Friday, April 5, 2013

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போம்! (8)பவள சங்கரிதீய சக்திகளுக்கு வெறுப்புணர்ச்சி, சாந்தமான உணர்வு, நல்ல போதனைகளை மகிழ்வுடன் இரசித்துக் கேட்கும் போழ்தும் ஒருவரிடமிருந்து அச்சமென்ற அந்த ஒன்று விலகிவிடுகிறது.
புத்தர்

வெறுப்பை வெறுத்து ஒதுக்குவோம்எப்போது ஒருவருக்கு சிலரைக் கண்டால் அதீத வெறுப்புணர்ச்சி வருகிறதோ, அப்போதே அவர் தான் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தில் சுய பச்சாதாபத்தில் உழன்று கொண்டிருக்கிறார் என்று அர்த்தமாகிறது. சக மனிதர்களை நேசிக்காமல் இருப்பதைக் காட்டிலும் வெறுப்புணர்வைக் காட்டுவது மிக மோசமானது. அவர் தன்னை மிஞ்சிவிடுவாரோ என்ற படபடப்பும்கூட வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்துகிறது. நாளடைவில் அடுத்தவரிடம் காட்டும் அந்த வெறுப்புணர்ச்சி, நம்மீதே சுய அனுதாபத்தை ஏற்படுத்தி மெல்ல மெல்ல சுய வெறுப்பிற்கும் வழிவகுத்துவிடும். நம்மை நாமே வெறுக்கும் சூழல் தன்னம்பிக்கையை முற்றிலும் குலைத்துவிடும். இதைத் தவிர்க்க ஒரே வழி எவரையும் வெறுக்காமல் இருக்க பழகிக்கொள்ள வேணடும். தன்னைப் போல பிறரையும் நேசிப்பது வெற்றிப் பாதையின் மலரணை என்பதில் ஐயமில்லை.அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!


எந்த ஒரு காரியத்தைச் செய்யும் போதும் தோற்றுவிடுவோம் என்ற அச்சம் வந்தால் அந்த காரியத்தை சரியாகக் கொண்டு செலுத்துவது சிரமம். காரணம் தோல்வி என்பதே கற்பனையான ஒன்று. தோல்வி என்று கற்பனையாக நினைப்பதெல்லாம் வெற்றிக்கான படிகள் என்பதுதான் நிதர்சனம். இதை முழுமையாக உணர்நது கொண்டாலே தேவையற்ற சலனம் இல்லாமல் தெளிவான சிந்தனையுடன் முன்னேற முடியும்.


என் உறவினர் ஒருவர் மிகச் சிறந்த இருதய அறுவை சிகிச்சை  நிபுணர். ஒரு பிரபல மருத்துவமனையில் தலைமை மருத்துவராக இருந்தவர். வாழ்க்கையில் தம் பதவிக் காலத்தில் பல ஆபத்தான அறுவை சிகிச்சைகளையும் சர்வ சாதாரணமாகச் செய்து பல உயிர்களை காத்தவர். தம்முடைய  பதவிக் காலம் முடிந்து ஓய்வு பெற வேண்டிய நேரத்தில் இறுதி அறுவை சிகிச்சையின் போது, நோயாளி இறந்துவிட, அந்த சம்பவம் அவர் மனதை வெகுவாக பாதித்து, தம் கவனக் குறைவினால்தான் தன்க்கு தோல்வி ஏற்பட்டது என்று கற்பனை செய்து கொண்டு மன அழுத்தத்திற்கு ஆளாகி, அதே நோயாக மாறி பத்து ஆண்டுகள் படாதபாடுபட்டார். தன்னுடைய 35 ஆண்டுகால சேவையின்போது காப்பாற்றிய எத்த்னையோ உயிர்களைப் பற்றியும், அந்த வெற்றியைப் பற்றியும் மன நிறைவு கொள்ளாத அவர், தன் கையை மீறி நடந்த ஒரு அசம்பாவிதத்தை அதீத கற்பனைக் கண்களுடன் பார்த்து, அமைதியாக வாழ வேண்டிய நாட்களை தொலைத்ததோடு, தாம் மேற்கொண்டு செய்ய வேண்டிய கடமைகளையும் சரிவரச் செய்யத் தவறிவிட்டார். இதனால் பிரச்சனைகள் அதிகமானதே தவிர வேறு எந்த பலனும் இல்லை.


