Wednesday, April 18, 2012

வெண்ணிலவில் ஒரு கருமுகில்!(33)

மாறனின் அம்மா, மங்களம் சாமி கும்பிட்டுவிட்டு கோவிலிலிருந்து வெளியே வந்து கொண்டிருக்கிறார். ஒத்தையடிப் பாதை வழியாக நடந்து வந்தே ஆக வேண்டும். திடீரென்று சாலையோர தோட்டத்திலிருந்து கருநாகம் ஒன்று சீறிப்பாய்ந்து மளமளவென்று வெளியே வந்துவிட்டது. மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தவர்கள் காதில் புஸ்…… புஸ் என்று ஒரு சத்தம் வித்தியாசமாக வர இருவரும் சட்டென்று திரும்பிப் பார்க்க, அங்கு கருநாகம் ஒன்று மூன்று சுற்று போட்டு தலையை உயர்த்திக் கொண்டு படம் எடுத்து ஆடிக்கொண்டிருந்தது. பகீர் என்றது இருவருக்கும். அந்த நாகத்தின் பார்வை முழுவதும் மங்களத்தின் மீதே இருந்தது. சட்டென்று இருவரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஆட்டத்தை நிறுத்திவிட்டு சரசரவென ஓடத்துவங்கிய அந்த விசநாகம், மங்களம் இருந்த திசை நோக்கி ஓடிவர, செய்வதறியாது திகைத்த மங்களம் ஓட எத்தனிக்க அதுவும் பின்னாலேயே துரத்திக் கொண்டு ஓட, ராமச்சந்திரனோ, ஒன்றுமே புரியாமல் தானும், மங்களா, மங்களா.. என்று கத்திக் கொண்டே பின்னால் ஓட, தலைசுற்றி, கண்கள் கட்டி மயங்கும் நிலையில், மங்களம் உடுத்தியிருந்த பச்சை வண்ண பட்டுப் புடவை மட்டும் லேசாக தெரிய…

”மங்களா.. மங்களா.. பாத்து… பாத்துப்போடீ…….. மங்களா.. ஐயோ மங்களா…. “

ராமச்சந்திரன் போட்ட சத்தத்தில் அசந்து உறங்கிக் கொண்டிருந்த மங்களம் எழுந்து, வியர்த்துக் கொட்டி உடகார்ந்திருந்த கணவனைக் கண்டவுடன், என்னமோ ஏதோவென்று நடுங்கிப்போனாள். தண்ணீர் எடுத்துக் கொடுத்து சற்று ஆசுவாசப்படுத்தி காரணம் கேட்டபோதுதான் தெரிந்தது, ஏதோ கெட்ட கனவு கண்டு பயந்து போயிருப்பது. மணி நான்காகிவிட்டது, இன்னும் ஒரு மணி நேரத்தில் பால்காரரே வந்துவிடுவார். கணவரிடம், உடனே அவசரமாக எழுந்திருக்க வேண்டாம், கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு மெதுவாக எழுந்தால் போதும் என்று சொல்லிவிட்டு எழுந்து போய் பல் துலக்கி, முகம் கழுவி வந்தவள், உட்கார்ந்து கொண்டே இருந்த கணவரைக் கண்டு,

“என்னன்னா… என்ன ஆச்சு? இன்னும் உட்கார்ந்துண்டே இருக்கேள்.. சித்தநாழி ரெஸ்ட் எடுங்கோண்ணா”

“மங்களா, நேக்கு என்னமோ மனசே சரியில்லடி.. இது ஏதோ துர்சகுனமா தெரியறது. மனசுக்கு சங்கடமா இருக்கு”

:”அதெல்லாம் ஒன்னும் ஆகாதுண்ணா.. பயப்படாதேள். மாறனோட கல்யாணம் நல்லபடியா முடிஞ்சா எல்லாம் சரியாயிடும். அந்த குழப்பம்தான் உங்களை பாடாய்ப் படுத்தறது. நம்ம குலதெய்வம் கோவில்ல நல்லபடியாத்தானே வாக்கானது நேத்து போனபோது ”

“ம்ம்ம்.. முதன்முதல்ல நாம மாறனோட கல்யாண விசயமா கோவிலுக்குப் போனபோது, தேங்காய் அழுகி போயிடுத்தே.. மறந்துட்டியா.. இப்ப இப்படி ஒரு கனவு வேற..”

“அதெல்லாம் ஒன்னும் ஆகாதுண்ணா.. மனதை குழப்பிக்காதேள். முதலடி எடுத்து வச்சாச்சு. இனி எல்லாம் தானா நடக்கும்”

வாசலில் பால்காரர் மணி அடிக்க மங்களம் எழுந்து போய்விட்டாலும், ராமச்சந்திரன் தனக்குள்ளேயே ஏதோ பேசிக் கொண்டார்.. அத்துனை குழப்பம் அவர் மனதில் இருந்தது.. நேற்றுதான் அவந்திகாவின் வீட்டில் சென்று பேசிவிட்டு, ஜோசியரிடம் சென்று நிச்சயதார்த்தம் மற்றும் மற்ற விசயங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிட்டு வந்தார்கள். இன்றுதான் மாறனைக் கூப்பிட்டு விசயத்தைச் சொல்லி லீவிற்கு அப்ளை பண்ணச் சொல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தால் இப்படி ஒரு கனவு.. என்னமோ ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டு படுக்கையைவிட்டு எழுந்தார்.

மாறனின் போன் வரும்போது எதையும் வெளிக்காட்டக்கூடாது என்று முடிவெடுத்ததால், உற்சாகத்தை சிரமப்பட்டு வரவழைத்துக் கொண்டார். இன்னும் 40 நாட்கள்தான் இருந்தது திருமணத்திற்கு. நிச்சயதார்த்தம் முடிந்து ஒரே வாரத்தில் திருமண தேதியும் குறித்தாகிவிட்டது. அப்பொழுதுதான் இரண்டு பேரும் வந்து திருமணம் முடித்துவிட்டு கிளம்ப முடியும். இனி தேவையில்லாமல் எதையும் யோசித்து குழப்பிக் கொள்ளக் கூடாது என்ற முடிவுடன் முகத்திலும் உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு காலைக்கடன்களை முடித்துக்கொண்டு, மகனின் அழைப்பிற்காகக் காத்திருந்தார். மனைவி மணக்க மணக்க பில்டர் காபியுடன் வந்தவள் கணவனின் மாற்றம் கண்டு மனநிம்மதியும் கொண்டாள். சில விசயங்களை மனதில் தேவையில்லாமல் சுமந்து கொண்டிருப்பதுதான் வேதனையே… நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போனால் வேலையும் ஒழுங்காக நடக்கும், மனப்பாரமும் குறையும். வாழ்க்கை கொடுத்த அனுபவப்பாடம் அருமையாக வேலை செய்தது.

அடுத்தடுத்து காரியங்கள் மளமளவென்று நடக்கத்துவங்கின. சிலபேர்களின் ராசி ஒரு காரியத்தைத் துவங்கி வைத்தால் அது மளமளவென எல்லையைத் தொட்டுவிடும். அப்படி ஒரு ராசி ரம்யாவிற்கும்! தந்தை இந்த நல்ல விசயத்தை தன்னிடம் சொன்னவுடன், மாறன் செய்த முதல் வேலை ரம்யாவிற்கு போன் செய்து ஆனந்தக் கண்ணீருடன் இந்த நல்ல செய்தியை பகிர்ந்து கொண்டதுதான். ரம்யாவிற்கும் மிகுந்த மனமகிழ்ச்சி. நல்ல நட்பின் உன்னதம் அங்கு பளிச்சிட்டது.

அவந்திகாவும், மாறனும் அன்று இரவு முழுவதும் ஆரம்பத்திலிருந்து அனைத்து கதைகளையும் அலசிக் கொண்டு பொழுது விடிந்தது கூட தெரியாமல்,அலாரம் அடித்த சத்தத்தில் சுய நினைவிற்கு வந்து, அதற்குப் பிறகு அவசர அவசரமாக காலைக்கடன்களை முடித்து பணிக்குத் தயாரானார்கள்..எவ்வளவு பெரிய போராட்டத்திற்குப் பிறகு இந்தக் கிளிகள் உல்லாசமாகப் பறக்கப்போகிறது அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட ஓர் இரவு போதாதே. இருப்பினும் கடமை அழைக்க தம் வழியில் இருவரும் செல்ல வேண்டியதாகி விட்டது. வழியெல்லாம் மாறனின் மனஓட்டத்திற்கு ஏற்றவாறு நீ பாதி… நான் பாதி கண்ணே என்ற பாடல் ஒலித்து மகிழ்ச்சியைக் கூட்டியது.. அடுத்து இருவரும் அலுவலகத்தில் விடுமுறைக்கு விண்ணப்பிக்கவும், ஊருக்குச்செல்லத் தயாராகவும் நாட்கள் நிமிடமாகக் கரைந்து கொண்டிருந்தது.

திருமண ஏற்பாடுகள் வெகு விரைவாக நடந்து கொண்டிருந்தது. அவந்திகாவின் வீட்டிலும் மிக்க மகிழ்ச்சியுடன் மகளின் திருமண ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். ராமச்சந்திரன் மட்டும் மனதின் ஓரத்தில் ஒரு சிறு உறுத்தலுடனேயே வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தார். ஆயிற்று மகன் வரப்போகும் நாளும் நெருங்கிவிட்டது. உற்சாகத்தில் மனம் துள்ளினாலும் கடவுள் நம்பிக்கை முன் எப்போதும்விட மிக அதிகமாகவே இருந்தது.

அனுவின் திருமணத்திற்கான முயற்சியும் நல்லபடியாக முடிந்தது மிகுந்த மன நிறைவை ஏற்படுத்த , தன் சகோதரியின் மகிழ்ச்சியிலும் பங்கு கொள்ள முடிந்தது. மாறனின் திருமணத்திற்கு ஒரு மாதம் தள்ளிதான் அனுவின் திருமணம் என்பதால் அவர்களும், மூத்த மகனின் குடும்பத்தாரும் வந்து, வீடே கலகலப்பிற்கு பஞ்சமில்லாமல் இருந்தது.

மாறனும், அவந்திகாவும் ஒன்றாகவே கிளம்புவதற்கான பயண ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர். மகிழ்ச்சியின் எல்லையில் மிதந்து கொண்டிருந்தனர் என்றுதான் கூற வேண்டும். ரம்யாவிடம் அதிகமாக பேசும் வாய்ப்புகூட குறைந்து போனது மாறனுக்கு. அன்று எப்படியும் கொஞ்ச நேரமாவது அவளிடம் பேச வேண்டும் என்று அதற்கான சந்தர்ப்பம் பார்த்திருந்தான். அவளே மாறனைத் தேடிக்கொண்டு ஓடிவந்தாள்..

“மாறன்.. ரிஷி மெயில் செய்திருக்கான்.. ஒரு ஹேப்பி நியூஸ்ப்பா… “

“ ஹேய்.. உன்னைத்தான் தேடிக்கிட்டிருந்தேன். எங்க போன… “?

“இல்லப்பா.. காலையில வர அவசரத்தில ஒன்னும் சாப்பிடாம வந்துட்டேன். ஒரே பசி, அதான் காண்டீன் பக்கம் போயிட்டு வந்தேன்”

“சரி. ’சொல்லு என்ன அவ்வளவு அவ்சரமா வந்த.”

“ம்ம்.. ஆமாம் மாறன். வந்தனாவிற்கு, இப்ப புதிதா கொடுத்த ட்ரீட்மெண்ட் நல்லா ஒத்துக்கிச்சாம். இனி அவ உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையாம். நான் கும்பிட்ட தெய்வம் கைவிடவில்லை. வந்தனா கட்டாயம் பிழைக்க வேண்டும். நல்லவர்கள் வாழ வேண்டும்.”

அதற்குமேல் அவளால் பேச முடியவில்லை.. கண்கள் கலங்கி தொண்டை கம்மி, மௌன்மானாள். ரம்யாவிற்கு எவ்வளவு நல்ல மனது என்று ஆச்சரியமாக இருந்தது மாறனுக்கு. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமே என்ற கவலையும் உடன் வந்து வாட்டியது. தன் திருமணம் முடிந்தவுடன் முதல் வேலையாக ரம்யாவிற்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் முயற்சியில் இறங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். ரம்யாவின் பெற்றோரும் பலமுறை தன்னிடம் கூடச் சொல்லி புலம்பிவிட்டார்கள். அவர்களையும் திருப்திப்படுத்த வேண்டும். அத்ற்கேற்றார்போல் முழுமூச்சுடன் இறங்கி செயல்பட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

நிச்சயதார்த்தத்திற்கு நாள் நெருங்கிவிட்டதால் மாறனும்,அவந்திகாவும் ரொம்பவே மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள். இருவரும் சேர்ந்து ஊருக்குக் கிளம்பியாகிவிட்டது. ஒன்றாகப் பயணம் செய்யப்போகிற ஆனந்தம் வேறு, பலவிதமான கற்பனைகளுடன் மணித்துளிகள் நகர்ந்து கொண்டிருந்தன.

அடுத்த இதழில் முடியும்


நன்றி : வல்லமை

Tuesday, April 17, 2012

பாதை


பாதை தெளிவாகத்தான் இருக்கிறது.
பயணம்தான் கையகப்படவில்லை!

பாதையும் பயணமும் நேர்ப்பட்டாலும்
கோழையாய் மனம் மறுதலிக்கிறது.

வெறுமையாய் கிடக்கும் பாதையாயினும்
பொறுமையாய் காத்துக்கிடக்கிறது காலம்.

வெறுமையும் பொறுமையும் இருந்தாலும்
வறுமையும் சோகமுமாய் கழியுதுகாலம்.

முள்ளாய் கிடக்கும் மரமும் பூத்துக்குலுங்கும்
கல்லாய் கிடக்கும் பாதையும் பூவாய்நிறையும்

முள்ளும் கல்லும் பக்குவமாய் ஆக்கினாலும்
சுயமும் கனமும் இழந்தே கழியுதுகாலம்

நம்பிக்கை ஒளிவீசும் வான்மேகம்
தம்கைநம்பி வாழும் குதூகலம்

பாதையும் பாதையும் இணையும் காலம்
வான்மேகமாய் பொழியும் ஆனந்தகீதம்.


பி.கு. உப்புமடச்சந்தி பதிவர் ,அருமைத் தோழி ஹேமாவின் கவிதைப் போட்டிக்காக எழுதுயது. நன்றி ஹேமா.


Sunday, April 15, 2012

அன்பெனும் தோணி.......




2012ல் உலகம் அழிந்துவிடும் என்கிறார்களே.. இது உண்மையா அம்மா? என்று வினிதா என்கிற வினு கேட்டது அவள் அம்மாவிற்கு ஆச்சரியமாக இருந்தது.

“இது என்ன கேள்வி வினு. உன் எண்ண்ம் ஏன் இப்போது இதில் போகிறது...? “

“இல்லமமா, புவி வெப்பமயமாதலும் இதற்கொரு காரணம் என்று படித்தேன்.. அதான்”

”அதிருக்கட்டும், இப்ப இதெல்லாம் பேசற காலமா வினு, உனக்கே இது நியாயமா இருக்கா...”

வினுவின் அம்மா கோமதிக்கு பெரும் கவலையாகி விட்டது. இருக்காதா பின்னே.... திருமணம் ஆகி 3 நாட்களே ஆன ஒரு புது மணப்பெண், அதுவும் அன்றுதான் முதல் இரவு காணப்போகும் ஒரு இளம்பெண்! ஒவ்வொரு பெண்ணும் பலவிதமான கற்பனைகளும், கனவுகளும் சுமந்து கொண்டு அரை மயக்கத்தில் அந்தரத்தில் மிதந்து கொண்டிருக்கும் பருவமல்லவா அது? தான் அதே பருவத்தில் மதிமயங்கி செய்த ஒரு காரியத்தை இன்றுவரை உறவினர்கள் கிண்டல் செய்து பேசிக்கொண்டுதானே இருக்கிறார்கள். பின்ன, டேப் ரிக்கார்டரில் தன் புதுக்கணவருக்கு மிக விருப்பமான ஒரு டூயட் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, அவரோ ஓரக்கண்ணால் தன்னை விழுங்கப் பார்க்க, நாணமும், பரவசமும் ஒருங்கே பின்னலிட, என்ன செய்கிறோம் என்பதே அறியாமல், வளைந்து, நெளிந்து சுவரோரம் நின்று கொண்டிருந்தவள், அலைபாயும் கைகளோ, தன்னிச்சையாக அந்த டேப் ரிக்கார்டரில் சொருகி இருந்த ஒயரை இழுத்து.... அருகில் இருக்கும் கணவருக்கும் அதே நிலை. சுற்றி என்ன நடக்கிறது என்பதே புரியாமல் வைத்த கண் வாங்காமல் புது மனைவியையே பார்த்துக் கொண்டிருக்க..... வீட்டில் இருக்கும் மற்ற உறவினர்களோ இந்த புதுமணத் தம்பதியினரின் நிலை கண்டு ஊடே புகுந்து கலைக்கவும் விரும்பாமல், சூழலின் அபாயமும் கண்டு ஒதுங்கவும் முடியாமல் தவிக்க.... அடுத்த கட்டமாக அந்த ஒயரை எடுத்து அப்படியே வாயில் வைக்க கைகள் எத்தனிக்க இதற்கும் மேல் பொறுமை காக்க முடியாத என் மாமா ஓடி வந்து,

“ஏய்....ஏய்.. கோமதி, என்னம்மா பன்ற.... என்னது இது”
என்று போட்ட சத்தத்தில் இருவரும் சுய நினைவிற்கு திரும்ப, வீட்டில் ஒரே சிரிப்பு மழைதான். இன்றும் அவ்வப்போது இந்த சம்பவத்தைச் சொல்லி சிரிப்பதுண்டு.

ஆனால் இந்த பெண் என்னடாவென்றால் இப்படி ஒரு சூழலில் உலகம் அழியப்போறதைப் பற்றி பேசுகிறாள் என்றால், இவள் மனதில் எத்துனை அச்சமும், குழப்பமும் இருக்கும். இருக்கத்தானே செய்கிறது... இதுதானே பிரச்சனையே. இல்லையென்றால் 15 நாட்களில் மேட்ரிமோனியலில் பார்த்து தேர்ந்தெடுத்து ஒரு மாப்பிள்ளைக்கு, ஜோசியம், ஜாதகம் என்று காரணம் காட்டி திருமணத்தை இவ்வளவு அவசரமாக செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறதே. ஆண்டவன் அருளால் இனி நடப்பதெல்லாம் நல்லதாக நடக்க வேண்டும்...எத்துனை போராட்டங்கள், எத்துனை ஜகதலப்பிரதாபங்கள் செய்திருக்கிறோம் இந்த திருமணம் முடிப்பதற்குள். இவள் என்னடாவென்றால், அத்தனையும் வீணாக்கிவிடுவாள் போலிருக்கிறதே, கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அவளை சமாதானப்படுத்தினாலும், அன்று இரவு எந்த பிரச்சனையும் இல்லாமல் மகளின் முதல் இரவு நல்லபடியாக நடக்க வேண்டுமே என்ற பேரச்சம் கொண்டு வந்துவிட்டது மகளின் போக்கு!

திருமணம் முடிந்து மூன்று நாட்கள் ஆகியும் இன்றும் மாப்பிள்ளை வீட்டில் உறவினர் கூட்டம் குறைந்தபாடில்லை. ஒரே விருந்தும், கும்மாளமுமாக,திருமண வீடென்றால் எப்படி இருக்க வேண்டுமோ அந்த இலக்கணம் சற்றும் மாறாமல் அப்படியே இருந்தது. ஆனால் வினுவின் அம்மா,அப்பா மற்றும் தம்பியின் முகங்களில் மட்டும் ஏதோ கிலி பிடித்தது போன்று இருந்ததை ஒருவரும் நல்ல வேளையாக தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. புது இடம் என்பதால் சங்கடமாக இருக்கும் போல என்று நினைத்துக் கொண்டார்கள். இரவு விசேசத்திற்குத் தயாரானார்கள். குழந்தைகளையெல்லாம் தூஙகச் சொல்லி ஒரு அறையில் தாத்தா பாட்டியுடன் செட்டில் செய்துவிட்டு, சோபன அறையை அலங்காரம் செய்ய ஆரம்பித்தார்கள். கோமதியும், கணவரும், தாங்கள் செய்ய வேண்டிய முறைக்கு சற்றும் குறைவில்லாமல் நிறைவாக அனைத்துச் சீர்களும் செய்தாலும், ஏதோ குறைபாடு இருப்பது போலவே ஒரு தோற்றம் இருந்து கொண்டிருந்தது அவர்களுக்கு. இதெல்லாம் மனப்பிரமைதான் என்று சமாதானப்படுத்திக் கொண்டாலும், அடுத்த வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது.

கோமதி மகளை கூட்டிச்சென்று தனி அறையில் உட்கார வைத்து பல அறிவுரைகள் சொல்லிக் கொண்டிருந்தாள். திருமணம் முடிந்த இந்த மூன்று நாளும் மகள் கண்ணயரவே இல்லாதலால் தானும் உறக்கம் தவிர்த்தலால் தலைவலி லேசாக எட்டிப் பார்த்தது. அவளைத் தூங்கச் சொல்லும் தைரியமும் வரவில்லை கோமதிக்கு. விடியவிடிய விளக்கு எரிந்து கொண்டே இருந்தது இவர்கள அறையில், இந்த மூன்று நாட்களாக. இன்று மாப்பிள்ளையுடன் சென்று உறங்க வேண்டுமே என்ற கவலை மிக அதிகமாகிவிட்டது. சொல்வதற்கெல்லாம் மிகவும் பவ்யமாக தலையாட்டிக் கொண்டிருந்த மகளின் மிக பயந்த சுபாவம் கண்டு பரிதாபமாக இருந்தது.

படபடவென கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. மாப்பிள்ளையின் சகோதரி, திருமணம் ஆகி ஆறு மாதங்கள்தான் ஆகிறது அவளுக்கு. இன்னும் அந்த புதுப்பெண் நாணம் போகவில்லை. அண்ணி அம்மா உங்களை வரச்சொன்னாங்க என்றாள். கோமதியும் மகளை கிளம்பும்படி சாடை செய்தாள். தலை குனிந்தவாறு தயங்கித் தயங்கி மாமியார் இருக்கும் அறையின் முன் சென்று நின்றாள்.

”வாம்மா வினு ஏன் இன்னும் பழகமாட்டேன் என்கிறாய். ரூமிற்குள்ளேயே அடைந்து கிடக்கிறாயே, வெளியே வந்து கலகலப்பாக எல்லோரிடமும் பேசக்கூடாதா?” என்றார்.

ஒன்றும் பேசாமல் தலை குனிந்தவாறு நின்றிருந்த மருமகளை, மிக அடக்கமான பெண் என்று நினைத்துக் கொண்டு, தன் மகளைக் கூப்பிட்டு, அண்ணியையும், அவர்கள் குடும்பத்தாரையும் முதலில் சாப்பிட வைத்துவிட்டு, வினுவை அலங்காரம் செய்து ரெடி பண்ணி, கோவிலுக்கு போய் வரச் சொன்னார். இரவு கோவிலில் அர்த்தசாம பூசையில் கலந்து கொண்டு, சுவாமிக்கு பொன்னூசல் பாடிவிட்டு, மாப்பிள்ளை சுவாமியின் பல்லக்கு தூக்கி, கோவில் சுற்றிவந்து பூசை முடிந்தவுடன் வீடு வந்து பின்புதான் முதலிரவு அறைக்கு அனுப்புவார்கள். ஒரு வார்த்தைக் கூட பேசாமல் தலை கவிழ்ந்த வண்ணம், சிவ்ந்த கன்னமும், ரோசா இதழுமாக அவள் அழகு தன்னை சுண்டியிழுக்க, பார்வையாலேயே தன் அன்பு மனைவியைத் தின்று கொண்டிருந்தான் மாப்பிள்ளை விதுரன். எல்லாம் அடங்கி, அந்த இனிய பொழுதும் வந்தது. மணப்பெண்ணை அலங்காரம் செய்து, அழகு தேவதையாக அறையில் அனுப்ப தயாரானார்கள். சம்பிரதாயமாக புத்தி சொல்ல வேண்டுமே என பெரியவர்கள் சிலர் வந்து கூச்சமில்லாமல் வெளிப்படையாக பேச ஆரம்பிக்க, மாப்பிள்ளையின் தங்கை அவர்களைப் பார்த்து,

”பாட்டீஸ் போதும், போதும் உங்கள் புத்திமதிகள், அண்ணியே மனோதத்துவத்தில் டாக்டர் பட்டம் வாங்கினவங்க தெரியுமில்ல. அவங்களே பல பேருக்கு புத்தி சொல்றவங்க, அவங்களுக்குப் போய் நீங்க புத்தி சொல்றீங்களாக்கும்...” என்று இழுத்தவுடன் அவர்கள் புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு தாங்கள் சொல்ல வந்ததை சுருக்கமாகவே சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்கள்.

ஆனால் கோமதிக்கு மட்டும் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருந்தது. படிப்பில் எவ்வளவு கெட்டிக்காரி தன் மகள் என்று நினைக்கும் போது பெருமையாக இருந்தாலும்... மனோதத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்ற பின்பு டாக்டரேட் பட்டமும் வாங்கனும்னு அடம்பிடிச்சப்ப தடுக்க மனசு வரவில்லை.. ரொம்ப பயந்த சுபாவம் கொண்ட பெண், வெளியூரில் தனியாகத் தங்கி படிக்க வேண்டுமே என்று பயந்த காலமும் உண்டு. ஆனால் அதெல்லாம் அந்த முதல் வருடம் மட்டும்தான். அதற்கு பிறகு மற்ற குழந்தைகள் போல தைரியமாக தனியே போய்வர பழகி விட்டாள். மாநிலம் விட்டு அடுத்த மாநிலம் சென்று படிக்கும் அள்விற்கு தேறிவிட்டதால் கவலை இல்லாமல்தான் இருந்தனர் பெற்றோர். ஆனால் பி.எச்.டி பட்டம் படிக்கும் போதுதான் அந்தப் பிரச்சனை தலை தூக்கியது. மிக ஆழ்ந்து படிக்கக் கூடிய பழக்கம் அவளுக்கு. அந்தப் பாடத்துடன் அப்படியே ஒன்றிப் போய்விடுவாள். இன்று இருக்கும் இந்த பிரச்சனைக்கு இதுகூட ஒரு காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் அவளுக்கு அடிக்கடி வருவதுண்டு...

அன்று கல்லூரியிலிருந்து திடீரென்று அழைப்பு வரும்வரை மகளைப் பற்றி பெருமை பொங்க, தங்கள் குடுமப்த்திலேயே அதிகம் படித்தவள் என்று புளங்காகிதம் கொண்டிருந்தார்கள். கல்லூரி முதல்வர் உடனடியாக கிளம்பி வரும்படி போன் செய்தவுடன் , என்ன, ஏது என்று கேட்கக் கூட திராணியில்லாமல், காரை எடுத்துக் கொண்டு பெற்றோர் கிளம்பி விட்டனர். கல்லூரி முதல்வரைச் சென்று சந்திக்கும்வரை வழியில் எப்படி சென்றோம் என்ற உணர்வு கூட இல்லாமல் பலவற்றையும் யோசித்துக் கொண்டுதான் சென்றார்கள். ஆனால் அங்கு சென்று முதல்வரிடம் பேசியபின்பு, அவர் சொன்ன அந்த விசயம் அவர்கள் இருவரையும் அப்படியே புரட்டிப் போட்டுவிட்டது. தாங்கள் துளியும் நினைத்துக்கூடப் பார்த்திராத ஒரு விசயத்தை அவர் சொன்னார். தங்கள் அன்பு மகள் வினு, அதிகமாக சத்தம் கேட்டால் கூட விலுக்கென்று பயம் கொள்பவள், இருட்டைக் கண்டால்கூட நடுக்கம் கொள்பவள், இன்று அவளைப் பார்த்து மற்ற மாணவிகள் பயந்து கொண்டு அவளுடன் தங்க மறுக்கிறார்களாம். அதனால் அவளை தனி வீடு பார்த்து தங்கவைத்துக் கொள்ளும்படி முதல்வர் அறிவுறுத்தியிருக்கிறார். காரணம் கேட்ட போது அவர் சொன்ன விசயம் ஈரக்குலையையே நடுங்கச் செய்தது.

வினுவின் கல்லூரி முதல்வர், அவளுக்கு 'Medical students syndrome', என்ற பிரச்சனை உள்ளதாகச் சொன்னபோது, முன்பின் அறிந்திராத ஒரு புது செய்தியாக இருந்ததன் காரணமாக ரொம்பவும் பயந்து விட்டனர் பெற்றோர் இருவரும். கருத்தூன்றி பயிலும் மாணவர்கள், இது போன்று, பாதிக்கப்படலாமாம். அதாவது, வியாதிகளைப் பற்றி படிக்கும் போது அந்த வியாதி தன்னையே தாக்கிவிட்டதாக கற்பனை செய்து கொள்வார்களாம். வினுவிற்கு டிப்ரஷன் என்ற மனச்சோர்வு நிலை ஏற்பட்டிருப்பதால், பகலெல்லாம் ஒழுங்காக கல்லூரிக்குச் செல்பவள், இரவானால், தனிமையில் இருக்கும் போது, ஓவென்று அழ ஆரம்பித்திருக்கிறாள். அந்த அழுகை சாதாரண அழுகை போன்று இல்லாமல் மிக வித்தியாசமான ஒரு சத்தம் கொடுத்து அழுதிருக்கிறாள். அறையில் உடன் தங்கியிருக்கும் மாணவிகள் பயந்து கொண்டு, வார்டனிடம் புகார் செய்ய, முதல்வ்ர் வரை செய்தி போய் இப்போது பெற்றோரை வரவழைத்து தீர்வு தேட வேண்டியதாகியுள்ளது.

அத்ற்குப் பிறகு கோமதி படிப்பு முடிய இருந்த 6 மாதமும் பெங்களூருவில் ஒரு வீடு எடுத்து மகளுடனேயேத் தங்கி, படிப்பையும், அவளுடைய உடல் நலத்தையும் ஒருசேர கவனித்து வந்தாலும், இந்த அழுகை நிலை மட்டும் மாறாது அடிக்கடி தொந்திரவு கொடுத்துக் கொண்டுதான் இருந்தது. கல்லூரி விட்டு வரும் மகளை ஒரு நொடியும் தனித்து விடாமல், அவளை அரவணைத்து, மருத்துவர் சொன்னபடி ஒழுங்காக கவனித்துக் கொண்டிருந்தாள். ஆச்சு.... படிப்பும் முடிந்துவிட்டது. மருத்துவரின் ஆலோசனைப்படி உடனே திருமணம் செய்தால் அந்த வாழ்க்கைச் சூழலின் மாற்றம் அவளை முழுமையாக குணப்படுத்திவிடும் என்ற நம்பிக்கையும் இருந்ததும் உண்மைதான். ஆனால் அதற்குள் எத்துனை போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது, அவளுடைய பிரச்சனை வெளியில் தெரியாமல் மறைப்பதற்கு... நெருங்கிய உறவினர்களோ அல்லது நண்பர்களையோக்கூட அண்டவிடாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

படிப்பு முடிந்து, பெங்களூருவில் வீட்டை காலி செய்துவிட்டு மகளை சொந்த ஊருக்குக் கூட்டி வந்தாகிவிட்டது. ஒரு வாரம் அமைதியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. நன்றாக கலகலவென்று பேசிக்கொண்டு, சுறுசுறுப்பாக இருந்தவள், ஒருவரும் எதிர்பார்க்காத நேரம் திடீரென, மாலை நேரம், தெருவே அமைதியாக இருக்கும் வேளையில், வினு ஓவென்று வித்தியாசமாக கத்த ஆரம்பித்துவிட்டாள். அத்துனை மெல்லிய குரல்வளம் கொண்ட ஒரு பெண்ணால் இப்படியும் ஒரு சத்தம் எழுப்ப முடியுமா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு, மாடி அறையில் தனியாக இருந்து கொண்டு அவள் போட்ட சத்தம் பயங்கரமாக வெளியே எதிரொலிக்க ஆரம்பித்து விட்டது. கோமதிக்கு தலையே சுற்றி விட்டது. அரக்கப் பறக்க ஓடிச்சென்று மகளிடம் அமர்ந்து கொண்டு அவளுக்கு தைரியம் சொல்லி, மனதை வேறு திசையில் திருப்பி சமாளித்து விட்டாள். ஆனாலும் அன்றாடம் இதே பிரச்சனை தலைதூக்க் ஆரம்பித்த போது, எவ்வளவுதான் முயன்றும் வெளியில் தெரியாமல் மறைக்க முடியவில்லை. உடனடியாக திருமண ஏற்பாடுகள் செய்ய முடிவெடுத்து காரியங்கள் ஆரம்பித்தும் வைத்தாகிவிட்டது. இதற்கிடையில், வீட்டிலிருந்து வித்தியாசமாக அடிக்கடி வரக்கூடிய சத்தம் குறித்து அக்கம் பக்கத்திலுள்ளவர்களுக்கு ஐயம் எழ, ஒரு நாள் அந்தப் பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டிய நேரமும் வந்துவிட்டது. ஆம், காலனியில் குடியிருப்பவர்களில் சிலர் ஒன்றுகூடி வந்துவிட்டார்கள், காரணம் கேட்டுக் கொண்டு. வினு எங்கே ஏதும் உளறி விடுவாளோ என்ற அச்சத்தில்,

“வினு போய் எல்லோருக்கும் டீ போட்டு எடுத்து வாம்மா”

என்று சொல்லி அவளை அனுப்பிவிட்டு, அந்தத் தாய் அந்த நேரத்தில் சமயோசிதமாக அப்பழியைத் தூக்கித் தன்மீது போட்டுக் கொண்டாள். குடும்பத்தில் சில பிரச்சனைகளால் சரியாக உறக்கம் இல்லாமையால், டிப்ரஷன் வந்துவிட்டது என்றும், அதற்கு மகள்தான் தனக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்றும் ஏதோ சொல்லி சமாளித்து அனுப்பி வைத்தாள். ஆனாலும் அவர்கள் முகத்தில் இருந்த சந்தேக ரேகை அவர்கள் பெரிதாக அதை நம்பவில்லை என்பதைப் புரிந்து கொள்ளுப்படியாகத்தான் இருந்தது. இந்த சூழலில்தான் திருமண ஏற்பாடு நடந்து முடிந்துள்ளது.

தாங்கள் விரும்பியபடி உறவுகளிலேயே மருத்துவம் படித்த மாப்பிள்ளை இருந்தாலும், மேட்ரிமோனியில் பார்த்து, முன்பின் அறியாத ஒரு வரனையே முடிவு செய்துள்ளார்கள். அவளுடைய பிரச்சனையையும் மறைத்து வைத்து, ஆண்டவனின் பெயரில் அனைத்துக் காரியங்களும் நடந்து கொண்டிருக்கிறது....

திருமண வைபவத்தின்போது மணப்பெண்ணிற்கே உரிய அந்த நாணத்தில் மகளின் தாமரை முகம் மேலும் மலர, பளபளத்த அவள் கன்னமும், ஓரக்கண்ணால் அடிக்கடி தம்பதிகள் இருவரும் காதல் மொழிகள் பரிமாறிக் கொள்வதையும் கண்ட பெற்றோருக்கு சற்றே ஆறுதலாக இருந்தது.

ஆச்சு இன்று மாப்பிள்ளையும், பெண்ணும் தனியே சந்திக்கக் கூடிய காலமும் வந்து விட்டது. வினுவிற்கு தன் மேலேயே நம்பிக்கை இல்லை. எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்ளப் போகிறோமோ என்ற அச்சம் படபடப்பை ஏற்படுத்தியிருந்தது. பால் சொம்புடன் உள்ளே சென்றவளின் கண்களில் இருந்த அந்த அச்சம் மணமகன் விதுரனுக்கு வித்தியாசத்தை ஏற்படுத்தவில்லை. முன்பின் அறியாத ஒரு ஆடவனை முதன்முதலில் ஒரு தனியறையில் சந்திக்கும் பெண்ணிற்கு இயல்பாக இருக்க வேண்டிய அச்சம்தானே அது.... கணவன் அரவணைப்பின் மூலமாக பாதுகாப்பு கொடுக்கக்கூடிய அந்த வாய்ப்புதானே தம்பதியரின் நெருக்கத்தை அதிகமாக்குகிறது? அதுதான் அங்கு நடந்தது. அதிகம் பேச விரும்பாத வினு, அவனுடைய அணைப்பில் கட்டுண்டு இருந்தபோது தன் மனம் மிக இலகுவாக இருப்பதை உணர்ந்தாள்...

பிரசவ அறையில் மகளை அனுப்பிவிட்டு தத்தளிக்கும் ஒரு பெற்றோரின் மனநிலையில் வினுவின் பெற்றோர் விடியவிடிய பொழுதைக் கழித்தனர், தங்கள் அறையில். எப்போது பொழுது விடியும் மகளைப் பார்க்கப் போகிறோம் என்று காத்துக் கொண்டிருந்தனர், அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு. கதவு மெலிதாக தட்டப்படும் ஓசை கேட்டது. இன்னும் முழுதாக விடியாத நேரத்தில் யாராக இருக்கும் என்று லேசான படபடப்புடன் கதவைத் திறந்தவளுக்கு இன்ப அதிர்ச்சியாக மகள் வினு, அழகாக குளித்து நாணத்துடன் முகம் சிவக்க கையில் காபி டம்ளருடன் நின்றிருந்தாள். அதைக்கண்டவுடன், ஆனந்தக் கண்ணீர் வழிந்தோட மகளை அணைத்துக் கொண்டாள், காபி டிரேயை வாங்கி கீழே வைத்துவிட்டு. அவளுடைய பார்வையில் இருந்த மயக்கம் அனைத்தையும் நொடியில் விளங்க வைத்துவிட்டது தாய்க்கு. ஆனால் இந்தப் பிரச்சனை முடிவிற்கு வந்துவிட்டதா என்று தெரியவில்லையே....

அன்று மதியமே அந்த இளம் கிளிகள் தேனிலவிற்கு கிளம்பத் தயாராகிவிட்டன. வினுவின் பெற்றோரும் தங்கள் ஊருக்குக் கிளம்பினாலும், உள்ளுக்குள் ஒரு அச்சம் இருந்து கொண்டுதான் இருந்தது. அது மிக விரைவாக வெளிப்படவும் செய்தது. மகளும், மருமகனும், வால்பாறை சென்றிருந்தாலும், எந்த நேரத்தில் என்ன செய்தி வருமோ என்று பெற்றோர் அஞ்சியபடியே அந்த நேரமும் வந்துவிட்டது. அடுத்த நாளே மருமகன் விதுரனிடமிருந்து தொலைபேசி அழைப்பு... அவர்கள் இருவரையும் உடனே கிளம்பி வால்பாறை வரும்படி.

தாங்கள் எதிர்பார்த்திருந்த அந்த இறுதிக்கட்டம், தங்கள் மகளின் வாழ்க்கையை நிர்ணயிக்கப்போகிற அந்த முக்கியமான கட்டம்! மாப்பிள்ளை என்ன சொல்லப் போகிறாரோ என்ற அச்சமும், மகள் என்ன செய்திருப்பாளோ என்ற கவலையும் ஆட்டிப்படைக்க மிகவும் குழப்பமானதொரு சூழலில் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. மாப்பிள்ளையைப் பார்த்தால் நல்ல குணவானாகத் தெரிந்தாலும், மகளின் இந்த பிரச்சனை சாதாரணமானதுதான் என்று தங்களுக்குப் புரிந்தாலும், நன்கு படித்து, நல்ல தகுதியான பணியில் இருக்கும் ஒரு அழகிய இளைஞன் எப்படி நடந்து கொள்ளப் போகிறாரோ தெரியவில்லையே என்ற படபடப்பு அப்பட்டமாக வெளியே தெரியத்தான் செய்தது.

மாப்பிள்ளை விதுரனும் அதைப் புரிந்து கொள்ளாமல் இல்லை. ஆனாலும், அதிகம் பழக்கமில்லாத மாமனார், மாமியாரிடம் சற்று தயக்கமும் இருந்தது. என்ன சொல்லப்போகிறாரோ என்று பதைபதைத்து வந்தவர்களுக்கு, மாப்பிள்ளை அமைதியான புன்சிரிப்புடன், வாங்க... வாங்க என்று வரவேற்ற போதே பாதி பாரம் குறைந்துவிட்டது.

ஆம், முதலில் தான் சில பொருட்கள் வாங்குவதற்காக வினுவை அறையில் தனியே விட்டுவிட்டு வெளியே போய் வருவதற்குள் அவள் அழுது அரற்றியிருந்திருக்கிறாள். கதவைத் திறந்து உள்ளே வந்து பார்த்தவருக்கு நிலைமை சட்டெனப் புரிந்திருக்கிறது. குளிர்சாதன அறை என்பதால் சத்தம் வெளியே வராமல் இருந்திருக்கிறது. தானும் ஒரு மருத்துவராக இருந்தபடியால் எளிதாக இந்தப்பிரச்சனையை அணுக முடிந்தது என்றும்,ஆரம்பத்தில் அதிர்ச்சியாகவும், தன்னிடம் உண்மையை மறைத்த வினுவின் பெற்றோர் மீதும் கோபமும் வருத்தமும் இருந்தாலும், சற்றே அவர்களின் நிலையில் இருந்து யோசித்த போது,ஒரு பெண்ணைப் பெற்றவர்களின் நிலையை புரிந்து கொள்ள முடிந்தது என்றும், முன்பே தன்னிடம் இதைப்பற்றி பேசியிருந்தால், தாங்களும் இந்த திருமணத்தை இன்னும் மகிழ்ச்சியாக கொண்டாடியிருக்கலாமே... இவ்வளவு மன உளைச்சலையும் தவிர்த்திருக்கலாமே என்று சர்வ சாதாரணமாக பேசிய மருமகனை கண்ணீர் பொங்க கட்டியணைத்துக் கொண்டார் மாமனார். கோமதியின் கண்களில் கண்ணீர் ஆறாய்ப் பெருகிக் கொண்டிருந்தது. ஆனால் அந்தக் கண்ணீரில் உப்பு இல்லை!



படத்திற்கு நன்றி :


நன்றி - திண்ணை

Saturday, April 14, 2012

தியாக தீபம் - அன்னை இந்திரா (1917 - 1984)


"If I die a violent death as some fear and a few are plotting, I know the violence will be in the thought and the action of the assassin, not in my dying......!" Indira Gandhi.

”பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்!” - மகாகவி பாரதி.

Inline image 1

நெஞ்சுரமும், நேர்மைத்திறமும், நேர் கொண்ட பார்வையும் அஞ்சா நெஞ்சமும் கொண்ட மாதர் குல திலகம் , 'இரும்பு பெண்மணி’, இந்திரா பிரியதர்சினி, அவதரித்தது, ஜவஹர்லால் நேரு மற்றும் கமலா நேரு என்ற புகழ்பெற்ற பெற்றோரின் கருவில். கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய முப்பெரும் நதிகள் ஒன்று கூடும் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் அலகாபாத் நகரில். மற்ற குழந்தைகளைப் போன்று பெற்றோரின் முழுமையான அரவணைப்பில் கடந்ததல்ல அவருடைய இளம் பிராயம். ஆம், நவம்பர் 19, 1917இல் பிறந்தார் இவர். பிறந்த இரண்டாண்டுகளில், 1919 ஆம் ஆண்டு நம் தேசத் தந்தை மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, தென் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பியவுடன், நேரு குடும்பத்தின் அடிக்கடி தொடர் சந்திப்பின் மூலமாக இந்திய சுதந்திர தாகத்தை எழுச்சியூட்டி, அவர்களை முழுமையாக ஈடுபடச் செய்தார். அவருடைய நான்காம் வயதில், தந்தை ஜவஹர்லால் நேருவும், தாத்தா மோத்திலால் நேருவும் முதல் முறையாக சிறை சென்ற போது. பின்பு தாயும் இணைந்து கொள்ள, போகப்போக அதுவே வாடிக்கையாகிவிட்டிருக்கிறது. பிற்காலங்களில் தம் இளம் பிராயத்தை நினைவு கூர்கையில் இளம் வயதில் ஒரு பாதுகாப்பற்ற உணர்வு தனக்கு இருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். தாயின் மெல்லிய உடல் வாகையையும், தந்தையின் கூரிய நாசியும், துணிவும் கொண்டவர்.

அவர் பிறந்த நேரம் முதல் உலகப் போர் முடிந்த நேரம். தந்தையும், தாத்தாவும் சிறையில் அடைபட,, குடும்பத்தின் மற்ற பெண்களுடன் குழந்தை இந்திராவும் காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் தங்க வேண்டிய கட்டாயம். ஆசிரம வாழ்க்கை புதிய அனுபவத்தையும், சுதந்திரப் போராட்ட வித்தையும் விதைத்தது. அதன் காரணமாக பால்யகால விளையாட்டே மேடைப்பேச்சு, கைது, கூட்டம் ஆங்கிலப் போர் வீரர்களை போரிட்டு முறியடிப்பது என்பது போல் அமைந்தது, அவருடைய பிற்கால வாழ்க்கை முறைமைகளுக்கு அடித்தளமாக அமைந்தது. இதுவே அவர் ஒரு சுதந்திர உணர்வுள்ள , உறுதியான இதயம் கொண்ட ஒரு பெண்ணாக வளர வழி வகுத்தது.

அவருடைய குழந்தைப்பள்ளி தில்லியிலும், பள்ளிப்படிப்பு முதலில் அலகாபாத் நகரில் ஒரு கான்வெண்ட் பள்ளியிலும் பின்பு ஒரு தங்கும் பள்ளியிலும் தொடர்ந்தது. புத்தகம் படிப்பதில் ஆழ்ந்த விருப்பம் கொண்டவராக வளர்ந்தார். தந்தை வாங்கி வைத்திருந்த பெரும்பாலான புத்தகங்களை வாசித்திருக்கிறார். கவிஞர், எழுத்தாளர், ஓவியர் என பல்வேறு முகங்கள் கொண்ட ரவீந்திரநாத் தாகூரின், சாந்தி நிகேதன் பள்ளியில் , சேர்க்கப்பட்டார். இதைப்பற்றிக் கூறும் போது அவர், “ தந்தையின் முயற்சியால் ஏற்கனவே எனக்கு இலக்கியத் தொடர்பு இருப்பினும், சாந்தி நிகேதனுக்குச் சென்றவுடன் தாகூர் மூலமாக கலையுலகின் கதவு தானாகத் திறந்தது” என்றார். தன்னுடைய 11வது வயதில் இராமாயணக் காப்பியத்தில் வருவது போன்று, வானரப் படையை நிறுவ முயன்றார். தன் வயதொத்த சிறுவர் சிறுமியரை இணைத்து, வானரசேனை என்ற ஒரு அமைப்பை ஆரம்பித்து வைத்தார்.

Inline image 2
வானரசேனை என்ற இந்த அமைப்பு பல அரும் பணிகளைச் செய்தன. அதாவது, சுதந்திரப் போராட்ட வீரார்களுக்கு உணவு, குடிநீர் விநியோகம் செய்வது, கொடிகள் தைத்துக் கொடுப்பது, கல்வியறிவற்றவர்களுக்கு தேவையான மடல்கள் எழுதிக் கொடுப்பது, விடுதலைப் போராட்டங்களில் கலந்து கொண்டு தலைமறைவாக வாழ்பவர்களுக்கு மடல் கொண்டு சேர்க்கும் சேவையைச் செய்தல், சமையல் செய்து கொடுத்தல் போன்ற எண்ணற்றப் பணிகள் செய்து வந்தனர். இவையனைத்தும் அண்ணல் காந்தியடிகளின் கொள்கைகளின் தாக்கம்தான் என்பதை அவரே, 1930 இல் பூனாவில் ஒரு பள்ளியில் படிக்கும் போது, ” காந்தியடிகள் என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருந்தார். என் ஒவ்வொரு செயல்களிலும் முன்னேற்றங்களிலும் அவருக்கு பெரும் பங்கு உண்டு” என்ற சொற்கள் மூலம் அதை உறுதிபடுத்தினார்.

”பாலசர்க்கா சங்கம்” என்ற நிறுவனத்தை , காந்தியடிகளின் அறிவுரைப்படி நிறுவி, சிறுவர், சிறுமியுடன், நூற்பு வேள்வியை மேற்கொண்டார். ஆனந்த பவனம் என்ற தம்முடைய மாளிகையின் மூத்த பணியாளர் ஒருவருக்கு தம் இளம் வயதிலேயே கல்வி கற்பிக்கும் பணியும் மேற்கொண்டார். தம் இல்லத்திற்கு சற்று அருகாமையில் இருந்த ஒரு தொழுநோய் இல்லத்திற்கு அடிக்கடி சென்று தன்னால் ஆன சேவைகளைச் செய்ய முற்பட்டிருக்கிறார்.

இந்திரா தம்முடைய 17 வது வயதில் தன் தாய் கமலா நேருவிற்கு காசநோயினால் உடல் நலம் பாதிக்கப்பட்ட காரணத்தினால், அவருடைய மருத்துவத்திற்காக அவருடன் சுவிட்சர்லாந்து செல்லவேண்டி வந்தது. அந்த நேரத்தில் தந்தையும் சிறைச்சாலையில், ஆனால் 1936 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், 28ஆம் நாள் தாய் கமலா நேரு இறந்தபோது தந்தை விடுதலை செய்யப்பட்டு, உடனிருந்தார். இந்தியாவிற்கு திரும்பியபோது, மிக அழுத்தமான ஒரு சூழலில் சிக்குண்டு இருந்தார். வேதனை, கவலை, அனைத்திற்கும் மேலாக தனிமை! இந்த நேரத்தில் தம் பால்ய கால நண்பரான பிரோஸ்காந்திதான் இவருக்கு உடனிருந்து ஆறுதலளித்து வந்தார். நேரு குடும்பத்தின் மீது ஆழ்ந்த பற்று கொண்டவர் இவர். இரண்டாம் உலகப் போர் தொடங்கப் போகும் சில காலம் முன்னர்தான் அவர் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் சேர்ந்தார்.

மோதிலால் நேரு தம் பெருஞ்செல்வத்தை தேசத்திற்காக அளித்துவிட்டார். நேரு தாம் எழுதிய புத்தகத்தின் மூலமாகக் கிடைத்த வருமானத்தைக் கொண்டுதான் தம் மகளைப் படிக்க வைத்தார்.

ஒரு ஆண்டிற்குள்ளாக அங்கு அவருடைய உடல் நிலை பாதிக்கப்பட்டு, சுவிட்சர்லாந்து சென்று மருத்துவம் பார்க்க வேண்டி வந்தது. நோயின் கொடுமையும், தனிமையும் ஒரு சேர வாட்ட, அந்த நேரத்தில் பிரோஸ்காந்தி அவருக்குத் துணையாகவும், ஆதரவாகவும் இருந்துள்ளார். 1939 இல் இரண்டாம் உலகப்போர் ஆரம்பமானவுடன், இந்திரா, கப்பல் மூலமாக, பிரோஸ்காந்தியுடன் இந்தியா வந்து சேர்ந்தார். தன் தந்தையின் விருப்பத்திற்கு மாறாக பிரோஸ்காந்தியை 1941 ஆம் ஆண்டு,மார்ச் மாதம் அலகாபாத்தில் அவரை மணந்து கொண்டு, லக்னோவில் தம் திருமண வாழ்க்கையைத் துவங்கினார். நேஷனல் ஹெரால்ட் பத்திரிக்கையில் மேலாளராக பணி புரிந்தார் பிரோஸ்காந்தி. அப்பத்திரிக்கையின் பெண்கள் பகுதியை கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் இந்திராவிற்குக் கிடைத்தது. 1944 ஆகஸ்ட் 20 ஆம் தேதி மும்பையில் ராஜீவ் காந்தியைப் பெற்றெடுத்தார் இந்திரா.

பிரோகம் மும்பையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரசு கமிட்டி கூட்டத்திற்கு இந்திராவும் சென்றார். ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற இயக்கமும் இங்குதான் துவக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில், நேருஜி, இந்திரா காந்தி மற்றும் பிரோஸ்காந்தி மூவரும் கைது செய்யப்பட்டு , சிறை வைக்கப்பட்டனர்.

நம் இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திருநாளும், ஆகஸ்ட் 15 ஆம் நாள் 1947 ஆம் ஆண்டு வந்தது. ஆனாலும் இந்திய - பாகிஸ்தான் பிரிவினையும் உடன் வந்தது, மகாத்மாவை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. மத வெறியும், வகுப்புக் கலவரங்களும் நாட்டில் பெருங்குழப்பத்தை ஏற்படுத்தின. மக்கள் பாகிஸ்தானிலிருந்து கூட்டம் கூட்டமாக அகதிகளாக வந்தனர். இந்த அகதிகள் முகாமிற்கு அன்னை இந்திரா நேரிடையாகச் சென்று, அவர்களுக்கு உணவு, உடை என எந்த குறைவும் இல்லாமல் பார்த்துக் கொண்டார். இஸ்லாமியர்கள் வாழ்ந்த பகுதிக்கும் எந்த அச்சமுமின்றி சென்று வந்தார்.

சுதந்திர இந்தியாவின் பிரதம மந்திரியாக பதவியேற்ற ஜவஹர்லால் நேரு, தம் இறுதிக் காலமான 1967 வரை பதவியில் இருந்தார். அந்த காலகட்டத்தில், தாய் உயிருடன் இல்லாத காரணத்தினால் , குடும்பப் பராமரிப்பிற்காக இந்திராவும் , தம் கணவர், குழந்தைகளுடன் மும்மூர்த்தி இல்லத்தில் (Teen Murthi House) தங்க வேண்டி வந்தது. உலக நாடுகளின் அழைப்பை ஏற்ற தந்தையுடன் பல நாடுகளுக்குப் பயணம் செய்வதற்கும், பல அரசியல் பிரபலங்களைச் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டியது அவருக்கு. 18 ஆண்டு காலம் தந்தையுடன் கற்ற அரசியல் நெளிவு சுளிவுகள், இந்திராவை ஒரு பெரும் ராஜதந்திரியாகவும், சிறந்த அரசியல்வாதியாகவும் பண்படுத்தியது. பாரிசில் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபை கூட்டத்திற்கும், காமன்வெல்த் மாநாட்டிற்கும், மற்றும் அமெரிக்காவிற்கும் தன் தந்தையுடன் சென்று வந்தது பல அனுபவங்களைக் கொடுத்தது. எலிசபெத் மகாராணியின் மகுடாபிஷேகதிற்கான அழைப்பை ஏற்று அங்கு சென்றபோது, வின்ஸ்டன் சர்ச்சிலையும் சந்தித்தார். 1952 இல் தீன் மூர்த்தி பவனுக்கு வந்த அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி திருமதி ரூஸ்வெல்ட்டைச் சந்திக்கும் வாய்ப்பையும் பெற்றார்.

1959 இல், பிரதம மந்திரி லால் பகதூர் சாஸ்திரி இந்திராகாந்தி அம்மையாரை செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சராக நியமித்தார். குறைந்த விலையில் வானொலி தயாரிப்பதையும், குடும்ப நலத்திட்டத்தையும் துவக்கி வைத்தார். பிரோஸ்காந்தி பாராளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1956 முதல் 1960 வரை அகில இந்திய காங்கிரசின் இளைஞர் அணித்தலைவராக இருந்தார் இந்திரா காந்தி. 1960 ஆம் ஆண்டு பிரோஸ்காந்தியின் திடீர் மறைவு இந்திராவை மிகவும் பாதித்தது. 1964 ஆம் ஆண்டு, புவனேசுவரம் காங்கிரசு மாநாட்டில் மயக்கமுற்று விழுந்த தந்தை நேருஜியை கண்ணும் கருத்துமாக மகள் கவனித்துக் கொண்டாலும், காலன் அவரையும் விட்டு வைக்காமல் மே மாதம் 27ஆம் நாள் அதே வருடத்தில் அழைத்துக் கொண்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் , வலுவடைந்திருந்த நேரம், தமிழ் நாட்டிற்கு வந்திருந்த அன்னை இந்திரா மக்களின் நல்லாதரவையும் பெற்றிருந்தார். தேசிய ஒருமைப்பாட்டை மிகவும் நேசித்த அன்னையின் சேவையைப் பாராட்டும் விதமாக அவர்தம் பிறந்த நாளை தேசிய ஒருமைப்பாட்டு தினமாகக் கொண்டாடுவதும் சிறப்பு

பாகிஸ்தான் படை வீரர்களின் காஷ்மீர் ஊடுறுவல் கலவரத்தை ஏற்படுத்தியது. இந்திராகாந்தி ஸ்ரீநகர் சென்று பல பொதுக்கூட்டங்களில் உரையாற்றினார். போர் உருவாகி, நிறுத்தமும் ஏற்பட்டது. சிப்பாய்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஊக்கமளித்தார். பாகிஸ்தானுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்வதற்காக லால் பகதூர் சாஸ்திரி ரஷ்யாவிலுள்ள தாஷ்கண்டிற்கு சென்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்பு அங்கேயே லால் பகதூர் சாஸ்திரி மாரடைப்பால் காலமானார். அவர் மறைவிற்குப் பிறகு 1966 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 25ம் நாள் இந்தியாவின் பிரதமர் ஆனார். காமராசரின் உறுதுணை பெரும் பலமானது இவருக்கு. பிரதமராக இவர் ஆற்றிய தொண்டு பாரே புகழும் வண்ணம் இருந்தது!

Inline image 3

1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து இலட்சக்கணக்கான அகதிகள் சாரிசாரியாக இந்தியா நோக்கி வர ஆரம்பித்தார்கள். இது பெரும் பிரச்சனையாக உருவெடுக்க ஆரம்பித்த நேரம், இந்திராவின் நண்பர் ஒருவர், தான் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாட்டிற்கும், அந்தக் கோடை விடுமுறையில் செல்லப் போவதாக சொன்னபோது, அன்னை சற்றும் தயங்காது, “ பலர் உங்களிடம் வந்து இந்தியாவில் என்ன நடக்கிறது என்று கேட்பார்கள். அப்போது நீங்கள், இன்னும் ஓர் ஆண்டு காலத்தில் மேற்கு வங்காளத்திலிருந்து இந்திய மண்ணிற்கு வரும் அகதிகளே இருக்க மாட்டார்கள் என்று இந்தியப் பிரதமர் ,அதிகாரப்பூர்வமாக அறிவித்ததாகச் சொல்லுங்கள்”என்றார். மேற்கு வங்க இடதுசாரிகளின் கிளர்ச்சியைத் துணிவுடன் எதிர்கொண்டு ஜனநாயக முறையில் சமாளித்தார். கேரளாவில் உணவுப் பிரச்சனை போன்ற பல பிரச்சனைகள் தலை தூக்கிய நேரம் அது. வாஷ்ங்டன் சென்று ஜனாதிபதியுடன் பேசிக் கொண்டிருந்த போது, “ என் நாட்டு மக்களுக்காக விடம் அருந்தச் சொன்னாலும், தயங்காமல் அருந்துவேன்” என்று சொன்னது அவர் நாட்டின் மீது கொண்டிருந்த அபரிமிதமான பற்றைக் காட்டியது. அவருடைய துணிச்சலான போக்கு பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டது.

“ இந்து மதத்தின் வேதாந்தத் தத்துவங்களில் எனக்கு நல்ல நம்பிக்கை இருந்தாலும், மனித குலத்தைப் பிரிக்கும் அந்த மதவெறியைத் தீவிரமாக எதிர்க்கிறேன்” என்ற தெளிவான சிந்தனை கொண்டிருந்தார். உலகளவில், பொதுவுடைமை அல்லாத 70 நாடுகள் பங்கு கொண்ட, வாக்கெடுப்பில், உலகப்புகழ் பெற்ற தலைவராக இந்திரா காந்தி அம்மையாரே தேர்ந்தெடுக்கப்படது குறிப்பிடத்தக்கது. இவர் செய்த பல அரிய சாதனைகளே இதற்குக் காரணம்.தன் ஆட்சிக் காலத்தில் நாணயத்தின் மதிப்பைக் குறைத்தார். உச்சநீதி மன்ற தலைமைப் பதவி நியமனத்தை மூப்புரிமை அடிப்படையில் செய்யும் மரபை மாற்றியமைத்தார்.

பஞ்சாப் கலவரம் தீவிரமான வேளையில் அவர்களை ஒடுக்க பொற்கோவிலுக்குள் இராணுவத்தை அனுப்பினார். 1984 ஆம் ஆண்டில், ‘ஆபரேஷன் புளூ ஸ்டார்” தீவிரவாதிகளை ஒடுக்க வைத்ததோடு பிந்த்ரன்வாலே கொல்லப்பட்டார். இந்த நேரத்தில்தான் சீக்கிய மக்களின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டி வந்தது அவருக்கு. ஜனநாயகத்தைப் பாதுகாக்க நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்த வேண்டி வந்தது. 1969 இல் பதினான்கு மிகப்பெரிய வங்கிகள் தேசிய உடமையாக்கப்பட்டது. பத்திரிக்கை தணிக்கை முறை ஒழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மன்னர்களுக்கு அளிக்கப்பட்ட மானியங்கள் நிறுத்தப்பட்டது. பஞ்சாப் மட்டுமன்றி, காஷ்மீர், மணிப்பூர், அஸ்ஸாம், நாகாலாந்து, மிசோரம் ஆகிய இடங்களில் ஏற்பட்ட பிரிவினை வாதமும் முடக்கப்பட்டது. இப்படி பல்வேறு சோதனைகளைக் களைந்து சாதனைகளாக மாற்றிய பெருமை அம்மையாரையேச் சேரும்.

அவருடைய பல்வேறு நாட்டு நலப்பணித்திட்டங்கள் ,மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதில் முக்கியமானது இருபது அம்சத் திட்டம். இத்திட்டத்தின் மூலம், மலை சாதி மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், கிராமப்புற, வறுமைக் கோட்டின் கீழே உள்ள மகளிர், ஆகியோரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட இத்திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அறிவியல் துறையும், வான் ஆய்வு மையங்களும் பெரும் வளர்ச்சி கண்டது அம்மையாரின் ஆட்சிக்காலத்தில். பொருளாதாரமும் நல்ல வளர்ச்சியடைந்தது. நம் இந்திய நாட்டு விஞ்ஞானிகளின் தனிப்பட்ட முயற்சியால் அணு ஆய்வு சோதனையிலும் வெற்றி கண்டதும் குறிப்பிடத்தக்கது. பல ஏவுகணைகள் விண்ணில் செலுத்தப்பட்டன. தொலைத்தொடர்பிற்கென பல கோள்கள் செலுத்தப்பட்டன. இன்சாட் A, B விண் வெளிக்கலங்கள், அணுமின் நிலையங்கள், பெரிய தொழிற்சாலைகள் என அனைத்தும் வெற்றிகரமாக செயல்பட்டன.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளை சீரிய முறையில் நடத்தியமைக்காக 1982 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் கழகத்தின் விருது இவருக்கு வழங்கப்பட்டது. தொள்ளாயிரத்தைம்பது நாடுகள் இணைந்த கூட்டுச் சேரா இயக்கத்தின் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, தன்னுடைய அன்பான போக்கினாலும், சாமர்த்தியமான செயல்களினாலும், நாடுகளுக்கிடையே ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களைத் தீர்த்து வைத்தார். ஓயாத உழைப்பும், உன்னத முயற்சியும், நாட்டை உயர்த்த வேண்டும் என்ற உயரிய நோக்கும் அவரை உச்சாணியில் ஏற்றி வைத்த வேளையில், துரதிருஷ்டவசமாக, அக்டோபர் 31ந்தேதி, 1984 ஆம் ஆண்டு, அவருடைய இரண்டு சீக்கிய மெய்க்காப்பாளர்களான பியாந்த்சிங் மற்றும் சத்வந்த்சிங் என்பவர்களால் ஈவு இரக்கமின்றி, சுட்டுக் கொல்லப்பட்டார். தன்னிகரில்லா அந்தத் தியாகச்சுடரின் அஸ்தி நாற்பது கலசங்களில் சேகரிக்கப்பட்டு, மக்களின் அஞ்சலிக்காக நாட்டின் பல முக்கிய தலைநகரங்களில் வைக்கப்பட்டிருந்தது. யமுனை ஆற்றங்கரையில் அவர்தம் நல்லுடல் தகனம் செய்யப்பட்டது.

Inline image 4

நல்ல பல குறிக்கோள்களை , பல்வேறு சோதனைகளுக்கிடையேயும் நிறைவேற்றிக் காட்டிய சாதனைப் பெண்மணி அன்னை இந்திரா. மனிதாபிமானம், சகோதரத்துவம், அநியாயத்தைத் தட்டிக்கேட்கும் துணிச்சல், சகமனிதர்களிடம் அன்பு, நாட்டுப்பற்று, விடாமுயற்சி இப்படி ஆக்கப்பூர்வமான நல்லெண்ணங்கள் மூலமாகவே நாட்டில் பல அரிய நற்பணிகள் செய்து தம் இன்னுயிரையும் ஈந்தார். அவருடைய சாதனை வாழ்க்கை பல்லோருக்கும் முன்னுதாரணமாக இருப்பதில் அதிசயமில்லை. பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக வாழ்ந்து காட்டியவர் அன்னை இந்திரா காந்தி!

Thursday, April 12, 2012

காற்றில் ஆடும் தீபங்கள்


இனிய நந்தன புத்தாண்டு வாழ்த்துகள் நண்பர்களே!


வாழ்வியல் வண்ணங்கள் (1)

பெண்களை, குத்துவிளக்கு, குலவிளக்கு என்று கொண்டாடுவது பெரும்பாலும் நம் தமிழர் மரபு. அம்மரபு வழி பண்பாடு பெண்களுக்கென்று ஒரு எல்லைக்கோட்டையும் நிர்ணயித்து வைத்துள்ளது. அந்த எல்லைக்கோட்டினுள் வாழ்த் தெரிந்த பெண்மகள், தம் சுய விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடாமல் ஒரு தவ வாழ்க்கையை மேற்கொண்டு காலத்தை கடத்தி வந்த காலங்கள், பெண்களின் வாழ்க்கைக்குப் பாதுகாப்பு என்பது உறுதியான ஒன்றாக இருந்தது. பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம், கல்வியறிவு, என முன்னேற்றமடைய ஆரம்பித்தவுடன், இந்த பாதுகாப்பு பண்பாட்டு எல்லை சுருங்கி, சுதந்திரம் என்ற ஒன்று கட்டவிழ்த்து விட்டது போன்ற நிலையை ஏற்படுத்துவதன் விளைவாக பல பிரச்சனைகளையும் எதிர்கொள்கிறார்கள். சில நேரங்களில் காற்றில் ஆடும் தீபமாக வாழ்க்கை அச்சமூட்டுகிறது. சில காலங்களில் அது நிலைபெற்று நின்றுவிடும் என்ற நம்பிக்கை இருந்தாலும், இந்த இடைப்பட்ட கால ஊசலாட்டம் ஏற்படுத்தும் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு வேண்டும்.

நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும், தன்னம்பிக்கையும், சலியாத உழைப்பும் கொண்டு சமுதாயத்தில் பல்வேறு சாதனைகள் புரிந்து கொண்டு, பலவேறு துறைகளிலும், பலருக்கும் முன்னோடியாகவும், இருக்கக் கூடியவராகவும் உள்ள இக்காலகட்டத்திலும், சுயவிழிப்புணர்வு இன்மையாலும், தேவையில்லாத அச்சம், அசாத்திய துணிச்சல், தவறான முடிவெடுத்தல், அளவிற்கதிகமான தன்னம்பிக்கை, கோழைத்தனமான முடிவு என இப்படி பல்வேறு வழிகளில் தங்கள் வாழ்க்கைக்கு தாங்களே பகையாளி ஆனவர்களும் உண்டு. அந்த வகையில் இக்கட்டுரைத்தொடர் பல உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு, இன்றைய பெண்களின் நிலையை அலசப்போகிற ஒரு நிதர்சனம். இதில் சுழலப் போகும் தீபங்கள் நீங்கள் அறிந்தவர்களாகவோ, உங்களுக்கு மிகவும் நெருங்கியவர்களாகவோ இருக்கலாம்….. தத்தளிக்கும் தீபங்கள் சில அணைந்து விட்டாலும், எப்படி வாழக்கூடாது என்பதற்கு முன்னுதாரணமாக இருப்பதன் முகமாக வாழப்போகிறவர்கள். இக்கட்டுரைகளில் ஊரும், பெயரும் மாற்றப்பட்டுள்ளது. யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்டதும் அல்ல. சில நிதர்சனங்கள் சரியான முறையில் புரிந்து கொள்ளப்படல் வேண்டும் என்ற ஆதங்கத்தில் மட்டுமே எழுதப்படுகிறது.

தீபம் (1)

தணலில் வெந்த தாய்மை…..

பெரும்பாலான குடும்பங்களில் நம் குழந்தைகளின் திருமண வாழ்க்கையையும், மற்ற முக்கியமான எதிர்கால முடிவுகளை எடுப்பதிலும் ஜோசியம், ஜாதகம் என்பது பெரும்பங்கு வகிக்கிறது. பல நேரங்களில் தலையெழுத்தையே மாற்றக்கூடிய வல்லமை பெற்றது. அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும் அல்லவா….?

சந்திரிகா, நல்ல பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்து, தெய்வ நம்பிக்கையும், பெரியோரிடம் பயபக்தியும் கொண்டு, அவ்ர்தம் சொற்களை வேதவாக்காக எண்ணி வாழக்கூடிய சராசரி இந்தியப்பெண். சுயவிருப்பு, வெறுப்பு என்பதற்கெல்லாம் இடம் இருந்ததில்லை இது போன்ற சூழலில் வளரும் பெண்களுக்கு. பெரியவர்கள் சொல்வதை கண்மூடி கேட்டுக் கொண்டு போக வேண்டியதுதான் ஒரேவழி. மாற்றுவழி என்ற உபாயமே வழங்கப்படுவதில்லை. படிப்பில் நல்ல சூட்டிப்பான பெண் அவள். பள்ளியிறுதித் தேர்வில் பள்ளியிலேயே இரண்டாவது மாணவியாக தேர்ச்சி பெற்றவள். மேற்படிப்பு படித்து மருத்துவராக வேண்டும் என்று பல கற்பனைகள் கொண்டிருந்தவள். தன் விருப்பம் எப்படியும் நிறைவேறும் என்ற கனவும் கொண்டு வாழ்பவள்.

ஆனால் நடந்ததோ வேறு. உறவு வகையில் நல்ல வரன் வரவும், ஜாதகத்தில் சில தோஷங்கள் பெயரைச் சொல்லி, அதற்குத் தோதான வரன் அமைவது சிரமம், அதனால் எல்லாம் கூடிவந்து இப்படி ஒரு வரன் வரும்போது தவிர்க்கக் கூடாது என்ற மூத்தோரின் சொல்கேட்டு வேறு வழியின்றி, கனவுகளைப் புதைத்துவிட்டு மங்கல நாணை மனமுவந்து ஏற்றுக் கொண்டவள். அதற்குப் பிறகு வாழ்க்கை தெளிந்த நீரோடையாகத்தான் போய்க்கொண்டிருந்தது, இரண்டாவது குழந்தை பிறக்கும் வரை. நல்ல வசதியான குடும்பம். பரம்பரையாக நெசவுத் தொழில் செய்பவர்கள். தற்காலமுறையில் நவீனப்படுத்த்ப்பட்ட இயந்திரங்களுடன், கடின உழைப்பும் சேர நன்கு கொடிகட்டி பறந்து கொண்டிருந்தனர்.

