Tuesday, August 13, 2013

தாயுமானாள்!



பவள சங்கரி

அண்ணே, இப்புடி சர்வ சாதாரணமா சொல்லிப்புட்டீங்க.. ஒரு பெண்ணைப் பார்த்து, அவளோட தகுதி, அவ அப்பாவோட தகுதி, அவங்களோட ஃபேமிலி பேக்ரவுண்ட், இப்படி எத்தனை விசயத்தைப் பாத்து பிறகுதானே அந்தப் புள்ளைக்கு பிராக்கட்டு போட ஆரம்பிக்கிறோம். அந்தப் புள்ளைங்கள மடங்க வக்கிறதுக்குள்ள நாங்க படுற பாடு கொஞ்சமா, நஞ்சமா. கையில இருக்கற அத்தனை காசும் மூலதனமா போட்டுல்ல இந்த வேலையப் பண்ண முடியும். இந்த ஆறு மாசமா எத்தனை விதமா நடிச்சிருக்கேன் தெரியுமா, நவரச நாயகன் பட்டமே கொடுக்கணுமாக்கும் எனக்கு. இப்பதான் மெல்ல மெல்ல அந்தப் புள்ளைய வழிக்குக் கொண்டாந்தேன். இப்ப போயி சாதி, குடும்ப அந்தஸ்து அப்படீன்னு கதை சொன்னா அதை எப்படி ஏத்துக்கறதுவாழப்போறது நாங்க ரெண்டு பேரும்தானே.. அதுல உங்க சாதியும் மதமும் எங்க வந்துச்சு. என்னை மிரட்டுறத உட்டுப்போட்டு, உங்க பெண்ணை மாத்த முடியுமான்னு  பாருங்க



ஒரு நல்ல  வேலை வெட்டிக்குப் போகிற பொழைப்பைப் பார்ப்பியா, காதல் கத்தரிக்காய்னு இந்த வயசுல அலைஞ்சுகிட்டு நேரத்தை தொலைக்கற. ஏம்ப்பா, இப்படி பொண்ணைப் பெத்தவனோட வயத்தெரிச்சலை கொட்டிக்கறீங்க, இந்தப்பாவம் உன்னைச் சும்மாவிடுமா?”

அடப்போங்கண்ணே என்னோட தீவிர முயற்சிக்குப் பிறகு கிடைச்சிருக்கற ஒரு நல்ல வாய்ப்புஇப்ப போயி வியாக்கியானம் பேசறீங்கஎப்படியிருந்தாலும் எவனோ ஒருத்தனுக்கு கட்டிக் கொடுக்கத்தானே போறீங்க, அது நானா இருக்கறதுல உங்களுக்கு என்ன பிரச்சனை? நானும் நல்லா பாத்துக்குவேனே அவளை

அதெல்லாம் சரி, ஒரு வேலை வெட்டி பார்க்காம எப்படிப்பா குடும்பம் நடத்தறது. உத்தியோகம் புருச இலட்சணம் இல்லையா?”

அதெல்லாம் அந்தக்காலம்ணே, இன்னைக்கெல்லாம் ஆணும், பொண்ணும் சமம்னு சொல்லுறாங்களே.. அப்பறம் இதுல மட்டும் எங்க வித்தியாசம் வந்துச்சி. எங்க மாமனார் தன் ஒரே  பொண்ணுக்காகத்தானே இத்தன சொத்து சேர்த்து வச்சிருக்கார்அதெல்லாம் ஆண்டு அனுபவிக்கத்தானே நானும் வந்திருக்கேன்

கட்..கட்.... இந்த கடைசிக் காட்சியை கொஞ்சம்  ரீடேக் போகணும். சரி சாப்பாட்டு நேரம் ஆச்சு. சீக்கிரமா லஞ்ச் முடிச்சுட்டு வந்து கன்டினியூ பண்ணலாம். ஒரு மணி நேரத்துக்குள்ள  சீக்கிரம் வந்துடுங்கப்பா
டைரக்டர் ராகவன் சத்தம் போட  எல்லோரும் கப்சிப்பென்று உணவு அறையை நோக்கி விரைந்தனர். வெகு நேரமாக டைரக்டரின் பேட்டிக்காக ஒரு பிரபல பத்திரிக்கையிலிருந்து வந்து காத்திருந்தார்கள். சாப்பிட்டுக்கொண்டே பேசலாம் என்று கூட்டிக் கொண்டுபோனார்  நான்கு மொழியில் ஒரே நேரத்தில் படம் எடுக்கும் அந்த மிகப்பிரபலமான டைரக்டர்.

சார், படம் அருமையா வந்திருக்கு. வசனமெல்லாம் நல்லாயிருக்கு. அது சரி பார்த்தா ஆண்ட்டி ஹீரோ சப்ஜெக்ட் மாதிரி தெரியுதே..  இவுருகூட இந்த மாதிரி ரோல்ல நடிக்கிறாராஆச்சரியமா இருக்கே..”

இல்லல்ல.. ஆரம்பத்துலதான் இப்படி. போகப்போக, இந்த ஹீரோ பெரிய பிசினஸ்மேனா, ஊருக்கே நல்லது பண்ற பெரிய மனுசாயிடுவாரு. அவரு திடீர்னு எப்படி மாறினார்ங்கறதுதான் கதையின் டர்னிங் பாயிண்ட்.. அதை படம் வந்த பிறகு பார்த்து தெரிஞ்சிக்கோங்க.. இப்ப நேரமாச்சு, நீங்களும் அவசியம் சாப்பிட்டுத்தான் போகணும்

நன்றி சார், நான் வரும்போதே சாப்பிட்டுவிட்டுத்தான் வந்தேன். ஜூஸ் குடித்துவிட்டேன். படம் நூறு நாட்களுக்கும் மேல் ஓடி வெற்றிவிழா கொண்டாட வாழ்த்துக்கள் சார்

ஷூட்டிங் முடிந்து வீட்டிற்குள் செல்லும் போதே இன்று மகள் என்ன ரகளை செய்யப் போகிறாளோ தெரியவில்லையே என்று அச்சமாகத்தான் இருந்தது. இந்த டீன் ஏஜ் பிள்ளைகளை கண்காணித்து வளர்ப்பது இந்த காலத்தில் ஒரு சவாலாகவே உள்ளது. ‘சாந்தாஎன்று மனைவியின் பெயரை உரக்கக் கூவிக்கொண்டே உள்ளே நுழைந்தார்..

என்ன சொல்றா.. உன் செல்லப்பெண்?”

காலையிலருந்து இன்னும் பச்சத் தண்ணி கூட குடிக்கல. அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு ரூமுக்குள்ள சுருண்டு கிடக்கறா பாருங்க. எனக்கு என்ன பண்றதுன்னே புரியலைங்க..”

நீ பொண்ண வளர்த்த இலட்சணம் அப்படி. காலேஜ் போனா ஒழுங்கா படிச்சுட்டு வருவோம்னு இல்லாம, காதல் கத்தரிக்காய்னு அலையுதுங்க இந்த காலத்துப் பிள்ளைங்க. சே, சொன்னாலும்  புரிய மாட்டேங்குது. தூங்கறவங்களை எழுப்பலாம். தூங்கற மாதிரி நடிக்கிறவங்களை எப்படி எழுப்பறது. தொலையட்டும்.. எக்கேடோ கெட்டுத் தொலையட்டும்.”

எதுக்கு பெத்த பொண்ணை இப்படி சாபம் விடறீங்க. சினிமாக்காரங்கன்னா இப்படித்தான் வீட்டிலேயும் வசனமா பேசணும்னு விதியா என்ன? மாசத்துல பாதி நாள் வெளியூர் பயணம். ஊரில இருந்தாலும் குழந்தைகள் தூங்கினப்பறம்தான் வீட்டிற்கு திரும்பறது. குழந்தைகள் என்ன படிக்கிறாங்கன்னு கூட நினைப்பிருக்குமான்னு எனக்கு சந்தேகம்இப்படி ஒரு பிரச்சனை வரும்போது மட்டும்தான் என்னை குத்தம் சொல்ல முடியுது. போன மாசம் பேச்சுப் போட்டியில முதல் பரிசு வாங்கிட்டு வந்தப்ப, ‘என் பொண்ணு இவன்னு கொண்டாட முடிஞ்ச உங்களால இப்ப மட்டும் என் பொண்ணா பாக்கத் தோணுது இல்லையா..

சரி, சரி போதும் விடு கூடக்கூட பேசாதே. போய் அவளைக் கூட்டிக்கிட்டு வா. இறுதியா என்னதான் முடிவெடுத்திருக்கான்னு கேட்கலாம்

அப்பா, நீங்க எத்தனை முறை  கேட்டாலும் என் பதில் ஒண்ணுதான்.. நான் சஞ்சய் இல்லேனா உயிரோடவே இருக்கமாட்டேன்எனக்கு அவன் தான் வேண்டும்.”

இதைத்தானே ஆரம்பத்தில் இருந்து சொல்லிட்டிருக்கே. உன் பிரண்ட்சே அவன் நல்லவன் இல்லைன்னு ஓபனா சொல்றாங்க. அப்பறம் எப்படி அவனுக்கு உன்னை பலிகெடா ஆக்க முடியும். படிச்ச பொண்ணுதானே நீ. எத்தனை முறை சொன்னாலும் புரிஞ்சிக்க மாட்டேங்கறே”.

அப்பா, உங்க திரைப்படத்துல வர ஹீரோ எல்லாம் முதல்ல அப்படி இப்படீன்னு இருந்தாலும், கடைசீல திருந்தி பெரிய மனுசனா ஆகிறதில்லையாஅப்படித்தானே சஞ்சய்யும் இப்ப அப்படி இருப்பான், கொஞ்ச நாள் போனா திருந்திடுவான். நீங்க நெனச்சா ஈசியா திருத்த முடியும்ப்பா

அடப் பைத்தியமே, சினிமாவும் வாழ்க்கையும் ஒன்னு இல்லைன்னு கூடவா உனக்குப் புரியல.. யானை தன் தலையில தானே மண்ணை வாரி போட்டுக்கிற மாதிரி உன் வாழ்க்கையை நீயே கெடுத்துக்காதேசொன்னா கேளும்மா ரஞ்சனா.. என்னை ரொம்ப கஷ்டப்படுத்தறே நீ

சாரிப்பா, இதுக்கு மேல என்னை சமாதானப்படுத்த நினைக்காதீங்க. நான் தெளிவா இருக்கேன். சஞ்சய் மட்டும்தான் எனக்கு வேணும்

எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அவனேதான் வேண்டும் என்று அடம் பிடிக்கும் ரஞ்சனாவைப் பார்த்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை ராகவனுக்கு. ஒழுங்காக படிக்கவும் இல்லை. நல்ல வேலையும் இல்லை. குடும்பமும் சரியில்லை. குடிகார தகப்பன் என்று அனைத்து தகவல்களும் அவள் நண்பர்களே புட்டு புட்டு வைக்கும்போது ரஞ்சனாவிற்கு மட்டும் தெரியாமலா இருக்கும். இருந்தும் இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் இத்தனை பிடிவாதமாக இருக்கும் மகளைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. இன்னும் என்ன சொல்லி புரிய வைப்பது என்று அறியாத மனதில், கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பதைப்போல ஆனது. வீட்டில் அனைவரும் சரியாக உண்டு, உறங்கி, கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஆகிவிட்டது. அவளைத்தன் வழிக்குக் கொண்டு வரவும் வழி தெரியாத நிலையில் நிம்மதியோடு தூக்கமும் கெட்டுப் போனதுதான் கண்ட பலன். இதை இப்படியே விட்டால் சரிவராது என்று ஒரு முடிவிற்கு வந்தார் ராகவன்.

மறுநாள் பகல் முழுவதும் சிரமப்பட்டு தன் மனதை ஒரு நிலைப்படுத்தி  பணிகளில் கவனம் செலுத்துவதற்குள் போதும், போதும் என்றாகிவிட்டது. மாலை மணி ஐந்து ஆனவுடன் எல்லா வேலைகளையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு தான் முடிவு செய்து வைத்திருந்தபடி மகளிடம் தனிமையில் மனம்விட்டு பேச வேண்டும் என்ற முடிவோடு, தான் ஒரு பிரபலமான திரைப்பட இயக்குநர், பெரிய அரசியல்வாதிகளின் நட்பினால்  எப்படியும் நினைத்ததைச் சாதிக்க முடியும் என்ற அனைத்து விதமான  ஈகோவையும் விட்டுவிட்டு ஒரு சாதாரண தந்தையாக மகளிடம் மனம்விட்டுப் பேச வேண்டும் என்ற முடிவோடு , அதிகம் கூட்டம் இல்லாத பெசண்ட் நகர் கடற்கரைக்கு கூட்டி வந்தார்

மாலை நேர குளிர்ந்த காற்று மனதில் இருந்த புழுக்கத்திற்கும் இதமாகவே இருந்தது. அங்கங்கு ஜோடியாகவும், குடும்பமாகவும், நண்பர்களாகவும் பொழுது போக்கிக் கொண்டிருந்தவர்களைப்பற்றி கவனிக்கத் தோன்றவில்லை. மகள் மட்டுமே தன் கண் முன்னால் இருப்பது போல இருந்தது. அவள் தன்னோடு தனியாக மனம் விட்டு பேசுவதற்கு ஒப்புக்கொண்டு கடற்கரை வந்ததே மனதிற்கு ஆறுதலாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக நின்று நிதானிக்க நேரம் இல்லாமல், காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள நினைத்து, ஓடிக்கொண்டே இருந்ததில் இழந்ததும் எத்தனையோ. ஏனோ பெற்றதையும், இழந்தததையும் ஒன்றாக சீர்தூக்கிப் பார்க்கும் எண்ணம் தோன்றியது. இப்படி மனைவி, மகளோடு வெளியே வந்தது அவள் குழந்தையாக இருந்தபோதுதான். அவள் பிறந்த போதும் தத்தித் தத்தி நடை பழகும் போதும் அவள் மட்டுமே உலகமாக இருந்த வாழ்க்கைதொழில் சூடு பிடித்து தன் வாழ்க்கைத் தரம் உயர, உயர வெகு வேகமாக ஓடிய காலங்கள், குடும்பத்தில் இருந்த நெருக்கத்தைக் குறைத்துவிட்டது. மனைவியையும், மகளையும் , மகிழ்ச்சியாக வசதியாக வைத்திருக்கிறோம் என்ற எண்ணமே தன்னை மேலும் மேலும் பணியில் ஆழ்ந்து போக ஊக்குவித்தது என்பதும் உண்மைதானே. ஆனால் இன்று முதலுக்கே மோசம் வந்துவிடும் போல மகளின் வாழ்க்கையே கேள்விக்குறியானதால் பணியையும் சரிவர கவனிக்க முடியாமல் போனது. இதைச் சரி  செய்தால்தான் திரும்ப அனைத்தும் யதார்த்த நிலைக்கு வரும் என்ற நிலைமையை உணர்ந்ததே நல்ல ஆரம்பம் என்று சமாதானம் ஆனாலும் மகளின் பிடிவாதத்தைத்  தளர்த்த முடியுமா என்ற வேதனைக்கு விடை கிடைக்கவில்லை.

தந்தையின் மனதைப் படிக்கும் வல்லமை இருக்கிறதோ இல்லையோ, அவருடைய அமைதியைக் குலைக்க மனம் வராததால் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள் ரஞ்சனா. ஏனோ அப்பாவின் இந்த இடைப்பட்ட பத்தாண்டுகால வெற்றி வாழ்க்கை, தங்கள் வாழ்க்கைத் தரத்தை முற்றிலும் மாற்றியமைத்திருந்தாலும், அது அவளுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. உற்ற தோழனாக, தன் நலனில் முழுதும் அக்கறை கொண்ட ஆசானாக இருந்தவர் கொஞ்சம் கொஞ்சமாக தன்னைவிட்டு விலகிக் கொண்டிருப்பதை தாங்கிக் கொள்ள முடியவில்லை அவளால். தாயின் அரவணைப்பு தன்னைத் தடம் மாறாமல் வைத்திருப்பதாக பெருமை கொண்டாலும், தந்தையின் தோழமையை இழந்தது அவளுடைய மகிழ்ச்சியைக் குறைக்கத்தான் செய்தது. ஏனோ இந்த ஆடம்பரமான வாழ்க்கை அவளுக்கு அதிகமாக ஒட்டவில்லை.

நேரம் போனதே தெரியாமல் நினைவுகளில் ஆழ்ந்திருந்த ராகவன் மெல்ல சுய நினைவிற்கு வந்தபோது குறுகுறுவென தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் மகளைப் பார்த்தவுடன், இதே கடற்கரையில் ஓடிப்பிடித்து விளையாடிய மகளின் நினைவுவர அள்ளி அணைத்து மடியில் வைத்து கொஞ்ச வேண்டும்போல் தோன்றியது. ஆனால் வளர்ந்து வாலைக்குமரியாக நிற்கும் அவளை அப்படிக் கொஞ்ச முடியாதே என்பது பெரிய இழப்பாகத் தெரிந்தது. ஏனோ திடீரென்று பெற்றதைவிட, இழந்தது அதிகமாகத் தெரிந்தது!

அப்பா, என்னப்பா அப்படி பாக்கறீங்க.. சொல்லுங்கப்பா என்னமோ பேசணும்னு கூட்டிட்டு வந்தீங்க, இப்ப இப்படி மௌனமா இருக்கீங்க

இல்லம்மா, என் செல்ல ரஞ்சுக்குட்டியைத் தேடிக்கிட்டிருக்கேன். இதே கடற்கரையிலதான் அவளைத் தொலைத்துவிட்டேன் போல..” கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. பதறிப்போன ரஞ்சனா, “அப்பா.. என்னப்பா, ஏன் இப்படி உணர்ச்சிவசப்படுறீங்கஎன்றாள்.

இந்த சற்று நேர ஆழ் நிலை தியானம் தனக்குள் ஒரு புத்துணர்வை ஏற்படுத்த, எந்தப் பிரச்சனையும் எளிதாக சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையும் உதயமாக, அதுவே முகத்தில் பிரகாசத்தைக் கொடுத்தது. இந்த மாற்றம் ரஞ்சனாவிற்கும் பிடித்திருந்தது. பழைய அப்பாவை, தன் அன்பு அப்பாவைக் கண்டதுபோல ஒரு ஆனந்தம் அவளுக்குள் புகுந்தது. அதற்குப் பிறகு நடந்த உரையாடல்கள் அனைத்தும் நமக்கு வேண்டுமானால் கேட்பதற்கு சலிப்பு தட்டலாம்.. ஆனால் ராகவனின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது என்பதுதான் உண்மை. தொழிலின் போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்ற வெறியும், நின்று நிதானமாக யோசிக்கக்கூட நேரமில்லாத காரணமும் தன் இயல்பான குணத்தையே மாற்றியிருந்ததைக்கூட அறியாமல் இருந்திருக்கும் தன்னுடைய சூழ்நிலையின்மீதே ஒரு சலிப்பு தோன்ற ஆரம்பித்திருந்தது. சரியான நேரத்தில் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்திய தாயான  மகளுக்கு நன்றி சொல்லத் தோன்றியது.

புரட்சி இயக்குநர் என்ற பட்டம் படுத்திய பாடு, தான் எடுக்கும் படங்களிளெல்லாம் அதன் பிரதிபலிப்பு ஏற்பட வேண்டும் என்று குறியாக இருந்ததால், வெற்றி மேல் வெற்றி வந்து குவிந்தது என்னவோ உண்மைதான். ஆனால் சமுதாயத்தில் அது ஏற்படுத்திய மாற்றங்கள் எத்தனையோ..  வெளியில் தெரியாமலே கேன்சர் வியாதியாக ஒரு இளைய சமுதாயத்தையே அழித்துக் கொண்டிருந்தது என்பதைத் தான் அறியவில்லைதான். இந்த பத்து ஆண்டுகளில் தான் எடுத்த படங்களின் எண்ணிக்கை பத்துதான் என்றாலும், ஒவ்வொன்றும் ஒரு புரட்சி என்ற பெயரில் இளைஞர்களை தேவையில்லாமல் உசுப்பேற்றிக் கொண்டிருக்கச் செய்ததாக இருந்த மற்றொரு கோணத்தைப் பற்றி  சிந்திக்கவேயில்லை. இளம் வயதின் அறியாமையை தவறான பாதையில் செலுத்தக்கூடிய வகையில் சக்தி வாய்ந்த ஊடகங்கள் செயல்படும்போது அதன் பின் விளைவுகள் பற்றிய சிந்தனையே இல்லாமல், வெற்றி என்ற இலக்கை மட்டும் வைத்துக்கொண்டு தான் செய்த செயல்கள் தனக்கென ஒரு பிரச்சனை வரும்போதுதான் தெளிவாகிறது என்பதும் விளங்கியது. சமுதாயத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துவதில் ஊடகங்களுக்கு எத்தகைய முக்கியத்துவம் இருக்கிறது என்பதை உணரவும் ஒரு வாய்ப்பாக அமைந்ததுநாட்டில் பாலியல் வன்கொடுமைகளின் அளவு அதிகரித்திருப்பதும் இதுக்கு ஒரு சாட்சிதானே..  பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைகளைக்கூட  தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் அவலம் கொடுமையிலும் கொடுமை அல்லவா.. அடுத்த நாள் அதிரடியாக அவர் எடுத்த சில முடிவுகளுக்கு முக்கியமான காரணமும் இருந்தது.

ஆம், பல கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த திரைப்படத்தின் கதையை மாற்றியமைக்கும் வரை அதன் இயக்கத்தை நிறுத்தி வைப்பதாக வெளிப்படையாக அறிக்கை கொடுத்தார். பலவிதமான கேள்விகள் எழுப்பப்படும் என்று தெரிந்தாலும் அத்தனைக்கும் நேர்மையாக பதில் அளிப்பதே இனி அதுபோல தவறான வழி நடத்தல்களை தவிர்க்க சிறந்த வழி என்பதையும் உணர்ந்திருந்தார். தன் அன்பு மகள் மூலம் அறிந்த அந்த சம்பவம் மட்டும் மனதை விட்டு அகலாமல் வேதனைப்படுத்திக் கொண்டிருந்தது. அவளுடைய பள்ளித்தோழி சங்கவி, இவருடைய பல திரைப்படங்களின் தீவிர ரசிகையாம். குறிப்பாக இறுதியாக வெளிவந்த அவர் படத்தை பல முறை பார்த்திருக்கிறாள். அதன் பாதிப்பு, ஒரு ஒழுக்கமற்ற கயவனிடம் மனதை பறிகொடுத்ததோடு ஒரு கட்டத்தில் தன்னையே இழந்திருக்கிறாள்வீட்டில் தெரிந்தால் அவமானத்தில் தன் தாய் தற்கொலையே செய்து கொள்வாள் என்ற அச்சத்தில் அதையெல்லாம் மறைத்து, தீவிர காதல் என்ற பெயரில் வீட்டில் கட்டாயப்படுத்தி அவனையே மணந்து கொண்டிருக்கிறாள். எப்படியும் அவனைத் திருத்தி நல்வழிப்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கையில் தன் இளமைக் காலத்தையே வீணடிக்க முடிவு செய்தாள். ஆனால் அவனோ அன்றாடம் குடித்துவிட்டு வந்து அவளை அடித்து உதைத்ததோடு தாய் வீட்டில் போய் பணம் வாங்கி வரவும் மிரட்டியிருக்கிறான்அவனுடைய கொடுமைகளைத் தாங்க முடியாத அந்தப் பெண் ஒரு நாள் வீட்டிலிருந்த கழிவறை சுத்தம் செய்யும் அமிலத்தைக் குடித்துவிட்டு மருத்துவமனையில் துடிதுடித்து இறந்து போயிருக்கிறாள். அவள் இறக்கும் போது அவளுடன் இருந்து அந்த நரக வேதனையைக் கண்ட நண்பர்களில் ரஞ்சனாவும் ஒருவள். அதன் பாதிப்பு அவளுக்கு மிகவும் அதிகமாகியிருக்கிறது. இதையெல்லாம் தந்தையிடம் கூறியதுதான் அவருடைய மனமாற்றத்திற்குக் காரணமானது.

அன்று ராகவனுக்கு ஒரு பெரும் சுமையை இறக்கி வைத்த திருப்தி இருந்தது. வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும், நன்கு சம்பாதிக்க வேண்டும் என்பதெல்லாம் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஆசைதான். அதுவும் அதற்கான சூழ்நிலைகளும், வாய்ப்புகளும் சரியாக அமையப் பெற்றவர்கள் என்றால் அதை ஒரு வரமாகவே நினைக்கத் தோன்றுவதும் இயற்கைதான். ஆனால் ஒரு மனிதனுடைய வெற்றி என்பது பலருடைய வாழ்க்கையை ஏறி மிதித்து நசுக்கிச் செல்வதில் இல்லை. அப்படி  கிடைக்கும் வெற்றியில் உண்மையான மகிழ்ச்சி இருக்காது. எவர் ஒருவரையும் பாதிக்காத வகையில் கிடைக்கும் வெற்றி மட்டுமே நிலைத்த மகிழ்ச்சியையும், நிம்மதியையும் அளிக்கக் கூடியது என்பதை தம் அன்பு மகளிடம் மனம் விட்டுப் பேசிய அந்த ஒரு மணி நேரத்தில் விளங்கியது.

தன் மகளுக்கு ஒரு பிரச்சனை என்றால் பதறுகிற தந்தை மனம்வர்த்தக ரீதியாக தன் படம் வெற்றி பெற்று கோடி கோடியாகக் கொட்டினால் போதும் என்று சமுதாய அக்கறையே துளியும் இல்லாத கல் மனதையும் கரைய வைத்த மகளை எண்ணி பெருமைப்பட்ட அதே வேளையில்  இவ்வளவு விவரமானப் பெண், தானும் இப்படி ஒரு சகதியில் தெரிந்தே போய் விழுவாளோ  என்ற சந்தேகம் மட்டும் எழாமலில்லைஅவளிடமே இதை வெளிப்படையாகக் கேட்டபோது, தான் எதிர்பார்த்த அதே பதிலை அவள் கூறியது மனதிற்கு நிம்மதியளித்தது. ஆம், தனக்கு பாடம் புகட்ட வேண்டி தகப்பன் சாமியாக, தன் நண்பர்களின் உதவியுடன் இப்படி ஒரு காதல் நாடகத்தை அழகாகவெகு யதார்த்தமாக, அனைவரும் நம்பும்படி அரங்கேற்றிய ரஞ்சனாவைப் பார்த்து பெருமை பிடிபடவில்லை ராகவனுக்கு. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பதையும் நிரூபித்த மகளைச் செல்லமாகக் கன்னத்தில் தட்டிவிட்டு வெகு நாட்களுக்குப் பிறகு  நிம்மதியாக   தூங்கச் சென்றார்.




No comments:

Post a Comment