Saturday, October 22, 2011

மரப்பாவை

பவள சங்கரி

காலையிலிருந்து என்ன ஆயிற்று இன்று மரகதவல்லிக்கு ? நிற்காத விக்கல். தண்ணீர் குடித்தும் அடங்காத தொடர் விக்கல். யாராவது விடாமல் நினைத்துக் கொண்டிருந்தால் அப்படி நிற்காமல் விக்கல் வருமாமே? யார் நினைப்பார்கள் இந்த நேரத்தில். மகள் அலுவலகத்தில் முழு முனைப்பாக பணியில் இருப்பாள், அதனால் நினைக்கும் வாய்ப்பு குறைவு. கணவர் சொல்லவே வேண்டாம், டென்சன் பார்ட்டி. அலுவலகம் சென்றால் அதிலேயே மூழ்கிவிடும் ஒழுக்கமான பணிக்காரர். தோழி ரமாவாக இருக்குமோ…… இல்லை அவள் மகன் வீட்டிற்கு அமெரிக்கா சென்றிருக்கிறாள். இப்போது ஆனந்தமாக உறங்கும் நேரம்! அருமை அம்மாவிடமும் மணிக்கணக்காக ஊர் நியாயம் அனைத்தும் பேசி முடித்து விட்டதால் அதற்கும் வாய்ப்பு இல்லை… வாடிக்கையாக வருகிற கீரைக்காரம்மாவாக இருக்குமோ, நேரமாகிவிட்டதென்று சென்று விட்டு வீட்டில் சென்று நாளை வந்தால் பேச்சு வாங்க வேண்டுமே என்று நினைத்துக் கொண்டிருக்கிறதோ?

விக்கலினூடே, விருந்தும், விருப்பமான தொலைக்காட்சித் தொடரும் என பொழுது கழிந்து கொண்டிருந்தாலும், இன்னவென்று சொல்ல முடியாத ஒரு உறுத்தல் உள்ளத்தில்….. திடீரென ஏதோ ஒரு வித்தியாசமான மணம் தன்னைச் சூழ்ந்துள்ளது போன்ற உணர்வு. ரோசா மலரில் பன்னீர் தெளித்தது போன்று ஒரு வித்தியாசமான மணம். ரோசாவிற்கேயுரிய அந்த இதமான நறுமணமாக இல்லாமல் நாசியை உறுத்துகிற ஒரு வித்தியாசமான மணம்.

தொலைக்காட்சித் தொடரில் நாயகியின் பால்யகால நினைவலைகளைக் காட்டும் நிகழ்வுகளில் திடீரென ஏனோ பொறிதட்டியது போல ஒரு மின்னல் வந்து மறைந்தது. பள்ளி இறுதி வகுப்பு படித்துக் கொண்டிருந்த பருவம். பட்டாம்பூச்சியாய் சிறகடித்துப் பறந்த காலம். தில்லியில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம். கோடை விடுமுறையில் கிராமத்து அத்தை வீட்டிற்குச் செல்லும் வழமை பல ஆண்டுகளாக இருந்தது. சித்தப்பா, பெரியப்பா பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து உத்திரமேரூர் செல்வது வழக்கம்.

இயந்திரத்தனமான நகர வாழ்க்கையை விட்டு சுகமான சுவாசத்திற்கு இதமான தென்றலும், பசுமையான வயலும், ஏரிக்கரையின் குளிர்ந்த காற்றும், சுவர்க்க பூமியாக இருக்கும் அனைவருக்கும். கபடம் இல்லாத நல்ல மனிதர்களின் அன்பும், பண்பும் மேலும் இன்பம் சேர்க்கும் இனிய பொழுதுகள் அவை. இன்று நினைத்தாலும் உள்ளம் பரவசம் ஆகும். இன்றைய குழந்தைகள் பாவம் இழப்பது எத்தனை எத்தனை இன்பங்கள் என்று எண்ணி ஏக்கமாகவும் இருக்கும். அத்தையின் பாரம்பரிய திண்ணை வீட்டில், ஒவ்வொரு நேரமும் ஒரு விடுதி நடத்துவது போல உணவு பரிமாற வேண்டும், நாங்கள் அனைவரும் ஒருசேரச் செல்லும் அந்த கோடை விடுமுறைக்காலங்களில். பெரும்பாலும் இரவு நேரங்களில் அன்றாடம் பின் முற்றத்துப் பரந்த வாசலில்

அனைவரையும் ஒன்றாக உட்கார வைத்து நிலாச்சோறு போடுவார்கள் நெஞ்சை விட்டு என்றென்றும் அகலாத இன்பச் சுவை அது! ஒரு பெரிய அகன்ற பாத்திரத்தில் சாதம் போட்டு அதில் சாம்பார் விட்டு, மணக்க, மணக்க புத்தம் புதிதாக காய்ச்சிய நெய்யும் விட்டு, தோட்டத்தில் புதிதாக பறித்துக் கொண்டு வந்த பிஞ்சுக் கத்ததிக்காய் வதக்கலோ அல்லது மொட்டுக் காளான் மசாலோ ஏதோ ஒன்று இருக்கும்! அத்தை கையில் உண்ட அந்த அமிர்தத்திற்கு இணையாக இன்று எந்த நட்சத்திர விடுதியோ, தட்டி விலாசோ எதுவும் நிற்க முடியாது. பெரிய உருண்டைகளாக உருட்டி,கைகளில் போடுவார். உடன் செவிக்குணவாக புராணக் கதைகளும் இருக்கும். அத்தை கம்பராமாயணம் சொல்வதில் வல்லவர்.

‘அண்ணலும் நோக்கினாள்……… அவளும் நோக்கினாள்’ என்று அழகாக ஏற்ற, இறக்கத்துடன் அத்தை கதை சொல்வதைக் கேட்கும் போது இன்னும் இரண்டு கவளம் அன்னம் சேர்ந்து உள்ளே போகும். பகல் பொழுதுகளில் தோட்டத்தில் சென்று புளிய மரத்தின் இடையே, ஊஞ்சல் கட்டி சலிக்க,சலிக்க ஆடுவது, வரப்பு நீரில் ஆன மட்டும் குதிப்பது, தோட்டத்தைத் சுற்றி கண்ணாமூச்சி ஆட்டம் என்று இப்படி எத்தனையோ பொழுது போக்குகள். அதிலும் அத்தனைப் பேரிலும் மரகதவல்லிக்கு மட்டும் தனி செல்லம் எல்லோரிடமும். அது அவளுடைய நகர வாழ்க்கை கொடுத்த நுனி நாக்கு ஆங்கிலமும், பகட்டாக, நாகரீகமாக உடை உடுத்தும் பாங்கோ அன்றி, அவளுடைய கலகலப்பாகப் பழகும் தன்மையோ, ஒடிசலான, எலுமிச்சை நிற தேகமோ, எதுவோ ஒன்று அனைவரையும் எளிதில் அவள்பால் கவர்ந்து விடுவதும் நிதர்சனம்.

தெருவில் இறங்கி நடந்தாளானால் அத்துனை கண்களும் அவள் மீதுதான் இருக்கும். தனக்கும் மரகதவல்லி தெரிந்தவள்தான் என்று காண்பித்துக் கொள்வதில் அத்துனை பேருக்கும் அவ்வளவு பெருமையாக இருக்கும்.தெருவில் பார்க்கும் அத்தனை பேருடனும் புன்னகையுடனும், நட்புடனும் பழகுவதில் அவளுக்கு நிகர் அவள் மட்டுமாகத்தான் இருக்க முடியும். எல்லோரையும் சொந்தமாக நினைக்கும் குணம். அத்தை மகன், வண்ணநிலவனுக்கும் மரகதவல்லி மீது ஒரு கண் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கும். வார்த்தைக்கு வார்த்தை ‘சிட்டு’ என்று செல்லமாக கூப்பிட்டுக் கொண்டேயிருப்பான். தெருவில் விடலைகள் பார்வை பட்டால் கூட கொதித்தெழும் நாயக பாவம் அதிகம் காட்டுபவன், எல்லோரிடமும் ஆண்,பெண் என்ற பாகுபாடில்லாமல் சகஜமாகப்பழகும் மரகதவல்லியை உரிமையுடன் கோபித்துக் கொள்ளவும் தயங்க மாட்டான்.

