Friday, May 10, 2013

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (11)பவள சங்கரி
விட்டுக் கொடுத்தல் என்னும் வேதம்!
அனைத்து சமரசமும் கொடுத்துப் பெறுவது என்ற அடிப்படையில் இயங்குவது, ஆனாலும் அடிப்படையில் எந்த கொடுக்கல், வாங்கலும் இருக்க முடியாது. எந்த சமரசமும் சரணடைவதையையே அடிப்படையாகக் கொண்டது. காரணம் இவையனைத்தும் கொடுப்பதில் மட்டுமே உள்ளதேயன்றி எடுப்பதில் அல்ல…
மகாத்மா காந்தி
சில உறவுகள் நாம் விரும்பி ஏற்பது, சில உறவுகள் நாம் பிறக்கும்போதே தானாகவே அமைவது. பல நேரங்களில் உடன் பிறந்தவர்கள், பெற்றவர்கள் என்று தானாக அமைந்த உறவுகளின் மன வேறுபாடுகளைக்கூட அனுசரித்துப் போகும் நமக்கு, நாமாக விரும்பி ஏற்றுக் கொள்ளும் உறவுகள் மற்றும் நட்புகளின் சிறு தவறுகளைக்கூட ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இரு கைகளையும் தட்டினால்தான் ஓசை. ஒரு கை ஓசையாக இருக்கும் பிரச்சனைகள் வெகு விரைவிலேயே நீர்த்துப் போய்விடுவதும் கண்கூடு.

வங்கியில் காசோலையைக் கொடுத்து ஞாபகக் குறியையும் பெற்றுக் கொண்டு காத்திருக்கும் வேளையில் இருக்கையின் மறு முனையில் எனக்குத் தெரிந்த பெண் ஒருவரைப் பார்த்தேன். அவர் முகத்தில் ஏனோ ஒரு வாட்டம் தெரிந்தது. இரண்டு வருடமாகக் காதலித்தவரை சமீபத்தில்தான் பெரும் போராட்டத்திற்குப் பிறகு மணந்து கொண்டவர். இருவரும் கணினித் துறையில் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்கள். அவர் அருகில் சென்று நலம் விசாரித்தேன். ‘ஏதோ இருக்கிறேன்’ என்பது போல பதில் வந்தது. கணவரும் மற்றும் குடும்பத்தாரும் நலமாக இருக்கிறார்களா என்று விசாரித்தேன். அதற்கும் ஒற்றை வரியில் பதில் வந்தது. ஏதோ உடல் நலக் கோளாறாக இருக்குமோ என்று சந்தேகமாக இருந்தது. காரணம் அவர் எப்பொழுதும் கலகலவென பேசிக்கொண்டிருப்பவர். அடுத்தடுத்து எங்கள் இருவரின் ஞாபகக் குறி (டோக்கன்) எண்ணையும் அறிவிக்கவும் இருவரும் ஒன்றும் பேசாமல் பணத்தைப் பெற்றுக்கொண்டு வெளியே வந்தோம். மரத்தடியில் நிறுத்தியிருந்த தன்னுடைய இரு சக்கர வாகனத்தை எடுக்கப் போனவரை நெருங்கி, எடுத்த எடுப்பில் ‘கணவரிடம் ஏதும் பிரச்சனையா’ என்றேன் மனம் கேட்காமல். இதை சற்றும் எதிர்பாராதவர், என் கண்களை உற்று நோக்கியவாரு ஒரு நிமிடம் யோசித்தவர், வண்டியை நிறுத்திவிட்டு மீண்டும் மரத்தடிக்கே வந்தார். பின்னாலேயே சென்ற நான் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டேன் அவர்கள் திருமணத்திற்கு நானும் என்னால் ஆன முயற்சியை செய்த உரிமையுடன்.
‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.. ஆனால் வீட்டில் நிம்மதி இல்லாதலால் ஆபிசில் வேலை சரியாக பார்க்க முடியவில்லை’.
‘என்ன அப்படிப் பிரச்சனைன்னு நான் தெரிந்து கொள்ளலாமா’ என்றேன்.
சற்று தயங்கியவர், மளமளவென கொட்ட ஆரம்பித்துவிட்டார். “அவர் கொஞ்சமும் அனுசரித்துப் போக மாடேங்கிறார். என்னமோ அவர் மட்டும் வேலைக்குப் போவது போலவும், நான் வீட்டில் நிம்மதியாக இருப்பது போலவும், எதற்கெடுத்தாலும் என்னையே அதிகாரம் செய்கிறார். ஏதோ நான் அவரோட அம்மா மாதிரியும், இவருடைய தேவைகள் அனைத்தையும் நானே கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார். என்னைப் பற்றி துளியும் கவலைப்படுவதில்லை, வீட்டு வேலைகளை பங்கிட்டுச் செய்யத் தயங்குகிறார். நான் அவமானப்படுத்தப்படுவது போல உணருகிறேன். இதனாலேயே ஆபிசிலும் வேலையை சரியாகச் செய்ய முடியவில்லை” என்றார்.
‘அவ்வளவுதானா, இன்னும் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா? உன்னை சரிவர கவனித்துக் கொள்வதில்லையா அவர்?’ என்றேன் நிதானமாக.
உடனே சட்டென்று, ‘அப்படியெல்லாம் இல்லை. என்மேல் உயிரையே வைத்திருக்கிறார். நான் கொஞ்சம் சோர்ந்திருந்தாலும் தவித்துப் போய்விடுவார்’ என்றார்.
நானும், ‘நீ முன்னால் சொன்ன அனைத்தையும் அப்படியே அவர் கோணத்திலிருந்து, அவர் சொல்வதாக நினைத்துப் பாரேன், அவரிடம் மனம் விட்டுப் பேசினாயா?’ என்றேன்.
சற்று நேரம் அமைதியாக யோசித்தவர், ‘ஆமாம் அவரும் என்னை இப்படி நினைக்கலாமே.. ஆனால் ஒரு நாளும் இப்படியெல்லாம் அவர் என்னை திட்டுவதற்கு நினைத்துக்கூடப் பார்த்ததில்லை’ என்றவர் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தார். சட்டென கண்ணில் நீர் கலங்க ‘நான் தான் தவறு செய்துவிட்டேனோ. அவருடைய சுபாவம் அதுதான் என்பதைப் புரிந்து என் ஈகோவை கொஞ்சம் விட்டுக் கொடுத்து, அவரிடம் என் நிலையை மெல்ல மெல்லப் புரிய வைத்திருக்க வேண்டும். என் மேல் இத்தனை அன்பு வைத்திருப்பவர் என் சிரமத்தையும் புரிந்து கொள்வார். நான் எப்படி யோசிக்காமல் போனேன்’ என்று கூறியவாறு கண்களை துடைத்துக் கொண்டவரின் முகத்தில் தெளிவைக் காண முடிந்தது. விட்டுக் கொடுக்கும் அந்த மனோபாவம் வந்த மறு நொடியே அவர் மனத்திலிருந்த குழப்பம் நீங்கி, நிம்மதி பிறந்தது தெரிந்தது. கட்டாயம் இனி அவர் மன நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுகிற மாற்றம் அவருடைய வாழ்க்கையை உயர்த்தும் என்பதில் ஐயமில்லை.
ஒவ்வொரு உறவுகளுக்குள்ளும் ஒரு எல்லைக்கோடு அவசியம் தேவைப்படுகிறது. மனிதருக்கு மனிதர் அது வித்தியாசப்படலாம். அதனை உணர்ந்து அந்த எல்லையை மீறாமல் நடந்து கொள்வதே, குடும்பத்தில் நல்ல அமைதியான சூழலை ஏற்படுத்தக்கூடியது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் விட்டுக்கொடுத்து வாழப்பழகினால் வாழ்க்கையில் அமைதி நிலைத்திருக்கும் என்பதிலும் ஐயமில்லை. நாம் உண்மையாக அன்பு செலுத்துபவரிடம் அதிகக் கோபம் காட்டவோ அல்லது வெறுப்பை உமிழவோ இயலாது. கோபத்தினால் ஏற்படும் விவாதமும், விதண்டாவாதமும், அந்த அன்பின் அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்துவிடும். நாம் அன்பு செலுத்துபவர் நம்மீது தேவையில்லாத கோபத்தை வெளிப்படுத்தும்போது, இடையில் ஒரு நொடி அவர் நம்மீது அன்பு மழை பொழிந்த அந்த இனிய தருணங்களை நினைவில் கொண்டுவந்தால் போதும். அந்த சூழலே நொடியில் மாறிவிடும். பின்பு மெல்ல அவர் கோபப்பட்டதன் சூழலைக் கேட்டறிந்து அதற்கான உபாயம் மூலம் நம்மால் முடிந்த அளவிற்கு அதனைத் தீர்க்கப் பார்க்கலாம்.  இந்த  இடத்தில் நமக்கு வேண்டியதெல்லாம் ‘நான்’ என்ற அந்த எண்ணம் மறைந்து நாம் என்ற உணர்வு மேலிடல்தான்.  இது அனைத்து உறவுகளுக்கும் பொருந்தும். இந்த உணர்வே அவர்தம் கோபத்தையும், வேகத்தையும் குறைக்க முயலலாம். ஆக, நெருங்கிய உறவோ, நல்ல நட்போ எதுவாயினும் அடிப்படையான அந்த அன்பு பலப்பட வேண்டுமாயின் விட்டுக் கொடுத்தல் என்ற அந்த வேதத்தை கடைபிடிப்பதே சிறந்த யுக்தியாகும்.
படங்களுக்கு நன்றி:

நன்றி ; வல்லமை வெளியீடு

5 comments:

 1. அனைவரும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய யுக்தி... அதுவும் இந்தக் காலத்தில அதிகமாகவே வேண்டும்...

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. அன்பின் திரு தனபாலன்,

   தங்களுடைய தொடர்ந்த ஊக்கமான வார்த்தைகளுக்கு நன்றி நண்பரே.

   அன்புடன்
   பவள சங்கரி

   Delete
 2. 'ஞாபகக் குறி' என்றால் என்ன?

  விட்டுக்கொடுத்தல் என்பது தவறான பயன்பாடோ என்று தோன்றுகிறது. புரிதலுக்குப் பதிலாக விட்டுக்கொடுத்தலை அதிகமாக உபயோகிக்கிறோமோ? புரிதல் இருந்தால் விட்டுக்கொடுக்காமலேயே இணங்கிப்போகலாமே? அவரவர் எல்லைகளை மதித்து நடந்தால் விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லையோ?

  ReplyDelete
  Replies
  1. அன்பின் திரு அப்பாதுரை சார்,

   வணக்கம். டோக்கன் (Token) என்பதையே ஞாபகக் குறி என்று தமிழில் சொல்வோம் இல்லையா.

   விட்டுக் கொடுத்தல் என்பது உண்மையிலேயே சரணடைவதுதான் என்று காந்திஜி சொன்னதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். சில நேரத்தில் கசப்பான மாத்திரைக்கு சக்கரை கோட்டிங் செய்து சாப்பிடுவதில்லையா அப்படித்தானே இதுவும்.. நம் ஈகோ எளிதில் சம்மதிக்காத விசயம் இந்த சரணடைதல். ஆனால் ஆழ்ந்த அன்பு வந்துவிட்டால் எதுவும் சாத்தியம் என்பது நடைமுறையில் நாம் காணும் உண்மை. புரிதல் வருவதற்கு முன்பு இந்த விட்டுக் கொடுத்தல் தேவைப்படுகிறது. புரிதல் என்பது முழுமையான அன்பின் அடையாளம். அவரவர் எல்லையை மதித்து நடந்தாலும், ஒரு கட்டத்தில் விட்டுக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாகவே தோன்றுகிறதுங்களே....

   அன்புடன்
   பவள சங்கரி

   Delete
  2. tokenக்குத் தமிழ் ஞாபகக்குறியா! நன்றி. எனக்கு tokenஏ போதும்:)

   விட்டுக்கொடுத்தலில் ஒரு உயர்வு/தாழ்வு கலந்திருக்கிறது. இன்னொன்று ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தால் அங்கே விட்டுக்கொடுப்பதற்கும் பொருளில்லாமலே போய்விடுகிறது. விட்டுக்கொடுத்தலின் காரணம் நம் மீதும் அடுத்தவர் மீதும் உணர்ந்தே வீசப்படும் எதிர்பார்ப்புகளின் திணிப்பும் எதிர்ப்பும் அல்லவா? இன்னொருவரை உண்மையிலேயே மதிக்கையில் எதிர்பார்ப்புகளைத் திணிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது என் எண்ணம். உணராமல் வீசப்பட்ட எதிர்பார்ப்புகளை உடனே புரிந்துகொள்ளவும் முடியும்.

   விட்டுக்கொடுப்பது என்ற செயலைப் பெண்களிடம் மட்டுமே அதிகம் எதிர்பார்க்கிறோம், பெண்களுக்கு மட்டுமே அதிகம் சொல்லிக்கொடுத்து வளர்க்கிறோம், பெண்கள் விட்டுக்கொடுத்துப் போகவேண்டும் என்ற சமூக எதிர்பார்ப்பைக் கட்டற்று வளர்த்துவிட்டோம்.. இந்தச் செயலில் எனக்குப் பிடித்தமில்லாமல் போனதன் காரணங்கள் :)

   விட்டுக்கொடுப்பது என்பது அடிமைத்தனத்தையும் வளர்க்கிறது. ஒருமுறை விட்டுக்கொடுத்தால் அங்கே இழப்பது சுயமரியாதையும் கூட. விட்டுக்கொடுத்தவர் தொடர்ந்து விட்டுக்கொடுக்க நேர்கிறது.

   காந்தி சுதந்திர உணர்வை விட்டுக்கொடுக்கவேயில்லை. விட்டுக் கொடுப்பதில் காந்திஜிக்கு நம்பிக்கை இருந்ததாக என்னால் நம்ப முடியவில்லை. பேச்சுக்கு அவரும் நிறைய சொல்லியிருக்கிறார் என்பதும் உண்மை. தன் மகவின் மதம் மீறியக் காதலை ஏற்க மறுத்தது ஒரு சான்று.

   புரிதலை உண்டாக்கி அங்கே எதிர்பார்ப்புகளைக் கட்டுப்படுத்துவதும் தேவைப்பட்டால் தானே உதவி புரிந்து, 'அது விட்டுக்கொடுப்பது அல்ல' என்ற தெளிவை ஏற்படுத்துவதும் நாட்பட்ட உறவுக்கும் நட்புக்கும் வேர்கள்.

   Delete