Wednesday, March 7, 2012

வழிமேல் விழிவைத்து.......!

உடலோடும் உணர்வோடும்
விளையாடுவதே
வாடிக்கையாகப் போய்விட்டது.

சூடுபட்ட பூனையானாலும்
சொரணை கெட்டுத்தான்
போய்விடுகிறது.

மடிமீதும் மார்மீதும்
கையணைப்பினுள்ளும்
தஞ்சம் புகுவதே
வாடிக்கை.ஆகிவிடுகிறது.

வெட்கமுமின்றி துக்கமுமின்றி
தேடித்திரிதலே அன்றாடப்
பிழைப்பாய் இருக்கிறது.

எவர் கொடுத்தாலும்
மறுக்க இயலாத
ஏழ்மையாகிவிடுகிறது.

உண்ணும்போதும்
உறங்கும் போதும் கூட
பிரிய மனம் மறுக்கிறது.

நம்மையே நையப்புடைத்தாலும்
விட்டு அகல முடியாமல்
தவிக்கிறது உள்ளம்.

ஓங்கி ஒலித்தாலும்
இதமாக வருடினாலும்
தாங்கிப் பிடிக்கிறது தன்னையே.

வண்ணங்களும் எண்ணங்களும்
வேறுவேறாய் ஆனாலும்
அகல மறுத்து
திண்ணமாய் இருக்கிறது.

காட்டாற்று வெள்ளத்தில்
அடித்துச் செல்லும்போது
தோணியாகி காத்துநிற்கிறாய்.

தத்துவங்களாய்ப் பேசி
கட்டாந்தரையையும்
கரும்புக் காடாக்கினாய்!

கவின்மிகு நடையினால்
கனிமொழி உரையினால்
பனிப்பொழிவாய் உறையச்செய்தாய்!

துணைநாடி துவண்டு
விழும் வேளையில்
தோள்கொடுத்து அணைக்கிறாய்.

கவிபாடி காத்து நிற்கையில்
மடிஏந்தி பூத்து நிற்கிறாய்.

விதியின் பாதையில்
வீழ்ந்து விடாமலிருக்க
விருட்சமாய் நீள்கிறாய்.

கள்ளத் தோணியானாலும்
கனிவாய் கொண்டுசேர்க்கிறாய்
கதைகள் பலபேசி.

ஊனின்றி உறக்கமின்றி
பித்தாக்கி பேதையாக்கி
என்ன செய்யப்போகிறாய் மேலும்?

உடன்கட்டை ஏறிவருவாயா
மறுபிறவியில் உடன்வருவாயா
கானல்நீராய் ஓடி ஒளிவாயா?
சொல்வாயா எம் புத்தகக் காதலனே?


நன்றி - திண்ணை வெளியீடு


16 comments:

 1. மிக அருமை:)! இனிய நண்பனாகக் காதலன்.

  மகளிர் தின வாழ்த்துகள்!

  ReplyDelete
 2. நன்றி ராமலஷ்மி, தங்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. இலங்கை: ஐ.நா.வில் வைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தீர்மானம்.

  http://arulgreen.blogspot.com/2012/03/blog-post.html

  ReplyDelete
 4. ஓ...புத்தகப் பூச்சியா நீங்கள்.இனிய பிரியாத அன்பான காதலன் அவன்தான் !

  ReplyDelete
  Replies
  1. அன்பின் ஹேமா,

   எம் சாதிதானே நீங்களும்..... மகளிர் தின இனிய வாழ்த்துகள் தோழி.

   அன்புடன்

   பவள சங்கரி.

   Delete
 5. ஆஹா.. ஓப்பனிங்க்ல பூனை பற்றிய கவிதைன்னு நினைச்சேன்

  மகளிர் தின வாழ்த்துகள்.. ஆண்களூக்கு சம உரிமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இன்றிலிருந்து .. ஹி ஹி

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ... வாங்கோ செந்தில் குமார். ஆகா சொன்னீர்களே ஒரு வார்த்தை.. நியாயமா அன்புச் சகோதரரே....?

   சரி போகுது உடுங்க சம உரிமை கொடுத்தாப் போச்சு..

   அன்புடன்

   பவள சங்கரி.

   Delete
 6. சொல்ல ,மறந்துட்டேன்.. அந்த ஓவியம் செம .. கூகுள்ள இது இல்லையே, எங்கே கிடைச்சது? அழகுக்கு அழகு சேர்த்தது கவிதைக்கு ஓவியம்

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் கூகிளார் உபயம்தான்... மிக்க நன்றி. வழக்கமா லிங்க் கொடுப்பேன். இன்று மறந்துட்டேன் போல.. தேடிப் பார்க்கிறேன், திரும்பவும். கிடைத்தவுடன் தெரிவிக்கிறேன். மிக்க நன்றி திரு செந்தில் குமார்.

   அன்புடன்

   பவள சங்கரி.

   Delete
 7. Replies
  1. அன்பின் திரு குணா தமிழ்,

   வருக, வணக்கம், மிக்க நன்றிங்க.

   அன்புடன்

   பவள சங்கரி.

   Delete
 8. உடன்கட்டை ஏறிவருவாயா
  மறுபிறவியில் உடன்வருவாயா
  கானல்நீராய் ஓடி ஒளிவாயா?
  சொல்வாயா எம் புத்தகக் காதலனே?

  அருமையான முத்தாய்ப்பான வரிகள்..

  ReplyDelete
 9. மகளிர் தின சிறப்பு வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. அன்பின் ராஜராஜேஸ்வரி,

   மிக்க நன்றி .

   Delete
 10. ஹிஹி.. நான் கூடப் பூனையப் பத்தின கவிதைனு நெனச்சு தொடர்ந்தா இனிமையான ஆச்சரியம். படம் பிரமாதம். கவிதை இனிமை.

  ReplyDelete
 11. மிக்க நன்றி அப்பாதுரை சார். படம் கூகிளார் உபயம். நன்றி சொல்லலாம் என்றால் திரும்பவும் லிங்க் கிடைக்கவில்லை..

  அன்புடன்

  பவள சங்கரி.

  ReplyDelete