Monday, June 18, 2012

ஆசை அறுமின்!


சாம்பிராணிப் புகையின் மணம், மேக மூட்டமாய் வீடு முழுவதும் நிறைத்திருக்க, வெங்கடேசுவர சுப்ரபாதம் இதமாய் ஒலிக்க, விடியலில் எழுந்து குளித்து, மஞ்சள் பூசி, குங்குமமிட்ட மங்கலகரமான முகத்துடன், நுனியில் முடிந்த கூந்தலில் கொஞ்சமாக முல்லைப் பூவும் சூடி, விளக்கேற்றி, பூஜை முடித்து, மணக்க, மணக்க பில்டர் காபியுடன் மகனை எழுப்ப வந்தாள் மங்களம். கணவர் பூஜை அறையில் இருக்கிறார். பூஜை முடிய எப்படியும் இன்னும் 20 நிமிடமாவது ஆகும். மகன் குளிக்காமல் காபி சாப்பிடுவதற்கு திட்டி அலுத்துப் போனவர் ஒரு வழியாக விட்டுவிட்டார்.

காபியின் மணம் நாசியில் துளைக்க மெல்ல புரண்டு படுத்து எழுந்தவன், தாயின் சிரித்த முகத்தைக் கண்டவுடன் உற்சாகமாக துள்ளி எழுந்து, பல் துலக்கி, முகம் அலம்பி ஓடி வந்தான். காபியை ருசித்துக் கொண்டே வெளியே வந்தவன், அப்பாவும், அம்மாவும் தனக்காக காத்துக் கொண்டிருப்பதாகத் தெரிய வரவேற்பறைக்குத் தானும் சென்றான். அம்மா மெல்ல ஆரம்பித்தாள்..

டேய், நாணா, (நாராயணன் என்பதன் சுருக்கம்) இன்னைக்கு பொண்ணு பார்க்க போகணும். சாயரட்சை சீகிரம் வந்துடலாமோன்னோ?”

அம்மா,நான் தான் முன்னாடியே சொல்லிட்டேனே.. நேக்கு பொண்ணு எப்படி இருக்கனும்னு.. நீ பார்த்துட்டு வந்துடு, உனக்கு திருப்தின்னா அப்பறமா நான் வந்து பார்த்துக்கறேன்

ஏண்ணா, என்னன்ண்னா.. பேசாம இருக்கேள்.. இவனை கேட்கப்படாதோ.. பத்திரிக்கை துறையில இருகறவாளுக்கு பெண் கொடுப்பதே பெரிசுன்னு இருக்கற காலத்துல, இவன் பெண் இப்படி இருக்கணும்,அப்படி இருக்கணும்னு கண்டிசன் எல்லாம் போடறானே.. நன்னாவா இருக்கு இது..?”

ஏண்டி, அப்படி என்ன பெரீசா கண்டிசன் போட்டான் அவன், பொண்ணு உன்னை மாதிரி வீட்டிற்கு அடக்கமா, கட்டுப்பெட்டியா இருக்கணும்னுதானே.. அந்த மாதிரி ஒரு பொண்ணா பார்த்தா போறது.. இதுக்கு ஏன் அலுத்துக்கறே..

சொல்லமாட்டேள்.. இந்த கம்ப்யூட்டர் காலத்துல உட்கார்ந்துண்டு பொண்ணு இப்படி இருக்கணும்னு போய் சொன்னாவே சிரிக்கறாண்ணா.. என்னமோ சர்வசாதாரணமா சொல்றேள்..

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே பூனை போல மெதுவாக நகர்ந்து தன் அறைப்பக்கம் ஓடி, மளமளவென குளித்து தயாராக ஆரம்பித்தான்.. முக்கியமான ஒரு பேட்டி அடுத்த 2 மணி நேரத்தில்.. தொழிலதிபர் சந்திரமோகன் என்றால் ஊரில் அனைவருக்கும் சிம்ம சொப்பனம். அவ்வளவு எளிதாக பேட்டியெல்லாம் கொடுக்கக் கூடியவர் அல்ல. அன்று பல இடைவிடாத முயற்சியின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட பேட்டி.. தமிழ்நாட்டின் சிறந்த தொழிலதிபர் என்ற விருது சமீபத்தில் வாங்கியிருந்தார். அதற்கான பிரத்யேகப் பேட்டி என்பதால் மனிதர் ஒப்புக் கொண்டுள்ளார். கிளம்பிய வேகத்தில் வெளியே வந்தவன் பெற்றோரிடம் சொல்லிக் கொண்டு ஓடத் தயாரானான். அம்மா, காலை உணவு தயாராக இருக்கிறது இரண்டு தோசை வார்க்கிறேன் என்று கத்துவது கூட காதில் விழாதவாறு, கைகளை ஆட்டிவிட்டு பறந்தான் மோட்டார் பைக்கில்.

