Friday, May 3, 2013

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா (10)




பவள சங்கரி


இரசனையில் செல்வந்தராக இருக்கவும், பொறாமையிலிருந்து விடுதலை பெற்றவராகவும், அடுத்தவரின் நன்மைகளைக் கொண்டாடுபவராகவும், இல்லாத மற்றும் இரக்கமற்ற வேளையிலும்  இன்னும் நெருக்கமான பெருந்தன்மையுடனான இருதயத்தினாலான அன்பு - இவை அனைத்துமே பணத்தினால் வாங்க முடியாத பரிசுகள்.
ராபர்ட் லூயிஸ் ஸ்டீவென்சன் (1850 - 1894)



தயங்காமல் வழங்கவேண்டிய உற்சாகமான பரிசு!


தத்தித் தத்தி முதல் அடி எடுத்து வைக்கும் குழந்தையைப் பார்த்தவுடன் யாருடைய குழந்தை என்ற பாரபட்சமில்லாமல் ‘ஆகா, அருமையாக நடந்துவிட்டாயே. நீ பெரிய ஆளாகிவிட்டாயே என் செல்லமே...’ என்றெல்லாம் மனமார பாராட்டத் தோன்றும். அந்தக் குழந்தையும் அதனைப் புரிந்து கொண்டு பெருமையாக அடுத்த அடியை எடுத்து வைக்க முயலும். அந்த சின்னச்சின்ன பாராட்டுகள் மூலமாகவே குழந்தை ஒவ்வொரு காரியமாக செய்து வளர்ந்து வருகிறது. வளர்ந்த பிறகும் மனிதர்களிடம் இந்த எதிர்பார்ப்பு  அப்படியே நிலைத்துவிடுகிறது. பாராட்டுகளுக்கும், புகழுக்கும் பெருவிருப்பம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.  நம்முடைய அந்த மனம் திறந்த நேர்மையான பாராட்டும் அவருக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. அது யதார்த்தமான நல்லெண்ணத்தையும் தோற்றுவிக்கிறது. இதனால் மனமும் இலகுவாகி நம் பணியையும் உற்சாகத்துடன் கவனிக்க வழிவகுக்கிறது. அடுத்தவர்களின் உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அதிகரிக்கும் விதமாக எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் நாம் செய்யும் இந்த சிறிய காரியம் அவருடைய நல்லலெண்ணத்தை முழுமையாக சம்பாதித்துக் கொடுத்துவிடுகிறது. ஆக நம் சூழலுக்கு ஏற்றவாறு நம்மைச் சுற்றியுள்ள நம் சக மனிதர்களிடம் நம்மைப் பற்றிய நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்துவதன் மூலம் நம்மைச் சுற்றியும் நல்ல விசயங்கள் நடந்து நம் வெற்றிப் பாதையை சீரமைப்பதையும் உணர முடியும்.

கடந்த காலத்தில் நடந்துபோன தவறுகளை இறுகப் பிடித்துக்கொண்டு குற்ற உணர்ச்சியிலிருந்து மீளாமல் தவிப்பது நம்மில் பலரின் இயல்பாகாவே இருக்கிறது. தவறே செய்யாத மனிதன் என்ற ஒருவன் இந்த உலகில் பிறந்திருக்கப் போவதில்லை. சின்னச் சின்ன தவறுகளே நம்மைப் புடம் போட்ட பொன்னாக ஆக்குகிறது.  செய்த தவறையே திருத்திக் கொள்ளாமல் திரும்பத் திரும்ப செய்து கொண்டிருப்பது மட்டுமே நிம்மதியைக் குலைக்கக்கூடியது. குற்ற உணர்ச்சியை ஒதுக்கி விட்டு ஆக்கப்பூர்வமான பணிகளில் நம் மனதைச் செலுத்துவது அறிவார்ந்த செயல். 

கடந்த காலம்  உடைந்த பானை
எதிர் காலம் என்பது  மதில் மேல் பூனை
நிகழ் காலம் என்பது கையில் வீணை    

மீட்க முடியாத கடந்த காலத்தை எண்ணிக் கொண்டிருப்பதை விட்டு,  என்ன நடக்கப் போகிறது என்று உறுதியாக தெரியாத எதிர்காலத்தைப் பற்றிய கற்பனையையும் அளவாக நிறுத்தி, சுகமான இராகங்களை இசைக்கக் கூடிய வீணையான நிகழ் காலத்தைக் கையில் எடுத்துக் கொண்டு சுகமாக வாழலாமே. சில நேரங்களில் நம் உடன் பிறந்தே கொல்லும் வியாதியைப் போல அன்பான மனைவிக்கு சிடுமூஞ்சியான கணவனோ அல்லது அமைதியான கணவனுக்கு அதிரடியான மனைவியோ வாய்ப்பதும் உண்டு. இது போன்ற நேரங்களில் எதிர்மறையான அவர்களின் செயல்களைப் பொருட்படுத்தாமல், தவிர்த்து வந்தாலே நாளடைவில் அவர்களே சலிப்படைந்து தங்களுடைய எதிர் வினைகளை குறைத்துக் கொள்ளக் கூடும். அதை விடுத்து ஒவ்வொன்றிற்கும் எதிர்வாதம் செய்வது என்று ஆரம்பித்தால் நம் வாழ்நாளில் பெரும் பகுதி அதிலேயே கழிந்துப் போவதோடு நம் வெற்றி இலக்கை எட்ட முடியாமல் போகவும் வாய்ப்புள்ளது. எந்த ஒரு காரியத்தையும் நிதானமாகவும், மகிழ்ச்சியுடனும், செய்யும் வழமையை மேற்கொண்டாலே நம் அகம் குளிர்ந்து முகம் பொலிவுறும் என்பதில் ஐயமில்லை அல்லாவா? அகத்தின் அழகுதானே முகத்தில் தெரியும்?

நன்றி : வல்லமை


4 comments:

  1. பாராட்டு - மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் (பதிவும் உண்டு)

    சிறு தவறு என்று தெரிந்தவுடன் கிள்ளி ஏறிய வேண்டும்...

    நேற்று என்பதும் கையில் இல்லை.....
    நாளை என்பதும் பையில் இல்லை.....
    இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு.....
    (படம் : உன்னாலே...உன்னாலே)

    நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. //சில நேரங்களில் நம் உடன் பிறந்தே கொல்லும் வியாதியைப் போல அன்பான மனைவிக்கு சிடுமூஞ்சியான கணவனோ அல்லது அமைதியான கணவனுக்கு அதிரடியான மனைவியோ வாய்ப்பதும் உண்டு.//

    ஆம். உண்டு தான்.

    //இது போன்ற நேரங்களில் எதிர்மறையான அவர்களின் செயல்களைப் பொருட்படுத்தாமல், தவிர்த்து வந்தாலே நாளடைவில் அவர்களே சலிப்படைந்து தங்களுடைய எதிர் வினைகளை குறைத்துக் கொள்ளக் கூடும்.//

    வேறு வழியே இல்லை. தாங்கள் சொல்வது தான் சரி.

    //அதை விடுத்து ஒவ்வொன்றிற்கும் எதிர்வாதம் செய்வது என்று ஆரம்பித்தால் நம் வாழ்நாளில் பெரும் பகுதி அதிலேயே கழிந்துப் போவதோடு நம் வெற்றி இலக்கை எட்ட முடியாமல் போகவும் வாய்ப்புள்ளது.//

    ஆமாம்.

    //எந்த ஒரு காரியத்தையும் நிதானமாகவும், மகிழ்ச்சியுடனும், செய்யும் வழமையை மேற்கொண்டாலே நம் அகம் குளிர்ந்து முகம் பொலிவுறும் என்பதில் ஐயமில்லை அல்லாவா? அகத்தின் அழகுதானே முகத்தில் தெரியும்?//

    மிகவும் அழகாகவே சொல்லியுள்ளீர்கள். மகிழ்ச்சி ;)

    சிறப்பான ஆக்கம். பாராட்டுக்கள். வல்லமையில் வெளிவந்துள்ளதற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. அன்பின் திரு வை.கோ.

      வாருங்கள். வணக்கம். தங்களுடைய ஊக்கமான வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி. வல்லமைக்கு தங்களுடைய கதைகள் இப்பொழுதெல்லாம் வருவதில்லையே ஏன்? ஐக்கியா டிரஸ்ட் சிறுகதை பரிசுப் போட்டியில் கலந்து கொள்ளலாமே.

      அன்புடன்
      பவள சங்கரி

      Delete
  3. அன்பின் திரு தனபாலன்,

    மிக்க நன்றி. பொருத்தமான திரைப்பாடலையும் தேர்ந்தெடுத்துக் கொடுத்து இனிமை கூட்டிவிட்டீர்கள். நன்றி நண்பரே.

    அன்புடன்
    பவள சங்கரி

    ReplyDelete