Wednesday, May 15, 2013

சுமைதாங்கி சாய்ந்தால் ........




பவள சங்கரி


"நைனா, அம்மா சாப்பிடக் கூப்பிடுறாங்க. மணி 10.30 ஆகப்போகுது. வந்து சாப்பிட்டுட்டு வந்துடுங்க. அப்பறம் மயக்கம் வந்துடும். சக்கரை வேற ஏறிப்போயிடும் ”

“ம்ம்ம்”

“என்னம்மா, முத்துலட்சுமி நைனா வறாங்களாமா, இல்லையா. இன்னும் எவ்ளோ நேரந்தான் நானும் சமையல் ரூமிலயே வெந்துக்கிட்டு இருக்குறது. உடம்பெல்லாம் அடிச்சிப் போட்டாப்பல இருக்கு. போய் படுக்க வேண்டாமா.. என்ன பண்றாங்க அப்புடி.?”

“அம்மா, நைனா ஏதோ பழைய தபால் எல்லாம் எடுத்து வச்சி பார்த்துக்கிட்டு இருக்காங்க.. ரொம்ப யோசனையா இருக்காங்க. நீங்க மூடி வச்சுட்டுப் போய் படுங்கம்மா. எனக்கும் கொஞ்சம் ஆபீசு வேலை இருக்கு. நைனா வரும்போது நான் சாப்பாடு எடுத்து வக்கிறேன்” 


தனபாலன், பசுமையான வயல்கள் நிறைந்த பசுஞ்சோலை கிராமப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பணியில் இருந்தவர். இன்று இந்த 75 வயதிலும், மெல்ல நடந்து பள்ளியை ஒரு முறையேனும் வெளியிலிருந்தாவது பார்த்து வந்தால்தான் தூக்கம் வரும். இன்று பழைய கட்டிடமெல்லாம் புது மெருகுடன் பளபளப்பான பெயர் பலகையுடன் நிமிர்ந்து நின்றாலும், தம் பள்ளி என்ற உறவு மட்டும் இன்றும் ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது.  தாம் பிறந்து வளர்ந்த ஊரிலேயே பள்ளி ஆசிரியராகச் சேர்ந்து, தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்று தம் பரம்பரை சொத்தான இரண்டு ஏக்கர் பூமியையும் பண்ணையம் செய்து கொண்டு அமைதியான வாழ்க்கை வாழ்ந்தவர்தான். மாமன் மகளையே மணந்து கொண்டதோடு, குடும்பக் கட்டுப்பாடு குறித்து அதிக விழிப்புணர்வு இல்லாத 1950 களில் ஐந்து குழந்தைகள் பெற்றவர். நான்கு பெண் குழந்தைகள் என்றாலும் எந்த சலிப்பும் இல்லாமல், அன்பையும் பாசத்தையும் கொட்டி வளர்த்தார். இப்போதெல்லாம் பழைய நினைவுகளில் அதிகம் ஊறிப்போவது வாடிக்கையாகிவிட்டது. பள்ளித் தோழன் கதிர்வேலன், சென்னை கல்லூரியில் மருத்துவம் பயின்று, அமெரிக்காவில் சென்று மேற்படிப்பு படித்து அங்கேயே செட்டில் ஆனவன். கல்லூரியில் படித்து முடிக்கும் வரை கடிதத் தொடர்பும், விடுமுறையில் சந்திப்பும் தொடர்ந்து கொண்டிருந்தது. பிறகு பல ஆண்டுகள் கழித்துதான் முதல் கடிதம் அவனிடமிருந்து வந்தது. ஏர்- இண்டியா வெளிநாட்டு தபாலைப் பார்த்தாலே அப்படி ஒரு பெருமையாக இருந்த காலம். 

அன்பு நண்பன் தனாவிற்கு,

கதிர்வேலன் எழுதுவது. நலம். நலமறிய ஆவல். இந்த தபால் உனக்கு ஆச்சரியமளிக்கலாம் இவ்வளவு நாட்கள் இல்லாத நினைப்பு இப்போது எப்படி திடீரென்று வந்தது என்றுகூட உனக்குத் தோன்றலாம். ஆம், இந்த அமெரிக்க இயந்திர வாழ்க்கை. நின்று நிதானிக்கவும், கடந்த கால இனிய தருணங்களை நினைவுகூரவும் வாய்ப்பு கொடுக்கவில்லை. இப்பொழுதெல்லாம் அடிக்கடி நம் ஊரின் நினைவும், நண்பர்களின் நினைவும் வருகிறது. நம் ஊரில் நிரந்தரமாக வாழ்பவன் நீ மட்டுமாகத்தான் இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். எனக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். மகள் பட்டப்படிப்பு படித்திருக்கிறாள். இங்கேயே சொந்தத்தில் மணம் முடித்துக் கொடுத்துவிட்டேன். மகன் மருத்துவம் படித்து என்னுடனே பணியாற்றிக் கொண்டிருக்கிறான். உன் குடும்பம் பற்றி அறிய ஆவல். உனக்கு எத்தனை குழந்தைகள், என்ன செய்கிறார்கள்? விவரத்திற்கு உடன் பதில் போடவும். உன் தபாலுக்காக வழிமீது விழி வைத்து காத்துக் கொண்டிருப்பேன். தபால் ஆபீசில் ஸ்பீட் போஸ்டிலேயே போடலாம்.. அதிகம் செலவும் ஆகாது. உன்னுடைய தொலைபேசி எண்ணை கட்டாயம் மறக்காமல் எழுதி அனுப்பு. நம்முடைய ஊரைப் பற்றியும், நண்பர்கள் பற்றியும் உன் முலம் அறிய ஆவலாக இருக்கிறேன். 

இப்படிக்கு
உன் பதிலுக்காகக் காத்திருக்கும்
கதிர்வேலன்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு தன் உற்ற தோழன் தன்னை நினைத்துக் கொண்டு கடிதம் எழுதியதில் மட்டற்ற மகிழ்ச்சி தனபாலனுக்கு. பலமுறை படித்து, நண்பனின் நினைவுகளை பின்னோக்கிப் பார்த்து அந்த இன்பமான நாட்களில் கவலையில்லாமல் பறந்து திரிந்த தருணங்களை நினைவுகூர்ந்தாலும், இன்றைய நிலையின் சோகம் அதனை மறைக்கத்தான் செய்தது. நண்பனுக்கு பதில் எழுத அமர்ந்தவுடன் தம் வாழ்க்கைப் பாரத்தை அவன் மீது சுமத்தி அவனையும் வேதனை கொள்ளச் செய்ய வேண்டுமோ என்று எண்ணி மேலோட்டமாக எழுத நினைத்தாலும், 10 வது முறையாக அவன் கடிதத்தை வாசித்த போது அதிலிருந்த நெருக்கம் அப்படிச் செய்ய அனுமதிக்கவில்லை. 


அன்பு மறவா இனிய தோழன் கதிருக்கு,

தனா எழுதுவது. நலம், நலமறிந்து மகிழ்ச்சி நண்பா. உன் கடிதம் கண்டவுடன் மீண்டும் நாம் அனைவரும் நம் இளமைக் காலத்திற்கு திரும்பி கபடமற்ற, பொறுப்பில்லாத அந்த சுகமான வாழ்க்கையை வாழ மாட்டோமா என்ற ஏக்கம் வந்திருப்பதும் உண்மை. என்ன செய்வது. சாத்தியமில்லாத விசயத்தை கற்பனை செய்து அதில் சுகம் காண நான் கவிஞன் அல்லவே.. சாதாரண பள்ளி ஆசிரியன். இன்று ஓய்வு பெற்று, குடும்ப பாரத்தைச் சுமக்கும் சுமைதாங்கி மட்டுமே. என் சோகம் உன்னையும் சேர்த்துத் தாக்க வேண்டுமா என்று ரொம்பவும் யோசித்தேன். ஆனால் அப்படிச் செய்தால் அது நம் நட்பிற்குச் செய்யும் துரோகம் என்பதை உணர்ந்து உன்னிடம் அனைத்தையும் இறக்கி வைக்கப் போகிறேன். எதுவும் உன்னை பாதிக்காமல் பார்த்துக்கொள் கதிரு. காரணம் என் குடும்ப நிலையை நீ எந்த கதையிலுமோ அல்லது திரைப்படத்திலோ கண்டிருக்க முடியாது. இப்படியும் நடக்குமா என்று நம்ப முடியாத அதிசயமாக இருக்கும். ஆனால் அதற்கு ஆதாரமாக நான் இருக்கிறேனே? மனதை திடப்படுத்திக் கொண்டு எட்டி நின்று படியப்பா....

என் மாமன் மகள் பரிமளாவை விரும்பி மணம் முடித்துக் கொண்டேன். அன்பும், பண்பும் நிறைந்த நல்ல குடும்பத்தலைவி வாய்த்ததில் பெருமைதான். அந்த மகிழ்ச்சியில் வரிசையாக ஐந்து குழந்தைகள். மூத்தவள் சம்யுக்தா பத்தாம் வகுப்பு முடித்தவுடனே, ஆசிரியப் பயிற்சி எடுத்தவள். சொந்தத்தில் நல்ல மாப்பிள்ளை வந்ததால் 18 வயதிலேயே திருமணம் செய்து கொடுத்தேன். மாப்பிள்ளை தமிழ்நாடு அரசு குடிநீர் வாரியத்தில் சூப்பர்வைசர் பணி. நல்ல குடும்பம். என் சக்திக்கு ஏற்ற எதிர்ப்பார்ப்பே இருந்ததால் உடனே சம்மதித்தேன். நல்ல குணம் உடையவர் மாப்பிள்ளை. இரண்டாவது மகள் சரோஜினி, கல்லூரியில் பட்டப் படிப்பு படித்தாள். இரண்டாம் ஆண்டு படிக்கும் போதே மூத்தவளின் உறவிலிருந்து டாக்டர் மாப்பிள்ளை வந்தது. என் சக்திக்கு கொஞ்சம் அதிகம் என்றாலும், அவர்கள் பெண் அழகாக (என் மனைவி ஜாடை) இருப்பதால் கொடுத்தால் போதும் என்றும்  மூத்தவளுக்குச் செய்த சீர் செய்தால் போதுமென்றதால் மகிழ்ச்சியாக மணமுடித்துக் கொடுத்து விட்டேன் இவளுக்கும் சென்னைவாசம் தான். மூன்றாமவள் முத்துலட்சுமி, பட்டப்படிப்பு சேர்ந்து ஓராண்டு நிறைவடையாத போதே, கோவையிலிருந்து ஒரு வரன் வந்தது, மாப்பிள்ளை இரயில்வேத்துறையில் உயர் அதிகாரி.  நான் அவள் படிப்பு முடிந்த பிறகு செய்யலாம் என்று யோசித்த போதும் என் மனைவி நல்ல வரன் தானாக அமையும் போது தடை செய்யக் கூடாது என்று பிடிவாதமாக என்னை சம்மதிக்க வைத்து விட்டாள். நான்காவது மகன் விஜயராகவன் பள்ளி இறுதி வகுப்பும், கடைக்குட்டி வள்ளியம்மை, 10ம் வகுப்பும் படித்துக் கொண்டிருந்தார்கள். மிகக் குறுகிய இடைவெளியில் ஒவ்வொரு திருமணமாக மூன்று மகள்களுக்கும் நல்ல இடத்தில் முடித்து வைத்தது மனதிற்கு நிம்மதியாக இருந்தது. ஆனால் அதெல்லாம் சொற்ப காலங்களே. 

