Wednesday, August 14, 2013

இந்துமதியுடன் சில பொன்னான மணித்துளிகள்!


இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் நண்பர்களே!

independence-day-44a
பிரபல எழுத்தாளர் திருமதி இந்துமதி அவர்களின் சிறப்பு நேர்காணல்
பவள சங்கரி
‘பெண் எழுத்தாளர்களின் கதைகளைப் படிக்கும் அளவிற்கு பொறுமை இல்லை எனக்கு’, என்று பலர் பெருமையாக சொல்லிக்கொண்டிருந்த காலங்களில், ஆண், பெண் என்ற பாரபட்சம் இல்லாமல், இவர் எழுதிய சிறுகதைகளாகட்டும், தொடர்கதைகளாகட்டும் அனைத்தையும் விருப்பத்துடன் காத்திருந்து வாசித்தவர்களும் உண்டு. இன்றும் இவருடைய படைப்புகளுக்கென்று தனிப்பட்ட வாசகர்கள் இருக்கிறார்கள். நல்ல சமுதாய அக்கறையுடனான சிந்தனைகளை ஊக்குவிக்கும் இவருடைய பல படைப்புகள் தொலைக்காட்சித் தொடராகவும், திரைப்படமாகவும் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எழுத்தாளர் இந்துமதி அவர்கள் சுதந்திர தினத்திற்காக நம் வல்லமை இதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணல் இதோ:

indu
1. 66 ஆண்டுகால சுதந்திர தின நிறைவு விழாவை பெருமையுடன் கொண்டாடும் பாரத தேசத்தின் மக்களுக்கு அவர்களின் உரிமையை எடுத்துச் சொல்லி அதன் வழியாகக் கிடைத்த வளர்ச்சி என்று எழுத்துத் துறை ஆற்றிய சாதனை என எதனைக் குறிப்பிட விரும்புகிறீர்கள்?
எழுத்துத் துறையில் நான் ஆற்றிய சாதனை என்று நான் குறிப்பிட விரும்புவது அன்பு மற்றும் மனித நேயம்! அறிவு என்பது நிச்சயம் அவசியத்தேவை. அன்போடு சேர்ந்த அறிவு உடையவர்களாக இருந்தால் சமீபத்தில் தில்லியில் ஒரு பெண்ணிற்கு நடந்த கொடுமை நிகழ்ந்திருக்காது. மண்ணில் பிறந்த அனைத்து உயிர்களையும் தம் உறவுகளைப் போன்று நேசிக்கும் மனோப்பக்குவம் இருந்திருக்குமேயானால் இது போன்ற சம்பவங்கள் நடக்காது. அறிவோட சேர்ந்த அன்பு இருந்தால் பெண் சிசுக்களுக்கு நெல் மணி போட்டு கொல்லும் நிலை வந்திருக்காது. நல்லதொரு பாரத சமுதாயம் என்றால் காந்தி கண்ட கனவு போல நடு இரவில் அத்துனை நகைகளையும் போட்டுக்கொண்டு ஒரு பெண் தனியாக நடந்து செல்லும் சுதந்திரம் வேண்டும் என்பதுதான். இன்று பாருங்கள் நகை கூட வேண்டாம், இரவு நேரங்களில் ஒரு பெண் தனியாக நடந்து போக முடியுமா…? அப்படி ஒரு சுதந்திரத்தைத்தாங்க நாம எதிர்பார்க்கிறோம். அன்பும், அறிவும் சேர்ந்த மனித நேயப் பண்புகள் வளர்ந்தால்தான் உண்மையான சுதந்திரத்தை நாம் அடைய முடியும்.
2. உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் மொழி வளர்ச்சிக்கும், நாட்டுப் பற்றுக்கும் தமிழ் மொழி இலக்கியங்கள் உறுதுணையாக இருந்தது என்ற காரணக்கூறுகளைப் பற்றி தாங்கள் கூற விரும்புவது:
நிச்சயமாகங்க.. வெளி நாட்டில் வாழும் தமிழர்களும் சரி, ஈழத்தில் வாழும் சுத்தமான தமிழைச் சுவாசிக்கும், தமிழர்களும் சரி இன்றுவரை தமிழ் கூறும் நூல் வழியாகத்தான் தம் மொழியை வளர்த்துக்கொல்கிறார்கள். பத்திரிக்கைகள் அல்லது புத்தகங்கள் மூலமாகவோ தொலைக்காட்சி மூலமாகவோ மொழி சென்று அடைகிறதென்றால் அது எழுத்தின் மூலமாக மட்டுமே சாத்தியமாகும். ஒரு நாட்டின் மொழி வளர்ச்சிக்கு நல்ல எழுத்துக்கள் அவசியமாகிறது. கற்கால மனிதர்களிலிருந்து அத்தனை மனிதர்களின் நாகரீக வளர்ச்சிக்கும் எழுத்து முக்கிய அங்கம் வகிக்கிறது. முதன் முதலில் காகிதம் கண்டுபிடித்து, எழுத்தைக் கண்டுபிடித்து எழுத ஆரம்பித்தபோதுதான் நாகரீகம் வளர ஆரம்பித்திருக்கிறது. உலகில் உள்ள அத்துனை மனிதர்களிடையேயும் மனித நேயத்தையும், அன்பையும், அறிவையும் கொண்டு சேர்ப்பது நல்ல எழுத்துக்கள் மட்டுமே. எழுத்தால்தான் பயனடைகிறார்கள், அதனால்தான் ஒருவருடன் ஒருவர் பின்னிப்பிணைகிறார்கள் என்றால் அது மிகையாகாது.
3. நாட்டின் பல இடங்களில் நடைபெறும் புத்தகத் திருவிழாக்கள் மூலமாக பெருகிவரும் புத்தக வாசகர்களுக்கு தங்களின் செய்திகள் என்னவாக இருக்கும்?me indhu