காலச்சக்கரம் எப்போதும் ஒரே மாதிரி சுழலுவதில்லையே. நூல் விலை ஏற்றம் பணியாட்கள் பிரச்சனை என வியாபாரத்தில் புயல் அடிக்க ஆரம்பிக்க, காரணங்கள் அலசப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ஜோசியம், ஜாதகம் என்று பார்க்க ஆரம்பித்தார்கள். அப்போதுதான், சந்திரிகா இரண்டாவது குழந்தை உண்டாகியிருந்தாள். வீட்டு நிலை அவள் உடல்நிலையையும் பாதித்தது. மிகப் பொறுமையான குணமும், அமைதியான சுபாவமும் கொண்டவளான அவள் அனைத்தையும் பொறுத்துக் கொண்டுதான் இருந்தாள். ஆனால் அந்தப் பொறுமையின் எல்லையைச் சோதிப்பதாகவே சம்பவங்கள் நடந்தது.

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில், அனைத்து விதமான பரிகாரங்களும் செய்யத் தயாராகிவிட்டனர். அந்த இடத்தில்தான் சந்திரிகாவின் விதி விளையாட ஆரம்பித்தது. குடும்ப ஜோசியர் குலதெயவ வழிபாடு, அன்னதானம் என ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைத்துப் பரிகாரங்களையும் சொன்னவர், இறுதியாக ஒரு குண்டை தூக்கிப் போட்டுவிட்டார். ஆம், சந்திரிகாவின் வயிற்றில் கரு உருவான நேரம் சரியில்லையாம்.! அதுவும் ஒரு காரணமாம் வியாபாரம் நொடித்துப்போவதற்கு. அவ்வளவுதான் குடும்பமே சேர்ந்து முட்டாள்தனமாக ஒரு முடிவெடுத்துள்ளார்கள். சந்திரிகாவின் வயிற்றில் வளரும் கருவை அழித்துவிடுவது என்று. அவள் அழுது ஆர்ப்பாட்டம் செய்தும் கணவனின் கட்டாயத்தால், வேறு வழியின்றி மருத்துவமனை சென்றவள், அங்கு மருத்துவர், குழந்தை நன்கு வளர்ந்துவிட்டதால் கருவை அழிக்க முடியாது என்று சொல்லி, வயிற்றில் பாலை வார்த்ததால், வேறு வழியின்றி, வீடு திரும்பினர்.

நாட்கள் பிரச்சனைகளுடன் சேர்ந்தே நகர்ந்து கொண்டிருந்தது. வியாபாரத்தில் ஒரு பிரச்சனை முளைவிட ஆரம்பிக்கும்போதே அதன் வேரை சரியாக அறிந்து அதனைக் களையாவிட்டால், அது விடவிருட்சமாக வளரத்தானே செய்யும்? அதனைக் களையும் முயற்சியை சரியாகக் கடைப்பிடிக்காமல், தேவையற்ற மற்ற விசயங்களில் கவனம் செலுத்தி, மேலும் பிரச்சனையை வளர்த்துக்கொண்டவர்கள், சந்திரிகாவின் வயிற்றில் வளரும் குழந்தையின் மீதே அதிருப்தியை வெளிப்படுத்திக் கொண்டேயிருந்ததால் அவள் மனதிலும், உளைச்சல் அதிகமாக ஆரம்பித்தது. விளைவு அவள் உடல் நலமும் பாதிக்கப்பட்டது. பிரசவ நேரம் நெருங்க, நெருங்க, குடும்பத்தில், குழந்தை பிறந்தவுடன் அதை என்ன செய்வது என்று யோசிக்கும் அளவிற்கு போனது, தாயினால் தாங்க முடியாத வேதனையாகிப் போனது.

பிரசவ வேதனையை பல்லைக் கடித்துக்கொண்டு தாங்கிக் கொண்ட அந்தத் தாய்க்கு, பெற்ற குழந்தையை அனாதை ஆசிரமத்தில் விட்டுவிடலாம் என்று இறுதியாக எடுத்த முடிவில் உடன்பட முடியாத வேதனையில் கதிகலங்கிப் போனாள். எவ்வளவோ வாதாடிப் பார்த்தும் குடும்பத்தில் அனைவரும் ஒன்றுபோல குழந்தையை இழப்பதிலேயே குறியாய் இருக்க, செய்வதறியாது, மன வேதனையில் புழுவாய்த் துடித்தவள், பிறந்தவீடே அடைக்க்லம் என்று அடிக்கடி அங்கு சென்று தங்கவும் ஆரம்பித்திருக்கிறாள். அங்கேயும் அவளுக்குப் பிரச்சனை உறவினர் வழியாக வந்துள்ளது. பெண் கணவன் வீட்டில் ஒழுங்காகப் பிழைக்காமல் தாய் வீட்டில் வந்து அடிக்கடி தங்க ஆரம்பித்தால் சில பெற்றவர்கள் வழக்கமாகச் செய்யும் தவறு, அப்பெண்ணின் மனநிலையைப் பற்றிக்கூட அறிந்து கொள்ள முயலாமல், எப்படியும் அவளை சமாதானப்படுத்தி கணவன் வீட்டில் கொண்டு விட்டுவிடுவது….. அதற்கு, திருமணம் ஆகாத அடுத்த பெண்ணைக் காரணம் காட்டி அவள் வாழ்க்கை கெட்டுவிடும் என்று பயமுறுத்தி கட்டாயப்படுத்தி அனுப்பி விட்டார்கள்.

பிரச்சனை அதிகமாக, புகுந்த வீட்டிலோ குழந்தையை எங்காவது தொலைத்துவிட்டு வந்தால்தான் ஆச்சு என்று கட்டாயப்படுத்தவும், பிறந்த வீட்டிலோ, கணவனும், மாமனார், மாமியாரும் என்ன சொல்கிறார்களோ அதன்படி கேட்டுத்தான் நடக்க வேண்டும் என்று உறுதியாகச் சொல்லி அனுப்பிவிட்டதாலோ, இருதலைக்கொள்ளி எறும்பாக போக்கிடம் தெரியாமல், ஒரு வயதே ஆன, பெண் குழந்தையை, இழக்கவும் முடியாமல் அத்தாய் பட்டவேதனை சொல்லில் அடங்காது. பொருளாதாரச் சுதந்திரமும் இல்லாமல், தனியாக வெளியே சென்று குழந்தைகளைக் காப்பாற்றும் துணிச்சலும் இல்லாமல், பெற்றக் குழந்தையை பிரித்து வைக்கக் கட்டாயப்படுத்தும் கொடுமையைச் செய்யும் புகுந்த வீட்டாரைத் தட்டிக் கேட்கும் தைரியமும் இல்லாமல், ஒரு பெண் எடுக்கக் கூடிய அடுத்த முடிவு என்னவாக இருக்க முடியும்?

ஆம், அதேதான், தன் இறப்பு மட்டுமே இதற்கான ஒரே தீர்வு என்று முடிவெடுத்தவள், தன் குழந்தைகளும் இவர்களிடம் சிக்கித் தவிக்கக் கூடாது என்ற கோழைத்தனமான முடிவையும் சேர்ந்தே எடுத்து விட்டாள். மூன்று வயதான மூத்த மகனையும், ஒரு வயதான இளைய மகளையும் தம் படுக்கையறையினுள் கூட்டிச்சென்று, எண்ணவும் அச்சம் ஏற்படுத்தும் செயலைச் செய்துவிட்டாள். மண்ணெண்ணையை ஊற்றிக் கொளுத்தி விட்டாள். மூன்று உயிர்களும் கருகி சாம்பலாகிவிட்டன. இதற்கு யார் காரணம், மூடநம்பிக்கைகள் என்றாலும்,

பாதகஞ் செய்பவரைக் கணடால்-நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!
துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
திடங்கொண்டு போராடு பாப்பா!

என்று முழங்கினானே பாரதி, அத்துணிச்சலை ஊட்டி வளர்க்காத பெற்றோரின் குற்றமா அன்றி,

துன்பம் தீர்வது பெண்மையி னாலடா!
சூரப் பிள்ளைகள் தாயென் றும் போற்றுவோம்.
வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்
கலிய ழிப்பது பெண்க ளறமடா!
கைகள் கோர்த்துக் களிப்பதுநின் றாடுவோம்.!

என்று கணவனை வழிநடத்திச் செல்லும் வனமையையும் வளர்த்திக் கொள்ளாதது அவளுடைய குற்றமா? சிந்திக்க வேண்டும் நண்பர்களே. பெண் குழந்தைகளை கட்டுப்பாடுகள் வைத்து வளர்க்க வேண்டியது அவர்களுடைய பாதுகாப்பிற்காக மட்டுமே என்று வாதிடும் பெற்றோராக இருந்தாலும், அவளுக்கு தற்காப்பு என்ற தாரக மந்திரத்தையும், வாழ்க்கையில் எத்தகைய பிரச்சனைகள் வந்தாலும், கோழைத்தனமான முடிவு எடுக்காமல், எதிர்த்து நின்று சமாளிக்கும் வல்லமையையும் ஊட்டி வளர்க்க வேண்டாமா?

ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன், பெற்றோரின் பொறுப்புகள் அதிகமாவதை உணரும் நாம், தங்கத்தையும், வெள்ளியையும் சேர்க்க ஆரம்பிக்கிறோம். அவளுடைய சுயவலிமையை மேம்படுத்திக் கொள்ளும் கலையைக் கற்பிக்கத் தவறுகிறோம். திருமணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஒரு பகுதி மட்டுமே. அதற்கு அவள் தன்னை முழுவதுமாக தயார்படுத்திக் கொள்ளவேண்டும். அதற்கு அவளுக்குத் தேவையான கல்வியறிவை ஊட்டவேண்டும். சுயவிழிப்புணர்வை ஏற்படுத்தி வாழ்க்கையில் நேர்படும் பிரச்சனைகளை எதிர்த்து நின்று சமாளிக்கும் சக்தி கொடுப்பதும் அக்கல்வியறிவு மட்டுமாகத்தானே இருக்க முடியும். அக்கல்வியறிவை எப்பாடுபட்டேனும் அளிக்க வேண்டும் என்பதில் உறுதி கொள்ள வேண்டும். அது மட்டுமே இது போன்றதொரு பிரச்சனைகள் வராமல் தடுக்கக்கூடிய காப்பாக அமைய முடியும் அல்லவா.

”தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.”
என்னும் ஐயனின் வாக்கைக் காக்கும் பெண்மகளாக வாழும் வாய்ப்பை வளப்படுத்துவோம்!

தயவுசெய்து உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

தொடரும்.

படங்களுக்கு நன்றி:

http://ssubbanna.sulekha.com/albums/bydate/2009-09-20/slideshow/281605.htm

http://trade.indiamart.com/details.mp?offer=2095133988

காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...