Monday, June 23, 2014

கவியரசு கண்ணதாசன்


இன்று கவியரசரின் 88 வது பிறந்த தினம். ”நான் நிரந்தரமானவன். எனக்கு அழிவென்பதில்லை” என்று அவரே கூறியுள்ளது போல இன்றும் நம்முடன் தம் பாடல்கள் மூலம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.


கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை இது. அவர் உடல் நலமின்றி அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தபோது,  அவரை நலம் விசாரிக்க  அமெரிக்க வாழ் தமிழர்கள் வந்திருந்தனர். அவர்களின் குழந்தைகளுக்கு தமிழ் பேசத் தெரி்யாது என்பதை அறிந்த கவியரசர் உடனே ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அக்கவிதையே கவியரசர் எழுதிய கடைசி கவிதையும் என்கிறார்கள்.  இதுதான் அந்தக் கவிதை.





மனிதரில் ஒன்றுபட்டுச் சேர்ந்திருப்பீர் 
இங்கு மழலைகள் தமிழ் பேச செய்துவைப்பீர் 
தமக்கென கொண்டு வந்ததேதுமில்லை 
பெற்ற தமிழையும் விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை!
கவியரசு கண்ணதாசன்




எங்கே வாழ்க்கை தொடங்கும்

அது எங்கே எவ்விதம் முடியும்?

இதுதான் பாதை இதுதான் பயணம்

என்பது யாருக்கும் தெரியாது”


பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

போற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரித்
தூற்றுபவர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்;
ஏற்றதொரு கருத்தைஎன துள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன் அஞ்சேன். 



எல்லாம் அவன் செயலே'

  காக்கை குருவியைப்போல்

  கவலையின்றி நீயிருந்தால்

  யாக்கை கொடுத்தவனை

  யார்நினைப்பார் இவ்வுலகில்

  சட்டியிலே வேகின்ற

  சத்தெல்லாம் சரக்கானால்

  மட்டின்றிப் படித்துவந்த

  மருத்துவர்க்கு வேலையென்ன

  கடலருகே வீற்றிருந்தும்

  கடுந்தாகம் வரும்பொழுதே

  கடவுளெனும் ஒருவனது

  கைசரக்கு  நினைவுவரும்

  இன்னதுதான் இப்படித்தான்

  என்பதெல்லாம் பொய்க்கணக்கு

  இறைவனிடம் உள்ளதடா

  எப்போதும் உன்வழக்கு

  எல்லாம் அவன்செயலே

  என்பதற்கு என்ன பொருள்

  உன்னால் முடிந்ததெல்லாம்

  ஓரளவே என்று பொருள்.






2 comments: