Wednesday, February 26, 2014

மகாசிவராத்திரி - சிவபூசாவிதி

பவள சங்கரி

இவ்வருட மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

இந்தப் பதிவு கடந்த ஆண்டு (2013) சிவராத்திரி தினத்தன்று ஈரோடு ஸ்ரீ மஹிமாலீஸ்வரர் சமேத மங்களாம்பிகைதிருக்கோயிலில் பதிவு செய்யப்பட்டது. அன்றைய தினத்தில் கோயிலில் செய்யப்பட்ட சிறப்பு சிவலிங்க பூஜை இந்தப் பதிவில் இடம் பெறுகின்றது. 

Inline image 1

பூஜை ஏற்பாட்டில் இடம்பெறும் சிவலிங்கம், பூஜை பொருட்கள் ஆகியவை தயாரானதும் ஆலயத்தில் கருவறையில் இருக்கும் மூலஸ்தான தெய்வத்திற்கு அபிஷேகம் நடைபெற்றது. அந்தச் சிறப்பு பூஜையும் இந்தப் பதிவில் பதிவாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து பொது மக்கள் இணைந்து ஈரோடு திரு தங்க. விசுவநாதன் தலைமையில் சிவபுராணம் ஓதி சிவலிங்க பூஜை செய்வதைக் காணலாம். 

இந்த விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2014/02/2014_26.html

யூடியூபில் இப்பதிவைக் காண: http://www.youtube.com/watch?v=t8I64GTDiHM


திருமதி பவள சங்கரியின், மகா சிவராத்திரியின் சிவ பூஜா விதிகளை விளக்கும் ஒரு கட்டுரையையும் ஈரோடு திரு தங்க. விசுவநாதன் அவர்களின் நித்திய வழிபாட்டு முறை என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையையும் இன்றைய நாளில் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றோம். கட்டுரை கீழே இணைப்பில்!

இந்த விழியம், மற்றும் புகைப்படங்கள் பதிவினை நான் செய்திட உதவிய திருமதி பவள சங்கரிக்கும் அவர் தம் துணைவர் திரு.திருநாவுக்கரசு அவர்களுக்கும், அனுமதி வழங்கிய ஆலயத்தின் நிர்வாகத்தினருக்கும், திரு தங்க விசுவநாதன் அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின்  நன்றி.

மேலும் படங்கள்: கட்டுரைக்கு கீழே!

அன்புடன்
சுபாஷிணி ட்ரெம்மல்
[தமிழ் மரபு அறக்கட்டளை] 








மகாசிவராத்திரி - சிவபூசாவிதி
பவள சங்கரி

”இவர் ஒரு கற்பத்தில் தம்மையே தியானித்திருந்த காலத்துத் தம் தேகத் துண்டான ஆனந்த பிந்துக்களே சிவலிங்கங்களாயின - (சிவரகசியம்)

சிவன் - நாராயணர் இவரது கழுத்தைக் கட்டிக் கொண்டதால் கறுத்த கழுத்துடையவரானார். 

சிவராத்திரி - கால நிர்ணயம், மாசி மாதம் கிருஷ்ணபட்சம், சதுர்த்தசி இரவு, பதினான்கு நாழிகை லிங்கோற்பவ காலம்.  இதுவே மகா சிவராத்திரி புண்யகாலம். 

இந்த மகாசிவராத்திரி தினத்தில் நேரிடும் திரயோதசி பரமசிவத்திற்கு தேகமாகவும், சதுர்த்தசி தேகியாகவும், அன்றிச் சக்தியாகவும் சிவமாகவும் கூறப்பட்டிருக்கிறது. சிவராத்திரி முதற் சாம முதல் நான்கு சாமங்களிலும் ஆத்மார்த்த பரார்த்த பூசைகள் நடத்த வேண்டியது. தானஞ்செய்ய வேண்டியது. இதை அனுஷ்டித்தோர் நான்கு யுகங்களிலும் முறையே விநாயகர், கந்தமூர்த்தி, பிரம்ம விஷ்ணுக்களாம். பலன் இம்மையில் சத்சனசானாதி சௌபாக்கிய சம்பத்தும் மறுமையில் சொர்க்காதி போகமுமாம். இது காமியம், நிஷ்காமிகன் இகத்தில் புத்தியும், பரத்தில் முக்தியும் அடைவர்”. - அபிதான சிந்தாமணி.

பிரம்மா மற்றும் விஷ்ணு ஆகியோருக்காக, சிவபெருமானார் லிங்கோத்பவராக எழுந்தருளியபோது, தேவர்கள் பூசித்த காலம் எனவும், ஒரு பிரம்மகற்பத்தில் சக்தி தேவியார், நான்கு காலங்களும் சிவ பூசை செய்து ஐயனை உளம் ஒன்றி வழிபட்ட காலமே சிவராத்திரி என்பது. சிவபெருமானிடம் அன்னையார் வரம் வேண்டிப் பெற்ற நாளும் இதுவே. சக்தி தேவி, பெருமானாரிடம் விளையாடும் முகமாக ஐயனின் திரிநேத்திரங்களையும் மூடப்போக, அகில உலகமே இருளில் மூழ்கிவிட, தேவர்கள் ஐயனை வணங்கி வழிபட்ட காலமும் இதுவே. பாற்கடலில் தோன்றிய நஞ்சுண்டகண்டனான பெருமானாரை அந்த விடம் தாக்காமல் இருக்கும்பொருட்டு தேவர்கள் விடிய விடிய இடையறாது பூசித்த காலமே மகாசிவராத்திரி என்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன. உருத்திரராக வந்த சிவபெருமானார், அண்டங்களின் மாயை எனும் அனைத்து இருளையும் போக்கி, ஞான ஒளியை நீக்கமற எங்கும் நிறையச் செய்த அந்த அற்புதமான காலமே மகாசிவராத்திரி எனப்படுகிறது. 

சிவலிங்கநியாசங்கள் என்பதாவன - தண்டபங்கிநியாசம், முண்டபங்கிநியாசம், ஸ்ரீகண்டநியாசம், ஆகமநியாசம், கலாநியாசம், மாத்ருகா  நியாசம் போன்றவைகளாம். 


சிவதீக்கை 

நம் புற உடலில் ஏற்படும் மாசு மற்றும் நுண்கிருமிகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வது போன்று, ஆன்மா என்ற நம் அகமாகிய உயிரின் மாசு நீங்கும் பொருட்டு அளிக்கப்படுவதே சிவ தீக்கை எனப்படும். ஆண், பெண் என்ற வேறுபாடின்றி சைவ சமயத்தில் பிறந்த அனைவரும் சிவதீக்கை பெறும் தகுதி பெற்றவர்களாகிறார்கள்.  ‘முள்ளிச் செடிக்கு முக்தி கொடுத்த உமாபதி சிவம்’ மூலமாக, மனிதர்களுக்கு மட்டுமன்றி,  பறவை, புல், பூண்டு ஆகியவற்றிற்கும்கூட தீக்கை கொடுக்கப்படுவதை அறிய முடிகிறது.  சிவதீக்கை பெறுபவர்கள் உடல், மனம், வாக்கு என்ற மூன்றையும் தூய்மையாக வைத்துக்கொள்பவராக இருக்க வேண்டும். உயர் பண்பும், ஆசாரமும், குரு பக்தியும் உடையவராக இருத்தல் அவசியம்.  உலக பற்றுகளை கட்டுக்குள் வைத்து தியானத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் வல்லமை பெற்றவராக இருத்தல் நலம். 

தெய்வ வழிபாடு என்பதே பையப்பைய நம் மனதை பக்குவப்படுத்தி, இகம் மற்றும் பரம் என்ற இரு வாழ்க்கைக்கும் நம்மை அதற்கு உகந்த நிலைக்கு வழிநடத்திச் செல்வது தான். அந்த வகையில் சிவ  தீக்கை என்பது அடிப்படையில் மூன்று நிலைகளாகப் பிரித்திருக்கிறார்கள். முதன் முதலில், ‘சமய தீக்கை’ என்கிற அடிப்படையான, சிவலிங்க வழிபாட்டிற்கான ஆயத்தமாக இதனைக் கொள்ளலாம்.  ‘நான்’ என்ற ஆணவ மலம் அகன்று நாமே சிவம் என்ற உயர் நிலையை அடையும் எண்ணம் உதிக்கத் தோன்றும். சில காலம் மனம் ஒன்றி குரு அருளிய நெறி முறைகளைக் கடைபிடித்து அனுதினமும் அதன் வழி தொடர அடுத்து விசேட தீக்கை பெறும் தகுதியைப் பெறலாம். விசேட தீக்கை பெறுவதன் மூலம் மட்டுமே, சிவலிங்க மூர்த்திக்கு அகப்பூசை மற்றும் அபிசேகம் செய்து, மலர் தூவி வழிபட்டு, அலங்காரங்கள் செய்து, பெருமானாரைத் தம் அகத்திலும், இல்லத்திலும் எழுந்தருளச் செய்யும் புறப்பூசை  என்கிற யோக நெறியில் நிறைந்து செய்யும் பூசைக்கான உரிமம் பெறலாம்!  

அடுத்து மூன்றாவதாக வருவது, ‘நிர்வாண தீக்கை’ என்பது. உயிரை ஞான நிலைக்கு இட்டுச் செல்லும் இதனால் பல்வேறு சக்திகளையும் பெற முடியும் என்கிறார்கள். ‘கண்டவர் விண்டிலை, விண்டவர் கண்டிலை’ என்பதே தத்துவம்!  இறைவன் தனக்குள்ளும் இருக்கிறார், மற்றனைத்து உயிர்களுக்குள்ளும் உறைந்திருக்கிறார் என்பதை உணரச் செய்யும் தீக்கை என்பதாகக் கொள்ளலாம். முப்பொருள் உண்மையையும்,  தீய சக்திகளை அடக்கும் கலையையும் அருளும் இந்த நிர்வாண தீக்கை, உலகப் பற்றுகள் அனைத்தும் துறந்த நிலையில் இருப்பவர்களுக்கு வீடு பேறு கிடைக்கும் வகையில் செய்வது, ‘சத்தியோ நிர்வாண தீக்கை’ மற்றும் ஆன்மா, பிரார்த்த வினைப்பயன்களை முழுவதுமாக அனுபவித்த பின்பு, வீடு பேறு (முக்தி நிலை) அடையச் செய்யக்கூடிய, ’அசத்தியோ நிர்வாண   தீக்கை’ என்பதாகும்.  சிவபெருமானின் அருளைப் பூரணமாகப் பெற்று இம்மை, மறுமை இன்பங்களனைத்தும் பெறவே சிவதீக்கை பெறுகிறார்கள்.

ஆனஅஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆனஅஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனஅஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனஅஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே.

அரியும்அல்ல அயனும்அல்ல அப்புறத்தில் அப்புறம்
கருமைசெம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம்
 பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்
 துரியமும் கடந்துநின்ற தூரதூர தூரமே.

                                                                                  -சிவவாக்கியர்


ஏழு வயது ஆன எவரும்  சிவதீக்கை பெறலாம். குரு அருளிய திருவைந்தெழுத்து மந்திரத்தை உச்சரிக்கவும், திருநீறை நீரில் குழைத்து திரிபுண்டரமாக பூசிக்கொள்ளவும் சிவதீக்கை பெற வேண்டியது அவசியம்.  குரு மூலம் தீட்சை பெற வேண்டும் என்பதே சமயக் குரவர்கள் மூலம் நாம் அறியும் நீதி.  அகத்திய மாமுனியிடம்  ஸ்ரீராமபிரானும், உபமன்யு  முனிவரிடம்  ஸ்ரீகிருஷ்ணரும்   சிவ தீக்கை பெற்று சிவபூசை செய்துள்ளார்கள் என்பதை புராணங்கள் கூறுகின்றன.    சமய தீக்கை பெற்று, அன்றாட வழிபாடுகளை நியமங்களின்படி செய்வோருக்கு ஆயுள் கூடும் என்பதும் கண்கூடு. சிவதீக்கை பெற்றவரின் உயிர் முற்றும் அந்தப் பரமனுக்கே உடமையாவதாக ஐதீகம். அந்த வகையில் அந்த உயிரைப் பறிப்பதற்கு எமதர்மனுக்கும் அதிகாரம் இல்லை என்கிறது ஆகமங்கள். 


ஞான நிலை

    என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது இல்லையே
    என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது கொண்டபின்
    என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லரோ ?
    என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டனே.

    நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை,
    நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ ?
    அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
    எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாற தெங்ஙனே !


 யோக நிலை

    உருத்தரித்த நாடியில் ஒடுங்குகுன்ற வாயுவைக்
    கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல்
    விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும்
    அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே.

அறிவு நிலை

    கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணை மோர்புகா;
    உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;
    விரிந்துபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா;
    இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே.

                                                                                                       -சிவவாக்கியர்


விசேட தீக்கை பெற்றவர்களின் உயிர் அனந்த தேவருக்கும், நிர்வாண தீக்கை பெற்றவரின் உயிர் சதாசிவ மூர்த்திக்கும் மட்டுமே எடுக்க உரிமையுள்ளதாம். இதனால் தீய சக்திகள் எதுவும் அவர்களை அணுக முடியாது. மேலும் வாரிசுகளால் பிதுர் கடன் ஆற்றாமையாலும் தீங்கு விளையாது. பெருமானாரிடம் பாவ மன்னிப்பு பெறவும் தீக்கை அருள் புரியும்.  இவையனைத்திற்கும் மேலாக  பிரணாயாமம் செய்வதால் அறிவியல் காரணங்களால் இருதய நோயும் அண்டாது. மனம் கட்டுக்குள் அடங்கிவிடுவதால், பூரண அமைதியடைந்து உயிர் தூய்மையடைகிறது. முத்திரைகள் பிடிப்பதால், விரல்களுக்கும், நரம்புகளுக்கும் ,  நல்ல பயிற்சி கிடைப்பதால் நரம்பு சம்பந்தமான நோய்கள் வராமல் காக்கிறது.  ஆன்மார்த்த பூசை செய்வதனால் கடந்தகால பாவங்களின் வினைகள் குறைவதோடு, நிகழ்காலத்தில் பாவங்கள் அணுகாது என்கிறார்கள். 


   தில்லைநாய கன்அவன்; திருவரங் கனும்அவன்;
    எல்லையான புவனமும் ஏகமுத்தி யானவன்
    பல்லுநாவும் உள்ளபேர் பகுத்துகூறி மகிழுவார்;
    வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே.

    எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்கள்அப்பன் எம்பிரான்
    சத்தியான வித்துளே முளைத்தெழும் அச்சுடர்
    சித்தமும் தெளிந்துவேத கோயிலும் திறந்தபின்
    அத்தன்ஆடல் கண்டபின் அடங்கல்ஆடல் காணுமே.

    உற்றநூல்கள் உம்முளே உணர்ந்துணர்ந்து பாடுவீர்;
    பற்றறுத்து நின்றநீர் பராபரங்கள் எய்துவீர்;
    செற்றமாவை யுள்ளரைச் செருக்கறுத்து இருத்திடில்
    சுற்றமாக உம்முளே சோதிஎன்றும் வாழுமே.

    அண்டம்நீ அகண்டம்நீ, ஆதிமூல மானநீ,
    கண்டம்நீ, கருத்தும்நீ, காவியங்க ளானநீ,
    புண்டரீக மற்றுளே உணருகின்ற புண்ணியர்,
    கொண்டகோல மானநேர்மை கூர்மைஎன்ன கூர்மையே.


    நமசிவாய அஞ்செழுத்தும் நல்குமேல் நிலைகளும்
    நமசிவாய அஞ்சில்அஞ்சும் புராணமான மாயையும்
    நமசிவாய அஞ்செழுத்து நம்முளே இருக்கவே
    நமசிவாய உண்மையை நன்குஉரைசெய் நாதனே!

   ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
   ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் தெளிந்தபின்
   ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
   ஓம்நமசி வாயமே உட்கலந்து நிற்குமே!

                                                                                -சிவவாக்கியர்




நித்திய வழிபாட்டு முறை

ஈரோடு திரு தங்க. விசுவநாதன்



அதிகாலையில் படுக்கையைவிட்டு எழும்போது “சிவ சிவ” என்று இறைவன் திருநாமத்தைச் சொல்லி மடியிலுள்ள திருநீற்றுப் பையிலிருந்து சிறிது திருநீற்றை எடுத்து நெற்றியில் தரித்துக்கொண்டு எழுந்திருக்கவும். 

1. நீராடுதல்

நாம் ஆடும் நீரினை இறைவன் வடிவாக எண்ணிக் கீழ்வரும் பதிகத்தைச் சொல்லிக் கொண்டு குளிக்க.

திருச்சிற்றம்பலம்

களித்துக் கலந்ததோர் காதற்கசிவொடு காவிரிவாய்க்
குளித்துத் தொழுது முன்நின்ற இப்பத்தரைக் கோதில் செந்தேன்
தெளித்துச் சுவையமுது ஊட்டி அமரர்கள் சூழிருப்ப
அளித்துப் பெரும் செல்வம் ஆக்கும் ஐயாறன் அடித்தலமே.  (அப்பர்)

குளித்தபின் தோய்த்து உலர்ந்த ஆடையையும் கோவண ஆடையையும் அணிந்து கொண்டு துலக்கிய சிறு பாத்திரத்தில் தூய நீரை எடுத்துக்கொண்டு தனியிடத்தில் அமர்ந்து வழிபாட்டைத் தொடங்குக. (வழிபாட்டு அறை தனியாக இருப்பின் சாலச் சிறந்தது).

2. பிள்ளையார் வணக்கம்

ஐந்து கரத்தனை ஆனைமு கத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே

-திருமூலர்


ஆ. திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தனைக்
காதலால் கூப்புவர்தம் கை.   [நம்பியாண்டவர் நம்பி]

[இ] பிடியதன் உருவுமை கொள, மிகு கரியது
       வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
      கடி, கணபதி வர அருளினன் - மிகு கொடை
     வடிவினர் பயில் வலிவலம் முறை இறையே.   [1: சம்பந்தர்]
திருச்சிற்றம்பலம்


3. சற்குரு வணக்கம்

சைவ சமய குருமார்கள் நால்வருக்கும், தனக்குத் தீக்கை அருளிய குருவிற்கும் வணக்கம் சொல்லுதல்.

அ] பூமியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
      ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
     வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம்போற்றி
    ஊழிமலி திருவாதௌஊரர் திருத் தாள்போற்றி   [உமாபதி சிவாச்சாரியார்]

ஆ] தந்தையாய் ஆவானும் சார்கதி இங்காவானும்
       அந்தம் இல்லா இன்பம் நமக்கு ஆவானும்
      எந்தம்உயிர் தான்ஆ குவானும் சரண் ஆகுவானும்
     அருட்கோணாரு வானும் குரு     [தத்துவராய சுவாமிகள்]

4. வழிபடும் இடத்தை சுத்தி செய்தல்

சிறிது தண்ணீரைக் கையில் எடுத்து, “பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி” என்று ஓதி வழிபாடு செய்யும் இடத்தில் தெளித்து அதை தூய்மை செய்யவும்.


5. நீரைச்சுத்தி செய்தல் 

தண்ணீரைச் சிவமாக எண்ணி “நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி” என்று மலர் தூவித் தண்ணீரில் சிவலிங்கத் திருமேனியாய் எழுந்தருளியிருக்கும் திருவானைக்காப் பெருமானை எண்ணி, 

வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு வார்சடைத்
தேனைக்காவில் இன்மொழி தேவிபாகம் ஆயினான்
ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்
ஏனைக்காவல் வேண்டுவோர்க்கு ஏதும் ஏதம் இல்லையே.  [3. சம்பந்தர்]

என்னும் பதிகம் ஓதித் துதித்து வலக்கைப் பெருவிரலை மடித்துக்கொண்டு, மற்ற விரல்களை நீட்டிக் கவிழ்த்துத் தண்ணீர் உள்ள குவளையை மூடித் திருவைந்தெழுத்தை எண்ணித் துதிக்கவும்.


6. ஆத்ம சுத்தி [நீரை உட்கொள்ளுதல்]

நடு மூன்று விரல்களாலும் மேற்கண்ட  தண்ணீரை மூன்று முறை தலையின் மேல் தெளித்துக்கொண்டு, சிறிது நீரை உள்ளங்கையில் எடுத்து இறைவனை எண்ணிக்கொண்டு சிவ தீர்த்தமாக மனத்துள் கொண்டு மூன்று முறை உட்கொண்டு அடுத்து வரும் பாடலைச் சொல்லித் துதிக்கவும்.

ஒன்றா உலகு அனைத்தும் ஆனார் தாமே;
               ஊழி தோறு ஊழி உயர்ந்தார் தாமே; 
நின்று ஆகி எங்கும் நிமிர்ந்தார் தாமே; நீர்,
                 வளி, தீ, ஆகாசம், ஆனார் தாமே; 
கொன்று ஆரும் கூற்றை உதைத்தார் தாமே;
                 கோலப் பழனை உடையார் தாமே; 
சென்று ஆடு தீர்த்தங்கள் ஆனார் தாமே திரு
              ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.     -  அப்பர்.


7. [அ] திருநீற்றைத் தூய்மை செய்தல்

திருநீற்றைப் பராசக்தியின் வடிவமாக எண்ணி சிந்தித்துத் திருநீற்றைச் சிறிது எடுத்துத் தலை, நெற்றி, உடல், முதலியவற்றில் பூசிக்கொள்ள வேண்டும். மேலும் சிறிது எடுத்து தொப்புழிலிருந்து கழுத்து வரையிலும் சிறிது நேர் கோடுகளாகப் பூசவும். இடது கையில் திருநீற்றை வைத்துக்கொண்டு வலக்கை மோதிர விரலால் சிறிது அதிலிருந்து எடுத்துத் தீய சக்திகளை விலக்க நிருதி மூலையில் [இடது தோளுக்கு மேல் பின்புறமாகத்] தெளித்து விடவும்.

இடது உள்ளங்கையில் உள்ள திருநீற்றை வலக்கையால் மூடி வலது தொடைமேல் வைத்துக்கொண்டு,  அடுத்து வரும் பாடலைப் பாடவும். 

இராவணன் மேலது நீறு எண்ணத் தருவது நீறு
பராவண மாவது நீறு பாவம் அறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் துந்திருமேனி ஆலவாயன் திரு நீறே.   - [2.சம்பந்தர்]

சிறிது நீர் விட்டுத் திருநீற்றைக் குழைத்து, தலை, நேற்றி, மார்பு, புயங்கள், இரண்டு முழங்கை, இரண்டு மணிக்கட்டு, தொப்பூழ், முழங்கால் இரண்டு, வலது - இடது விலாப்புறங்கள் இரண்டு,  நடுமுதுகு, கழுத்து ஆகிய பதினாறு இடங்களிலும் இட்டுக் கொள்ளவும்.  நெற்றி, மார்பு,  தோள்களில் ஆறு அங்குலமும், கழுத்து முழுவதும் கீழ்வரும் பாடல்களை சொல்லித் துதித்துக் கொண்டே திருநீறு அணிந்து கொள்ளவும். இதனால் தேகசுத்தி அடைகிறது. 

அ] சந்திரற் சடையில் வைத்த சங்கரன் சாமவேதியன்
அந்தரத்து அமரர் பெம்மான் ஆன்நல் வெள்ளூர்தி யாந்தன்
மந்திர நமச்சிவாயவாக நீறணியப் பெற்றால்
வெந்தறும் வினையும் நோயும் வெவ்அழல் விறகிட்டன்றே   [4. அப்பர்] 


ஆ] கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை 
மங்காமல் பூசி மகிழ்வீரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்காரமான திருவடி சேர்வரே
-திருமூலர்

திருநீறு அணிந்த பிறகு கைகளை அலம்பி, அலம்பிய நீர் இடக்கை மூலம் வரும்படியாகச் செய்து இடக்கையை முஷ்டியாகப் பிடித்துக்கொண்டு பெருவிரலை மட்டும் நீட்டி அதன் வழியாகக் கையில் உள்ள நீர் வடிந்து கீழ் உள்ள பாத்திரத்தில் விழும்படியாக வலக்கை முஷ்டியைத் தாழ்த்தி மல்லாத்தி பிடித்துக்கொண்டு பெருவிரல் வழியாக வடியும் நீரைச் சிவத் தீர்த்தமாகப் பாவித்து இடக்கையின் விரல்களினால் ஏற்று, “சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே” என்று இறைவனைத் துதித்துக்கொண்டே மேலே மும்முறை தெளித்துக் கொண்டு வாயிலும் சிறிது விட்டு அருந்துதல் வேண்டும். இதனால் ஆத்மசுத்தி பெறுகிறது.


7. [ஆ] திருநீறு அணிதல்

திருநீறு இட வேண்டிய இடம் 16. இப்பதினாறும் இறைவனின் புறத் திருத்தொண்டாம், பதினாறிணையும் முறை தவறாது நிறைவேற்ற அன்புடன் இயற்றுதற்கே இவ்வுடல் என்பதனைக் குறிப்பதாகும்.

அவை வருமாறு

1. ஒழுக்கம், 2. அன்பு, 3. அருள், 4. ஆச்சாரம், 5. உபச்சாரம், 6. உறவு, 7. சீலம், 8. தவம், 9. தானம், 10. வந்தித்தல், 11. வணங்கல், 12. வாய்மை, 13. துறவு, 14. அடக்கம், 15. அறிவு, 16. அருச்சித்தல்.

ஒழுக்கம், அன்பு,  அருள், ஆச்சாரம், உபச்சாரம், உறவு, சீலம், வழுக்கிலாத் தவம், வந்தனங்கள், வந்தித்தல், வணங்கல், வாய்மை, அழுக்கிலாத் துறவு, அடக்கம், அறிவோடு அருச்சித்தல், ஆதி இழுக்கிலா அறங்கள் ஆனால் இறங்குவான் பணி அறங்கள். [சித்தியார்]
திருச்சிற்றம்பலம்.

8. உறுப்புகளைத் தொடுதல்

“வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும், தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவா போற்றி”, என ஓதிக் கைகளைக் கூப்பித் தலை வணங்குக. இஃது அருளால் பெற்ற இவ்வுடலால் இறைவனின் அகத் திருத்தொண்டு இயற்றும் முறைமையைக் குறிப்பதாகும். 

உறுப்புகளைத் தொடும் முறை

வலக்கைப் பெருவிரல் நுனியை அணி விரல் [மோதிர விரல்] நடுவரையிற் சேர்த்து மற்றைய விரல்களை நீக்கி நமது உடலில் ஒன்பது உறுப்புகளையும் அவ்விரல் கொண்டு தொடுக. 

இவற்றுள் எட்டாவது எண்ணாகிய ஆக்கையைத் தொடுங்கால் இரு கைவிரல்களையும் தனித்தனி இணைத்துச் சிறிது குவித்துத் தலைமுதல் கால் வரை கட்டி, நெஞ்சின் நேர் வைத்துக் கும்பிடுக. 10, 11, 12, திருக்கண்ணிகளை அன்புடன் ஓதிக் கைகள் இரண்டையும் உச்சிமேற் குவித்துத் தொழுக. இம்மூன்றையும் இறை, உயிர், தளை என்னும் முப்பொருள் உண்மையைக் குறிக்கும்.

1. உச்சி  : தலைவனைத் தலையே நீ வணங்காய்.

2. கண்கள் ; கடல் நஞ்சுண்ட கண்டன் தன்னைக் 
                            கண்களால்  காண்மின் களோ.

3 . செவிகள் : எரிபோல் மேனிப் பிரான் நிறம்
                        எப்போதும் செவிகாள் கேண்மின்களோ

4 .  மூக்கு : வாக்கே நோக்கிய மங்கை மணாளனை  மூக்கே நீ முரலாய்.

5. வாய் : பேய் வாழ் காட்டகத்து ஆடும்பிரான்
               தன்னை வாயே வாழ்த்து கண்டாய்,

6. நெஞ்சு : மஞ்சாடும் மலைமங்கை மணாளனை 
                         நெஞ்சே  நீ நினையாய்.

7. கைகள் : பைவாய் பாம்பரை ஆர்த்த பரமனைக் 
                          கைகாள் கூப்பித் தொழீர்.

8. ஆக்கை : அரனைப் போற்றி எண்ணாத இவ
                       ஆக்கையாற் பயன் என்.

9. கால்கள் : கோகரணம் சூழாக் கால்களாற் பயனென்.

10. இறை : உற்றார் யார் உளரோ!
                          உயிர் கொண்டு போம்பொழுது,
                 குற்றாலத்துறை கூத்தன் அல்லால்
                        நமக்கு உற்றார் யாருளரோ?  

11. உயிர் : இறுமாந்து இருப்பன் கொலோ?
                         ஈசன் பல்கணத்து எண்ணப்பட்டுச்
                 சிறுமான் ஏந்திதான் சேவடிக்கீழ்ச் சென்று
                       அங்கு இறுமாந்து இருப்பன் கொலோ
        
12. தளை : தேவனை என்னுளே தேடிக் கண்டு
                      கொண்டேன்                                                            -[4. அப்பர்]

திருச்சிற்றம்பலம்



9. மந்திரசுத்தி

பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை 
பிரிவிலா அடியார்க்கென்றும்
வாராத செல்வம் வருவிப்பானை 
மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித்
தீராநோய் தீர்த்தருளவல்லான் தன்னை 
திரிபுரங்கள் தீயெழத் திண்சிலைக் கைக்கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப் 
போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே
  - [5.அப்பர்]


10. பிராணாயாமம்

வலச்சுட்டு விரல் நடுவிரல் இரண்டையும் உள்ளே மடக்கிப் பெருவிரலால் வலப்பக்க மூக்கை மூடி “ஓம் சிவாய நம” என் ஐந்து முறை சொல்லி, இடப்பக்க மூக்கால் காற்றை உள்ளே இழுத்துக், காற்றை நிறுத்தி மோதிர விரலால் இடப்பக்க மூக்கை மூடி வலப்பக்க மூக்கால் காற்றை வெளிவிடவும். மீண்டும் இது போலவே இடப்பக்க மூக்கை மூடிக்கொண்டே ஐந்தெழுத்து மந்திரத்தை ஐந்து முறை சொல்லி வலப்பக்க மூக்கால் காற்றை உள்ளிழுத்து இடப்பக்க மூக்கால் வெளிவிடுக. இது போன்று இயன்றளவு செய்க. 

இது சமயம் தொப்புழுக்கு நான்கு விரல் இடம் கீழ் உள்ள இடமாகிய மூலாதாரம் என்னும் இடத்திலிருந்து குண்டலினி என்னும் சிவசக்தி எழுந்து மேல் நோக்கி மூலாதாரம், தொப்பூழ், மார்பு, கழுத்து, புருவமத்தி, உச்சி தலைக்குமேல் பன்னிரண்டங்குல அளவில் உள்ள இடம் ஆகிய உணர்ச்சி நிலையங்களில் எழுந்தருளி விளங்குவதாக எண்ணிப் பிறகு தலைக்கு மேல் இரு கைகளையும் கூப்பி வணங்கி மேற்கண்ட சிவசக்தியை அங்கிருந்து கூப்பிய கரத்தினூடாக, மார்புக்குக் கொணர்ந்து மார்பில் எழுந்தருளி விளங்குவதாகக்கொண்டு பஞ்சபுராணம் ஓதித் துதிக்க. 

11. பஞ்ச புராணம் துதித்தல்

தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் ஆகிய ஐந்து நூல்களையும் பஞ்ச புராணம் என்று சொல்வது மரபு. வழிபாட்டின்போது குறைந்த அளவு மேற்கண்ட நூல்களில் ஒவ்வொன்றாக ஐந்து பாடல்களாவது பாடித் துதித்தல் வேண்டும். கூடுமானால் பத்தாம் திருமுறையாகிய திருமந்திரத்தில் ஒரு பாட்டும், ஆக பன்னிரு திருமுறைகளிலும் ஒவ்வொரு பாட்டாவது சொல்லித் தினந்தோறும் வழிபடுவது சைவருடைய கடமையாகும். மேற்குறிப்பிட்ட பன்னிரு திருமுறைகளும் தவறாமல் ஒவ்வொரு சைவர் இல்லத்திலும் இருக்க வேண்டுவன.

 தேவாரம்  

அ. தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடி
காடு உடைய சுடலை பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடு உடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடு உடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!   - [சம்பந்தர்]

திருவாசகம்

ஆ. அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.        [8. மணிவாசகர்]

திருவிசைப்பா

இ.  கண்பனி அரும்பக் கைகள் மொட்டித்(து)என் 
களைகணே! ஓலம்என்(று) ஓலிட்டு
என்பெலாம் உருகும் அன்பர்தம் கூட்டத்(து)
 என்னையும் புணர்ப்பவன் கோயில்
பண்பல தெளிதென் பாடிநின் றாடப் 
பனிமலர்ச் சோலைசூழ் மொழுப்பில்
செண்பகம் அரும்பும் பெரும்பற்றப் புலியூர் 
திருவளர் திருச்சிற்றம் பலமே.
                                                                [9. கருவூர்த்தேவர்]

திருப்பல்லாண்டு

ஈ. மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் 
வஞ்சகர் போயகல
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
 புவனி யெல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன் 
அடியோ முக்கருள் புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் 
பல்லாண்டு கூறுதுமே.
                                                                                                 [9. சேந்தனார்]


பெரிய புராணம்

உ. நன்மை பெருகு அருள்நெறியே வந்தணைந்து நல்லூரின்
மன்னு திருத்தொண்டனார் வணங்கி மகிழ்ந்தெழும் பொழுதில்
"உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம்!" என்று அவர் தம்
சென்னி மிசை பாதமலர் சூட்டினான் சிவபெருமான்.
                                                                                                [10. சேக்கிழார்]

வாழ்த்துப்பா
                                                                   
ஊ. வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.
                                                                       [3. சம்பந்தர்]


12. ஜபம்  

மனதை புருவ மத்தியில் இறுத்திப் பத்மாசனத்தில் அமர்ந்த வண்ணம் குரு உபதேசித்த திருவைந்தெழுத்தை 108 தடவை மனத்திற்குள்ளாகவே எண்ணுக.

13. தியானம்

இறைவன் புருவ மத்தியில் ஒளி வடிவமாக விளங்குவதாக எண்ணி எந்த விதமான வேற்று எண்ணமும் இன்றி அமைதியாகச் சிவனைச் சிந்தித்து இருக்கவும். மேற்கண்டவாறு [அனுஷ்டானத்தை] வழிபாட்டை முடித்துக்கொண்டு புறத்தில் சிவ வழிபாடு தொடங்குதல் வேண்டும். 

இத்துடன் நித்திய வழிபாடு முற்றுப்பெறும். சிவபூசை செய்வோர் இதற்குமேல் ஆன்மார்த்த மூர்த்தி வழிபாடு செய்தல் வேண்டும். 

திருச்சிற்றம்பலம்.

கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி
நில்லாப் பிழையும்,  நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும், துதியாப் பிழையும், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே. 

-  திருவேகம்ப மாலை,  பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்)


Inline image 2
ஆலய வரலாறு


Inline image 3
ஆலயத்தின் உள்ளே

Inline image 4
சிவ பூஜை செய்ய தயார் நிலையில் இருக்கும் பக்தர்கள்


Inline image 5
சிவலிங்கங்கள் தனி பிரகாரங்களில்


Inline image 6
பூஜைக்கான  தயாரிப்பு பொருட்கள்


சிவ பூஜை செய்ய தயார் நிலையில் இருக்கும் பக்தர்கள்


Inline image 8
சிவ பூஜை செய்ய தயார் நிலையில் இருக்கும் பக்தர்கள்


Inline image 9
நாதஸ்வரக் கலைஞர்கள்

திரு. தங்க விசுவநாதன்

Inline image 11
மூலஸ்தான தெய்வத்திற்கு அபிஷேகம்



-- 


                                                               
                  







3 comments:

  1. சிறப்பான பகிர்வு... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. பதிவில் படங்கள் வரவில்லை... கவனிக்கவும்...

    எனது Browser : Chrome

    ReplyDelete
  3. சிவராத்திரி தினத்துக்கேற்ற சிறப்பான பகிர்வு...மிக்க நன்றி!..

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...