Tuesday, March 8, 2011

அன்பே தெய்வம் !அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. - திருக்குறள்.

ஆக்னஸ் கோங்ஸா பொஜாஹியு, பிறந்தது யுகோஸ்லேவியா நாட்டின், ஸ்கோப்ஜே கிராமத்தில்., 1910ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 27 ஆம் நாள் அல்பேனிய தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். ரோமன் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்த இவர் மிகுந்த மத நம்பிக்கை உடையவர். முதல் உலகப் போரில் தன்னுடைய குடும்பம் அடைந்த வேதனைகளும், சோதனைகளும் அவரை மிகவும் பாதித்தன. இந்த சமயத்தில் தான் இந்தியாவிலுள்ள வங்க மாநிலத்தில் மிகவும் பின் தங்கிய நிலையிலுள்ள மக்களுக்கு ஒரு கிறித்துவ சேவைக் குழு தொண்டு புரிந்து கொண்டிருந்ததை அறிந்து, தானும் அவர்களுடன் சேர்ந்து தொண்டு புரியும் எண்ணம் மலர்ந்தது. இதன் விளைவாகவே, தன்னுடைய 18 வது வயதிலேயே துறவறம் பூண்டு, பற்றுக்களியெல்லாம் விட்டு தன் நாடான யுகோஸ்லேவியாவிலேயே பெண் துறவியானார்.

அயர்லாந்தில் டப்ளின் நகரத்தில் ஆங்கில மொழிப் பயிற்சியும், மதப்பயிற்சியும் பெற்ற போது, அவர் எண்ணம் இந்தியாவிலுள்ள வங்காளத்தின் மீது சென்றது. எண்டாலி என்னுமிடத்தில் அமைந்துள்ள புனித மேரி பள்ளியில் புவியியல் ஆசியையாகச் சேர்ந்தார். இதற்கு முன்பு டார்ஜிலிங்கில் உள்ள லோரடோ கன்னிமாடத்தில் கன்னிமார்களுக்குரிய ஜபம், பிரார்த்தனை முறைகள் அனைத்தையும் கற்றுக் கொண்டார். தன்னுடைய சந்நியாசப் பெயராக, தெரெஸா மார்ட்டின் என்று மாற்றிக் கொண்டார் .ஆம், மக்கள் தொண்டே நகேசன் தொண்டு என்று தன் வாழ்நாள் முழுவதையுமே மக்கள் தொண்டிற்காகவே அர்ப்பணித்துக் கொண்ட நம் அன்னை தெரெசாதான் அவர்!

புனித மேரி பள்ளியில் 17 ஆண்டுகள் தங்கி ஆசிரியப்பணியும் பின்பு முதல்வர் பணியும் மேற்கொண்டார்.1947 ம் ஆண்டின், வரலாற்று நிகழ்வான பிரிவினையின் காரணமான இடப்பெயர்வு, கொல்கத்தா மக்களை பசி, பட்டினி, குழப்பம் என்றும், கிழக்கு பாகிஸ்தானத்திலிருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்ட மக்கள் வெள்ளம், நடுத்தெருவில்..............பிரிட்டானிய ஆட்சியின் இரண்டாவது பெரிய நகரத்தின் சரித்திரம் மாறிக்கொண்டிருந்தது. இந்த அவலம் அன்னை தெரெசாவின் மனதில் பெரும் ரணத்தை ஏற்படுத்தியது.1948 இல் புனித தெரெசா பள்ளியில் ஒரு மருத்துவமனையை திறந்தார். இந்த ஆண்டிலேயே இந்தியக் குடியுரிமையும் கிடைத்தது அன்னைக்கு. 1950 இல் கல்கத்தாவில் ஏழைகளின் துயரம் துடைக்கும் சமயம் ஒன்று நிறுவப்பட்டது. தற்போதைய ஆசார்ய ஜகதீஸ் போஸ் தெருவில் அன்பு இல்லம் செயல்ப்ட்டுக் கொண்டிருக்கிறது.

அன்னையுடன் சேர்ந்து தொண்டு செய்து கொண்டிருந்த மற்ற சேவை சகோதரிகள் நாள்தோறும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் வகுக்கப்பட்டன.

அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து, முதல் இரண்டு மணி நேரம் தியானத்திலும், பிரார்த்தனையிலும், கூட்டு வழிபாட்டிலும் ஈடுபட்டு, அடுத்து எளிய உணவு உட்கொண்டு, சேவைப்பணி செய்ய இரண்டு அல்லது மூன்று குழுக்களாக பிரிந்து சென்று, நகரத்தின் முக்கிய சாலைகள், குடிசைப்ப்குதிகள் நகரத்தின் சந்துக்கள் போன்ற இடங்களுக்கெல்லாம் சென்று அங்குள்ள அனாதைகளையும், பசியாலும், பிணீயாலும் அல்லலுறுபவர்களையும் இறக்கும் தருவாயில் அனதையாக துன்புறுபவர்களையும் அழைத்து வருவார்கள். குப்பைத் தொட்டிகளில் வீசப்படும் குழந்தைகளைக் கூட தேடி எடுத்து வருவார்கள்.

தொழு நோயால் பாதிக்கப்பட்டு அறுவறுக்கத்தக்க நிலையில் இருப்பவர்களையும், துளியும் அறுவறுப்பு இல்லாமல் எடுத்து வ்ந்து சுத்தம் செய்து மருத்துவ உதவியும் அளித்து இப்படி அவ்ர்கள் செய்யும் சேவை மிக உயர்ந்ததாகும்.

அல்லல்படும் அனாதைகள் கண்னில் படும் போதெல்லாம் அன்னையின் கண்கள் குளமாகும். அவர்கள் இருக்கும் இடம் எவ்வளவு அசுத்தமாக இருந்தாலும் அவர் தயங்காமல் அவரிடம் நெருங்கி, அவர்களுக்குத் தேவையான பணிவிடைகள் செய்து காப்பாற்றத் தயங்க மாட்டார். அன்னையின் அமெரிக்க நண்பர்கள் பரிசாக அளித்த ஆம்புலன்ஸ் உதவி கொண்டு நடமாடும் மருத்துவமனையைத் துவங்கினார்.கல்கத்தா நகருக்கு அருகில் ’பிரேமதானம்’ என்ற பெயரில் தொழுநோயாளிகளுக்கு ஒரு மருத்துவமனை கட்டினார். அன்னை இந்நோயாளிகளுக்கு ஆற்றிய தொண்டு மகத்தானது. இந்தியாவில் மட்டும் 40 இலட்சம் பேர் இந்நோயால் வருந்துகின்றனர். இன்று உலகம் முழுவதும் சராசரியாக 650 நடமாடும் மருத்துவமனைகள் பரவி, 60 இலட்சம் தொழு நோயாளிகளுக்கு சேவை செய்து வருகின்றனர்.

அன்னை தெரெசாவிடம் இப்பணியில் ஈடுபடும் எண்ணம் எங்கனம் வந்தது, என்றுகேட்டால், ஏசு கிறிஸ்துவின் புனித பைபிளில் இருந்துதான் என்பாராம்.ஆன்மீக பலம்தானே ஆன்ம பலம். அன்னை தெரெசாவின் அறக்கட்டளை உலகெங்கிலும் 450 மையங்களில் செயல்பட்டுவருகின்றன. 1985 ஆம் ஆண்டு எய்ட்ஸ் நோயாளிகளுக்கென முதல் மருத்துவ சேவை இல்லம் நியூயார்க்கில் ஏற்படுத்தப்பட்டது. குவாட்டிமலாவில் நில நடுக்கம் ஏற்பட்டபோது வீடு இழந்தவர்களுக்கென அன்னை தெரெசாவால் அங்கு ஒரு மையம் உருவாக்கப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட்வர்களுக்கான ப்துகாப்பும் அளிக்கப்பட்டது. நூற்றுக்கும் மேலான சேரிப் பள்ளிக்கூடங்களும், அனாதைக் குழந்தைகளுக்கான விடுதிகளும், குடி, போதை ம்ருந்துகளுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்களும், மீட்பு மையங்களும் நிறுவி செயல்படுத்தினார். 2000 க்கும் மேற்பட்ட சகோதரிகளும், 750 மருத்துவ ஊர்திகளும் சேவையில் ஈடுபட்டன.

1962 ஆம் ஆண்டு அன்னையின் தன்னலமற்ற சேவையை கௌரவிக்கும் பொருட்டு , இந்திய அரசாங்கத்தால்’ பத்மஸ்ரீ’விருதும், தொடர்ந்து, நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருதும் 1980 ம் ஆண்டு வழங்கப்பட்டது. 1979 இல் ‘நோபல் பரிசு’ மற்றும் 1984 இல் எலிசபெத் மகாராணியிடம் பாராட்டுப் பத்திரமும் பெற்றார்.

அன்னை தெரெசா, உலக அன்னையாக இருப்பினும், அவர் தன்னை ஒரு இந்திய பிரஜை என்று சொல்லிக் கொள்வதிலேயே பெரும் நாட்டம் கொண்டார். ‘நான் இந்தியன். இந்தியா என் நாடு’, என்று சொல்லிக் கொள்வதிலேயே பெருமைப் ப்ட்டார்.

ஏழையின் சிரிப்பிலும், பிஞ்சு நெஞ்சங்களின் கண்ணீரிலும், புன்னகையிலும் ஏசு பிரானையேக் கண்ட அன்னையின் உயிர், 1997 ஆம் ஆண்டு, இரவு 9.30 மணிக்கு, செப்டம்பர் 5 ஆம் தேதி அந்த வெண் புறா ஆண்டவனில் சென்று கலந்தது. உலக மக்களின் ந்ல்னுக்காக தன் வாழ்க்கை முழுவதையுமே அர்ப்பணித்த அன்னை என்ற தீபம் அணைந்தபோது, உலகத்தின் ஒவ்வொரு குடிமகனும் தன் தாயை இழந்த சோகத்தை உணர்ந்தனர் என்றால் அது மிகையாகாது. எதோ பிறந்தோம், வாழ்ந்தோம் என்று இல்லாது, உலக மாந்தர் அத்துனை உள்ளங்களிலும் நீங்கா இடம் பிடித்த அன்னை இன்றும் தன்னலமற்ற சேவை உள்ளம் கொண்ட அத்தனை இதயங்களிலும் வாழ்ந்து கொண்டிருப்பதும் சத்தியம். தாய்மை என்பதற்கு சாதி மதம் என்ற பேதம் இல்லை என்பதனை உணர்த்திய அன்னை சக்தியின் மறு அவதாரம் அல்லவா?

புனித அன்னை தெரெசா போன்று இன்னொரு அன்னை இந்த பூமியில் அவதரிக்க இன்னும் எத்துனை கோடி ஆண்டுகள் ஆகுமோ? அன்பின் வழியே அறவழி, அதுவே இறைநெறி என்ற அரிய கருத்துக்களின் எளிய உருவம் தான் நம் அன்னை தெரெசா. அவருடைய சேவை இல்லத்தில் காணப்படும் வாசகம் :

மௌனத்தின் பலன் பிரார்த்தனை
பிரார்த்தனையின் பலன் இறை நம்பிக்கை
இறை நம்பிக்கையின் பலன் அன்பு
அந்த அன்பின் பலனே சேவை
இந்த சேவையின் பலன் உலக அமைதி!!

3 comments:

 1. பெண்களுக்க்ப் பெருமை சேர்த்த பேரன்னை.நினைவுகொள்வோம் இன்றைய தினத்தில் !

  ReplyDelete
 2. அன்பின் வழியே அறவழி, அதுவே இறைநெறி என்ற அரிய கருத்துக்களின் எளிய உருவம் தான் நம் அன்னை தெரெசா. அவருடைய சேவை இல்லத்தில் காணப்படும் வாசகம் :

  மௌனத்தின் பலன் பிரார்த்தனை
  பிரார்த்தனையின் பலன் இறை நம்பிக்கை
  இறை நம்பிக்கையின் பலன் அன்பு
  அந்த அன்பின் பலனே சேவை
  இந்த சேவையின் பலன் உலக அமைதி!!


  ......பொன்னான வரிகள்!

  ReplyDelete