகம் போன்றது இவரது வாழ்க்கை. எந்த ஒளிவு மறைவோ, கள்ளத்தனமோ, பேராசையோ, இல்லாத ஒரு பேரானந்த நிலையில் இருந்தது இவர் வாழ்க்கை என்றால் அது மிகையாகாது. குடும்பமாக இருந்த ஒரு இயக்கத்தின் தாயாக இருந்து தொண்டர்களை குழந்தைகளாக பாவித்து, வழி நடத்தியவர் மணியம்மையார். பெரியார் வகுத்த பாதையில் அடி பிறழாமல், நடந்து, வரலாற்றில் இப்படிப்பட்ட புரட்சித்தாயை இந்த நாடு கண்டதில்லை என்ற அறிஞர்களும், ஆய்வாளர்களும் வியக்கும் வண்ணம் வாழ்ந்தவர் இவர். பெரியாரின் வாழ்க்கை வரலாறு என்றால் திராவிட இயக்க வரலாறு என்பது போல, அந்த வரலாற்றில் நீங்கா இடம் பெறும் வரலாறு அன்னை மணியம்மையாரின் வரலாறு. அவர் கேட்டு வந்த பழிச்சொல், வசை மொழி, இழிவுச் சொற்கள் அனைத்தும் அவரை மென்மேலும் பண்படுத்தி, அவரைப் பன்மடங்கு ஆக்கப்பூர்வமாக உழைக்கச் செய்தது. அந்த வகையில் உலகின் அத்துனைப் பெண் இனமும் மனதில் உள்வாங்கிக் கொள்வதோடு, தாம் தேர்ந்தெடுத்தப் பாதையில் ஏற்படும் தடைகளை எளிதாக முறியடித்துக் கொண்டே முன்னேறிச் செல்லும் அந்த வல்லமையை தம் வாழ்நாளின் இறுதி நாள் வரை இறுக்கமாக பற்றிக் கொண்டிருந்த அந்த மன உறுதியை, முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு வாழக்கூடியது என்றால் அது மிகையில்லை!

வட ஆற்காடு மாவட்டம் பற்றி அறிஞர் அண்ணா ஒரு முறை நகைச்சுவையாக , ”வட ஆற்காடு மாவட்டம் அன்னை மணியம்மையாரை கொண்டு வந்து சேர்க்காவிடில், திமுக பிறந்திருக்க வாய்ப்பே இல்லை”, என்று குறிப்பிட்டது , அவர்தம் திறமையை நன்கு பறைசாற்றுகிறது.

1943 இல் செல்வி காந்திமதி பெரியாரிடம், அவருக்குச் செயலாளராகவும், வரவு, செலவு கணக்கு பார்ப்பவராகவும், பெரியார் சொற்பொழிவு ஆற்றும் நேரங்களில் , இயக்க ஏடுகளை விற்பனை செய்பவராகவும் தம் பணியைத் தொடர்ந்தார். காந்திமதியின் தந்தை திரு கனகசபையின் நண்பர் கு.மு.அண்ணல்தங்கோ என்பார் காந்திமதி என்ற இவருடைய பெயரை கே.அரசியல் மணி என்று மாற்றினார். அதனைச் சுருக்கமாக கே.ஏ. மணி என்றும் அழைக்கப் பெற்றார். இவர் வெளியிட்ட அறிக்கை மிக ஆழமான தகவல்கள் கொண்டதாக இருந்தது. கழகத்தின் களப்பணிகள் செய்வதற்கு மன உறுதியும், நாணயமும், நா - நயமும் கொண்டவராகவும், தேவையற்ற பழிச்சொற்களைக் கண்டு அஞ்சாதவரும், தந்தை பெரியாருடன் அனைத்து பயணங்களும் உடன் சென்று அவருக்கு வேண்டிய பணிவிடைகள் செய்வதுடன், கழக உறுப்பினர்களை அறிமுகம் செய்து கொள்ளவும் வேண்டும். அதுமட்டுமல்லாமல் இயக்கப் புத்தகங்கள் படிக்கவும், எழுதவும் அறிந்திருக்க வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக அப்படி கழகத் தொண்டில் அர்ப்பணிப்பு செய்பவர்களின் வாழ்க்கை சீவனத்திற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்து வைக்க வேண்டும் என்ற பெரியாரின் விருப்பமும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படிருந்து. மிக யதார்த்தமான அறிக்கை. தங்கள் கழகத்தின் எதிர்கால நிலை குறித்த தெளிவான அறிக்கை!

மணியம்மையார், 1920 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் நாள் , திரு வி.எஸ். கனகசபை மற்றும் பத்மாவதி தம்பதியருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். விறகுக் கடை ஒன்றை சொந்தமாக நடத்தி வந்தார், இவர் தந்தை. பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு எழுத முடியாமல் அவரது உடல் நிலையில் ஏற்பட்ட கோளாறு தடை செய்தது. இரண்டாவது முறை எழுத முயன்ற போது தந்தையின் உடல் நிலை மோசமானதால் எழுத முடியாமல் போனது.

சேவை மனப்பான்மையில் சிறந்து விளங்கிய மணியம்மையார், மருத்துவமனையில் சென்று ஆதரவற்ற குழந்தைகளை எடுத்து வளர்த்து ஆளாக்குவதைத் தம் கடமையாகக் கொண்டிருந்தார். முதலில் பத்து குழந்தைகளுடன் ஆரம்பித்த இந்தப்பணி, நூறு குழந்தைகளுடன் தொடர்ந்தது. பெற்ற தாயைப் போலவே அன்பும் பாசமும் காட்டி வளர்த்து வந்தார்கள், அக்குழந்தைகளை.

மே மாதம் 15 ஆம் நாள் 1943ஆம் ஆண்டில் மணியம்மையாரின் தந்தை திரு கனகசபையின் மறைவிற்கு, உடல் நலமில்லாத போதும் வந்து கலந்து கொண்ட பெரியாரிடம், அண்ணல்தங்கோ அவர்கள் காந்திமதியை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அடுத்த மாதமே, 30 ந்தேதி, பெரியாரின் உடல் நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. வயிற்று வலி, கால் வீக்கம், ஏப்பம், விக்கல் ஆகியவை ஏற்பட்டன. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஒரே வாரத்தில் 34 பவுண்டு எடை குறைந்திருக்கிறார். செப்டம்பர் மாதத்தில் திருச்சியில் நடந்த மாநில சுய மரியாதைத் தோழர்கள் கூட்டத்தில் பெரியார் அவர்கள் கலந்து கொண்டார்கள். சுய மரியாதை இயக்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட நிறுவனமும், தமக்குப் பிறகு இயக்கம் சரியாக நடைபெற அதற்கொரு வாரிசும் அவசியமாகிறது என்று பெரியார் அங்கு பேசினார்.

மணியம்மையார் கழகத்திற்குள் வரும் முன்பே, வாரிசு பற்றிய பிரச்சனை வந்து விட்டது. 1933 இல் பெரியாரின் மனைவி நாகம்மையார் இறந்த பின்பு, துயரம் மனதில் வலியூட்டினாலும், தம்முடைய பொது வாழ்க்கை இன்னமும்,தங்கு தடையின்றி நடைபெறும் என்றே அவரால் எண்ணத் தோன்றியது. அவருடைய உறவினர்கள் பத்து ஆண்டுகளாகப் பலமுறை கட்டாயப்படுத்தியும்,

அவர்தம்முடைய மறுமணத்திற்கு சம்மதிக்கவில்லை. கழக சம்பந்தமாக பல பெண்களிடம் தொடர்பு கொண்டிருந்தாலும், தனி மனித ஒழுக்கத்தைத் தவறாது கடைப்பிடித்து வந்த பெரியார், கொள்கைப் பற்றுடைய தலைவர், மனதில் துளியும் சலனமின்றி தூய்மையான மனதுடனே இருந்தார். காந்திமதியின் தந்தையார், பெரியாருக்கு அடிக்கடி , உடம்பைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று மடல் எழுதுவாராம். அப்போது அதற்குப் பதிலாக, ஒரு முறை எல்லோரும் தூர இருந்தபடி, உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள். ஆனால் கூட இருந்து உதவி செய்ய யாரும் இல்லை ... என்னவோ என் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்என்று எந்தவிதமான உள்நோக்கமுமின்றி , சலிப்புடன் எழுதினார்.

பெரியாரின் கடிதம் கண்ட கனகசபை, தம் மகள் காந்திமதியை அழைத்து வந்து, இவள் தங்களுடன் இருந்து உதவி செய்வாள் என்று கூறினார். தம் தந்தை இறந்த பிறகு ஒரு மாதம் கழித்து, பெரியாரிடம் வந்து சேர்ந்தார். பெரியார் முதலில் அவரை குலசேகரப்பட்டினம் தமிழ் கல்லூரியில் காந்திமதியைச் சேர்த்து தமிழ் வித்வான் கல்வி கற்க வைத்தார். முதல் முறை உடல் நலக் குறைவினால் தேர்வு எழுத முடியாமல் போக, இரண்டாம் முறை, மதுரையில் சென்று தேர்வு எழுதச் சென்றபோது, இவரைக் கண்ட இவருடைய உறவினர் ஒருவர் , அவரை வீட்டில் இருந்து ஓடி வந்து விட்டார் என்று எண்ணி காவல் நிலையத்தில் கொண்டு சென்று அவரை ஒப்படைத்தார். தேர்வு எழுதவே தாம் மதுரை வந்துள்ளதாக வாதித்து , காவலர்களை ஒப்புக்கொள்ளச் செய்தாலும், நேரம் கடந்து போனதால் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது.

மணியம்மையாரின் முதல் எழுத்தோவியமாக ,’ இராமாயணம் - கந்தபுராணம் ஒப்பீடு 1944 ஆம் ஆண்டு, கந்த புராணமும், இராமாயணமும் ஒன்றே என்ற கட்டுரையின் முதல் பகுதி மட்டும் வெளியானது. இதன் தொடர்ச்சி, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்து நிறைவுற்றது. இக்கட்டுரைகளே 1960 இல் புத்தகமாக வெளி வந்தது. இதுவே அம்மையாரின் , அச்சில் வெளிவந்த முதல் நூலாகும். பெண் கல்விஎனும் தலைப்பில் தோழர்மணியம்மை சொற்பொழிவு , 1944 இல் ஆகஸ்ட் 19 இல் ஈரோடு உண்மை விளக்கம் கல்வி நிலையம் ’ , எனும் தலைப்பில் குடியரசில் எழுதியது குறிப்பிடத்தக்கது. தோழர்என்று மணியம்மையார் குறிப்பிடப் பெற்றுள்ளார். ஆண், பெண் என்ற இரு பாலருக்கும் பொதுவாக தோழர் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தனிப்பட்டோர் நலத்தைவிடச் சமுதாயத்தின் மானமே பெரிதுஎனும் கருத்து மணியம்மையாரின் கொடியேற்று விழா உரையில் இடம்பெற்றது. இது அனைவரையும் கவர்ந்தது. கழகத் தொண்டர்களை திரும்பிப் பார்க்கச் செய்தது.

திராவிடர் கழகக் கொடியின் இலட்சியம் நம்முடைய சமுதாய சுயமரியாதையையே குறியாய்க் கொண்டு நமது இழிவுகளும், தடைகளும் நீக்கப் பெற்று மனிதத்தன்மை பெறுவதே முக்கிய நோக்கம் என்பதையும் , அதையேத் தாங்கள் முக்கியமாகக் கருதுவதோடு அதற்காக தாங்கள் துக்கப்படுகிறோம் என்கிற துக்கக் குறியையும் காட்டுவதற்காகக் கருப்பு வர்ணத்தையும் அதற்காகத் தீவிர கிளர்ச்சியில் இறங்கிவிட்டோம். இனி ஓய மாட்டோம். எது வரினும் எதிர்த்து நிற்போம் என்பதைக் காட்டுவதற்காக நடுவில் சிவப்பு வர்ணத்தையும் வைத்துள்ளதை தமது திராவிடர் கழகக் கொடியில் பயன்படுத்துகிறோம்என்பதாகும்.

1949க்குப் பிறகு பெரியாரின் துணைவியாராக அவருக்குப் பணிவிடைகள் செய்வதும், ஐயா ஏற்படுத்திய திருச்சி ஆதரவற்ற குழந்தைகளின் இல்லமான நாகம்மையார் இல்லப் பொறுப்பு, பெரியார் - மணியம்மையார் இல்லப் பொறுப்பு ஆகியவைகளே அவருடைய அன்றாடப் பணிகளானது. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது தந்தை பெரியாரின் மறைவிற்குப் பிறகுத் தம்முடைய எழுத்துப் பணிகளை மீண்டும் தொடர ஆரம்பித்தார்.

" சீதையைப் பற்றிய ஒரு நடுநிலைமை ஆராய்ச்சிஎன்ற கட்டுரையில், வால்மீகி தனது இராமாயணம் என்னும் காவியத்தில் சீதையை ஒரு கற்புள்ள உயர்குணப் பெண்ணாகச் சித்தரிக்க வேண்டும் என்று எண்ணி இருந்திருக்கிறாரா? அல்லது சீதையைக் காம உணர்ச்சிக் காதல் கொண்ட ஒரு சாதாரணப் பெண்ணாகச் சித்தரிக்க வேண்டும் என்று முடிவுவெடுத்திருக்கலாமோ? அல்லது சீதையைக் காம உணர்ச்சிக் காதல் கொண்ட ஒரு சாதாரணப் பெண்ணாகச் சித்தரிக்க வேண்டும் என்று கருதி இருந்திருக்கிறாரோ ? ” என்பதுபோன்ற மிக வித்தியாசமான சிந்தனையை கிளப்பி விடுவது இந்த ஆராய்ச்சியின் மையக்கருத்தாக உள்ளது.

தேவர்களின் காமவிகாரம்என்ற திரட்டு, இந்து சமயப் புராணக் கதைகளை விமர்சிக்கும் கட்டுரையாகும். இந்து சமயத் தேவர்களின் எண்ணிக்கை 33 கோடி என்று புராணங்களும், இதிகாசங்களும் சொல்லுகின்றன. இந்த 33 கோடி தேவர்களின் வரலாறுகளைப் புராண இதிகாசங்கள் எழுதவில்லை. முக்கியமான ஒரு சிலரைப் பற்றி மாத்திரம் புராணங்களிலும் , இதிகாசங்களிலும் விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இவர்களின் யோக்கியதையைப் பற்றி ஆராய்வதற்காகவே இக்கட்டுரை எழுதப்படுகிறதுஎன்கிறார்.

காம விகாரங் கொண்டு திரியும் இந்து மத தேவர்கள் சரித்திரங்கள் அடங்கிய புராணங்களையும், இதிகாசங்களையும் படிப்பதானாலும் கேட்பதனாலும் கடுகளவாவது ஆத்திக புத்தி உண்டாகுமா? கடவுள் பக்தி ஏற்படுமா? மோட்சம் கிடைக்குமா? அல்லது சன்மார்க்க புத்தியாவது உண்டாகுமா? இந்த ஆபாசம் நிறைந்த சாமிகளின் கதைகளைப் படித்தால் அறிவு விளக்கமுறுமா? தேசத்திற்கு நல்ல பெயர்தான் கிடைக்குமா? யோசித்துப் பாருங்கள்என்பதே இக்கட்டுரையின் சாரங்கள். மிஸ் மேயோ போன்ற மேனாட்டுப் பெண்கள் இந்தியாவைப் பற்றியும், இந்து சமயத்தைப் பற்றியும் இழிவாக எழுதினார்கள் என்றால் அதற்கு இது போன்ற கீழ்த்தரமான புராணக்கதைகள்தான் காரணமாக இருந்திருக்கும், என்றார்.

தந்தை பெரியார் அவர்கள் தாழ்த்தப்பட்டோர் முன்னேற வழிஎன்ற தலைப்பில் மனமுருகி சொற்பொழிவாற்றியதை மணியம்மையார் தொகுத்து வழங்கியதன் கருத்துகள் , பல ஆண்டிற்கு முற்பட்டதாயினும் அவைகள் இன்றளவிலும் பொருந்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆதி திராவிடர்கள் இந்துக்கள்தான் என்று ஒப்புக் கொள்ளப்பட்டப்போதிலும், அவர்களை இழிவுபடுத்திக் கொடுமை செய்வதில் ஒரு சிறிதும் பின்வாங்குவதில்லை என்றும், அக்கொடுமைகளைத் தடுத்துக் கேட்டால் , மனுதர்ம சாத்திரம் சொல்கிறதென்று, சாத்திரக் குப்பைகளைக் காரணம் காட்டுகிறார்கள் . மதத்தையும் தங்கள் கொடுமைகளுக்கு ஆதரவாக்கிக் கொள்கிறார்கள். இவ்வாறு மதத்தின் பெயராலும், சமய நூல்கள் , சாத்திரங்கள், புராணங்களின் பெயராலும் செய்யப்படும் கொடுமைகளுக்கு அளவில்லை . சாதிக்கொடுமைகளை ஒழித்துச் சமத்துவத்தை நிலைநாட்டும் பொருட்டுத்தான் தென்னாட்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றியது. சம உரிமை இல்லாதிருப்பதைவிடச் சாவதே மேல் என்று நினைப்பவர்களின் சுதந்திரத்திற்கு ஒன்றும் தடையாய் இருக்க முடியாது. அதற்குத் தடையாய் இருக்கும் கடவுளும், மதமும், மோட்சமும், நரகமும் அவர்களுக்கு அக்கரையில்லை என்றும் இவ்வாறு ஆவேசமாக ஆற்றிய சொற்பொழிவை அதன் ஆவேசம் சற்றும் குறையாமல் மணியம்மையாரும் தொகுத்து வழங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

1945 லிருந்து பெரியார் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி அவதிப்பட்டார். அத்துனை அவதியிலும் மக்கள் தொண்டிற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அவர்தம் உன்னத மனம் அச்சேவையில் எந்தக் குறையும் வைக்கத் தவறவில்லை. மணியம்மையாரின் தொண்டும், பெரியாரின் உடல் நலத்தைப் பேணிக் காப்பதில் அவர் எடுத்துக் கொண்ட பெரு முயற்சியும் ஈடு இணையற்றது.

தந்தை பெரியாரை , மணியம்மையார் மணமுடிக்கும் ஏற்பாடுகள் நடந்த போது, அவைகள் அவரிடம் கலந்து பேசியோ, அவருக்குத் தெரிந்தோ நடந்தது அல்ல. மணியம்மையாரைப் பொறுத்த மட்டில் பெரியாரின் கருத்து என்னவோ அதுவே தம்முடைய கருத்தாகவும் கொண்டு வாழ்ந்தவர். பெரியார் செய்யும் ஒவ்வொரு காரியமும், பேசும் ஒவ்வொரு பேச்சும் கழக நன்மைக்காக மட்டுமே இருக்கும் என்றும் தீவிர நம்பிக்கை கொண்டிருந்தார்.

1949 ஆம் ஆண்டு பெரியாருக்கும், மணியம்மையாருக்கும் திருமண அறிவிப்பு வெளியிட்டவுடன், பல குழப்பங்கள் கழகத்திலும், கழகத் தொண்டர்களிடமும் ஏற்பட்டுள்ளது. அறிஞர் அண்ணாவும், 72 வயது நிரம்பிய ஒருவர் 26 வயதேயான ஒரு இளம் பெண்ணை மணப்பது கழக வளர்ச்சிக்கு நல்லது அல்ல, அவதூறுகள் வந்து சேரும் என்று வாதிட்ட போதும், 19 - 06 - 1949 ல் விடுதலை பத்திரிக்கையில் , ‘இயக்க விஷயத்தில் தனக்கு இதுவரை அலைந்தது போல அலைய உடல்நிலை இடம் கொடுக்கவில்லை. தன்னைப் போல பொறுப்பு எடுத்துக்கொள்ளத்தக்க ஆள் வேறு யார் இருக்கிறார்கள். என்பதில் தனக்கு நம்பிக்கை உள்ளவர்கள் எவரும் கிடைக்கவில்லை என்றார். ஆதலால் தனக்கு வாரிசாக ஒருவரை ஏற்படுத்தி , அவர் முலம் பல ஏற்பாடுகள் செய்து விட்டுப் போக வேண்டுமென்று அதிகக் கவலை கொண்டிருப்பதனால், அது பற்றியே திரு. இராஜாஜியிடமும் பேசியுள்ளதாகவும் எழுதினார்.

திருமணம் குறித்து அம்மையார், “ அய்யாவின் திருமணம் என்னும் ஏற்பாடு , ஓர் இயக்கப் பாதுகாப்பு ஏற்பாடே என்பதை விளக்கி விடுதலை நாளேட்டிலும், குடிஅரசு வார ஏட்டிலும் அறிக்கை வாயிலாக வெளியிட்டார்.

திருமண கலாட்டாக்கள் முடிவடைந்து, ஐயாவின் மனைவி என்று சட்டப்படி ஆனபின்னும், ”ஐயாவின் மனைவி”, என்ற அதிகாரத் தோரணையில் ஆரவாரம் செய்வதோ, மேடையில் சென்று சரிசமமாக அமர்வது என்று எதுவும் அம்மையாரிடம் இல்லை. பெரியார் அந்தத் தள்ளாத வயதிலும், நோயின் பிடியிலும் சிக்குண்ட போதும் சமூகம் மேம்பட வேண்டும் என்ற உயரிய கொள்கையில் 3 மணி நேரம் கூட பேசிக்கொண்டிருப்பார். அப்போது, கோடிக்கணக்கான அவருடைய சொத்துக்கு வாரிசாகவும், கொள்கைப் பிடிப்புள்ள, ஆயிரக்கணக்கான தொண்டர்களின் உண்மையான தலைவனாகவும், இருந்த ஒரு பெரிய மனிதரின் மனைவியாகவும் இருந்த மணியம்மையார், கூட்டத்திற்கு அப்பால் ஒரு மூலையில் கிழிந்த கோணிகள், அட்டைகள் அல்லது புத்தகம் கட்டிவந்த காகிதங்களை விரித்து அதில் கழகப் புத்தகங்களை அடுக்கி விற்பனையை ஆரம்பித்து விடுவார். அந்தக் கணக்கைச் சரியாக ஐயாவிடம் ஒப்படைத்தும் விடுவார்.

மணியம்மையார், பெரியாரை கணவர் என்ற உரிமை எடுத்துக் கொண்டு எந்தச் செயலும் செய்ததாகக் தெரியவில்லை. அத்துனை தொண்டர்களும் ஒருமுகமாக இதனை உறுதியிட்டுக் கூறுவதில் இது தெளிவாகிறது. 1957 ஆம் ஆண்டு, சாதி ஒழிப்புக் கிளர்ச்சியில் அன்னையாரின் பங்கு குறிப்பிடத்தக்கது. இதன் ஒரு பகுதியாக, பார்ப்பனர் உணவு விடுதிகளில் முன்புறப் பலகைகளில் உள்ள பிராமணாள்என்ற அடைமொழியை அடைப்பதாக (அழிப்பதாக) முடிவெடுக்கப்பட்டது. கிளர்ச்சிக்கு ஆரம்பமாகப் பெரியார் சென்னை அரசுக்கும், ஆளுநருக்கும், கடிதம் ஒன்றை எழுதி, அதனை 27 ந்தேதி, ஏப்ரல் மாதம் 1957 ஆம் ஆண்டின் விடுதலை பத்திரிக்கையில் வெளியிட்டார். அதில் அவர் தமது நோக்கமாக, சாதி மத பேதமற்ற சமுதாயம் நிறுவப்பட வேண்டும் என்பதாகவும், அரசாங்க ஆணைகளெல்லாம் சாதியைக் காட்டக் கூடாது என்றும், நம் நாட்டில் சாதிப்பிரிவு என்பது, அன்றாடப் புழக்கத்தில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதவர் என்ற இரண்டிற்குள் அடங்கி விடுவதை அழகாக எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிய பாங்கு சுவையானது.

உணவு விடுதிகளில் பிராமணாள்என்று பெயர்ப்பலகையில் வெளியிடுவது, தமிழர்களை இழிவுபடுத்தும் செயலாகும் என்பதை, ஒரு தெருவில், ‘இது பத்தினி வீடுஎன்னும் பெயர்ப்பலகை இருந்தால் , மற்ற வீடுகள் வேசி வீடுஎன்னும் பொருள்படாதா? என அறிக்கையில் வெளியிட்டும் பேசியும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும். அத்தனைக்கும் அரசாங்கத்திடமிருந்து தகுந்த நடவடிக்கைகள் ஏற்படாததால், கிளர்ச்சி செய்ய முடிவு செய்யப்பட்டது. பல உணவு விடுதிகளில் பிராமணாள் விடுதி என்ற பெயர் நீக்கப்பட்டு, சைவ உணவு விடுதி என்று மாற்றப்பட்டது. இருப்பினும் இன்றைய பாரதி சாலை என்ற அன்றைய பெல்ஸ் சாலையில் , அப்படிப் பெயர் மாற்றம் செய்ய ஒத்துவராத ஒரு பெரிய உணவு விடுதியைத் தேர்ந்தெடுத்து அங்கு கிளர்ச்சி செய்ய முடிவெடுத்து தொண்டர்கள் பலர் புடைசூழ, பெரியாரின் மேற்பார்வையில், விடுதி முதலாளியிடம் அதனை மாற்றியமைக்குமாறு கேட்டுக் கொண்டும் பயனில்லாததால், தாங்களே அழிக்க முன்வந்ததால், போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இடைவிடாத இந்தக் கிளர்ச்சியில், 210 ஆம் நாள் (2-12-57) கைதாகித் தண்டனை பெற்றோரின் எண்ணிக்கை 837 ஆனது. இதில் மணியம்மையாரும், விசாலாட்சி அம்மையார் மற்றும் சுப்பிரமணியம் ஆகியோருடன் மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டார். அதே ஆண்டு, 11ஆம் மாதம் , இரண்டு இலட்சம் ஈட்டிகள் திரண்டதாக பெரியாரே வருணித்த மாபெரும் மாநாடு நடந்தது. அதில் பெரியார் சற்றுக் கடுமையாக வெளியிட்ட அறிக்கை அவரைப் பல பிரிவுகளில் பதிவு செய்து கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.

1958 ஆம் ஆண்டு , ஜனவரி 19 ஆம் நாளில் வெளியான , ‘இளந்தமிழா புறப்படு போருக்கு’ , என்ற கட்டுரையினால் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனச் செயலாளர் மணியம்மையார் அவர்களை ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் கொண்டு வெளியான விடுதலை மீது அரசு வழக்குத் தொடர்ந்தது. தமிழறிஞர்கள் சாட்சி சொன்ன புகழ் பெற்ற வழக்காக இவ்வழக்கு அமைந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கின் பொருட்டு மு.வரதராசனார் அவர்கள் முன்வந்து சாட்சியமளித்த முதல் வழக்கு இது என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சாதி ஒழிப்பு மாநாடுகள் பல மாவட்டங்களிலும் நடைபெற்றன. குன்றக்குடி அடிகளார், டாக்டர் மா. இராசமாணிக்கனார், டி.பி. சொக்கப்பா, பட்டுக்கோட்டை எம்.எஸ் . கிருட்டிணசாமி பாவலர் பாலசுந்தரம், பாரதிதாசன், வீர.கே.சின்னப்பன், கி.வீரமணி, ச.சோமசுந்தர பாரதியார் முதலானவர்களுடன் மணியம்மையாரும் இணைந்து பங்கேற்று அவற்றை நடத்தினார். இந்த வழக்கில் 100 ருபாய் அபராதமும் கட்டத் தவறினால் ஒரு மாதம் சிறை எனவும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். கழகத்தின் நடைமுறைக்கிணங்க அம்மையார் அபராதம் கட்ட மறுத்து சிறை சென்றார். 1958 ஆம் ஆண்டு, மார்ச் 22ம் நாள் அந்த விடுதி வழக்கு நிறைவுற்று, முரளி கபே, சைவ காபி சாப்பாடு ஓட்டல் என்று பெயர் மாற்றம் பெற்றது.

1964 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் நாள் ஈரோட்டில் நடந்த தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் விழாவில் அவர், ‘ எனக்கு என்று எந்தச் சொத்தோ பணமோ இல்லை. இருந்ததை எல்லாம் விற்று இந்த ஸ்தாபனத்தில்தான் போட்டு வைத்து உள்ளேன் . ஏதோ மணியம்மைக்கு ஒன்றிரண்டு இருக்கின்றன. அவ்வளவுதான் ஆகும்என்று பேசியவரைத் தொடர்ந்து பேசிய மணியம்மையார்,

ஐயா அவர்கள் பேசும்போது தமது சொத்துக்களையெல்லாம் விற்று ஸ்தாபனத்திற்குச் சேர்ப்பித்தது போக எனக்கென்று ஏதோவிட்டு வைப்பதாகக் குறிப்பிட்டார்கள். அப்படி எனக்கென்று என்ன விட்டு வைத்திருக்கிறார்? என்ன விவரம் என்று எனக்கு இதுவரை தெரியாது , அவர்களும் கூறியது இல்லை. எனக்கு அப்படி சொத்து வேண்டிய அவசியமும் இல்லை. எனக்கு என்னையே காப்பாற்றிக் கொள்ளக் கூடிய அறிவு எனது தாய்தந்தையர்களால் அளிக்கப்பட்டவளாகத்தான் இருக்கிறேன். அப்படி ஐயா அவர்கள் எனக்கு என்று வைத்து இருப்பாரேயானால் அதையும் இப்படிப்பட்ட கல்வி நிறுவனங்களுக்குத்தான் செலவு செய்வேன்என்று கூறியது பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இதை வெறும் மேடைப்பேச்சாக , கைதட்டலுக்காகச் செய்யாமல், பெரியாரின் மறைவிற்குப் பிறகு,ஈரோட்டில் உள்ள பெரியார் அண்ணா நினைவு இல்லம் ,ஈரோட்டு இல்லம் மற்றும் பெரியார் அவர்கள் மணியம்மையாருக்காக வழங்கிய தனிச்சொத்து அனைத்தையும் பொதுவிற்கு வழங்கியதே அதற்கான சான்று.

தந்தை பெரியார் மறைவிற்குப்பின் 1974 ஆம் ஆண்டு, ஐயாவின் 96 ஆவது பிறந்தநாள் விழாவில் தன் குடும்பம், தான் கடந்து வந்த பாதை, தன் இலட்சியம் ஆகியவைகள் குறித்து மனம் திறந்து முதன் முறையாக வெளிப்படையாகப் பேசக் காண்கிறோம்.

நான் ஒரு இலட்சியத்திற்காகவே வாழ்கிறேன். உன்னையும் ஒரு இலட்சியவாதியாக ஆக்கவே விரும்புகிறேன். என்று 28 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சமயம் ஐயா எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அந்த அருமையான உள்ளத் தூய்மையான வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகின்றன. அதன் உட்பொருளை, மெய்ப்பொருளை புரிந்து கொள்ளும் வல்லமை, அறிவு, தகுதி, அன்று எனக்குப் போதாமல் இருந்த காரணத்தால் அதிகமாக அதைப்பற்றிச் சிந்திக்கவோ மனதில் ஏற்கவோ இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்தாற்போல் என்னைப் பற்றிச் சில வார்த்தைகள்! பெருமைக்காகவோ, அகம்பாவத்திற்காகவோ இவை என்று எடுத்துக் கொள்ளாமல் ஐயாவின் தொண்டு புரிவது இலட்சியம்என்று ஒப்படைத்த ஒரு சிறிய ஜீவனின் உள்ளக்கிடக்கை என்பதாக நமது தோழர்கள் நினைத்தால்தான் நான் சொல்வதில் உள்ள உண்மை நன்கு புரியும். தந்தை பெரியார் அவர்களிடம் நான் வந்து சேர்ந்தது எந்தவிதமான பலனை எதிர்பார்த்தோ , பணத்திற்கு ஆசைப்பட்டோ , பெருமை ஆடம்பர உல்லாச வாழ்வு வாழ்வதற்கோ, என் குடும்ப முன்னேற்றம் கருதியோ அல்லது வேறு எந்தவிதமான பலனையும் எதிர்பார்த்தோ , வந்தவள் அல்லவே அல்லஎன்ற போக்கில் பேசிய பேச்சு, அவருடைய திறந்த புத்தகமான வாழ்க்கைக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும், தன்னலமற்ற மனப்போக்கின் வெளிப்பாடாகவும், இருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 1974 இல் தி.மு.க. பற்றி பேசுகையில் அம்மையார், ‘இன்றைய தி.மு.க. ஆட்சி கட்டிக் காக்க வேண்டிய அசல் தமிழர் கட்சிஎன்றதும் குறிப்பிடத்தக்கது.

1978இல் தமிழக அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து எம்.ஜி.ஆர். அரசிற்கு எதிராகப் போராட்டம் நடத்தினார். தமிழக அரசின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தினால் நிர்வாகச் சீர்குலைவு ஏற்பட்டதையும் தம் ஊழியர்களுடன் தக்க உடன்பாடு காணவேண்டி அரசினை வலியுறுத்தி, ‘என்.ஜி.ஓ. பிரச்சனையும் அரசின் விசித்திர அணுகுமுறையும் என்னும் தலையங்கத்தினை விடுதலை இதழில் மார்ச் 9 ஆம் நாள் 1978 ஆம் ஆண்டில் எழுதிய இந்த எழுத்துக்களே இவர் தம் வாழ்நாளில் எழுதிய இறுதித் தலையங்கமாய் அமைந்தது. அரசை அடக்கு முறையைத் தவிர்க்க வேண்டும் என்பதை அன்புடன் எடுத்துக் கூறிய அதே வேளையில், அரசு ஊழியர்களும் பொறுமையுடன் , தங்கள் கடமையறிந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தையும் வெளிப்படுத்தியது அவர்தம் தாய்மை உணர்வை பறை சாற்றும் விதமாகவே அமைந்திருந்தது. அம்மையார் தம் இன்னுயிர் இழக்கப் போகும் ஆறு நாட்களுக்கு முன்பு அரசு ஊழியர்கள் பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடிவடைந்து, போராட்டமும் கைவிடப்பட்டது.

மார்ச் 16 ஆம் தேதி 1978 ஆம் ஆண்டில் மணியம்மையாருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்தது. பல்வேறு தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் அன்பான அஞ்சலியுடன் அம்மையாரின் இன்னுடல், தந்தை பெரியாரின் நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது, கழகக் கண்மணிகளின் அன்புத்தாய் மணியம்மையார். தாம் இறப்பதற்கு முன்பே, பெரியார் சுயமரியாதைப் பிரசார நிர்வாகக் கமிட்டியின் செயலாளர் பதவியைத் தொடர , திரு கி. வீரமணி அவர்களை நியமனம் செய்கிறேன் என்று எழுதி வைத்திருந்தார் அன்னையார்.

சுயநலமற்ற, தன்னிகரில்லாத் தம்முடைய சேவை மனப்பான்மையால் , தாம் சார்ந்திருந்த கழகத்தின் கொள்கைகளை நிறைவேற்றுவதே தம் கடமையாக எண்ணி வாழ்க்கையையே அர்ப்பணித்த மணியம்மாரை இன்றும் மனமார வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள் அன்பான அவருடைய கழகக் கண்மணிகள்! கழகம் சார்ந்தோ அல்லது மணியம்மையார் பெண் குலத்தில் தோன்றிய ஒரு உன்னத பிறவி என்ற முறையிலோ பெண் குலத்திற்கே முன்னுதாரணமான வாழ்க்கை இவருடையது என்றாலும் அது மிகையில்லை.

கவிஞர் பூங்குன்றனாரால் எழுதப்பட்டு, சென்னை கடற்கரையில் அம்மையாருக்கு நடைபெற்ற மாபெரும் இரங்கல் பொதுக்கூட்டத்தில் திரு.டி.எல் மகராசனால் பாடப்பட்ட பாடல் வரிகள் வருமாறு:

அம்மா மறையவில்லை!

அம்மா மறையவில்லை - அய்யா

இலட்சியம் சாகவில்லை!

அம்புவி மீதினிலே - அவர்கள்

பாதையை நாம் தொடர்வோம்! (அம்மா)

அம்மா என்ற சொல்லினிலே - அன்பின்

ஆறு பாயுதடா!

அம்மா என்ற சொல்லினிலே - ஐயா

உருவம் தெரியுதடா (அம்மா)

தியாகத் திருவுருவம் - தந்தை

ஆயுளின் இரகசியம்!

தீயில் மெழுகாம் - இந்தத்

தாயின் கதையடா! (அம்மா)

போராட்ட குணமடா - நெஞ்சம்

புலிவாழும் குகையடா!

ஈரோட்டு எரிமலையில் - பூத்த

எழுச்சியின் சின்னமடா (அம்மா)

மணியம்மையாரின் குணநலன்களை தெள்ளத்தெளிவாக எளிமையாக எடுத்துக் காட்டும் இப்பாடல் அம்மையாரின் வாழ்க்கைக்கு ஓர் சான்றாக நிற்பதும் நிதர்சனம்!

Monday, August 6, 2012

மாத்தி யோசி…!


“என்னப்பா, வேலு என்ன முடிவு செய்திருக்கே.. 300 ரூவா பணம், பிரியாணி பொட்டலம், தண்ணி பாக்கெட்டு, ஒரு குவார்ட்டர்.. ஆறு மணிநேரம் ஜே போடோணும் அவ்ளோதான். என்ன வர்றயா .. இல்லையா?”

“அண்ணே.. எனக்கு இதெல்லாம் பயக்கமில்லண்ணே… வேற எதனாச்சும் வேலை இருந்தா சொல்லுண்ணே.. “

“ஏன்..துரை அரசாங்க உத்தியோகந்தான் பாப்பீகளோ… ?”

“இல்லண்ணே.. மூட்டை தூக்கற வேலையா இருந்தாலும் தேவல.. குழந்தைக்கு உடம்பு சரியில்ல. ஆசுபத்திரிக்கு கூட்டிப்போகக் கூட காசு இல்லண்ணே. கொஞ்ச்ம் மனசு வையிண்ணே..”

“மூட்டை தூக்கற வேலையின்னு அவ்ளோ சுளுவா சொல்ற.. அவிங்க சங்கத்துல சேர்ந்த பொறவுதான் நீ மூட்டை தூக்க முடியும்.. தெரியுமில்ல.. இப்போதைக்கு உன் அவசரத்துக்கு இது ஒன்னுதான் வழி.. கைமேல காசு, வயிறு நிறைய சோறு, கவலையை மறக்க குவார்ட்டரு.. என்ன சொல்லுத..?”

வேண்டா வெறுப்பாக தலையாட்டினான், வேலு. உழைச்சு உரமேறின உடம்பு. இதுபோல கூலிக்கு மாரடிக்கிற வேலை செய்ய மனம் ஒப்புக் கொள்ளவில்லை அவனுக்கு. வெள்ளாளப்பட்டி கிராமத்தில் பரம்பரை, பரம்பரையாக பண்ணையார் குடும்பத்து வயலுதான் அவர்களுக்கு உயிர் மூச்சு. விடியலில் ஆரம்பிச்சு, பொழுது சாயும்வரை, நாத்து நட்டு, கதிர் அறுத்து, நீர் பாய்ச்சி, வரப்பு கட்டி, காவல் காத்துக் கொண்டு, வெள்ளாமை எடுக்கும்போது உள்ளமெல்லாம் பூரித்துப்போய் சுகமான வாழ்க்கை அது. பழைய சோறும், பச்சை மிளகாயும் கூட தேவாமிர்தமாக சுவைத்த சுகமான பொழுதுகள் அவை. பச்சைப் பசேலென்ற அந்த குளுமையான வயல்வெளியும், கீச்… கீச்சென்று பறவைகளின் இனிமையான ஓசைகளும், ஒட்டுக் குடிசையானாலும் ஓடியாடி ஓய்ந்துபோய் நிம்மதியான தூக்கமும், விகல்பமில்லாத நல்ல மனிதர்களுடன் குழப்பமில்லாமல், இன்பமாக கழிந்த காலங்கள் இன்று நினைவுகளாக மட்டுமே … இந்த பட்டணத்து வாழ்க்கை துளியும் ஒட்டவில்லை.

திடுதிப்பென்று ஒரு நாள் சின்ன முதலாளி அனைத்து பண்ணையாட்களையும் கூப்பிட்டு, இந்த வயலையெல்லாம் அழித்துவிட்டு பெரிய சக்கரை மில் கட்டப்போவதாக சொன்ன போது அதிர்ச்சியில் அனைவரும் வாயடைத்து நின்றாலும், கொஞ்ச நாட்களாகவே அரசல் புரசலாக, சின்ன முதலாளி வெளிநாடு சென்று படித்துவிட்டு வந்ததிலிருந்தே சலசலத்துக் கொண்டுதான் இருந்தது. ஆனாலும் முப்போகம் விளையும் இந்த பொன்னான பூமியையும், தென்னந் தோப்பையும் அவ்வளவு எளிதாக அழிக்க மனம் வரும் என்று நம்பமுடியவில்லை அவர்களால். மைனாக்கூட்டமும், குயிலும், கிளியும், குதூகலமாய் கூடுகட்டி வாழ்ந்த அரண்மனை அது. எல்லாம் நொடியில் அநாதையாகிப்போனது போன்ற சோகம் சூழ்ந்தாலும், முதலாளி கொடுத்த கனிசமான தொகையை வாங்கிக் கொண்டு, அனைவரும் திக்கிற்கு ஒருவராக மனம் நிறைய பாரத்துடன் கிள்ம்பிய தருணம் தங்கள் வாழ்நாளில் நீங்காத வடுவாகிப்போன ரணம்.

பட்டணத்து வாழ்க்கை இந்த ஒரு சில மாதங்களிலேயே எட்டிக்காயாய் கசந்துதான் போனது. சுத்தமான மனசும், காற்றும், குடிநீரும் இல்லாத இந்த வாழ்க்கை எப்படி சுவைக்கும்? சரியான பொழைப்பு கிடக்காதலால் கையிருப்பு கரைந்து கொண்டிருக்க, கவலையும் சூழ்ந்து கொண்டது. மனைவியும், நான்கு வயது குழந்தையும் வைத்துக்கொண்டு கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போன்ற நிலையில் தவித்துக் கொண்டிருந்த போதுதான் கமிஷன் ஏஜெண்ட் சாமியண்ணனின் தொடர்பு கிடைத்தது.. அவர் சொல்லி சின்னச் சின்ன வேலை பலதும் செய்தாகிவிட்டது. எப்படியும் சீக்கிரமாக நிரந்தரமாக ஒரு நல்ல வேலை வாங்கிக் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் அவர் இழுத்த இழுப்பிற்கெல்லாம் வளைந்து கொடுத்துக் கொண்டிருக்கிறான் வேலு.

அரசியல் வாடையே ஆகாத தனக்கு இப்படியொரு சோதனை இன்று. பணத்தேவை, வேறு என்ன செய்வது… ஆட்டு மந்தைகள் போல லாரியில் அடைத்துக் கொண்டு போனார்கள். எதற்காக, யாருக்காக “வாழ்க, வாழ்க,” என்று சொல்கிறோம், யாரை வெறுத்து “ஒழிக.. ஒழிக” என்று சொல்கிறோம் என்று எதுவுமே புரியாமல் முன்னால் நிற்கும் தலைவர் என்ன சொல்கிறாரோ அதை அப்ப்டியே கிளிப்பிள்ளைகளாக திருப்பிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ”அழிக்காதே.. அழிக்காதே.. பச்சை வயலை அழிக்காதே.. கட்டாதே.. கட்டாதே சக்கரை ஆலை கட்டாதே..”

மதியம் 12 மணி உச்சி வெய்யிலில் ஏற்றிக் கொண்டு போனவர்கள் மாலை ஆறு மணிக்கும் மேல் ஆகியும் இன்னும் கோஷமும் நிற்கவில்லை, திருப்பி அனுப்பும் சுவடும் தெரியவில்லை.

திடீரென கோஷங்கள் நின்றது. முன்னால் தலைவரைப்போல துண்டு நீளமாக போட்டுக் கொண்டு நின்று கொண்டிருந்தவரிடம் சாமியண்ணன் நெருங்கி ஏதோ இரகசியம் பேச அவரும் இறங்கி பேசிக்கொண்டே ஓரமாக ஒதுங்கினார்கள். வேலுவிற்கும் குழந்தை நினைவு வந்து வாட்டியது. காய்ச்சல் எப்படி இருக்கிறதோ தெரியவில்லையே, பொழுது போய்க்கொண்டிருக்கிறது, டாக்டரிடம் கூட்டிச் செல்ல வேண்டுமே என மனம் பதைக்க ஆரம்பித்து விட்டது. அதற்குமேல் அங்கு நிற்க முடியாமல் கூட்டத்தை விலக்கி வெளியே வந்து, அந்த லாரியை விட்டு இறங்கி, சாமியண்ணன் சென்ற பக்கம் தானும் சென்றான், எப்படியாவது கெஞ்சி பணத்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று. அங்கு டீக்கடையின் பின்புறம் சாமியண்ணனும், குட்டித் தலைவரும் சீரியசாக ஏதோ பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. மெதுவாகத் தயங்கித் தயங்கி அருகே சென்ற வேலு, தன் பழைய முதலாளி, சந்தானம் ஐயா பெயர் அடிபடவும் அப்படியே நின்று விட்டான்.

டீக்கடையின் தடுப்புச்சுவர், மறைத்துக் கொண்டதால் தான் நிற்பது அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை என்று புரிந்ததால் சத்தமில்லாமல் நின்றுகொண்டான். அவர்கள் பேச்சிலிருந்து, தங்கள் தலைவர் என்று சொல்லுகின்ற ஒரு குறிப்பிட்ட கட்சித்தலைவருக்கும், சந்தானம் முதலாளிக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லையாம். தலைவர் எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லையாம்.. அதனால் அடுத்து அவர்கள் பேசிய விசயங்கள் சே.. என்ன மனிதர்கள் இவர்கள் என்று நெஞ்சம் பதைக்கச் செய்தது. ஒரு தொண்டர் சந்தானம் ஐயாவின் உருவ பொம்மையை எடுத்து வந்தார். அதை எரித்து பிரச்சனையை ஆரம்பிக்க வேண்டுமாம்… உருவ பொம்மையை எரித்தவுடன் கலவரத்தை ஆரம்பித்துவிட்டு, அடிதடி, குத்து,வெட்டு எல்லாம் தாராளமாகச் செய்துவிட்டு அவ்வளவும் ச்ந்தானம் ஐயாவின் ஆட்கள் செய்ததாக தோற்றம் ஏற்படுத்துவது என்று பேசிக் கொண்டார்கள். அதற்குரிய கனிசமான சம்பளமும் ஆட்களுக்கு உண்டாம்.. இதைக்கேட்டவுடன் தலையே சுற்றி விட்டது வேலுவிற்கு. பட்டணம் வந்த சொற்ப நாட்களிலேயே பலரின் அரசியல்களைப் புரிந்து கொண்டவனால் இதை ஜீரணிக்க மிகச் சிரமமாக இருந்தது.. தங்கள் குலப்பெருமையை மிக உயர்குடிப்பிறப்பு என்று சொல்லிக் கொண்டே, அரசாங்க ரீதியாக மிக பிற்படுத்தப்பட்டப் பிரிவில் தங்கள் சாதியையும் இணைக்க அரும்பாடுபடும் நல்லவர்கள் என்று பல விசயங்கள் அவனை ஆச்சரியப்படுத்தியிருந்தாலும் இது என்னமோ பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே ஏதாவது செய்ய வேண்டும் என்று துடித்தது அவன் மனம். எப்படியும் எல்லோரிடமும் பேசி ஒப்புக்கொள்ளச் செய்து, பிரச்சனையை ஆரம்பிக்க 30 நிமிடங்களாவது ஆகும், அதற்குள் என்ன செய்ய முடியும் என்று நினைக்கும் அதே சமயம் குழந்தையின் பரிதாபமான முகம் முன்னால் வந்தது. இருந்தாலும் அதைப் பின்னுக்குத்தள்ளி, நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும், என்ற நம்பிக்கையோடு விரைவாக ஓடிவந்தவன், ஒலிபெருக்கி சத்தம் வந்த திசையின் கோட்டைப் பிடித்துக் கொண்டு கூட்டம் நடக்கப்போகும் இடத்தை வந்து அடைந்தான். அங்கு சந்தானம் ஐயாவுடன் காவல்துறை உயர் அதிகாரிகள் உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்டான். வேகமாக ஐயா என்று கத்திக்கொண்டே ஓடி அவர் காலைக் கட்டிக் கொண்டான். ஒன்றும் புரியாமல் விழித்த சந்தானம் அவனைத் தூக்கி நிறுத்தி,

“என்னப்பா.. வேலு என்னாச்சு. ஏன் இப்படி பதட்டமா வந்திருக்கே..?”

“ஐயா, சாமி மன்னிச்சிப்போடுஙக் சாமி.. நாலு தலமுறையா உங்கூட்டு உப்பைத் தின்னு வளந்தவிக நாங்க… உங்களுக்கு ஒரு கஷ்டம்னா எங்களால பாத்துக்கிட்டு இருக்க முடியாது சாமி… அத்தோட பல உயிர் போகப்போறத நினைச்சா வேதனையா இருக்கு சாமி… ஐயா எதுனாச்சும் பண்ணி காப்பாத்திப்போடுவீங்கன்னுதான் ஓடியாந்தேன் சாமி..” என்றான் படபடப்பாக.

ஒன்றும் புரியாமல் விழித்த சந்தானமும், உடனிருந்த காவல்துறை டி.எஸ்.பியும் அவனைச் சமாதான்ப்படுத்தி அவனிடமிருந்து மெதுவாக விசயத்தை வாங்கினார்கள்… நடந்ததை ஒன்று விடாமல் தெளிவாகக் கூறினான் வேலு. ”யார் வந்து கேட்டாலும் இதைச் சொல்லுவாயா” என்று கேட்டபோதும் சற்றும் தயங்காமல் சந்தானத்தின் முகத்தைப் பார்த்துக் கொண்டே ”கட்டாயம் சொல்வேன் ஐயா,” என்றான்..

ஒரு பெரிய கலவரம் நடக்கவிருந்ததை, ஒரு தனி மனிதனாக தம் உயிரையும் பணயம் வைத்து தடுத்து நிறுத்தியதோடு தம்மேல் விழ இருந்த எத்துனைப் பெரிய பழியிலிருந்தும் தன்னைக் காப்பாற்றிய வேலுவைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டார் சந்தானம். தாம் சக்கரை மில் அதிபராக ஆக வேண்டும் என்ற ஆசையில் இழக்க இருந்தது தம் பரம்பரைச் சொத்தான பசுமையான விவசாய நிலமும், அங்கு கூடுகட்டி வாழ்ந்த குட்டி உயிர்களையும் மட்டுமல்ல, அதற்கும் மேலான கபடமற்ற, வெள்ளந்தியான நல்லியதயங்களையும்தான் என்பதை உணர்ந்தபோது இதயம் நொறுங்கிப்போனது… எத்துனை பெரிய முட்டாள்தனம் செய்ய இருந்தோம்.. நாட்டில் உள்ள விளை நிலங்களனைத்தும் இப்படி அழிக்கப்பட்டால் நாளை சக்கரை ஆலைக்குத் தேவையான கரும்பிற்கு எங்கே செல்வது என்று எண்ணியபோது மனம் வலிக்கத்தான் செய்தது. மேட்டாங்காட்டில் மில் கட்டலாம், ஆனால் அங்கு பசுமையான பயிர்களை வளர்க்க முடியாது.. மில் கட்டுவதற்கு எங்கு வேண்டுமானாலும் இடம் வாங்கலாம். ஆனால் எங்கு வேண்டுமானாலும் பயிர் பண்ண முடியாது.. இந்த எண்ணம் வந்தபோது அப்படியே எழுந்து யோசனையில் நடக்க ஆரம்பித்தார்.. கார் டிரைவர் சார் என்று கூப்பிட்டுக்கொண்டே பின்னால் வருவதுகூட உணராமல் நடந்து கொண்டிருந்தார் ஆழ்ந்த யோசனையுடன்……..
—————-

நன்றி : திண்ணை வெளியீடு

வேதனை – கலீல் கிப்ரான்

வேதனை’ பற்றி பகரும்படி வினவினாளே பேதையொருத்தி!

உம் புரிதல்கள் அனைத்தையும் உள்ளடக்கிக் கொண்டுள்ள அந்த ஓட்டின் உடைவே உம் வேதனை.

அக்கனியின் கல்லும் உடையும் பொருட்டு, அதன் இருதயம், கனலோனின் கிரணமதைத் தாங்குதல்போலே, நீவிரும் உம் வேதனையை அறியத்தான் வேண்டும்.

உம் வாழ்க்கையதின் அன்றாட அற்புதக கணங்களினூடே, உம் இருதயமதை உம்மால் கிடத்த முடியுமானால், உம்முடைய மகிழ்ச்சியைக் காட்டிலும் உம்முடைய வேதனைகள் குறைந்த அதிசயோத்தியாகக் காட்சியளிக்காது;

உம்முடைய வயல்வெளிகளின்மீது கடந்து போகும் அந்தப் பருவக்காலங்களை ஒப்புக்கொள்ளுமாப்போலே, எஞ்ஞான்றும் உம் இருதயமதின் பருவ மாற்றங்களதையும் நீவிர் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

குளிர்க்காலங்களினூடேயான உம்முடைய பருவரல்களை நீவிர், அமைதியாக கண்காணிப்பீராக.

பெரும்பான்மையான உம் வேதனைகள் நீவிரே தேர்ந்தெடுத்ததுதானே.

உம்முள் இருக்கும் அந்த மருத்துவன் உம் சுகவீனத்தைத் தாமே குணப்படுத்தும் கைப்பானதொரு நச்சுப்பானம் போன்றதுதானே அது.

அதனால், அம்மருத்துவன் மீது நம்பிக்கைக்கொண்டு, அவனுடைய பிணி அகற்றும் மருந்தை அமைதியுடனும், கலக்கமின்றியும் பருகிடுவீராக.

அவர்தம் கரங்கள் பாரமாகவும், வன்மையாகவும் இருப்பினும், புலப்படாத மென்கரத்தினால் வழிநடத்தப்படுவீர் நீவிர்.

அவர் கொண்டுவரும் அக்கோப்பை உம் இதழ்களதைச் சுட்டாலும் அவைகள் தம்முடைய புனிதமானக் கண்ணீரால் ஈரமாக்கி இளகச்செய்யப்பட்ட களிமண் கொண்டு அக்குயவனால் வடிவமைக்கப்பட்டதுதானே.

“On Pain”

“Your pain is the breaking of the shell that encloses
your understanding.

Even as the stone of the fruit must break, that its
heart may stand in the sun, so must you know pain.

And could you keep your heart in wonder at the
daily miracles of your life, your pain would not seem
less wondrous than your joy;

And you would accept the seasons of your heart,
even as you have always accepted the seasons that
pass over your fields.
And you would watch with serenity through the
winters of your grief.

Much of your pain is self-chosen.
It is the bitter potion by which the physician within
you heals your sick self.

Therefore trust the physician, and drink his remedy
in silence and tranquillity:

For his hand, though heavy and hard, is guided by
the tender hand of the Unseen,

And the cup he brings, though it burn your lips, has
been fashioned of the clay which the Potter has
moistened with His own sacred tears.”

- Kahlil Gibran,
“The Prophet- On Pain”

http://youtu.be/AVx6H68Siww

Sunday, July 29, 2012

கனலில் பூத்த கவிதை!


என்னா துணிச்சல் அந்த பொம்பிளைக்கு.. ராத்திரி 10 மணிக்கு டெம்ப்போ வண்டீல ஏறிக்கிட்டு எவனோடயோ வரா... இவள்ளாம் ஒரு பொம்பிளையா...

அண்ணே... அந்தம்மா வண்டியில நூலு பைய ஏத்திக்கிட்டு அலைஞ்சு, திரிஞ்சு வருது பாவம்....அதப்போயி...

என்னடா பேசுத..நீ.. நம்ம சாதி சனம் என்ன பேசும்.. தனியா ஒரு பொம்பிளை இப்புடி சுத்திப்புட்டு வந்தா..

அண்ணே..போதும்னே...நிப்பாட்டுங்க.... அந்த அக்கா வந்துடப்போவுது பாவம்.. காதுல கேட்டா விசனப்படும்

என்னடா.. சொம்மா ஃபீலிங்க் .. வரட்டுமே.. என்னா இப்போ.. என்ன பண்ணிப்போடுவா அவோ.. இல்லாத்த நான் என்னத்த சொல்லிப்போட்டேன்... போவியா...

அண்ணே...அண்ணே...

வந்துட்டியா.. வா.. எப்ப வந்த...

நீங்க இருக்கறத சொன்னீங்களே.. அப்பவே வ்ந்துபோட்டேன்

சரி..சரி.. பையை எண்ணி உடு.. நான் ஊட்டுக்குப் போகோணும்... நேரமாச்சு..

அக்கா.. மனசில ஒன்னியும் வச்சிக்காதக்கா... அண்ணனைப்பத்திதான் உனக்குத் தெரியுமில்ல....

உடுப்பா.. எல்லாம் நம்ம விதி... அந்த மனுசன் அம்போன்னு உட்டுட்டுப் போனப்பவே நானும் போயி சேர்ந்திருக்கோணும்.. இரண்டு புள்ளைக இருக்கே.. என்னமோ போ.. எத்த்னையோ பேருகிட்ட எவ்வளவோ கேட்டாச்சு.. இது ஒன்னும் பெரிசில்ல விடு.. நேரமாச்சு நான் வாரேன்...

வழக்கம் போல கதவை தட்டிக்கிட்டு 10 நிமிடங்களாகக் காத்திருந்தவள் அம்மா தட்டுத் தடுமாறி வந்து கதவை திறக்கும் வரை காத்திருக்கத்தான் வேண்டும். இந்த 68 வயசுல அம்மாவும் பாவம், சக்கரை வியாதியோட வீட்டு வேலைகளையும் தூக்கிப்போட்டு மல்லுகட்டிக் கொண்டு காலத்தை ஓட்டுகிறார்கள் அதற்கு மேல் நிற்க முடியாமல் அசதி ஆளைத்தள்ள, அப்படியே திண்ணையில் உட்கார்ந்து கொண்டாள் சரசு. அம்பிகா டெக்ஸ் ராசு இன்று பேசியது அவளை வாட்டி எடுத்தது... தான் காதில் கேட்டுவிட்டது தெரிந்தும் கூட துளியும் கவலைப் படாமல் எகத்தாளமாகப் பார்த்த பார்வை இன்னும் மனதில் நிற்கிறது....சே.. என்ன மனிதர்கள் இவர்கள்... தங்கள் வீட்டுப் பெண்கள் மட்டும் தெய்வப்பிறவிகள். வாழ்க்கைப் போராட்ட அலையில் சிக்கித் தவிக்கும் தன்னைப்போல ஒரு மனுஷியைப் பார்த்து குறைந்தபட்சம் ஒரு மனிதாபிமானவாவது காட்டக்கூடாதோ என்று ஆத்திரம் பொங்கி வந்தது... கதவு திறக்கும் ஓசை கேட்டு மெதுவாக எழுந்து உள்ளே செல்லத் தயாரானாள்.. எப்படியும் வழக்கம்போல அம்மாவிடம் திட்டு வாங்க வேண்டும் என்று தெரிந்தாலும், திருப்பி பதில் பேசும் மனநிலை கூட இன்று இல்லை..அம்மா சாப்பிடச் சொல்லி பலமுறை சொல்லியும், எதுவும் பிடிக்காதலால் சாப்பிட்டுவிட்டதாக ஒரு பொய்யை சொல்லிவிட்டு நேரே படுக்கைக்குச் சென்றாள்... தன்னையறியாமல் கடந்துபோன சம்பவங்களின் ரணம் கண்களில் கண்ணீராக வடிந்தது....