பெரியப்பாவின் மகள் பூவிழிக்கு மாமன் மீது ஒரு கண் என்பது எல்லோருக்கும் தெரியும். தின்பண்டங்களின் தனக்கான பங்கின் ஒரு பகுதியையும் தாராளமாகத் தன் மாமனுக்குக் கொடுத்து விடுவாள். மாமனின் ஒரு பார்வைக்காகத் தவம் இருப்பவள். இதையெல்லாம் மற்ற வாண்டுகளும் ஓரளவிற்கு புரிந்து கொண்டாலும் கண்டும் காணாமல் விட்டுவிடுவார்கள். ஆனால் மரகதவல்லி மட்டும் அடிக்கடி அவர்கள் இருவரையும் சீண்டிக் கொண்டே இருப்பாள். ஆனால் வண்ணநிலவனோ எதையும் மனம்விட்டு சட்டென்று பேசும் வழக்கமற்றவன். அதனாலேயே பல நேரங்களில் தந்தையிடம் வசவு வாங்கிக் கட்டிக் கொள்வான்.

காலங்கள் உருண்டோடிக் கொண்டிருந்தன. பள்ளி முடித்து கல்லூரி வந்தவுடன் அனைத்தும் மாறிவிட ஆரம்பித்திருந்தன. அரசல் புரசலாக வீட்டில் ஏதோ அடிக்கடி அம்மாவிற்கும் அப்பாவிற்கும் தன்னைப்பற்றி வாக்குவாதங்கள் நடந்து கொண்டிருந்தது மட்டும் உணர முடிந்தாலும் அதில் அதிகமாக தலையிட்டு அறிந்து கொள்ளும் ஆர்வமெல்லாம் இருந்ததில்லை அவளுக்கு. தன் கல்வியில் முழு கவனம் செலுத்த வேண்டுமென்பது மட்டும் தந்தையின் கட்டாய ஆர்வமாக இருந்தது. அவளுக்கும் கல்லூரி வாழ்க்கை என்ற மாய உலகினுள் நுழைந்தவுடன், பழைய நினைவுகள் மாறி புதிய நண்பர்கள், புதிய வழக்கங்கள் என்று நிறைய மாறியிருந்தன. பூவிழியை வண்ணநிலவன் திருமணம் செய்து கொள்ளும் நாள் மட்டும் விரைவில் வரும் என்று எதிர்பார்த்தவள் , ஓரிரு ஆண்டுகளில் பூவிழிக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம்செய்த காரணமும் புரியவில்லை. அதை நேரிடையாக எவரிடமும் கேட்கும் தைரியமும் வரவில்லை அவளுக்கு!

ஆனால் அந்தத் திருமணத்தில் அவ்வளவாக நிறைவிருந்ததாகத் தெரியவில்லை பூவிழிக்கு. கடனே என்று எந்த மகிழ்ச்சியுமின்றி இயந்திரமாக இயங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது. ஏனோ தன்னிடமும் அவள் சரியாக முகம் கொடுத்துப் பேசாததும் ஆச்சரியமாகவே இருந்தது. அதற்குப் பிறகு குடும்பத்தில் நடந்த பல நல்ல காரியங்களுக்குத் தன்னால் கலந்து கொள்ள இயலாமல் போனது மரகதவல்லியின் குடும்ப உறவுகளின் நெருக்கத்தில் சிறு தொய்வும் ஏற்பட்டுப் போனது. படிப்பு முடிந்து, தந்தை காட்டிய மணமகனுக்குக் கழுத்தை நீட்டியது, திரும்பவும் அதே தில்லியில் பெற்றோரின் அருகண்மையிலேயே குடித்தனம் அமைந்தது அனைத்துமே தானாக நடந்து கொண்டிருந்தது. ஒரு பெண் குழந்தை பெற்று, அதனைக் கண்ணுங்கருத்துமாக வளர்ப்பது , மாமனார், மாமியார், மற்ற குடும்ப உறவுகள் என்று வாழ்க்கையின் பலவிதமான பொறுப்புகளின் அழுத்தம் தன் தாய் வீட்டுச் சொந்தங்களின் நினைவுகளை மழுங்கடித்ததும் நிசம். அத்தை குடும்பமும் தங்களிடமிருந்து சற்று விலகியிருப்பதாகவேப்பட்டது அவளுக்கு. தன்னைக் கண்டவுடன் அள்ளி அணைத்துக் கொள்ளும் அத்தை ஒரேயடியாக விலகியது சற்று மன வருத்தமாக இருந்தாலும் காரணம் புரியாமலும்,தன் குடும்ப பொறுப்புகளின் அழுத்தத்தினாலும் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் மறக்க வேண்டிய சூழலுக்கும் வந்துவிட்டாள்.

