Saturday, March 16, 2019

அன்பெனும் சிறைக்குள்




மகாகவி பாரதியின் இறுதி சொற்பொழிவு நிகழ்ந்த எங்கள் ஈரோடை மாநகர கருங்கல்பாளையம் நூலகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உலக புத்தக தினம் நிகழ்வில் சிறப்புரையாற்ற கலந்து கொண்டபோது நூலகத்திற்கு என்னுடைய சில நூல்களை காணிக்கையாகச் செலுத்தி வந்தேன். அதில் ஒரு சிறுகதைத் தொகுப்பை வாசித்து புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் ஒரு புலனக் குழுவில் அந்த நூலகத்தின் பொறுப்பாளர் அன்புத் தோழி சர்மிளா அவர்கள் மதிப்புரை வழங்கியிருக்கிறார்கள். 



அதனை பதிவேற்றமும் செய்து எனக்கு அனுப்பி மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளவருக்கு என் அன்பார்ந்த நன்றி. கிட்டத்தட்ட  120 சிறுகதைகள், 4 தொகுப்புகளாக வெளிவந்தன. சிறுகதை எழுதி வெகுநாட்கள் ஆகிவிட்டன என்பதையும் நினைவூட்டி மீண்டும் எழுதவும் தூண்டுகிறது இவருடைய உற்சாகமான வாழ்த்து.. மீண்டும் நன்றி தோழி. ஒரு 3 நிமிடம் தான்..  கேட்டுப்பாருங்களேன் ..

Thursday, March 14, 2019

நெஞ்சு பொறுக்குதில்லையே!





அண்ணா நம்பித்தானே வந்தேன் ..   ஏன் இப்படி .... 


ஏன் இந்த அலறல்? படித்த பெண்கள், பணியில் உள்ள பெண்கள், மருத்துவர்கள் என்று பல தரப்பட்ட பெண்களும் எப்படி இந்தக் கயவர்களிடம் சிக்குகிறார்கள்? இந்தக் கயவர்களின் இலக்கு என்ன? சிந்தியுங்கள் தோழமைகளே! பொள்ளாச்சி சம்பவம் ஒரு மாதிரிதான். இது போன்று எல்லா இடங்களிலும்தான் நடந்து கொண்டிருக்கின்றன. ஏன் வெளியில் வருவதில்லை? இந்தக் கயவர்களின் தேர்வே இவர்களின் பலம். சமூகக் கட்டுப்பாடும், மான, அவமானத்திற்கு அஞ்சி நடுங்கும் பெண்களையே குறிவைத்து வலை விரிப்பது. தனக்கு நேரும் கொடுமை வெளியில் தெரிந்தால் குடும்பத்திற்கு மானக்கேடு, பெற்றோர் எப்படி இதை எடுத்துக்கொள்வார்களோ என்ற அச்சம் என்று எதையும் வெளியில் சொல்ல மாட்டார்கள் என்பதை நன்றாக அறிந்துகொண்டு திட்டமிடுகிறார்கள். பழமைவாதம், நாகரிகம் என்ற இரு வேறு எல்லைகளின் இடையிலான மெல்லிய புள்ளியில் உழலும் பரிதாபமான சீவன்கள் இவர்கள். மெல்ல மெல்ல, பல நேரங்களில் பெற்றோருடன் போராடி, கல்வி கற்று சாதிக்க வேண்டும் என்ற பேரார்வத்துடன் வெளியில் வரும் இவர்களை பசப்பு வார்த்தைகளைக் கூறி, தேவையில்லாத, அளவிற்கு அதிகமான புகழ்ச்சிகள், வர்ணனைகள் என்று அவர்களை ஒரு போதை நிலைக்கு அடிமையாக்கித் தமது வலையில் சிக்க வைக்கிறார்கள். இதற்குப்பின் ஒரு பெரிய நெட் ஒர்க்கே வேலை செய்யலாம். பல காரணங்களுக்காகத் திட்டமிட்டு செயல்படும் இந்த கயவாளிக் கூட்டம் தங்கள் குடும்பத்தை மட்டும் பாதுகாப்பாக வைத்துக்கொள்வார்கள் போலும். ஏதாவது பணமுடிப்போ, விருதோ, பாராட்டுப் பத்திரமோ வாங்கிக்கொண்டு இதற்கு ஒத்து ஊதும் பிரபலங்களும், இதன் பின் விளைவுகள் பற்றியோ, நடக்கும் கொடுமைகள் பற்றியோ எதையும் கண்டுகொள்வதில்லை. தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால்தானே தெரியும் வேதனை..  இந்தப் பிரபலங்களின் சொற்களை வேத வாக்காக நம்பும் சிலரும் கண்ணை மூடிக்கொண்டு மாட்டிக்கொள்கிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் அவர்கள் சிந்திப்பார்களா என்றே தெரியவில்லை. இவர்களே இப்படியென்றால் கைக்கூலிகளாகச் செயல்படுபவர்களைப் பற்றி கேட்கவா வேண்டும். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்று கொண்டாடிவிட மாட்டார்களா? 


