Saturday, September 14, 2013

ஏன் இப்படி?

பவள சங்கரி

சமீபத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதிய கதை. இளகிய மனம் படைத்தவர்கள் படிக்காமல் இருப்பது நல்லது. இப்படியும் நடக்குமா? உண்மையாக இருக்குமா? அல்லது வணிக நோக்கில் இப்படி ஒரு தந்திரமோ என்ற எண்ணம் கூட தோன்றலாம்.. இல்லைங்க.. இது சத்தியமாக நடந்த ஒரு சம்பவம். நடக்கக்கூடிய சம்பவம்தான்.. படிப்பினை ஊட்டும் சம்பவம்தான்.. வாசித்துப் பாருங்கள் புரியும்!


என்னங்க, உங்க அம்மாகிட்ட இருந்து இன்னைக்கும் தபால் வந்திருக்கு. இந்த வாரத்தில் மட்டும் இது இரண்டாவது தபால்பாவங்க அத்தை, அவுங்களுக்கு ஒரு பதில் தபால்கூட போட முடியாதா உங்களுக்குநாம பதில் போடாட்டியும், அவங்க தவறாம வாரம் இரண்டு தபால் போட்டுக்கிட்டு இருக்காங்க. இந்த தடவை ரொம்ப விசனமா எழுதியிருக்காங்க. அந்த டேபிள் மேலதான் இருக்கு, எடுத்துப்பாருங்க. ஒரு நாலு வரி பதில் கடுதாசியாவது எழுதிப் போடுங்க

போடலாம். என்னத்த எழுதறது. நாம எழுதப்போற எதுவும் அவங்கள சந்தோசப்படுத்தப் போறதில்ல.. அதுக்கு சும்மாவே இருக்கலாம்னு தோணுது சந்திரா.”


அதுக்குத்தான் பேசாம அவங்களையும் இங்கேயே கூட்டிக்கிட்டு வந்துடலாம்னு சொல்றேன். அந்தம்மா, வயசான காலத்துல பாவம் ஒண்டியாளா அங்க அல்லாடிக்கிட்டு கிடக்கறாங்க. வயசாவுதில்ல.. ஏதாச்சும் ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆச்சுன்னா, நம்ம மனசும் தாங்காதில்ல.. பேசாமப்போயி வீட்டை காலி பண்ணிப்புட்டு அவங்கள இங்கேயே கூட்டிக்கிட்டு வந்திடுங்க. அடுத்த மாசம் காளிப்பட்டி தேரு வருது. அதுக்கு நம்மள கட்டாயம் வரணும்னு எழுதியிருக்காங்க. நாமளும் ஊரு பக்கம் போயி வருசம் 2 ஆவுது. தேருக்கு  ஒரெட்டு போயிட்டு, உங்க அம்மாவையும் கூட்டிக்கிட்டு வந்துடலாம்

எனக்கு மட்டும் எங்கம்மாவை நம்மகூட கொண்டாந்து வச்சிக்க ஆசை இருக்காதா .. பாவம் இங்க இந்த ஒண்டு குடித்தனத்துல அவங்களும் கஷ்டப்படணுமானுதான் தயக்கமா இருக்கு. அவசரத்துக்கு ஒதுங்கக்கூட இங்க வழியில்ல. இந்த கக்கூசு பக்கம் போகணும்னா கூட பம்ப்புல தண்ணி அடிச்சு எடுத்துக்கிட்டு ஓடணும்.. பாவம் அவங்களால அதெல்லாம் முடியுமா. என்னமோ நமக்குத்தான் தலையெழுத்து, இப்படி கஷ்டப்படணும்னு. அவங்களாவது நிம்மதியா இருக்கட்டும்ணுதானே அங்கேயே விட்டு வச்சிருக்கேன்பஞ்சம் பொழைக்க வந்த இடத்துல, பட்ற பாட்டுல, அவங்களையும் ஏன் வாட்டி வதைக்கணும்னு பாக்கிறேன் சந்திரா

இல்லைங்க, அவங்களை இங்க கூட்டிக்கிட்டு வந்துட்டோம்னா நான் வேலைக்குப் போற நேரத்துல புள்ளைங்க தனியா இருக்க வேண்டாமே. பொட்டைப் புள்ளைங்க. காலம் கெட்டு கிடக்கு. நீங்களும் கடையை சாத்திப்புட்டு வீட்டுக்கு வர மணி பத்தாவுதுநான் வர்றதுக்குள்ளேயும் இருட்டிப் போவுது. அதுக பாவம் பசியோட தனியா கிடக்குதுங்க. ஏதோ இன்னும் கொஞ்ச நாளைக்காவது நமக்கும் ஆதரவா இருக்கட்டுமே

எல்லாம் சரிதான் சந்திரா. அவங்களுக்கு அங்கயாவது அக்கம் பக்கத்துல நாலு நல்ல மனுசங்களாவது உதவிக்கு இருக்காங்க. எதுனாலும் உடனே ஓடியாந்து நிப்பாங்க. இங்க என்ன சத்தம் போட்டாலும் ஏன்னு கேக்க நாதியில்ல. அதான் பட்டணம். நம்ம பொழப்பும் இன்னும் தேறின பாட்டைக் காணோம். ஏதோ வாயுக்கும், வவுத்துக்கும் போதுமானதா இருக்கு. அம்மாவுக்கு அனுப்பற அந்த கொஞ்ச பணத்துலயே அதுவும் பாவம் சந்தோசமாத்தான் இருக்கேன்னு சொல்லுது. இன்னும் கொஞ்ச நாளைக்கு அப்படியே ஓட்டலாம்னு பாக்குறேன்

இந்த தடவையாவது காளிப்பட்டி தேருக்கு ஒரெட்டு போயிட்டு வரலாம்ங்க.. புள்ளைங்களும் ஆசைப்படுதுங்க. இந்த இயந்திர வாழ்க்கையிலருந்து இரண்டு நாளாவது ஓய்வு வேணும் போல இருக்கு.. என்னங்க.....   என்னங்க....... ”

குறட்டை சத்தம் மட்டுமே பதிலாக வந்தது சாமியப்பனிடமிருந்து. பாவம் விடியற் காலையில் மூன்று மணிக்கு எழுந்து மார்க்கெட் போய் காய் வாங்கிவந்து, ஆறு மணிக்கெல்லாம் கடை திறந்தால்தான் காலை வியாபாரம் சூடு பிடிக்கும்வேலைக்குப் போகிறவர்கள் அந்த நேரத்திற்குள் காய்கறியும், மளிகையும் வாங்க அவசரமாக வருவார்கள். இல்லையென்றால் வேறு கடைக்குப் போய்விடுவார்கள்இரவு கடை பூட்டிவிட்டு வீடு வந்து சேர பத்து மணி ஆகும். நிம்மதியான சாப்பாடு அந்த ஒரு நேரம்தான். உண்ட களைப்பில் 10 நிமிடத்தில் குறட்டை சத்தம் வீட்டைத் தூக்கும். உழைத்துக் களைத்துப்போன கணவனின் முகத்தைப் பார்த்துக்கொண்டே சந்திராவும் தூங்கிப் போனாள்.

அன்று வேலைக்குப் போயிருந்த இடத்தில் ஏனோ மனம் ஒரு நிலையில் இல்லை சந்திராவிற்கு. கார்மெண்ட்ஸ் கம்பெனியில் அட்டெண்டர் வேலை என்றாலும், ஒரு நொடிக்கூட ஓய்வு எடுக்க முடியாது. உள்ளே நுழைந்தது முதல் வெளியில் வரும்வரை பம்பரமாகச் சுழல வேண்டும். மணிக்கூலி என்பதால் அத்தனைக் கறாராக வேலை வாங்குவார்கள். குவிந்து கிடக்கும் துணிகளை ரகம் வாரியாகப் பிரித்து தனித்தனியாக மடித்து அடுக்கி வைக்க வேண்டும். இடையில் சூப்பர்வைசர் ஏதேனும் வேலை சொன்னால் ஓட வேண்டும். தையல் வேலை பார்ப்பவர்களுக்கு ஏதேனும் தேவையென்றால் ஸ்டோர் ரூமில் போய் எழுதி வைத்துவிட்டு வாங்கி வர வேண்டும். 15 நிமிட சாப்பிட ஓய்வு எடுக்கும் நேரத்தில் மட்டும்தான் வீட்டு நினைவு வரும். இன்று என்னமோ வேலையில் நாட்டம் செல்லாமல் வீட்டிற்கு நேரமாகச் செல்ல வேண்டும் என்று மனசு கிடந்து அடித்துக்கொள்கிறது. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இன்று காலை கணவனையும்குழந்தைகள் சிநேகா, தாரணி இருவரையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருக்கும்போது வெளியில் ஏதோ சத்தம் கேட்டது. பக்கத்து வீட்டுப் பெரியவர் அந்த லைன் வீட்டின் காம்பவுண்ட்டின் அருகில்  நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பவனிடம் சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். இரண்டு நாட்களாக அவ்வப்போது வந்து நின்று நோட்டம் பார்த்துக் கொண்டிருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்அந்த ஆளைப் பார்த்தாலே கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. திருட்டு முழி நன்றாகத் தெரிந்தது. மூத்தவள் சிநேகா இந்த பத்து வயதிற்கு, மதமதவென்று உடல் வளர்ந்த அளவிற்கு விவரம் இல்லை. இன்னும் மழலை மாறாமல் இருக்கிறாள். அவளை நம்பி ஆறு வயது கடைக்குட்டி தாரணியையும் விட்டுவிட்டு வீட்டைப் பூட்டி சாவியை எறவானத்தில் சொருகிவிட்டு வந்திருக்கிறாள். காலம் கெட்டுக்கிடக்கும் இந்த வேளையில் இப்படிச் செய்வது சரியில்லைதான் என்றாலும் வேறு வழியில்லையே. எப்படியோ மாலை ஐந்து மணி வரை பொழுதை ஓட்டியாகிவிட்டது. இதற்குமேல் பொறுமை இல்லை. சூப்பர்வைசரிடம் சொல்லிவிட்டுக் கிளம்ப வேண்டியதுதான். முன்னாடியே கிளம்புவதென்றால் முன்கூட்டியே சொல்ல வேண்டும் என்ற அவருடைய நிபந்தனையை இன்று நிறைவேற்ற முடியாதலால் திட்டு வாங்கித்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை.

பஸ் பிடித்து நசுங்கி, நெளிந்து, நொந்து நூலாகி வீடு வந்து சேருவதற்குள் மணி ஆறைத் தாண்டியிருந்தது. அவசர, அவசரமாக வீடு நோக்கி ஓடி வந்தாள். கடவுளே.. ஏதும் அசம்பாவிதமாக நடந்திருக்கக் கூடாது. இன்று மட்டும் நம் மனம் ஏன் இப்படி அலைக்கழிக்கிறது, இதற்கு முன்பு இப்படி ஆனதில்லையே என்று தோன்றியது. ஓட்டமும் நடையுமாக பேருந்து நிலையத்திலிருந்து வீடு நோக்கி ஓடி வந்தாள் மூச்சிரைக்க. வீட்டின் அருகில் வந்தபோது வீடு திறந்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் ஒரு கணம் நெஞ்சு அடைக்க நின்றுவிட்டாலும், மறுகணம் வேகமாக வீட்டிற்குள் சிநேகா என்று கத்திக் கொண்டே ஓடினாள். கண்ணு சிநேகா, தாரணி என்று மூச்சிரைக்க ஓடி வந்தவளைப் பார்த்து சாமியப்பன் பதறிப்போய்என்ன.. என்னாச்சுமா, ஏன் இப்படி ஓடியாறஎன்றான் பதட்டத்துடன். கணவனைப் பார்த்தவுடன் அத்தனை பாரமும் இறங்கியது போல லேசாக இருந்தது. அவன் கைகளை இறுகப் பற்றிக் கொண்டவள், காலையில் நடந்ததையும், அதனால் பதறியடித்துக்கொண்டு வீடு திரும்பியதையும் சொன்னாள். அந்த நேரத்தில் கணவன் வீட்டிற்கு வந்திருக்கக்கூடும் என்று நினைத்துப் பார்க்கவில்லை அவள். கடைக்கு அருகில் யாரோ முக்கியமான புள்ளி ஒருவர் இறந்துவிட்டதால் கடையை மூடச் சொல்லிவிட்டார்களாம். அதனால் வீட்டிற்கு வந்திருக்கிறான் என்று தெரிந்ததும் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். இதற்கு எப்படியும் ஒரு தீர்வு தேட வேண்டும் என்று இருவரும் நினைத்துக் கொண்டார்கள்.

