Thursday, May 16, 2019

விட்டு விடுதலையாகு!



தேவையற்ற விசயங்களை இழுத்துப் பிடித்துக்கொண்டிருக்காமல் அவற்றை போகவிட்டால்  நாம் சுமையின்றி சுதந்திரமாக இருக்கலாம். ஆனால் என்ன சொல்வதற்கு மட்டுமே எளிதாக இருக்கிறது. பந்தம், பாசம் என்பதெல்லாம் நம்மை எங்கே விடுகிறது. 


பாபா கூறுவது போன்று, குறுகிய வாய் கொண்ட பானையில் உள்ள தின்பண்டத்தை எடுக்க நினைக்கும் குரங்கு கையை உள்ளே விட்டு கை நிறைய அப்பண்டத்தை அள்ளிக்கொண்டு, மூடிய கையை வெளியே எடுக்கவும் முடியாமல், பண்டத்தை விடவும் மனமில்லாமல் அந்தப் பானையைச் சுமந்து கொண்டு இங்கும், அங்கும் ஓடி எளிதாக மாட்டிக்கொள்ளவும் செய்கிறது. கையில் பிடித்துக் கொண்டிருப்பதை விட்டு விலகினால் தாம் சுதந்திரமாகத் திரியலாம் என்பதை உணராமலே சுமந்துத் திரியும் அந்தக் குரங்கைப் போலத்தான் நாமும் தேவையற்றவைகளை தூக்கிச் சுமந்துத் திரிகிறோம்...

என் பொன்மொழிகள்






Thursday, May 2, 2019

சர்வதேச நட்பின் சின்னம்! சுதந்திர தேவி சிலை!



எல்லீஸ் தீவு அருங்காட்சியகம்  நியூயார்க், அமெரிக்கா
சர்வதேச அளவில் நட்பு, விடுதலை, மக்களாட்சியினை வெளிப்படுத்தும் சின்னமாக விளங்கும் சுதந்திர தேவி சிலை, உலகின் எட்டாவது அதிசயமாகக் கருதப்படுகிறது. அமெரிக்க நாட்டின் நுழைவாயிலாக உள்ள சுதந்திர தேவி சிலை 1880 ஆம் ஆண்டில் பாரீசியர்களால் கட்டமைக்க ஆரம்பிக்கப்பட்டு, 1886 இல் நியூயார்க் நகரின் உன்னத படைப்பாகவும், உலகின் மிக உயரமான சிலை வடிவமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் மீது பிரான்சு நாடு கொண்ட நட்பின் அடையாளமாக, அமெரிக்கா சுதந்திரம் பெற்ற நூற்றாண்டு விழா பரிசாக அளிக்கப்பட்ட அதிசயம்! ‘Libertas’ என்ற உரோமாபுரி கடவுளின் உருவில் வடிவமைக்கப்பட்ட சிலை என்றும் கூறப்படுகிறது.
Liberty Enlightening The World என்று அழைக்கப்படும் இந்த பிரம்மாண்டமான சுதந்திர தேவி சிலை அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஹட்சன் ஆற்றின் துறைமுகத்தில் உள்ள லிபர்ட்டி தீவில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் சுதந்திர தேவி சிலையைக் காணவேண்டும் என்ற ஆவலில் 30 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் அமெரிக்காவிற்கு செல்கிறார்கள்.

1865இல் எடுவர்ட் டி லெபோலயி என்பவரின் தலைமையில் ஒரு அறிஞர் குழு, தங்கள் சொந்த நாட்டின் அரசியல் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க நாட்டிற்கு, சுதந்திரம் மற்றும் விடுதலையின் குறியீடாக ஒரு நினைவுப் பரிசை வழங்கி கௌரவிக்க முடிவு செய்தனர். அதற்கான சரியான நேரமாக அது அமைந்தது. ஆம், உள் நாட்டுப் போர் நிறைவடைந்து, அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டு, நாடு தமது நூற்றாண்டு விழாவை எதிர்நோக்கியிருந்தது. ஈபில் டவர் கோபுரத்தை வடிவமைத்த குஸ்ட்டேவ் ஈபிள் எனும் நபர் தான் அமெரிக்க தேவி சிலையையும் வடிவமைத்தவர்.

தேசியவாதம், செழிப்பு மற்றும் நவீன தொழில்நுட்பம் ஆகியவைகள் இந்த நினைவுச் சின்னத்தின் ஒரு சகாப்தத்தை தோற்றுவித்தது. லெபோலேயியின் இளம் சிற்பி நண்பன் அகஸ்டி பர்தோல்டிக்கு, பிரம்மாண்ட நவீன சிற்பம் உருவாக்கும் இந்த அரிய வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. இருபத்தியொரு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சமுத்திரத்தைத் தாண்டி நியூயார்க் துறைமுகத்தில் உலகிற்கு சுதந்திர விளக்கேந்தி நெடிதுயர்ந்து இன்றும் நிலையாக நின்று கொண்டிருக்கின்றது. 1886 இல் அமெரிக்காவிற்கு அர்ப்பணம் செய்த பின்பு பிரான்சு நாட்டுப் பிரதமர், இந்த சுதந்திரதேவி கடல்களுக்கு அப்பாலும் வெகு தொலைவிற்குச் சென்று நம் பிரான்சு நாட்டை மேலும் பிரமாண்டமாக்கப்போகிறாள் என்பதில் ஐயமில்லை என்று அறிவித்தார்.
ஆனால் சுதந்திர தேவியின் உருவம் ஏற்கனவே எண்ணற்றோரின் உள்ளத்திலும் வடிவமைக்கப்பட்டிருந்தது. பிற்கால 1800களின் பெருவாரியான குடியேற்றங்களுக்கு இடையில், வளர்ந்துவரும் கடுமையான குடியேற்றத் தடைச் சட்டத்தையும் மீறி, சுதந்திர தேவியின் திருவுருவம், ‘புலம் பெயர்ந்தோரின் தாய்’ என்ற ஆழமான உணர்வுகளால் ஆன கருத்தாக்கமாக, அவர்தம் இதயங்களில் ஊடுறுவிக் கொண்டிருந்தது.

சனவரி 1, 1892 ஆம் ஆண்டில் அமெரிக்க எல்லீஸ் தீவு குடிவரவு நிலையம் மூலமாக, அயர்லாந்திலிருந்து குடிபெயர்ந்த அமெரிக்காவின் முதல் குடிபெயர்வாளராக உள் நுழைந்தவர் 15 வயது அன்னி மூர் என்பவர். இவருக்கு அப்போதைய அமெரிக்க குடியேற்ற கண்காணிப்பாளர் ஜான் வேபர் மூலமாக பத்து டாலர் தங்க காசுடன் வரவேற்பளிக்கப்பட்டதாம்! அதன் பிறகு 1895இல் இவர் ஜோசப் ஆகஸ்டஸ் என்பவரை மணம் புரிந்து, நியூ யார்க் நகரில் குழந்தைகளுடன், 47 வயது வரை வாழ்ந்து மறைந்திருக்கிறார்.

முதலாம் உலகப் போரின் சமயத்தில் குடியேற்ற எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டதால் சுதந்திர தேவியின் பங்கு பரிணாமம் பெற்றது. போர் பத்திரங்கள் வாங்க வேண்டியும், இராணுவத்தில் பங்கு பெறவும் குடிகளை கேட்டுக்கொள்ளும் பளபளக்கும் சுவரொட்டிகள் அனைத்திலும் சுதந்திர தேவியின் திருவுருவமே மொத்த அமெரிக்கா என்பதாக உருவகப்படுத்தப்பட்டது. பிற்காலங்களில் சுதந்திர தேவி சிலையின் பிம்பமே அனைத்து அரசியல் செயல்பாடுகளுக்கும் தலைமை வகித்தது. அன்றிலிருந்து இன்றுவரை உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் மக்களை ஈர்த்துக் கொண்டும் இருக்கிறது.
வலது கரத்தில் தீப்பந்தமும், இடது கரத்தில், “சூலை 4, 1776” என்று எழுதப்பட்ட, அமெரிக்க விடுதலைப் போர் சரித்திரத்தைக் குறிக்கும் புத்தகமும் உள்ளன. சுதந்திர தேவியின் சிலையின் தலையில் உள்ள 7 முனைகள் கொண்ட கிரீடம் 7 கண்டங்களையும், 7 கடல்களையும் குறிக்கின்றன. பீடத்திலிருந்து சிலையின் உயரம் 93 மீட்டர் என்பதோடு சிலையின் உயரம் மட்டும் 34 மீட்டர். இந்த புகழ்மிக்க சிலை தாமிரத்தில் செய்யப்பட்டுள்ளது. இச்சிலையில் பயன்படுத்தப்பட்ட மொத்தத் தாமிரத்தின் எடை 27.2 டன். இரும்பின் எடை 113.4 டன். சிலையின் மொத்த எடை 204.1 டன்.
சுதந்திர தேவியின் சிலை குறித்து அதன் படைப்பாளர் பர்தோல்டியின் கருத்து:
அந்த பிரம்மாண்டமான சிலை வெறுமனே ஒரு சரணாலயமாக மட்டுமல்லாமல் பார்வையாளர்களின் மனதில் ஒரு ஆழமான உணர்வை உருவாக்க வேண்டும். அதுவும் அது அதன் அளவின் காரணமாக அல்ல, ஆனால் அதன் அளவைப் புரிந்துகொள்வது, அது ஆக்கிரமித்துள்ள இடத்தின் அளவிற்கு அதன் உன்னதமான தத்துவத்தை உள்வாங்கி, தாங்கிக்கொண்டு நிமிர்ந்து நிற்கும் அற்புதமாக இருக்க வேண்டும்.

இந்த கருத்தாக்கமே, இச்சிலையைக் கண்டுகளிக்க வரும் உலக மக்கள் அனைவரின் மனத்திலும் சுதந்திரம் தன் உயிர் மூச்சு என்ற ஒருமித்த கருத்தை உருவாக்கத் தவறுவதில்லை என்பதை முழுமையாக உணர முடிகின்றது! இதன் காரணமாகவே இச்சிலை உலக அதிசயங்களுள் ஒன்றாகத் திகழ்வதாகக் கொள்ள முடிகின்றது என்பதும் நிதர்சனம்!

Monday, April 22, 2019

மக்களாட்சி?

பிரித்தானிய நாடாளுமன்ற மரபுகளை ஒட்டியே நம் இந்திய நாடாளுமன்ற நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
தேசிய அரசும் உள்ள இங்கிலாந்தில், தேர்தலில் எந்தக் கட்சியும் அருதிப் பெரும்பான்மை பெறாவிட்டால், மற்ற கட்சிகளோடு இணைந்து தேசிய அரசு அமைக்கப்படும். இதில் முக்கியமான விசயம் குதிரை பேரத்திற்கு வாய்ப்பு கிடையாது. அந்தந்த கட்சிகள் வாங்கிய வாக்கு சதவிகிதத்திற்கு ஏற்ப அமைச்சரவைப் பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. இதிலும் தனி நபர்களை விட அந்தந்தக் கட்சியே கருத்தில் கொள்ளப்படும். இங்கிலாந்தில் போர்க்காலங்களிலும், அவசரக் காலங்களிலும் இது போன்ற அரசுகள் உருவாக்கப்படுகின்றன. 

நம் நாட்டில் ஒருவேளை மக்கள்  தொங்கு பாராளுமன்ற அமைப்பை விரும்பிவிட்டால் நமது அரசின் நிலை என்னவாக இருக்கும்? அதாவது எந்தக் கட்சிக்கும் அருதிப் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காமல் போனால் தொங்கு பாராளுமன்றம் அமையும்! பின்  குதிரைப் பேரம் தான் நடக்கும். தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், அதை உடைத்தும், சிறு கட்சிகளை விலைக்கு வாங்கவும் திறமையுள்ளவர்கள் ஆட்சி அமைத்துவிடுவார்கள். இது மக்களாட்சியின் சரியான நிலையா?
#டவுட்டு 

Friday, April 19, 2019

நமது நாட்டிற்கும் இது சரிவருமோ?


ஒரு அரசோ அல்லது தொழிலகமோ எந்த நிர்வாகமாகவோ இருந்தாலும் அதன் வெற்றி, தோல்வி என்பது அதன் நிர்வாகிகளின் நிர்வாகத் திறன் சார்ந்ததாகத்தான் உள்ளது. அந்த வகையில் உலகில் மக்கள் தொகை மிக அதிகமாக உள்ள சீனாவில் தொழிலாளர் தட்டுப்பாடு பிரச்சனை மிக அதிகம். அந்த நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவர் இதனை சமாளித்து சரி செய்வதற்காக ஒரு நாளைக்கு 12 மணி நேர வேலைத் திட்டம் என்பதை தீவிரமாக சிந்தித்து செயல்படுத்த ஆரம்பித்துள்ளார். 

தமிழ் நாட்டில் திருப்பூர், கோவை, ஈரோடு, உடுமலைப்பேட்டை, பல்லடம், போன்ற தொழில் நகரங்களில் அந்தந்த தொழிலுக்குரிய தொழிலாளர்கள் கிடைக்காத பிரச்சனை பெருமளவில் உள்ளன. 50% தொழிலாளர்களை மட்டுமே வைத்துக்கொண்டு தொழிலை சரிவர நடத்த முடியாத நிலையே பெரும்பாலும் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கங்காணிகள் மூலமாக நமது தமிழர்கள் சிலோன், மலேசியா, பர்மா போன்ற நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டது போல இன்று பீகார் மற்றும் வட மாநிலங்களிலிருந்து ஏஜண்டுகள் மூலமாக ஆட்கள் அழைத்து வரப்படுகின்றனர். அதிலும் ஆட்கள் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு உள்ளதை சரி செய்ய முடிவதில்லை. தேவைப்படும் தொழிலாளர்களை முன்கூட்டியே பதிவு செய்து வைத்தாலும், அந்த அளவிற்கு பணியாட்கள் கிடைப்பதில்லை. அதுவும் ஹோலி போன்ற வட நாட்டுப் பண்டிகைகள் சமயங்களில் 2, 3 மாதங்கள் வேலைக்கு வராமல் சொந்த ஊர் பார்க்கப் போய்விடுவார்கள். 

இந்தியாவில் சம வளர்ச்சி, சம வேலை வாய்ப்புகளும் இன்றும் கேள்விக் குறியாகவே உள்ளது. பீகார், இராஜஸ்தான், உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், அரியானாவின் சில பகுதிகள், போன்றவைகள் இன்றும் சரியான வளர்ச்சியடைந்த மாநிலங்களாக இல்லை. அங்குள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன அல்லது வாய்ப்புகளே இல்லை என்றுதான் கூற முடிகிறது. இந்த மாநிலத்தைச் சார்ந்தவர்கள்  வேலைக்காக மகாராட்டிரத்தையும் கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டையும் சார்ந்தே இருக்க வேண்டியுள்ளது. ஆனாலும் குடும்பத்தை விட்டு அவர்களும் எவ்வளவு காலம்தான் விடுமுறை எடுக்காமலே வெளியில் தொடர்ந்து பணியாற்ற முடியும். 

சீன தொழிலதிபரின் திட்டம் போன்று நமது மேற்கு மண்டல தொழிலதிபர்களும் 12 மணி நேர வேலை என்ற திட்டம் பற்றி சிந்தித்து அதற்கான முயற்சி எடுக்கலாம். அதே சமயம் மத்திய, மாநில அரசுகளும் சம வளர்ச்சியும், சம வாய்ப்புகளும் ஏற்படுத்தக் கூடிய செயல் திட்டங்களை முன்னெடுத்தால் நலம் கூடுவதோடு நாட்டின் வளமும் பெருகும்! 

Monday, April 8, 2019

மறு சீராய்வு?