நடுத்தரக் குடும்பமானாலும், அமைதியாகத்தான் போய்க்கொண்டிருந்தது வாழ்க்கை. கணவன் நடேசன் நூல் புரோக்கர் தொழில். போதுமான வருமானம். இரண்டு குழந்தைகள்தான் என்றாலும் மூத்தவள் ஒரே அடமாக இன்ஞீனீயரிங் படிப்பு படித்தே ஆகவேண்டும் என்று அடம்பிடித்து பேமெண்ட் சீட்டில் கல்லூரியில் சேர்ந்து விட்டாள். சின்னவன் 10ம் வகுப்பு படிக்கிறான்.. எல்லாவற்றையும் தானே சமாளித்துக் கொண்டு வீட்டில் எந்த பிரச்சனையும் தலை காட்டாமல் வாழ்க்கைச் சக்கரத்தை உராய்வின்றி ஒழுங்காக செலுத்திக் கொண்டிருந்தான். நேரத்திற்கு சமைத்தோமா, சாப்பிட்டோமா, டிவி சீரியல் பார்த்து அழுதோமா, எப்படியெல்லாம் அடுத்தவரை கொடுமை செய்ய முடியும் என்று கற்றுக்கொண்டோமா என்று நிமதியாக போய்க்கொண்டிருந்தது அந்த கடவுளுக்கே அது பிடிக்காமல் போய்விட்டது போல..

ஒரு நாள் காலை தூங்கி எழுந்தவுடன், உடம்பு என்னவோ போல இருக்கிறது என்று சொல்லிய மனிதர், பல் துலக்கி, முகம் கழுவி, காப்பி சாப்பிட்டுவிட்டு சற்று நேரம் படுத்து ஓய்வெடுப்பதாக சொல்லி படுத்தவர், கொஞ்ச நேரத்திலேயே வியர்த்துக் கொட்டி, நெஞ்சுவலி என்று துடித்துப் போனார். பக்கத்தில் குடியிருந்த ஆட்டோக்காரர் நல்ல வேளையாக கிளம்பிக் கொண்டிருந்தார். சொன்னவுடன் அவசரமாக வந்து, அலுங்காமல் மருத்துவமனை கொண்டுவந்து சேர்த்து விட்டார். பரபரப்பாக எல்லா சோதனைகளும் எடுத்து, இருதயத்தில் அடைப்பு என்றும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறினார்கள்.. எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அறுவை சிகிச்சைக்கு பணம் பிரட்டுவதுகூட சிரமம் இல்லாமல் தொழில்முறை நண்பர்கள் கொடுத்து உதவினார்கள். நல்லபடியாக அறுவை சிகிச்சையும் முடிந்தது. மருத்துவமனையில் இருந்த அந்த பதினைந்து நாட்களும் சரசு கற்றுக்கொண்ட பாடங்கள் அதிகம்..

உதவி கேட்பார்களே என்று அஞ்சி ஒதுங்கிய உறவுகள், தன்னால் உதவ முடியவில்லையே என்று ஏங்கும் நல்லெண்ணத் தோழர்கள் என்று அனைத்து ரகமும் அத்துபடியானதோடு முக்கியமாக தொழில் நுணுக்கம் கற்றுக்கொண்டாள். நடேசன் தன் வியாபாரத் தொடர்புகளை தள்ளிப்போட விரும்பவில்லை.. செலவுகள் அதிகமாக இருந்ததால் தேவையும் அதிகமாகிவிட்டது. வருமானம் அவசியமாகிவிட்டது. மகனும், மகளும் படித்துக் கொண்டிருக்கிற சூழலில் சரசு மட்டும்தான் உதவி செய்ய முடியும் என்ற நிலை. ஏழாம் வகுப்பு மட்டுமே படித்திருந்த சரசு எழுதப் படிக்க நன்கு தெரிந்து வைத்திருந்தது நல்லதாகப்போனது. கணவரின் வழிகாட்டுதலும், குடும்பச்சூழலின் அழுத்தமும் அவளை வெகு எளிதாக பாடம் படிக்க வைத்தது..தொழில் சம்பந்தப்பட்ட நண்பர்கள் அனைவரின் எண்களும், முகவரிகளும் ஒரு டைரியில் குறித்து வைத்திருந்ததால் வேலை எளிதாகவும், குழப்பமில்லாமலும் இருந்தது.

நடேசன் படுத்துக் கொண்டே, தம் மனைவிக்கு, நூலின் தரம் பிரித்துப் பார்ப்பதில் ஆரம்பித்து, விதவிதமான கவுண்ட்டுகள், வார்ப், வெப்ட் என்ற பாவு நூல், ஊடை நூல் ஷேட் வேரியேஷன், விலை நிர்ணயம் மற்றும் கமிஷன் விவரங்கள், நூல் விற்பனையாளர் சங்கத்தில் இணையும் முறை வரை அழகாக குழந்தைக்குச் சொல்வது போன்று ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுத்து அவ்வப்போது செய்யவும் வைத்து, அவளுடைய தன்னம்பிக்கையையும் வளர்த்து, பெரிய சாதனை செய்து கொண்டிருந்தான்.. ஒரு மனிதனுக்கு சூழ்நிலை வாய்க்கும் போதுதான் அவரவர் திறமையும், அதை பயன்படுத்தும் தெளிவும் புரிகிறது. தன்னால் இவ்வளவு பொறுமையாக, சொல்லிக் கொடுக்க முடியும் என்பதையும் அப்போதுதான் புரிந்து கொள்ள முடிந்தது. அதைவிட அதிகம் படிப்பறிவும் இல்லாமல், பட்டறிவும் இல்லாமல், குடும்பமே கோவில், கொண்டவனே தெய்வம் என்று வாழ்ந்து கொண்டிருந்த சரசு இவ்வளவு திறமையாக, விரைவில் அனைத்தையும் கற்றுக் கொண்டு உடனடியாக களத்தில் இறங்குவாள் என்பது நினைத்துகூட பார்க்க முடியாத ஒன்று. அதுவும், ஆண்கள் மட்டும் செய்யக்கூடிய ஒரு தொழிலாக காலம் காலமாக புழங்கி வரும் நூல் புரோகரேஜ் தொழில்... நேரம் காலம் பார்க்காமல் வெளியூர் செல்ல வேண்டும், லாரி, டெம்ப்போ என்று நூல் பையுட்னேயே தாமும் பயணம் செய்ய வேண்டிவரும். பெரும்பாலும் சரியான நேரத்திற்கு வீட்டிற்கு வர முடியாது. இரவு, பகல் பார்க்க முடியாது.. இப்படிப்பட்ட ஒரு தொழிலில் ஒரு பெண் ஈடுபடுவது எளிதல்லவே.. ஆனாலும் திருமணம் ஆகி இந்த 22 ஆண்டு கால வாழ்க்கையில் கணவனின் தொழிலில் உள்ள நெளிவு, சுளிவுகளும் ஓரளவிற்காவது அவள் சிந்தையிலும் நுழைந்துதான் இருந்திருக்கிறது என்பதும் அவளுக்கே ஆச்சரியமாகவே இருந்தது..

அம்மாவை கொண்டு வந்து துணைக்கு வைத்துவிட்டு, நர்சிடமும் சொல்லிவிட்டு அவ்வப்போது வசூல் என்றும் நேரில் பார்த்து ஆர்டர் வாங்க வேண்டியவர்களை சந்திக்கவும் போக வேண்டிய கட்டாயமும் இருந்தது.. முன்பின் வியாபாரம் சம்பந்தமாக எந்த தொடர்புமே இல்லாமல் போய் ஜவுளிக்கடையில் நின்றபோது சங்கடம் அதிகமாக இருந்தாலும் கணவன் கொடுத்த ஊக்கமும், போனில் சம்பந்தப்பட்டவரிடம் பேசிவிட்டு அனுப்புவதாலும் சமாளிக்க முடிந்தது அவளால்...

அன்று வெள்ளிக்கிழமை. காலையிலேயே குளித்து, விளக்கேற்றி, பூசை முடித்து,வரும் வழியில் கோவிலில் போய் கணவன் பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு பிரசாதம் வாங்கிக்கொண்டு வெளியில் வந்தாள்.. இன்னும் இரண்டொரு நாளில் வீட்டிற்கு கூட்டிச் செல்லலாம் என்று மருத்துவர் சொன்னது அவளுக்கு ஆறுதலாக இருந்தது. இன்னும் 3 மாதம் என்ன 6 மாதம் கூட ஓய்வெடுக்கட்டும், பொன் போல பார்த்துக் கொள்ள தன்னால் முடியும்போது என்ன பிரச்சனை வ்ந்துவிடப் போகிறது என்று நினைத்துக் கொண்டே, நவக்கிரகம் சுற்றிவந்து கும்பிட்டு, கோவிலின் வெளிப்பிரகாரம் சுற்றிவிட்டு, கொடிமரம் வீழ்ந்து வணங்கி , எழுந்தவள், கையில் இருந்த திருநீறு, குங்குமத்தை கோவிலின் வெளித் திண்ணையின் மூலையில் இருந்த துண்டு காகிதம் எடுத்து அதில் கொட்டி பொட்டலம் மடித்து, கணவனுக்கு எடுத்துப் போவதற்காக கொட்டியபோது, சரியாக ஒரு குழந்தை ஓடிவந்து அப்படியே தட்டிவிட அத்துனை பிரசாதமும் கீழே கொட்டிவிட்டது.. அதிர்ச்சியில் வியர்த்துக் கொட்டியது, உள்ளேபோய் வேறு குங்குமம் வாங்கலாம் என்றால் சுவாமிக்கு அலங்காரம் நடந்து கொண்டிருந்தது. வேறு வழியில்லாமல் வெளியில் வைக்கப்பட்டிருந்த திருநீறு, குங்குமம் கொஞ்சம் எடுத்துக் கொண்டு கிளம்பினாள், உறுத்தலுடனே...

மருத்துவமனை வந்தவள் தன கணவனின் அறையில் ஏதோ பரபரப்பாக இருப்பதைப் பார்த்து மயங்கி விழாத குறையாக நெருங்கினாள்.. அங்கு அவள் அம்மா ஓடிவந்து கட்டிக் கொண்டு, திடீரென்று மருமகனுக்கு நெஞ்சுவலி வந்ததால் தான் டாக்டரை கூட்டி வந்ததாகச் சொன்னார்.. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நின்றிருந்தவளை மருத்துவர் அழைக்கவும் சுய நினைவிற்கு வந்தாள்.. திரும்பவும் மாரடைப்பு வந்துவிட்டதாம்.. ஏதோ சில நேரங்களில் இப்படியும் நடக்குமாம்.. பிழைப்பது அரிதாம்.. போய் பார்க்கச் சொன்னார்கள்.. சுற்றி மிஷ்ன்களின் நடுவே கண்களில் நிறைய செய்திகளுடன் சுற்றுமுற்றும் தன்னை தேடும் கணவனைக் கண்டபோது, சப்த நாடியும் ஒடுங்கிப்போய் விட்டது அவளுக்கு..அருகே அழைத்தவன், மெல்ல வாயில் போட்டிருந்த மாஸ்க்கை எடுக்க முயற்சித்தவனை தடுத்தாள். அருகில் இருந்த நர்சும் வேண்டாம் என்று தடுக்க, அவன் பிடிவாதமாக எடுக்க முயற்சித்தபோது, அந்த நர்சு போய் டாக்டரிடம் சொல்ல, அவரும் வந்து பார்த்து நிலைமையைப் புரிந்து கொண்டு சற்று நேரம் பேச அனுமதிக்கும்படி சொன்னார்..

கண்களில் மாலை, மாலையாக கண்ணீர் கொட்ட, மனைவியின் முகத்தையே உற்று நோக்கியவன், மெல்லிய குரலில், அவளுக்கு தைரியம் கொடுக்க ஆரம்பித்தான்.. தலைமாட்டில் தான் எழுதி வைத்திருந்த வரவு செலவு கணக்குகள், கடன் கணக்குகள் சீட்டை எடுத்துக் கொடுத்தான். என்ன நினைத்து எப்போது இதையெல்லாம் எழுதி வைத்திருந்திருப்பாரோ தெரியவில்லையே என்று அந்த நேரத்திலும் தோன்றியது. இனி எந்த பிரச்சனை வந்தாலும் துணிந்து நின்று போராட வேண்டும் என்றும், ஊருக்காக வாழாமல் தனக்கென்று ஒரு நியாயமும், தர்மமும் வைத்துக்கொண்டு அதன்படி போனால் போதும் என்றும் யாருக்காகவும், சுயமரியாதையை விட்டுக்கொடுக்கவேண்டிய அவசியமில்லை என்பதையும், தொழில் பற்றிய ஒரு சில முக்கியமான விசயங்களையும் சொல்லும் போதே மேல் மூச்சு அதிகமாக எடுக்க நர்ஸ் வந்து திரும்பவும் மாஸ்க் போட்டுவிட்டு போனாள். இறுதியாக குழந்தைகள் படிப்பு முக்கியம் என்று அழுத்தமாகச் சொன்னது நன்கு பதிந்தது. சில மணித்துளிகளில் அனைத்தும் நடந்து முடிந்துவிட்டது... சுயநினைவே இல்லாமல் இயந்திரமாக இழுப்பார் பக்கம் அப்ப்டியே போனதுதான் தெரியும்.. எல்லாம் முடிந்து ஏழு நாட்களாகிய நிலையில், சடங்கு சாங்கியம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, மகள் ப்ரியா. கைபேசியை எடுத்து வந்து ,

அம்மா, அப்பாவோட மொபைல் ரொம்ப நேரமா அடிச்சிட்டிருக்கு

போனை வாங்கி அமைதியாக ஹலோஎன்றாள். இன்று அது தன்னுடைய தொடர்பு சாதனமாக மாறியிருந்தது.

எதிர்முனையில் ஸ்ரீராம் மில் முதலாளி. வாடிக்கையாக அந்த மில்லிற்கு வியாபாரம் செய்து கொடுத்துக் கொண்டிருந்தார் நடேசன். கடந்த ஒரு மாதமாக அவர் வெளிநாடு டூர் போய் வந்ததால் நடந்தது ஏதும் தெரியாமல் வழக்கம்போல் போன் செய்திருக்கிறார். பேசியவரிடம் நடந்தது ஏதுமே சொல்லாமல்,

சரிங்... சரிங்ணா... சரிங்கோ. அவர் வர்றத்துக்கு இல்லீங்கோ.. நான் நேரில் வந்து எல்லா விசயமும் சொல்றேனுங்க..

என்று சொல்லிக் கொண்டிருந்த அன்னையைப் பார்த்து மகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. போனை வைத்துவிட்டு ப்ரியாவிடம் நான் போய் ஸ்ரீராம் மில் அதிபரை சந்தித்துவிட்டு வருகிறேன். யாராவது கேட்டால் ஏதாவது சொல்லி சமாளித்துவிடு என்று சொல்லிவிட்டு மகனையும் துணைக்கு அழைத்துக் கொண்டு கிளம்பினாள். உறவினர்கள் அனைவரின் முகத்திலும் அதிர்ச்சி அப்பட்டமாகத்தெரிந்தது. கணவன் இறந்து 10ம் நாள் துக்கம்கூட தீரவில்லை அதற்குள் இவள் எங்கே போகிறாளோ, தெரியவில்லையே என்று கோபமாகவும் வந்தது. எதுவுமே பேசாமல் கிளம்பி ஆட்டோ பிடித்து நேரே ரஹீஜா காம்ப்ளெக்ஸ் சென்றாள் அங்குதான் ஸ்ரீராம் மில் அதிபர் தங்குவது வழக்கம்..

வழியெல்லாம் தாம் என்ன பேசவேண்டும் என்பது பற்றிய நினைவுடனேயே மௌனமாக வந்தாள். மகன் வாயே திறக்காமல் அமைதியாக வந்து கொண்டிருக்கிறான். உறவினர்கள் என்னவெல்லாம் பேசப்போகிறார்கள் என்று புரிந்தாலும், அதைப்ற்றியெல்லாம் கவலைபட்டு தம் குழந்தைகளின் எதிர்காலத்தை தொலைக்க விருப்பமில்லை. கண்வன் கொடுத்த கடன் பட்டியல் கண் முன்னே வந்தது..

வரவேற்பறையிலேயே காத்து இருந்தவர், நடேசன் வராமல் தான் வருவதாக ஏன் சொல்கிறார்கள் என்று யோசித்துக்கொண்டே அமர்ந்திருந்தார்.. ஒவ்வொரு முறையும் இவர் வரும்போதெல்லாம் , நடேசன் இவருடன் இரண்டு நாட்கள் முழுவதும் பயணம் சென்று தங்கள் வாடிக்கையாளர்களைச் சந்தித்துப் பேசுவது வழக்கம். ஸ்ரீராம் மில முதலாளி பணம் வசூலில் எப்படி கறாராக இருக்கிறாரோ அதே அளவிற்கு, தம்முடைய நூல் தரம் காக்க வேண்டிய கடமையிலும் சரியாக இருக்கக் கூடியவர். வாடிக்கையாளர்கள் திருப்தியாக இருக்கிறார்களா என்பதை சில மாதங்களுக்கு ஒருமுறை நேரில் வந்து சோதனை செய்து கொள்ளுவார். அது அவருடைய வியாபார தந்திரம். நூல் சந்தையில் மிகவும் மரியாதைக்குரியவர். இதெல்லாம் அடிக்கடி தன் கணவன் பேசுவதைக் கேட்டிருக்கிறாள்.

சற்றும் தயங்காமல் அவரை நெருங்கி கும்பிட்டுவிட்டு பேச்சை ஆரம்பித்தாள். அவர் தன்னை முன்பின் பார்த்திராவிட்டாலும், ஒரு சில திருமண விசேங்களில் சரசு அவரை பார்த்திருப்பதால் அடையாளம் காண்பதில் சிரமம் இருக்கவில்லை. உள்ள நிலைமையை தடையில்லாமல், மிகைப்ப்படுத்தாமல் அவள் சொல்லிய விதமும், அவள் கண்களில் மின்னிய அந்த தன்னம்பிக்கை ஒளியும் அவருக்கு சரசு மீது ஒரு நம்பிக்கையையும், மரியாதையையும் ஏற்படுத்தியது. தன்னையறியாமல் எழுந்து நின்று கண்கள் கலங்க கையெடுத்து கும்பிட்டார் அவர். அவளுடைய பேச்சில் இருந்த தெளிவும், சுயமாக நின்று சூழலைச் சமாளிக்க அவள் எடுக்கும் முயற்சியும் நன்கு புரிந்தது. அதற்கு தன்னால் ஆன உதவிகளைச் செய்வது என்று முடிவும் எடுத்ததன் விளைவே இன்று சரசுவின் நிற்காத ஓட்டம்........

எங்கோ சேவல் கூவும் சத்தம் சுய நினைவிற்குக் கொண்டுவந்தது. மகள படித்து முடித்த கையோடு பெரிய கம்பெனியில் வேலையும் கிடைத்து, மூன்று மாத பயிற்சிக்காக பூனா சென்றிருக்கிறாள். மகன் விரும்பியபடி விவசாயக் கல்லூரியில் அவனை சேர்த்து விட்டாள், கோய்ம்புத்தூரிலேயே கல்லூரி இருப்பதால் அவனை பிரிய வேண்டிய அவசியமும் இல்லாது போனது. இன்று கடனெல்லாம் கட்டி முடித்து நிம்மதியாக தொழிலையும் கவனிக்க முடிகிறது. தம் வெற்றிகள் கொடுத்த ஊக்கம், புல்லுறுவிகளின் இது போன்ற சீண்டல்களை படைத்தவன் பார்த்துக்கொள்வான் என்று நம்பிக்கை கொள்ளச் செய்தது. தம் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் தம் பணியை தொடர்ந்து கொண்டிருந்தாலும் சக மனிதர்களின் கேலியும், கிண்டலும், பொறாமையும், போட்டியும் தன்னை அலைக்கழித்தாலும் அதிலிருந்து மீண்டு வரும் கலையையும் காலமே அவளுக்கு கற்றுக் கொடுத்தது.

இதோ மீண்டும் உற்சாகம் வந்துவிட்டது. தன் வழிப்பாதையில் உள்ள கல்லையும், முள்ளையும் அகற்றி முன்னேறும் வித்தை இப்போது கைவந்த கலையாகிவிட்டது அவளுக்கு. வழக்கம்போல காலை எழுந்து சுறுசுறுப்பாக, தம் பணிகளைத் தொடர கிளம்பிவிட்டாள். இரவு அம்பிகா டெக்ஸ் கடைக்கு பையை இறக்கிப் போட்டுவிட்டு வந்திருந்தாள். நேரே சென்று அவரிடம் பணம் வசூல் செய்து பேங்க்கில் சென்று கட்ட வேண்டும். அவர் வழக்கமாக பத்து மணிக்குத்தான் கடைக்கு வருவார். அதனால் அம்மாவிடமும், மகனிடமும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, நிம்மதியாக கிளம்பினாள் தம் இரு சக்கர வாகனத்தில். அம்மா அழகாக வண்டி ஓட்டிக்கொண்டு போகும் அழகை கற்றுக்கொடுத்த மகன் பெருமை பொங்கப் பார்த்தான்.

சரியாக பத்து மணிக்கெல்லாம் டாண்என்று திறந்திருக்கும் அம்பிகா டெக்ஸ் கடை இன்னும் பூட்டியே இருக்கிறதே என்னவாகியிருக்கும் என்று யோசித்துக் கொண்டே நெருங்கியவளை, அவர் கடையில் வேலை பார்க்கும் மணி வந்து,

அக்கா.. விசயம் தெரியுமா உனக்கு. எங்க முதலாளி பொண்ணு கூட படிக்கிற வேற மதத்துக்கார பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு, நியூஸ் பேப்பர்ல செய்தி குடுத்திருக்கு..

அடடா.. ஏன் இப்படி செய்தது இந்தப் புள்ள.. அவிங்க அப்பாகிட்ட கெஞ்சியாவது சம்மதிக்க வச்சிருக்கலாமே.. தானே போய் இப்படி அனாதையாட்டமா கல்யாணம் பண்ணிக்கனுமா...? பாவம் பெத்தவிங்க மனசு என்னா பாடுபடும்.. கடவுளே..

ஆமாங்க்கா.. எங்க முதலாளி பத்திதான் உனக்குத் தெரியுமே.. சாதி, சனம்னு பேசியே கழுத்தறுப்பாறு.. இந்த காலத்து புள்ளைக் எங்க அதெல்லாம் காதுல வாங்குதுக. தன்னோட வாழ்க்கை, சந்தோசம்னுல்ல அந்த நேரத்துக்கு தகுந்தாப்போல முடிவு எடுக்குதுக.. இவரு புத்தி தெரிஞ்சுதான் அந்தப் புள்ள ரெஜிஸ்டர் ஆபிசுல கல்யாணம் பண்ணிக்கிட்டு, போலிசுல போய் பாதுகாப்பு வேணுமின்னு நிக்குதாம்.. எல்லாருமா சேர்ந்து இப்ப அங்க போய பேச்சு வார்த்தை நடத்திக்கிட்டிருக்காங்க...

அடக்கடவுளே.. பாவம் அந்த அண்ணன் மனசு என்ன பாடுபடும்.. நல்ல மனுசன் பாவம்..

என்னக்கா நீ.. எப்பப் பார்த்தாலும் உன்னை கேவலமா பேசற ஆளு அவுரு. அவருக்குப் போயி பாவப்படுறியே..

அடப்போப்பா.. தேளோட குணம் கொட்டுறதுதானே.. அதுக்கென்ன பண்ண முடியும்..

இரண்டு நாட்கள் கழித்து அவரைப் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு பணம் வசூல் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தவள் அடுத்து ஆக வேண்டிய வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டாள். சலனமற்ற அவளுடைய வாழ்க்கைப் பயணம் தெளிந்த நீரோடையாக ஓடிக்கொண்டிருக்கிறது.

நன்றி : திண்ணை வெளியீடு

,

Friday, July 27, 2012

திமிர்ந்த ஞானச் செருக்கு!





இலட்சுமி மேனன் – பெண்கள் முழு சுதந்திரம் பெற்று, தனித்தன்மையுடையவர்களாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர். அதற்கான முயற்சிகளில் தம் வாழ்நாளின் பெரும் பகுதியை செலவிட்டவர். மேடைப்பேச்சில் மிக திறமைசாலியாக விளங்கியவர்.


நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்

திமிர்ந்த ஞானச்செருக்கும் இருப்பதால்

செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்:


அமிழ்ந்து பேரிரு ளாமறியா மையில்

அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை

உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்

உதய கன்னி உரைப்பது கேட்டிரோ!

பாரதியார்.


1899ம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் ராம வர்மா தம்பிரான் மற்றும் மாதவிகுட்டி அம்மாள தம்பதியருக்குப் பிறந்த அன்பு மகள்தான லட்சுமி மேனன். ஆசிரியை, வழக்கறிஞர், அரசியல்வாதி மற்றும் செயல் திறனாளர் என்ற பன்முகங்கள் கொண்டவர். இவருடைய ஆரம்பக்கல்வி மற்றும் கல்லூரி வாழ்க்கை ஆரம்பமும் திருவனந்தபுரத்திலும், மேற்படிப்பு சென்னை, லக்னௌ மற்றும் இலண்டன் ஆகிய இடங்களில் தொடர்ந்தது ஒரு சிறந்த கல்வியாளராக தம் வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்தவர். தம் முதற்பணியை சென்னை இராணிமேரி கல்லூரியில ஆரம்பித்தார். 1926ம் ஆண்டு வரை அங்கு ஆசிரியப் பணியிலும் அதைத் தொடர்ந்து கோகலே மெமோரியல் பெண்கள் பள்ளியிலும், பின்பு லக்நோவில் இசபெல்லா தோபர்ன் கல்லூரியிலும் பணி புரிந்தார். அதற்குப் பிறகு 1935 வரை வழிக்கறிஞராகவும் பணியாற்றினார். ஜவஹர்லால் நேரு, சரோஜினி நாயுடு, மற்றும் மார்கரேட் கசின்ஸ் ஆகியோருடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்ததால் தாம் பிறந்த பொன்னாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆவலும் மேலெழுந்தது. அகில இந்திய பெண்கள் மகாநாட்டில் சில காலம் செயலாளராகவும், தலைவராகவும், ரோஷினி என்ற அதன் பத்திரிக்கைக்கு ஆசிரியராகவும் இருந்தார்.


சீனா, இந்தியாவை தாக்கிய காலங்களில், பண்டிட் நேருஜி, இந்தியாவின் நிலைப்பாட்டை ஏனைய உலக நாடுகளுக்கு தெளிவுபடுத்தும் விதமாக இவரை தூதுவராக பணியாற்ற நியமித்தார்.


1952ல், பீகார் மாநிலத்தின் சாரணர் பிரிவு ஆணையராக நியமிக்கப்பட்டார். அகில இந்திய மகளிர் மாநாடு அமைப்பில் மிக முக்கியமான பங்கெடுத்துக் கொண்டார். தன்னுடைய சொந்த சொத்துகள் மற்றும் நகைகளை அடமானம் வைத்து தில்லியில், அகில இந்திய மகாநாட்டிற்காக ஒரு நிலம் வாங்கினார். அகில இந்திய மகளிர் மாநாட்டுத் தலைவியாக 1955 முதல் 1959 வரையிலும், இறுதி வரை புரவலர் மற்றும் அறங்காவலராகவும் இருந்தார். மகளிரின் நலத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இலட்சுமி மேனன், நேருஜியின் அமைச்சரவையில் வெளியுறவுத் துறையின் துணை அமைச்சராக இருந்தார். உலக விவகாரங்களில் ஆழ்ந்த ஞானம் கொண்டவராகவும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சர்வ சாதாரணமாக உலகம் முழுவதும் சுற்றி வந்ததோடு, மகளிரின் மேம்பாட்டிற்காக முழுமையான முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார்.


நாடு சுதந்திரம் பெற்ற பிறகு சில காலம் பாட்னா ஆசிரியர்கள் பயிற்சிக் கல்லூரி முதல்வராக இருந்தார். ஜவஹர்லால் நேருவின் கட்டாயத்தின் பேரில் மேல்சபையில் ஒரு சில பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டி வந்தது. 1949 – 50களில் ஐக்கிய நாடுகளின், பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரிவிற்கு தலைமை தாங்கினார். தாய்நாடு திரும்பியவுடன், 1952 முதல் 1957 வரை வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் பாராளுமன்ற செயலாளராகவும், 1957 முதல் 1962 வரை பிரதி அமைச்சராகவும் (Deputy Minister) 1967 வரை மாநில அமைச்சராகவும் சேவை புரிந்தார். 1957ம் ஆண்டு இவருடைய பல்வேறுவிதமான சேவைகளைப் பாராட்டி பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.


1960ம் ஆண்டில், நம் இந்தியாவை சீனா, தாக்கிய போது ஜவஹர்லால் நேரு லஷ்மி மேனன் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் நம் இந்திய நாட்டின் நிலையை தெளிவுபடுத்தும் வகையில் தூதுவராக அனுப்பி வைத்தது.. பீஹார் மாநிலத்திலிருந்து, மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது நேருஜியின் தலைமையின் கீழ் பல முக்கியப் பணிகளை மேற்கொண்டார். தம் இறுதிக் காலங்களில்கூட ஏழை, எளியோருக்கு சேவை புரிவதில் தம் பொன்னான நேரத்தை செலவிட்டார்.

லஷ்மி மேனன் கஸ்தூரிபா காந்தியின் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தார். கஸ்தூரிபா காந்தி தேசிய நினைவு அறக்கட்டளையின் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபாடு கொண்டதனால், 1971ம் ஆண்டு அதன் தலைவராகவும் ஆனார். அங்கு பணிபுரிபவர்களுக்கு சிறந்த திட்டங்கள் மூலம், அந்த பெண்களின் கல்வியறிவை மேம்படுத்தும் முயற்சியை மேற்கொண்டார். கல்வியறிவை முழுமையாகப் பெறுவதன் மூலம் மட்டுமே அவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என்பதில் உறுதியாக இருந்தார்.காந்தியடிகளின் கொள்கைகளால் பெரிதும் கவரப்பட்ட லட்சுமி, கதராடை உடுத்தும் வழக்கமும் மேற்கொண்டார்.

