Tuesday, October 18, 2011

வெண்ணிலவில் ஒரு கருமுகில்! (23)


பவள சங்கரி
துலிப் மலர்களின் குளிர்ச்சியான நினைவுகள் மனம் முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டதோடு அன்று மாறனின் குரலும் ஏனோ அவளுக்கு உற்சாகமும் கொடுத்தது. வாய் பேச மறந்து மோனத்தில் இருந்தாளோ அப்பேதை!
மாறன் மறுபடியும், “ஹலோ, லைனில் இருக்கிறீர்களா……. என்று கேட்டவுடன் தான் விழிப்பு நிலை ஏற்பட்டவளாக , “ சாரி, அவசியம் வருகிறேன். நானும் பொழுது போகாமல்தான் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். என் தூரிகையும் மலர் சொந்தங்களின் உறவை நாடி காத்துக் கிடக்கிறது. துலிப் மலர்களின் அழகை அள்ளிப்பருக தவம் கிடக்கிறது….”
“ ஓ…. என்ன ஆச்சு அவந்திகா? கவிதையாக வருகிறது வார்த்தைகள் இன்று”.
“ ம்ம்ம்… அப்படியா. எனக்கொன்றும் அப்படி தெரியவில்லையே? உங்களுக்கு அப்படி தோன்றினால் எனக்கு அதில் மகிழ்ச்சியே”
“ சரி… சரி. என்னவோ உங்களிடம் மாற்றம் தெரிகிறது. பார்ப்போம், ஒரு நாள்வெளியே வந்துதானே ஆக வேண்டும்”
“ அதெல்லாம் ஒன்றுமில்லை மாறன். நான் சீக்கிரம் கிளம்பி தயாராகிறேன். எதேனும் ஒரு சிற்றுண்டியும் தயார் செய்கிறேன்.”
“ அதெல்லாம், வேண்டாம். வீணாக ஏன் சிரமப்படுகிறீர்கள். வெளியில் பார்த்துக் கொள்ளலாம். தீபிகாவும் ஏதோ செய்யப்போகிறேன் என்றாள்”
“ சரி, நான் தீபிகாவிடம் கேட்டுக் கொண்டு, அதற்கு தகுந்தாற்போல் ஏதும் சைட் டிஷ் மட்டுமாவது செய்கிறேன். நேற்றே சொல்லியிருந்தால் நல்ல உணவு வகைகள் ஏதும் செய்திருக்கலாமே மாறன்?”
“ இல்லை நேற்று இரவு வெகு நேரம் அரட்டைக்குப் பிறகுதான் இன்று துலிப் கண்காட்சிக்குப் போகலாம் என்று முடிவு செய்தோம். அந்த இரவு வேளையில் உங்கள் தூக்கத்தையும் கெடுக்க வேண்டாமே என்று தான் கூப்பிடவில்லை. தீபிகாவிற்கும் காலையிலதான் சொன்னேன். அவளும் திட்டிக் கொண்டே இப்பதான் ஏதோ செய்து கொண்டிருக்கிறாள். பரவாயில்லை , முடிந்தால் செய்யுங்கள் . “
“ சரி நான் பார்த்துக் கொள்கிறேன். நேரில் சந்திப்போம். பை”
அவந்திகா உடனே பரபரப்பாக, தீபிகாவிற்கு போன் செய்து அவள் சப்பாத்தியும், கிரேவியும் செய்வதை தெரிந்து கொண்டு, தயிர் சாதமும், உருளைக்கிழங்கு வறுவலும் செய்வதாகக் கூறிவிட்டு, வேகமாக வேலையும் துவங்கி விட்டாள். சமையல் முடித்து, குளிக்கச் செல்ல நினைத்தவளுக்கு ஒரே குழப்பம். எந்த உடை உடுத்துவது என்று. ஒரு முறை மேக வண்ண நிறம் தனக்குப் பிடிக்கும் என்று மாறன் சொன்னது நினைவிற்கு வர, சமீபத்தில் வாங்கி வைத்திருந்த ஒரு அழகான டிசைனர் புடவையை உடுத்திக் கொண்டாள். வெகு நாட்களுக்குப் பிறகு இன்று புடவை உடுத்தும் ஆசை வந்தது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.
துலிப் என்பதன் பொதுவான விளக்கம் ‘ சரியான காதல்’, என்பதாகும். மற்ற மலர்களைப் போன்றே துலிப் மலர்களிலும்,ஒவ்வொரு வண்ண மலருக்கும் ஒரு தனித்தன்மையும், முக்கியத்துவமும் உள்ளது. காட்டாக, செந்நிற துலிப் , உறுதியான, உண்மையான காதலின் அடையாளமாம். ஊதா வண்ணம், ராஜ வம்சத்து உயர் காதலையும், மஞ்சள் வண்ணம், ஒரு காலத்தில் நம்பிக்கையற்றதாக கருதப்பட்டது, இன்று மகிழ்ச்சி எண்ணங்களையும், சூரிய ஒளியையும் வெளிப்படுத்தும் ஒன்றாகவும், வெண்ணிற துலிப்கள் ஊடலின் சமரச முயற்சியின் அடையாளமாகவும் , இப்படி பலவித குணநலன்களையும் கொண்ட இத்துலிப் மலர்கள் பொதுவாக அழகிய கண்களுக்கு உவமானப்படுத்தப்படுவதும் உண்டு.
இந்த துலிப் மலர்களின் அத்துனை அழகையும், அதனதன் தன்மைகளுடன் அழகிய ஓவியமாக்க கைகள் பரபரக்க காலம் பார்த்துக் காத்திருந்தாள் அவந்திகா …….. காலம் நல்ல பதிலும் சொல்லும் என்ற நம்பிக்கையும் இருந்தது. தன் பெற்றோரிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் கூட துளிர்விட ஆரம்பித்திருந்தது. ஆனால் இவையனைத்தும் அன்று மாலை துலிப் விழா முடிந்து இல்லம் திரும்பும் நேரம் நம்பிக்கையும் குறைய ஆரம்பித்தது அவனுடைய கண்டும் , காணாத தன்மையினால்………….. மெல்லிய ஒரு சோகம் படர ஆரம்பித்த போதும், ஏனோ அதுகூட சுகமானதொரு அனுபவமாக இருந்தது அவளுக்கு!

விரலில் அளவிற்கு அதிகமாக வளர்ந்திருக்கும் நகத்தை வெட்டினால் கூட ஏதோ நம் உடமையை இழப்பது போன்ற ஒரு உணர்வு இல்லாமல் இருப்பதில்லை. வெட்டினாலும் விரைவில் முளைக்கக் கூடிய விரல் நகத்தையே இழப்பதில் வேதனைப்படும் இந்த மனித மனம், தன் உடலில் ஒரு முக்கிய பாகத்தை, அதுவும் பெண் என்ற முக்கியமான அடையாளத்தைக் கொடுக்கும் ஒரு அங்கத்தை இழக்க வேண்டியச் சூழலில் அப்பெண் படும் வேதனை அளப்பரியது. அது இளம் வயதோ அன்றி முதுமையின் முகட்டில் இருப்பவரோ எவராயினும் சரி, இதே நிலைதான் என்பதே நிதர்சனம். அதுவும் நோயின் கொடுமையும், சேர்ந்து மனதையும் உடலையும் ஒருசேர ரணப்படுத்தும் வேளையில், எந்த வார்த்தைகளும் ஆறுதலளிக்கப்போவதில்லையாயினும், தனக்கு ஆதரவாக தன் குடும்பத்தினர் அருகில் இருக்கும் போது அந்த ரணத்தின் பாரம் சற்றே குறையக்கூடியதும் நிதர்சனமே!
அன்னபூரணி அம்மாளின் சேவை அந்த வகையில் வணக்கத்திற்குரிய ஒன்று என்றால் அது மிகையாகாது. ஒவ்வொரு நோயாளியும் அவரை தாயாகவும், சகோதரியாகவும், மகளாகவும் காணக்கூடிய ஒப்புயர்வற்ற அந்நிலையே அதற்கு எடுத்துக்காட்டு எனலாம். அத்தனை பரிவும், பாசமும் ஒரு மூன்றாம் மனிதரிடம் காட்டுவது என்பது சாமான்ய காரியமல்லவே. ஆனால் அவையனைத்தும் அன்னபூரணி அம்மாளுக்கு கைவந்த கலையாம்! தன்னலமற்ற அந்த சேவைக்கு நிகர் அது மட்டுமாகவே இருக்கக்கூடும். ஆம் அந்த பரிவும், பாசமும் அந்த நோயின் தன்மையை குறைக்க இயலாவிட்டாலும் மன வேதனைக்கு மருந்தாகவும் இருப்பதும் உண்மை.
ரிஷிக்கு இவையனத்தும் ஒரு வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது. வாழ்க்கையில் இது போன்று ஒரு நிலை வரும் என கனவிலும் நினைத்தவனில்லை . அன்று கதிரியக்க சிகிச்சை முடிந்து வாடிய மலராக துவண்டு கிடந்த தன் அன்பிற்கினிய மனைவியைக் காணச் சகியாமல் வெளி வாசலில் வந்து அமர்ந்திருந்தவனின் கண்களில் பட்ட இந்த காட்சிகள் தன் மனதிற்கும் ஆறுதலாக இருந்ததை உணர்ந்து, அவருக்கு மனதிற்குள்ளேயே நன்றியும் தெரிவித்துக் கொண்டிருந்ததை உணர்ந்த அன்னபூரணியம்மாளும், ரிஷியின் அருகில் வந்தமர்ந்து, பொறுமையாக பேச்சு கொடுக்க ஆரம்பித்தார். அவருடைய கனிவான பேச்சும், பார்வையும் தம் மன பாரத்தை கனிசமாக குறைத்திருப்பதையும் உணர முடிந்தது. மனைவி களைப்பாக உறங்கிக் கொண்டிருப்பதால், விழிக்க எப்படியும் சில மணி நேரங்கள் ஆகும் என்பதால் வீட்டிற்கு சென்று குளித்து, உணவருந்தி வரலாம் என்று கிளம்பினான்.
வீட்டில் நுழையவும், தொலைபேசி அழைப்பு முனகவும் சரியாக இருந்தது. யாராக இருக்கும் இந்த வேளையில் என்று நினைத்துக் கொண்டே மெதுவாகச் சென்று ஒலிவாங்கியை எடுத்தவன், ‘ஹலோ’ என்ற அந்த இனிய குரலைக் கேட்டுத் தன் காதுகளையே நம்ப இயலாதவனாக , ரம்யாவின் குரல் போல் உள்ளதே……. என்று யோசித்தாலும், அவளாக இருக்காது என்று நினைத்துக் கொண்டு , திரும்பவும் தானும் ,’ஹலோ’ என்றான் மெலிதாக.
‘ரிஷி…?’ என்ற பரிவான அந்த குரலைக் கேட்டவுடன், நம்பிக்கை வந்தது அவனுக்கு அது ரம்யாதான் என்று.
‘ சொல்லு, ரம்யா. எப்போது வந்தாய்? நலமாக இருக்கிறாயா?’ என்றான் தொண்டை கம்ம….
‘நான் நலம்தான் ரிஷி. நான் வந்து ஒரு வாரம் ஆகிறது. வந்தனா எங்கே, இப்போது எப்படி இருக்கிறார்கள், நலம்தானே?’ என்றாள்.
ரம்யாவின் பாசமான அந்த குரலைக் கேட்டவுடன் அவனால் தன் அழுகையை கட்டுப்படுத்த இயலவில்லை. அவள் மடியில் தலை வைத்து ஓவென்று அழ வேண்டும் போல் தோன்றினாலும், எந்த உரிமையில் அவளிடம் தன் சோகத்தை பகிர்ந்து கொள்ள முடியும் தன்னால் என்பதையும் உணர முடிந்தது அவனால்… ஏன் அவளையும் வேதனைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், வெகு சிரமப்பட்டு வந்த அழுகையை அடக்கிக் கொண்டு, ‘ ம்ம். நன்றாக இருக்கிறாள். தூங்கிக் கொண்டிருக்கிறாள் ரம்யா. எழுப்பட்டுமா?’ என்றான்.
‘இல்லை ரிஷி. வேண்டாம். நான் ஒரு நாள் நேரில் வருகிறேன், சரி பிறகு பார்க்கலாம்’, என்று சொல்லி அவன் வீட்டு விலாசத்தையும் மறக்காமல் வாங்கி குறித்துக் கொண்டாள்.
ரிஷிக்கு பழைய நினைவுகளும், புதிய வேதனைகளும் சேர்ந்து பெருங்குழப்பத்தை உண்டாக்கியது என்னவோ நிசம்தான்………..

No comments:

Post a Comment