மூத்த மகள் திருமணம் முடிந்த ஓராண்டிலேயே குழந்தைப் பேறு பெற்றதில் அனைவருக்கும் மகிழ்ச்சி. அதுவும் ஆண் குழந்தையானதால் அவள் மாமியாருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. குழந்தையை எடுத்துக் கொண்டு சென்னை சென்றவள் ஓராண்டு இங்கு வரவே இல்லை. அடிக்கடி பயணம் செய்தால் குழந்தைக்கு ஆகாது என்று. முடிந்த போது நாங்கள் சென்று பார்த்து வந்தோம். ஆனால் கொஞ்ச நாட்களிலேயே ஒரேயடியாக அப்படி வந்து இங்கு நிற்பாள் என்று நினைக்கவில்லை நாங்கள். முப்பது வயதுகூட ஆகாத என் மருமகனுக்கு மாரடைப்பாம். எவ்வளவோ போராடியும் காப்பாற்ற முடியவில்லை. பூவும், பொட்டுமாக மகாலட்சுமியாக அனுப்பி வைத்த மகள் வெறுமையாக , கைக்குழந்தையுடன், திருப்பியடித்த பந்தாக வந்து நின்றாள். குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து கிடந்து, கொஞ்சம், கொஞ்சமாக மீள முயற்சித்த போது அடுத்த இடி, இரண்டாவது டாக்டர் மாப்பிள்ளையும், சிறிது இரட்டை நாடி சரீரம் உடையவர், அதே மாரடைப்பில் , மேசிவ் அட்டாக்காம் எந்த அறிகுறியும் இல்லாமல் , ஒரு வாரிசைக் கூட விட்டு விடாமல் போய் சேர்ந்து விட்டார். இதோடு விட்டதா விதி.. மூன்றாவது மாப்பிள்ளையும் அதே இருதயக் கோளாறு  காரணமாக இருதய அறுவை சிகிச்சை செய்யும் போதே அதே மேசையின் மீதே உயிரை விட்டுவிட்டார்.  ஆறு மாதக் கைக்குழந்தையுடன் அவளும் திரும்பி வந்துவிட்டாள். ஆசை ஆசையாக மணமுடித்துக் கொடுத்த மூன்று மகள்களும் இன்று தனி மரமாக திரும்ப வந்து நிற்கிறார்கள். நம்ப முடிகிறதா உன்னால். இப்படியெல்லாம் கூட எங்காவது நடக்குமா? என் அம்மா இருக்கும்போது சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். ஏதோ எங்கள் குடும்பத்தில் சாபமாம்.. எங்கள் முன்னோரில் ஒருவர் ஒரு கண் தெரியாத பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி  கெடுத்து விட்டாராம். அந்தப் பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முன் இட்ட சாபம்தான் குடும்பத்தையே ஆட்டுவிக்கிறதாம்.  பலருக்கு வாரிசே இல்லாமல் போய்விட்டதாம்.  என் தாத்தா செய்த தான தருமங்கள்தான் எனக்கு ஐந்து வாரிசுகள் கொடுத்து சாப விமோசனம் பெற்றிருக்கிறோமாம். என் அம்மா இப்படி நினைத்து நிம்மதியாக போய் சேர்ந்துவிட்டார். ஆனால் இப்படி வேறு விதமாக அந்த சாபம் வேலை செய்யும் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை. மூன்றாவது மகளுக்கு கணவனின் ஆபீசிலேயே வேலை கொடுத்துவிட்டார்கள். மூன்று மகள்களும் இன்று வேலை பார்த்து தன்னையும், குழந்தையையும் காப்பாற்றிக் கொண்டாலும் அவர்கள் முகத்தில் நிரந்தரமாக தங்கிவிட்ட சோகம் என்னை வாட்டிக் கொண்டிருக்கிறது. செய்வதறியாது திகைத்து நிற்கும் வேளையில்   நான்காவது மகளுக்கு  திருமணம் செய்யும் தைரியம் வரவில்லை. என் மனைவி ஏதேதோ சாங்கியங்களெல்லாம் செய்த வண்ணம் இருக்கிறாள். என் மகனுக்கும் இருதயத்தில் ஓட்டை என்பதால், அவனால் நார்மலாக எந்த வேலையையும் செய்ய முடிவதில்லை. 

விதியின் சுழலில் சிக்கித் தவிக்கும் இந்தச் சூழலில் என்னால் வேறு எதைப் பற்றியும் சிந்திக்க முடியவில்லை. என்னை மன்னித்துவிடு நண்பா.

இப்படிக்கு
துரதிருஷ்டசாலி தனபாலன்.

இதற்குப் பிறகு கதிர் போட்ட சில தபால்களுக்கு பதிலே போடவில்லை தனபாலன். பலமுறை தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு தம் விருப்பத்தைச் சொல்லிக் கொண்டிருந்தான் கதிர். ஆம். தனக்கு இது போல மூடநம்பிக்கைகள் பற்றியெல்லாம் கவலையில்லை என்றும், தன் மனைவியும், மகனும்கூட தன்னைப்போலத்தான் என்றும் உறுதியாகக் கூறிக் கொண்டிருந்தான். படிக்கும் காலத்தில் எத்தனை முற்போக்குவாதியாக இருந்த தான் இப்படி அடிமேல் அடி பட்டு நம்ப வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது ஆச்சரியம்தான். ஆனால் மனைவி பரிமளா மட்டும் கடைக்குட்டி வள்ளியம்மைக்கு எந்த குறையும் வராது, கதிர் சொல்வது போல அவருடைய மகனுக்குத் திருமணம் செய்து கொடுத்து அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கலாம் என்று உறுதியாக இருந்தாள். வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தால் உள்நாட்டு சாபமெல்லாம் தீண்டாது என்று யாரோ சாமியார் சொன்னதாகவும் சொல்லி ஒப்புக் கொள்ளச் செய்தாள். நண்பனின் கட்டாயத்தினாலும், மனைவியின் அசாத்திய துணிச்சலாலும், வள்ளியம்மை இன்று இரண்டு குழந்தைகளுடன் சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள். வருடம் ஒரு முறைதான் பார்க்க முடியுமென்றாலும் அவள் நிம்மதியாக வாழ்வதை தொலைபேசி வாயிலாக அறிந்து மனம் அமைதியாக இருக்கிறது.

 பழைய தபால்களுக்குள் மூழ்கிப்போய் நேரம் போவதே தெரியாமல் இருந்த தனபாலன் மெல்ல எழுந்து போய் தண்ணீர் எடுத்துக் குடிக்கச் சென்ற போதுதான் மூன்று மகள்களும் ஏதோ ஒரு வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தார். பகல் முழுவதும் கடமைகளுடன் உழல்வதால் மறைந்து கிடக்கும் தனிமைச் சோகம் இரவானால் எழுந்து நின்று மிரட்டுவது போல, அதனை விரட்ட அவர்கள் எதிலோ மனதைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த 20 ஆண்டு காலமாக பார்த்து சலித்துப் போனதுதான் என்றாலும், அவர்களுக்கு மறுமணம் செய்ய முயற்சிக்காமல் விட்டுவிட்டது பெரும் தவறுதான் என்று உள்மனம் சாடியது. பல நாட்களுக்குப் பிறகு அன்று நண்பன் கதிருக்கு தபால எழுத வேண்டும் என்று மனம் துடித்தது.

உயிரினும் மேலான அன்பு நண்பனுக்கு,

நலம். நலமறிய ஆவல். பல ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஏனோ உன்னை ஆரத்தழுவி அமைதி கொள்ள மனம் ஏங்குகிறது கதிரு. என் வாழ்நாளின் பாதிக்கும் மேற்பட்ட காலங்களை முழுமையாக தின்று கொண்டிருந்த அந்த சோகம், உன்னுடைய பரோபகார துணிச்சலான முடிவினால்  சற்று குறைந்திருக்கிறது. என் கடைக்குட்டி, வள்ளியம்மையின் தலையெழுத்தையே மாற்றியமைத்துவிட்டாய்! இன்று அவள் உன் (மரு)மகளாக மகிழ்ச்சியாக வாழ்வதில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கும்தான். உன்னதமான ஒரு நட்பின் அடையாளமாக இருக்கும் நீ என் மனதில் இமய மலையென உயர்ந்து நிற்கிறாயப்பா.. என் மூன்று பெண்களுக்கும் மறுமணம் செய்து வைத்திருந்தால் இது போலவே எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்திருப்பார்களோ என்று இப்போதுகூட உள்ளம் துடிக்கிறது. காலம் கடந்த பின்பு ஞானம் வந்து என்ன பயன்? சரித்திர ஆசிரியராக எத்தனையோ மாணவர்களுக்கு உலக நாயகர்களின் சரித்திரங்களையெல்லாம் அலசி ஆய்ந்து கற்பிக்க முடிந்த எனக்கு, என் பிள்ளைகளுக்கு அவர்களின் பெயர்களை மட்டுமே சூட்டி அழகு பார்க்க முடிந்தது. அவர்கள் தலையெழுத்தை மாற்றியமைக்கும் வல்லமை இல்லாமல் போனதே .... எது எப்படியோ உன் மூலம் என் இறுதி காலம் ஓரளவிற்கு அமைதியாகக் கழிந்து கொண்டிருக்கிறது. அதற்கு உனக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் நண்பா..


அசதியில் கண்ணயர்ந்துவிட்ட மனைவி பரிமளா, திடீரென்று விழிப்பு தட்ட கணவன் அருகில் இல்லாதது கண்டு மின்விளக்கைப் போட்டு மணியைப் பார்த்தவள், இரவு 1 மணி ஆனதைக் கண்டு அதிர்ச்சியுடன், மாமா இன்னுமா தூங்க வரவில்லை, எப்பொழுதும் இவ்வளவு நேரம் பண்ண மாட்டாரே என்று எண்ணியவள், ரொம்ப நாட்களாக தன் மனதில் புதைந்து பாரமேற்படுத்திக் கொண்டிருக்கும் அந்த இரகசியத்தை இன்றாவது சொல்லிவிட வேண்டும் என்று முடிவு செய்தாள். பல முறை முயற்சி செய்தும் இத்தனை ஆண்டுகளில் அதற்கான வாய்ப்பு அமையாமலே போனது வேதனைதான். இன்று சொன்னால் மாமா எப்படி எடுத்துக் கொள்வாரோ தெரியவில்லையே .... என்ன ஆனாலும் சொல்லிவிடுவது என்ற முடிவுடன் மெல்ல எழுந்து கணவனின் நூலக அறைக்குச் சென்றவள் அங்கு அவர் மேசை விளக்கின் ஒளியில் கையில் பேனாவுடன் கடிதம் எழுதிக் கொண்டிருந்தவர், அப்படியே தலையை மேசையின் மீது வைத்து படுத்திருந்தார்.. எப்பொழுதுமே அது போல ஓய்வெடுப்பது மாமாவின் வழமைதான் என்பதால் தொடர்ந்து பேச ஆரம்பித்தாள். 

