Saturday, September 22, 2012

ஆகாயத்தாமரை!





ஊதுவத்தியும், பன்னீரும், வாசனைத் திரவமும், மலர்ச்செண்டுகளின் மணமும் கலந்ததொரு வித்தியாசமான வாடை.. ஆங்காங்கே பெண்கள் கூடிக்கூடி குசுகுசுவென இரகசியமும், வாயின் மீது அடித்துக் கொண்டும், புலம்பிக் கொண்டும், வயிற்றில் புளியைக் கரைக்கும் சூழல். பெரிய பட்டாசாலை முழுதும் நிறைந்த உறவுகளும், நட்புகளும், மங்கலான முகங்களுடன்......

"ஏண்டி பாவி, இப்படி அல்பாயுசுல போயிட்டியேடி.. நன்னாத்தானே இருக்கேன்னு நினைச்சுண்டிருந்தேனே.. இப்படி தலையில கல்லைத் தூக்கிப் போட்டுட்டியேடி.. தற்கொலை பண்ணிண்டு உயிரை மாய்ச்சுக்கற அளவுக்கு நோக்கு என்னடி பிரச்சனை. என்னண்ட ஒரு வார்த்தை சொல்லப்படாதோ பாவி....

மஞ்சள் பூசி, மங்கலமாய் பெரிய குங்குமப் பொட்டும் வைத்து, பச்சைப்பட்டும், வைர மூக்குத்தியும், ஏழு கல் வைரத்தோடும் அணிந்து தூங்குபவள் போல புன்சிரிப்பு மாறாமல் அம்மன் போல நீட்டி படுத்திருப்பவளைப் பார்த்து  வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறும் அந்தத்தாயைப் பார்க்க்ப் பரிதாபமாக இருந்தாலும் என்ன செய்வது. மாண்டவர் மீள்வரோ...?

அம்மா, மகராசி ஐயரு ஊட்டம்மா இப்படி அல்பாயுசுல போயிட்டியே தாயீ... லட்சுமி கடாட்சமா அன்னாடம் கலகல்ன்னு பேசிக்கினு, ஊட்டுல வளைய வருவியே...  வேலைக்காரின்னு கூடப்பாக்காம என்னைய ஊட்டுக்குள்ள  வச்சிருந்தியே, வயிராற சோறு போட்டு துணிமணி கொடுத்து சொந்தமா நடத்துனியே அம்மா... நேத்துகூட நல்லாத்தானே சிரிச்சுப்பேசி அனுப்பி வ்ச்சே.. அதுக்குள்ள என்ன நடந்ததுன்னு தெரியலியே. இப்படி அக்கு பொக்குனு போயிட்டியேம்மா, அந்த சாமிக்கும் கண்ணில்லையே

ராஜி, என்னடி இப்படி பண்ணிட்டே. நான்கு நாளைக்கு முன்னாடி, நான் அம்மா ஊருக்குப்போயிட்டு வரேன்னு போன் பண்ணினப்பக்கூட நன்னாத்தானே பேசிண்டிருந்தே. அதுக்குள்ள நோக்கு என்னடி ஆச்சு.. என்னண்ட கூட சொல்லத் தோணலியா நோக்கு.. 15 வருசமா தொடர்ந்திண்டிருக்கற நம்ம நட்புக்குக் கூட மரியாதை இல்லையா.. எதையாவது சொல்லியிருந்தா சரி பண்ணியிருக்கலாமே.. பாவி இந்த சமயம் பாத்து நானும் உன்னோட இல்லாமப் போயிட்டேனே.. தினமும் ஒரு வார்த்தையானும் உன்னோட பேசலேன்னா என் பொழுதே நகராதேடி... இப்படி எங்களையெல்லாம் அழ வச்சுட்டு போயிட்டியே.. உன்னை தங்கத்தட்டுல பூவாட்டமா வச்சித் தாங்கற அருமையான ஆம்படையானும், நல்ல மாமியாரும் இருக்கும் போது நோக்கு அப்படி என்னதான் பிரச்சனைடி, நேக்கு ஒன்னுமே புரியலையே .. ஈஷ்வரா...

ராஜி, என்னடி பொண்ணே, இவ்ளோ கோழையா நீ.. எத்தனை சமத்தா குடித்தனம் பண்ணிண்டிருக்கியே, திடீர்னு என்ன ஆச்சுடி நோக்கு.. நேக்கு தங்கமா மருமகள் வாய்ச்சிருக்கான்னு பெருமையா இருந்தேனே.. யார் கண் பட்டதோ தெரியலியே.  இந்த நேரம் பார்த்து நானும் காசி யாத்திரை போனது தப்பாயிடுத்தே.. இந்த ஒரு மாசத்துல எத்தனையோ தரம் உங்களாண்டயெல்லாம் போனில பேசிண்டுதானே இருந்தேன். யாருமே சந்தேகப்படும்படியா ஏதும் பேசலையேடீ..  கலி முத்திடுத்தோ.. நன்னா இருந்த குடும்பத்துல இப்படி கஷ்டகாலம் வந்துடுத்தே.. சாகற வயசாடி நோக்கு. இன்னும் முழுசா 7 வருசம் கூட ஆகலியே, கல்யாணம் ஆகி. அதுக்குள்ள வாழ்க்கை நோக்கு சலிச்சுடுத்தா..  வயித்துல வளர்ற அந்த 50 நாள் பிஞ்சு சிசு என்னடி பாவம் பண்ணித்து? அதையும் சேத்தே கொன்னுப்பிட்டயேடீ.. நோக்கு மன்னிப்பே கிடையாதேடீ

மாமி, பக்கத்தாத்துலயே இருக்கற நேக்கும் ஒன்னுமே புரியலியே.. ஒரு சத்தம் அதிகப்படியா இல்லியே.. வீடே அமைதியாண்னா இருந்தது. ஆம்படையானோடக் கூட சண்டை போட்டதாத் தெரியலையே. அப்படி என்னதான் நடந்திருக்குமோ அந்த கடவுளுக்கே வெளிச்சம். முந்தாநாள் காலைல  காய் வாங்கறச்சே கடேசியாப் பார்த்த ஞாபகம்.. அதுக்கப்புறம் பாக்கலையே.. இந்த கேப்புலதான் என்னமோ நடந்திருக்கு.. என்னன்னு தெரியலையே.. அடக்கடவுளே, மண்டையே வெடிச்சுடும் போல இருக்கே..

மன்னீ.. மன்னீ.. என்ன ஆச்சு மன்னி உங்களுக்கு. என் குடும்பத்துல இருக்குற ஆயிரம் பிரச்சனைகளுக்கு தீர்வு சொன்ன நீங்களா இப்படி பண்ணேள். நம்ப முடியலையே மன்னி. அத்துனை அழிச்சாட்டியம் பண்ணிண்டிருந்த எங்காத்துக்காரரையே நல்ல வார்த்தை சொல்லி திருத்தப் பார்த்தியே , இப்ப நோக்கு என்ன வந்தது. அண்ணனும் உன்மேல உசிரையே வச்சிண்டிருக்கானே, அவன் இனிமே நீ இல்லாம எப்படி வாழப்போறான்னு தெரியலையே.. கண்ணைத் திறந்து பாரு மன்னி அவன் கதறி அழறதை

உன் ஒன்னுவிட்ட நாத்தனார்தானேடி ராஜீ, நோக்குத் தெரியாதா என்ன.. அவாளுக்குள்ள என்ன நடந்திருக்கும்னு. நீ அடிக்கடி இவா ஆத்துக்கு வந்து போயிண்டுதானே இருக்கே.. அப்புறம் எப்படி நோக்கு தெரியாமப் போகும். நீயும் எதானும் மறைக்கறியாடீ.. அம்மனாட்டம் சிரிச்ச முகம்மாண்ணா இருப்போ.. ஒரு நாளும் அழுத மூஞ்சியும், சிந்திய மூக்குமா பாத்ததேயில்லியே.... என்னத்த சொல்றது... ஒன்னுமே புரியலியே....

அக்கா, பாருக்கா அத்திம்பேர் எப்படி உடைஞ்சுப் போயிட்டார்.. ஏன் இப்படி பண்ணினே.. போன வாரம் நான் வ்ந்தப்ப்க்கூட எதையும் என்னண்ட சொல்லவேயில்லையே.. அப்படி என்னதான் நோக்கு பிரச்சனை இப்படி உசிரையே மாய்ச்சுக்குற அளவுக்கு.. இந்த 7 வருஷ வாழ்க்கையில ஒருநாளும் அத்திம்பேரைப்பத்தி எந்த குத்தமும் சொன்னதில்லயே, எனக்காக அத்திம்பேர் அவரோட பிரண்ட்ஸ் கூட இருக்கற நேரத்த்க்கூட சுத்தமா குறைச்சிப்பிட்டாரு. இப்ப யாரோடயும் காண்டாக்டே இல்லைன்னுகூட சொல்லுவியே.. ரொம்ப பொசசிவா இருக்காருன்னு சொல்லுவியே..  அத்திம்பேர் இல்லாம ஒரு தடவைகூட தனியா நீ பொறந்தாத்துக்கு வந்ததே இல்லியே. அவ்ளோ உசிராக் கிடந்தியே, என்னாச்சுக்கா இப்படி ஒரேயடியா எல்லாத்தையும் வெறுத்துட்டு போறதுக்கு.. ஐயோ தாங்க முடியலியே..

என் ராஜீ இங்கதான் இருக்கா. இதோ அவளோட ஃபேவரிட் யார்ட்ட்லி செண்ட் வாசனை இங்கியே சுத்திண்டிருக்கு. என்னைச்சுத்தித்தான் இருக்கு. நேக்கு நன்னா தெரியறது. அவோ என்னை உட்டு எங்கேயும் போகல இங்கயேத்தான் இருக்கா.. ராஜீ.. ராஜீம்மா..  என் உசிரையும் சேர்த்தே கொண்டு போயிருடீ .. நீ இல்லாத இந்த உலகத்துல என்னால சத்தியமா வாழ முடியாதும்மா. நோக்கு அது தெரியாதா....  உனக்காக என் சொந்தம், பந்தம், பிரண்ட்ஸ் என்று எல்லாத்தையும் விட்டுட்டு நீயே வாழ்க்கைன்னு இருந்தேனே.. இன்னும் என்ன பண்ணியிருக்கனும்னு தெரியலியே..

[’இது.. இதாண்ணா பிரச்சனையே. நீங்க செய்த கொடுமையின் உச்சமே. தங்கக்கூண்டு கிளியா என்னை வச்சிருந்ததுதானே.  பெத்தவா வீட்டுக்கு தனியா போனாக்கூட உங்க மேல இருக்கற பாசம் ஷேர் பண்ணிடுவேன்னு வாய் கூசாம சொன்னேளே... அப்போ என் மனம் எவ்ளோ வேதனைப்பட்டிருக்கும்னு நினைச்சுப் பார்த்தேளா...’]

என்னடி.. என்னடி சொல்றே நீ.. உம்மேலே அப்படி ஒரு அன்பு வச்சது தப்பாம்மா..?” நீ எள்ளுன்னா நான் எண்ணெயா இல்ல நிப்பேன். ஒருநாளாவது உன்னைய மார்க்கெட்டு, ரேசன் கடை, பேங்க் லாக்கர்னு இப்படி எதுக்காச்சும் அலைய விட்டிருப்பேனா? உன்னை நோகாம தாங்கிண்டுதானே வச்சிருக்கேன்.

[அன்பா வச்சேள்.. அதும்பேறு அன்பாண்ணா.. வெறி... அதுல எத்தனை நாள்தான் சிக்கி மூச்சுத் திணற முடியும்.. தங்கக் கூண்டில அடைச்சாலும் அது அந்தக் கிளிக்கு ஜெயில்தானேண்ணா. அதோடவா நிறுத்தினேள்... இத்தனை வருஷம் குழந்தை இல்லாம இருக்கறதுக்கு எத்தனை முறை உங்கம்மாவண்ட எவ்வளவு பேச்சு கேட்டிருப்பேன். ஆஸ்பிடல்ல காமிச்சேன்னு எத்த்னை பொய் பேசியிருப்பேன்.. இதுக்கெல்லாம் காரணம் யாருண்ணா...? இப்பவாவது புரியறதா இல்லையா....’]

ஆமா.. உம்மேல நான் வச்சிருந்தது சாதாரண அன்பில்லேடி.. உசிரையேன்னா வச்சிருந்தேன். அது தப்பா.... வாராமல் வந்த வண்ண நிலவில்லையா நீ எனக்கு? ஒரு முறை எனக்கு ஆபிசுல வெளிநாடு டூர் போற சான்ஸ் கிடைச்சப்பக்கூட உன்னை விட்டுட்டுப்போக மனசில்லாம அந்த சான்சையே உதறித்தள்ளினேனே... என் பிரண்ட்ஸ்செல்லாம் எப்பப்பாரு கெட் டூ கெதர்னு அங்கங்கே பார்ட்டி, டூர்னு சுத்தறாளே, நான் என்னைக்காவது அப்படி எங்கயாவது போயிருக்கேனா..?”

[’ம்ம்ம்... ஆமாண்ணா, ஆமா. அதோடவா நிறுத்தினேள். நம்மாத்துக்கு யார் வந்தாலும் அவங்கள்ட்டகூட பேச உட மாட்டேள்.. அவா என்னைப் பாத்துப் பேசினாக்கூட உங்களுக்குப் பிடிக்காதே..  அவாளை வெறுப்பா ஒரு லுக்கு விடுவேளே..  அவாளாப் பார்த்து உங்களுக்குப் பிடிக்கலேன்னு புரிஞ்சுண்டு நம்மாத்துக்கு வர்றதையே நிறுத்தறா மாதிரில்லே நடந்துப்பேள்’]

ஆமாடீ, நேக்கு மட்டுமே நீ சொந்தமா இருக்கனும். நீ ஒரு பொக்கிசம் இல்லையா.. உன்னை நான் பத்திரமா பாதுகாக்கனுமோல்லியோ.. அதுல என்ன தப்பு இருக்கு..?”

[’தப்பு அதுல இல்லேண்ணா, நேக்கும் ஒரு மனசு இருக்கு, அதுல ஆசையும், என் சொந்தத்து மேல பாசமும் இருக்குன்றதை புரிஞ்சிக்கவே இல்லையே நீங்க.. இரத்தமும் சதையும் உள்ள மனுஷி மாதிரியா என்னை நடத்தினேள்? ஒரு ஜடமான பொருளாட்டம்தானே பாதுகாத்தேள். எனக்கு ஒரு குழந்தை பொறந்தா என் பாசம் அதும்பேர்ல ஷேர் ஆயிடும்னு வாய் கூசாம சொல்றேளே.. இது நியாயமா.. எனக்கு குழந்தை வேணாம்னு முடிவு பண்ண நீங்க யாருண்ணா.. உங்க மேலேயே என் முழு பாசமும் இருகனும்னு நீங்க மட்டுமே முடிவு பண்ணினா போதுமா... எத்தனைவாட்டி நான் இதைப்பத்தி பேசியிருப்பேன்.. காது கொடுத்து கேட்டிருப்பேளா...? எல்லாம் சுயநலம். பெத்தவாளுக்கு தேவைங்கற நேரத்துலகூட என்னை அவாளுக்கு சேவகம் பண்ண அனுமதிச்சிருக்கேளா ஒரு தடவையானும். நீங்களும் வரமாட்டேள், என்னையும் தனியா பொறந்தாத்துக்கு அனுப்ப மாட்டேள். நானும் ஒவ்வொரு தடவை அவா கூப்பிடும்போதும், ஒரு பொய் காரணம் சொல்லிண்டிருக்கறது. எவ்ளோ நாளைக்குண்ணா இப்படி... முடியலை...”]

என்னம்மா ராஜீ, நான் என்ன தப்பு பண்ணேன். உம்மேல அதிகமா அன்பு வச்சது குத்தமா.. அதுக்கு இவ்ளோ பெரிய தண்டனையா...?”

[’அதுசரி.. இது எல்லாத்துக்கும் உச்சமா நேத்து வயிற்றுல ஆன குழந்தையை கலைக்கச் சொல்றேளே.. மனிதாபிமானமே இல்லாம அந்த பிஞ்சுக் குழந்தையை கொல்லச் சொல்றேளே. இது நியாயமாண்ணா..  இந்த ஏழு வருசமா உங்க பேச்சைக் கேட்டுண்டு கர்பத்தடை மாத்திரை தின்னுண்டுதானே இருந்தேன். இப்ப இரண்டு மாசமாத்தான் அதை நிறுத்தினேன் உங்களாண்டை சொல்லாம.. அதுவும் எதுக்கு, அக்கம் பக்கத்துல நம்மளைப் பத்தி கேவலமா ஒரு குழந்தை பெத்துக்க துப்பில்லைன்னு பேசறத கேக்க முடியாமத்தானே அந்தக் கருமத்தை நிறுத்தினேன்... ஈஷ்வரப்பிராப்தி, சீக்கிரமா குழந்தை உண்டானது. நீங்க என்னடான்னா சந்தோஷப்படாம, அந்தக் குழந்தையை கலைக்கச் சொன்னேள்.. இதவிட  வேற என்னண்ணா வெசனம் வேணும் நேக்கு.. அதான் இப்படி என் குழந்தை போற எடத்துக்கே நானும் போயிடலாம்னு முடிவு செய்துட்டேண்ணா. போதும் இந்த வாழ்க்கைன்னு ஆயிடுத்துண்ணா...’]

ஐயோ அப்படீல்லாம் சொல்லாதேடீ ராஜீ..நீ இல்லாம ஒரு நிமிசம் கூட இந்த லோகத்துல என்னால தனியா வாழ முடியாதுடீ.. என்னை விட்டுட்டுப் போயிடாதேம்மா... நானும் வந்துர்றேன் உன்னோடயே

[’ஐயோ வேண்டாண்ணா .. போதும் உங்களோட வாழ்ந்தது.. காசிக்குப்போயும் கருமந்தொலையலேன்னு நீங்களும் கூட வரேங்கறேளே... ஆளை விடுங்கோண்ணா..’]

ராஜீ, வேண்டாண்டி என்னை விட்டுட்டுப் போகாதேடீ.. என்னையும் அழைச்சுண்டு போடீ.. இனிமே அப்படீல்லாம் பண்ணமாட்டேண்டீ.. ராஜீ... ராஜீ

ஏண்ணா.. என்னண்ணா.. எதாவது கனவு கண்டேளா.. இப்படி வேர்த்துக் கொட்டறதே.. இந்தாங்கோ தண்ணி குடிங்கோண்ணா...

???????

 நன்றி : திண்ணை வெளியீடு




2 comments:

  1. Replies
    1. ஹ.. ஹா.. வாசிப்பிற்கு நன்றிங்க.

      அன்புடன்
      பவள சங்கரி

      Delete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...