Friday, February 4, 2011

கதையே கவிதையாய்...............


1883 ஆண்டில் பிறந்த கலீல் கிப்ரான் ஒரு கவிஞன் மட்டுமல்ல, தத்துவ ஞானி மற்றும் நல்ல ஓவியனும்கூட. தன் கவிதைகளுக்குத் தானே ஓவியமும் தீட்டிவிடுவான் இக்கவி. இக்கவிஞனின் படைப்புகள் 20 க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. உலகின் தலைசிறந்த நகரங்கள் அனைத்திலும் இவன் படைப்புகள் காட்சியாக்கப்பட்டுள்ளன.


இன்பமும் துன்பமும்!


மங்கையொருத்தி வந்தாள், சுக, துக்கம் பற்றிய வினவேந்தியே.

ஞானியவன் விடை பகர்ந்தான் :

உன் இன்பம் என்பது, முகமூடியணியாத உன் துன்பம் தானே!

அதாவது, உன் நிறைந்த கண்ணீரின் ஊடே எழும் உன் ஆனந்தச் சிரிப்பைப் போன்றுதான்.

வேறு எப்படி இருக்க முடியும் ?

உனக்குள்ளே அந்த துக்கம் உன்னை எத்துணை ஆழமாக செதுக்குகிறதோ, அத்துணை அளவிற்கும் அதிகமான இன்பத்தை நீ அதில் நிறப்ப முடியும்.

உன் மதுவை நிரப்பி நீ ஏந்திக் கொண்டிருக்கும் கோப்பை, குயவனின் உலையில் வெந்த அதே கோப்பை தானே !

உன் ஆன்மாவை வருடுகிற அந்த யாழிசை, கூர்மையான கத்தி கொண்டு, ஆழமாக குடையப்பட்ட அந்த மரத்துண்டினுடையதுதானே ?

நீ இன்பமாக இருக்கும் வேளையில் உன் இதயத்தின் வேர் வரை சென்று பார். எது உனக்கு துன்பத்தைக் கொடுத்ததோ, அதேதான் உனக்கு இப்போது இன்பத்தையும் கொடுக்கிறது என்பதை கண்டு கொள்வாய்.

நீ துக்கமாக இருக்கும் வேளையில் மீண்டும் உன் இதயத்தினுள் சென்று பார். எது உன்னை பெரிதும் உவகை கொள்ளச் செய்ததோ அதற்காகத்தான் நீ விசும்பிக் கொண்டிருக்கிறாய் என்ற உண்மையை உணர்வாய்.

உங்களில் சிலர், “ இன்பமே துன்பத்திலும் மேலானது”, எனலாம்.
மற்றும் சிலரோ, “இல்லையில்லை, துன்பமே மேலானது”, எனலாம்.

ஆனால் நான் உங்களிடம் கூறுகிறேன், அவை இரண்டும் பிரிக்கவொண்ணாதது.
இரண்டும் ஒன்றாகவே வரும். ஒன்று உன்னோடு ஒட்டி உறவாடும் போது, மற்றொன்று, உன் பஞ்சணையின் மீது துயில் கொண்டிருப்பதை நினைவில் கொள்.

உன்னுடைய சுகத்திற்கும், துக்கத்திற்கும், இடையே தராசைப் போன்று ஏறி, இறங்கிக் கொண்டிருக்கிறாய் நீ.

வெறுமையாக இருக்கும் வேளையில்தான், தள்ளாடாமல், சமநிலையுடன் இருக்க முடியும் உன்னால்.

கருவூலக் காவலன், தன்னுடைய தங்கம் மற்றும் வெள்ளியின் கனம் பார்க்க வேண்டி, உன்னைத் தூக்கி நிறுத்தால், உன்னுடைய சுகமோ அல்லது துக்கமோ ஏறவோ அல்லது இறங்கவோ செய்ய வேண்டி வரும்.

கலீல் கிப்ரான்.


சிவப்பிரகாசம் எனும் சைவசித்தாந்த நூல் பதினோரு முத்திகளின் இயல்புகளைக் கூறுகின்றது.

“அரிவையர்இன் புறுமுத்தி கந்தம் ஐந்தும்
அறுமுத்தி திரிகுணமும் அடங்கு முத்தி
விரிவுவினை கெடும்முத்தி மலம்போம் முத்தி
விக்கிரக நித்தமுத்தி விவேக முத்தி
பரவுமுயிர் கெடுமுத்தி சித்தி முத்தி
பாடான முத்திஇவை பழிசேர் முத்தி
திரிமலமும் அகலஉயிர் அருள்சேர் முத்தி
நிகழ்முத்தி யிதுமுத்தித் திறந்ததாமே “

[சிவப்பிரகாசம் - 50]


திரி குணமும் அடங்கு முத்தி :

சாங்கியர் வைசேடிகர் என்னும் மதத்தார் முக்குணங்களும் [ சத்துவம், ரஜஸ் தமோ குணம் ] அடங்குவதே முத்தி என்றனர்.

சத்துவம், ரஜோகுணம், தமோகுணம் என்னும் மூன்றும் ஒத்து நிற்பதே இயற்கை தத்துவமாகும். இவற்றுடன், மனிதன் சம்பந்தப்படும்போது, அறியாமை வயப்பட்டு, இன்ப, துன்பங்களை அனுபவிக்கிறான். எவன் ஒருவன், இயற்கையின் தன்மையை உணர்ந்து, அறியாமையை நீக்கி, சுக துக்கங்கள் இயற்கை சம்பந்தத்தால் ஏற்பட்டது என்பதையும், இன்ப துன்பங்கள் உண்மையில் ஆன்மாவிற்கு இல்லை என்பதையும், உணர்ந்து முக்குணங்களையும் அடக்கி நிற்கின்றானோ அவனே அமைதி [ முக்தி ] அடைகின்றான்.

4 comments:

 1. அதெல்லாம் சரிங்க

  நடமுறைக்கு ஒத்து வரமாட்டேங்குதுங்கலே  அருமையான பதிவு

  ReplyDelete
 2. அருமை. பகிர்வுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 3. நித்திலம்...இன்பமோ துன்பமோ எல்லா உணர்வுகளுமே எங்கள் மனங்களைப் பொருத்ததே.அதைத்தானே சொல்கிறீர்கள்.
  நானும் ஒத்துக்கொள்கிறேன் !

  ReplyDelete