Thursday, August 22, 2013

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (24)


பவள சங்கரி
அனைத்து முக்கியமான தொழில்களைப்போலவே வெற்றியைப் பெறுவதற்குத் தடைகள் அவசியமாகிறது. வெற்றி என்பது பல்வேறு போராட்டங்கள் மற்றும் எண்ணிலடங்கா தோல்விகளின் பிறகே கிடைக்கக்கூடியது.
இருண்ட பொழுதுகளில், ஒவ்வொரு தோல்வியும் வெற்றியை நோக்கிய அடுத்த படி, போலி எது என கண்டறியப்படும் ஒவ்வொன்றும் உண்மையை நோக்கி வழிநடத்துகிறது, எந்த ஒரு தடையும் ஒரு நாள் மறைந்தேவிடும் அதே வேளையில் அமைதியும் நிறைவுமான பாதைக்கு வழிநடத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 
ஓக் மேண்டினோ
 ogmandino164003
‘ரிஸ்க் எடுக்குறதுன்னா எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி’

மேலே இருக்கும் வசனம் திரைப்படங்களில் நகைச்சுவையாக சொல்லப்பட்டாலும், வாழ்க்கையின் வெற்றிக்கு இந்த ‘ரிஸ்க்’ என்கிற ‘அபாயம் உண்டாக்கும் நிலை’ பெரும் பங்காற்றுகிறது என்பதே உளவியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. சுருங்கச் சொன்னால் நம்முன் நிற்கும் இமாலயப் பணியும் துணிவுடன் எதிர்கொள்ளும்போது சிறு கல்லாகிவிடும் என்பதே நிதர்சனம். அபாயத்தை எதிர்கொள்வது என்பது, நடக்கும்போது இடறி விழுவதில் ஆரம்பித்து, கட்டுப்பாடிழக்கும் இரு சக்கர வாகனம் அல்லது விபத்து ஏற்படுத்தும் உல்லாச உந்து வரை அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பதால் அதையெல்லாம் அச்சத்தினால் நிறுத்தி வைக்க முடியுமா? நிறுத்தி வைத்தால் வாழ்க்கைச் சக்கரம்தான் தொய்வில்லாமல் ஓட முடியுமா?
ஒருவர் எந்த அளவிற்கு ஒரு கடினமான காரியத்தில் துணிந்து இறங்குகிறாரோ, அந்த அளவிற்கு அது அவர்களுடைய மன திருப்தியிலும், மகிழ்ச்சியிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதே வல்லுநர்களின் கருத்து. பெரும்பேறு (அதிர்ஷ்டம்) ஒருவரை வழிநடத்துவதில்லையா என்ற கேள்வி எழத்தான் செய்யும். பெரும்பேறு பெற்றவர்களே தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பை, அது எத்தகைய அபாயமான சூழலாக இருந்தாலும் அதைத் துணிவுடன் எதிர்கொள்வார்கள். மிகப்பெரும் காரியங்களைச் சாதிப்பவர்கள் இது போன்ற அபாயமான சூழலை துணிவுடன் எதிர் கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. அப்படிப்பட்ட துணிச்சல் பெரும் மன நிறைவை அளிக்கக்கூடியது என்பதும் கண்கூடு.
துணிவுடன் ஒரு அபாயமான காரியத்தை எதிர்கொள்ளும்போது அதை புத்திசாலித்தனமாகக் கையாள்வது மிக முக்கியமானது. இதில் எந்த அளவிற்கு பயிற்சி எடுக்கிறோமோ அந்த அளவிற்கு அது நமக்கு இயற்கையான குணமாகிவிட வாய்ப்பு அதிகம். இதற்கு நல்ல உதாரணம் குழந்தைகள். நடை பழகுவதற்குமுன் தவழ்ந்து செல்ல முயற்சிக்கிறது. ஓடுவதற்கு முன் நடக்கவும், இரு சக்கர வாகனத்திற்கு முன் சைக்கிள் ஓட்டுவது, பின் கார் ஓட்டுவது என்று ஒவ்வொன்றிலும் துணிவையே துணையாகக் கொண்டே பழகுகின்றது. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் கடந்து வரவேண்டிய அச்சத்தை முன்னெச்சரிக்கையுடன் கையாள்கிற அந்த வல்லமையே அக்குழந்தையை சாதிக்க வைக்கிறது. அடுத்து வரும் அதைக்காட்டிலும் பெரிதான காரியங்களுக்கு படிப்பினையாகவும் அது அமைந்துவிடுகிறது. இதன் காரணமாக அச்சம் முற்றிலும் விலகிவிடுகிறது.