மளமளவென்று சமையலை முடித்து, குழந்தைகளுக்கும், கணவனுக்கும் கொடுத்துவிட்டு , தானும் சாப்பிட்டு, சமையல்கட்டை ஏறக்கட்டிவிட்டு வந்தாள்இன்று எப்படியும் கணவனிடம் பேசி, மாமியாரை கூட்டிவந்துவிட வேண்டும் என்ற முடிவுடன் மெல்ல பேச்சை ஆரம்பித்தாள். மனைவியின் இந்தப் பதட்டத்திற்கு  அர்த்தம் இருப்பதை உணர்ந்துதான் வைத்திருந்தான் சாமியப்பன். அதனால் பேச்சை ரொம்பவும் வளர்க்காமல், இருவரும் ஒரு வழியாக மாமியாரைக் கூட்டிவந்துவிடுவது என்று பேசி முடிவெடுத்தார்கள். அம்மாவிற்கு அடுத்த நாள் கடிதம் எழுதிப் போட்டுவிட்டு, காளிப்பட்டி தேருக்குப் போய் மனதார வழிபாடு செய்துவிட்டு அம்மாவை கூட்டிவந்துவிட வேண்டியதுதான். ஏனோ தன் சொந்த ஊரின் உறவு அத்தோடு விட்டுப்போய்விடுமோ என்று இனம் புரியாத ஒரு ஏக்கம் இதயத்தைக் கவ்விப் பிடித்தது.

அடுத்த நாள் ஊருக்குக் கிளம்பப் போகிறோம் என்பதில் குழந்தைகளுக்கும் அப்படி ஒரு மகிழ்ச்சி. காளிப்பட்டி கந்தசாமித் திருக்கோவில் தைப்பூசத் தேர் திருவிழாவில், சேலம், ஆட்டையாம்பட்டி, வெண்ணந்தூர், ராசிபுரம், குருசாமிபாளையம், திருச்செங்கோடு, சங்ககிரி, இடைப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டம்  சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து  காவடி சுமந்தபடி அலைஅலையென நடைப்பயணமாக திரண்டு வருவார்கள். கந்தசாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுகோவிலில் உள்ள வழிவிடு கணபதி, இடும்பன், வேலாயுதசாமி, மூலவராக வீற்றிருக்கும் கந்தசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். தைப்பூசத் திருவிழாவில் பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவிலில் திரண்டு, அவரவர்  பங்களிப்புத்  தொகை செலுத்தி, 10 ஆயிரம் கிலோ பஞ்சாமிர்தம் செய்து, கந்தசாமிக்கு படையலிட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள். காலை முதல் மாலை வரை கோவிலில்  நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டும்மதியம் 3 மணிக்கு விநாயகர் தேரோட்டமும்மாலை 4 மணிக்கு கந்தசாமி சமேத வள்ளி-தெய்வானை அலங்காரத்தில் முருகன் தேரோட்ட நிகழ்ச்சியும் வழக்கமாக நடக்கும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், "அரோகரா' கோஷம் எழுப்பி இறைவனை வழிபட்டு, கோவில் வளாகத்தைச் சுற்றி தேரை இழுத்துச் செல்லும்போது பக்திப் பரவசத்தில் உடலெல்லாம் சிலிர்த்துப்போகும். தேருக்கு முன்னே, யானை செல்ல, தொடர்ந்து காவடி, கரகாட்டம் ஆடியபடி பக்தர்கள் மேள தாளம் முழங்க தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். இந்த முறை குழந்தைகள் இருவரையும் மயில் காவடி எடுக்கச் சொல்ல வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை இந்நேரம் அத்தை செய்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டே சமையலறையில் வேலை செய்துகொண்டிருந்தாள். ஒரு வழியாக எல்லாம் முடிந்து அலுத்துப்போய் படுக்கைக்குச் செல்லும் போதும், சென்று படுத்த பின்பும் ஏதோ ஒரு வேலை பாக்கியிருப்பதாக உறுத்திக் கொண்டேயிருந்தது. உடல் அசதியில் எழுந்து போகமுடியாமல் , காலை பார்த்துக்கொள்ளலாம் என்று கண்ணயர்ந்து விட்டாள்.

குழந்தைகளை பள்ளிக்கு அவசரமாக தயார் செய்து கொண்டிருந்தாள். வழக்கம்போல கடைக்குட்டி சாப்பிடுவதற்கு அடம் பிடித்தது. இன்று சற்று அதிகமாகவே அடம் பிடித்தாள். தோசை ஊற்றி, அவளுக்குப் பிடித்த தேங்காய்ச் சட்னி வைத்துக் கொடுத்தும் வாங்க மறுத்தவளை கோபத்தில் கன்னத்தில் ஒரு தட்டு தட்டியதுதான் தாமதம் அழுது ஆர்ப்பாட்டம் செய்து விட்டு பின்பு சிணுங்கிக் கொண்டே ஒரு தோசை சாப்பிட்டு முடித்து இருவரும் ஒரு வழியாக வேனில் ஏறினார்கள். அடுத்து கணவன் அவசரமாக வந்து நின்றுகொண்டு நேரமாகிவிட்டது என அவசரப்படுத்திக் கொண்டிருந்தான். தானும் சீக்கிரம் கிளம்ப வேண்டுமே என பரபரப்பாக இயங்க ஆரம்பித்தாள்.

இன்னைக்கும் மாவிலருந்து கரண்டியை எடுக்காம அப்படியே அரைகுறையா மூடி வச்சியா. உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புத்தி வராது. இங்க பாரு எப்படி மாவு காய்ந்து போயிருக்கு. அரிசி விக்கிற விலைக்கு எப்படி நாசம் பன்னறே நீ.. உள்ளுக்குள்ள எதுனாச்சும் ஊறிக்கிட்டு போனாக்கூட தெரியாது

அப்பப்பா, ஆரம்பிச்சாச்சா.. மாமியார் இல்லைங்கற குறையே தெரியாம உங்க டியூட்டியை ஒழுங்கா செய்துடறீங்க.. சரி, சரி எல்லாம் இன்னைக்கோட முடிஞ்சி போச்சே. நம்ம ஆட்டம் க்ளோஸ். நாளையிலருந்து எனக்கும் ஒரேடியா ரெஸ்ட்.. அத்தை வந்தா இந்த பொறுப்பெல்லாம் எடுத்துக்குவாங்களே..…  அப்பாடி..”

தட்டை எடுத்து வைத்து, அருகில் தண்ணீரும் சட்னி கிண்ணமும் வைத்துவிட்டு தோசைக்கல்லை அடுப்பில் போட்டாள். கல் காய்ந்தவுடன் மாவை எடுத்து ஊற்றினாள். அடுத்த கரண்டி மாவை உள்ளிருந்து எடுத்தவள்.. ஏதோ கறுப்பாக சுண்டு விரல் மொத்தத்தில் மொழு மொழுவென்று... தூக்கினால் அரை அடி நீளத்திற்கு .. என்னது இது. எப்படி மாவுக்குள்ள வந்தது.. முழுவதும் தூக்கினால் வாயைத் திறந்து கொண்டு இறந்து கிடந்தது.. ஐயோ.. என்னது இது.. கடவுளே குட்டிப் பாம்பு. எப்படி இதுக்குள்ள..
ஏய் சந்திரா.. என்னடி இது? ஐயோ குழந்தைகளுக்கு இந்த மாவுலயா தோசை ஊத்திக்குடுத்தே.. அடிப்பாவி.. 
சாமியப்பனின் செல்போன் சிணுங்க ஆரம்பித்தது..  ஓடிச்சென்று எடுத்தவன் மறு முனையில் வந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் அலறியபடி பிதற்றினான். பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் திடீரென்று வாயில் நுரை தள்ளி மயங்கி சரிந்துவிட்டனராம். உடனே வரச்சொல்லி பள்ளி ஆசிரியை போன் செய்தார். அப்படியே எழுந்து தன் யமகாவை உதைத்து, ஏறி உட்கார்ந்தது மட்டுமே தெரியும் அவனுக்கு.. தெருவில் போவோர் வருவோர் யாரும் கண்ணிற்கு புலப்படவில்லை. ‘டேய், சாவு கிராக்கி, ஊட்டுல சொல்லிட்டு வந்துகிணியாடா பேமானி, உங்கப்பன் ஊட்டு ரோடாட்டம் நீ பாட்டுக்கு கண்ணை மூடிக்கினு போறயேடாஎன்று ஆட்டோகாரன் கத்துவது கூட காதில் விழாமல் போய்க்கொண்டிருக்கிறான் சாமியப்பன்...

குழந்தைகள் வாயில் நுரை தள்ளியது என்றால், என்ன நடந்ததோ தெரியலியே.. பாம்பு விசம் தலைக்கு ஏறியிருக்குமோ. ஐயோ சாப்பிட மாட்டேன்னு அடம்பிடிச்ச குழந்தையைக்கூட கட்டாயப்படுத்தி விசத்தை கொடுத்துப்பிட்டேனே.. என் செல்வங்களை இனி பார்க்க முடியுமா.. நானே அவங்களுக்கு எமனாயிட்டேனே..  இனிமேலும் எதையும் கண்ணுல பார்க்கக்கூடாது. போதுமடா சாமீ… இந்த பிழைப்பு… மளமளவென மர அலமாரியைத் திறந்தவள் ஒரு நூல் சேலையை உருவினாள். அங்கேயே மேலே உத்திரத்தில் தொங்கிய ஃபேனில் அந்தச் சேலையைக் கட்டி, தலையை உள்ளே விட்டு... தூக்கில் தொங்கிவிட்டாள்..  கைகால் வெட்டி இழுக்க, நாக்கு வெளியே தள்ளி அப்படியே அடங்கிவிட்டாள்.

சுய நினைவே துளியும் இல்லாத நிலையில் யமகா போன திசையில் அப்படியே போய்க்கொண்டிருந்தவன் எதிரில் வேகமாக வந்த தண்ணீர் லாரியைக் கவனிக்காமல் போய்க்கொண்டிருந்தான். திருப்பத்தில் திரும்பும்போது எதிரில் வந்து நேருக்கு நேர் மோதியது அந்த லாரி. பத்து அடித் தள்ளி தூக்கி வீசியது சதைப்பிண்டமாய். இரத்தச் சகதியில் துடிதுடித்து அடங்கினான் சாமியப்பன்.

பெற்றோர் வரும்வரை காத்திருந்தால் ஆபத்து என்று உணர்ந்த பள்ளி முதல்வர், குழந்தைகளை பள்ளி வேனில் எடுத்துப் போட்டுக்கொண்டு இரண்டு ஆசிரியைகளையும் உடன் அனுப்பினார். மயங்கிக் கிடந்த குழந்தைகளிடம் கொஞ்சமும் அசைவு இல்லை. உடல் சில்லிட்டுக் கொண்டிருந்தது. உடலெல்லாம் நீலம் பூத்துக்கிடந்தது. மருத்துவமனையில் எடுத்துச் சென்றபோது, உயிர் பிரிந்துவிட்டது என்ற பதில்தான் வந்தது. ஆசிரியைகள் அதிர்ச்சியில் செய்வதறியாது உறைந்து நின்றார்கள்.


இது எதுவுமே தெரியாமல், அடுத்த நாள் வரப்போகும் தன் பேரக் குழந்தைகளுக்காக  பாட்டி, அவர்களுக்குப் பிடித்த காளிப்பட்டி கை முறுக்கும், அதிரசமும் வாங்கி வைத்துக்கொண்டு, மகனுக்குப் பிடிக்குமே என்று வீட்டில் லட்டு பிடித்துக் கொண்டிருக்கிறார்.

நன்றி: வல்லமை

No comments:

Post a Comment