Wednesday, February 2, 2011

ஆழ்வார்க்கடியானின் பாசுரமடல்கள்: ஓர் அலசல் - பகுதி - 1.

ஆழ்வார்க்கடியானின் பாசுரமடல்கள்: ஓர் அலசல்


என்றும் இருக்க உளங்கொண்டாய்!
இன்பத் தமிழுக் கிலக்கியமாய்:
இன்றும் இருத்தல் செய்கின்றாய்!
இறவாத் தமிழோ டிருப்பாய்நீ!
ஒன்று பொருளஃ தின்பமென
உணர்ந்தாய் தாயு மானவனே!
நின்ற பரத்து மாத்திரமோ?
நில்லா இகத்தும் நிற்பாய்நீ!

தமிழ் கூறும் நல்லுலகோருக்கு!

வணக்கம். ஓர் படைப்பிலக்கியம் என்பது, அடிப்படையில் ஓர் மூலக் கருத்தைக் கொண்டிருந்தாலும் அதனை எடுத்தாள்பவர்களின் போக்கிற்கிணங்க, பல்வேறு பரிமாணங்களைப் பெறுவதும் நிதர்சனமாகிறது. அந்த வகையில், சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்வார்கள் இயற்றிய பாசுரங்கள் இன்றளவும் இரசிக்கத்தக்கதாய் இருப்பதே நித்யமான தமிழன்னையின் இனிமை மற்றும் இளமைக்குச் சான்றாகிறது.

எழுத்தாளர் திரு நா.கண்ணன் அவர்கள் ஆழ்வார்களின் பாசுரங்களை அடிப்படையாகக் கொண்டு 108 மடல்களாக தொகுத்துள்ளார்கள்.

இருபதாம் நூற்றாண்டின் பரிணாமவியல் விதியின்படி, வேற்றுமை விரிந்து இருக்கும் போதுதான் உயிர்த் தொடர்ச்சி காலத்தை வெல்கிறது என்றும், இந்திய மெய்யியல் இன்றளவும் காலத்தை வென்று நிற்பதற்கு அதன் பல நோக்கு அணுகுமுறைதான் காரணம் என்றும் கூறுகிறார் ஆசிரியர். இந்த பன்னோக்கு அணுகுமுறையைத் தான் தன்னுடைய பாசுர மடல்களாக வடித்துள்ளார் ஆசிரியர். கருத்தாழமிக்க இப் பாசுரங்கள் நயமாக எடுத்துரைக்கப் பட்டிருந்தாலும், ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய பல பகுதிகள், தமிழறிஞர்களின் பார்வைகளில் மூலம் மேலும் பல பரிமாணங்களைக் காணக்கூடுமே என்ற ஆவலும் மிகுதியாவதன் காரணமே இதனை படித்தான் படித்துரையில் யான் எடுத்துக் கொண்டதன் நோக்கம். தயை கூர்ந்து தமிழறிஞர்கள் இதனைத் தொடர்ந்து படித்து மகிழ்வுறுமாறு வேண்டிக் கொள்கிறேன். நன்றி

.
அடியார்கள் வாழ, அரங்க நகர் வாழ
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ-கடல் சூழ்ந்த
மண்ணுலகம் வாழ மணவாள மாமுனியே
இன்னுமோர் நூற்றாண்டு இரும்.


பாசுரங்கள், நாம் பன்முறை கேட்டு இன்புற்ற ஒன்றுதான் என்றாலும், ஆழ்வார்கள் முதன் முதலில் தமிழகத்திற்கு அறிமுகமாகும் நிகழ்வு, ஒரு சுவாரசியமான கதையன்றோ. ஒருவர் கிடக்க, இருவர் இருக்க, மூவர் நிற்க எனும் அந்த அழகிய பழம் புராணக் கதையை ஆசிரியர்
“ஆழ்வார்கள் முதலில் தமிழகத்திற்கு அறிமுகமாகும் நிகழ்வே மனிதநேயம் மிக்க செய்தியாக அமைகிறது.”, என்று வர்ணித்திருப்பது மூலம் அவர்தம் பாசுரமடல்களின் போக்கின் திசையை ஆரம்பத்திலேயே தெளிவாக்கிவிடுகிறார்.