வாசியுங்கள். வாசிப்பதை நேசியுங்கள்! இப்ப எதுக்காகங்க என்னை வந்து பேட்டி காணறீங்க? நான் ஒரு எழுத்தாளர், என் எழுத்துக்களை நீங்க வாசித்திருப்பதாலும் என்னை இன்று சந்திக்க வருகிறீர்கள். அதற்கு காரணம் என்ன.. என்னுடைய நல்ல வாசிப்பு. என்னுடைய வாசிப்பு மட்டுமே என்னை நல்ல ஒரு எழுத்தாளராக பண்படுத்தியிருக்கிறது. நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்து வாசியுங்கள். ஒரு ஆதி சங்கரர், ஒரு புத்தர் மட்டுமே தோன்றியிருக்கிறார்கள். நம் குழந்தைகளை டாக்டராக்க வேண்டும், தொலைத்தொடர்புத்துறை, பொறியியல் வல்லுநராக்க வேண்டும் என்று , ஆசைப்படுகிறோமே தவிர அவர்களுக்கு நல்ல புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிடுகிறோம். அன்று எங்கள் பள்ளிப்பருவ காலங்கள் நீதி போதனை வகுப்பு என்று இருந்தது. அது இப்போது இருப்பதாகத் தெரியவில்லை. அத்துனைப் பெரிய எருமை மாடுகள் ஒரு பெண்ணிடம் அத்துனை மோசமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். ஒழுங்காக நீதி போதனை வகுப்பில் நான்கு நல்ல செய்திகள் காதில் போட்டு வைத்தால், ஓரளவிற்காவது மனதை பக்குவப்படுத்தும். பள்ளியில் கற்றுத் தராத அந்த நல்லதொரு பாடத்தை பெற்றோராவது தங்கள் குழந்தைகளுக்கு கற்றுத்தர கட்டாயம் நேரம் ஒதுக்க வேண்டும். ஓடி, ஓடி சம்பாதித்து குழந்தைகளுக்கு பணத்தை மட்டும் சம்பாதித்து வைக்கும் பெற்றோர் அவர்களுக்கு நல்ல பண்பை ஊட்டி வளர்க்கத் தவறிவிடுகிறார்கள். ஒரு குழந்தை பொறுமை உள்ளவனாக, அமைதி உள்ளவனாக, தைரியம் உள்ளவனாக வளர வேண்டும் என்றால் அவனுக்கு நல்ல போதனைகளை வழங்குங்கள்., மனப்பாடம் செய்து எழுதி மதிப்பெண் வாங்க வைப்பது மட்டும் படிப்பு ஆகாது, அவன் சமுதாயத்தில் நல்லதொரு குடிமகனாக வளர நல்ல போதனைகளை ஊட்டி வளர்க்க வேண்டும். சிந்தியுங்கள் பெற்றோர்களே.. அதற்கு நீங்கள் முதலில் நல்ல நூல்களை வாசிக்க வேண்டும்.
என்னோட வீட்டில் என் பையனுக்கு தீபாவளி, பொங்கல் என்றால் அவனுக்காக நாங்கள் ஒதுக்கும் பணத்தில் பெரும் பகுதியை அவன் புத்தகம் வாங்கத்தான் செலவு செய்வான். குழந்தைகளுக்குப் பிறந்தநாள் என்றால் கேக் வெட்டுகிறோம், தோரணம் கட்டுகிறோம். ஆனால் நல்ல புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கத் தயங்குகிறோம். என் மகனுக்கு பண்டிகை என்றால் கொண்டாட்டமே புத்தகங்கள் வாங்குவதுதான். அதுதான் அவனுக்குப் பண்டிகை, பாயசம், பட்டாசு, புதுத்துணி என அனைத்துமே. சில காலம் முன்புகூட, தாத்தா, பாட்டிகள் குழந்தைகளுக்கு, இராமாயணம், மகாபாரதம், அரிச்சந்திரன் கதைகள் என பலதும் சொல்வார்கள். ஆனால் இந்தக் காலத்தில் அதுவும் குறைந்துவிட்டது. இப்போது எந்த வீட்டில் தாத்தா பாட்டிகள் இருக்காங்க.. இன்று உடைந்துபோன குடும்பங்கள்தான் அதிகமாக இருக்கிறது. நகரத்தில் வாழும் இன்றைய குழந்தைகளுக்கு மாடு என்றால் என்னன்னு தெரிவதில்லை. பாக்கெட் பால் மட்டுமே தெரிகிறது. கடைக்குச் சென்று துணி வாங்க செலவிடும் நேரம்கூட குழந்தைகளுக்காக இன்று பல பெற்றோர் செலவிட முடிவதில்லை. இன்று அனைவரும் ஒரு பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாக மாறிக்கொண்டிருக்கிறோம். குழந்தைகளுக்கு நாம் அன்பையும், பண்பையும் வளர்க்கத் தவறுகிறோம். பணம் சேர்த்து வைத்தால் மட்டும் போதும் என்று நினைக்கிறோம். நம் நாடு விவசாயத்திலும், ஆன்மீகத்திலும் செழித்த ஒரு நாடு. கத்தியைத் தூக்கும் நாடு அல்ல. ஆனால் இன்றைய குழந்தைகளின் போக்கு மிகவும் அதிர்ச்சிகரமாகவே இருக்கிறது. பகிர்தல் என்ற பண்பாடே சுத்தமாக இல்லாமல் போகிறது. நா. பார்த்தசாரதி மூலமாக என்னுள் விதைத்த விதைகள், ஒரு பூரணி மூலமாக, ஒரு அரவிந்தன் முலமாக நல்ல பண்பாட்டை விதைத்தது. வண்ணதாசன் என்ற ஒரு மென்மையான எழுத்தாளர். பூவைக் காட்டிலும் மென்மையான எழுத்துக்கள் அவருடையது. இன்று குழந்தைகள் மற்றவர்களிடம் வம்பு செய்தால் அவர்களைக் கண்டிக்க வேண்டிய நாமே காப்பாற்ற நினைக்கிறோம். பின்பு எங்கிருந்து நல்ல பண்பாட்டை அவனுக்குள் விதைக்க முடியும்? ஒரு விசயத்தைப் பல கோணங்களில் நாம் பார்க்க முடியும். கண்ணாடியில் தெரியும் பிம்பம் போலத்தான் அது.
4. தங்களைக் கவர்ந்த வரலாற்று நாயகியர்?
எனக்கு பொன்னியின் செல்வனில் பூங்குழலி நிரம்பப் பிடிக்கும். நந்தினி, குந்தவையைவிட அந்த பாத்திரப்படைப்பின் வீரம், துணிச்சல், விவேகம் எல்லாம் ஒரு பெண்ணிற்கு அவசியம்.
5. தமிழ்நாடு அரசு கடந்த பல ஆண்டுகளாக தமிழ் புத்தகங்களை பொது நூலகங்களுக்கு வாங்குவதிலை என்ற படைப்பாளிகளின் ஆதங்கத்துடன் தாங்கள் ஒத்துப் போகிறீர்களா?
எனக்குத் தெரியாது. தெரியாத விசயம் பற்றி நான் பேச விரும்பவில்லை.
6. படைப்புகளை வைத்து ஆண் எழுத்தாளர் அல்லது பெண் எழுத்தாளர் படைப்பு என்று வேறுபடுத்தி பார்க்க முடிவது நல்லதா, அது தேவையா, அல்லது அது தவிர்க்கப்பட வேண்டியதா?
இந்த உங்களுடைய கேள்வியில் வேறுபடுகிறேன் நான். எழுத்தில் பாகுபாடு இல்லை. உதாரணமாக கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதிய ‘கருவாச்சி காவியத்தில்’ ஒரு பெண்ணின் அத்தனை துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்து வடித்திருப்பார். குறிப்பாக பிரசவ வேதனையின் நுண்ணிய வலிகளைக் கூட அழகாகச் சொல்லியிருப்பார். நான் அதை வாசித்தபோது சந்தேகப்பட்டு இது வைரமுத்து எழுதியதா அல்லது பொன்மணி எழுதியதா என்று போன் செய்து கேட்டேன் என்றால் பாருங்கள். தில்லியில் எங்கேயோ ஒரு சீக்கிய இளைஞனுக்கு நேர்ந்த துன்பத்தை இந்து நாளிதழில் படித்து அது எனக்குள் ஏற்படுத்திய பாதிப்புதான், சிறந்த சிறுகதை என்று விருதைப் பெற்ற ‘குறுத்து’. எந்த ஒரு விசயமும் நமக்கு நேரடி அனுபவம் இருந்தால் மட்டுமே அதைப்பற்றி எழுத முடியும் என்பதில்லை. அதை நாம் உள் வாங்கும் திறமையில்தான் இருக்கிறது அந்த எழுத்து. இதில் ஆணென்ன அல்லது பெண்ணென்ன? உடலுக்குள் இருக்கும் இருதயம், இரத்தம், மூளை, மனம் இவற்றிலெல்லாம் ஏது பேதம்? எழுத்திற்கு ஆண் உணர்ச்சி, பெண் உணர்ச்சி என்ற பேதமும் இல்லை. அவரவர்களை பாதித்த விசயங்கள் பற்றி அப்படியே எழுதுகிறோம். இதில் வேறு எந்த வேறுபாடும் எனக்குத் தோன்றவில்லை.
நல்ல எழுத்துக்கள் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்துவது உண்மை என்றாலும், ஒன்று மட்டும் சத்தியம். அது பட்டுக்கோட்டையார் எழுதியது போல, ‘திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!’ தி.ஜானகிராமன் ’அன்பே, ஆரமுதே’வில் சொல்வார், ‘மொடமொடன்னு கஞ்சி போட்டு நீ கட்டிக்கிட்டு வர காட்டன் சேலையிலேயே என்னை மருட்டறே’. இதில் உடையில் இல்லை விரைப்பு. அந்த பாத்திரப்படைப்பில் அல்லவா இருக்கிறது. இதுதான் ரோல் மாடல்! அதுதான் இன்றைய தேவையே தவிர, மற்றபடி எழுத்தில் பேதங்கள் இல்லை என்பதே என்னுடைய கருத்து.

நன்றி : வல்லமை

1 comment:

  1. சிறப்பு நேர்காணலை பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    இனிய சுதந்திரத்திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete