Friday, August 16, 2013

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (23)


பவள சங்கரி
tumblr_lxsk8jNp831qfwg0ho1_500
குணப்படுத்தும் வல்லமையாளராவோம்!
பல நேரங்களில் நம்மை அனைவரும் தாங்கிப் பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நம்மோடு பழகுபவர்கள் நமக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துபவர்களாகவும், அன்பைப் பொழிபவர்களாகவும் இருக்க வேண்டும் என்று ஏங்குகிறோம். ஆனால் யதார்த்த வாழ்க்கையில் இது எந்த அளவிற்கு சாத்தியமாகும் என்று சிந்திக்க வேண்டும். ஒன்று கொடுத்தால்தான் ஒன்றைப் பெற முடியும். அந்த வகையில் ஒருவருக்குத் தேவையான நேரத்தில் நம் உதவிக்கரங்களை நீட்டவும் தயங்கக்கூடாது. எந்த அளவிற்கு அடுத்தவரின் நம்பிக்கைக்கு உரியவராக நடந்துகொள்ள முடிகிறதோ, அந்த அளவிற்கே அவரும் நம்மீது நம்பிக்கை கொள்ள முடியும். இதற்காக நாம் பெரிய தியாகியாகவோ அல்லது அவரைவிட அறிவிலும், மனோவலிமையிலும் உயர்ந்து இருப்பவராகவோ அல்லது இருப்பதாக நடிப்பவராகவோ இருக்க வேண்டியத் தேவையோ இல்லை. ஆனால் அதற்காகச் சில குறுக்கு வழி முறைகளைப் பின்பற்றுவதுதான் மிகவும் சங்கடப்படுத்தக் கூடியதொரு செயலாகிவிடும். பொதுவாகவே, மனக்குழப்பத்திலோ அல்லது பிரச்சனைகளிலோ இருப்பவர்களுக்கு அறிவுரை சொல்வதைக்காட்டிலும், அவர்களுடைய பிரச்சனைகளுக்கு பொறுமையுடன், சிறிது செவி கொடுத்தால் போதும். மனபாரம் குறைந்து ஆறுதல் பெற முடியும். அத்தோடு இல்லாமல் தன்னுடைய வாழ்க்கையின் ஒரு மிக முக்கியமான நபராகவும் நினைக்கக்கூடும். தனக்காக எதுவும் செய்யக்கூடியவர் என்ற நம்பிக்கையுடன் நிம்மதி கொள்ளமுடியும்.

நம் மனதை அடக்கி வாசிக்கச் செய்யும் மற்றொரு வழி, தற்காலிகமாக நம் மனவோட்டத்தின் வேகத்தைக் குறைப்பதுதான். அதாவது அடுத்தவரைப் பற்றி அதிகமாக அலசி ஆராய்வதோ அல்லது அவரைப் பற்றிய ஒரு தீர்மானத்திற்கு வருவதோ என்று எதுவும் செய்யாமல் திறந்த மனதுடன் பழக ஆரம்பிக்கும்போது, நாம் உதவி செய்யும் வாய்ப்பிற்கும் தடையேற்பபடாது. அதிகமாக அதைப்பற்றிச் சிந்திக்க ஆரம்பிக்க முற்படும்போது, நமக்கு கால விரயம் ஆவதாக எழுகிற எண்ணம், நம்முடைய பொறுமையின்மையை வெளிக்காட்டி விடக்கூடும்.
சுகமும், துக்கமும் புகட்டும் பாடங்கள்!
திருமணம், குழந்தை பிறப்பு அல்லது வேறு எந்த விதமான கொண்டாட்டமோ – அல்லது பெருந்துக்கமோ, பேரிழப்போ, பெரும் விபத்தோ, நோய் அல்லது இறப்போ இப்படி எதுவாக இருந்தாலும் அதனைக் கூர்ந்து கவனித்தோமானால் உலகிற்கு எடுத்துச் சொல்லும் வகையில் அதிலிருந்து நம் வாழ்வை வளப்படுத்தக்கூடிய ஏதோ ஒரு பாடம் புலப்படும்.
சுனாமியில் சிக்கித் தவித்து எப்படியோ தப்பித்து ஒரு கூரையின் மீது அடைக்கலம் கிடைத்து, அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்று அறியாமல் உயிரை கையில் பிடித்துக்கொண்டிருக்கும் அந்த வேளையில் சட்டையின் உள்பகுதியில் இருந்த கைபேசி அதிசயமாக வேலை செய்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது அந்த நேரத்தில் அவருக்கு என்ன பேசத் தோன்றும் என்று எண்ணிப்பாருங்கள்! அவர் தனக்கு பணம் கொடுக்க வேண்டியர்கள் பற்றியோ அல்லது பங்குச் சந்தையில் தான் செய்திருக்கும் முதலீடு பற்றியோ சிந்திப்பாரா? இது போன்ற ஒரு மோசமான சூழ்நிலையில் ஒன்றே ஒன்று மட்டும்தான் முன்னால் நிற்க முடியும். அதுதான் ‘அன்பு’ என்பது. இதைத்தவிர வேறு எது நிற்க முடியும்? தான் சேர்த்து வைத்திருக்கும் சொத்தோ, பணமோ, அண்டை வீட்டாரிடம் போட்ட சண்டையோ, இழந்ததோ, மீட்டதோ என எதுவும் தோன்றாது. அன்பு.. அன்பு.. என்ற இந்த ஒன்றைத் தவிர வேறு எதுவும் ஒரு பொருட்டாகாது.
இன்னும் ஐந்து நிமிடத்தில் உலகம் அழியப் போகிறது என்று தெரிந்தால் என்ன நடக்கும்? உலகில் உள்ள அத்தனை மனிதரும் உடனே போனை எடுத்து தனக்கு நெருக்கமானவர்களிடம் அன்பைப் பொழிவதைத் தவிர வேறு என்ன செய்வார்கள். உண்மையான, கலப்படமில்லாத அந்த அன்பு வெளிப்படும் இல்லையா. திருமண நாளில் உள்ளப் பூரிப்புடன், கைகோர்த்து நடக்கும் சில தம்பதியரால் காலம் முழுவதும் அப்படியே ஏன் இருந்துவிட முடிவதில்லை . ஆரம்பத்தில் இருக்கும் நெருக்கம் போகப்போக குறைவதற்கான காரணம், அந்த விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையின் குறைபாடுதான் அல்லவா. உலகம் அழியப் போகிறது என்று தெரியவந்தால் நமக்குள் இருக்கும் அத்தனை மன வேறுபாடுகளும் நிமிடத்தில் மாறி, உண்மையான அன்பு வெளிப்பட முடியும்போது, மற்ற நேரங்களில் ஏன் அப்படி இருக்க முடிவதில்லை என்று சிந்திக்க ஆரம்பித்தாலே கோபமெல்லாம் பறந்துவிடும் அல்லவா.
தன் பெற்றோரின் சம்மதமில்லாமல் காதல் மணம் புரிந்த ஒரு பெண்ணின் பெற்றோர் அவளை சுத்தமாக விலக்கி வைத்திருந்தனர். சாலையில், வழியில் கண்டால்கூட முகம் திருப்பிச் செல்லும் அளவிற்கு கோபம் கொண்டிருந்தனர். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பெண்ணிற்கு மகப்பேறு உண்டானவுடன், அவளுடைய தாய்க்கு மகள் பாசம் வந்துவிட தந்தைக்குத் தெரியாமல் மகளுக்கு ஆதரவு கொடுத்தார். பேரன் பிறந்தவுடன் தாத்தாவிற்கும் பாசம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. குடும்பம் ஒரு வழியாக ஒன்று சேர்ந்தது. அவர்கள் இழந்தது ஐந்து ஆண்டுகால உறவை, பாசத்தை. இதை முன்பே யோசித்திருந்தால் அந்த தற்காலிக பிரிவு இருந்திருக்காதே. இதை ஏன் யோசிக்க முடியவில்லை அவர்களால்.. இதே போல கணவனைப் பிடிக்கவில்லை என்று பிரிந்துபோய் தாய் வீட்டோடு பத்து ஆண்டுகளாக இருந்த ஒரு பெண் தன்னுடைய கணவன் கேன்சர் வியாதியால் தனிமையில் கவனிக்கவும் ஆளில்லாமல் துன்பப்படுவது கண்டு மனம் பொறுக்காமல் அவனோடு சென்று சேர்ந்துவிட்டாள். வெகு எளிதாக இந்த இரு சம்பவங்களிலும் மனமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கோபம், வெறுப்பு, சகிக்க முடியாத தன்மை என அனைத்தும் அன்பு, பாசம் என்ற சொல்லில் அடிபட்டுப்போய்விட்டது. இவ்வளவு நாட்கள் இதெல்லாம் எங்கு ஒளிந்திருந்தது? இந்த உறவுகளின் அடிப்படையில் சாகாமல் இருந்த அந்த அன்பு விழித்துக் கொண்டிருந்தது. இதை முன்பே யோசித்திருந்தால் இந்த பிரிவு அவசியம் இல்லை என்பதுதானே உண்மை.
ஒரு இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு திரும்பி வரும்போது கனமான நம் மனதில், நிலையில்லாத இந்த வாழ்க்கையைப் பற்றி எத்தனை எத்தனை சிந்தனைகள் தோன்றுகின்றன. வாழ்க்கையின் ஓட்டத்தில் ஒரு சகாப்தமே சில மணித்துளிகளில் கரைந்து போய்விடுகிறது. இதை நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பலரும் பலவிதமான சொற்களில் சொல்வதைக் கேட்க முடிகிறது. அப்படிப்பட்ட இந்த நிலையில்லாத வாழ்க்கையில், தேவையில்லாத சின்ன விசயங்களுக்கெல்லாம் காரணம் கற்பித்து, அப்போதைய மகிழ்ச்சியை, நிம்மதியை ஏன் கெடுத்துக்கொள்ள வேண்டும் . அன்றைய வாழ்க்கையை ஏன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து பார்க்கக்கூடாது. வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு அங்கமும், நமக்கு ஏதோ ஒரு பாடத்தைக் கற்பிக்கும் ஆசானாகவே இருக்கிறது. அதனை உணர்ந்து, திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்டு நம் அடுத்த உயரத்தை, நம் வெற்றிக் கனியை எட்டிப் பறிக்க வேண்டியதுதான்!
தொடருவோம்
படத்திற்கு நன்றி:

நன்றி : வல்லமை

1 comment:

  1. அன்றைய வாழ்க்கையை ஏன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து பார்க்கக்கூடாது. வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு அங்கமும், நமக்கு ஏதோ ஒரு பாடத்தைக் கற்பிக்கும் ஆசானாகவே இருக்கிறது.//

    ஆம், உண்மை சங்கரி.
    அருமையாக சொன்னீர்கள்.
    வல்லமையில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete