Wednesday, March 7, 2012

மனித நேயச் சிந்தையின் உயிர்ப்பு!

அந்த நான் இல்லை நான் – கவிதை மலர் மதிப்புரை.

ஒருவரை ஒருவர் எழுதிக் கொள்கிறோம்! கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்களின் கவிதையுடனான உறவு தொடங்கிய விதம் மிகச்சுவையான ஆரம்பம்……. ”அந்த நான் இல்லை நான்” என்ற கவிதைத் தொகுப்பில்.”புதுக்கவிதைப் புனலில் ஆடும் இவர், மரபுக் கவிதை மழையிலும் நனைபவர்” என்று கவிஞர் க.து.மு.இக்பால் அவர்களின் பிச்சிப்பூவாக மலரும் கவிதைகள் என்ற புகழாரத்துடன், கோடைத் தென்றலாய் மென்மையாக மலர்ந்திருக்கும் மலர்வனம்!

வாழ்க்கை
வாழ்தலில் புரிதலா?
அல்லது
வாழ்ந்து புரிதலா?

புரிதல் என்பது வாழ்க்கையின் பல்வேறு கோணங்களில் அலசப்பட்டுள்ளது, கவிஞரால். என்னென்னவோ புரிந்தாலும்…. அவையனைத்தும் வாழ்க்கை முடியும் தருவாயில்தான் சாத்தியமாகிறது என்ற இவருடைய வாதம் ஓஷோவின் ஆழ்ந்த தத்துவ ஞானத்தின் வெளிப்பாடாகக் காண முடிகிறது!

புரியாத மொழியில் அறியாத வகையில் ஆழ்ந்த கருத்துக்கள் கொண்ட பல கவிதைகள் மருட்சி ஏற்படுத்தி, மக்களை முழுமையாகச் சென்று அடைவதில்லை. எளிமையான நடையில் சாமான்யரும் சுவைக்கும் வகையில் இன்பத்தேனை அள்ளி வழங்கும் போது வாசகரின் கற்பனைச் சிறகையும் உடன் ஏந்திக் கொண்டு மேலும் பல பரிமாணங்களுடன் வானில் வட்டமிடத் துவங்கி விடுகிறது. கவிஞரோடு சேர்ந்து, வாசகரும் பயணிக்கும் அந்த சுகம் எளிமையான அந்த நடையின் தாக்கம் படைப்பாளியையும் வெற்றி வாகை சூடச் செய்து விடுகிறது. அந்த வகையில், “கவிதை என் வழியாய்த் தன்னை எழுதிக் கொள்கிறது – நான் கவிதை வழியாய் என்னை எழுதிக் கொள்கிறேன் – இப்படித்தான் நானும் கவிதையும்!” என்று வெகு நேர்த்தியாக தம் நிலையை விளக்கி விடுகிறார் கவிஞர்.

அந்தக்கணத்தில்
பனியாய் இறங்கியவை
பறவையாய்ச்
சிறகுவிரித்தவை

பறவையாய் வானில் விரிந்த சிறகு, வாசகரையும் அணைத்து உடன் அழைத்துப் போகும் உற்சாகம் இவர்தம் கவிதையில் காணலாம்.. காட்டாக,

இருப்பு இல்லாத கவலையால்
இருப்புக்கொள்ளவில்லை மனம்

புன்னகை செய்யுங்கள்
புன்னகை செய்யவையுங்கள் என்கிறார் ,ஆம் செய்கூலி, சேதாரம் இல்லாத நகையாம் – புன்னகை! (நகை செய்யுங்கள்)

இமைகளின் நடனம்
இல்லாமல்
இதயங்களில் சலனம்
இல்லை

இமைகளின் நடனங்கள்
காதல் கடிதங்கள்
சபலங்கள் எல்லாம்
காதல் சாபங்கள்
என்ற இவருடைய இதமான கற்பனை மு.மேத்தா அவர்களின்,

விரித்தவர்களே
அகப்பட்டுக்கொள்ளும்
விசித்திர
வலை.

இரண்டு கண்களும்
இரண்டு கண்களும்
எதிர்பட்டுக்கொள்ள
நான்கும் குருடானபின்
நடக்கும் நாடகம்!
என்ற நிதர்சனத்தையும் நினைவில் கொண்டு நிறுத்துவதையும் தவிர்க்க இயலவில்லை!

உன்னதமான உணர்வுப் பகிர்வை உறுதியான எளிய நடையில் உவர்ப்பில்லாமல் வழங்குவதில் வெற்றி கண்டிருக்கிறார் இந்த மனித நேயக் கவிஞர்.

கவிஞர் மு.மேத்தா அவர்களின் ,”எழுத்து விதைகள் இதயங்களில் தூவப்படும்போது செழித்து வளர்வது ஒரு தனிமனிதன் அல்ல- சமுதாயம்! என்ற வரிகளை நினைவு கூறச் செய்கிறது இவர்தம், ‘பசும்பொன்’கவிதை.

வெகுளியும் இல்லாத,வெட்கமும் இல்லாத விலங்குகளின் வீடு, இது நல்ல காடு…… என்ற இவரின் ஆதங்கம் மனிதாபிமானத்தின் உச்சம்! அழகான புனைவு!

பெண்ணாய்ப் பிறந்தது தவமல்ல பாவ்ம், உன்னை நாங்கள் பெற்றதுதான் பெருந்தவம் என்கிறார்,தாடிக்காரர் வாழ்ந்துபோன வந்து போன, தடயம் இருக்கிறது, தடமும் இருக்கிறது என்று அறுதியிட்டு கூறியுள்ள இக்கவிஞர்! ’மங்கையராய்ப் பிறந்திடவே மாதவம் செய்திட வேண்டுமம்மா என்றானே உங்கள் தாடிக்காரன்!’ என்று கேட்கத் தோன்றுகிறது.

கரை நோக்கி நகரும் புயல் அழித்த வாழை, தென்னைத் தோட்டங்கள் மற்றும் கரும்பு , நெல் வயல்கள், ஏரி, குளங்கள் என்று பட்டியலிடும் கவிஞர், நாட்டில் நடந்து கொண்டிருக்கும் இன்றைய அவலங்களின் தம் ஆழ்ந்த வேதனையைப் பதிவிட்டிருக்கிறார், தம் சுந்தர நடையில்…..

அது மரியாதைக்குரியதாக இருப்பினும் அதன்மீது எனக்கு மரியாதை இல்லை…. எதைச் சொல்கிறார்…? ஏன் சொல்கிறார்…? ஆரம்பத்தில் ஆச்சரியமாக இருந்தாலும் முடிவில் சொல்வதன் காரணத்தைத் நியாயப்படுத்துவதன் மூலமாக நம்மையும் ஒப்புக் கொள்ளச் செய்கிறார். ஆம் கடைச்சரக்காகிப் போகும் உன்னதங்களைக் காணும் போது ஏற்படும் இயல்பான தாக்கம்! (கதை கதையாம் காரணமாம்)

சிறைகளின் பெருமைகளெல்லாம், மிருகங்களின் அடக்கத்தில் அடங்கியிருக்கிறது, என்பதும் ஆழமாக சிந்திக்க வைக்கக் கூடிய பதிவு! எந்தெந்த சிறை? (சிறை விலங்கு)

வாழ்க்கைப் பயணம் இன்பமும், துன்பமும் நிறைந்த வழிப்பாதை என்ற பல்வேறு மகான்கள் ஏற்றுக் கொள்ளும் சத்தியமான தத்துவத்தை, அடைக்கப்படாத ஓட்டைகளோடும், அகற்றப்படாத அழுக்குகளோடும், சுகமும், மகிழ்வும் சேர்ந்தேதான் இந்தப்பயணம் என்ற எளிமையான சொற்கள் மூலம் ஆழப்பதியச் செய்கிறார். விழா நெருக்கடிகள் ஏற்படுத்தும் அழுத்தங்கள் யதார்த்தம்.

நான் யார்? என்று உணரும் போதுதான், வானம் எனக்கு வணக்கம் சொல்லும் என்கிற உன்னதமான எண்ணப்பதிவு, உறுதியான கொள்கைப்பிடிப்பு! வாழ்த்துக்களிலிருந்து கூட விலகி நிற்க வேண்டி, ஏக்கம் நிறைந்த வார்த்தைகளின் பிரதிபலிப்பு! (வழி விடுங்கள்)

உள்ளம் நெகிழச் செய்யும் புதிய பரிமாணத்தில் ஞானப்பசியும், இலக்கிய தாகமும்!

சமூகத்தால் தோற்கடிக்கப்பட்ட மரியாதைக்குரிய தோல்வி! வாசித்துப் பார்த்தால் உண்மை விளங்கும்.

அன்றாடம் விரும்பி மனம் நாடும், தான் பாதி அது பாதியாக, மேனியில் ஆபரணமாய், அலங்காரமாய், கம்பீரமாய்த் தன்னைத் தோற்றமளிக்கச்செய்த அதன் இறுதி நிலை கண்டு கவிஞரின் மனம் போல வாசகரின் மனமும் வாடித்தான் போகிறது. காரணம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நடக்கக்கூடிய யதார்த்தம்தானே அது! (அது அப்படித்தான் வரும்)

அரசியல்….. அரசியல்….. எங்கும் எதிலும்!

