பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம்
கருமமே கட்டளைக் கல். - திருக்குறள்
பெரும்பாலும் இதுதான் பெண்களின் நிலையாக இருக்கிறது என்பதையும் கண்கூடாகவே காண முடிகிறது. கைப்பாவையாக ஆட்டுவிக்கப்படுவதும், எளிதாக கைப்பாவையாக ஆகிவிடுவதன் காரணமும் வெகு எளிதாக உணர்ச்சிவயப்படக்கூடிய உளவியல் தன்மைகளே. இதனை நல்வழியில் செயல்படுத்தி சாதனைகள் பல புரிந்து பெண்குலத்திற்கே பெருமை சேர்த்த சுதந்திரப் போராட்டத்தில் அண்ணல் காந்தியடிகளுக்கு உறுதுணையாக தம் சேவைகளையும் ஈந்து, பெண் என்பவள் சமுதாயத்தில் எத்துனை முக்கியமான அங்கம் என்பதையும் நிரூபித்தவர்கள் பலர்.
19ம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவின் பெண்கள் இயக்கம் பல பாகங்களிலும், பல வடிவங்களிலும் துளிர்விட ஆரம்பித்தது. ஒன்றிணையாமல் அங்குமிங்கும் இயங்கிக் கொண்டிருந்தபடியால் அவைகள் உறுதிப்படவில்லை. பாலகங்காதர திலகர் போன்றவர்கள் உடன்கட்டை ஏறும் வழக்கத்திற்கு எதிராக நடத்திய போராட்டம், அவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. வாழ்க்கையின் உன்னதம் புரிய ஆரம்பித்தது. தங்கள் வாழ்க்கைக்கும் அர்த்தங்கள் உண்டு என்ற விழிப்புணர்வு ஏற்பட்டது.
சுதந்திரப்போராட்டத்தின் போது உப்பு சத்தியாகிரகத்தில் பெண்கள் கலந்து கொள்ள போராடித்தான் உள்ளே நுழைய முடிந்தது. கவிக்குயில் சரோஜினி நாயுடு, முத்துலட்சுமி ரெட்டி, அன்னிபெசண்ட் அம்மையார், ருக்மணிதேவி, லட்சுமிபாய் போன்றோரின் பங்களிப்பு பெண்குலத்தின் பெருமைகளை காலங்காலமாக பறை சாற்றக்கூடியது..
கார்க்கி,மைத்ரேயி போன்ற பெண் தத்துவ ஞானிகளும், சங்க காலத்தில் ஔவை , காக்கைப்பாடினியார், அங்கவை, சங்கவை போன்ற பெண்பாற் புலவர்கள் மற்றும் விறலி, பாணினி போன்ற இசைக் கலைஞர்களும் வாழ்ந்து சரித்திரம் படைத்துள்ளார்கள். ஆய்வாளர்களின் கருத்துப்படி கி.பி 500 காலகட்டங்களில், எழுதப்பட்ட மனுநீதியில் குழந்தைப் பருவத்தில் தந்தைக்கும், மங்கைப் பருவத்தில் கணவனுக்கும், கணவன் இறந்த பிறகு மகனுக்கும் அடிமை என்பது சொல்லப்பட்டுள்ளது. உடன்கட்டை ஏறுதல், பால்ய விவாகம், போன்ற கொடுமைகளும் சமுதாயச் சட்டமாகவே இருந்த காலத்தில், பல படையெடுப்புகளைச் சந்தித்த நமது பாரத தேசம், பல நாகரீகங்களையும் சந்திக்க வேண்டிய காலகட்டமாகவும் இருந்தது. அலெக்ஸாண்டர் படையெடுப்பால் கிரேக்க நாகரீகம் பரவியது. முகலாயர்கள் படையெடுப்பால் பாரசீக நாகரீகம் பரவியது. ஆங்கிலேயர்களால் ஆங்கில கலாச்சாரமும் பரவியது. இத்துனைக்குப் பிறகும், நமது பண்பாடும், கலாச்சாரமும், துளியும் பிறழாமல் பாதுகாக்கப்பட்டது நம் பாரதப் பெண்களின் பெருமையாகும்.
1774 - 1855 காலகட்டங்களில் நிறுவப்பட்ட பிரம்ம சமாஜம் மூலமாக வங்க நாட்டின் தங்கம் ராஜாராம் மோகன்ராய் அவர்கள் பெண்கள் சுதந்திரம், சம உரிமை, விதவை விவாகம் போன்ற சீர்திருத்தக் கொள்கைகளை முன்வைத்தார். இவருடைய பெண் கல்வித்திட்டத்தை முழுவதும் ஆதரிக்கும் முகமாக கேசவசந்திர சென் என்பவர் 1838 - 1884 களிலேயே விக்டோரியா பெண்கள் பள்ளியைத் துவங்கினார். இது மென்மேலும் பெருகி 40 பள்ளிகளாக வளர்ச்சியும் கண்டது. பலதார மணத்தை தண்டனைக்கு உரியதாக ஆக்கியவர் ஈஸ்வரசந்திர வித்யாசாகர் என்ற முற்போக்குச் சிந்தனையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1872களில் பெண்ணின் திருமண வயது 14 என்று நிர்ணயிக்கப்பட்டது.
சுவாமி விவேகானந்தரின் பிரதம சீடரான சகோதரி நிவேதிதா, விவேகானந்தர் உதவியுடன் வங்காளத்தில் பெண்கள் பள்ளிகள் பலவற்றைத் தொடங்கியதுடன் அவர்களிடையே இந்துமத உணர்வோடு சமுதாய விழிப்புணர்வும் கல்வி பற்றிய விழிப்புணர்வும் ஏற்படச் செய்தார். சுவாமி தயானந்த சரசுவதி ஆர்ய சமாஜத்தை தோற்றுவித்ததன் மூலமாக ஆண்,பெண் இருவருக்கும் சமத்துவமும், சம வாய்ப்பும் ஏற்பட வழிவகுத்தார்.. அவ்வை இல்லம் என்ற பெண்களின் பயிற்சி மையம் 1930ல் சென்னை மயிலாப்பூரில் துவக்கப்பட்டது. அன்னி பெசண்ட் அம்மையாரின் தலைமையில் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட இம்மையம், அவருக்குப் பிறகு திருமதி முத்துலட்சுமி ரெட்டி அவர்களால் அருமையாக வழிநடத்தப்பட்டது. தேவதாசி முறையை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டவரும் இவரே. சுபாஷ் சந்திர போஸின் தேசிய ராணுவப் படையில் பெண்கள் பிரிவில் கேப்டன் லட்சுமி படைத் தலைவராக இருந்ததும் நினைவுகூரத்தக்கது.
பெண்கள் பர்தா போடும் முறையும் படையெடுத்து வந்த அந்நிய ஆடவரிடமிருந்து அவர்களைக் காக்கும் பொருட்டே ஏற்பட்டாலும், அது அவர்களுடைய சுத்ந்திரத்திற்கு முற்றிலும் தடையாகவே இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இடைக்கால இந்தியப் பெண்களுக்கு, குறிப்பாக இந்து மதம் சார்ந்த பெண்களுக்கு கல்வி கொடுக்கப்படவில்லை. அவர்களுக்கு வீட்டு வேலைகள் தொடர்பான கல்வி மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் ஒரு பிரபலமான இந்திய தத்துவவாதி வாட்சாயனர், பெண்கள் ஆய கலைகள் அறுபத்தி நான்கிலும் தேர்ச்சி கொள்ளக் கூடியவர்கள், நூற்பு, சமையல், மருத்துவ அறிவு, பாராயணம் போன்ற பல கலைகளும் அதில் அடங்கும் என்று உறுதிபடக் கூறியுள்ளதும் கருத்தில் கொள்ள வேண்டியது.
இந்து மதம் சார்ந்த சமுதாயத்தை மற்ற சமயங்களுடன் ஒப்பிடும்போது, புத்தம், சமணம் மற்றும் கிறித்துவ, சமயம் சார்ந்த சமூகங்களில் சற்று அதிகப்படியான கனிவுடனான பார்வை இருந்தது. மற்ற சமூகங்களில் பெண்களின் வாழ்க்கைத்தரம் சற்று மகிழ்ச்சியளிக்கக்கூடியதாகவே இருந்தது எனலாம். எளிதாக கல்வி பெறும் நிலையும் இருந்தது. அசோகர் காலத்தில் பெண்கள் மதபோதகர் பணியிலும் பங்கெடுத்துக் கொண்டனர். . புகழ் பெற்ற பயணி யுவான் சுவாங்கின் கூற்றுப்படி, ஹர்ஷவர்த்தனனின் சகோதரி ராஜ்யஸ்ரீ , அவரது காலத்தில் ஒரு சிறந்த அறிஞராக இருந்தார் என்பதும் விளங்குகிறது. மற்றொரு உதாரணம் மன்னர் அசோகரின் மகள். சங்கமித்திரை தன் சகோதரன் மகேந்திரனுடன் இலங்கைக்கு புத்தமத போதனைக்காகச் சென்றார் என்பதும் தெரிய வருகிறது.
நாடு சுதந்திரம் பெற்ற பின்பும் பெண்கள் தங்கள் பிரச்சனைகளுக்காக போராட வேண்டிய நிலையில் இருந்ததும் தவிர்க்க முடியாததாக இருந்தது.சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்திரப்பிரதேசத்தில் ரோசம்மா என்றொரு சாதாரண ஏழைப் பெண்ணைப்பற்றி நம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது நினைவிருக்கலாம். குடிகார கணவனுக்கு வாழ்க்கைப்பட்டு, அடியும் உதையும் பட்டு, உழைத்து ஓடாய்த் தேய்ந்து போன நிலையிலும் வயிற்றுக்கு சோறு இல்லாத நிலையில் வேதனையில் சுருண்டு, முடங்கிவிடவில்லை அப்பெண்.
பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!
என்று பாரதி பாடி வைத்ததை உணர்ந்திருந்தவள், வீட்டை விட்டு வெளியே வந்து மதுக்கடையை நடத்தக்ககூடாது என்று போராடினாள். இதைக்கண்ட பாதிக்கப்பட்ட மற்ற பெண்க்ளும் ஒன்றிணைய போராட்டம் வலுப்பெற்றது. இச்செய்தி காட்டுத்தீயாக நாடு முழுவதும் பரவ, எழுச்சி கொண்ட பெண்கள் உரக்க குரல் எழுப்ப, ஆட்சியாளரின் செவியில் சென்றடைந்த அந்தக் குரல்கள் வெற்றிகண்டன.ஆம், ஆந்திரபிரதேசத்தில் மது ஒழிப்பு போராட்டம் வெற்றி பெற்றது. ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர ஆரம்பித்தது. இன்று ஆயிரக்கணக்கான ரோசம்மாக்களையும், சரோஜினி நாயுடுக்களையும் நாடு கண்டுகொண்டுதான் உள்ளது. சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு பலவிதமான வாக்குறுதிகள் பெண்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டது. பல கனவுகளை பெண்களுக்கு ஏற்படுத்தியது. ஆனாலும் அவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படவில்லை என்பதே நிதர்சனம். 1960 - 70களில் மீண்டும் பெண்ணிய இயக்கங்கள் போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேதா பட்கர் போன்றோர் களமிறங்கி செயல்பட்டதோடு பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் வெற்றி கண்டனர். விலைவாசி ஏற்றம், நிலவுடமை உரிமை, , விவசாயிகள் இயக்கம், என்று அனைத்திலும், அரசியல் கட்சிகளுடனும், தனிப்பட்ட முறையிலும், பங்குபெற ஆரம்பித்தார்கள். வரதட்சணை கொடுமைகளை எதிர்த்துப் போராட்டமும் வலுப்பெற்றது. 1997ல் பாத்திமா பீவியால் முதல் குழு அமைக்கப்பட்டு பெண்களின் சுயசக்தி (Women’s Empowerment) பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இக்குழு வங்கிக்கடனுதவி மூலமாக பெண்கள் குழுக்களாக இணைந்து பொருளீட்டவும், தம் திறமைகளை வெளிக்கொணரவும் வழிவகுத்தது. பல குடிசைத் தொழில்களும் வளர்ச்சி கண்டது.
1960களில் காமராசர் மதிய உணவுத் திட்டமும், இலவசமாக பால் வழங்கும் திட்டமும் கொண்டுவந்ததன் மூலமாக கல்வியின் விழிப்புணர்வும் ஏற்பட்டது.சாதிய உணர்வு தலையெடுத்தபோது, அதனைக் களைந்தெறிய பெண்கள் பொதுத் தளத்திற்கு வரவேண்டும் என்று குரல் எழுப்பியவர் டாக்டர் அம்பேத்கர். பெண்களின் பேறுகால விடுப்பிற்காகவும் அவர் போராடியதும் குறிப்பிடத்தக்கது.
பெணகளின் வாழ்வியலின் மறுமலர்ச்சிக்காகப் பாடுபட்டவரில் குறிப்பிடத்தக்கவர் ஈ.வெ.ரா.பெரியார் அவர்கள். சொல்வீரராக மட்டுமல்லாமல், செயல் வீரராகவும் தம் குடும்பத்திலேயும், பெண்களுக்கான முற்போக்குச் சிந்தையை செயல்படுத்திக் காட்டியவர். இந்திய அளவில் ஆண், பெண் உறவில் சமத்துவம் ஏற்படும் வகையில் பெண்களின் போராட்டம் அவள்ளவு எளிதாக பயனளிக்கக் கூடியதாக இல்லை என்பதையும் மறுக்க இயலாது. முன்செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு பின்னடைவு காத்துக் கொண்டுதான் இருக்கிறது. அவைகளையும் மீறித்தான் பெண்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. பல்வேறு முரண்பாடுகளை, குடும்பத்திலும், பணியிடங்களிலும் தங்கள் வாழ்நாள் முழுவதும் சந்திக்கும் நிலையும் சில இடங்களில் இருக்கத்தான் செய்கிறது.
நவீன இந்தியாவில் பெண்களின் நிலையில் பெரும் முரண்பாடுகள்தான் இருக்கிறது. ஒருபுறம் வெற்றியின் உச்சத்தை விரைவாக எட்டும் அவர்கள் மறுபுறம் தம் சொந்த குடும்ப உறுப்பினர்கள் மூலமாகக்கூட பலவிதமான முட்டுக்கட்டைகளையும், எதிர்ப்புகளையும் சமாளிக்க வேண்டியவர்களாகவே இருக்கிறார்கள். பண்டைய கால பெண்களை ஒப்பு நோக்கும் போது இன்றைய நவீன யுகப் பெண்கள் பல சாதனைகள் புரிந்தவர்களாக இருப்பினும், இன்னும் இவர்கள் கடக்க வேண்டிய தொலைவு மிக அதிகம் உள்ளது. குடும்பம் என்ற பாதுகாப்பு வளையத்தைவிட்டு வெளியே வரும் பெண்கள், பல்வேறு திறமைகள் என்ற கவசங்களுடன் போர்முனைக்குச் செல்வது போன்றுதான் இருக்கிறது இன்றைய வாழ்க்கை நிலை. இந்தியாவில் இன்றளவும் அந்த பாரபட்சம் உள்ளதென்பதை ஆண், பெண் பாலின விகித கணக்கெடுப்பு நிரூபிக்கிறது. இந்த 2012 கணக்கெடுப்பின்படி, 1000 ஆண்களுக்கு 940 பெண்களே உள்ளனர் என்பதும் வருத்தத்திற்குரிய விசயம்.
இத்தகைய பெரும் போராட்டங்களுக்கிடையே மலர்ந்த பெண்களின் வாழ்வில் இன்றைய பிரச்சனைகளும், ஊடகங்கள், விளம்பரங்கள போன்றவைகளால் அவர்தம் வாழ்க்கை சீர் குலைவதும் நாம் கூர்ந்து நோக்கத்தக்கது.
மேலும் பேசுவோம்.
ஆண்கள் வாசிக்கவேண்டிய ஆழமான பதிவுத் தொடர்.வாசிப்பார்களா தெரியவில்லை !
ReplyDelete