Tuesday, March 22, 2011

வெண்ணிலவில் ஒரு கருமுகில்!

அன்பு நண்பர்களே,

தொடர்கதை என்பது என் முதல் முயற்சி. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை இதன் அடுத்த பகுதி வரும். தயை கூர்ந்து இதைப் படித்துப் பார்த்து தங்களுடைய மேலானக் கருத்துக்களைக் கூறினால் மகிழ்சியடைவேன். நன்றி கல்லுக்குள் ஈரம் என்ற .இந்த தலைப்பின் மாற்றத்திற்கான காரணம், இது திரு பெருமாள் முருகன் அவர்களின் பரிசு பெற்ற பிரபலமான நாவலின் தலைப்பு என்பதால் தான். தொடர்ந்து ஆதரவு அளியுங்கள் நண்பர்களே.


வெண்ணிலவில் ஒரு கருமுகில்!

பருவ காலங்களின் மாற்றங்கள் மனித மனங்களிலும் பலவித பரிமானங்களை ஏற்படுத்திக் கொண்டிருப்பதும் இயற்கை. குளிர் பிரதேசங்களின் மைனஸ் டிகிரி குளிரோ, அல்லது கொளுத்துகிற கோடை வெய்யிலின் உக்கிரமோ எதுவாக இருந்தாலும் அந்த பருவ காலத்திற்கேற்ப உடல் நிலையிலும், மன நிலையிலும் பல மாற்றங்களைச் சந்திக்க வேண்டியிருப்பதை தவிர்க்க முடியாது.

இலையுதிர் காலம். குளிர் ஆரம்பித்து விட்டது. மரங்களெல்லாம் அழகான செந்நிற இலைகள் தாங்கி புதுப்பெண் போல நாணம் பொங்க நிற்கிறது. சாலையின் இரு மருங்கிலும் உதிர்ந்த இலைகளின் கூட்டம்.கொள்ளை அழகு. அதனை சுத்தம் செய்யும் வேக்யூம் க்ளீனரின் மாய ஜாலங்கள்..........

அன்று காலை படுக்கையிலிருந்து எழுந்திருக்கும் போதே, ஏதோ ஒரு இன்பமான உணர்வு இளமாறனுக்கு. உற்சாகத் துள்ளலுடன் எழுந்தவன், முதல் நாள் இரவு நண்பனின் பிறந்த நாள் பார்ட்டியில் அடித்த லூட்டியை சற்றெ அசை போட்டவன், ஆகா, மணியாகிவிட்டதே, ஏற்கனவே எழுந்ததே லேட்டு, இதில் சோம்பல் வேறயா என்று தன்னையே கன்னத்தில் செல்லமாகத் தட்டிக் கொண்டு ஓய்வரை நோக்கி ஓடினான்..

காலைக் கடன்களை அசுர கதியில் முடித்தவன், வழக்கம் போல பிரெட்டின் மீது ஜெல்லியை பரவவிட்டு, ஒரு டிஷ்யூ பேப்பரில் வைத்து சுருட்டிக் கொண்டு, ஆரஞ்சு ஜீஸ் மினி பாட்டில் ஒன்றை கையில் அள்ளிக் கொண்டு , அவசரமாகக் கிளம்பினான். வெளியே ஓடியவன்,

’அடடா வீட்டைப் பூட்டாமலே வந்துவிட்டோமே.பழக்க தோசம்,எப்பவுமே நண்பன் ராகேஷ்தான் பூட்டுவான். அவன் விடுமுறைக்கு இந்தியா போனதிலிருந்து பல பிரச்சனை, சாப்பாடு கூட ஒழுங்காக கிடைப்பதில்லை. எப்படியோ இந்த சிரமம் எல்லாம் இன்னும் கொஞ்ச காலம்தான். வீட்டில் பெண் பார்க்கும் படலம் நடந்து கொண்டிருக்கிறதே! தனக்கென்று ஒருத்தி வந்துவிட்டால், பிறகு இந்த பிரச்சனையெல்லாம் இல்லை. ஐயா பிறகு ராஜாதான்.

வீட்டைப் பூட்டிக் கொண்டிருக்கும் போதே கிரீஈஈஈஈங்க்...கிரீஈஈஈஈஈங்க் என போன் மணி அழைக்கவும், இந்த நேரத்தில் யாராக இருக்கும்......

ஹலோ

ஹலோ...மாறன், நான் தான்ப்பா........

சொல்லுங்கப்பா...இந்த நேரத்துல கூப்பிட்டிருக்கீங்க. தூங்கப் போகலையாப்பா? மணி ஆயிடிச்சே......

இல்லப்பா உனக்கு மெயில் பண்ணினேனே நீ பார்க்கலையா?

ஓ....இல்லப்பா. நேத்து பிரண்டோட பர்த்டே பார்ட்டிக்குப் போனேன். வீட்டிற்கு வர நேரமாகிவிட்டது. இனிமேல் ஆபீசிற்குப் போனபிறகுதான் ஓய்வு நேரத்தில் பார்க்க முடியும். ஏதாவது முக்கியமான விசயமாப்பா.....

ம்ம்...பார் தெரியும். ஒரு பெண் போட்டோ அனுப்பியிருக்கேன். ஜாதகம் பொருந்தியிருக்கு. பெண் உனக்குப் பிடித்திருந்தால் மேற்கொண்டு பேசலாம் என்றுதான் கூப்பிட்டேன், என்றார்.

ம்ம்....அப்படியாப்பா. சரி நான் பார்த்துவிட்டு சொல்கிறேன். ஆபீசிற்கு நேரமாகிவிட்டது. பிறகு பேசலாம் அப்பா என்று சொல்லிக் கொண்டே ரிசீவரை வைத்துவிட்டு பரபரவென வீட்டைப் பூட்டிவிட்டு கிளம்பி ஓடினான் உல்லாச ஊர்தியை நோக்கி.

காரில் பயணம் செய்யும் போதுதான் , அடடா, பெண் எப்படி இருப்பாள், எங்கு இருக்கிறாள், என்ன செய்கிறாள் என்ற அடிப்படைக் கேள்விகூட கேட்காமல் விட்டு விட்டேனே.....என்னோட முக்கியமான கண்டிசனான பெண்ணிற்குப் பாடத் தெரியுமாங்கறதையாவது கேட்டிருக்கலாமோ.........

ஆபிசில் நுழைந்தவுடன், பக்கத்து சீட், ரம்யா,

என்ன மாறன் இன்னைக்கு லேட்டு. க்ளையண்ட் மீட்டிங், உனக்காகத்தான் வெயிட்டிங். சீக்கிரம் வா போகலாம், என்றாள். அவளும் நம் தமிழ் திருநாட்டிலிருந்து வந்தவள்தான்.தன்னுடைய அழகால் அமெரிக்காவையே கலக்கிக் கொண்டிருக்கிற் 50 கேஜி தாஜ்மஹால்.

ப்ரொஜக்ட் ரிலீசிங் நேரமாதலால், க்ளையண்ட் காய்ச்சி எடுத்து விட்டான்.... மீட்டிங் முடியவே வெகு நேரமாகிவிட்டது. மதிய உணவையும் முடித்து, மற்ற வேலையில் மூழ்கவும் அனைத்தும் மறந்து விட்டது. மாலை வீடு நோக்கி வரும் வழியில் தான் அப்பா அனுப்பிய பெண்ணின் போட்டோ குறித்து நினைவு வந்தது.சற்றே லேசான படபடப்பு..........

தன் கற்பனைக் கனவுக் கன்னியின் நிழலுறுவம் மனதில் நிழலாடத்தான் செய்தது. இதோடு பத்தாவது போட்டோ என்று நினைக்கிறேன். அப்பா இவ்வளவு பொறுமையாக, கோபப்படாமல் செய்யும் ஒரே காரியம் இதுவாகத்தான் இருக்கும்.

எப்படியோ தன் மனதிற்குப் பிடித்த மகாராணி வரும்வரை காத்திருப்பது என்பதில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை. அது ஆண்டுகள் எவ்வளவு ஆனாலும் சரி.