1300 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட பாசுரங்களின் நிகழ்வுகள் உண்மையா, புனைவா என்ற தேவையில்லாத வாதத்தை விட்டு, தற்காலத்திற்கேற்றவாரு அதன் மூலம் பயன்பெறும் தந்திரம் அறிந்துள்ளார்.

’ஒண்டவந்த பிடாரி ஊர்பிடாரியை துரத்திய கதையாக’, என்று பழைய பழமொழி கொண்டு, பகிர்தல் தரும் இன்பம் குறித்து மிக யதார்த்தமான இன்றைய வாழ்வியல் சூழல்கள் கொண்டு விளக்கியிருப்பது சிறப்பு.

இவர் இறைவனை எளிதாக அடையும் மார்க்கம், கீதையில் கண்ணன் காட்டிய கர்ம யோகத்திற்கு ஒத்ததாகவே உள்ளது.

பாயிரம் வாயிலாக தமிழ் மறுமலர்ச்சி என்ற தலைப்பில்,
”பொய்கையின் முதல் பவாவைப்பாருங்கள். உலகை ஒரு அகல் (விளக்காகக்) கொண்டு, வார் கடலை நெய்யாக இட்டு, வெய்ய கதிரோனை விளக்காக வைத்து பிரபஞ்ச கர்த்தாவைப் பார்க்கிறார். "அப்பாலுக்கு அப்பாலாய்" உள்ள இறைமையை அப்படிப் பார்த்தால்தான் தெரியும் போலும்! இல்லை அவன் பிரம்மாண்டத்தை உணர, அப்படியொரு பெரிய விளக்கு வேண்டும் போலுள்ளது! இவர் நோக்கில் அறிவு உரத்த சிந்தனை (அதாவது ஞான மார்க்கம்) இருக்கிறது.” - அறிவியலையும் ஆன்மீகத்தையும் அற்புதமாக இணைத்திருக்கிறார் ஆசிரியர்.

’ஸ்ரீ’ என்ற சொல்லிற்கும் ‘ திரு’ என்ற சொல்லிற்கும் பொருளை வெகு நேர்த்தியாக விளக்கிய பாங்கு, பூனைக்கும் சோறு - பாலுக்கும் காவல்!

சமண, பௌத்த மற்றும் ஜென் மதங்களையும் ஒப்பிட்டு, வரலாற்றுத் தகவல்களையும் வழங்கத் தவறவில்லை இந்த பன்முக நாயகர்.

ஆழ்வார்கள் அருளிய மங்களாசாசனம் மற்றும் நாயன்மார்கள் அருளிய பாடல்களையும் அழகுற ஒப்பிட்டு, ஹரியும், சிவனும் ஒன்றே என்பதையும்,

”இடதுபுறம் திருமால், திருத்துழாய் (துளசி). துகிலாடை (பீதாம்பரம்), சுடராழி (சக்கரம்), கரிதால் (கரிய நிறத்தவனான கண்ணன்); வலது சேது (சிவப்பான சிவன்), கொன்றை, புலித்தோல், மான் இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து..... ” என்ற சேரமான் பெருமாள் நாயனாரின் பொன்வண்ணத்தந்தாதி என்னும் பாடல் மூலம் தெளிவுபடுத்தியது அருமை.

பொதுவாக ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்ற மகான்களின் வாக்கை அருளியதாகவே சொல்வது மரபு. அதற்கான ஆசிரியரின் வியாக்கியானம் வரவேற்கத்தக்கது.

