Sunday, October 20, 2013

அன்பெனும் சிறைக்குள் ......... !


பவள சங்கரி
“அன்சார், எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு.. இது சரிவருமா. நம்மால் தனியாக சமாளிக்க முடியுமா? இனிமேல் நம் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் வரும். நாம் நிறைய நம் சுகங்களை விட்டுக்கொடுக்க வேண்டிவரும்.  இரவு முழுமையான தூக்கம்கூட கேள்விக்குறியாகிவிடும்”
“அது மட்டுமா டார்லிங்.. நமக்கு இடையில் இன்னொரு ஜீவன் வரும். பல தியாகங்கள்கூட செய்ய வேண்டிவரும், ஆனால் சமாளிக்கலாம் டோனி, ஒன்னும் பிரச்சனை இல்லைடா”
“இது என்ன சாதாரண விசயமா அன்சார்.  எவ்ளோ பெரிய விசயத்தை இவ்ளோ சாதாரணமா சொல்ற, ஏதோ டெக்னிகல் பிராஜக்ட் செய்வது போல. அப்டீல்லாம் கணக்கு போட்டு ஒரு தியரிக்குள்ள செய்யுற பிராஜக்ட் இல்லப்பா இது ”?

“ஏய், என்னம்மா இது ஊருல உலகத்துல யாரும் செய்யாத ஒன்னை என்னமோ நாம அதிசயமா செய்யிற மாதிரி சொல்றயே..”
“அட போப்பா, அவங்களுக்கெல்லாம் துணைக்கு அம்மா, அப்பா, மாமியார், நாத்தனார் எல்லாம் இருக்காங்க. நாம அப்படியா சொல்லு. நாமதான் ஏதோ உலக மகா தப்பு பண்ணிட்ட மாதிரி ஒதுக்கப்பட்டிருக்கோமே” கண்களில் கண்ணீர் வழிய தொண்டை கம்ம சொன்னாள்.
“ஹேய்.. ஸ்வீட்டி பை.. என்னது இது. இன்னைக்குப் புதுசா கண்ணிலே தண்ணியெல்லாம்” மார்பினுள் முகம் புதைத்து மெல்லிய விசும்பலுடன் இறுக்கி அணைத்த அவளுடைய கரங்கள் கதைகள் பல சொல்ல, முகத்தை நிமிர்த்தி, அவள் கண்களை உற்று நோக்கியவன் கண்களில் மென்மையாக முத்தமிட்டு, மேலும் அவள் கண்ணீரோ, வாய் வார்த்தையோ தொடராமல் கட்டுப்படுத்தினான்.
அருகில் பால் மணம் மாறாத குழந்தையைப்போல கபடமற்ற முகத்துடன், தன் கைக்குள் அவள் கையை அடக்க முயற்சித்துக்கொண்டே உறங்கும் தன் அன்பு மனைவியைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்த குழந்தைக்கும் ஒரு குழந்தை பிறக்கப்போகிறது, தன்னுடைய வம்சம் கிளைவிடப் போகிறது என்ற எண்ணம் குதூகலமாக இருந்தாலும், தான் ஒருவனால் இந்த மாபெரும் காரியத்தை சாதிக்க முடியுமா. குழந்தையை நல்லபடியாக அவள் பெற்று எடுக்கும் வரை நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும், அதைவிட குழந்தையை பராமரிப்பது இன்னும் சிரமம். முதலில் குழந்தையை தூக்குவதற்குப் பழக வேண்டும். டாக்டர் எல்லாம் கற்றுக்கொடுப்பார் என்ற நம்பிக்கை இருந்தாலும், இருவருக்கும் இத்தனை சொந்த பந்தங்கள் இருந்தும் இது போன்று அனாதையைப் போன்றதொரு வாழ்க்கை அவசியமா என்று சலிப்பாக இருந்தது. ஒரு வேளை தன் அம்மா இருந்திருந்தால் தன்னை புரிந்துகொண்டு இப்படி தவிக்க விட்டிருக்கமாட்டார்களோ என்ற எண்ணம் வந்தபோது கண்ணோடு சேர்ந்து உள்ளமும் கலங்கத்தான் செய்தது. அப்படி என்னதான் தவறு செய்துவிட்டோம் தாங்கள் என்று இன்றுவரை புரியவில்லை. நாங்கள் இருவரும் நண்பர்களாக இருந்தபோது பலமுறை நான் டோனி வீட்டிற்கும், டோனி எங்கள் வீட்டிற்கும் வந்திருக்கிறாள். அப்போதெல்லாம் இருவர் வீட்டிலும் அன்பாக நடத்தியவர்கள், எங்களுக்குள் காதல் என்ற அந்த ஒன்று புகுந்தவுடன் நாங்கள் ஏதோ கொலை மாபாதகம் செய்துவிட்டது போல எங்களை வெறுப்புடன் பார்த்தது முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும், போகப்போக அவர்களை எப்படியும் சமாதானம் செய்துவிடலாம் என்று இறுதி வரை நாங்கள் நடத்திய போராட்டம் தோல்வியில்தான் முடிந்தது. தூக்கம் பின்னோக்கிய நினைவுகளை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.
சண்டையும், வாக்குவாதமும், போட்டியும், பொறாமையும் என சாதாரணமாக இருந்த நட்புதான் அது. எந்த புள்ளியில் இந்த காதல் மலர்ந்தது என்று புரிந்து கொள்வது எளிதாக இல்லை. இந்த காதல் என்பது ஒரு மலரைப்போல எவரும் அறியாத வண்ணம் , அற்புதமான அந்த ஒரு நொடிப்பொழுதில் எப்படியோ மலர்ந்துவிடுகிறது. மலர்ந்த மறு வினாடியே சுற்றம், சூழல் என்ற எதையுமே சட்டை செய்யாமல் மணம் பரப்பவும் ஆரம்பித்துவிடுகிறது. ஒரே கல்லூரியில் ஒன்றாகப் படித்து, ஒன்றாக கேம்பஸ் இண்டர்வ்யூவில் முதல் சுற்றிலேயே தேர்வு செய்யப்பட்டு, இருவரும் ஒரே கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்ததும், ஒரே பிராஜக்டில் இருந்ததால் முழுவதும் தொடர்பிலேயே இருக்க வேண்டிய நிலை.  அமெரிக்காவிற்கு ஆன்சைட் வாய்ப்பு இருவருக்கும் கிடைத்ததும் எல்லாமே எந்த முயற்சியும் இல்லாமல் தானாகவே நடந்ததுதான். அமெரிக்காவில் சென்று அன்சார் தன் நண்பர்களுடன் தங்கவும், டோனி தன் உறவினர் ஒருவர் வீட்டில் கொஞ்ச நாட்கள் தங்குவதாகத் திட்டம். கணவன், மனைவி என அவர்கள் இருவர் மட்டுமே வாழ்வதாலும், அது  3 படுக்கையறை வசதி உள்ள அவர்களுடைய சொந்த வீடு என்பதாலும் டோனி அங்கு பேயிங் கெஸ்டாக தங்குவதில் எந்த பிரச்சனையும் இருக்கவில்லை.  நாட்கள் மாதங்களாக உருண்டோடிக் கொண்டிருந்தன.
நீரோட்டம் போல வாழ்க்கை ஒரே சீராக ஓடிக்கொண்டிருந்தால் எந்த மாற்றமும் வருவதில்லை. ஏதோ சிறு சலனம் ஏற்பட்டாலும்  ஒரு மாற்றம் நிகழத்தான் செய்கிறது. அது பயணத்தின் பாதையை வழிமாற்றவும் கூடும். டோனி தங்கியிருந்த வீட்டின் உறவினர் தம்பதி திடீரென்று இந்தியா செல்ல வேண்டிய அவசர நிலை. டோனிக்கு தனியாக இருப்பதில் எந்த பிரச்சனையும் இல்லையென்றாலும் ஒரு சமயம் தனிமையின் பாரம் அவளை நிலைகுலையச் செய்ததென்னவோ உண்மைதான்.. லேசாக சளி பிடித்திருந்தது ஆரம்பத்தில். ஊரிலிருந்து கொண்டு வந்திருந்த மாத்திரையை சாப்பிட்டும் சரியாகவில்லை. வீட்டில் தனியாக இருக்கவும் பிடிக்கவில்லை. அப்படியே ஆபீசும் சென்று வந்துகொண்டிருந்தாள். அன்சாரும் உதவி செய்வதாகச் சொல்லியும் வேண்டாம் என்று மறுத்துவிட்டு தானே சமாளிக்க செய்த முயற்சியும் பலிக்கவில்லை.
இரண்டு நாட்களாகக் காய்ச்சல் அதிகமாகி அலுவலகம் செல்ல முடியவில்லை. கார் டிரைவிங் சுத்தமாக செய்ய முடியவில்லை. சாப்பிடவும் பிடிக்காமல் சுருண்டு கிடந்தாள். அன்சார் போன் செய்து பார்த்துவிட்டு பதில் இல்லாதலால் சந்தேகப்பட்டு அன்று நேரே அலுவலகத்திலிருந்து அவளைப் பார்க்க வந்தான். காய்ச்சலில் அனத்திக் கொண்டிருந்தவளைப் பார்க்க பாவமாக இருந்தது. மருத்துவமனைக்கு கூட்டிச்செல்லும் வழியெல்லாம், ‘சாரி, அன்சார். உனக்கு தொந்திரவு கொடுத்துவிட்டேன். ரொம்ப முடியலைப்பா.. அதான்’ என்று புலம்பிக்கொண்டே வந்தாள்.  அவளைச் சமாதானப்படுத்தி ஒரு வழியாக வீட்டில் கொண்டு வந்துவிட்டாலும் ஃபுளூ காய்ச்சல் என்பதால் அடுத்தடுத்த நாட்களில் அன்சாரின் உதவி அவளுக்கு மிகவும் தேவைப்பட்டதை உணர்ந்து அவனும் சில நாட்கள் அவளுடனேயே தங்கி அவளை கவனித்துக்கொள்ள வேண்டி வந்தது. மனதளவில் இருவரும் நெருங்கி, ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ள இது பயன்பட்டது. இந்த நெருக்கம் பாதியில் முடிவதற்காக ஏற்பட்டது அல்ல என்பதையும் வெகு விரைவில் புரிந்து கொள்ள வேண்டிய சூழலும் ஏற்பட்டுவிட்டது. மெல்ல மெல்ல உடல் தேறிவந்த நிலையில் அன்சார் தன் இருப்பிடம் நோக்கிச் செல்ல வேண்டிய நேரம்தான் அவளுக்கு வேதனைக்குரிய நேரமானது. ஒரு நாள்கூட இனி பிரிந்து இருக்க முடியாது என்ற தேவை இருவருக்கும் புரிந்தது. கொஞ்சமும் யோசிக்காமல் இருவரும் உடனடியாக வீட்டில் சொல்லப்போக அங்குதான் பிரச்சனை வெடித்தது. உடனடியாக டோனியின் தாய் கிளம்பி நேராக அமெரிக்கா வந்து சேர்ந்தார். பிறகென்ன மகளை சமாதானப்படுத்தி சொந்தத்தில் வேறு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்ய அவளைச் சம்மதிக்க வைக்க தலைகீழ் நின்று பார்த்தும் அவளுடைய பிடிவாதம் தளர்வதாக இல்லை. வேறு வழியில்லாமல் ஒன்றும் பேசாமல்  இனிமேல் தங்கள் மூஞ்சியிலேயே முழிக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு சென்று வருடம் 2 ஆகியும் இன்றுவரை எந்த தொடர்பும் இல்லை. டோனியே போன் செய்தாலும் யாரும் பேசத் தயாராக இல்லை…  ஆனால் அன்சார் ஒரு படி மேலே சென்று அவர்கள் வீட்டில் இந்த திருமணத்தை மறுத்தாலும் தனக்கு கவலையில்லை என்றும் தான் டோனியுடன் சேர்ந்து வாழப்போவதாகவும் சொல்லிவிட்டான். தாயில்லாத மகனை அதற்கு மேல் கண்டிக்க முடியாமல் அவன் தந்தையும் அமைதியாகிவிட்டார். எந்த பிரச்சனையும் இல்லாமல், யாரைப்பற்றியும் கவலையும் படாமல் சந்தோசமாக திருமணம் செய்துகொண்டார்கள்.
பழைய நினைவுகளில் மூழ்கி வெகுநேரம் தூங்காததால் எழுந்திருக்க கொஞ்சம் சோம்பல்தான்.. அட, டோனியும் இன்னும் எழுதிருக்கவில்லையே. ஆபீசிற்கு கிளம்ப நேரமாகிவிட்டதே என்று மெல்ல டோனியை தட்டி எழுப்பினான்.  முனகிக்கொண்டே எழுந்தவள் முகத்தில் களைப்பு ரேகை இருந்தது. அன்சார் ஒன்றும் பேசாமல் சூடாக ஒரு கப் டீ போட்டு எடுத்துவந்தான். தன் அக்கா இப்படி ஒரு நிலையில் இருந்தபோது மசக்கை எப்படி இருக்கும் என்று ஓரளவிற்கு தெரிந்துதான் வைத்திருந்தான். டோனி இரண்டு வாய் டீ குடித்திருப்பாள் அதற்குள் திடீரென்று குடல் புரட்டி அவளையறியாமல் உமட்டிக்கொண்டு வந்தது. அன்சார் சற்றும் தயங்காமல் அப்படியே இரு கைகளையும் நீட்டிப் பிடித்து துளியும் அருவெறுப்பில்லாமல் அருகிலிருந்த வாஷ்பேசினில் போட்டு, கையலம்பிக்கொண்டு, அவளருகில் வந்து பக்கவாட்டில் அணைத்து மெல்ல வாஷ்பேசினருகில் கூட்டிச் சென்று வாய் கொப்பளிக்கச் செய்து முகம் அலம்பி ஒரு குழந்தையைப்போல தன் மார்பில் அவள் தலையை சாய்த்துக்கொண்டு படுக்கையறைக்கு கூட்டிச் சென்று படுக்க வைத்தான். டோனியின் கண்களில் மாலை மாலையாக கண்ணீர். பதறிப்போனவன், ‘என்னடா.. என்ன ஆச்சும்மா..  ஆர் யூ ஓகே.. டியர்?  ஹாஸ்பிடல் எமெர்ஜென்ஸிக்குப் போகலாமா’ என்றான்.
அவன் பார்வையில் தெரிந்த பரிவும், பாசமும் அவளை மேலும் அலைக்கழித்தது. என்ன மனுசன் இவன்.. சே.. அம்மாவைப் போல இப்படி ஒரு அன்பை ஒருவனால் காட்ட முடியுமா. உள்ளமெல்லாம் பூரித்துப்போக அப்படியே அவனைக் கட்டிக்கொண்டாள். தாயைப்பிரிந்து இருக்கும் துன்பம் துளியும் அண்டாமல் இவனைத் தவிர யாரால் காக்க முடியும். அவளுடைய அணைப்பின் இறுக்கத்தில் தனக்கும் ஓரளவிற்குப் புரிய, அதே அன்புடன் தலையை தடவிக்கொடுத்து, மெல்ல விடுவித்து படுக்கையில் கிடத்தினான். நேரம் ஓடிக்கொண்டிருப்பதை அவள் துளியும் சட்டை செய்யவில்லை. அவன் கைகளையும் இறுக்கிப் பிடித்துக்கொண்டு நகரவிடாமல் கட்டிப்போட்டாள்.
“ஏய் என்னடா இது.. ஆபீசிற்கு நேரமாகலையா.. போய் கிளம்பணும். நீ வேணுமானா இன்னைக்கு ரெஸ்ட் எடுத்துக்கோ. போன் செய்து சொல்லிடலாம். உனக்கு ஏதாவது கொஞ்சம், ரசம் சாதமாவது செய்து வச்சுட்டுப் போறேன். சரியா…”
“ம்ம்ம்.. நோ.. வேண்டாம்ப்பா. இன்னைக்கு நீயும் ஆபீஸ் போக வேண்டாம். ப்ளீஸ்.. என்கூடவே இரேன் இன்னைக்கு…” செல்லக் கொஞ்சல்.
