Thursday, April 17, 2014

'இலைகள் பழுக்காத உலகம்’


பவள சங்கரி

'இலைகள் பழுக்காத உலகம்  - புத்தக மதிப்புரை

ராமலஷ்மி அவர்களின் முதல் கவிதைத் தொகுப்பு இது. ஆழ்ந்த அனுபவத்தின் சாயலை ஏற்படுத்தும் தலைப்பு. இலைகள் பழுக்காத உலகம் என்று ஒன்று இருந்தால் அது எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பார்த்தால் அது பலவிதமான எண்ண ஓட்டங்களுக்கு வழி வகுக்கின்றன. பழையன கழிந்தால் தானே புதியன பிறக்க முடியும்? பூமியில் புதியன வாழ இடம் வேண்டுமேவாழ்ந்து முடித்து ஆண்டு அனுபவித்த ஒன்று விலகி வழிவிட்டால்தானே புதிதாகப் பூத்து மணம் வீசும் ஒன்று வாழ வழி கிடைக்கும். இப்படியான எண்ணத்துடன் உள்ளே நுழைந்தால் அங்கே வேறு பல வண்ணங்களும் காணக் கிடைத்ததில் நின்றது எது, வென்றது எது என மீண்டும் சிந்தனை ஆற்றில் நீந்தியபடி வெளிவருவோம்..  ராமலஷ்மியின்  வார்த்தைகளின் எளிமையில் கருத்துகளின் கனமும் சுகமான சுமையாகத்தான் ஆகிவிடுகிறது!


விருப்ப ஓய்வு வேண்டி
விருட்சத்தினின்று
சுழன்று கொண்ட அதன் நடுவே

பழுத்த இலைகள் ஓய்வு பெறுவது, குறுத்து இலைகளை வாழ்விப்பதற்கே என்பதை அழகாகச் சொல்லிச் செல்கிறதுஅன்பின் வரிகள்


பூக்குட்டி யில், மென் மனம் கொண்ட பாத்திரங்களின் எண்ணோவியங்கள், இயற்கை வண்ணங்களையும் ஏந்திக்கொண்டு அழகோவியமாய்  சுவைகூட்டுகிறது!

சோற்றுப் பருக்கைகளை
கொத்தும் குருவிகளையும்
ஓடிவரும் அணில்களையும்
அவற்றை விரட்டுகிற காகங்களையும்
வேடிக்கைப் பார்க்கிறது
கைப்பிடிச் சுவரில் அமர்ந்து
நேற்றையப் பிறை நிலா


இருப்பும் தவிப்பும் கூட இதமாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது.  ‘இருப்பில்புகைப்படத்தின் ஓவியமாய் வாழும் பிள்ளையாரும்கூட விதம்விதமான கோணங்களில் அருள் பாலித்தார்இறுதியிலோ,

வானத்துச் சூரியன் மேற்கே சரிந்து விழ
இருண்ட காலிக்கூடத்தின் சுவர்களெங்கும்
ஓடி ஓடித் தேடிக் கொண்டேயிருந்தது
பிள்ளையாரை மூஞ்சூறு.



சூதாட்ட(ம்)ச் சதுரங்கங்கத்தின் ஏற்றத் தாழ்வுகள் தவிர்க்க இயலாதவை! சக்தியும், புத்தியும் ஆட்சி செய்தாலும்,

விதியை எதிர்த்து
விதிமுறைக்கு உட்பட்டே
நகர வேண்டிய களத்தில்
சீறவும் சீவவும் தாராளமாக அனுமதி


சுயநலப் பிரார்த்தனைகளின் வார்த்தைகள், நீல வானத்தை நிரப்பிக் கொண்டிருந்தாலும், மனிதம் மலரச் செய்யும் அப்பிஞ்சு உள்ளத்தின் சுயநலமற்ற பிரார்த்தனை!

முட்செடியில் மாட்டிக்கொண்ட
சிட்டுக் குருவிக்காக
அதன் சிறகுகளை
மெல்ல விடுவித்தபடி
சிறுமி முணுமுணுத்த
காப்பாத்து கடவுளே
அம்பாகப் பாய்ந்து
ஆகாயத்தைக் கிழிக்க..
பேரிடியுடன் ஊற்றிய மழையில்
குளிர்ந்தது பூமி.


ஒரு இல்லாளின் ஏக்கங்கள் எண்ணிலடங்கா என்பர்அதுவும் பணிக்குச் செல்லும் ஒரு தாயின் வாட்டங்கள் சொல்லில் அடங்காதுஅன்றாட வாழ்க்கையின்  யதார்த்தமான பார்வையின் கவிப்போர்வைவின் வண்ணம் இதோ.... ஏக்கம்

ஏக்கமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தது
மடிப்புக் கலையா அழகுடன்
பிரிக்கப்படாமல் கிடந்த
அன்றைய செய்தித்தாள்



கவிஞர் வே. ராமலிங்கம் எழுதிய இக்கவிதை வரிகள், மகாத்மா காந்தி அவர்களின் அகிம்சைப் போராட்டத்தைச் சித்தரிப்பவைகள்.

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்! . .(கத்தி)
ஒண்டி அண்டிக் குண்டு விட்டிங்குயிர் பறித்தலின்றியே
மண்டலத்தில் கண்டிலாத சண்டையன்று புதுமையே! .(கத்தி)
குதிரையில்லை யானையில்லை கொல்லும் ஆசையில்லையே
எதிரியென்று யாருமில்லை எற்றும் ஆசையில்லதாய் . .(கத்தி)
கோபமில்லை தாபமில்லை சாபங்கூறல் இல்லையே
பாபமான செய்கையன்றும் பண்ணு மாசையின்றியே . .(கத்தி)
கண்டதில்லை கேட்டதில்லை சண்டையிந்த மாதிரி
பண்டு செய்த புண்ணியந்தான் பலித்ததே நாம் பார்த்திட! . .(கத்தி)
காந்தியென்ற சாந்தமூர்த்தி தேர்ந்து காட்டும் செந்நெறி
மாந்தருக்குள் தீமைகுன்ற வாய்ந்த தெய்வமார்க்கமே . .(கத்தி)

கவிஞர் ராமலஷ்மி அவர்களின்  ‘யுத்தம் என்ற புனைவுக் கவிதை சொல்வதோ இன்னுமொரு யுத்தம் .. ஆம் மாறுபட்ட யுத்தம் இது. மழை விட்டும் தூவானம் விடாதது போன்று யுத்தம் முடிந்த பின்பும் அங்கு நடப்பதை இப்படிக் கூறுகிறார் :

போர்க்களமெங்கும்
அவை விட்டுச்சென்றிருந்த எச்சங்கள்
காலத்தாலும் கழுவ இயலா
கசப்பான மிச்சங்களாக.


ஒன்றல்ல இரண்டல்ல
ஒரு நூறு முகமூடிகள்

பல முகங்கள் கொண்ட மனிதர்களின் முகமூடிகளைக் கிழித்துக் காட்டும் முயற்சியில் கவிஞரின் ஆழமான பார்வை அழகான சொற்களாக பிரசவித்திருப்பது சிறப்பு

சுற்றம் மறந்து நிதானம் இழந்து
மதிமழுங்கி மற்றவர் வருத்தி
மனவெறி அடங்கிய வெற்றிக்களிப்பில்
எதிரே இருந்த கண்ணாடியை
எதேச்சையாய் ஏறிட

பேதலித்து அலறுகிறது சுய முகம்
தன் கோரம் தானே காணச் சகியாமல்.


மற்றுமொரு முகமூடியின் முத்தாய்ப்பாக,

கலங்கி நின்ற மனதை
ஆற்றுப்படுத்த வந்த ஆத்ம பந்தங்கள்
தேற்ற மறந்து கழற்றத் தொடங்கின
ஆத்திரமாய் தத்தமது முகமூடிகளை.


நிலவைப் பாடாத கவிஞரும் உளரோ? இக்கவிஞரும் அதற்கு விதிவிலக்கல்ல ஆனால் இவருடையகுளிர் நிலவுகொஞ்சி விளையாடி, குடிகொண்டிருப்பது  மழலையிடம்!

சமாதானமாகி முறுவலித்த
குழந்தையின் முகத்தில்
குடிகொண்டிருந்தது இப்போது
குளிர் நிலவு.


ஜீவிதமென்பதுஒன்றையொன்று சார்ந்திருப்பதுதனக்கு ஈடு எவருமில்லை என்ற அகந்தை தவறான ஒரு இடத்தில் வரும்பட்சத்தில் அவன் மாவீரனேயாகினும் வீழ்ந்து விடுவதில் ஆச்சரியமில்லைதான். வளைந்து கொடுத்து வாழ்ந்து பார்ப்பதில்தான் நிம்மதி இருக்கிறது.

தோற்றுப் போனதாய் வருந்தவில்லை
கொள்கையும் நம்பிக்கையும்
தெளிவாய் இருந்தன
ஒன்றையொன்றுநியதியின்படி.......

தமது ஜீவிதம்
சரிந்தும் சாய்ந்தும் கொடுத்தபடி
சந்தர்ப்பங்களையும் சௌகரியங்களையும்
சார்ந்தே என்று.


குழந்தைகளுக்குக் கதை சொல்லும் வழமை இன்று மிகவும் அருகி வருவதற்குக் காரணம், மறைந்து கொண்டிருக்கும் இன்றைய கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையும், பெற்றோரின் இயந்திர வாழ்க்கையும்தான்புதிய அத்தியாயம்  சொல்ல வருவதோகுழந்தைக்கும், பெரியவருக்குமுள்ள வேறுபாடுகளின் தேடல்தான்....

வாழ்க்கையைப் பல நேரங்களில்
அதன் போக்கில் விட்டுப் பார்க்க
அஞ்சுகிற நமக்கும்
குழந்தைக்குமான வித்தியாசத்தைத்
தேடித் திகைத்து நின்ற புள்ளியில்
ஆரம்பம் ஆனது.


மாக்களிடமிருந்து மக்களைப் பிரிக்கிற அந்த உன்னதமான ஒன்று எது என்று கேட்டால் அது ஆறாம் அறிவு என்பதுதான் அனைவரின் ஒருமித்தக் கருத்தாக இருக்கும்மாக்களைக் காட்டிலும் மக்களே மேன்மையானவர்கள் என்ற மாயத் தோற்றத்தையும் அளித்தாலும், கவிஞரின் கூற்று என்னவோ மாறுபட்ட கோணத்திலேயே உள்ளதுநான்கறிவு படைத்ததேப் பறவையினம் என்றாலும்,

கைக்கெட்டும் தூரத்தில்
கைக்கெட்டா கனவொன்றைப் போல
பறந்து கொண்டிருந்த பருந்தினை
விடாமல் பின் தொடர்ந்தது
அங்குல இடைவெளியில் இரண்டாம் பருந்து.....

அழகான புனைவு. மக்களைப் போல பறவையினங்களுக்கும்கூட ஆறாவது அறிவு வாய்க்கப் பெறலாம் என்கிறாரோ கவிஞர்?


இலைகள் பழுக்காத உலகம்  சிற்றாடை கட்டும் இளஞ்சிறுமியின் இழந்துவிட்ட தந்தைப் பாசத்தைக் கூறுபோட்டுக் காட்டுகிறதுநிழற்படங்களின் மூலமாகவே நினைவில் நிற்கும் பிம்பத்தை கனவில் கண்டு, வெகு எளிதாகக் கதைகள்பல பேசிச் செல்கிறது குறுகலான அக்கவிதை.

ஏற்றுக்கொள்ள இயலவில்லை மகளென்று
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
நரையோடும் சிகையோடு
அவரினும் அதிக வயதாகி நின்றிருந்த என்னை

மறையாத சூரியனின் வெளிச்சத்தில்
தேயாத முழு நிலவைக் காண முடிகிற
தான் வாழும் உலகில்
வாடாத மலர்களையும்
பழுக்காத இலைகளையுமே
பார்த்துப் பழகிவிட்டவருக்கு.


சந்தேகம் என்பது மனிதப்பிறவிகளுக்கே உரித்தான ஒரு கொடிய நோய்இந்த நோய் தாக்கப்பட்டவர்கள் வாழ்க்கையில் நிம்மதியை இழப்பதுடன் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் பெரும் தொல்லையாகிவிடுகின்றனர். இதற்காகபிரார்த்தனை செய்யும் கவிஞரின் மனிதம் பாராட்டுதலுக்குரியது. பேதமையே இந்தச் சந்தேகத்திற்குக் காரணம் என்பதை மிக எளிமையாக இப்படிக் கூறுகிறார்:

அக்கறையை அவமதிப்பாக
பரிவைப் பாசாங்காக
மூளையின் துணை கொண்டு
காரணங்களை அலசி அலசி
அன்பைத் திரித்து மகிழ்கின்றன
பேதமையின் உச்சத்தில்



கேள்வியைத் தேடி அலைபவருக்கும் இதே பிரச்சனை பாருங்கள்.. இதோ கவிஞரின் வெகு இயல்பான மொழியில்:

சிந்தனை வெளியில்
சூறாவளியாய்ச் சுழன்றடித்து
துரத்திய சந்தேகங்களுக்கு
பதில்களைத் தேடித்தேடிப்
பயணித்துக் களைத்தவன்
ஒரு புள்ளியில்
எதைத் தேடுகிறோமென மறந்து
தேடத் தொடங்கினான்
கேள்விகளை.


பிறழாத பிரவாகம் என்று கவிஞர் குறிப்பிடுவது ஒரு வித்தியாசமான தேடலை. வாழ்க்கையில் ஒரு பக்குவப்பட்ட நிலையை அடைந்தவர்கள் பலரின் தேடல் இதுவாகத்தான் இருக்கும். இந்தத் தேடலின் இலக்கு குறித்ததாகவே உள்ளது இக்கவிதையின்  நோக்கமும். எதைப் பற்றிய தேடல் இது? இலக்கு உள்ளதா இதற்கு?

ஆன்மா அழிவற்றதா
அறிந்திடும் ஆவல்
அணையாத் தீயாய்
அடங்காக் கனலாய்

......................................

பிடிவாதமாய்த் தொடரும் அவன்
இலக்கற்றத் தேடல்களால்

இப்படிப் போகிறது தெளிந்த நீரோட்டமாய் கவிதை.


ஒரு சொல் ஒவ்வொரு படைப்பாளரும் ஒரு சமயத்தில் ஏங்கித் தவிக்கும் நிலை இது! தொண்டைக் குழியில் அடைத்துக்கொண்டு வெளியிலும் வராமல் மூச்சையும் விட முடியாமல் பிரசவ வேதனை போல பாடாய்ப்படுத்தும் ஒரு சிக்கல் அது. இதோ கவிமொழியில்,

பல ஒலிகளில் நீளங்களில்
விதவிதமான அழகுச் சொற்கள்
விரித்த வலையில் வந்து விழுந்தாலும்
எனக்கு வேண்டியது கிடைக்கவில்லை.

இறுதியில் எப்படி அழகாக அந்த வார்த்தைப் பிறந்தது என்பதே இக்கவிதையின் உச்ச அலங்காரம்! கவிஞரின் யதார்த்தமான சிந்தனையின் வெளிப்பாடு!


உண்மையைப் பற்றி எத்தனையோ பேர் பட்டி மன்றமே நடத்தினாலும் இங்கு, தனக்குத் தெரியாத உண்மைகளே இருக்கக்கூடாது என்ற ஒருவனின் தணியாத மோகம்கவிஞரின் பார்வையில் இதோ:

சந்தைக்கு வராத உண்மைகளைச்
சந்திப்பவரிடமெல்லாம் தேடினான்
சத்தியத்தை மீறியேனும் அவை தன்
சட்டைப் பைக்குள் வர
சகல உத்திகளையும் கையாண்டான்.



 இறக்கைகள் - ஒவ்வொரு மனிதருக்கும் கண்ணிற்குத் தெரியாத இறகுகள் இருக்கத்தான் செய்கின்றன. மேலும் மேலும் அதிகப்படியாக விரும்பி கட்டிக்கொண்ட இறகே கூடப் பல நேரங்களில் பாரமாய் ஆகிவிடுவதுண்டு. அவைகளைக் கழட்டி வீசும் அவசரம் தோன்றுவதும் உண்டு. இப்படி,

எதையோ தேடப் போன போது
அகப்பட்டன
அனுபவப் பாடங்களும்
தொடர்பறுந்த நட்புகளும்
தவற விட்டப் பல
அற்புதத் தருணங்களும்

இறக்கைகளைக் கழற்றி விட்டு
நடக்கத் தொடங்கிய என் கைகளை
ஒரு குழந்தையின் குதூகலத்துடன்
பற்றிக் கொண்டு
தளிர் நடை போடுகிறது காலம்.



வழமையாக கவிஞர்களின் பார்வைக்குத் தப்பாத பொய் முகம் - இக்கவிஞரின் பார்வையில் தப்பியுள்ளதே தனித்தன்மையைக் காட்டுகிறது. வாழ்வியல் சார்ந்த களங்களைத் தேர்ந்தெடுத்து அதில் யதார்த்தத்தைச் சரிவிகிதமாகப் புகுத்தி அழகிய கவிமாலை புனைந்திருக்கிறார் கவிஞர். புரியாத மொழியில் அறியாத வகையில் ஆழ்ந்த கருத்துகள் கொண்ட பல கவிதைகள் மருட்சி ஏற்படுத்தி, தமிழ் கூறும் நல்லுலக மக்களை முழுமையாகச் சென்று சேர்வதில்லை. எளிமையான நடையில் சாமான்யரும் சுவைக்கும் வகையில்  தெள்ளு தமிழில் இன்பத்தேனை சுவைக்க வழங்குவது சிறப்பு சேர்க்கிறது.   வாசகரின் கற்பனைச் சிறகையும் உடன் ஏந்திக் கொண்டு மேலும் பல பரிமாணங்களுடன் வானில் சிறகடித்து வட்டமிடத் துவங்கி விடுகிறது. கவிஞரோடு சேர்ந்து, வாசகரும் பயணிக்கும் அந்த சுகம் எளிமையான அந்த நடையின் தாக்கம் படைப்பாளியையும் வெற்றி வாகை சூடச் செய்து விடுகிறது. அந்த வகையில், கவிஞர் ராமலஷ்மி அவர்களின் கவிதைகளும்  கடைவாயில் சிக்கும் கடினமான கற்கண்டாயிராமல், எளிமையாக நுண்மாண் நுழைபுலத்தினுள் புகுந்த கடியாய் சுவைக்கச் செய்கிறதுகண்டதும் பற்றிக் கொள்ளும் மெல்லிய  எளிய சொற்கள் சுவைகூட்டுவதும் இயல்புதானே? அந்த வகையில் ராமலஷ்மியின் 61 கவிதைகளும், வாழ்வின் இயல்பான அன்றாட நிகழ்வுகளைக் கவிதைக் களமாக்கியிருப்பது சிறப்பு!


நூலின் பெயர் : இலைகள் பழுக்காத உலகம்
நூலாசிரியர் : ராமலஷ்மி
பக்கம் – 96
விலைரூ.80.00
அகநாழிகை பதிப்பக வெளியீடு



6 comments:

  1. அருமையான ஆழ்ந்த விமர்சனத்தை ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி திரு தனபாலன்.

      Delete
  2. விரிவான மதிப்புரைக்கு மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் வாழ்த்துகள் ராமலஷ்மி. இன்னும் பல நூல்கள் வெளிவர பிரார்த்தனைகள் தோழி.

      Delete
  3. அனுபவத்தின் சாயலைஏற்படுத்தும் தலைப்பு./

    அழகான விமர்சனம் ..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வருகைக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி ராஜேஸ்வரி மேடம்.

      Delete