“மாமா.. ஏங்மாமா, தூங்கிட்டீங்களா. சாப்புட்டீங்களா இல்லையா.. ஒரே அசதி கண்ணசந்துப்புட்டேன். நான் சொல்லப் போறத கோபப்படாம கொஞ்சம் பொறுமையா கேளுங்க மாமா.  உங்ககிட்ட ரொம்ப நாளா ஒரு விசயம் சொல்ல நினைச்சு முடியாம தள்ளிப் போட்டு என் மனபாரத்தை ஏத்திக்கிட்டே இருக்கேன். ஆனா இன்னைக்கு சொல்லியே ஆகோணும்னு என் மனசு ஏனோ கிடந்து தவிக்குது மாமா.. நம் கடைக்குட்டி வள்ளியம்மை பிறந்த நேரத்தில் நீங்க ஒரு முக்கியமான மீட்டிங்னு சென்னை போயிட்டீங்க இல்லையா. அப்ப என் தம்பி மனைவிக்கும் பிரசவ நேரமில்லையா. ஒரே நாளில் இரண்டு பேரும் பிரசவத்திற்காக ஆஸ்பத்திரிக்குப் போனதும், அங்கு தம்பியின் மனைவியும் , குழந்தையும் அதில் இறந்து போனதும் உங்களுக்குத் தெரியுமில்லையா.. மாமா.. எனக்கும் அப்படித்தான் இரண்டு வருடம் தெரியும். ஆனால் என் மனதில் மட்டும் ஏதோ ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது.. ஒரு முறை என் தம்பி வாய் தவறி எதையோ உளறப் போக என் சந்தேகம் ஊர்ஜிதமாகிவிட்டது.. ஆம், பிரசவத்தின்போது இறந்த குழந்தை நம்முடையது, தம்பியின் மனைவி இறந்ததாலும், நானும் குழந்தை இறந்துவிட்டது தெரிந்தால் வேதனைப் படுவேன் என்றும் நினைத்து, என் தம்பி எதைப் பற்றியும் யோசிக்காமல் நர்சிடம் பணம் கொடுத்து அவன் குழந்தையை நம் குழந்தையாக அருகில் போட்டுவிட்டு இறந்த நம் குழந்தையை அவன் குழந்தை என்று சொல்லிவிட்டான். எனக்குத் தெரிந்தவுடன் உங்களிடம் சொல்லலாம் என்றுதான் இருந்தேன். நீங்கள் தம்பியிடம் கோபப்படுவீர்களே என்ற அச்சத்தில் தள்ளிப் போட்டேன். நீங்கள் மற்ற குழந்தைகளைக் காட்டிலும் வள்ளியம்மை மீது அதிகப்படியாக பாசம் வைத்திருந்ததால், இந்த விசயத்தைச் சொல்லி குழப்பம் ஏற்படுத்த வேண்டாமே என்று அமைதி காத்தேன். ஆனால் திருமணம் என்று வந்த போது நீங்கள் ரொம்பவும் பயந்த போதாவது சொல்லலாம் என்றால் மாப்பிள்ளை வீட்டில் தெரிந்தால் திருமணம் தடைபடுமோ என்று கவலைப்பட்டேன்.. நீங்களோ எதையும் மறைக்க விரும்ப மாட்டீர்கள். அதனால்தான் பிற்பாடு சொல்லிக்கொள்ளலாம் என்று  தைரியமாக  கவலைப்படாமல் திருமண ஏற்பாடுகளைச் செய்யத் துணிந்தேன்.. உங்களிடம் இவ்வளவு நாட்கள் இதை மறைத்தது தப்புதான் மாமா.. எங்கே நீங்கள் உயிராக நினைக்கும் நம் கடைக்குட்டியை வெறுத்து விடுவீர்களோ, அவள் தாங்க மாட்டாளே என்ற அச்சமே என்னை சொல்ல விடாமல் தடுத்துவிட்டது மாமா.. இதற்கு மேலும் அந்த ரகசியத்தைக் காப்பாற்றும் துணிச்சல் எனக்கு இல்லை சாமி.. என்னை மன்னிசிடுங்க மாமா.. இதுக்கு நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் நான் வாங்கிக்கறேன்.. மாமா.. மாமா.. ஏன் மாமா பேச மாட்டீங்கறீங்க.. கோபமா.. என்று சொல்லி உலுக்கியவள், கணவனின் தலை சாய்ந்து கிடக்கவும், அதிர்ச்சியில் கத்தவும் வாய் வராமல் நின்றிருந்தாள்....

நன்றி : திண்ணை

1 comment:

  1. // சரித்திர ஆசிரியராக எத்தனையோ மாணவர்களுக்கு உலக நாயகர்களின் சரித்திரங்களையெல்லாம் அலசி ஆய்ந்து கற்பிக்க முடிந்த எனக்கு, என் பிள்ளைகளுக்கு அவர்களின் பெயர்களை மட்டுமே சூட்டி அழகு பார்க்க முடிந்தது. அவர்கள் தலையெழுத்தை மாற்றியமைக்கும் வல்லமை இல்லாமல் போனதே.... //

    உண்மையை அறியாமல் சுமைதாங்கி சாய்ந்து போனதே...

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...