பவள சங்கரி
‘குயிலின்
கீதமும், கிளியின் கிரீச் ஒலியும் கூட
சங்கடப்படுத்துமா என்ன.. வாழ்க்கையின்
அடித்தளமே ஆட்டம் காணும்போது இதெல்லாம்கூட பாரமாகி சலிப்பேற்படுத்தத்தானே
செய்கிறது. அழகு என்ற சொல்லே
எட்டிக்காயாய் கசக்கிறதே. அது குயிலாக இருந்தால்
என்ன, இல்லை மயிலாக இருந்தால்
என்ன, அழகு எங்கிருந்தாலும் அது
ஆபத்துதான்.. என்ன இது என்
நினைப்பில் இவ்வளவு விரக்தி, இது
தப்பாச்சே. தைரியத்தை விடக்கூடாது’...
சரசு
தனக்குள் சொல்லிக்கொண்டாலும் அது உள்ளத்தின் ஆழத்தில் இருந்ததுதான்.
இல்லாவிட்டால் இந்த 35 வயதில் 300 முறை
செத்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு ஒசத்தியான வாழ்க்கையல்லாவா
கிடைத்திருக்கிறது. முதல்
அடி விழுந்த அந்த மோசமான
நாளை இன்னைக்கும் மறக்க முடியுமா...
வாசலில்
அடித்துப் பிடித்து தண்ணீர் லாரியின் நீண்ட
வரிசையில் முட்டி மோதி 2 குடம் தண்ணீர் பிடிப்பதற்குள்
பட்ட பாடு, அடேயப்பா. தலையில்
ஒரு குடமும், இடுப்பில் ஒரு குடமும் சுமந்து
கொண்டு நடக்க முடியாமல் மெல்ல
நடந்து வந்துகொண்டிருந்ததில் வயிற்றில் இருந்த அந்த சின்ன
சுமையின் பாரமும் கூட தெரியவில்லை, அதைப்பற்றிய
நினைவும் வரவில்லை. அடுப்பங்கரையில்
அடுப்புத்திட்டில் தலைச் சுமையை இறக்கியவள்,
இடுப்பில் இருந்த சுமையை குனிந்து
மெல்ல இறக்கி வைக்கலாம் என்று
குனிந்தபோது அடி வயிறு சுள்ளென்று சுருட்டிப்பிடித்து
இழுக்க வீல் என்று அலறியபடி
குடத்தை அப்படியே கீழே போட்டுவிட்டு சுருண்டு
விழுந்தாள். வலி தாளாமல் துடித்துப்போனாள்.
கல்யாணம் ஆன ஒரு வருசத்திலேயே,
அந்த 18 வயசில் எதுவுமே புரியாமல்
அம்மா, அம்மா என்று அலறியவளை
கணவன் வந்து தாங்கிப் பிடிப்பான்
என்று எதிர்பார்த்த அந்த பேதையுள்ளம்,
துளியும் சட்டை செய்யாமல் ஒரு
புழுவைப் பார்ப்பது போல பார்த்தவனை அதிர்ச்சியாகப்
பார்த்தாள். வலி ஒரு பக்கமும்,
கணவனின் பாராமுகம் ஒரு பக்கமும் வேதனையை
பன்மடங்காக்க சத்தம் பெரிதாக, பக்கத்து
வீட்டில் குடியிருந்த வள்ளிம்மா அக்கா ஓடோடி வந்து,
விவரம் அறிந்து, மிருகமாட்டம் எந்த உணர்ச்சியும் இல்லாமல்
விரைக்கப் பார்ப்பவனை கோபமாகப் பார்த்துவிட்டு அவளை அருகில் இருந்த
அரசு மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றாள். அங்கு தனக்கு கரு
கலைந்துவிட்டதை சொன்னபோது மேலும் துடித்துப் போனாள்
சரசு. வீட்டில்
வந்து இரண்டு நாட்கள் கூட
ஓய்வெடுக்க முடியாத நிலையை ஏற்படுத்தினான்
மாரி என்கிற மாரிசாமி. குடித்துவிட்டு
வந்து வாய்க்கு வந்தபடி எழுத முடியாத
அளவிற்கு கண்டமேனிக்கு கெட்ட வார்த்தைகளாக பொரிந்து
தள்ளியதோடு சந்தேகப்
பேயும் சேர்ந்துகொண்டது அவனிடம்.
சரசு
சேற்றில் மலர்ந்த ஒரு செந்தாமரை. அப்பா
உயிரோடு இருந்தவரை நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. கூட்டுறவு வங்கியில் பியூன் வேலை என்றாலும்
கட்டுப்பாடாக இருந்து சரசுவையும் அவள்
அக்காவையும் நல்லபடியாக வளர்த்து வந்தான். அக்காவின் கல்யாணம் முடிக்க வாங்கிய கடன்
தொல்லை கொஞ்சம் அலைக்கழித்தாலும் சமாளித்துக்
கொண்டிருந்தவரை திடீரென்று ஒரு நாள் இருதய
நோய் கொண்டுபோக குடும்பமே நிலைகுத்தி நின்றுவிட்டது. படிப்பறிவு
இல்லாத அம்மா வீட்டு வேலை
பார்த்து சரசுவை படிக்க வைத்து
வயித்துப் பாட்டையும் பார்த்துக் கொண்டிருந்தாலும் சரசுவின் சிலை போன்ற அந்த
அழகுதான் அவர்களுக்குப் பெரிய எதிரியாகிவிட்டது. கோதுமை
நிறத்தில், தளதளவென, அந்த பக்குவமான பருவத்திற்குரிய
பளபளப்பில் கண்டவனெல்லாம்
அடையத் துடித்ததும் வாடிக்கையாகிவிட்டது. ஆம்பிளை இல்லாத வீடுதானே,
கேட்பாரில்லாத தைரியத்தில் அவளிடம் தகாத முறையில்
நடந்து வேதனைப்படுத்தவும் ஆரம்பித்தனர்.
பள்ளி இறுதி வகுப்பு படித்தவுடன்
கல்லூரிக்கு அனுப்ப வசதியில்லாமல் தையல்
வகுப்பிற்கு அனுப்பிய இடத்தில்தான் பிரச்சனை பெரிதாக வெடித்தது. அந்த
சமயத்தில் மேடமிற்கு உடல் நலம் இல்லாததால்
அவருடைய மகன் கொஞ்ச நாட்களாக
வந்து கொண்டிருந்தான். வந்ததிலிருந்தே அவன் பார்வை சரியில்லை.
கையைத் தொட்டுப் பேசுவது, தெரியாதது போல இடித்துவிட்டுப் போவது
என்று சிலுமிசம் செய்து கொண்டிருந்தவன் போகப்போக
அவனுடைய அட்டகாசம் அதிகமானது. பொறுக்க முடியாமல் ஒரு
நாள் செருப்பைத் தூக்கி அடித்துவிட்டாள். அன்றிலிருந்து
அவள் வாழ்க்கையை கெடுத்தே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தான். ஒரு
உளுத்துப் போன திரைப்பட தயாரிப்பு
நிறுவனத்திற்காக இவளை எப்படியும் மடக்கிப்போட்டு
காசு பார்க்கவேண்டும் என்ற கள்ளத்திட்டமும் வைத்திருந்தான்
அந்த பாவி. ஆனமட்டும் பொறுத்துப்
பார்த்த சரசு கடைசியாக பயத்தில்
அம்மாவிடம் போட்டு உடைத்துவிட்டாள். அவ்வளவுதான்..
அதற்குப் பிறகுதான் அவளுடைய வாழ்க்கையின் சூன்யம்
ஆரம்பமாகியது.
இந்த
நடுத்தர வர்க்கம் படுகிறபாடுதான் சொல்லி முடியாதே.. மேலே இருப்பவனைப்போல எதற்கும்
துணியும் சக்தியும் இல்லாமல், கீழே இருப்பவன் போல
எதைப்பற்றிய கவலையும் இல்லாமல் கண்டதே காட்சி, கொண்டதே
கோலம்னு இருக்கும் சுபாவமும் இல்லாமல் இரண்டுங்கெட்டானாக இப்படி, எதையோ ஒரு
கட்டுப்பாட்டை தனக்குள் விதித்துக்கொண்டு அதனால் ஏற்படும் இழப்புகளை
வெற்றியாகக் கொண்டாடும் பாவப்பட்ட சீவன்கள். தடுக்கில் பூந்து கோலத்தில் நுழையும்
வல்லமை அறியாதவர்கள். தியாகத்திலேயே பிறந்து தியாகத்திலேயே வளர்ந்து
இறுதிவரை தனக்கென வாழத்தெரியாமலே செத்து
மடிபவர்கள். கணவனை இழந்த ஒரு
பெண் அதுவும் வயதுப் பெண்ணை
வைத்திருக்கும் ஒரு தாய் அடி
மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருப்பதில் ஆச்சரியமேது? திரும்பிய பக்கமெல்லாம் வேலியில்லாப் பயிரை மேயத் துடிக்கும்
காட்டு விலங்குகளிடமிருந்து தற்காத்துக்கொள்வதே பெரும்பாடாக வேகும் உள்ளம் கொண்டு
இருந்த சரசுவின் தாய் சந்திரா இதைக்
கேட்டவுடன் ஆடித்தான் போய்விட்டாள். மகளை ஏதோ தையல்
பயிற்சி கொடுத்து ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனியில்
பெண்களோடு பெண்ணாக ஒரு வேலைக்குச்
சேர்த்துவிட்டால் அவள் பாட்டை பார்த்துக்
கொள்வாள், கொஞ்ச நாட்களில் நல்ல
பையனாகப் பார்த்து கட்டிக்கொடுத்து விட்டால் தன் கடமையும் முடிந்துவிடும்
என்ற அவளுடைய கணக்கு இன்று
தப்பாய் போனதில் தாங்க முடியாத
துயரம் இருந்தாலும், தன் மகளை இந்த
மிருகத்திடமிருந்து எப்படி காப்பது என்பதே
அப்போதைய பயமாக இருந்தது. எதற்குத்தான்
ஆண்டவன் இப்படி ஒரு அழகை
அவளுக்குத்தர வேண்டும் என்று படைத்தவன் மீதுதான்
கோபமாக வந்தது அவளுக்கு. இத்தனைக்கும்
தான் கூட அப்படி ஒன்றும்
பெரிய அழகி இல்லை. அவள்
பாட்டியைக் கொண்டு பிறந்தவள். சாகும்வரை
அதே பளபளப்புடன் காதோரம் மட்டுமே ஒரு
சில முடிகள் நரைத்திருக்க, முதுமையின்
ரேகை முகத்தில் படராமலே கிட்டத்தட்ட
என்பது வயதுவரை வாழ்ந்துவிட்டுப் போனவர்
அவர். அன்று இரவு முழுவதும்
கணவனையும், பெற்றோரையும், பெரியவர்களையும் நினைத்து, இன்று ஆதரவில்லாத நிலையையும்
நினைத்து அழுதே பொழுதை ஓட்டியவள்
காலையில் ஒரு தீர்க்கமான முடிவு
எடுத்து விட்டாள். ஏதாவது சொந்தத்தில் நல்ல
பையனாகப் பார்த்து உடனடியாக திருமணம் செய்து முடிக்க வேண்டியது
என்று.
தன்
விருப்பம் குறித்த உணர்வே இல்லாமல்
ஊர் உலகத்திற்குப் பயந்தே ஒவ்வொரு காரியமும்
செய்து கொண்டிருக்கும் வழக்கத்தில் சரசு பலிகெடா ஆனாள். திருமண
சந்தைக்குள் நுழைந்தவுடன் சடங்கு, சம்பிரதாயம், நகை,
நட்டு என்று பல பிரச்சனை
தலைதூக்க ஆரம்பித்துவிட்டது. வயிற்றுப்பாடே பெரும்பாடாக இருக்கும்போது நாலு வீட்டில் பத்துப்
பாத்திரம் தேய்க்கும் சந்திரா எப்படி பணம்
புரட்டுவது என்று குழப்பத்தில் நொந்து
போனாள். 500, 1000 என்றால் வேலை செய்யும்
வீட்டில் தன்னை நம்பிக் கொடுப்பார்கள்
ஆனால் ஒரு இலட்சமாவது தேவைப்படும்
சூழலில் யாரைப்போய் கேட்பது என்ற குழப்பத்தில்
இருந்தபோதுதான் ஒரு தூரத்து உறவினர்
மூலம் மாப்பிள்ளை இருப்பதாக செய்தி வந்தது. ஒரு
ஜவுளிக் கடையில் கணக்குப்பிள்ளையாக வேலை
பார்க்கும் பையன் என்றும் ஒரு
பைசா செலவில்லாமல் கல்யாணம் செய்து கொள்வதாகச் சொன்னதால்
12 வயது வித்தியாசத்தில் இருந்தாலும் பரவாயில்லை என்று அவசர, அவசரமாக
கோவிலில் வைத்து திருமணம் செய்து
வைத்தார்கள். ஆரம்பத்தில் நல்லவனாட்டம்தான் நடித்துக்
கொண்டிருந்தான். போகப்போகத்தான்
அவனுடைய சில்லரை புத்தி வெளிப்பட்டது.
வேலைக்கும் ஒழுங்காகச் செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து
அடிப்பது என்று புத்தியைக் காட்ட
ஆரம்பித்தான்.
அன்று
உடம்புக்கு முடியாமல் காய்ச்சல் வந்து இரண்டு மூன்று
நாட்களாக வேலைக்குப் போகவில்லை. அம்மாவை
வரச்சொல்லலாம் என்றால் போன தடவை
வந்தபோதே அம்மாவை எப்படியெல்லாம் கேவலமாக
நடத்தினானே பாவி சண்டாளன். பாவம்
இந்த முறையும் அம்மாவை தொல்லைப்படுத்தக் கூடாது
என்று தானே சமாளிக்க முயன்று
கொண்டிருந்தாள். கஞ்சி கூட வைத்துக்கொடுக்காமல்
பிரியாணி பொட்டலத்தை வைத்துக்கொண்டு குடித்துக் கொண்டிருப்பவனின் முகத்தில் முழிக்கக்கூட வெறுப்பாக இருந்தது அவளுக்கு. அதைப் பார்க்க சகிக்காமல்
பக்கத்து வீட்டில் இருந்த ஆப்பக்கடை வைத்திருக்கும்
வேலம்மா இரண்டு ஆப்பம் கொண்டுவந்து
கொடுத்துவிட்டுச் சென்றார்கள். இன்னைக்காவது மெல்ல
வேலைக்குப் போகலாமா என்று யோசிக்கும்போதே
வெளியில் கார் வந்து நிற்கும்
சத்தம் கேட்டது. வேலை செய்யும் வீட்டிலிருந்து
விருந்தாளிகள் வந்திருப்பதால் கூட்டிச் செல்வதற்காக அந்த வீட்டு முதலாளியே
வரவும், அன்றிலிருந்துதான் வேறு மாதிரியான பிரச்சனை
தலைதூக்க ஆரம்பித்துவிட்டது.
“ஏய்,
அவனோட எங்க போய் மேய்ஞ்சிப்புட்டு
வாரே.. பெரிய
அழகு ராணின்னு நினப்பா உனக்கு.. என்னமோ
உடம்பு முடியாம சுருண்டு கிடந்தே.
அவனப் பாத்தவுடனே மினுக்கிக்கிட்டு கெளம்பிட்ட. நாலு நாள்கூட உன்னைப்
பாக்காம இருக்க முடியலையாமா அவனுக்கு.
இங்கயே வந்துபுட்டான். என்னதாண்டி நினச்சிக்கிட்டு இருக்குறே மனசுல.. பொட்டைச் சிறுக்கி.... கால
வெட்டிப்புடுவேன் பொறுக்கி நாயே” என்று வாய்க்கு
வந்தபடி அக்கம்பக்கமெல்லாம் கேட்கும்படி வார்த்தைகளை அமிலமாகக் கொட்டினான்.
எதற்கெடுத்தாலும்
சந்தேகம், நின்னால் குத்தம், நடந்தால் குத்தம் என்று குதற
ஆரம்பித்திருந்தான், கணவன் என்ற அந்த
காட்டுமிராண்டி. ஒவ்வொரு நாளும் ஒரு
யுகமாகவே கடந்து கொண்டிருந்தது. குடித்து,
குடித்து குடல் வெந்து அடிக்கடி
மருத்துவமனையில் தங்கி சரிசெய்து கொண்டு
வந்தாலும் திரும்பத் திரும்ப குடித்துவிட்டு வருவதை
அவளால் நிறுத்த முடியவில்லை.
முதன் முதலில் வயிற்றில் உதித்த
கருவைக் காப்பாற்றிக்கொள்ளத் தெரியாமல் நழுவவிட்ட கோபத்திலோ என்னவோ மீண்டும் கருத்தரிக்கவேயில்லை
அவளுக்கு. சொல்லியழக்கூட நாதியில்லாத அனாதையாகிப் போயிருந்தாள். உறவு, நட்பு, பந்தம்
என எதையும் அண்டவிடாமல் துரத்திவிட்டதே
அவனுடைய சாதனையாக நினைத்துக் கொண்டிருக்கிறான். இப்படியே வாழ்க்கையை குண்டு சட்டிக்குள் குதிரையாகவே
ஓட்டியிருந்தாள்.
வெளி
நாடுகளில் அரசாங்கக் கைதிகளுக்கு ஒரு தண்டனை கொடுப்பார்களாம். குற்றவாளியிடம்
உண்மையை கறக்க வேண்டுமானாலோ அல்லது
அவர்கள் தாங்களே அறியாதவாறு நரக
வேதனையில் தள்ளிவிடும் ஒரு வழியாம் அது.
குறிப்பிட்ட அந்த நபரை ஒரு
நாற்காலியில் அசைய முடியாத வகையில்
உட்காரவைத்து விடுவார்கள். தலையை எந்தப்புறமும் அசைக்க
முடியாது. தலைக்கு
மேல் ஒரு குடுவையிலிருந்து சாதாரண
தண்ணீரை இரண்டு நொடிக்கு ஒருமுறை
ஒரு சொட்டாக விழும்படி செய்து
வைத்திருப்பார்கள். ஆரம்பத்தில் தண்ணீர்தானே.. ஒரு சொட்டுதானே என்று
இருக்கும். உச்சி மண்டையில் ஒரே
இடத்தில் சொட்டு சொட்டாக வந்து
விழும் அந்த தண்ணீர் போகப்போக,
பேரிடியாக வந்து விழுமாம்.. கண், காது, மூளை,
மூக்கு என அனைத்து பாகங்களுக்குள்ளும்
நுழைந்து ஒரு பிரளயமே ஏற்படுத்திவிடுமாம்.
உயிர்போகும் நிலையில் தப்பித்தால் போதும் என்று என்ன
சொன்னாலும் செய்வார்களாம்.. இப்படித்தான்
இன்று சரசுவின் நிலையும்!
“ஏய்,
சனியனே.. என்னடி பண்றே அங்கே..
எவனை நினைச்சு கனவு கண்டுகிட்டு இருக்கே..
ஒருத்தன் இங்கே உசிருக்குப் போராடிக்கிட்டு
மிசினுக்குள்ளே கடக்குறான்.. நீ என்னமோ கனா
கண்டுகிட்டு கிடக்கிறவ.. உன்னாலதானேடி
எனக்கு இந்த நெலம.. ஏண்டி
பாவி உனக்கு இத்தனை அழகு..
உன் கூட என் பொண்டாட்டின்னு
சொல்லி வேளியே கூட்டிக்கிட்டு போக
முடியல.. பாரு, இந்த வயசிலயும்
என்னமோ நேத்து சமஞ்ச குமரியாட்டம்
இருக்கிறத.. நாயி..
நீ உருப்பட மாட்டேடி. நான்
எப்ப செத்துப் போவேன்னுதானே பாத்துக்கிட்டு இருக்கற.. அப்பறம் அந்த கார்காரன்
கூட ஒரேடியா போய் செட்டில்
ஆவலாம்னுதானே உன் திட்டம்.. சொல்லுடி
நாயே.. வாயைத் தொறக்காமயே ஊமக்கோட்டானாட்டம்
நிக்கறயே.. அந்த கார்காரன் வந்தப்பமட்டும்
அப்புடி இளிச்சி இளிச்சிப் பேசுனே..
என்ன எனக்கு ஒன்னும் தெரியாதுன்னு
நினைச்சுப்புட்டியா.. தொலைச்சுப்புடுவேன் பாத்துக்க..”
ஒன்றும்
பேச முடியாமல் வாயடைத்து நின்றிருந்தாள் சரசு. இத்தனை காலம்
இவனுக்காகத் தன் மொத்த வாழ்க்கையையும்
தொலைத்துவிட்டு நிற்கும் நிதர்சனம் சுர்ரென்று தாக்கியது. அவனுடைய
விசம் கக்கும் வார்த்தைகள் ஒவ்வொன்றும்
ஒரு சொட்டுத் தண்ணீராக உச்சி மண்டை வழியாக
உள்ளுக்குள் ஊடுறுவி கொல்லப்பார்த்தது. அதையும்
புரிந்துகொள்ளாமல் அந்த படுபாவி அடுத்த
விசக்கணைகளை விடாமல் தொடுக்க ஆரம்பித்தான்.
அசையக்கூட வழியில்லாமல் கட்டிப்போட்டது போல கால்கள் தரையோடு
ஒட்டிப் போயிருந்தது. அவனுடைய சொல்லம்புகள் உடலெல்லாம்
கிழித்து ரணமாக்கியிருந்தது. படுக்கையில் பல நாட்களாகக் கிடப்பவனின்
அசிங்கங்களை அள்ளிக்கொட்டிய கைகள் காயும் முன்னே
இப்படி தான் இன்னொருவனுடன் கைகோர்த்துக்
கொண்டு செல்லப்போகிறாள் என்பதை இப்படி வாய்
கூசாமல் பழி போடும் பாவியை
என்ன செய்வது என்று மனம்
வெதும்பியது. இதற்குமேல் பொறுமையாய் இருக்க அவள் பூதேவி
இல்லை. சாதாரண மனுசிதானே..
அவனைப் பார்த்து ஒரு ஏளனப் புன்னகையை
பதிலாக வீசிவிட்டு ஒரு முடிவாக திரும்பிப்
பார்க்காமல் செல்பவளை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தான் அந்த கயவன். விடிய
விடிய அவள் எங்கே போயிருப்பாளோ
என்ற கேவலமான கற்பனையில் வாய்விட்டு
சத்தமாகப் பிதற்றிக்கொண்டிருந்தவனை நர்சு
வந்து அதட்டி வாய் மூடச்சொல்லிவிட்டுச்
சென்றாள்.
அடுத்த
சில நாட்களில் தான்
ஒரேயடியாக அனாதையாக்கப்பட்ட செய்தி வந்து சேர்ந்தது.
அந்த உண்மை புரிந்த அதிர்ச்சியில்
பக்கவாதம் வந்து கையும், காலும்
இழுத்துக்கொண்டதோடு வாயும்
பேசமுடியாது போனது!
நன்றி: திண்ணை
என்னவொரு கொடுமை...!
ReplyDeleteஎனது தளத்தில் (நான் + துன்பம்) இட்ட உங்களின் கருத்துரை மிகவும் ரசித்தேன்...
ReplyDelete