வீட்டின் உள்ளே நுழையும் போதே தொலைபேசி சிணுங்கிக் கொண்டிருந்தது. ஒரு வேளை அப்பாவாக இருக்குமோ என்று நினைத்துக் கொண்டே ரிசீவரை எடுக்கப் போனவன்.......சட்டென பின்வாங்கியதன் காரணம்,

’என்னைத் தாலாட்ட வருவாளோ’ என்ற செல்பேசியின் கொஞ்சல்தான். தன்னையறியாமல் கை அந்த செல்பேசியை வருடத் தொடங்கியது.

மறு முனையில், அன்பு மணி தன் நண்பன், “ என்னடா மச்சி, சஞ்சுவோட பர்த்டே பார்ட்டியை மறந்துட்டியா. ஏற்கனவே லேட். எல்லோரும் வெயிட்டிங் . வா சீக்கிரம்”.

அடடா மறந்தே போயிட்டேனே. இதோ வரேன் ஒரு பத்து நிமிடத்தில் கிளம்பி விடுகிறேன், என்று சொல்லி முடித்து, சிணுங்கிக் கொண்டிருந்த தொலைபேசியை எடுக்கப் போனவன், அது அமைதியாக அடங்கிப் போனதைப் பார்த்து, சரி ஏதாவது மார்க்கெட்டிங் காலாக இருக்கும் என்று சமாதானம் சொல்லிக் கொண்டு, பார்ட்டிக்குக் கிளம்பத் தயாரானான்.

வழக்கம் போல் பார்ட்டியில் நண்பர்களுடன் செம அரட்டை, விருந்து என்று பொழுது போனதே தெரியவில்லை. தூக்கம் கண்ணைச் சுழற்ற ஆரம்பித்த போதுதான் மணிக்கட்டைத் திருப்பிப் பார்த்தவன்,

அடடே, மணி ஒன்று ஆகிவிட்டது. நான் கிளம்பறேன்ப்பா.... நாளை வேறு எட்டு மணிக்கே க்ளையண்ட் மீட்டிங் இருக்கும். லேட்டா போனா, அண்ணாச்சி எகிறுவான்., நான் வரேன் என்று சொல்லிக் கொண்டே, ஷூ, ஜாக்கெட், தலைககு குரங்கு குல்லா எல்லாம் போட்டுக் கொண்டு தயாரனான்.

நவம்பர் மாதக் குளிர் கொஞ்சம் அதிகம்தான்.குடுகுடுவென ஓடிப்போய் காரில் ஏறி அமர்ந்து ஹீட்டர் போட்டாலும், சூடு பிடித்து, குளிர் குறைவதற்குள் பல்லெல்லாம் டைப் அடிக்க அரம்பித்து விடும்.வீட்டிற்கு வரும் வழியில்தான் அப்பா சொன்ன விசயம் பெண் போட்டோ அனுப்பியது நினைவிற்கு வந்தது. வீட்டிற்கு போனவுடன் முதல் வேலையாகப் பார்க்க வேண்டும். நாளை அப்பா போன் செய்வதற்குள் பார்த்து விட வேண்டும். என்று நினைத்தாலும் , இந்த பெண்ணாவது நமக்குப் பிடித்த மாதிரி அமைய வேண்டுமே என்று ஆதங்கமாகவும் இருந்தது. தனிமை அவனை பல விதத்திலும் பாடாய்ப் படுத்துவதிலிருந்து தப்பிக்கும் ஒரு உபாயம் அதைத் தவிர வேறு இல்லையே.

வீட்டில் நுழைந்தவுடன் முதல் வேலையாக லேப்டாப்பை எடுத்து வைத்தான். வந்த தூக்கம் எல்லாம் எங்கோ ஓடி ஒளிந்து கொண்டது. எல்லாம் ரெடி பண்ணி சுவிட்சை ஆன் செய்தால் வலைதள இணைப்பு இல்லை. என்ன பிரச்சனையோ தெரியவில்லை. காத்திருந்ததுதான் கண்ட பலன். சரி நாளை பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் என்று போய் ப்டுத்ததுதான் தெரியும், எப்போது உறக்கம் வந்தது என்ற நினைவு கூட இல்லை. அத்தனை அலுப்பு....

காலை நன்கு அசந்த உறக்கம். எங்கோ தொலை தூரத்தில் கிணற்றுக்குள்ளிருந்து ஒலிப்பது போன்றிருந்தது தொலைபேசியின் அழைப்பு மணி. கொஞ்சம் கொஞ்சமாக விழிப்பு வர சத்தம் வெகு அருகில் ஓங்கி ஒலித்தது.

ஆகா இங்குதான் போன் அடிக்கிறதா என்று வாரி சுருட்டிக் கொண்டு ஓடிப்போய் அதன் தலையில் தட்டி, தட்டுத் தடுமாறி ஒரு வழியாக கண்ணை முழித்து ஹலொ.......என்றான்.

ஹலோ, என்னப்பா இன்னும் தூக்கம் தெளியலயா? மணி ஆகிவிட்டதே, ஆபீஸ் போக வேண்டாமோ, என்றார் அப்பா.

அடடா ஆமாம்ப்பா. மீட்டிங் வேற இருக்கு. அப்போதுதான் மணியைப் பார்த்தான். மணி 7 ஆகிவிட்டிருந்தது. 8.30 க்கு மீட்டிங், அதற்குள் குளித்து, கிளம்பி 45 நிமிட பயணம் முடிந்துதான் அலுவலகம் சென்று சேர முடியும். அப்பாவிடம் பேசக்கூட நேரம் போதாது. ஆனால் அப்பா அதை கட்டாயம் புரிந்து கொள்வார். எப்படியோ அப்பாவிடம் சொல்லி புரிய வைக்கலாம் என்றால் அப்பா இன்று பார்த்து நிறைய பேசும் மூடில் இருப்பார் போல.

அவர் அனுப்பிய புகைப்படம் பார்க்கும் வாய்ப்பு அமையாததும், இண்டர்நெட் பிரச்சனையும் எடுத்துக்கூறி ஆபீசில் சென்று பார்த்து விட்டு தொடர்பு கொள்வதாக சொல்லி அப்பாவின் பேச்சை காதிலே வாங்காமலே அவசரமாக தொடர்பை துண்டித்துவிட்டு கிளம்பத் தயாரானான் மாறன் அலுவலகம் நோக்கி.

சரியான நேரத்திற்கு மீட்டிங் அறைக்கு வந்து சேர்ந்தும் பிராஜக்ட்டில் இருந்த சில முடிச்சுகள் சற்றே குழப்பமான சூழலை உருவாக்கி, பின்பு ஒரு வழியாக முடிச்சு விலகி எல்லாம் முடிந்து வெளியே வர மாலை நான்கு மணி ஆகிவிட்டது. சீட்டில் வந்து உட்கார்ந்து கையை தூக்கி தலையின் பின் வைத்து கட்டி ரிலாக்ஸாக சாய்ந்து உட்கார்ந்து சிறிது நேரம் உத்திரத்தைப் பார்த்த போதுதான் திடீரென அப்பாவின் நினைவு வந்தது. பாவம் அப்பா காலையில் எவ்வளவு ஆசையாக பேச வந்தார். என்ன பேசினார் என்று கூட காதில் வாங்காமல் லைனை கட் பண்ணி விட்டோமே. இப்ப பேசலாம் என்றால், ஒரு வேளை அப்பா தூங்கிக் கொண்டிருந்தால் என்ன செய்வது. இன்னும் சற்று நேரம் பொறுத்து பண்ணலாம் என்று முடிவு செய்த போதுதான் அப்பா அனுப்பிய போட்டோ மேட்டர் நினைவிற்கு வந்தது.சரி இப்ப பார்த்துவிட்டுத்தான் மறு வேலை என்று முடிவு செய்தவன் பரபரவென இயங்க ஆரம்பித்தான்.

மெயில் பெட்டி குப்பைத்தொட்டியாக குவிந்துக் கிடந்தது. இந்த ஞாயிற்றுக் கிழமையாவது இதை சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். ஒரு வழியாக அப்பா அனுப்பிய மெயிலைக் கண்டுபிடித்து எடுத்து விட்டான்.

ஓபன் ஆகிக் கொண்டிருக்கிறது................

ஒரு நொடி தன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை. வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன் .....

ஹேய்..யாருப்பா இந்த அப்சரஸ், ஆள் சூப்பரா இருக்கா.........என்றாள் ரம்யா.

அட நீயா போச்சுடா உன் கண்ணுல பட்டுடுத்தா, வேற வினையே வேண்டாமே.

ஏய் சொல்லுப்பா, எல்லாம் முடிவாயிடுத்தா. இவதான் உன்னோட கனவுக் கன்னியா?

நீ சொன்னாலும் சொல்லாட்டியும் இவதான் என் கனவுக் கன்னி என்று சொல்ல மனம் துடித்தாலும் ஏதோ தயக்கம், இன்னவென்று புரியாத ஒரு தடுமாற்றம்.......

ரம்யா திரும்ப திரும்ப ஏதோ கேட்டுக் கொண்டே இருக்கவும், சுய நினைவிற்கு வந்தவனுக்கு அடுத்த இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அவளோட பயோ-டேட்டா!

அவளும் கணிணி துறை வல்லுநர் மற்றும் ஒரு நல்ல ஓவியக்கலை நிபுணர். இது எல்லாவற்றிற்கும் மேலாக அவளும் இப்போது இதே அமெரிக்காவில், தான் இருக்கும் நியூ ஜெர்சியிலிருந்து, 4 மணி நேரப் பயணத்தில் இருக்கக்கூடியத் தலைநகரான வாஷிங்டன் டி.சி. யில் இருக்கிறாள். ஆகா இதெல்லாம் கூட நடக்குமா?

மாறனுக்கு தலை கால் புரியவில்லை. தான் நினைத்தது போல் தனக்கு ஒரு தேவதை கிடைக்கப் போகிறாளோ என்று பேராச்சரியமாக இருந்தது.இப்போது என்ன செய்டு கொண்டிருப்பாள். ஒரு வேளை அவளும் தன்னை நினைத்துக் கொண்டிருக்கலாமோ? அந்த நினைவே உள்ளம் குளிரச் செய்தது.

நான் ஏன் அவளைப் போய் சர்ப்பிரைசாக நேரில் சென்று சந்திக்கக் கூடாது? அப்பாவிடம் கேட்டுப்பார்க்கலாமா? இதை போய் எப்படி அப்பாவிடம் கேட்பது. எதற்கும் அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம்.........என்ன இது கள்ளத்தனம் புக ஆரம்பிக்கிறதே......இது பற்றி யோசிக்கும் போதே லேசான ஒரு புன்னகை நெளிய, அதைக் கவனித்துவிட்ட ரம்யா,

என்னப்பா, கனவு காண ஆரம்பிச்சாச்சா. என்ன, தேவதைகள் புடைசூழ உன் கனவு இளவரசி காற்றில் மிதந்து வராங்களோ...... போப்பா போய் நேரே போய் பார்த்துட்டு வருவியா..... இப்படி கனவு கண்டுகிட்டு உட்கார்ந்துகிட்டு இருக்கே...........

மாலை வீட்டிற்குப் போனதும் அப்பாவிடம் பேச முயற்சித்தான். ஆனால் பணிப்பெண் மூலமாக அப்பாவும், அம்மாவும் குலதெய்வ கோவிலுக்குச் சென்றிருக்கும் செய்திதான் கிடைத்தது. அந்தக் கோவில் இருக்கும் இடம் ஒரு குக்கிராமமாதலால் போன் சிக்னல் கிடைக்காது.அதனால் அப்பா, அம்மா வரும் வரை காத்திருக்கத்தான் வேண்டும். அங்கு ஒரு பழைய பரம்பரைச் சொத்து விற்பது சம்பந்தமாக 2 அல்லது 3 நாட்கள் கூட ஆகலாம் என்று வேறு அந்தப் பெண் சொன்னதால், அடுத்தநாள் விடுமுறையானதால், வாஷிங்டன் சென்று அந்தப் பெண்ணைப் பார்த்து வருவது என்று அவன் எடுத்த முடிவு எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை அவன் அப்போது உணர்ந்திருக்கவில்லை..............

தொடரும்.


3 comments:

  1. டும்டும்...டும்டும்...
    கல்லுக்குள் ஈரம்...
    ஆவி பறக்கிறது.

    ReplyDelete
  2. நல்லதொரு ஆரம்பம் மேடம். நீளம் கொஞ்சம் சோர்வடைய வைக்கிறது.

    ReplyDelete
  3. நல்ல ஆரம்பம்.

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...