இதற்கெல்லாம் தீர்வு என்ன? பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்கு நல்ல விசயங்களை சொல்லிக்கொடுக்க நேரம் ஒதுக்குங்கள். தெய்வம் நின்று கொல்லும் என்று காத்திருக்கும் காலத்தில் கயவர்கள் வேகமாக அழிவை ஏற்படுத்திவிடுவார்கள் என்பதைப் புரிய வைத்துவிடுங்கள். தற்காப்புக் கலையைக் கற்றுக்கொடுங்கள். பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வைக் கொண்டிருங்கள். பெண் குழந்தைகளுக்கு கட்டாயம் துணிவையும், நம்பிக்கையையும் ஊட்டி வளர்க்கத் தயங்காதீர்கள். தவறு நடப்பதற்கு முன் தற்காத்துக் கொள்ளவும்,  அதற்கும் மீறி தவறு நடந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும், அதிலிருந்து எப்படி மீண்டு வரவேண்டும், துணிவே துணையாகக் கொண்டு போராடவும் குழந்தைகளுக்குக் கட்டாயம் அறிவுறுத்துங்கள். குழந்தைகளை முடங்கிப்போக விடவும் கூடாது என்பதிலும் தெளிவாக இருங்கள்! எந்தப் புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்று தெரியாத நிலையில் எவரிடமும் எல்லையின்றி பழகுவதைத் தவிர்த்து விடுங்கள். பெரிய மனிதர்கள் என்று நம்பி அனுமதிக்கப்படுபவர்கள், பெற்றோர்களிடம் பழகுவதுகூட குடும்பத்தில் உள்ள இளம் பெண்களைக் குறிவைத்தும் கூட இருக்கலாம் என்பதை உணருங்கள். எச்சரிக்கையாக இருங்க வேண்டிய காலகட்டம் என்பதை உணருங்கள்.

Monday, March 4, 2019

ஓம் நமச்சிவாய ஓம்!







வரம்வேண்டும் நவசக்தி நின் வரம்வேண்டும் 
மனம் வேண்டும் அன்னையே நதி போலோடவே 
நாளும் பகடையாயுருட்டும் விதியின் பிடிவிலகிடவே
 சிதறும் சிந்தையாவும் சீர்  பெற வேண்டும் தாயே!
கபடமில்லா  உடுக்கையாய் நேயமும் வேண்டுமே 
தீதென்றறியாதோர் திண்ணம் தீயாயொளிரும் திட்பமும் 
பனிபோல் விலகியோட வேண்டும் அம்மையே!
நன்னெறியால் நயந்த நேசம் கூடவும் வேண்டும் 
தன்னைத்தான் உணரும் தவமும் சித்திக்க வேண்டுமே 
நானெனும் அகந்தை அழிய நீயருளல் வேண்டும்! 
சித்தமெலாம் சிவசக்தியே என்றுணரும் நிலையருளலும் வேண்டுமே!
பண்ணின் இசையாய் விண்ணின் மேகமாய் கண்ணின் 
காட்சியாய் உதிக்கும் நாயகியே! சகலமும் நீயே!
உவமையில்லா பேரொளியே! அத்தனோடு ஆடும் ஆனந்தசோதியே!
மனத்தகத்து அழுக்கறுத்து ஆட்கொளும் ஆதிசக்தியே!
அம்மையுன் பாதம்  காணும் காலமெதோ! ஓம் நமச்சிவாய ஓம்!



Sunday, February 24, 2019




அன்பு நண்பர்களே,

என்றென்றும் ஆதரவு அளிக்கும் பழனியப்பா பதிப்பகம் இந்த முறையும் அற்புதமான இந்த ஆய்வு நூலை அருமையாக வெளியிட்டுள்ளார்கள். பேரா. நாகராசன் ஐயாவுடன் இணைந்து எழுதியுள்ள இந்த நூலின் 360 பக்கங்களும் தமிழர்களின் தொன்மை வரலாற்றின் சுவையானக் காட்சிகளைப் படம் பிடித்துக் காட்டியுள்ளது என்பதில் மிகவும் மகிழ்வாக உள்ளது.. இறையருளால் அனைத்தும் சாத்தியமானதில் நண்பர்களின் நல்வாழ்த்துகள்ின் பங்களிப்பும் உண்டு!

பேரன்பும்,பெருமதிப்பிற்கும் உரிய தமிழறிஞர்கள் பழ.நெடுமாறன் ஐயா அவர்களின் வாழ்த்துரையும், மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா அவர்களின் அருமையான அணிந்துரையும் இந்நூலுக்கு மகுடம் சூட்டியிருப்பதில் உள்ளம் நெகிழ்கிறோம். நன்றி என்பது வெறும் வார்த்தைகளாகி விடக்கூடும். ஊக்கமும், உற்சாகமும் கொடுக்கவல்ல உன்னத வரம் அவ்வெழுத்துகள் என்பதில் மன நிறைவில் பூரிப்படைந்திருக்கிறோம். அன்புச் சகோதரர் ஓவியர் ஜீவா அவர்களின் அழகான அட்டைப்பட வடிவமைப்பும் பெருமை சேர்க்கிறது. அவருக்கும் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.

Tuesday, January 15, 2019

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்




ஆய்வுக்கட்டுரை எழுதுவதற்கான அடிப்படைக் கருத்துகள்





1. உங்களுக்கு  ஆர்வமுள்ள ஒரு பொதுவான தலைப்பைத் தேர்ந்தெடுங்கள்.
2. தேர்ந்தெடுத்த தலைப்பைப் பற்றிய தகவல்களைப் பெற உதவும் முக்கிய வார்த்தைகளைப் பட்டியலிடுங்கள்.
3.  கலைக்களஞ்சியம் அல்லது  நீங்கள் தேர்ந்தெடுத்த தலைப்பிற்கு ஆதாரமான வேறு குறிப்புகளை தொகுத்துக்கொள்ளுங்கள் .
4. தகவலுக்காக நீங்கள் பயன்படுத்தும் ஆதாரங்களுக்கான  மூலத்தொகுப்பை உருவாக்கவும்.
5. பொது கண்ணோட்டத்தைப் பயன்படுத்தி, உங்கள் தலைப்பிற்கான  கருத்துகளைப் பற்றிய கூர்ந்த கவனம் செலுத்த ஆரம்பியுங்கள்.
6. உங்கள் தலைப்பு பற்றிய நோக்கம்  குறித்த ஒரு அறிக்கையை எழுதுக.
7. தேர்ந்தெடுக்கப்பட்ட  தலைப்பு பற்றிய இடைவிடாத கேள்விகள் உங்கள் மூளையில் மழையெனப் பொழியவேண்டும்.
8. உங்கள்  தலைப்பு தொடர்பான ஏனைய மற்ற தலைப்புகளையும் தொகுக்கவும்.
9. அந்த தலைப்புகள் தொடர்பான உங்கள் கேள்விகள் ஏதும் சேர்க்க முடிந்தால் சேர்க்கவும்.
10. புதிதாக கவனம் பெறும் தலைப்புகள் மற்றும் கேள்விகளிலிருந்து முக்கிய வார்த்தைகளை எடுத்து பட்டியலிடவும்.
11. உங்கள் வினாக்களுக்கு விடையளிக்க ஏதுவான ஆதாரங்களின் பட்டியல் ஒன்றை உருவாக்கவும். அதில் மிகச் சிறந்தவை என்பதையும் அடையாளம் கண்டு குறிப்பெடுங்கள்.
12. உங்கள் தலைப்பிற்கான மூல ஆதாரங்களை, நூலகம், கணினி போன்றவற்றில் தேடிக் கண்டடையுங்கள்.  நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொன்றிற்குமான மூல அட்டை ஒன்றையும் உருவாக்கவும்.
13. குறிப்பு அட்டைகளைத் தயாரிக்கத் தொடங்குங்கள்.  உங்கள் மூளையைக் கசக்கி கேள்விகளைத் தெரிவுசெய்து உங்கள் குறிப்பு அட்டைகளுக்குப் பயன்படுத்துங்கள்.
14. நோக்கத்திற்கான உங்கள் அறிக்கையை வரைவு அறிக்கையில் மாற்றிக்கொள்ளுங்கள்.
15. உங்கள் தலைப்புகளின் சிறு குறிப்பு பட்டியலை உருவாக்குங்கள். 
16. தேவைப்பட்டால் உங்கள் ஆய்வு அறிக்கையை மீளாய்வு செய்யலாம்.
17. உங்களுடைய குறிப்பிலிருந்து உடற்பகுதியை எடுத்து எழுதுங்கள்.
18. துணை நூற்பட்டியல்களுடன் தேவையான தகவல்களை மேற்கோள் காட்டுங்கள்.
உங்கள் தகவல் எங்கிருந்து வந்தது என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துவது வழக்கம்.
உங்கள் ஆராய்ச்சித் திட்டத்தில் மற்றொரு ஆதாரத்திலிருந்து எடுத்து நீங்கள் பயன்படுத்தினால், அதைப் பயன்படுத்தியபின், அது எங்கிருந்து வந்தது என்பதையும்  அறிந்திருக்க வேண்டும் என்பதோடு அதை அடிக்குறிப்பிடவும் வேண்டும்.
19. உங்களுடைய முன்னுரை மற்றும் முடிவுரையையும் எழுதுங்கள்.
20. உங்கள் படைப்புகளுக்கான  துணைநூற்பட்டியலை இணையுங்கள்.
21. தலைப்புப் பக்கத்தை உருவாக்குங்கள்.
22. உங்கள் படைப்பை முதலில் நீங்களே மதிப்பீடு செய்யுங்கள்.
23. குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் படைப்பை முடிக்கப்பாருங்கள்.
http://www.crlsresearchguide.org/

காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...