அனு அன்று அலுவலகத்தில் நுழைந்தவுடன், அவள் வரவிற்காகவே காத்திருந்தவள் போல உடன் பணியாற்றும் அவள் தோழி கிருத்திகா, தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பது புரிய, வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு இருக்கைக்குச் சென்று கைப்பையை வைத்துவிட்டு நேரே கிருத்திகாவை நோக்கிச் செல்லலானாள். முதல்நாள் தான் அவளுடைய விவாகரத்து வழக்கிற்கான தீர்ப்பு வந்திருக்கும். அவள் முகத்தைப் பார்த்தவுடன் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பது புரிந்தும் விட்டது அவளுக்கு.
ஏன் இன்னும் நம் பெண்கள் இப்படி இருக்கிறார்கள்? எவ்வளவு மோசமான ஒரு மனிதன் கணவனாக வாய்த்திருக்கிறான். அவனே தன்னை வேண்டாம் என்று உதறித் தள்ளவும் தயாராக இருக்கிறான். இந்த நேரத்தில் விட்டது தொல்லை என்று தலையை முழுகிவிட்டு வராமல் அவனுடனேயே வாழ்ந்து சித்ரவதை பட்டுக்கொண்டேதான் இருப்பேன் என்று அடம் பிடிப்பவளை என்ன செய்யமுடியும்? திருமணம் ஆன முதல் 3 மாதங்கள் அமைதியாக வாழ்ந்திருப்பாளோ என்னவோ. மாநிறத்திற்கும் சற்று கூடுதலாகவே உள்ள நிறத்துடன், நல்ல களையான முகமும் இருந்தாலும், தன்னுடைய வெள்ளைத் தோலுக்கு சற்றும் பொருத்தமில்லாதவளாம் கிருத்திகா. இத்தனைக்கும் அவனைவிட அதிகம் படித்து, அதிகம் சம்பாதிப்பவள் இவள். இருந்தாலும் ஒரு நாளும் அவளை மதித்தவனில்லை அவள் கணவன்.
வாங்குகிற சம்பளத்தை அப்படியே எண்ணிப்பார்த்து வாங்கிக் கொண்டு, அன்றாடம் பேருந்திற்கும், கைச்செலவிற்கும் கணக்காகவே காசு கொடுப்பான். பண்டிகை பருவம் என்றால் கூட அவன் எடுத்துக் கொடுக்கும் உடையைத்தான் அவள் அணிய வேண்டும். தான் என்ற ஆணவத்தின் மொத்த உருவமாகவே இருந்த ஒருவனுக்காக இவள் ஏன் இத்தனை பரிதவிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக இவள் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தவுடனே இவனுடைய தாயும் சேர்ந்து கொண்டு வாட்டி வதைக்க, “ உன்னைப் போலவே ஒரு கருவாப் பிள்ளையை பெத்துப் போட்டிருக்கியே, என் பையனைப் போல இளிச்சவாயன் உன் மகளுக்கு எங்கு கிடைப்பான் “ என்று வசை மாறி பொழிவதில் ஆரம்பித்த பிரச்சனை, நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து இந்த இரண்டு ஆண்டுகளில் விவாகரத்தில் வந்து முடிந்திருக்கிறது. அதற்கு அவர்கள் சொன்ன காரணம்தான் பாவம் அவளை மிகவும் அலைக்கழித்தது. அவள் மனநலம் பாதிக்கப்பட்டவள் என்றும், அதனால் தன் நிம்மதி பாதிக்கப்படுவதாகவும் ஈவு இரக்கமே இன்றி காரணம் காட்டியிருந்தான். நல்ல வேளையாக குழந்தையை தன்னிடம் வைத்துக் கொள்வதாக கேட்கவில்லை என்பதே அவளுக்கு பெரும் ஆறுதலான விசயமாக இருந்தது. சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள்! அந்தக் குழந்தை தன்னுடைய மறுமணத்திற்கு தடையாகலாம் அல்லவா? அதனால்கூட அவன் அதை தவிர்த்திருக்கலாம். பாவம் இந்த மக்குப்பெண் அது கூட புரியாமல் இருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டாள்.
கிருத்திகா , அனு அருகில் சென்றவுடன், தன்னை மறந்து அவள் கையை இறுகப்பற்றிக் கொண்டு கண்ணீர் சிந்தலானாள். அனுவிற்கு மிகவும் சங்கடமாக இருந்தது. இவள் ஏன் இப்படி அப்பாவியாக இருக்கிறாள் என்ற கோபம் ஒரு புறம் இருந்தாலும், ஒரு பெண் குழந்தையை வைத்துக் கொண்டு எப்படி வளர்க்கப் போகிறாள் என்றும் கவலையாக இருந்தது. அவளுக்குப் பெற்றோரும் இல்லை. அவளை கேண்டீனுக்கு அழைத்துச் சென்று முடிந்த மட்டும் ஆறுதல் வார்த்தைகளும், தைரியமும் கொடுத்தாள். இருந்தும் கிருத்திகாவின் முகத்தில் இருந்த சோகம் சற்றும் குறையவில்லை.
அனுவின் மனநிலையிலும் அந்த பாதிப்பு இருந்தது. நன்கு படித்து, நல்ல பணியில் இருக்கும் கிருத்திகா போன்ற பெண்களே இவ்வளவு நொந்து போனால்,படிப்பறிவில்லாத பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்று எண்ணி மேலும் வேதனைப்படவும் செய்தாள். அவளுடைய பரந்த மனமும் இரக்க குணமும் வேதனையை மேலும் அதிகப்படுத்தியது. எப்படியும் கிருத்திகாவிற்கு தன்னம்பிக்கையூட்டி அவளைத் தேற்ற வேண்டும் என எண்ணிக் கொண்டாள். அதே நேரத்தில்,
‘ நல்ல வேளையாக தனக்கு இது போன்று துன்பம் நேர வாய்ப்பே இல்லை. காரணம் சிறு வயதிலிருந்து ஓரளவிற்கு அறிந்து வைத்திருக்கும் ஒரு அமைதியான நல்ல குடும்பத்திலிருந்தல்லவா தனக்கு திருமணம் பேசி முடித்திருக்கிறார்கள். அந்த வகையில் தான் மிகவும் பாக்கியசாலி. அதற்கு தன் பெற்றோருக்குத்தான் மனமார்ந்த நன்றி தெரிவிக்க வேண்டும்’ , என்று எண்ணிக் கொண்டாள். உடனே ரம்யா தன்னிடம் பேச வேண்டும் என்று சொன்னதும் நினைவில் வந்து ஏதோ உறுத்தியது…….
பணியில் மூழ்கியவளுக்கு நேரம் போனதே தெரியாமல் , செல்பேசியின் அழைப்பு மணி நினைவு கூறச் செய்தது.
“ ஹலோ, அனு நான் ரம்யா. கிளம்பி வரலாமா? “
“ ஓ, மணி ஆனதே தெரியவில்லை . கிளம்பி வாருங்கள் ரம்யா. நானும் தயாராகி விடுகிறேன். “
”ஹலோ அனு, யூ லுக் சோ பிரிட்டி, இன் திஸ் மெரூன் சுடி”
“ நன்றி, ரம்யா. நீங்களும் இன்று சுடிதார் அணிந்து அழகாகத்தான் இருக்கிறீர்கள்”
“ என்ன செய்வது, என் அம்மாவின் கட்டாயத்தினால்தான் சுடிதார் அணிய வேண்டியதாகிவிட்டது. மற்றபடி சிம்பிளா ஒரு ஜீன் பேண்ட்டும், ஒரு காட்டன் டாப்ஸீம்தான் என்னோட ஃபேவரிட் ரம்யா”
“ அது சரி இங்கிருக்கும் போதாவது அம்மாவின் ஆசையையும் நிறைவேற்றவேண்டுமல்லவா?”
“ அனு, நீங்கள் பரவாயில்லை, ரொம்ப யதார்த்தவாதியாகவும், அதே சமயம் பரந்த மனதுடையவராகவும் இருக்கிறீர்கள். நமக்கென்ன என்று தம் காரியங்களில் மட்டுமே கண்ணாக இருப்பவர்களைத்தான் இன்று அதிகம் பார்க்க முடிகிறது. ஆனால் நீங்கள் மற்றவர் நலனிலும் அக்கறை கொண்டவராக இருக்கிறீர்கள். அந்த மனிதாபிமானம் தான் இப்போது என்னை உங்களிடமொரு முக்கியமான விசயம் பேச தைரியத்தை வரவழைத்திருக்கிறது. “
பீடிகை பெரிதாக இருக்கிறதே என்ன பேசப்போகிறாளோ தெரியவில்லையே என்று சற்று படபடப்பாக இருந்தாலும், சரி அப்படி என்னதான் பேசிவிடப் போகிறாள் பார்க்கலாம் என்ற நம்பிக்கையும் கைகொடுக்க, முகத்தில் புன்னகையுடன், ஆவலாக ரம்யாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.ஆனாலும் இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுவாளென்று எதிர்பார்த்தவளில்லை அவள்!
” அனு,வாழ்க்கையில் நாம் போடும் கணக்குகள் பல நேரங்களில் தவறான விடையைத் தரும் பொழுது திரும்பவும் அதை சரி செய்வது என்பது இயலாத காரியமாகவே அல்லவா ஆகிவிடுகிறது…… “
ரம்யா ஆழ்ந்த யோசனையின் ஊடே பேசிய இந்த வார்த்தைகளும், அவளுடைய முகத்தில் தெரிந்த குழப்ப ரேகைகளும் , அவளுடைய மௌனத்தைக் கலைக்கும் செயலை நிறுத்தி வைக்கத் தோன்றியது அனுவிற்கு. மேற்கொண்டு அவளே பேசட்டும் என்று பொறுமையாக அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
சற்று நேரத்தில் சுய நினைவிற்கு மீண்டவளாக, “ சாரி, அனு. என் நினைவுகளும் பின்னோக்கிச் சென்று விட்டது………. அது என் சொந்தக்கதை… சோகக் கதை. இன்னொரு நாள் சொல்கிறேன். இப்ப நான் பேச வந்த விசயத்தை எப்படி ஆரம்பிப்பது என்றுதான் சங்கடமாக இருக்கிறது. நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்களோ தெரியவில்லை. திருமணம் என்பது ஒருவர் வாழ்க்கையில் பெரிய திருப்பு முனை. அந்த இடத்தில் ஏதும் சிறிய பிரச்சனை என்றால் சமாளித்து முன்னுக்கு வர முடியும். ஆனால் அடிப்படையிலேயே ஆட்டம் கண்டால் வாழ்க்கை முழுவதும் சம்பந்தப்பட்ட இருவருக்கும் அது நரக வேதனையாகத்தானே இருக்கும்”
ரம்யா என்ன சொல்ல வருகிறாள் என்பதை புரிந்து கொள்ளவே முடியாமல் குழப்பமாக இருந்தது அனுவிற்கு. தன்னைப் பற்றி ஒரு வேளை ஏதும் சொல்ல முயற்சிக்கிறாளா… எதுவும் புரியாமல் கேள்விக்குறியுடன் அவள் முகத்தை உற்று நோக்கியதை கவனித்தவள் நேரடியாக பேச முடிவெடுத்தாள்.
”அனு, நான் சொல்லும் விசயத்தை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. ஆனாலும் உங்களைப் போன்று நல்ல நண்பர்களுக்கு என்னால் ஆன நன்மையைச் செய்ய வேண்டுமென்று என் உள் மனது சொல்லிக் கொண்டே இருக்கிறது. கண் முன்னே தெரியும் பிரச்சனைகளைக் கண்டும் காணாமல் இருக்க முடியவில்லை.”
“ரம்யா, எதுவானாலும் தெளிவாகச் சொல்லுங்கள். இத்தனை பீடிகை தேவையில்லை. நானும் வாழ்க்கையை யதார்த்தமான பார்வையில் பார்ப்பவள்தான். கற்பனையில் வாழும் கவிஞர் அல்ல. அதனால் வெளிப்படையாகவே பேசலாமே…”
அனுவின் இந்த தெளிவான சிந்தை அவளுக்கும் தைரியத்தை வரவழைக்க, “ அனு, இப்போது நான் பேச வந்தது உங்களுக்கு நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளை என் நண்பர் மாறன் பற்றித்தான். அவன் இப்போது பெரிய குழப்பத்தில் நிம்மதி இல்லாமல் இருப்பது உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அவன் தான் இது பற்றி இன்னும் யாரிடமும் மூச்சு விடாமல் இருக்கிறானே…. “
ஒரு நொடி நிறுத்தி அனுவின் முகத்தைப் பார்த்தவள் மேலும் அவளை குழப்பத்தில் ஆழ்த்த வேண்டாம் என்ற முடிவுடன், மாறன், அவந்திகாவை முதன்முதலில் தந்தையின் மூலம் அறிமுகப்படுத்திக் கொண்டது, அதன் பிறகு அவளை நேரில் சந்தித்தது, கண்டதும் காதல் கொண்டது, அதற்குப் பிறகு காதலுக்கு வந்த சோதனையில், ஒருதலைக் காதலானது , இப்படி அனைத்தையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள். அனுவின் மனதில் எத்தகைய எரிமலை இப்போது கனன்று கொண்டிருக்கும் என்று புரிய, அடுத்த நொடி அவளருகில் சென்று ஆதரவாக அவள் தோளை அணைத்துக் கொண்டவள்,
“ சாரி, அனு. உன்னை வேதனைப்படுத்துவது என் நோக்கமல்ல. காலம் முழுவதும், மனதில் ஒருவரையும், மடியில் ஒருவரையும் சுமக்கும் கொடுமை உங்களிருவருக்கும் வேண்டாமே என்றுதான் இந்த முடிவிற்கு வந்தேன். இன்றோடு இந்தப் பிரச்சனை முடிந்து போவதை விட்டு ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொண்டு காலம் முழுவதும் எப்படி வாழ முடியும் அனு. என் மேல் உங்களுக்கு இப்போது வெறுப்பு வந்தாலும், பின் ஒரு காலத்தில் இது சரியான செயல் என்பதை நீங்கள் கட்டாயம் ஒப்புக்கொள்வீர்கள். உங்கள் நல்ல மனதிற்கு நல்ல வாழ்க்கை அமையும் என்பதிலும் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது . .. ஏதாவது பேசுங்கள் அனு. எனக்கு இப்போது குற்ற உணர்ச்சி அதிகமாகிறது. உங்களை வேதனைப்படுத்தி விட்டேனோ? தயவு செய்து என்னை மன்னித்து மிக்க விடுங்கள் அனு…. “
“ பிரச்சனைகளில் இருக்கும் போது அதிலிருக்கும் சந்தோஷத்தைப் பிரித்துப் பார்க்கத் தெரிந்தாலே பாதி கவலை மறைந்து விடும் என்பது நானும் பலருக்கும் சொல்லும் ஒரு தீர்வுதான் ரம்யா. ஆயினும் திடீரென நீங்கள் சொன்னவுடன் சற்று அதிர்ச்சியாகி விட்டது. அது மட்டுமல்ல என் பெற்றோரும், மாமா,மாமியும் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்றும் கவலையாக இருக்கிறது, அவ்வளவுதான். இதை எப்படி அவர்களிடம் சொல்லி புரிய வைப்பது ”, என்பதையும் சொல்லி , முகத்தில் தெரியும் தன் அதிர்ச்சியை மறைப்பதற்கு பெரும் முயற்சி எடுத்துக் கொண்டிருந்தாள். தன்னையறியாமல் கலங்கும் கண்களை மறைக்க மறுபுறம் பார்வையை திருப்பிக் கொண்டாள். குப்பென்று வியர்த்து, போட்டிருந்த பவுடரும் கலைந்து, அனைவரும் காரணம் கேட்பார்களே என்ற தவிப்பும் வர, ரம்யாவிடம் சொல்லிவிட்டு, நேரே கழிவறை சென்று ,முகம் கழுவி, கைப்பையில் இருந்த டால்கம் பவுடரை எடுத்து லேசாக ஒற்றிக் கொண்டு, முகத்தில் புன்னகையும் வரவழைத்துக் கொண்டு, நிமிடத்தில் யதார்த்தத்திற்கு வந்துவிட முயற்சித்தாள்.
வெளியே வந்த அனுவைப் பார்த்தவுடன் ரம்யாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. நிமிடங்களில் அதிர்ச்சியை மறந்து,பழைய நிலைக்குத் திரும்பிய அவள் நிலையைக் கண்டு மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஒப்பனை எப்படியெல்லாம் பயன்படுகிறது என்று நினைத்து அந்த நேரத்திலும் அவளுக்கு சிரிப்பாக வந்தது. ஒவ்வொரு பெண்ணின் ஒப்பனைக்குப் பின்னும் எத்தனை எத்தனை சோகங்கள் இருக்கிறதோ…….?
“ அனு, உங்களிடம் மற்றொரு உதவியும் கேட்கப்போகிறேன். மாறன் தன் வீட்டில் இது பற்றி பேச அச்சப்படுகிறான். அப்பாவிற்கு வேறு ஹார்ட் ப்ராப்ளம் இல்லையா, அதான் அவர் டென்சன் ஆயிட்டா என்ன பன்றதுன்னு பயப்படுவான் போல.”
“ பரவாயில்லை ரம்யா. அதை நான் பார்த்துக் கொள்கிறேன். மாமாவிடம் சமயம் பார்த்து இதைப்பற்றி பேசுகிறேன். நீங்கள் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள் ரம்யா. நானும் உங்களுக்கு தேவையான உதவியை செய்கிறேன்” என்று சொல்லும் போது அவளுடைய மனது வலிக்கத்தான் செய்தது.
அந்த பாதிப்பு ரம்யாவிற்கும், இருந்தாலும் ஒரு வகையில் தான் அனுவிற்கு நல்லதைத்தான் செய்திருக்கிறோம் என்ற மன நிறைவும் இருந்தது. இனி அடுத்தது அவந்திகாவின் பெற்றோரைச் சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்தாள். அவந்திகாவின் மனமாற்றமும் இதற்கு உறுதுணையாக இருக்கும் என்பதும் நம்பிக்கையளிக்க அடுத்த நாள் அவர்களைச் சந்திக்க திட்டம் போட ஆரம்பித்தாள்…
ஆர்டர் செய்திருந்த உணவு வகைகளில் அதிகம் நாட்டம் செல்லாமல் ஏதோ பெயரளவில் இருவரும் கொரித்துவிட்டு கிளம்பினார்கள் மௌனமாக……
தொடரும்.
No comments:
Post a Comment