அன்னையர் தினக் கொண்டாட்டம் என்பதன் மொத்த சூத்திரதாரியான லட்சுமி மேனன் அவர்கள், நாட்டு மக்களின் அன்னை கஸ்தூரிபா நினைவாக கஸ்தூரிபா ஆசிரமத்தில் மட்டுமன்றி ஒவ்வொருவர் இல்லத்திலும், ஒவ்வொருவர் அன்னையையும் கொண்டாட வேண்டிய ஒன்று என்று நம்பினார். இரவு, பகல், நேரம், காலம் பார்க்காமல் உழைப்பு மட்டுமே வாழ்க்கையாக கொண்டிருக்கும் அன்னையர்களை அந்த ஒரு நாளாவது, குழந்தைகள் புத்தாடைகளுடன், விடியலிலேயே அன்னையின் அருகமர்ந்து, அவள் பாதம் பணிந்து, அன்று முழுவதும் அந்த ஒரு நாளேனும், எந்த பணியிலும் ஈடுபடாமல்,முழு ஓய்வு எடுத்துக் கொள்ளும்படியும் அன்றைய அனைத்து குடும்பப் பொறுப்புகளையும் தாங்கள் சுமப்பதாகவும் ஏற்றுக் கொள்ளும் வகையில் கொண்டாடப்பட வேண்டும் என்று விரும்பினார். இன்றும் பெரும்பாலும் பல இடங்களில் இந்த வகையில் கொண்டாடப்படுகிறது.

அனைவரையும் கவரக்கூடிய மிகச்சிறந்த இரு குணங்கள் அவரிடம் உண்டு. ஒன்று, பற்றற்ற நிலை, அதாவது எந்த ஒரு உலகப் பொருள் மீதும் பற்று கொள்ளவோ, அடைய விரும்பியதோ இல்லை. மற்றொன்று, அடுத்தவரிடமிருந்து எந்த ஒரு பொருளையும் கையால் தொடவும் விரும்பமாட்டார். இந்த இரு குணங்களும் கடவுள் தனக்களித்த வரமாக எண்ணியிருந்தார்.

இங்கிலாந்தில் கல்வி பயிலும் போதுதான் முதன் முதலில் நேருஜியை சந்தித்தார். இரஷ்ய நாட்டில் நடந்த மகாநாட்டில் அவருடன் சென்று கலந்து கொண்டார். இந்தியாவிற்கு திரும்பியவுடன், தம் கணவர் பேராசிரியர் மேனன் அவர்களுடன் தாமும் ஆசிரியப் பணியை மேற்கொண்டார். இலவச கட்டாயக் கல்வியை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக இளந்தளிர்கள, கல்வியறிவற்ற சமுதாயத்தினருடன் சேராமல் இருப்பதோடு, எதிர்காலத்தில், அனைத்து ஓட்டாளர்களும், கைநாட்டு வைக்காமல், கையொப்பமிடல் வேண்டும் என்ற பேராவலும் கொண்டிருந்தார். பெண்கள், ஆதிவாசிகள், தலித்துகள் போன்று அனைத்து மக்கள் மத்தியிலும் எழுத்தறிவு ஒளிவீச வேண்டும் என்றும், 2000ம் ஆண்டில் இந்தியாவில் அனைத்து மகளிரும் கல்வியறிவு பெறச் செய்ய வேண்டும் என்று உறுதி கொண்டிருந்தார். ஆனால் 1994லிலேயே அவருடைய இறுதி மூச்சு நின்றுவிட்டது. அது வரையில் தம் வாழ்நாள் முழுவதையும் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதார சேவைகளுக்காகாவே செலவிட்டார்.

இலட்சுமி மேனனின் தனிப்பட்ட மற்றொரு நல்ல பழக்கம், தபால் நிலையத்திற்கு தானே சென்று, தபால் அட்டைகள் வாங்கி வந்து, ஒவ்வொருவருக்கும், தம்முடைய அழகான கையெழுத்திலேயே கடிதம் எழுதுவதை வழமையாகக் கொண்டிருந்தார். அவர் எழுதும் கடிதங்கள் அனைத்தும் சுருங்கச் சொல்லி விளங்கச் செய்வதோடு, அன்பும், பாசமும் நிறைந்ததாக இருக்கும் என்றும், பதில் எழுதப்பட வேண்டியவர்களுக்கு ஒரு நாளும் தவற விடாமல், தாமதமானாலும், ஒரு சிறு குறிப்பேனும் வழங்கி விடுவார் என்று அவருடன் நெருங்கிப் பழகிய, ஷோபனா ரானடே, சுசீலா நாயர் போன்றவர்கள் கூறுகின்றனர். நூற்றுக் கணக்கான கடிதங்களை, தட்டச்சு உதவியாளரோ அல்லது செயலாளரோ என்று எந்த உதவியும் எதிர்பாராமல், தம் அழகிய கையெழுத்திலேயே எழுதி தொடர்பு கொள்வார் என்பது மிக ஆச்சரியமான விசயம். கோபம் கொள்ளும் குணமோ, எந்த ஒன்றின் மீதும் அதிகமான ஈடுபாடு கொண்டு துன்பமுறும் வழக்கமோ ஏதுமில்லாதலால் தாம் மிகுந்த மன நிறைவுடன் இருப்பதாகக் கூறுவாராம். அவர் இல்லம் எப்பொழுதும் கல்வியாளர்கள் நிறைந்தும், விதவிதமான சைவ உணவு விருந்துடனும் கலகல்ப்பாக காணப்படும். இலட்சுமி மேனன் தாமே சமையல் செய்வதில் வல்லவராகவும் விளங்கினார்.

தங்களுடைய வாழ்க்கையில் ஏதேனும் சாதனை படைக்க வேண்டும் என்று விரும்பும் மகளிர் ஒவ்வொருவரும் ஒரு சிறந்த பாடமாக ஏற்றுக் கொள்ள வேண்டிய பல உன்னத குணங்களை லட்சுமி என். மேனன் அவர்கள் கொண்டிருந்தார் என்றால் அது மிகையில்லை.

நன்றி : வல்லமை வெளியீடு

Tuesday, July 24, 2012

பூமிதி.....


தேவையில்லாத எதிர்பார்ப்புகளே ஒருவரை வாழ்க்கையின் அடிமையாக்குகிறது.. இரவு படித்து முடித்து வைத்த புத்தகத்தின் சில வரிகள் பளிச்சென்று நினைவிற்கு வந்தது தூங்கி முழித்தவுடன்.... அழகாக குளித்து முடித்து நார்மலான காலை வழிபாடு முடித்து மதிய உணவிற்கு இரண்டு சப்பாத்தியும் கொஞ்சம் சன்னாவும் ஒரு சிறிய ஆப்பிளும் எடுத்து பேக் செய்து வைத்துவிட்டு காலையில் கார்ன் ஃபிளேக்ஸ் ஒரு பவுல் அதிவேகமாக விழுங்கிவிட்டு உடை மாற்றி லேசான ஒப்பனையுடன், ஏதோ ஒரு டாப்ஸ் ஒரு ஜீன்ஸ் என்று மாட்டிக் கொண்டு கிளம்பத் தயாராகி இறுதியாக கண்ணாடி முன் நின்று சரி பார்த்தவள் தன்னையறியாமல் புன்னகை பூத்தாள். சமீபத்திய அலுவல் முறை மூன்று மாத ஜெர்மனி பயணம் தன் உடலின் பூசின மாதிரியான ஊளைச்சதையையும் குறைத்ததோடு அழகான பிங்க் வண்ண நிறத்தையும் கொடுத்தது சற்று பெருமையாகவும் இருந்தது.. அக்கம் பக்கம் திரும்பி உடையை சரிபார்த்தபோதுதான் தெரிந்தது டாப்ஸ்ஸை திருப்பி உடுத்தியிருந்தது... தையல் வெளியே தெரிந்ததால்... அடடா இதைக்கூட கவனிக்கவில்லையே.. இரவு சரியான தூக்கமில்லை.. திருமணமாகி மூன்றே மாதத்தில் ஜெர்மனி பயணம்.. இன்னும் கணவனை முழுமையாக புரிந்து கொள்ளும் வாய்ப்பு கூட அமையவில்லை.. ஊரிலிருந்து வந்து மூன்று நாட்களாகியும் அன்பு கணவனை பார்க்க முடியாத ஏக்கம் ஒருபுறம் என்றால், அவனுடைய பட்டும்படாத பேச்சு ஒருபுறம் உறுத்தலாக இருந்தது.. காரணம் ஏதும் புரியவில்லை.

இயந்திர வாழ்கையிலிருந்து மீண்டு வந்தது போல சுகமான ஒரு உணர்வு இந்த மூன்று மாதத்திற்குப்பிறகு! தனிமை என்பது கொடியது என்றால் திருமணம் ஆன சொற்ப நாட்களிலேயே கணவனையும் சரிவர புரிந்து கொள்ளவும் நேரமில்லாமல் கற்பனைத்தேரை முழுமையாக கொண்டுச்சென்று நிலைசேரும் அவகாசமும் இல்லாமல் அதற்குள் கடமை அழைக்க செருமனிப் பயணம். மூன்று மாதங்களும் மூன்று யுகங்களாகக் கழிந்தது சகானாவிற்கு. பெயரைப் போலவே மென்மையான இதயம் கொண்ட அழகு தேவதை.

ஊரிலிருந்து திரும்பி இன்று மூன்றாவது நாள், கணவன் கார்த்தி, அலுவலகப் பயணம் என்று தான் வரும் அதே நாளில் கிளம்பிப் போய் இன்று வருவதாகக் கூறியிருந்தான். அலுவலகம் செல்ல மனம் வரவில்லைதான்... எப்படியும் கார்த்தி வீடு வந்து சேர்வதற்குள் வந்து விடலாம் என கிளம்பினாள்..

மாலை விதவிதமாக கணவனுக்குப் பிடித்த ஐட்டங்களாக டேபிளில் அடுக்கி வைத்துவிட்டு, மேக வண்ண மெல்லிய ஷிப்பான் சேலை (கார்த்தியின் ஃபேவரிட்) உடுத்திக் கொண்டு அதற்கு தகுந்த காது மற்றும் கழுத்திலும் மேட்ச்சாக நீலக்கல் செட் அணிந்து காத்து நின்றாள். ஏனோ மணித்துளிகள் மிகவும் மெத்தனமாக நகர்வது போன்று தோன்றியது... கல்லூரி நாட்களில் இப்படி அடுத்தவருக்காக அலங்காரம் செய்து கொள்வதும் அடிமைத்தனம்தான் என்று எத்துனை முறை வாதிட்டிருப்போம் என்று எண்ணியபோது அவளுக்கே சிரிப்பாக வந்தது.. இன்று கணவன் என்ற பெயரில் சில நாட்கள் முன்பு முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவனை சேர்த்து வைத்தார்கள் பெற்றோர்கள். இன்று அவனுக்காக அவனுக்குப் பிடித்த வண்ணத்தில் உடுத்தி, அவனுக்குப் பிடித்ததைச் சமைத்து அவனுக்காக வழிமேல் விழிவைத்து காத்துக் கொண்டிருப்பதை நினைத்தால் வேடிக்கையாக இருந்தது..

அழைப்பு மணியின் ஒலி அவளுக்குள் பெரும் பரவசத்தை ஏற்படுத்தியது. கதவை திறக்க ஓடியவள் என்ன நினைத்தாளோ திரும்பவும் ஓடி வந்து கண்ணாடி முன் நின்று முன்னும், பின்னும் திரும்பிப் பார்த்து திருப்தியாக ஓடினாள் கதவைத் திறப்பதற்கு. கணவன் ஓடிவந்து அப்படியே கட்டிக்கொள்ளப் போகிறான் என்ற உணர்வே அவளுக்குள் ஏதோ மாற்றத்தை கொண்டு வந்ததன் காரணமாக நடையிலும் ஒரு தள்ளாட்டமும், கண்களிலும் ஒரு மயக்கமும், முகத்திலும் செவ்வரிகளும் ஏற்படுத்தி உதடுகள் துடிக்க மெல்ல கதவைத் திறந்தாள்......

எதுவுமே பேசாமல் அழகு தேவதையாக கண்களில் ஆவல் பொங்க தன் முகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருக்கும் அன்பு மனைவியை ஏறெடுத்தும் பார்க்காமல், விரைப்பாகச் சென்ற கணவனை அதிர்ச்சியாகப் பார்த்தாள் சகானா... கண்ணே, முத்தே, மணியே என்று தலையில் வைத்து கொண்டாடிய கணவனா இவன்.. என்ன ஆயிற்று இன்று.. தன் கண்களையே நம்ப முடியாமல் ஒன்றும் பேசாமல் அவன் பின்னாலேயே சென்றாள். நொடியில் அத்துனை கனவுக் கோட்டையும் பொடிப்பொடியாக அவமானத்தால் குறுகிப் போனாள்....

இயந்திரமாக நேரே குளியலறை சென்று குளித்து உடை மாற்றி, ஒன்றும் பேசாமல் படுக்கையில் சென்று விழுந்தவனை அதற்குமேல் பொறுக்கமாட்டாமல், அருகில் சென்று,

சாப்பிட்டுவிட்டு படுக்கலாமே.......

என்றாள் முன்பின் அறிமுகமில்லாத ஒரு புதிய மனிதரிடம் பேசுவது போல.... எதுவும் பேசாமல் திரும்பி படுத்துக்கொண்ட கார்த்தியின் போக்கு அவளுக்குப் பிடிபடவில்லை.. சென்ற இடத்தில் ஏதும் பெரிய பிரச்சனையாக இருக்குமோ. காலையில் எழுந்தால் சரியாகிவிடும் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டு, தனக்கும் சாப்பிட பிடிக்காமல் குளிர்சாதனப்பெட்டியில் வைக்க வேண்டியதை வைத்துவிட்டு கட்டிலின் ஓரத்தில் சுருண்டு படுத்துக் கொண்டாள். பசியும், மனக்குழப்பமும் சேர்த்து இரவு தூக்கம் முழுவதையும் விழுங்கிவிட்டது.

விடியவிடிய தூங்காததன் அசதி முகத்தில் சூரிய ஒளி அடிக்கும் வரை தூங்கச் செய்துவிட்டது.. அடித்துப் பிடித்து எழுந்தவள் கணவன் கிளம்பி சென்றிருப்பதைக் கண்டு மேலும் அதிர்ச்சியுடன் ஒன்றுமே தோன்றாமல், யோசிக்கவும் நேரமில்லாமல், பரபரவென அலுவலகம் கிளம்பினாள், இரண்டு துண்டு ரொட்டியை வாயில் போட்டுக் கொண்டு.

நான்கு நாட்கள் ஆகிவிட்டது. இப்படியே கண்ணாமூச்சி ஆட்டம் ஆடியாகிவிட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை எப்படியும் கார்த்தியிடம் மனம் விட்டு பேசிவிட வேண்டும் என்ற முடிவுடன் இருந்தாள். இதற்குமேல் பொறுமையாக இருப்பது சரியாகாது என்று கண்டும் காணாமல் விலகிச் செல்பவனை வழிமறித்து, பேச முயற்சி செய்தாள். அதற்குள் படுக்கையறையில் அவனுடைய கைபேசி ரீங்காரமிட ஒன்றும் பேசாமல் ஒதுங்கி நின்றாள்..

எதிர்முனையில் தன் மாமியார் என்பது புரிந்தது. ஏதோ பலமான வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. இந்த மூன்று நாட்களும் தன் கிராமத்திற்குத்தான் சென்று வந்திருப்பான் போல. ஒரு விசயம் தெளிவாகப் புரிந்தது. ஏதோ தன்மீது கோபமாக இருக்கிறான் என்றும் தன் மாமியார் தனக்காக பரிந்து பேசிக்கொண்டிருப்பது கணவனுடைய கோபத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. காரணம்தான் புரியவில்லை. இவ்வளவு கோபமாக விவாதிக்கும் அளவிற்கு தன்னிடம் எந்த குறையும் இல்லையே.. மனதில் தோன்றிய அலுப்பு மேற்கொண்டு பேசமுடியாமல் தடுத்தது.

ஞாயிற்றுக்கிழமை என்றாலே வழமையாக வரும் உற்சாகம் கூட தொலைந்து போனது. காலை உணவு எப்படியும் கார்த்திக்கு தேவையிருக்காது. வீட்டில் நான்கு நாட்களாக சாப்பிடவில்லை என்பதால் சமைக்கும் ஆர்வமும் இல்லை அவளுக்கு. சமையலறையில் உருட்டும் சப்தம் கேட்டு எழுந்து போனவள் அங்கு கார்த்தி முட்டை ஆம்லெட் போட்டுக் கொண்டிருப்பது பார்த்து, மனம் கேட்காமல் நான் உதவலாமாஎன்று தயங்கித் தயங்கிக் கேட்டாள். உடனே அவன் அவளுடைய கண்களை ஆழ்ந்து உற்று நோக்கியதை சற்றும் எதிர்பார்க்கவில்லை அவள். தன்னையறியாமல் பார்வை தாழ்ந்தாலும் அந்த அவனுடைய பார்வையில் பல விடையிறுக்க வேண்டிய கேள்விகள் தொக்கி நிற்பது புரிந்தது அவளுக்கு.

பொறுமையாக ஆம்லெட்டும், பிரட் டோஸ்ட்டும் போட்டுக் கொண்டு வந்து டேபிளில் அமர்ந்து மெதுவாக சகானா இருக்கும் பக்கம் பார்வையை ஓட்டியவன், அவள் சோபாவை விட்டு எழுந்து போய் ஒரு கோப்பையில் கார்ன் பிளேக்ஸ் போட்டுக் கொண்டு எடுத்து வருவ்தைக் கண்டவுடன் மௌனமானான். சாப்பிட்டு முடித்தவுடன் எப்படியும் தன்னிடம் கேள்விகள் வரும் என்பது தெரிந்ததால் பொறுத்திருந்தாள்.

போலீஸ் ஸ்டேசன் போயிருக்கியா”?

எடுத்த எடுப்பில் இப்படி ஒரு கேள்வி அவனிடமிருந்து எதிர்பார்க்கவிலலை.

ம்ம்ம்.. ஆம்.. போயிருக்கேனே..என்றாள் தடுமாற்றத்துடன்.

ஒரு பொம்பிளைக்கு இதெல்லாம் தேவையாஎன்று நீதிமன்றத்தில் இருந்து வந்திருந்த ஒரு தபாலை தூக்கிப்போட்டுவிட்டு அவன் அழுத்தமான பார்வையுடன் கேட்ட கேள்வி அவளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நன்கு படித்து நாகரீகமாக் உடுத்தி, நாகரீகமாக சாப்பிட்டு, தன்னை மிகவும் சமூக நலனில் அக்கறை கொண்ட மாடர்ன் சிந்தனையாளனாக காட்டிக் கொள்ளும் கார்த்திக் பற்றிய தன்னுடைய கணிப்பு தவறி விட்டதை நொடியில் புரிந்து கொண்டாள்.

என்ன கேட்ட கேள்விக்கு இன்னும் சரியா பதில் வரலையே..மீண்டும் அதே அதிகாரத்தோரணை.

என்ன பதில் வேண்டும். நான் தான் சொன்னேனே.. ஆம் என்று

அதைத்தான் கேட்கிறேன்.. இதெல்லாம் உனக்குத் தேவையா என்று. உடனடியாக இந்தப் பிரச்சனையிலிருந்து நீ விலக வேண்டும். அப்பொழுதுதான் நாம் நிம்மதியாக சேர்ந்து வாழ முடியும். அதுமட்டுமல்ல இது போல இன்னொரு முறை நடக்காது என்ற உத்திரவாதமும் கொடுத்தால்தான் அடுத்ததைப் பற்றி நாம் யோசிக்க முடியும்

புரியல.. அடுத்ததைப்பற்றி என்றால்.... ?”

ஆம் இனிமேல் நீ எப்படி இருக்கப்போகிறாய் என்பதை வைத்துதான் நம் வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது என்று முடிவு செய்ய முடியும்

இப்போதே நல்லாத்தானே இருக்கேன்.. நீங்கள் சொல்வதை தெளிவாகச் சொன்னால் நல்லாயிருக்கும் .. இப்படி மூடு மந்திரம் எல்லாம் வேண்டாமே..

சரி, தெளிவாகவே சொல்கிறேன்.. இனிமேல் பெண்பிள்ளையா இலட்சணமா வேலைக்குப் போனோமா, வந்தோமான்னு வர வேண்டும். போற இடத்தில் பெரிய ஹீரோயின் மாதிரி வேலையெல்லாம் காட்டாமல் இருக்கனும். உனக்கு ஒரு பிரச்சனையின்னா என்னால உன் பின்னால எல்லாம் அலைஞ்சிட்டிருக்க முடியாது

ஓ... இப்போது புரிந்தது சகானாவிற்கு கார்த்திக்கின் பிரச்சனை என்னவென்று.. எந்த பதிலும் சொல்ல முடியாமல் அவனை ஆழ்ந்து பார்த்த பார்வையில் அவனும் ஏதோ யோசிப்பவனாக மௌனமானான்..

இரவு முழுவதும் உறக்கமில்லாமல் தவித்தபோதும், கணவனின் மெல்லிய குறட்டை ஒலியும் சற்று வேதனையை அதிகப்படுத்தியது. தன்னைப்பற்றிய நினைவு சிறிதும் இல்லாதவனாக தன் கடமை முடிந்துவிட்டதாக ஆனந்தமாக உறங்குபவனை என்ன சொல்ல முடியும்..

சகானா அப்படி ஒன்றும் அன்னை தெரசா போன்று சமூக சேவகியெல்லாம் இல்லை.. ஆனால் தன் கண் முன்னால் நடக்கும் ஒரு அநியாயத்தைக் கண்டும் காணாமல் போகும் அளவிற்கு மனிதாபிமானமற்ற மிருகமும் அல்ல. இப்படி ஒரு பெரிய பிரச்சனையாக அந்த சிறிய சம்பவம் வந்து சேரும் என்று அன்று அவள் நினைக்கவில்லைதான்.. ஆனாலும் இருவரும் ஒருவரைப் பற்றி மற்றவர் முழுமையாக புரிந்து கொள்வதற்கு இது அடித்தளமாக அமைந்ததை நினைத்து அந்த வருத்தம் காணாமல் போனது..

அன்று தன்னுடைய இருசக்கர வாகனம் பழுதானதால் டவுன் பஸ்ஸில் சென்றுவர வேண்டிய சூழல். மாலை வீடு திரும்பும் போது பேருந்தில் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணற எப்போது கீழே இறங்குவோம் என்று துடித்துக் கொண்டிருந்தபோதுதான் தனக்கு சற்று முன்னால் ஒரு நடுத்தர வயதுடைய பெண் தோளில் மாட்டியிருந்த கைப்பையை ஒருவன் பிளேடு போட்டு அடியில் கிழித்து, உள்ளேயிருந்து ஒரு கவரில் இருந்த பணத்தை வெகு இலாவகமாக எடுத்துக் கொண்டிருந்தான்.. அந்தப் பெண் ஏதும் அறியாதவளாக அப்படியே கம்பியை பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள். நேருக்கு நேராக முதல் முறையாக இப்படி ஒரு திருட்டைக் கண்டவுடன் அதிர்ச்சியில் ஏய்.. என்று கத்திவிட்டாள். அடுத்த நொடி அவனுடைய கோபமான பார்வை தன்னை ஊடுறுவியது.. என்ன நினைத்தாளோ, சட்டென்று அவனை எட்டிப்பிடித்து விட்டாள், சத்தம் போட்டுக் கொண்டே..

பணம் திருட்டு கொடுத்த அந்தப் பெண்ணும் அதை உணர்ந்து கொண்டு சத்தம் போட ஆரம்பிக்க, பேருந்தில் அருகில் இருந்தவர்களும் கூச்சலிட இறுதியில் போலீஸ் ஸ்டேசன் நோக்கி பேருந்து செல்ல வேண்டியதாகிவிட்டது. அங்கு ச்மரசம் செய்யப்பட்டு அவனிடமிருந்த பணம் இருந்த கவரை போலீசார் வாங்கிக் கொடுத்த போது அந்தப் பெண் தான் 50000 ரூபாய் வைத்திருந்ததாகவும், வெறும் 4000 மட்டும் திருப்பிக் கொடுத்திருப்பதாகவும் சொல்லிக் கதறினாள். ஆனால் போலீசாரோ அவளை பொய் சொல்கிறாயா என்று மிரட்டிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண் தன் மகளின் திருமணத்திற்காக கையில் இருந்த நகையை விற்று பணம் பண்ணிக்கொண்டு வந்ததற்கான ஆதாரத்தை காட்டிக் கொண்டிருந்தாள். இந்தப்பிரச்சனை இழுத்துக்கொண்டு போனதால் வந்த வினைதான் இது.

இப்படியே பாதியில் விட்டுவர முடியாமல் அந்தப் பெண்ணிற்கு நியாயம் கிடைக்க வேண்டுமே என்று தனக்குத் தெரிந்த இலவச சட்ட வ்ல்லுநரையும் ஏற்பாடு செய்து கொடுத்தாள். இது எப்படி தன் வாழ்க்கைக்கு இடைஞ்சலாக முடியும் என்பதுதான் புரியாத புதிராக இருந்தது அவளுக்கு.

அடுத்த நாள் காலை எழுந்தவுடன் அவன் நேரிடையாக வந்து கேட்டான்., ”என்ன முடிவு செய்திருக்கிறாய்?” என்று....

என்ன முடிவு செய்ய வேண்டும் என்று புரியவில்லை. அவன் தன்மீது கொண்டிருக்கும் அபரிமிதமான அன்பும், தனக்கே உடமையான சொத்தை பத்திரமாக பாதுகாத்துவைத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வும்தான் தன்மீது இத்துனை கோபம் கொள்ளச் செய்கிறது என்பதை உணர்ந்தாலும், தன்னால் மேற்கொண்டு என்ன செய்ய முடியும் என்று யோசிக்க வேண்டியதாகவே இருந்தது... கார்த்திக் மட்டும் மிகவும் உறுதியாக இருந்தான். மேற்கொண்டு இது போன்று பிரச்சனைகள் இனி வராது என்று அவள் உறுதியளித்தால் மட்டுமே தன்னால் சேர்ந்து வாழமுடியும் என்பதில்...

சகானா எதுவுமே பேசாமல் துணிமணிகளை அடுக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து லேசாக அதிர்ச்சியடைந்தாலும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் பேசாமல் இருந்தான். அவள் தாய் வீட்டிற்குக் கிளம்புகிறாள் என்று தெரிந்தும் தடுக்காமல் மௌனமாக இருந்ததே அவனுடைய கோபம் குறையாததை தெரிவித்தது.

காலம்தான் இதற்கு தீர்ப்பு சொல்லக்கூடும்.. வீட்டிற்கு பெட்டியுடன் முகம் நிறைய கவலையுடன் வந்த மகளின் பெற்றோர் ஒன்றும் புரியாமல் தவித்துக் கொண்டிருக்க, கார்த்தி தன்னைப்புரிந்து கொண்டு விரைவில் வந்து ஏற்றுக் கொள்வான் என்று காத்துக்கொண்டிருக்கிறாள் சகானா..

நன்றி : திண்ணை வெளியீடு


கற்பித்தல் - கலீல் ஜிப்ரான்



உம்முடைய அறிவெனும் உதயமதில், முன்னமே அரை உறக்க நிலையில் இருப்பதையன்றி வேறொன்றும் உமக்கு எவரும் வெளியிடப்போவதில்லை.

ஆலய நிழலில் நடைபயிலும் அந்த ஆசிரியர், தம் மாணாக்கர்களுக்கு, ஓரளவிற்கு தம் நம்பிக்கை மற்றும் அன்பினாலும் வழங்குவாரேயன்றி, தம் ஆத்ம ஞானத்தினாலன்று.

உண்மையிலேயே அவர் மதிநுட்பமுடையவராயின், அவர்தம் ஆத்ம ஞானமெனும் வீட்டில் நீவிர் நுழைவதற்கு ஆணையிடமாட்டார். ஆயின், உம்மை உம் சுயமனமதின் நுழைவாயிலினுள் வழிநடத்துவார்.

அவர் வானியல் அறிஞராயின், விண்வெளி குறித்த தம்முடைய புரிதலை உம்மிடம் பகிரலாம். ஆயினும் அவர்தம் மன் உணர்வுகளை உமக்கு வழங்கமுடியாது.

அவர் இசைக்கலைஞராயின், அனைத்து அண்டவெளியிலுள்ள சந்தங்களையும் உம்மிடம் இசைக்கலாம். ஆயின் அந்தச் சந்தங்களைத் தடைசெய்பவைக்காக் செவியளிக்கவோ, அன்றி அதனை எதிரொலிக்கச் செய்யும் குரலையோ உமக்கு அளிக்கவும் இயலாது அவரால்.

அவர் எண்கள் அறிவியல் வல்லுநராயின், கனதி மற்றும் அளவைகள் குறித்த பகுதிகள் பற்றிப் பகிரலாமேயன்றி, அவ்விடத்திற்கு உம்மை நடாத்திச்செல்ல இயலாது அவரால்.

ஒரு மனிதனின் பார்வைக்காக அதன் இறகுகளை அடுத்த மனிதருக்கு கடனாக அளிக்காதிருப்பீராக.

நீவிர் ஒவ்வொருவரும் மெய்யறிவின்பாற் தனித்து நிற்பது போன்றே, ஒவ்வொருவரும் அவர்தம் தெய்வ ஞானம் மற்றும் அவர்தம் பூவுலகப் புரிதல்களிலும் கூட தனித்தே இருப்பீராக!


Teaching

Then said a teacher, "Speak to us of Teaching."

And he said:

No man can reveal to you aught but that which already lies half asleep in the dawning of our knowledge.

The teacher who walks in the shadow of the temple, among his followers, gives not of his wisdom but rather of his faith and his lovingness.

If he is indeed wise he does not bid you enter the house of wisdom, but rather leads you to the threshold of your own mind.

The astronomer may speak to you of his understanding of space, but he cannot give you his understanding.

The musician may sing to you of the rhythm which is in all space, but he cannot give you the ear which arrests the rhythm nor the voice that echoes it.

And he who is versed in the science of numbers can tell of the regions of weight and measure, but he cannot conduct you thither.

For the vision of one man lends not its wings to another man.

And even as each one of you stands alone in God's knowledge, so must each one of you be alone in his knowledge of God and in his understanding of the earth.

Khalil Gibran

காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...