எந்த ஒரு காரியத்தையும் அது பற்றிய தெளிவான விழிப்புணர்வுடன் அணுகும் போது அச்சம் என்ற ஒன்று ஒரு அடி தள்ளியே நிற்கும். ஒரு புதிய பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் அபாயமான காரியத்தில் இறங்கும்போது, தேவையான தகுதிகள் அனைத்தும் இருந்தும் தான் நிராகரிக்கப்படும்போது அதற்கான காரணம் புரியாத சூழலில் திரும்பவும் முயற்சி செய்ய தைரியம் வராது. புத்திசாலித்தனமாக நன்கு சிந்தித்து ஒரு காரியத்தில் ஈடுபடவில்லையென்றால் நல்ல முடிவை எதிர்பார்க்க முடியாததோடு, அடுத்த முயற்சிக்கான துணிவையும் பெறுவதில் சிரமமாகிவிடும். அதனால் படிப்படியாகக் கடந்து உயரத்தை அடையும் கலையைக் கற்க வேண்டியது அவசியம். நாளடைவில் அதுவே வழக்கமாகிவிடும். அதாவது, முதலில் ஆய்வு மேற்கொண்டு, திட்டமிட்டு, சோதித்து, மதிப்பீடு செய்து காரியத்தைத் தொடங்கினால், அதன்பின் தொட்டதெல்லாம் பொன்னாகும் வாய்ப்பும் பெருகும். பொதுவாகவே நம் ஒவ்வொருவருக்கும் முன்னேறிச்செல்ல ஒரு உந்து சக்தி தேவையாக இருக்கிறது. அச்சம் என்ற அந்த ஒன்றை விட்டு விலகினால் மட்டுமே துணிவு என்ற ஒன்று நெருங்கி வரும். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் அறியாமையின் காரணமாக போராடும் ஒரு விசயத்தில் நாம் சரியான பாதையில் சென்று அதன் மூலம் சிறந்து விளங்குவதை உணரும்போது அதுவே நமக்கு நல்லதொரு ஊக்கமாக அமையக்கூடும்.
துணிந்து ஒரு அபாயமான காரியத்தில் ஈடுபடுவது என்பது முன்னேற்றத்தின் ஒரு முக்கியமான அம்சம். ஆர்வம், குறிக்கோள் மற்றும் விருப்பம் போன்றவைகளைத் தக்க வைப்பதற்கு இது மிகவும் அத்தியாவசியமாகிறது. எப்படியிருந்தாலும், எப்பொழுதும் தம் செயல்களின் பலாபலன்கள் குறித்த விழிப்புணர்வுடன் புத்திசாலித்தனமான சிந்தைகளைக் கொண்டாடவும் கற்றுக்கொள்ள வேண்டும்!
அனைத்துமாக இருக்க முடியும் நம்மால்!
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும், நாம் எவ்வளவுதான் தயார் நிலையில் இருந்தாலும், மிகச் சிறந்த மற்றும் மிக மோசமான காரியங்கள் என இரண்டும் நடக்கக்கூடும். இதற்கு, பெரும்பேறு, நேரம், கர்மபலன் என எதை வேண்டுமானாலும் காரணம் காட்டலாம். இதில் எவரும் விதிவிலக்கல்ல என்பதே நிதர்சனம். அதே சமயம் செயலூக்கம் கொண்ட ஒரு வாழ்க்கையை வாழ முற்படுவதால் நம் வாழ்க்கையை நாமே தேர்ந்தெடுப்பவர்களாகிறோம். நம் சொந்த முடிவுகளை நாமே எடுக்கும் வகையில், ஏதோ சில நேரங்களில் சூழ்நிலை கைதிகளானாலும், நம் படகை நாமே வழிநடத்தி செலுத்துபவர்களாகிறோம். இதனாலேயே நம் வருத்தங்களும் குறைவாகவே இருக்கிறது. நம் வாழ்க்கை நாளை முடிவிற்கு வரப்போகிறது என்று தெரிந்தால்கூட, நாம் விரும்பியபடி நம் வாழ்க்கையை வாழ்ந்தோம் என்ற மன நிறைவு நம்மிடம் இருக்கும்.
இப்படி ஒரு பயனுள்ள வாழ்க்கையை வாழ முற்படுபவர்கள், தம்முடைய முடிவுகளை எடுக்கும்போது பொறுமையைக் கடைபிடிப்பதோடு, முதன்மையாகச் செய்ய வேண்டிய காரியங்களிலும் முழு கவனம் செலுத்துபவர்களாக இருப்பார்கள். கடினமான உழைப்பும், நேர்மையும் கடைபிடித்தாலும், அதன் முக்கியத்துவம் உணர்ந்து சில விட்டுக்கொடுத்தல்களும் செய்யத்தான் வேண்டியிருக்கும். எந்த அளவிற்கு பயனுள்ள ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு, தொழில் சம்பந்தமாகவோ, குடும்ப உறவுகள் அல்லது நிதி நிலை குறித்ததாகவோ, ஆரோக்கியம் அல்லது எதிர்பாராத திடீர் திருப்பங்கள் என, இடையில் இடறுகிற பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக் கணிப்பது உள்ளிட்ட அனைத்து பலாபலன்களையும் பெற முடியும்.
வாழ்க்கையை அதன் போக்கிலேயே சென்று வாழ நினைப்பவர்கள் பெரும்பாலும் சூழ்நிலைக் கைதிகளாகவே வாழ வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக நேரிடுகிறது. பெரும்பாலும் இடறுகிற தடைகளை நீக்குவது மட்டுமே வேலையாக இருக்க வேண்டியிருக்கும். பயனுள்ள வாழ்க்கையை வாழ முற்படாதவர்கள், திட்டமிடல், முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்படல், தன் முழு திறமையை வெளிப்படுத்துதல் போன்ற அனைத்தையும் இழப்பதன் மூலமாக தன் வாழ்க்கைக்குத் தான் பொறுப்பாளி அல்ல என்ற தீர்மானத்தினால் வேதனைக்கு ஆளாகிறார்கள். அதைவிடுத்து, நம் வாழ்க்கையை சற்றே பயனுள்ள வகையில் மாற்றியமைத்துக்கொண்டு வாழ ஆரம்பித்தால் நாம் கால விரயம் செய்வது, தள்ளிப்போடும் பழக்கம் என அனைத்திலிருந்தும் விடுபடலாம். கடுமையாக உழைப்பதைக் காட்டிலும், புத்திசாலித்தனமாக திட்டமிட்டு உழைப்பதின் பலன் மிகவும் அதிகம் அல்லவா.
இத்தகைய பெருமைமிகு பயனுள்ள வாழ்க்கையை வாழ்வது எங்கனம்? அதற்கான திறவுகோல் எது?
முதலாவதாக அன்றாடம் தெளிவாகச் சிந்திக்கும் மனம் தேவை. அடுத்து இரண்டாவதாக இந்த தெளிவான மனதிற்கான முதன்மையான பணிகளை ஒழுங்குபடுத்தி, நம் கவனத்தை திசை திருப்பக்கூடிய நூற்றுக்கணக்கான தடைகளை விலக்கி வைக்க வேண்டும். மூன்றாவதாக, அதனினும் மிக முக்கியமானதைத் தேர்ந்தெடுத்துத் தொடர வேண்டும். இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதாக இருப்பினும் மிக எளிமையானதும், சகதி வாய்ந்ததுமான வழிமுறைகள் என்பதில் ஐயமில்லை. இடையில் அவசரமான பணி போன்ற போர்வையில் வந்து மிரட்டும் சிலவற்றை கண்டறிந்து ஒதுக்காவிட்டால் அவைகள் எளிதாக நம் நேரத்தை உண்டு ஏப்பம் விட்டுவிடும். மிக முன்னெச்சரிக்கையாக செயல்பட்டால்தான் கால விரயத்திலிருந்து தப்பிக்க இயலும். அவசரமான மற்றும் குழப்பமான மன நிலையில் திட்டமிடுதலைத் தவிர்த்தல் மிக முக்கியமானது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வித்தியாசமான பொறுப்புகளும், முன்னுரிமைகளும் மற்றும் குறிக்கோளும் இருக்கும். அன்றைய முக்கியமானத் தேவைகளை பொறுமையுடன் பட்டியலிட்டு, முதன்மை பெற வேண்டியதை மறக்காமல் குறித்து வைத்துக்கொண்டு திட்டமிட்டால் வெற்றி நிச்சயம்தானே!
பயனுள்ள வகையில் நம் பொழுதைத் திட்டமிடல் என்பது ஒரு கலை. அதனை இரசித்து, ருசித்துச் செயல்பட்டால் வாழ்க்கையின் சுவையும் கூடும், வெற்றியும் நம்மை நாடி வரும்!
படத்திற்கு நன்றி:
நன்றி: வல்லமை

2 comments:

  1. திட்டமிடல் மிகவும் முக்கியம் தான்.
    நேரமேலாண்மை எதை முதலில் செய்வது எல்லாம் வாழ்க்கையில் பின்பற்றவேண்டியவைதான்.
    சிறந்த கட்டுரைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete