Tuesday, February 25, 2014

பாரதியின் , THE FOX WITH THE GOLDEN TAIL சிறுகதை! (தொடர்ச்சி - 2)


பவள சங்கரி


பெசண்ட் எதிர்ப்பியக்கத்தின் பிரச்சாரக் கிளர்ச்சியை சென்னை மாநில அரசு ஊக்கமுடன் அறிந்தது. மாநில அரசின் தலைமைச் செயலாளர், “Pleasing Polemics" எனும் குறிப்பையும் ஒரு ரகஸ்ய அறிக்கையில் எழுதியுள்ளார். ஆளுநர் அவையின் ஓர் உறுப்பினர், லெட்பீட்டரை, பெச்ண்ட் சேர்த்தது தவறென்றும் குறிப்பிட்டுள்ளார். 

சென்னை இந்து பத்திரிகை பெசண்ட் எதிர்ப்பியக்கத்தின் போர்முரசாக ஒலித்தது. சென்னையில் தீவிரவாத தேசியத் தலைவர்களின் புரவலராக உதவியவரும், “The Fox With the Golden Tail" ன் பிரதிகள் ஐந்நூற்றை வாங்கி உதவியவருமான டாக்டர் எம். சி. நஞ்சுண்டராவ் அவர்கள் பங்கும் பெசண்ட் எதிர்ப்பியக்கத்தில் குறிப்பிடத்தக்கது. 

பாரதியாரின் இந்த நூல் பெசண்ட் எதிர்ப்பு இயக்கப் போர்க்களத்தில் தோன்றிய அற்புத இலக்கியமாக பெரும் புகழ் கொண்டது. 

இந்திய ஆன்மீகச் சிறப்புகளை ஆங்கிலம் படித்த வருக்கத்தினரில் சிலர் சுயமாக சிந்திக்க மறுத்து ‘வெள்ளையர் பாராட்ட’ அந்தப் பாராட்டை அப்படியே கண்மூடித்தனமாக ஏற்றத்தைக் கண்டித்துள்ளது. இந்த நூல் திரு. நாராயணய்யா என்பவர் தமது புதல்வர்களான , ஜே.கிருஷ்ணமூர்த்தி, நித்யா என்பவர்களுக்கு பெசண்ட் அம்மையாரை பொறுப்பாளராக ஏற்றதும் பின் மனம்மாறி ஒப்பந்தத்தை விலக்கிக் கொள்ள வழக்கு தொடுத்ததும் இந்த நூலில் விதந்தோதப்பட்டுள்ளது. 

இந்த வழக்கிற்கான உள்நோக்கத்தில் அரசியல் கலந்துள்ளது என லெட்பீட்டர் என்பவர் லேடி எமிலி என்பவருக்கு 1912 அக்டோபரில் அடையாற்றில் இருந்து எழுதிய கடிதத்தில் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார். 

“The truth is that the man is a tool of the political party here in India which is disaffected to the British Government and he is simply being used as a weapon of attack upon Mrs. Beasant and upon the Theosophical society, because that organisation has always stood for law and order. Mrs. Beasant has especially roused the enmity of that section of the people because she refused to allow the preaching of seditious doctrines to the students in the Central Hindu College". 


பாரதி, ‘பொன் வால் நரி’ கதையை எழுதி அரவிந்தரிடம் படித்துக் காண்பித்ததாகவும், கதையைக் கேட்டு அரவிந்தர் மிக வியந்து பாராட்டியதாகவும் ஒரு செய்தி உள்ளது. (பக்.91); சித்திர பாரதி முதல் பதிப்பு 1957; ஆசிரியர் ரா.அ. பத்மநாபன்).


ஆன்மீகப் பின்னணி 

தியோசபி இயக்கத்தின் ‘மகாத்மாக்களின் கட்டளைகள், ‘அற்புதங்கள்’, ‘ரகசிய உட்குழு நடவடிக்கைகள்’, பலத்த கண்டனத்திற்கு உரியனவாகக் கருதப்பட்டன. 

சுவாமி விவேகானந்தர், இந்த ‘மகாத்மாக்கள்’, ‘அந்தரங்க உட்குழு’வைப்பற்றி சென்னை விக்டோரியா மன்றத்தில், “எனது போர் முறை” எனும் முதல் சொற்பொழிவில், சிகாகோ வீரராக 1897-ல் சென்னை திரும்பியபொழுது பின்வருமாறு குறிப்பிட்டார். 

“அவர்களுடைய சபையின் அந்தரங்க சட்டதிட்டங்களில் கண்டிருக்கும் பிரச்சாரம் அவ்வந்தரங்கப் பகுதியிற் சேர்ந்துள்ள அங்கத்தினர் எவராயினும், அவர்களின் (மஹாத்மாக்கள்) குதுமி, மொரியாவிடமிருந்து மாத்திரமே எவ்வித போதனைகளையும் பெற வேண்டுமென்பதாம்......  ஆகவே அவ்வந்தரங்கப் பகுதியில் சேருவதென்றால் ஒருவன், தனதெல்லா சுதந்திரத்தையும் ஒப்படைத்து விடுதல் என்று பொருள்படுகிறது. நிச்சயமாக இப்படிப்பட்ட காரியம் எதுவும்தான் செய்ய முடியாது; யாரேனும் இங்ஙனம் ஏதாவது செய்தாலும் அவனையொரு ஹிந்துவென்று அழைக்க மாட்டேன்”.

தேசபக்த  - மெய்ஞானி எனக் கொண்டாடப்பெற்ற சுவாமி விவேகானந்தர், பாரதி, வ,உ.சி., சிவாவின் உள்ளங்களைக் கவர்ந்தவர். “மிஸஸ் அன்னி பெசண்டும் அவள் வகையாரும் இந்திய ஜாதியின் வேரையெடுக்க வந்திருக்கிறார்களென்று ஸ்ரீ விவேகானந்த ஸ்வாமி முதலிய ஞானிகள் கூறியிருந்தும் நம்மவர்களுக்கு சிறிதும் ஞானமில்லாமல் இவளது மாயவலையில் சிக்குண்டு இவளைப் பெருமைப்படுத்தி வருகிறார்கள்” என பாரதியாரின் ‘இந்தியா’ பத்திரிக்கையில் ‘கல்கி’ எனும் புனைப்பெயரில் எழுதியவரின் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. 

சிவாவின் வந்தே மாதரம் கட்டுரையிலும் அன்னி பெசண்ட், குதுமி மோர்யாவைப் பற்றி பின்வரும் ஏளனக் குறிப்பு உள்ளது. 

“அடையாற்றிலே இருந்து கொண்டு கூட்டுமி, முரியா முதலான மஹாத்மாக்களுடனே அந்தரங்க சம்பாஷணை செய்துகொண்டு சும்மாயிருக்கலாம்”. 

பாரதியாரும் இந்த மகாத்மாக்களைப்பற்றி ஒரு செய்தியளவில் ‘இந்தியா’ பத்திரிக்கையில் (ஜனவரி 26, 1907) பின் வருமாறு எழுதியுள்ளார். 

“தியோசபிகல் சங்கத்தார் இந்தியாவுக்கு வந்த ஆரம்பத்தில் தமது சபைக்கு இமயமலைப் பிரதேசத்தில் சிவஜீவிகளும், சித்தர்களுமாகிய மஹாத்மாக்கள் இருந்து உதவி செய்து வருவதாக சொல்லி வந்த விஷயமும் இந்த சபைத் தலைவர்களே சில ஜால வித்தைகள் காண்பித்துக் கொண்டிருந்த விஷயமும் நேயர்களிலே சிலருக்குத் தெரிந்திருக்கலாம்”. 

தொடரும் 



1 comment:

  1. கட்டுரையில் உள்ள பல தகவல்களை அறிய வைத்தமைக்கு நன்றி... தொடர்கிறேன்...

    ReplyDelete