சந்திரமோகன் வீட்டில் காலை நேரம் பலர் அவரைப் பார்ப்பதற்காக காத்துக் கொண்டிருந்தனர். தன்னுடன் வந்த போட்டோகிராபர் மணியும் தன்னைப் போலவே மிகுந்த ஆர்வத்துடன் இருப்பது தெரிந்தது..வாழ்க்கையில் எப்படியாவது உயர்ந்த நிலைக்கு வரவேண்டுமென்பது மட்டுமே இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்து வருபவன் நாராயணன், பல திட்டங்கள் மனதில் இருந்தாலும் எல்லாவற்றிற்கும் மூலதனம் வேண்டுமே.. தந்தை வங்கி ஊழியர், பெரிய சொத்தெல்லாம் இல்லாவிட்டாலும், குடியிருக்க வீடும் தேவையான வருமானமும் என அமைதியாக குடும்பம் நடந்து கொண்டிருந்தாலும், தன் வாழ்க்கை அப்படி இருக்கக் கூடாது, தானும் பெரிய ஆளாக வேண்டும் என்ற வெறியையே வளர்த்துக் கொண்டிருந்தான். ஏதாவது நூல்முனை கிடைத்தாலும் பிடித்து மேலே வந்துவிட வேண்டும் என்ற் துடிப்புடன் இருந்தான்.

சந்திரமோகன், 40 வயது என்று தானே சொன்னபோதும் நம்ப முடியாத தோற்றம். 30 வயது இளைஞராக அத்துனை சூட்டிப்பு மனிதரிடம். அவருடைய ஆரம்ப காலத்தின் அல்லல்கள், போராட்டங்கள், வெற்றியின் படிகள் என்று ஒரு குழந்தையின் உற்சாகத்துடன் பேசப்பேச அப்படியே மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தான் நாராயணன். தன்னுடைய ஆர்வத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்திருந்த பேட்டி.. தானும் ஓர் நாளில் வானில் இப்படி சிறகடித்துப் பறக்கப் போகிறோம் என்ற கற்பனையில் வெளியில் வந்தவன், சிறு சலசலப்பு இருப்பதை கவனித்து அருகில் சென்று பார்க்க நெருங்கும் போது, எதிரில் ஒருவர் புன்சிரிப்புடன் வேகமாக உள்ளே செல்ல, சந்திரமோகனின் உதவியாளரிடம் ஒருவர் வாதம் செய்து கொண்டிருந்தார். என்னுடைய அப்பாயிண்ட்மெண்ட் இப்போது, ஏன் அவரை அனுப்புகிறாய் என்று கேட்டதற்கு, அவர் பங்கு மார்க்கெட் ஏஜெண்ட் என்றும், தினமும் வருபவர் என்றும், பத்து நிமிடத்தில் அவர் வெளியே வந்ததும் போகலாம் என்றும் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார். இவர் இவ்வளவு பெரிய பிசினஸ் மேக்னெட்டாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் போல என்று நினைத்துக் கொண்டே பல யோசனையில் வெளியே வந்தான்..

சந்திரமோகனிடம் பேட்டி எடுத்துவிட்டு வந்த நாள் முதல் மனது ஒரு நிலையில் இருப்புக் கொள்ளவில்லை நாராயணனுக்கு.. எப்படியாவது தானும் ஏதாவது செய்து பெரிய ஆளாக வேண்டும் என்று பரபரக்க ஆரம்பித்து விட்டது. இந்த நேரத்தில்தான் ஒருநாள் வங்கியில் ஒருவரைப் பார்த்த போது எங்கோ பார்த்த நினைவு வர, அவரும் தன்னைப் பார்த்து புன்னகைக்க, யாராக இருக்கும் என்று யோசிக்கும் போதே, அவ்ரே வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டார். தொழிலதிபர் வீட்டில் சந்தித்த பங்குச் சந்தை ஏஜெண்ட் என்று. இருவரும் பேசிக் கொண்டே வெளியே வந்தனர். முடிவில் மனதில் ஏதோ அப்போதே தானும் பெரிய முதலாளி ஆகிவிட்டது போன்ற களிப்பில் உற்சாகமாக விடைபெற்று, ஒரு வாரத்தில் முதலீட்டிற்கான பணத்தை ஏற்பாடு செய்து கொண்டு வருவதாகக் கூறிவிட்டுக் கிளம்பினான். அந்த அளவிற்கு அந்த ஏஜெண்ட்டின் பேச்சு இருந்தது. இவ்வளவு எளிதாக ஒருவர் பணம் சம்பாதிக்க முடியும் என்றால் நம் நாட்டில் ஏன் இன்னும் இவ்வளவு ஏழ்மை இருக்க வேண்டும். எல்லோரும் நொடியில் பணக்காரர்களாகி விடலாம் போல் உள்ளதே... ஒரு வேளை முயற்சி செய்வதில்லையோ, ரிஸ்க் எடுக்க பயந்தவர்களாக இருக்கிறார்கள் நம் மக்கள்... இப்படி யோசித்துக்கொண்டே சென்று சேர்ந்தான்.

அலுவலகப் பணியின் அழுத்தத்துடன், எப்படியும் ஒரு வாரத்திற்குள் பணம் புரட்டிவிட வேண்டும் என்ற அழுத்தமும் சேர்ந்து அலைக்கழிக்க, மனதோடு சேர்ந்து உடலும் சோர்வுற்ற நேரம், டீக்கடை நோக்கி தானாக கால்கள் நகர்ந்தன.. ஸ்டிராங்காக ஒரு டீ போடச்சொல்லி ஆர்டர் கொடுத்து விட்டு காத்திருக்கும் போது, அங்கு பெஞ்சில் உட்கார்ந்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்த பெரியவர், புதிதாக வந்த ஒருவரைப் பார்த்து, “என்னப்பா, முகத்துல உசிரையேக் காணோம்.. வழக்கம் போல இன்னைக்கும் தங்கச்சிக்கிட்ட சண்டை போட்டுட்டு வரியாக்கும்.. இன்னைக்கு பங்குச்சந்தை வேற விடுமுறையாப் போச்சு.. இல்லேனா அங்க போயி உக்காத்திருப்ப..?”

ஏண்ணே.. உனக்கு கிண்டலா இருக்கா என் பொழைப்பு. நாலு காசு சம்பாதிச்சு பொண்டாட்டி,புள்ளைய நல்லா வச்சிருக்கலாமுன்னு நினைச்சது தப்பா.. என்னமோ கொலைக்குத்தம் பன்ற மாதிரியே பேசறீங்க.. இப்பதான் அவகிட்ட வாங்கி கட்டிக்கிட்டு வந்தா, இங்க நீங்க வேற..

பங்குச் சந்தை பற்றிய பேச்சு வந்தவுடன் தானும் அதைப்பற்றி அறியும் ஆவலில் கவனம் செலுத்த ஆரம்பித்தான் நாராயணன்..

ஏம்ப்பா.. அதெல்லாம் நமக்கு எதுக்குப்பா. வேலைக்குப் போய் நாயா பாடுபட்டு கொண்டாந்த காசை ஒழுங்கா ஊடு கொண்டி சேர்க்காம,இப்படி இந்த சூதாட்டத்துல உட்டுப்போட்டு போனா பொண்டாட்டி கொஞ்சுவாளாக்கும்?”

அண்ணே. நானும் பல தடவை சொல்லிப் போட்டேன், அது சூதாட்டம் இல்லைன்னு.. அதுவும் ஒரு வியாபாரம்ண்ணே... என்னைக்கிருந்தாலும் நான் ஒரு நாளைக்குப் பெரிய ஆளாயி காட்டறேன் பாருங்க அப்பத்தான் நம்புவீங்க நீங்க..

அட ஏம்ப்பா.. குதிரை ரேசுக்குப் போறவனவிட மோசமான பொழைப்பு இது.. அந்த குதிரை ரேசுக்குப் போறவன் கூட , வசதியாவும், புத்திசாலியாவும் இருந்தா ரேசுல பணம் கட்ட மாட்டான்.. அந்த ரேசுல ஓடுற குதிரையைத்தான் விலைக்கு வாங்குவான்.. அது தெம்பு இருக்கும் காலம் பூரா சம்பாதிச்சு கொட்டும் பாரு..

டீயைக் உறிந்துக் கொண்டே நிதானமாக அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான் நாராயணன், எப்படியும் போட்டோகிராபர் மணியை அங்குதான் வரச்சொல்லியிருப்பதால் அதுவரை காத்திருக்க வேண்டியதுதானே என்று.

அந்தப் பெரியவர் அங்கு வந்தவர் தன் பேச்சை அவ்வளவு சுவாரசியமாக கேட்கவில்லை என்று தெரிந்தும் லெக்சர் அடிப்பது போல அவ்வளவு தெளிவா பேசிக் கொண்டிருந்தார். அவர் பேச்சில் ஒரு நிதானமும், அழுத்தமும் இருந்ததால் தானும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தான்.

பல விசயங்களை அனாவசியமாக பேசியவர், பங்குச் சந்தையைப் பற்றி இவ்வளவு நுணுக்கமாக அறிந்து வைத்திருப்பவர், தான் ஏன் அதற்கு ஆதரவாக பேசவில்லை என்ற யோசனையும் எழுந்தது. மனிதர் செய்தித்தாளைக் கரைத்துக் குடித்து, உலக செய்திகள் எல்லாம் அறிந்தவர் போலவே பேசியது அதிகப்படியாக இருந்தாலும், அவர் சொன்ன சில விசயங்கள் யோசிக்க வைத்தது. பங்குச் சந்தையின் போக்கை பெரும்பாலும் நிர்ணயிப்பவர்கள், பெரிய முதலீட்டாளர்கள்தான்... அந்நிய முதலீட்டை உள்ளே விட்டபோது ஆரமபத்தில் எத்தகைய சலசலப்பு ஏற்பட்டது என்பது அனைவரும் அறிந்தது. முதலீட்டாளர்கள் பணத்தைக் கொட்டி முதலீடு செய்து குறிப்பிட்ட பங்கின் விலையை உயர்த்தி நல்ல உச்சத்தில் அத்தனைப் பங்குகளையும் விற்று காசு பண்ணிக் கொள்வார்கள். விலை உயருகிறது என்று அடித்துப் பிடித்துக் கொண்டு கடனை, உடனை வாங்கி முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்கள், மளமளவென விலை சரிய ஆரம்பித்தவுடன் பெரும் நட்டத்திற்குள்ளானார்கள். செபியின் , அந்நிய பெரும் முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை பங்குகளை வைத்திருக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வந்தது மூலமாக ஓரளவிற்கு காப்பாற்ற முயற்சி செய்தது. ஆனாலும் நம்ம பங்குச் சந்தை முதலைகளே இது போன்ற விளைய்யாட்டை விளையாடத் தயங்குவதில்லையே... இப்படி பல விசயங்களை அத்துபடி செய்யாமல் எளிதாக அதில் இலாபம் பார்க்க முடியாது. சிறு முதலீட்டாளர்களை வைத்துத்தான் எந்த வியாபாரமும் நிலைத்து நிற்க முடியும், அதற்கு உதாரணமாக வங்காள தேசத்தில் சிறு முதலீட்டாளர்களுக்கு கடன் கொடுத்து அக்கரையுடன் அவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கி அவர்களை முன்னேற்றிய ஒருவர் பற்றியும், அமெரிக்க அதிபர் கூட அந்த மைக்ரோ ஃபைனான்சு திட்டம் பற்றி கேள்விப்பட்டு, தங்கள் நாட்டிலும் அந்த முறையை பின்பற்றியதாகவெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார் அந்த பெரியவர்..

இதைவிட அவர் சொன்ன ஒரு கதை மிகவும் சிந்திக்கச் செய்தது நாராயணனை.. அவர் சொன்ன கதை இதுதான்...

எப்படியும் வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருப்பவன் அந்த பெரிய முதலீட்டாளரின் உண்மையான சேவகன். ஒரு நாள் முதலாளியிடம் சென்று தானும் முதலீடு செய்ய விரும்புவதாகக் கூறுகிறான். அவரும் இதெல்லாம் சாமான்ய காரியம் அல்ல என்று சொன்னாலும் அவனுக்குப் புரியாது என்று தெரிந்ததால் அவரும்,

உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது முதலீடு செய்வதற்கு?” என்று கேட்க,அவனும் சட்டைப்பையில் இருந்த 500 ரூபாயை எடுத்து பெருமையாகக் காட்டுகிறான். முதலாளியோ சிரித்து விட்டு, அவனைப் போய் தன் காரியதரிசியிடம் தான் சொன்னதாகச் சொல்லி ஒரு இலட்சம் ரூபாய் வாங்கிக் கொள்ளச் சொன்னார். நேராக பங்குச் சந்தை அலுவலகம் ஒன்றிற்குச் சென்று தான் சொல்லும் பங்கை அப்படியே அந்த ஒரு இலட்சத்திற்கு வாங்கச் சொன்னார். அங்கு இருப்பவ்ர்கள் அனைவரிடமும் சத்தமாக தன் பெயரைச் சொல்லி ஐயா வாங்கச் சொன்னார் என்று சொல்லச் சொன்னார். அவனும் குறைந்த விலையுள்ள அந்த பங்கை ஒரு இலட்சத்திற்கு வாங்கிய மறு நிமிடம் மளமளவென பலரும் அதில் முதலீடு செய்ய, விலையும் கிடுகிடுவென உயர ஆரம்பித்தது. மதியம் 2.30 மணிக்கு ஒன்று பத்தாகப் பெருகியது. உடனே அதை விற்கச் சொல்லி ஆணையிட்டார் அந்த முதலாளி. அவனும் ஐயா விக்கச் சொல்லி விட்டார் என்று சொல்லி விற்று காசை எடுத்துக் கொண்டு வந்துவிட்டான். அவனுக்கு ஒன்று பத்தானதில் பேராச்சரியம். முதலாளியிடம் கொண்டுபோய கொடுத்த போது அவரும் அவனுடைய இலாபத்தை எடுத்துக் கொண்டு தன்னுடைய பணத்தை கொண்டுபோய் காரியதரிசியிடமே கட்டிவிடச் சொன்னார். மாலை 4 மணிக்கு வர்த்தகம் முடிந்த பின்பு திரும்பப் போய் அந்த குறிப்பிட்ட பங்கின் விலையை பார்க்கச் சொன்னார். அது ஏற்கனவே இருந்த விலையை விட மிகவும் குறைந்திருந்தது. அன்று முதலீடு செய்த முதலீட்டாளர்களின் நிலையை யோசிக்க வேண்டும். ஸ்டாப் லாஸ் போட்டு விட்டு உட்கார்ந்திருந்தவர்கள் ஓரளவிற்கு நட்டத்திலிருந்து தப்பித்தாலும், வந்த இலாபம் அத்தனையும் இழந்து விட்டோமே என்று டென்சனின் உச்சத்தில், விட்டதைப் பிடிக்க பைத்தியமாக அடுத்த பங்கை நோக்கி படையெடுக்கவும், அந்த ஸ்டாப் லாஸ் போடாமலே வியாபாரம் செய்தவன் உள்ளதும் போனதென்று அனைத்தையும் தொலைத்து விட்டு சோர்வின் உச்சத்தில் இருப்பவனையும், விவரமாக கிடைத்த வரை இலாபம் என ஓரளவிற்கு சம்பாதித்துக்கொண்டு வெளியே போன சொற்பமானவர்களையும் காண முடிந்தது அவனால்! பங்குச் சந்தையின் தினசரி வியாபாரம் பற்றி அறிந்து கொண்டவன் விவரமாக அந்த இலாபத்தை வைத்து பொட்டிக்கடை வைத்து பிழைத்துக் கொண்டானாம்.. இதையும் மீறி கமோடிட்டிஸ் என்று ஆரம்பித்ததைக் கேட்கும் பொறுமை இல்லாமல் அதற்குள் மணியும் வந்துவிட கடமை அழைக்க கிளம்பிவிட்டான்.

இத்தனைக் கதையைக் கேட்டும் தன்னால் திறமையாக செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையால் எப்படியும் பணம் புரட்டிப் போட்டு அந்த ஏஜெண்ட்டின் வழிகாட்டுதலுடன் பங்கு சந்தை வியாபாரத்தில் இறங்கிவிடுவது என்ற முடிவுடன் இருந்தான் நாராயணன். அடுத்த இரண்டு, மூன்று நாட்கள் வெளியூர் பயணம் செய்ய வேண்டியிருந்ததால் சொந்த வேலையை கவனிக்க முடியாவிட்டாலும், அந்த நினைவு மட்டும் உள்ளே கனன்று கொண்டுதான் இருந்தது.

வெளியூரிலிருந்து திரும்பியவன் அன்று டீக்கடை இருந்த தெருவைக் கடக்கும் போது தன்னிச்சையாக கணகள் அங்கு திரும்ப அங்கு அந்தப் பெரியவர் மிகவும் சோகமாக ஏதோ சத்தமாக சொல்வதும் சுற்றி சிலர் கூடி நின்று பேசுவதும் புரிந்தது, வண்டியின் வேகத்தைக் குறைத்த அந்த நொடியில்....

வண்டியை மொத்தமாக நிறுத்தி ஓரங்கட்டிவிட்டு இறங்கி அருகில் வந்தான், தன் தொழில் முறை ஆர்வத்துடன். அங்கு அந்த பெரியவர் சொன்ன செய்தி மிகவும் அதிர்ச்சியாக இருந்தது அவனுக்கு. ஆம், அன்று புத்தி சொல்லிக் கொண்டிருந்த அந்த நபரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். வருகிற வருமானத்தில் பெரும் பகுதியை இழப்பதோடு, ஊரைச்சுற்றி கடனும் வாங்கியதோடு, இறுதியாக அவருடைய மனைவி தன் தாய்வீட்டு சீதனமாகக் கொண்டு வந்த 25 பவுன் நகையை பத்திரமாக வங்கி லாக்கரில் தன் மகளுக்காக பத்திரப்படுத்தி வைத்திருந்தவள், அதனைத் தனக்குத் தெரியாமலேயே எடுத்து அடமானம் வைத்து அதை மீட்க முடியாமல், மூழ்கிப்போனது பாதியாம், மீதியை விற்று விட்டானாம். தன் நெருங்கிய உறவினரின் வீட்டு திருமணத்திற்கு செல்வதற்காக நகையை எடுப்பதற்காக லாக்கரில், ஜாயிண்ட் அக்கவுண்ட் என்பதால் சாவியை எடுத்துக் கொண்டு சென்று பார்த்தவள் அது காலியாக இருப்பது கண்டு அதிர்ச்சியுற்று, கணவனை அழைத்து விசாரிக்கவும் விவரம் தெரிந்திருக்கிறது. தன் குழந்தையின் எதிர்கால வாழ்க்கைக்கு இருந்த ஒரே ஆதரவும் போய்விட்டதே என்ற தாங்க முடியாத வேதனையில் உயிரையும் இழந்திருக்கிறாள் அந்த பேதை பாவம்... இன்று அந்த குழந்தையும் அனாதையாக நிற்கிறது. அவனும் கிலி பிடித்தவன் போல கிடக்கிறான்...

அதிர்ச்சியில் மனம் உறைந்து போக ஒன்றும் பேசாமல் கிளம்பினான் ஒரு முடிவோடு. அரைக்காசு சம்பாதித்தாலும் தம் பெற்றோர் போல பாதுகாப்பான, அமைதியான வாழ்க்கைக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டான். விடா முயற்சி இருந்தால் கட்டாயம் சரியான பாதை விரைவில் பிடிபடும், தாமும் ஒரு நாள் உயர்ந்து நிற்போம் என்ற தளராத மனநிலையுடன் அங்கிருந்து கிளம்பினான். சற்று தொலைவு செல்லும் போது, பின்னால் யாரோ தன் பெயர் சொல்லி அழைப்பது கேட்டு, போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலையாதலால் நிதானமாக திரும்பிப் பார்த்தவன், அந்த பங்குச் சந்தை ஏஜெண்ட்டைப் பார்த்தவுடன், பார்க்காதது போல திரும்பிப்போக எண்ணினாலும், வண்டியை நிறுத்தி அவரிடம் நெருங்கி, நலம் விசாரித்துவிட்டு, அவர் எந்தெந்த கம்பெனி பங்குகளில் முதலீடு செய்திருக்கிறார் என்று விசாரிக்க, அதற்கு அந்த ஏஜெண்ட்டும் தன் தொழில் அதுவல்ல என்றும் ஏஜெண்ட் வேலை மட்டுமே தன்னுடையது என்று சொல்லவும் தன்னையறியாமல் புன்னகைத்து விட்டு நன்றி சொல்லி விடைபெற்றான், தெளிவான குழப்பமில்லாத மன நிலையுடன்.

நன்றி: திண்ணை வெளியீடு


No comments:

Post a Comment