“இல்ல டார்லிங். எனக்கு ஆபீஸ் போகணும் இன்னைக்கு. கிளையண்ட் மீட்டிங்கெல்லாம் இருக்கு. நீ ரெஸ்ட் எடுத்துக்கோ. நான் சீக்கிரம் வரப்பார்க்கிறேன்”
முடியாது என்று ஒரேயடியாக அடம் பிடித்தாள் என்பதற்காக ஆபீசில் போன் செய்து வீட்டில் இருந்தே வேலை பார்ப்பதற்கு அனுமதி வாங்கினான். இந்த கணினி யுகத்தில் இது ஒரு பெரிய வரம். எங்கு உட்கார்ந்துகொண்டும் வேலையை கவனிக்க முடிகிறது. எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது.
அன்று ஞாயிற்றுக்கிழமை. நண்பன் வீட்டில் பாட்லக் பார்ட்டி. வீட்டில் ஏதும் செய்ய முடியாததால் கடையில் சென்று நிறைய நொறுக்குத் தீனிகள் வாங்கிக்கொண்டு சென்று மணிக்கணக்காக நண்பர்களுடன் அரட்டையும், கும்மாளமுமாக பொழுது இனிமையாக கழிந்து கொண்டிருந்தது. முதல் நாள்தான் டோனி, ஆறாவது மாதம் என்பதால்  செக்கப்பிற்குச் சென்று ஸ்கேன் பார்த்ததில் பெண் குழந்தை என்று தெரிந்தபோது அன்சாருக்கு ஏகப்பட்ட குஷி. நல்ல வேளை இந்தியாவாக இருந்தால் என்ன குழந்தை என்று கேட்டால் பிய்த்துவிடுவார்கள். அமெரிக்கா என்பதால் தயக்கமில்லாமல் குழந்தையின் பாலினத்தை தெரிந்துகொள்ள முடிந்தது என்ற நிம்மதி. தாயை இழந்து சென்ற 7, 8 ஆண்டுகளாக அனாதையைப் போல மனநிலையில் இருந்தவனுக்கு பெண் குழந்தை என்று சொன்னவுடன் தம் அம்மாவே வந்து பிறக்கப்போவதாக நம்பிக்கை வந்தது. குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப் போகிறார்கள் என்ற ஆர்வம் நண்பன் ரகுவிற்கு வர அவன் ஆரம்பித்த அந்த நொடிதான் எதற்கோ பாதை அமைத்துவிட்டது.
பெயரைப் பற்றி கேட்டவுடன் சற்றும் தயங்காமல் அன்சார், வஸீமா என்று தன் தாயின் பெயரை சொன்னது டோனிக்கு மகிழ்ச்சியில்லை என்பது அவள் முகம் போன போக்கில் தெரிந்தது. வீட்டிற்கு வந்தும் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டிருந்தாள். அன்சாருக்கோ ஆச்சரியமாக இருந்தது, இறந்து போன தன் தாயின் பெயரை வைப்பதில் இவளுக்கு என்ன பிரச்சனை என்று கோபமாகவும் வந்தது. ஆனாலும் அதற்குப் பிறகு பல முறை விவாதம் முற்றி சண்டையில்தான் முடிந்தது. இத்தனை நாட்கள் இல்லாத ஈகோ ஏனோ திடீரென்று தலைதூக்கி வீட்டில் நிம்மதியை கெடுத்துக் கொண்டிருந்தது. டோனிக்கு தன் பாட்டியின் பெயரை வைக்க வேண்டும் என்பதைவிட அன்சாரின் அம்மாவின் பெயரை வைப்பதில் சுத்தமாக விருப்பமில்லை. அன்சார் தங்களுக்கிடையே மதம் என்றுமே ஒரு பிரச்சனையாக வரக்கூடாது என்பதற்காகவே தங்கள் திருமணத்தைக்கூட எந்த மதம் சார்ந்தும் நடத்தக் கூடாது என்று உறுதியாக இருந்தான். இரண்டு வீட்டிலும் சம்மதம் கிடைக்காத நிலையில் நண்பர்கள் முன்னிலையில், நயாகரா நீர்விழ்ச்சியின் முன் இயற்கை அன்னையை சாட்சியாக வைத்துக்கொண்டு மோதிரம் மாற்றி தங்கள் திருமணத்தை நடத்தியதைக்கூட மறந்துவிட்டாள் இன்று. இந்த நேரத்தில் தேவையில்லாமல் இதைப்பற்றி பேசி அவளை டென்சன் ஆக்க வேண்டாம் என்று அன்சாரும் கூடியவரை விவாதத்தை தவிர்த்து வந்தான். டோனிக்கு நல்லபடியாக குழந்தை பிறந்தால் போதும் என்றுதான் இருந்தது அவனுக்கு. டோனி முன்பு தங்கியிருந்த அவளுடைய உறவினரும் இந்தியாவிற்குச் சென்றவர் குடும்பத்தில் பெரியவர்கள் உடல்நிலை மோசமாக இருந்ததால், அருகில் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டியிருந்ததால் பெரும்பாலும் அங்கேயே தங்கிவிட்டார். இந்த நேரத்தில் எந்த உதவியும் இல்லாமல் நிறை மாத கர்பிணியாக அவள்படும் துன்பத்தைச் சகிக்க முடியாமல் பல நாட்கள் வீட்டிலிருந்தே வேலை பார்த்தான். டோனியும் அடிக்கடி லீவ் போட்டுக் கொண்டுதானிருந்தாள். பிரசவ விடுமுறை கிடைக்க இன்னும் 15 நாட்கள் இருந்த நிலையில் வீட்டு வேலைகள் அனைத்தையும் தானே இழுத்துப் போட்டுக்கொண்டு தாயுமானவனாக இருக்கும் கணவனைப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது. ஆனாலும் தன்னால் கொஞ்சமும் உதவ முடியாமல் போனதுதான் உண்மை. இன்னும் குழந்தை பிறந்தவுடன் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று கவலையாகத்தான் இருந்தது. அன்சாரும் அவளுடைய தாய்க்கு பேசி வரவழைக்கச் சொல்லி எத்தனையோ முறை சொல்லியும் அவளுடைய ஈகோ அதற்கு இடம் கொடுக்கவில்லை. தன்னைப் பற்றிய அக்கறை கொஞ்சமும் இல்லாத பெற்றோரைப் பற்றி தான் மட்டும் ஏன் நினைக்க வேண்டும் என்ற ஈகோ.. எப்படியோ சமாளிக்கலாம் என்று வீம்பாக இருந்தாள்.  9 மாதங்கள் ஓடிவிட்டது. டாக்டர் கொடுத்த டியூ டேட் வருவதற்கு இன்னும் 15 நாட்களே இருக்கிறது. ஏனோ அது 15 மாதம் போல இழுத்துக்கொண்டிருந்தது.
அன்று வெள்ளிக்கிழமை. விடியலிலேயே முழிப்பு வந்துவிட்டது. அன்சார்  சீக்கிரம் எழுந்து குளித்து எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தான். ஆச்சரியமாக இருந்தது அவளுக்கு. முதல்நாள் கூட ஒன்றும் சொல்லாமல் இப்படி திடீரென்று எங்கே கிளம்புகிறான் என்று புரியாமல் அவன் முகத்தைப் பார்த்தாள். அப்போதுதான் அவள் வந்து தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தவன், சீனாவிலிருந்து ஒரு முக்கியமான க்ளையண்ட் வருவதால் தானே நேரில் சென்று விமான நிலையத்திலிருந்து கூட்டிவர வேண்டும் என்றான். அவளுக்கு ஏனோ திக்கென்றிருந்தது. ஏர்போர்ட் சென்று திரும்ப குறைந்தது 4 மணி நேரமாவது ஆகுமே.. ஏனோ உடம்பும் ஒரு மாதிரி இருப்பதால் தனியாக இருக்க அச்சமாகவும் இருந்தது. அவசரமாகக் கிளம்புபவனை எப்படி நிறுத்துவது என்றும் புரியவில்லை. அன்சாரும் அவள் மன ஓட்டத்தை கொஞ்சமும் சட்டை செய்யாமல் கிளம்பிக் கொண்டிருந்தான். வழக்கம்போல ஈகோ முந்திக் கொள்ள அவனிடம் ஏதும் பேசவில்லை அவள். தன் நிலையைப் பார்த்து அவனே வெளியே போகாமல் கூடவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அவனோ அதைக் கண்டுகொள்வதாகவே இல்லை. தன்னையறியாமல் மனதில் ஏதோ ஒரு ஏக்கம் குடிகொண்டு மன நிம்மதியைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது.  இனம்புரியாத ஒரு அச்சம் தொடர்ந்துகொண்டே இருந்தது. பிரசவம் பற்றி அனைத்தும் வீடியோவில் பார்த்தும், மருத்துவர் மூலம் அறிந்தும் இருந்தாலும் அந்த நினைவு ஒரு படபடப்பை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. ஆதரவாய் அள்ளி அணைக்க அன்னைகூட அருகில் இல்லையே என்ற ஏக்கம்தான் அது என்று புரிந்தாலும் இனிமேல் என்ன செய்ய முடியும் என்று நினைத்த போது அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அன்சார் கிளம்பியவுடன் அமைதியாக போய் கொஞ்சம் பால் சூடு செய்து வெதுவெதுப்பாக குடித்துவிட்டு அமைதியாக படுத்துக்கொண்டாள். அரை மணி நேரம் ஆகியிருக்கும். ஏதோ ஒரு இயலாமை தெரிந்தது. அடி வயிற்றில் மெல்ல சுருட்டிப்பிடித்தது. வலி மெல்ல பின்புறமெல்லாம் பரவுவது போல இருந்தது. இன்னும் மருத்துவர் சொன்னதற்கு 15 நாட்கள் இருக்கிறதே.. பிரசவ வலிதான் ஆரம்பித்துவிட்டதோ தெரியவில்லையே. கடவுளே, கர்த்தரே, அன்சார்கூட அருகில் இல்லையே என்ன செய்யப்போகிறேன் என்று நினைத்துகொண்டே மெல்ல படுக்கையை விட்டு எழுந்தாள். வலி சற்று குறைந்ததுபோல இருந்தது. மெதுவாக நடந்து பார்க்கலாம் என்று மெல்ல அடி மேல் அடி எடுத்து வைத்தாள். ஒவ்வொரு அடிக்கும் சுள்ளென்றது. திடீரென்று அடி வயிறு இறுகியது போன்று கல்லாட்டம் ஆனது. குழந்தை எந்த அசைவும் இல்லை என்ற கவலை வேறு வந்தது. கொஞ்ச நாட்களாக குழந்தையின் அசைவு நன்றாகவே தெரிந்து கொண்டிருந்தது. இன்று என்னமோ அசைவே இல்லாதது இன்னும் அச்சமாக இருந்தது. குழந்தைக்கு ஏதும் பிரச்சனையாக இருக்குமோ என்று.  அன்சாருக்கு போன் செய்யலாமா என்று நினைத்தவள் ஏர்போர்ட்டில் இருப்பவனை தொந்திரவு செய்யவும் பிடிக்கவில்லை. என்ன சூழ்நிலையோ என்னமோ என்று யோசனையாக இருந்தது. அப்படியே மெதுவாகச் சென்று மீண்டும் படுத்துக்கொண்டாள். ஆனால் 10 நிமிடத்திற்கு மேல் படுக்கமுடியவில்லை. மீண்டும் பின்புறம் ஒரு குடைச்சலாக வலி ஆரம்பித்தது. லேசாக வியர்க்க ஆரம்பித்தது. போய் தண்ணீர் எடுத்து கொஞ்சம் குடித்தாள். உமட்டிக்கொண்டு வந்தது. வலி பரவுவது நன்கு உணர முடிந்தது. ஏற்கனவே மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல தயாராக வைத்திருந்த பையை எடுத்து வந்து அதில் புதிதாக வாங்கி வந்த மெட்டர்னிட்டி கவுனை உள்ளே வைத்தாள். அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை. மெடிகல் கிட் இருக்கிறதா என்று சரிபார்த்துக்கொண்டாள். வழியில் ஏதும் பிரச்சனை என்றால் தேவையென்று கத்தரிக்கோல் தொப்புள்கொடி கட்டுவதற்கான க்ளிப் போன்ற அனைத்தும் தயாராக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டாள். அன்சார் சென்று 3 மணி நேரம் ஆகிவிட்டது. போன் செய்யலாமா என்று நினைத்தாள். அதற்குள் பாத்ரூம் போக நினைத்தவள், கண்கள் சுற்றி மயக்கம் வருவது போல இருந்தது. வலி வேகமாக பரவ ஆரம்பித்துவிட்டது. ஹை ரப்சர் ஆகிவிட்டது கசகசப்பிலிருந்து புரிந்தது. பனிக்குடம் உடைந்து விட்டது புரிந்தது. இனிமேல் பொறுத்திருப்பது சரியல்ல என்று புரிந்தது. அன்சாருக்கும் போன் செய்தும் அவன் எடுக்கவில்லை. டிரைவிங்கில் இருப்பானோ என்று நினைத்தவள், நண்பர்கள் யாருக்காவது போன் செய்யலாம் என்றால் வீட்டில் இருப்பவர்கள் யாரும் இல்லையே  என்று மீண்டும் அன்சாருக்கு போன் செய்துவிட்டு இனி காத்திருப்பது சரியல்ல என்று தானே மருத்துவமனை கிளம்ப முடிவெடுத்தாள். தன் கார் சாவி இருக்கும் இடம் கூட தோன்றவில்லை. பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்…. அன்சாரின் கார் வந்து நிற்கவும் நிம்மதியில் அன்சார் என்று கத்திவிட்டாள். அடுத்த நொடி அன்சார் அதிர்ச்சியுடன் அவள் நிலையைப் பார்த்து இறங்கி ஓடிவந்து ஆதரவுடன் அணைத்துக் கொண்டான். எதிரில் நிற்பது யார்… தன் கண்களையே நம்ப முடியாமல் தேய்த்துக்கொண்டு பார்த்தாள்.. ஒன்றும் புரியவில்லை. டோனி என்று வந்து கட்டிக்கொண்ட அம்மாவின் ஸ்பரிசம் சுயநினைவிற்கு கொண்டுவந்தது… தாய்மையின் சுகம் என்ன என்பது பிரசவ காலத்தில்தான் ஒரு பெண்ணிற்கு முழுமையாக உணர முடியும் என்பதெல்லாம் கவிமொழியல்ல.. எல்லாம் சத்தியம் என்பது புரிந்தது. மருத்துவமனையில் குழந்தையின் பிறப்பு சான்றிதழுக்காக குழந்தையின் பெயர் கேட்டபோது அன்சார் மௌனமாக நிற்க டோனி கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் வஸீமா என்று முழுமனதுடன் சொன்னபோது அன்சாரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்திருக்கும் என்பது தெரிந்ததுதானே!


4 comments:

  1. முடிவில் கண்கள் கலங்கின...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தனபாலன்

      Delete
  2. //டோனி என்று வந்து கட்டிக்கொண்ட அம்மாவின் ஸ்பரிசம் சுயநினைவிற்கு கொண்டுவந்தது… தாய்மையின் சுகம் என்ன என்பது பிரசவ காலத்தில்தான் ஒரு பெண்ணிற்கு முழுமையாக உணர முடியும் என்பதெல்லாம் கவிமொழியல்ல.. எல்லாம் சத்தியம் என்பது புரிந்தது.//

    அருமையான படைப்பு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. மிக்க நன்றிங்க வை.கோ. சார்

    ReplyDelete