Monday, August 25, 2014

நட்பு!





இரு நண்பர்கள் பற்றிய ஒரு ஜென் கதை...


ஒரு பாலைவனத்தின்  மணல் வெளியில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள், இரு நண்பர்களும். நடக்கும் களைப்பு தீர கதை பேசிக்கொண்டே சென்றார்கள். பேச்சுவாக்கில் விவாதம் ஒன்று முளைத்தது. எதிர் வாதத்தினால் வாய்ச் சண்டையாகவும் மாறிவிட்டது. கோபம் தாளாத ஒரு நண்பன், மற்றொருவனின் கன்னத்தில் அறைந்துவிட்டான். 

அறை வாங்கியவனோ சற்றும் கோபிக்காமல், மிக  அமைதியாக ஒதுங்கிப் போய் மணலில் அமர்ந்ததோடு, தன் விரல்களால், “எனதருமை நண்பன், என் உயிரினும் மேலானவன், இன்று என் கன்னத்தில் அறைந்துவிட்டான்!” என்று மணலில் எழுதினான்.


அடி கொடுத்த நண்பனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருவரும் அமைதியாக நடை பயணத்தைத் தொடர்ந்தார்கள். அடுத்து வழியில் ஒரு பாலைவன ஊற்றைக் கண்டபோது இருவரும், வெம்மையின் தாக்கம் தீர இதமான குளிர் நீரில் குளிக்க ஆரம்பித்தார்கள்.

கன்னத்தில் அறை வாங்கிய நண்பணின் காலை திடீரென்று யாரோ பிடித்து இழுப்பது போன்ற உணர்வில் தடுமாறியவன், அடுத்த நொடி அது புதைகுழி என்பதையறிந்து, தான் சிக்கிக் கொண்டது புரிய, அலற ஆரம்பித்தான். அடுத்த நொடி அறை விட்ட அந்த நண்பன் பெரும் முயற்சி எடுத்து அந்த நண்பனைக்  காப்பாற்றி கரை ஏற்றினான். உயிர் பிழைத்த நண்பன் ஆபத்திலிருந்து மீண்டு வந்தவுடன் செய்த முதல் வேலை, அருகில் இருந்த ஒரு கல்லின் மீது அமர்ந்துகொண்டு, மற்றொரு சிறு கல்லை எடுத்து அதன் மூலம் மிகச் சிரமப்பட்டு எழுத ஆரம்பித்தான், இப்படி .... 

“இன்று எனதாருயிர் நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான்” இதைப் பார்த்துக் கொண்டிருந்தவனோ, 
“நான் உன்னை கன்னத்தில் அறைந்தபோது அதை மணலில்தானே எழுதினாய். இப்போது காப்பாற்றியபோது அதை கல்லில் எழுதுகிறாயே ஏனிப்படி?” என்றான். அதற்கு அன்பான அந்த நண்பனின் இனிமையான பதில், 

“யாராவது நம்மைக் காயப்படுத்தினால், அதை மணலில் எழுதிவிடவேண்டும்.  மன்னிப்பு எனும் இதமான காற்று அதை வெகு எளிதாக அழித்துவிட்டுப் போய்விடும். ஆனால் யாராவது நமக்கு நன்மை  செய்தால் அதை காலமெல்லாம் நிலைத்து நிற்கும்படி  கல்லில் எழுத வேண்டும்” 


No comments:

Post a Comment

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...