நம் பள்ளிக் கல்வித் திட்டங்களில் மறு சீராய்வு மிகவும் அவசியம் என்பதே இன்றைய நிலையாக உள்ளது. மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி தோல்வி அடைவதும், மதிப்பெண்கள் குறைவாகப் பெறுவதற்கும் அவர்கள் மட்டும் காரணமல்ல. அவர்களின் ஆசிரியர்களுக்கும் இதில் பங்குண்டு. மாணவர்களின் புரிதலுக்கு ஏற்றவாறு கற்பித்தலும் ஆசிரியர்களின் கடமை. மேற்கத்திய நாடுகளில், அரசுப் பள்ளிகளில் பயிலும் ஒவ்வொரு மாணவரும் மாதாந்திரத் தேர்வுகள், காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் அவர்கள் பெறும் மதிப்பெண்களுக்குரிய வரைகலை தயாரிக்கப்பட்டு  அவைகள் கல்வித்துறையின் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்படுகின்றன. மாணவர்களின் வெற்றி தோல்விக்கு முக்கியமாக ஆசிரியர்களையே பொறுப்பாக்கி அவர்களைக் கண்காணிக்கும் வகையில் தனிப்பட்ட கணினித் துறையே செயல்படுகின்றன. நமது நாட்டில் மட்டும் மதிப்பெண்களுக்கு மாணவர்களை மட்டுமே காரணமாகக் காட்டி பெற்றோரும், ஆசிரியர்களும் தப்பித்துக் கொள்கின்றனர். இந்த வகையில் நமது பள்ளிகளிலும், குறிப்பாக அரசு பள்ளிகளில் இது போன்று மறு சீராய்வு செய்வதால் கல்வித் தரம் உயர்வதுடன், மதிப்பெண்கள் குறைவதால் பல மாணவர்கள் தற்கொலை போன்று தவறான முடிவுகள் எடுப்பதிலிருந்து காப்பாற்றலாம். 

பள்ளி மாணவர்களின் கல்வி குறித்த மதிப்பீடு முக்கியம். ஏன்?

மாணவர்களின் கற்றல் செயல்பாட்டின் முக்கியமான பகுதி என்றால் அது, கல்வி குறித்த அவர்களின் புரிதலை நிரூபிக்க வேண்டியதும், கல்வி குறிக்கோள்கள் மற்றும் தரநிலைகள் நிறைவேற்றப்படுகிறதா என்பதை மதிப்பீடு செய்ய வேண்டியதும் அவசியம்.

கல்விக்கான இலக்குகள் நிறைவேற்றப்படுகிறதா இல்லையா என்பதை தீர்மானிப்பதால்  மதிப்பீடு என்பது கல்வி கற்பித்தலின் முக்கியமான ஒருங்கிணைந்ததொரு பகுதியாகிறது.  மதிப்பீடுகள் கல்வியின் தரம், வேலைவாய்ப்பு, முன்னேற்றம், அறிவுறுத்தல்கள், பாடத்திட்டங்கள் போன்றவைகளைப் புரிந்து கொள்ள உத்வேகம் அளிக்கிறது.  கற்பிக்க வேண்டியவற்றை சரியாகக் கற்பிக்கிறோமா? மாணவர்கள் கற்க விரும்புவதைக் கற்றறிந்து கொண்டார்களா?  ஆகச்சிறந்த கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கு வழி அமைகிறதா, அதன்மூலம் அவர்தம் நம்பிக்கைகள் வளர்கிறதா போன்ற பல வினாக்களுக்கு விடையளிக்கக்கூடியதாகும் இந்த மதிப்பீடு.

இன்றைய மாணவர்கள் அடிப்படை வாசிப்பு மற்றும் கணிதத் திறமைகளை மட்டுமல்ல, தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கும் உலகத்தை எதிர்கொள்ளும் திறன்களையும் முழுமையாகப் பெற வேண்டும். அவர்கள் ஆழ்ந்து சிந்திக்கவும், பகுப்பாய்வு செய்யவும், மற்றும் அனுமானங்களை முன்னெடுக்கவும் வாய்ப்பு அமைய வேண்டும். திறன்கள் அடிப்படையிலும் அறிவு மேன்மைகளிலும் நமது மாணவர்களுக்கு புதிய கற்றல் இலக்குகளை நிர்ணயிக்க வேண்டிய தேவையும் அதிகமாகிறது. இந்த புதிய கற்றல் இலக்குகள், மதிப்பீடு செய்வதன் மூலமாக புதிய பரிமாணங்களைப் பெறுகிறது. அந்த வகையில் ஆசிரியர்கள் மதிப்பீட்டு நோக்கத்திற்காகவும், மதிப்பீடு செய்ய வேண்டியத் தேவைகள் பற்றிய முடிவுகளை எடுக்கும் வகையிலும் மறு சீராய்வு செய்ய வேண்டியதும் அவசியம்.

காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...