இன்னொரு சம்பவம் நான் மிகவும் ஆச்சரியப்பட்டது, இரண்டு நண்பர்கள் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் நல்ல மதிப்பெண்கள் பெற்று பெரும் பாராட்டுக்களுடன் நல்ல பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் இருந்தார். அடுத்தவரோ இறுதித் தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியுற்று வெளியே வந்தார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் இருவரையும் தனித்தனியாகச் சந்திக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்த போது பெரிய ஆச்சரியம் காத்திருந்தது எனக்கு. ஆம் அதிக மதிப்பெண் வாங்கி வெளியில் வந்த மாணவர் சரியான வேலை கிடைக்காமல் பெரும் மன வருத்தம் கொண்டிருக்க, மற்றொரு மாணவரோ நல்ல ஒரு பிரபலமான பன்னாட்டு நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்தார். இது எப்படி சாத்தியம் என்று விசாரித்த போது, நல்ல மதிப்பெண் வாங்கி வெளியில் வந்து, முதல் நேர்ககாணலுக்குச் சென்றவர், அங்கு வேலை கிடைக்காமல் போனவுடன், தோல்வி என்ற அச்சம் சிறைபிடிக்க, அடுத்து வந்த அத்தனை நேர்காணல்களையும் அதே அச்சத்துடன் அணுக, நாளடைவில் தன்னம்பிக்கை குலைந்து புதிய முயற்சி என்ற வார்த்தைக்கே இடமளிக்காமல், கிடைத்த வேலையை ஏற்றுக் கொண்டு குறைவான ஊதியத்தில் திருப்தி இல்லாமல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். ஆனால் இறுதி ஆண்டில் ஒரு பாடத்தில் தோல்வியுற்றாலும் அதைக்கண்டு அச்சம் கொள்ளாமல் அடுத்த முறை இன்னும் பெரு முயற்சியுடன் தேர்வை எதிர்கொண்டு நல்ல மதிப்பெண் பெற்றதோடு அதே தன்னம்பிக்கையுடன் போன முதல் நேர்க்காணலே வெற்றியைக் கொடுக்க அன்றிலிருந்து ஏறுமுகம்தான் அவருக்கு!


எந்த ஒரு செயலையும் கெட்டியாக பிடித்துக் கொள்வதோடு, அதை இலகுவாக அவிழ்த்துவிடவும் பழக வேண்டும். ஆம் நம்மால் முடிந்தவரை நூறு சதவிகித முயற்சியை மூலதனமாக்கிவிட்டு, நம் இருதயத்தையும், ஆன்மாவையும் ஒருங்கே அதில் முழுமையாகச் செலுத்திவிட்டு அடுத்த நொடி அதிலிருந்து என்ன பலன் கிடைக்கப் போகிறது என்ற அச்சம் இல்லாமல், மகிழ்ச்சியுடன், தன்னம்பிக்கையுடன் வளைய வந்தால் போதும், வெற்றிப்பாதை தெளிவாகப் புலப்படும்!

நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே நாம் ஆகிறோம் என்பதே சத்தியம். இதைத்தான் எண்ணம் போல வாழ்வு என்பார்கள் இல்லையா!


தொடருவோம்

படத்திற்கு நன்றி

நன்றி : வல்லமை

1 comment:

  1. வெறுப்பை வெறுத்து ஒதுக்குவோம் - ஒவ்வொரு வரியும் சிறப்பு... பாராட்டுக்கள்...

    உதாரண நிஜங்கள் நன்று... நன்றாக முடித்துள்ளீர்கள்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete