Friday, March 23, 2012

வெண்ணிலவில் ஒரு கருமுகில்!(31)

நண்பர்கள் சேர்ந்து விட்டால் அங்கு கொண்டாட்டத்திற்கு பஞ்சமேது… குடும்பத்தினர்கள், அவரவர்களும் தங்கள் சொந்த கதையையும் சோகக் கதையையும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். குழந்தைகள் அடிக்கும் லூட்டிகள் பெற்றோருக்கு வேண்டுமானால் சமாளிப்பது சிரமமாகலாம். ஆனால் அவர்கள் படும்பாட்டை கேட்பவர்களுக்கு சுவாரசியத்தில் குறைவிருக்காது. குழந்தைகள் எளிதாக தாங்கள் வாழும் இடங்களுக்குத் தகுந்தவாரு தங்களை பழக்கப்படுத்திக் கொள்கிறார்கள். அங்கிருக்கும் மற்ற குழந்தைகளைப் பார்த்து சகல பழக்கங்களையும் கற்றுக் கொள்ளத் தயங்குவதும் இல்லை. நாகரீகத்தில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகளில், நம் நாட்டின் சூழலில் வளர்ந்த பெற்றோர்களின் குழந்தைகள் அங்கிருக்கும் குழந்தைகள் போல நடந்து கொள்ளும் போது அவர்களுக்கு அதன் தாக்கம் சற்று அதிகமாகத்தான் இருக்கும்.

சந்திரு, தம் 8 வயது மகனை, ஏன் எப்பொழுது பார்த்தாலும் வீடியோ கேம் விளையாடிக் கொண்டேயிருக்கிறாய். வேறு பிழைப்பே கிடையாதா என்று கேட்கப்போக, அவன் அதை துளியும் சட்டை செய்யாமல் தன் வேலையில் கவனமாக இருந்திருக்கிறான். பல முறை கேட்டும் பதில் இல்லாதலால், கோபம் தலைக்கேற, முதுகில் ஒரு தட்டு தட்டி விட்டார். அவ்வளவுதான். மளமளவென எழுந்து சென்ற அந்த சிறுவன் நேரே போய் ஒருவரும் சற்றும் எதிர்பாராத வகையில், தொலைபேசியை எடுத்து 911 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விட்டான்… இது அமெரிக்க நாடுகளில் சர்வ சாதாரணமாக நடக்கக் கூடிய நிகழ்வுதான் என்றாலும், மகன் செய்த செயலால் குடும்பமே ஆடிப்போய்விட, பிறகு காவல்துறையினர் உடனடியாக வரவும், அதற்குள் கணவனும், மனைவியும் மகனிடம் காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்டு, தெரியாமல் எண்ணை அழுத்தி விட்டதாக சொல்லச் சொல்லி கெஞ்சிக் கேட்டு சம்மதிக்க வைப்பதற்குள் போதும்போதும் என்றாகிவிட்டதை சொல்லி ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்ததை,துளியும் கவலை இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறான் சம்பந்தப்பட்ட அந்த குழந்தை.

இப்படி ஆளாளுக்கு ஒரு கதையைச் சொல்லிக் கொண்டிருக்க, இரண்டு சிட்டுகள் மட்டும் எதிலும் கவனம் செல்லாமல் தனி ஆவர்த்தனம் வாசித்துக் கொண்டிருந்தன கண்களால். அன்றாடம் பார்க்கக்கூடிய அந்த பார்வையில் புதிதாக ஏதோ மாற்றம் இருப்பது இருவருக்கும் தெரிந்தாலும், அதை மறைக்க எவ்வளவு முயன்றாலும் இயலாமல் தவித்ததும் வெளிப்படையாகத் தெரிந்தது. கண்களால் ஆயிரம் கதைகள் பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தன… ஏதோ இந்த உலகில் தங்கள் இருவரைத் தவிர ஒருவருமே இல்லாதது போன்ற எண்ணம் மட்டுமே இருந்தது அவர்களுக்கு.

கல்வியறிவு மட்டும் ஒரு மனிதனை அறிவாளி ஆக்கிவிடுவதில்லை. வெறும் புத்தக அறிவை மட்டும் வைத்துக் கொண்டு , சுய சிந்தனை சற்றும் இல்லாமல் இருப்பவரை எப்படி அறிவாளி என்று ஏற்றுக் கொள்ள முடியும். சுய சிந்தனை மட்டுமே ஒரு மனிதனின் கற்கும் கல்வியை புரிந்து கொள்ளச் செய்ய இயலும் . அதாவது அது மட்டுமே விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய உளவியல் செயல்முறை, என்று ஜெ.கிருஷ்ணமூர்த்தி சொல்வார் என மற்றொரு நண்பர் சூடாக விவாதித்துக் கொண்டிருக்கும் எந்த ஒரு சக்தியும் இவர்களுக்கிடையில் நுழைய முடியாத வகையில் எண்ணங்கள் ஒன்றுபட மௌன மொழியில் கருத்துப் பரிமாற்றமும் நடந்து கொண்டிருந்தது. எங்கெங்கோ சுற்றி பேச்சு இறுதியாக ஓவியங்கள், சமையல் கலை என்று வந்தபோது அவந்திகாவின் ஓவியக் கண்காட்சி பற்றி ஏதோ பேச்சு வந்த போது அனைவரும் ஒருசேர அவளைப் பார்க்க, இருவரும் அதுகூட தெரியாமல் வெறித்துக் கொண்டிருக்க, சற்று நேரம் அனைவரும் அமைதியாக பொறுமையாக அவர்களிருவரைய்ம் பார்த்துக் கொண்டு, சிரமப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டிருக்க, அவந்திகாவின் தோழி யாமினி மட்டும் அதற்கு மேல் சிரிப்பை அடக்க மாட்டாதவளாக,

” அடடா, என்னதான் நடக்குது இங்கே……?”

திடீரென அனைவரும் கொல்லென்று சிரிக்க, சுய நினைவு வந்த மாறனும், அவந்திகாவும் வெட்கத்தில் தலை கவிழ, ஏற்கனவே ரோசா வண்ணத்தில் இருந்த அவளின் கன்னம் வெட்கத்தினால் மேலும் கோவைப்பழம் போல சிவந்து போனது. இப்படி கையும் களவுமாக மாட்டிக் கொள்வோம் என்று நினைக்காதவர்கள், செய்வதறியாது தவித்துப் போனாலும், என்னைக்கிருந்தாலும் இதை மறைக்கக்கூடிய விசயமல்ல என்பதும் உணர்ந்ததால் தெரிந்ததே நல்லதாகப் போய்விட்டது என்று நினைத்தான் மாறன். அம்மா சொன்ன ஜாதகப் பிரச்சனையோ, அப்பாவின் உறுதியான நிலைப்பாடுமோ, அனுவின் நிலையோ எதைப்பற்றியும் துளியும் நினைவில் வரவில்லை அந்த இன்பமான சூழலில்..

ரம்யாவும், அனுவும் மாறனின் தந்தையை அன்று சந்திப்பதாக முடிவு செய்திருந்தார்கள். அவர் நல்ல முடிவாக சொல்லுவார் என்ற நம்பிக்கையும் இருந்தது அவர்களுக்கு. எவ்வளவுதான் செண்ட்டிமெண்ட்டான காரணங்கள் இருந்தாலும், ஒரு மகனின் ஆசையை நிறைவேற்ற வேண்டிய கடமையும் ஒரு தந்தைக்கு இருக்கிறதே. ஜாதகக் கோளாறை நிவர்த்தி செய்யும் பரிகாரங்களைத் தேடிச்செல்ல ஆரம்பித்து விட்டார். ஏனோ மனதில் ஒரு உறுத்தல் மட்டும் இருந்து கொண்டே இருந்தது. இது போன்ற நம்பிக்கைகள் அழுத்தம் பெறும்போது வேறு எந்த விதமான சிந்தைகளையும் உட்புக விடாமல் தடையை ஏற்படுத்தி விடும். அந்த வகையில் இந்த நினைவு மாறனின் தந்தை ராமச்சந்திரனை மிகவும் அலைக்கழித்தது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வாட்டம் அவர் முகத்திலும் தெரிந்தது. மனைவிக்கு பெரும் குழப்பமாக இருந்தது. ஏற்கனவே இருதய நோய் உள்ள மனிதராச்சே, இந்த மன அழுத்தம் நல்லதல்லவே என்ற குழப்பம் ஒரு புறம் இருந்தாலும், மகனின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டிய கடமையும் நினைத்து அதை வெளிக்காட்டிக் கொள்ளவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்துப் போனாள். பெற்றோர் என்பவர் மட்டுமே இறுதியில் தியாகச் சுடர்களாக ஒளிவீச வேண்டியவர்கள் என்பது மட்டுமே நம் பாரம்பரிய வழக்கமாகிவிட்டதே… இதை மாற்றுவதும் அவ்வளவு எளிதான காரியமும் அல்லவே. தன்னால் ஆனது அந்த நேரத்தில் கணவரை சமாதானம் செய்வது மட்டுமே என்பது புரிந்ததால் அதோடு நிறுத்திக் கொள்ள வேண்டியதாகி விட்டது.

ரம்யாவும், அனுவும் திரும்பவும் வந்து சென்றவுடன் அவந்திகாவின் பெற்றோரிடம் பேச வேண்டும் என்ற முடிவும் எடுத்தார்கள். அதற்கு முன் மற்றொரு முக்கியமான காரியமாக அனுவிற்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக ஒரு நல்ல மாப்பிள்ளையைப் பார்க்க வேண்டும் என்றும் முடிவு செய்து கொண்டுதான் அடுத்த வேலையை ஆரம்பிக்க முடிவு செய்தார். குடும்ப ஜோசியரை முதலில் பார்த்து வேண்டிய பரிகாரங்களுடன் வேலையைத் தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. வருகிற முகூர்த்த மாதத்தில் திருமணத்தை முடித்துவிட வேண்டும் எனவும் முடிவு செய்து, நல்ல நாளாகப் பார்த்து அவந்திகாவின் வீட்டிற்கு முறையாகச் சென்று திருமணம் பேச வேண்டும் என்றும் முடிவு செய்தார்கள். எவ்வளவுதான் ஆக்கப்பூர்வமாக சிந்தித்துக் கொண்டிருந்தாலும், அந்த உறுத்தல் மட்டும் குறைந்த பாடில்லை.

நான்கு நாட்களில் ரம்யா வந்துவிடுவாள் என்ற எண்ணமே மாறனுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்தது.. தன் வாழ்க்கையில் புதிய ஒளி வெள்ளத்தை அல்லவா புகுத்தப் போகிறாள். இப்படிப்பட்ட அருமையான நட்பு யாருக்குக் கிடைக்கும். பிறவிப்பயன் அடைந்தது போன்று ஒரு மகிழ்ச்சி வெள்ளத்தில் திக்கு முக்காடித்தான் இருந்தான், தந்தையும் மனம் இரங்கி திருமணத்திற்கு ஒப்புக் கொண்ட செய்தி கேட்டு. ரம்யா கொடுத்த தொலைபேசி செய்தி வயிற்றில் பாலை வார்த்தது போன்று இருந்தது இருவருக்கும்…..

மளமளவென நல்ல காரியங்கள் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார் மாறனின் தந்தை. அதுதான் அவருடைய இயற்கை குணம். முடிவு எடுக்கும் வரைதான் குழப்பத்தில் இருப்பார் ராமச்சந்திரன். நன்கு யோசித்து முடிவு எடுத்தவுடன் பின்வாங்க மாட்டார். எது வந்தாலும் எதிர்கொண்டு சமாளிக்கும் வல்லமையும் உண்டு மனிதருக்கு. மகனிடம் விடுமுறை பற்றியும் பேச வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டிருந்தார். மனைவி மூலமாக அவந்திகாவும் தன் பெற்றோருடன் பேசியிருப்பதாக அறிந்து கொண்டதால் அவர்கள் வீட்டில் பெரிய விவாதத்திற்கெல்லாம் இடம் இருக்காது என்பதும் புரிந்ததால் அடுத்த நடவடிக்கை பற்றி கவனம் கொள்ள் முடிந்தது.

ராமச்சந்திரனுக்கு தம் பால்ய சிநேகிதன் ராஜாராமன் நினைவு வந்தது. அவருக்கு ஒரு மகன் இருப்பதும் அவர்களும் வரன் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கேள்விப்பட்டிருந்தது நினைவில் வர முதல் காரியமாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தன் சகோதரி தன் மீது கொண்ட மரியாதை கொடுத்த தைரியத்தில் தானே நேரில் சென்று அனு திருமணம் குறித்து பேசுவதற்காக கிளம்பி விட்டார். அனைத்தும் நல்லபடியாக இருந்தால் அனுவின் வீட்டில் சொல்லிக் கொள்ளலாம் என்ற முடிவோடு கிளம்பி விட்டார். தான் எதிர்பார்த்ததைவிடவே காரியங்கள் தடையின்றி நடந்தது உற்சாகத்தைக் கொடுத்தது அவருக்கு. அனுவிற்கு ஒரு நல்ல வரன் அமைந்து விட்டால் பிறகு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் தம் மகனின் திருமணத்தை மகிழ்ச்சியுடன் நடத்த முடியும் என்ற சுயநலமும் இல்லாமல் இல்லை.

மாப்பிள்ளை சென்னையிலேயே ஒரு தனியார் வங்கியில் மேனேஜராக பணிபுரிந்து கொண்டிருப்பதாலும், நல்ல குடும்பமாகவும் இருப்பதாலும் தனக்கு திருப்தி ஏற்பட, மாப்பிள்ளையின் ஜாதகமும், புகைப்படமும் வாங்கிக் கொண்டு வந்தார். மாப்பிளளைக்கு நல்ல களையான முகம். அனுவிற்கு மிகப்பொருத்தமான வரன். ஜாதகம் சரியாக இருந்தால் முடித்து விடலாம் என்று முடிவும் செய்து, நேரே தன் சகோதரியின் வீட்டிற்குச் சென்றார். அனுவின் நல்ல மனதிற்கு எல்லாம் நல்லபடியாக முடியும் என்ற நம்பிக்கையும் இருந்தது. கூடவே அனு என்ன சொல்லுவாளோ என்ற லேசான ஐயமும் வந்தது.

தொடரும்.

படத்திற்கு நன்றி :

http://www.publicdomainpictures.net/view-image.php?image=7499&picture=young-couple

நன்றி :வல்லமை.

2 comments:

  1. விறு விறுப்பான கதை !

    ReplyDelete
  2. அவந்திகா நல்லதொரு பெயர்.வாசிக்கிறேன்.தொடரட்டும் !

    ReplyDelete