Saturday, June 23, 2012

கொங்கு குல மகளிர் - எம் பார்வையில் (2)



பண்மொழியறிவு என்பது எல்லா காலங்களிலும் பெரிதும் போற்றிப் புகழப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் கல்வித்துறையின் கணக்கெடுப்பில் பர்மிங்காம் நகரில் உள்ள 430 பள்ளிகளில், 117 பள்ளிகளில் பெரும்பான்மையான மாணவர்கள் பிற மொழிகளை பேசுபவர்களாக இருக்கின்றனராம். பொதுவாகவே அங்கு பல குழந்தைகள் 31 வகையான மொழிகள் பேசுவதாகவும் சொல்கிறார்கள். இன்று மொழிக்கல்வி கற்க பல வகையான வசதிகள் இருக்கின்றன. ஆனால் இவையெதுவும் இல்லாத, கணினித்துறை போன்ற நவீனத்துவ வளர்ச்சியும் இல்லாத சங்க காலத்திலேயே, பல மொழிகளையும் கற்றுத் தேர்ந்த பல அறிஞர்கள் இருந்திருக்கிறார்கள். தமிழ் நாட்டிலேயே கொங்கு நாட்டில் தான் கல்வி வளர்ச்சி அதிகமாக இருந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

“கற்றறிந்த புலவர்கட்கும் பெருமதிப்பு இருந்தது. சிற்றூரில் உள்ள கொங்கு மக்கள்கூட காணிப்புலவர்களைக் கம்பரின் வாரிசுதாரர்கள் என்றும், அவர்களை மதித்து உபசரிப்பது தங்கள் தலையாய கடமை என்றும் எண்ணிச் செயல்பட்டனர். சங்க காலத்தில் பொன்முடியாரும், அவ்வையாரும், காக்கைபாடினியாரும் கொங்குநாட்டில் வாழ்ந்த பெண்பாற்புலவர்கள் ஆவர்” என்று ஆசிரியர் கூறுகிறார்.

இடைக்காலத்தில் தமிழ்நாட்டில் பெண்பாற்புலவர்கள் பற்றிய செய்திகள் அதிகம் இல்லாத போழ்தும், கொங்கு நாட்டில் தமிழ் புலமை மட்டுமல்லாது, கொங்குகுல மகளிர் வடமொழியிலும் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பதும் வியப்பிற்குரிய செய்தியாக உள்ளது.

“அஞ்சு வயதில் ஆதியை ஓது”
“ஆதியை ஓத அறிவுண்டாமே” என்று தொடங்கும் கொங்கு சமுதாயத்திற்கேயுரிய் நீதி நூலான, கொடுமணலில் பிற்கால அவ்வையார் பாடிய “கல்வி ஒழுக்கம்” மற்றும் தலைய நல்லூரில் ஒரு காட்டுக்குப் பெயரே “ஆரியப்படிப்புக்காடு” என்று இருப்பதும் ஆதாரமாகக் காட்டுகிறார் ஆசிரியர்.

ஈரோடு வட்டத்தில் உள்ள சிற்றூரான கங்காபுரம் எனும் ஊரில் வாழ்ந்த பழ்னியம்மாள் பற்றிய ஒரு சுவையான தகவலை ஆதாரமாகக் காட்டுகிறார் முனைவர். தோட்டத்திற்கு சென்று திரும்பிய பழனியம்மாள் தம் வீட்டருகே வந்த போது திண்ணையில் ஒருவர் தலையில் உருமாலை, பட்டு வேட்டி, பட்டு சரிகைத் துண்டு, எல்லா விரல்களிலும் மோதிரம், கழுத்தில் பதக்கம், அருகில் ஏட்டுச் சுவடுகள், கைகட்டி இரு சுற்றுச் சொல்லிகள் (ஏடு எழுதுவோர்) ஆகியவற்றுடன் ஆடம்பரமாக, கர்வத்துடன் பணிவு மட்டும் இல்லாமல் அமர்ந்திருந்திருக்கிறார்.

அவரைப் பார்த்து, “ஐயா , தாங்கள் யார் என்று அறியலாமா” என்று பணிவாகக் கேட்டுள்ளார் பழனியம்மாள். அதற்கு அவர், “யாம் பாண்டி நாட்டு பைந்தமிழ்ச் சிங்கம், பரமேசுவரப் புலவர், யாம் “சோடசாவதானி” என்றாராம். சோடசம் என்றால் பதினாறு, அவதானி என்றால் கலைகளில் வல்லவர் என்று பொருள், அதாவது தாம் பதினாறு விதமான கலைகளில் வல்லவர் என்று கூறியிருக்கிறார். பழனியம்மாளுக்கோ அவருடைய ஆணவத்தை எப்படியும் அடக்க வேண்டும் என்று தோன்றிவிட்டது. பழனியம்மாள் உடனே, “ஓ அப்படியா, நீங்கள் இரண்டு ஆடு திருடிய கள்வரா?” என்றார். திடுக்கிட்ட பரமேசுரப்புலவர், சமாளித்துக் கொண்டு எழுந்து நின்று வணங்கி, ”அம்மா தாயே என்னை மன்னிக்க வேண்டும்” என்றாராம் பயத்துடன்.

சோடசம் - சோடு என்றால் இரண்டு (சோடி) அசம் என்றால் ஆடு என்றும் அவதானி என்றால் திருடுவதில் வல்லவன் என்ற பொருளும் உண்டு. சோடசாவதானி என்ற வடமொழிச் சொல்லிற்கு இரு பொருள் கூறிய பழனியம்மாளின் மதி நுட்பத்தை அறிந்து ஆணவம் அடங்கிய புலவர் அமைதியாக கிளம்பி விட்டாராம். அவர் சென்ற பின்பு கணவரிடம் சொல்லி, இருவரும் சேர்ந்து சிரித்திருக்கின்றனர்

இதே போன்று கொங்கு குலக் “கண்ணகி” யாகிய வெள்ளையம்மாள் வரலாற்றைப் பெரும் செல்வமாகப் பாடி, காவியமாகத் தந்தவர் தமிழ் வளளல் கண்ணாடிப் பெருமாள் என்கிறார். இன்றும் காடையூர் ஈசுவரன் கோவிலில் தெய்வமாக நின்று அருள்பாலிக்கும் வெள்ளைய்ம்மாளின் காவியம் ஓவியமாகத் தீட்டப்படுள்ளது (6. வெற்றி மங்கை வெள்ளையம்மாள்)

7.மாண்புடைய மனைக்கிழத்தியர் என்ற தலைப்பில், கி.பி. 12, 13ஆம் நூற்றாண்டுக் கொங்கு நாட்டுக் கல்வெட்டுகளில் “மனைக்கிழத்தி” என்ற சிறப்புச் சொல்லைக் காண முடிகிறது என்கிறார். இது பாண்டிய நாடு, சோழ நாடு, தொண்டை நாட்டில் இல்லாத தனிச்சிறப்பு என்கிறார். அவர்கள் பெயரில் .பல கல்வெட்டுகள் பொறிக்கப்படிருப்பதன் ஆதாரமும் வழங்கியுள்ளார், புலவர்.

8. படைகளை விரட்டிய பாவை, 9.தாமரை நாச்சியெனும் தகவுடையார், 10. அதிசயப்பெண் அருக்காணித் தங்கம் (பொன்னர் சங்கரின் அருமைத் தங்கை) 11. விளக்குக் கொடையளித்தோர், 12.பக்தி பிடித்த சடைச்சியம்மாள், 13. திருப்பணி செய்த திருமதிகள், போன்ற தலைப்புகளில் பல சுவையான தகவல்களை வழங்கியுள்ளார்.

14. கொங்குப் பிராட்டியார்:

கருவூர், வெஞ்சமாங்கூடல், பவானி, கொடுமுடி, திருச்செங்கோடு, அவிநாசி, திருமுருகன்பூண்டி முதலிய ஏழு தேவாரத் தலங்களையும் , பேரூர், கொல்லி, ஏழூர், தோளூர் முதலிய பல வைப்புத் தலங்களையும் பெற்ற கொங்குநாடு சிறந்த வைணவத் தலங்களையும் பெற்றுள்ளது. வைணவத்தின் 108 திவ்யத் தலங்களில் ஒன்று கொங்கு நாட்டில் தாராபுரம் அருகில் அமைந்திருக்கும், கொங்கு என்ற கொங்கூரே என்பதாகும்.

“கொங்கும் குடந்தையும் கோட்டியூரும் பேரும்
எங்கும் புகுந்து விளையாடும் என்மகள்”
பெரியாழ்வார் பாசுரம்.

இராமானுசர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த முதலாம் குலோத்துங்கன் (1070 - 1119) அவையில் சைவ - வைணவ ச்மயவாத சபை நடைபெற்றது. அரசன் ஆதரவில் சைவர் வென்றனர். “சிவமே பரம் பொருள் - வேறு இல்லை” என்று எழுதிக் கையெழுத்திட வைணவர்கள் வற்புறுத்தப்பட்டனர். சமயவாத சபைக்கு இராமானுசர் வரவேண்டும் என்று அரசன் ஆணையிட, இதனைக் கேளவியுற்ற கூரத்தாழ்வார் இராமானுசரிடம் சென்று, சோழ மன்னனின் அழைப்பில் வஞ்சம் இருப்பதால் அச்சபைக்கு எழுந்தருளுவது நல்லதன்று என்று கூறினார். ஆயினும் அரசரின் ஆணையை நிறைவேற்றும் பொருட்டு, இராமானுசரின் உடையணிந்து கூரத்தாழ்வார் சமய சபைக்குச் செல்வதென்றும், கூரத்தாழ்வார் உடையுடன் இராமானுசர் வெளியேறி விடுவதென்றும் தீர்மானித்து அப்படியே செய்தனர். இராமானுசர் வெள்ளாடையணிந்து கர்நாடக நாடு செல்ல மேற்கு நோக்கிப் பயணமானார். கொங்குநாடு புகுந்த இராமானுசரை வேட்டுவ குலப் பெருமக்கள் வரவேற்று உபசரித்து கொங்கூரில் இருந்த அக்கிரகாரத்தில் இருந்த கொங்குப் பிராட்டியாரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். திருவரங்கத்தில் உடையவரிடம் உபதேசம் பெற்றிருந்த கொங்குப் பிராட்டியார் மகிழ்ச்சியின் எல்லையில் தன் கணவர் கொங்கிலண்ணனோடு மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டு திருஅமுது படைக்க முற்பட்டனர். சில நாட்கள் கொங்கு பிராட்டியார் இல்லத்தில் கொங்கூரில் தங்கியிருந்துவிட்டு பின் கர்நாடக மாநிலத்தின் மேலக்கோட்டை என்ற ஊரை நோக்கிப் புறப்பட்டாராம்.. கொங்கு பிராட்டியாரைப் பற்றி வைணவ இலக்கியங்களில் பல தனியன்களிலும், பிரபந்தங்களிலும் புகழ் மொழிகள்பல உள்ளன. இவர் கணவர் கொங்கிலண்ணன் என்ற கொங்கிலாச்சான் 74 வைணவ சிங்காசனாதிபதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார் என்கிறார்.

15. இணையற்ற இரட்டைப் புலவர்கள், 16. பொங்கலூர் புகழ்மிகு பெண்கள், 17. தெய்வமாக மாறிய தேனாயி, 18. மலர்ந்தும் மணம் வீசா மலர்கள், 19. கொங்குவேளிர் பணிப்பெண், 20. நீர்நிலை தந்த நங்கையர், 21. மாணிக்கி என்னும் மங்கைநல்லார், 22. உயர்பண்புள்ள உமையாயி, 23. மருத்துவக் கலைதேர் மங்கலை, 24. வியன்பணியாற்றிய வேட்டுவர் குல மகளிர், 25. கவரிமான் அனைய குப்பநாச்சி, 26. வீரப்பெண் மீனாட்சி, 27. பெயர் தெரியாப் பெண்டிர் ஆகிய தலைப்புகளில் மிகச் சுவாரசியமான வரலாறுகளை ஆசிரியர் ஆதாரங்களுடன் பதிவிட்டிருப்பது பாராட்டுதலுக்குரியது.

வெளியில் தெரியாத முக்கியமான பல வரலாற்றுத் தகவல்கள் ஆதாரங்களுடன் காணக் கிடைப்பது இந்நூலின் தனிச்சிறப்பாகும். அந்த வகையில் இந்நூலின் ஆசிரியர் புலவர், கல்வெட்டறிஞர் முனைவர் செ.இராசு அவர்கள் தனிச்சிறப்பு பெறுகிறார் என்றால் அது மிகையாகாது.

நூலின் பெயர்: கொங்கு குல மகளிர்
நூல் பொருள் : பெண்ணியம்
ஆசிரியர் : புலவர் செ.இராசு எம்.ஏ.,பிஎச்.டி.
பக்கங்கள் : 128
விலை: ரூ50/-

அட்டை விளக்கம்

முன் அட்டை:

* தாரமங்கலம், கட்டி முதலி அவர்கள் மனைவி சின்னம்மையார்,
* பூங்கோதை கல்வெட்டு
* மாணிக்கி, நாகமலை ஓலை

பின் அட்டை: காடையூர் வெள்ளையம்மாள்.


No comments:

Post a Comment