ஆனால் இதெல்லாம் இன்று ஏன் தேவையில்லாமல் நினைவிற்கு வருகிறது என்று மட்டும் அவளுக்குப் புரியவே இல்லை. எந்த வேலை செய்தாலும் மனம் எதிலோ கட்டுண்டது போன்று ஒரு இறுக்கத்துடனே இருந்தது…… அத்தோடு வித்தியாசமான அந்த மணம் வேறு மிகவும் சங்கடப்படுத்தியது அவளை. எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக இரவில் நிம்மதியான உறக்கமும் இல்லாமல், ஏதோ அரை மயக்க நிலையில் இருக்கும் வேளையில் யாரோ தட்டி எழுப்பியது போல விலுக்கென்று விழிக்கவும், விருட்டென்று யாரோ நான் போகிறேன் என்று சொல்லிக் கொண்டே மின்னலாக மறைவதும் தெரிய……. அதிர்ச்சியில் வியர்த்துக் கொட்ட….. தொலைபேசி அழைப்பு மணி சிணுங்க, படபடவென இதயம் துடிக்க, மெல்ல எழுந்து மின் விளக்கை ஏற்றியவள், தொலை பேசியை எடுத்து ஹலோ என்பதற்குள் இதயம் பலவாறு படபடத்ததை தாங்க இயலவில்லைதான்! தொலைபேசியில் வந்த செய்தியோ மேலும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. ஆம் வண்ணநிலவனுக்கு மாரடைப்பாம், இரண்டு நாட்களாக கோமாவில் இருந்தவன், இன்று அதிகாலை இறந்து விட்டானாம்………

பொழுது விடியக் காத்திருந்தவள் கணவனுடன் கிளம்பி தில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தது கூட தெரியாமல் ஏதோ விளங்காத மன நிலையுடனேயே வந்து கொண்டிருந்தாள். டாக்சியில் ஏறி உத்திரமேரூர் வந்து சேர்ந்த போது, பழைய நினைவுகள் மெல்ல வர ஆரம்பித்தாலும், அங்கு வந்தபோது தான் தெரிந்தது இரண்டு நாட்களாகத் தன்னுடனேயே இருந்த அந்த மணத்தின் நெடி வந்த வழியும் புரிந்தது.. ஆம் அதே நெடி, பன்னீர், ஊதுவத்தி, ரோசா அனைத்தும் இணைந்த ஒரு விதமான நெடி! தலை சுற்ற ஆரம்பித்தது அவளுக்கு. உள்ளே நுழைந்தவுடன் அத்தை , பாவி வந்துவிட்டாயா என்று தலையில் அடித்துக் கொண்டு ‘ஓ’வென்று கதறியது மேலும் சங்கடப்படுத்த, மரகதவல்லியின் அம்மாவும், அவளை இங்கு இவள் ஏன் வந்தாள் என்பது போல் பார்க்க, மேலும் குழப்பம் அதிகமானது.

சடங்குகள் , சம்பிரதாயங்கள் என்று நிறைய இருந்தாலும், திருமணமே ஆகாத ஒரு பிரம்மச்சாரிக்கு சடங்குகள் அதிகம் செய்வதில்லை. குழப்பம் மட்டும் தீராவிட்டாலும், என்னவோ தெளிவாக ஆரம்பித்தது. அம்மா வேறு அத்தையை நெருங்கக் கூட முடியாமல் ஒதுங்கியே இருந்ததும் புரிந்தது. இவையனைத்திற்கும் விடை சில நிமிடங்களில் வண்ணநிலவனின் உயிரற்ற உடலைக் குளிப்பாட்டி மேல் சட்டையை எடுத்து சந்தனம் பூச முயற்சித்த போது விளங்கிவிட்டது. ஆம், திரும்பி அந்தப் பக்கம் செல்லலாம் என்று நகரப்போனவளின் கண்களில் ‘சிட்டு’ என்று இதயத்தின் வெகு அருகில் பச்சைக் குத்தி வைத்திருப்பது பளிச்சென்று பட, நொடிப்பொழுதில் நடந்ததனைத்தும் விளங்கிப்போக, காலம் கடந்த ஞானம் பயனற்றுப் போக…….

தீடீரென மாமா’, என்று ஓவென அலறியதன் காரணம் புரியாமல் வந்திருந்த உறவினர்கள் விழிக்க, மரகதவல்லி பார்த்த ஒரு பார்வையில், கூனிக்குறுகிப்போய் தலையைக் குனிந்து கொண்டாள் மரகதவல்லியின் தாய். அத்தையின் மடியில் தலை வைத்து கவிழ்ந்து முட்டிக் கொள்ள மட்டுமே முடிந்தது அவளால். ’மகனைத் தின்னாச்சு…… தண்ணியைக் குடிச்சு முழுங்கு’, என்று யாரோ அத்தைக்குத் தண்ணீரைக் கொடுத்து குடிக்கச் சொன்னது காதில் விழ, மேலே விழுந்த தண்ணீர்த் துளி நிகழ்கால நினைவைத் திருப்பித்தர, மெல்ல எழுந்தாள்……

வண்ணநிலவனின் இறுதி யாத்திரை உறவுகளின் ஓலங்களினூடே அமைதியாகக் கிளம்பி விட்டது. மரத்துப்போன உணர்வுகளின் நீட்சியாய் துவண்டு போய் கணகள் பார்வையை மறைக்க செய்வதறியாது சுயநினைவின்றி கலங்கி நின்றிருந்தாள். பெண்ணுக்கென்று தனிப்பட்ட உணர்வோ, விருப்பமோ எதையுமே அனுமதிக்காத கட்டுப்பாட்டுக் கலாச்சாரத்தில் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறாள். சமுதாய வரம்புகள் என்ற பெயரில் ,சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதுகளிலெல்லாம் பல பெண்களின் நியாயமான உணர்வுகளும் கூட சூறையாடப்படுவதும் இயல்பாகத்தானே நடந்து கொண்டிருக்கிறது இந்த சமுதாயத்தில்!

அந்த மட்டும் அவனுடைய ஆத்மா அமைதியான உலகில் , இனிமையாகப் பயணிக்கட்டும் என்று மனதார வேண்டிக் கொண்டாள் மரகதவல்லி தன் விருப்பக் கடவுளிடம்.

இதைப்பற்றிய எந்தச் சிந்தையுமே இல்லாத மரகதவல்லியின் கணவனோ, உடனடியாக ஊருக்குக் கிளம்ப வேண்டும் என்று சாடையில் பேசிக் கொண்டிருந்தான். உடனே திரும்பிப் போகவும் பயணச் சீட்டுடன் வந்ததால், விமானத்திற்கு நேரமாகி விட்டதை உணர்ந்தவள் மனக்குமுறலை வெளியே காட்டக்கூட திராணியற்றவளாக மனதில் அடக்கி வைத்துக் கொண்டு மரக்கட்டையாக புன்னகை முகமூடியையும் தரித்துக் கொண்டு கிளம்பத்தயாரானாள்!

படத்திற்கு நன்றி

2 comments:

  1. கதை நல்லா வந்துருக்கு மேடம்.

    ReplyDelete
  2. அன்பின் வித்யா,

    நன்றிம்மா. www.vallamai.com ற்கு வர்வேற்கிறேன் வித்யா. தங்கள் படைப்பை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அவசியம் அனுப்பி வையுங்கள்.

    ReplyDelete