”வேதாந்தம் என்பதற்கு வேதத்தின் அந்தம் என்று ஒரு பொருள் கொள்ளலாம். வேதம் என்பதை கல்வி-கேள்வி என்று கொண்டால் அது முடியும் பொது இறைவன் வருகிறான். அதாவது கல்வி- கேள்வி என்று இருக்கும் வரை நாம் "தெரிந்த" என்ற ஒரு குறையுள்ள (நிறைவு பெற முடியாத -கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு) நிலப்பரப்பில் நிற்கிறோம். நம் கல்வி-கேள்வி, பட்டம், பதவி இவையெல்லாம் "நான்" என்பதற்குள் அடக்கம். "நான்" அடங்கி, தெரிந்த நிலப்பரப்பபை விட்டு அகலும் பொது இறைமை ஆட்கொள்ளுகிறது (அதாவது உருவகமாச் சொன்னால்-வேங்கடம் வீடாகிறது)” - என்ற ஆசிரியரின் விளக்கம் தேர்ந்த ஞானமுள்ளவையாக இருப்பது இயல்பு.

” விதையாக நற்றமிழை வித்திட்டாய்.” - என்ற அழகிய தலைப்பில், மொழியின் ஆதியும், அந்தமும் திறம்பட ஆய்ந்தளித்திருக்கிறார், ஆசிரியர், திருமழிசை ஆழ்வாரின் பாசுரத்தின் ஆதாரம் கொண்டு.

கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினையாவி தீர்ந்தேன் விதையாக
நற்றமிழை வித்தியென் உள்ளத்தை நீ விளைவித்தாய்
கற்ற மொழியாகிக் கலந்து , என்ற பாசுரம் மூலம் ஆழ்வார்கள் தமிழ் மொழி பால் கொண்ட காதலை நயம்பட விளக்கியுள்ளார்.

ஆன்மீக வளர்ச்சி சீராக அமைய, மனம் ஒருநிலைப்பட்டு இருக்க வேண்டும் என்பதையும் வாசகருக்கு எளிதாக புரியும் வண்ணம் அமைத்திருப்பது சிறப்பு.

”இந்த ஒரு பாடலை ஆரம்பமாக வைத்துத்தான் ஆழ்வார்கள் தமிழ் (திராவிட) வேதத்தை படைக்கின்றனர் என்பது என் ஊகம். வேதம் சொல்லும் மொழி உயர் தனிச் செம்மொழியாக இருக்க வேண்டும். ஆழ்வார்கள் தமிழால் அது முடியும் என்று செய்து காட்டினர். வேதத்தின் சாரமாக மட்டுமில்லை, வேத உபநிஷத்துக்களுக்கும் விளக்கம் தேடி பாசுரங்களுக்கு வரும் நிலையை உருவாக்கினர் ஆழ்வார்கள். இவர்கள் செய்வித்தது ஞானத்தமிழ்” என்று, தன்னுடைய ஊகத்தையும், தெளிவாக்கியிருக்கிறார் இவர்.

ஆழ்வார்க்கடியானின் பாசுரமடல்களின் தனிச்சிறப்பே அதன் தலைப்புக்கள் தான்.

ஆழ்வார்கள் கி.பி. 7ம்நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 8ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பது போன்ற வரலாற்றுப் பின்னனித் தகவல்களும் அளித்திருப்பதால், சமூக ஆர்வலர்களுக்கும் இம்மடல் பயன் தர வல்லதாக அமைந்திருக்கிறது எனலாம்.

”இப்படி "ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து, காத்து, கெடுத்து உழலும்" ஒன்றை வார்த்தைகளால் பிடிக்க முடியுமா? என்பது அடுத்த கேள்வி. அன்றைய ரிஷிகளிலிருந்து, இன்றைய ஜே.கிருஷ்ணமுர்த்திவரை இதைசொல்லி களைத்து இருக்கிறார்களே தவிர உண்மையையாய் " சொல்ல" முடியவில்லை! "சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல யார் வல்லரே?" என திருமழிசை கேட்பது சரிதான்!” - ஆசிரியரின் ஆழ்ந்த தத்துவ ஞானங்கள் விளங்கச் செய்கிறது.

ஆழ்வார்களின் ஆழ்ந்த பக்தி நெறியை, கி.மு. 400 - 200 க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுந்த சங்ககால இலக்கிய மரபைத் துணை கொண்டு, மனித உறவுகளின் பசலை நோயுடன், ஒப்பு நோக்கி, வாசகரை பல்வேறு தளத்திற்கு அழைத்துச் செல்வதிலும் வெற்றி கண்டிருக்கிறார், இந்த வித்தகர்.

” சோணியோ, தொத்தலோ எல்லோருக்கும் காதல் வருகிறது!! எதாவதொரு சமயத்தில் காதல் வசப்பட்டு உருகுகிறார்கள். இது அடிப்படை! காதல் உணர்வு மனிதனை தளிர்ப்பிக்கும் உணர்வு. காதல் கொண்ட மக்களின் முகத்தைப்பார்த்தாலே ஒரு "பொலிவு" தெரியும்” - இப்படி வெகு யதார்த்தமான நடையில், அத்தோடு நில்லாமல் பாரதியையும் துணைக்கழைத்துக் கொண்டு, ஆழ்வாரின் அன்பை உணரச் செய்திருப்பது பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது.

சாதிகள் இல்லையடி பாப்பா என்ற தலைப்பில், சங்க கால இலக்கியங்களையும், சாதி வேறுபாட்டையும்,முகம்மதிய, ஆங்கிலேய ஆட்சிக்காலத்தின் பிறகு வந்த மாற்றங்கள் போன்றவற்றை பல உன்னத உதாரணங்கள் மூலம் உணரச் செய்திருப்பது வாசகருக்கு, பல்வேறு வரலாற்றுத்தகவல்கள் அறிந்து கொண்ட திருப்தியையும் ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைந்துள்ளது நிதர்சனம்.

பக்தி இயக்கத்தின் முக்கிய நோக்கு ரசனை, அழகுணர்ச்சி.........இப்படி இளைஞர்களயும் பக்தி மார்கத்தில் கொண்டு செலுத்தும் உபாயமும் கையாளப் பட்டிருக்கிறது..............

“ஆணாதிக்க சமுதாயத்தில் பிறந்து வளர்ந்த ஆண்டாள் ஆணாதிக்கத்திற்கு கொடுக்கும் சவுக்கடி, "அட பொடியன்களா! நீங்கள் எல்லாம் எனக்கு சமமா! உயர் பொருளான கண்ணன் அல்லவோ எனக்கு சரி சமம்" அவளது கால கட்டத்தை நினைத்துப் பார்த்தால் இது மாபெரும் புரட்சிகரமான போக்கு. இப்போது கூட, அடிமைப்பட்டிருக்கும் இந்திய பெண்ணிற்கு ஆண்டாளின் தைர்யத்தில் கால் பங்கு இருந்தால் கூட பாரதி சொல்லும் புதுமைப் பெண் வந்து நிற்பாள்.” - எப்படி புரட்சிகரமாக கொண்டு செல்கிறார், பாருங்கள். மனம் இருந்தால் மார்கமுண்டு என்பதை சத்தியமாக்கும் பகுதி இது...........

ஆழ்வார்களின் அழகுணர்ச்சி மெய்சிலிர்க்கச் செய்வதாக உள்ளதும் நிதர்சனம்.

ஆழ்வார்க்கடியானின் பாசுரமடல்களின் முழுமையான சுவையை அனுபவிக்க விரும்பினால், கீழ்கண்ட சுட்டியைச் சொடுக்கி உள்ளே சென்றால், புதியதோர் உலகானுபவம் பெறலாம் என்பதும் நிதர்சனம்.


2 comments:

  1. பகிர்வுக்கு நன்றிங்க...

    ReplyDelete
  2. அழகா எழுதியிருக்கீங்க..

    ReplyDelete