அந்தக் கணமும் தானும் ஒன்றிப் புணர்ந்த பொழுதின் உன்னதமாய் சிந்திய சிந்தனை முத்துக்களைப் போன்று, (அந்த நான் இல்லை நான்)மழை விரும்பிய பூமியும், பூமி விரும்பிய மழையும் ஒரே புள்ளியில் என்றோ எப்போதோ தாகத்திற்காய் இணைவது போல , (மழைவனம்) இசைஞானியின் வைகறையின் அமைதி, ஓர் அருவியின் பேச்சு, தனிமையைத் தேடும் தவிப்பு , அதில் கரையும் இன்பம், இவை யாவும் இணைந்த புள்ளியில் தான் ஓர் இளையராஜா, இசைராஜா ஆனார் என்கிறார் சுவாரசியமாக!

உங்களால்தான்…… என்னுள் புதைந்த நான் எச்சரிக்கையாய் இருக்கிறேன் என்றாலும், போராடுவதைக் காட்டிலும், தப்பித்தலே பெருமையாகிறது என்று சொல்லுவதன் காரணம் வாசகர்களுக்கு இன்னுமொரு மாய உலகிற்கு வழிகாட்டுவதாக அமைந்துள்ளது சிறப்பு.

நாற்றமிகு பண்பாடு என்ற கவிதையில், ”இழிவை எதிர்க்கவும் நியாயத்தை, உரிமையை, யாரையும் புண்படுத்தாமல் கேட்கவும் தெரிய வேண்டும் நமக்கு” என்ற உயர்ந்த கொள்கையையும் முன் வைப்பதோடு, சதி என்ற உடன்கட்டை ஏறும் கொடிய வழக்கத்தின் மற்றொரு பரிமாணத்தைக் காட்டுகிறார்……. சிந்திக்க வைக்கிறார்.

ஒரு படைப்பாளியின் முழுமையான மன நிறைவு என்பது தன் படைப்பிற்கான நேர்மையான அங்கீகாரம் மட்டுமே என்பதை வெகு அழகாகத் தம்முடைய பரிசு எனும் கவிதையில் உணர்த்த ஆரம்பித்தவர், தமக்கு ஏற்பட்ட ஏதோ கசப்பான அனுபவத்தினால் (?) மனம் வெதும்பியிருப்பினும், வேதனையோடு வீரியம் பெறுகிறேனே அன்றி வீழ்ந்துவிடுவதில்லை என்ற தம்முடைய ஆக்கப்பூர்வமான சிந்தையையும் வெளிப்படுத்துகிறார்.ஒருவரால் பெறும் மகிழ்ச்சியைக் காட்டிலும், விழிப்புணர்வே சாலச் சிறந்தது என்பதையும் விளங்கச் செய்கிறார்.

துயரத்தைத் துடைத்தெறியும் வள்ளலாக கவிதையைக் காணும் கவிஞர், கண்ணீரை எழுதுவதே கவிதையாகிவிடும் இரகசியத்தைய்ம் போட்டுடைக்கிறார், எழுதுவது கவிதையாகிவிடுகிறது என்ற படைப்பில்!

தெய்வப்ப்ரியராக இருந்தாலும் விதியை வெல்ல முடியாது அல்லது யதார்த்தத்தை எதிர்நோக்கியிருக்க வேண்டும் என்பதாகவும் உணர்த்துகிறார், முடிவில்!

இதுவரை எட்டு கவிதை நூல்கள் ஒரு கவிதை நாடகம், மூன்று கட்டுரைத் தொகுப்பு இவர்தம் படைப்புகளாக வெளிவந்துள்ளன. கற்பனை வானில் சிறகடித்துப் பறந்து, அழகையும், இனிமையையும், அற்புதங்களையும் மட்டுமே கவியாக வடித்து மயக்கத்தில் ஆழ்த்தும் கவிஞராக அன்றி அன்றாட வாழ்க்கையின் இன்பங்கள், துன்பங்கள், யதார்த்தங்களைப் படம் பிடித்துக் காட்டும் மனிதம் நிறைந்த எழுத்துகளுக்குச் சொந்தக்காரர் இந்த கவிஞர் என்றால் அது மிகையாகாது. பாடுபொருளின் பல்வேறு பரிமாணங்கள வாசகரின் கற்பனைத் தூண்டலுக்கு வழி வகுத்து, பொய்யான மனமூடிகளைக் களைந்து மெய்யான தேடலை ஊக்குவிக்கும் உன்னத போக்கிற்கான மேடை அமைத்திருப்பது பாராட்டிற்குரியது.

நூலின் பெயர் : அந்தநான் இல்லை நான்
நூலாசிரியர் : பிச்சினிக்காடு இளங்கோ
பக்கம் – 112
விலை – ரூ.70.00


நன்றி : வல்லமை வெளியீடு.

1 comment: