Monday, October 28, 2013

அம்பலவாணா... அம்பலவாணா..




பவள சங்கரி


அம்பலவாணா.. அம்பலவாணா
அருளாளா ஆனந்தவாணா

பொருளியலில் உழன்றுய்ந்தேனே
பொற்பாதம் சேரவரம் அருளாயோ
காலமெலாம் காத்துக்கிடந்தேனே
காதலிலுருகி உளம்நொந்தேனே

அம்பலவாணா.. அம்பலவாணா
அருளாளா ஆனந்தவாணா!



உள்ளக்கோயிலில் உறைந்திட
உயிருக்குள் ஒளியாய் நிறைந்திட
பயிருக்கு உயிர்நீராய் வழிந்திட
பரமனே பாசவினைகள் நீக்கிட

அம்பலவாணா.. அம்பலவாணா
அருளாளா.. ஆனந்தவாணா


உள்ளத்தொளியாய் உயிர்த்தோனே
உவப்பில்லா ஆனந்தம் அளித்தோனே
சோதிச்சுடராய் என்னுள் கலந்தோனே
சோர்வரியா தொளிரச் செய்தோனே

அம்பலவாணா.. அம்பலவாணா..
அருளாளா ஆனந்தவாணா!


உறைந்தவிடம் உன்னதமாய் ஒளிர
மறைந்தவிடம் அறியாமல் பரிதவிக்கும்
மாந்தரெல்லாம் உய்யும் வகையாக
காந்தமாய் வந்து பற்றிக்கொள்வாயே

அம்பலவாணா.. அம்பலவாணா
அருளாளா ஆனந்தவாணா!!!





2 comments:

  1. மிகவும் அருமை... பாராட்டுக்கள்....

    ReplyDelete
  2. அழகான கவிதை. பாராட்டுக்கள்.

    ReplyDelete