Tuesday, September 10, 2013

வினை தீர்க்கும் விநாயகன்!



பவள சங்கரி



உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நில உலாவிய நீர் மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம். 

அனைத்து உயிர்களிலும் இறைவன் இருக்கிறான். காணும் ஒவ்வொரு பொருளும் இறை வடிவாகக் காட்சியளிப்பதே தமிழர்தம் அறநெறியாம். கீதையில் கண்ணன் அருளும் மொழியும் இதுதான். மலரிலும் மகேசனைக் கண்ட  தாயுமானவர் சுவாமிகள் அருளியதும், ‘பார்க்கின்ற மலரூடு நீயேயிருத்தி ` என்பதுதான். பார்க்கின்ற இடமெல்லாம் நிறைந்திருக்கிற பரிபூரண ஆனந்தம் ஆண்டவன் என்கிறார் அவர். அதாவது நீர், வான், நெருப்பு, காற்று, சந்திரன், சூரியன், மண், உயிர்கள் என எட்டுப் பொருட்களிலும் நிறைந்துள்ளவன் இறைவன் . உடலில் பேதமிருந்தாலும், இறைவன் அனைத்து உயிர்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறான் . இந்த உயரிய தத்துவத்தின் மொத்த உருவமே விநாயகப் பெருமானின் திருவுருவமாகும். பூமியின் ஒரு உருவகம்தான் விநாயகர் உருவம்.. 
யானை முகமும், மனித உடலும் கொண்டு அனைத்து உயிரும் சமம் என்று சொல்லாமல் சொல்கிறானோ?




                                  நம்ம வீட்டு விநாயகரைப் பாருங்களேன்!


 களி மண்ணால் ஓர் உருவம் செய்து,  அதன் சிரசில் அருகம்புல்லைச் செருகினால் போதும்.. இறைவன் அதில் எழுந்தருளிவிடுவான். அப்பெருமான் எந்த வகை விசேசமான விரதமோ, பூஜையோ எதிர்பார்க்காதவன். நம் இல்லம் தேடி பிரியமுடன் வரும் விருந்தாளிகளைப் போன்று அவரை உபசரித்தால் போதும். அதாவது பட்டிணத்தார் திருவாய் மலர்ந்தருளியது போன்று, பிற உயிர்களுக்குத் துன்பம் விளைவிக்காமல், உலக இன்பங்களை நுகர்ந்தாலும், அனைத்து உயிர்களிலும் உறைபவன் அந்த இறையவனே என்பதை உணர்ந்து, அவர்களுக்கு மறுக்காது இயன்றதை வழங்கி, ஐந்தெழுத்து மந்திரமான ‘நமச்சிவாய’ என்பதனை மறவாது நாளும் போற்றி வந்தால் முத்திவீடும் சித்திக்கும், உலக இன்பங்களும் பெருகும் என்ற பொருள்பட,

அறுசுவை அடிசில் வறிதினது அருந்தாது
ஆடினார்க்கென்றும் பாடினார்க்கென்றும்
வாடினார்க்கென்று வரையாது கொடுத்தும்
பூசுவன பூசியும் புனைவன புனைந்தும்
ஐந்து புலன்களும் ஆர ஆர்ந்தும்
மந்திர எழுத்து ஐந்தை வாயிடை மறவாது
சிந்தை நின் வழி செலுத்தலின் அம்மை
முத்தியும் இலந்கிலம் முதல்வா எனவிரித்தார்.

இப்பாடலின் முழுமையான கருத்தாய் விளங்குவதே விநாயகர் சதுர்த்தி பூசை என்றால் அது மிகையாகாது! 

கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
     கப்பிய கரிமுக ...... னடிபேணிக் 

கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
     கற்பக மெனவினை ...... கடிதேகும் 

மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
     மற்பொரு திரள்புய ...... மதயானை 

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
     மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே 

முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
     முற்பட எழுதிய ...... முதல்வோனே 

முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
     அச்சது பொடிசெய்த ...... அதிதீரா 

அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
     அப்புன மதனிடை ...... இபமாகி 

அக்குற மகளுட னச்சிறு முருகனை
     அக்கண மணமருள் ...... பெருமாளே.

கிருபானந்த வாரியார் சுவாமிகளின் மிக விருப்பமான பாடல் இது. அவர் பாடிக் கேட்க வேண்டும்! அத்துனைச் சுவையாகப் பாடுவார்!

கோடிக் கோடி கருணைகளை வாரி வாரி வழங்கும் விநாயகரை கற்பக விநாயகர் என்று உளமாரத் துதிக்கிறோம். 32 வகையான உருவங்களில் விநாயகப் பெருமான துதிக்கப்படுகிறார். ஒவ்வொரு உருவமும் ஒவ்வொரு மந்திரமும், சுலோகங்களும், தோத்திரங்களும், அதற்குரிய பண்டிகைகளும், ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு குறிப்பிட்ட காரணத்திற்காகக் கொண்டாடப்படுவதும் தனிச்சிறப்பு. சுக்கில பட்சத்தின் நான்காம் நாளில், சிரவண மாதத்தில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி மிக முக்கியமான பண்டிகை. இந்நாளிலேயே விநாயகப் பெருமான் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. பதினாறு அவதாரங்களைக் கொண்டவன் விநாயகன்! நாம் எந்தக் காரியத்தைத் துவங்கும் முன்பும் விநாயகரை வழிபட்ட பின்பே துவங்க வேண்டும். அப்பொழுதுதான் அக்காரியம் வெற்றி பெறும் என்பதும் பரவலான நம்பிக்கை. திரிபுரத்தின்மேல் படையெடுக்கத் தொடங்குகையில் சிவபெருமான் விநாயகரைப் பூஜிக்க மறந்ததால், சிவபெருமான் ஏறி வந்த தேரின் அச்சு முறியும்படி விநாயகர் செய்தார் என்கிறது சிவபுராணம்.

கணபதிராயன் -அவனிரு 
காலைப்  பிடித்திடுவோம் 
குணமு யர்ந்திடவே-விடுதலை 
கூடி மகிழ்ந்திடவே (ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்) 
என்பான் பாரதி. 

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்-கோலம்செய்
துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.

என்பார் ஔவைப் பிராட்டியார். மிக எளிமையாக மேற்கண்ட நான்கு பொருட்களை மட்டுமே கொடுத்துவிட்டு, சங்கத் தமிழ் மூன்றையும் பெறலாமாம்....  சாதாரண களி மண்ணால் செய்து வழிபட்டுப் பின் விசர்ஜனம் என்று சொல்லக்கூடிய கடலில் சென்று கரைப்பார்கள்.  வேழமுகப்பெருமான் செய்த விளையாடல்கள் பல.....  ஒவ்வொரு மனிதனும் தன்னை அடக்கி  நற்குணமுள்ள மனிதனாக வாழ வேண்டும் என்பதே விநாயகர் உருவத்தின் தத்துவமாகும். அதனை விளக்கும் பொருட்டே, இத்திருவுருவின் கரங்கள் யானையின் அங்குசத்தைத் தாங்கிக் கொண்டிருகிறது. தன்னை அடக்கும் ஆற்றல் தனக்குள் மட்டுமே உண்டு என்பதே இதன் கருத்தாகும்.

“எல்லைஇல் பிறப்பு எனும்
  இருங்கடல் கடத்தி - என்
அல்லலை நீக்கிய
  அருட்பெருஞ் ஜோதி”

எவ்வகையிலும் எல்லையிட்டுக் கூற முடியாத பிறவி எனும் பெருங் கடலிலிருந்து கரையேற்றி என் பிறவித் துன்பத்தை நீக்கிக் காத்தருளும் அருட் பேரொளி என்கிறார் வள்ளலார். அப்படிப்பட்ட அருட்பேரொளியின் துணைகொண்டு நம் பிறவிப் பெருங்கடலைக் கடக்க முயல்வோம்!  இந்தியா முழுவதும் எத்தனையோ விழாக்கள் கொண்டாடினாலும், ஒருமித்த கருத்துடன் அனைவரும்  கொண்டாடும்  விழா விநாயகர் சதுர்த்தி விழா என்பதே இதன் தனிச்சிறப்பு! 

சக்தி கணபதி, சித்தி கணபதி, மகா கணபதி, இலக்குமி கணபதி, ஹேரம்ப கணபதி, பால கணபதி, பக்தி கணபதி, உத்திஷ்ட கணபதி, வீர கணபதி, விக்ன கணபதி, சங்கட நாசன கணபதி போன்ற பல்வேறு நாமங்கள் கொண்டவன் விநாயகன். சிதறு தேங்காய் உடைப்பதினால் உள்ளம் உருகி, வேண்டுவதைத் தருவான். அருகம்புல், வில்வம், நந்தி ஆவர்த்த மலர், வன்னி இலை போன்றவையுடன், சாணம் தெளித்த மண் தரையில், களி மண்ணோ அல்லது, மஞ்சளோ கொண்டு ஒரு பிள்ளையார் பிடித்து வைத்து வழிபட்டால் போதும். விடாம்பழமும், மாங்கனி, மாதுளை, நாவல், வாழை, பலா மற்றும் பாலும், தேனும், பாகும் விநாயகருக்கு உகந்தவைகள். கொழுக்கட்டை, பாயசம், மோதகம், பச்சை பயறு, சுண்டல், கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம் போன்ற அனைத்தும் விநாயகப் பெருமானின் விருப்பமான உணவுகள். குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் விநாயகர் சதுர்த்தியை விரும்பி வரவேற்பதன் காரணம் இப்போது புரிகிறதல்லவா?

6 comments:

  1. கிருபானந்த வாரியார் சுவாமிகளின் மிக விருப்பமான பாடல் மனதை கொள்ளை கொள்ளும்... நன்றி...

    ஒவ்வொரு வரியையும் ரசித்து எழுதி உள்ளீர்கள்... சிறப்பு... பாராட்டுக்கள்...

    இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. அன்பின் திரு தனபாலன்,

    தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி.

    அன்புடன்
    பவளா

    ReplyDelete
  3. இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

    அருமையான அசத்தலான படங்கள் + பதிவு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. ஒவ்வொரு வரியும் எளிமையான, இரத்தினம் போல் சிறப்பாக உள்ளது.
    எளிமையானவனின் புகழினை சிறப்பினை விளக்கிய விதம் அருமை!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அன்பின் திரு கிருஷ்ணா ரவி,

      வருக.. வருக. வணக்கம். தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க மகிழ்ச்சி. நன்றி.

      அன்புடன்
      பவள சங்கரி

      Delete
  5. அன்பின் திரு வை.கோ.

    தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி சகோதரரே.

    அன்புடன்
    பவளா

    ReplyDelete