Sunday, August 3, 2014

சிம்ம சொப்பனம்


பவள சங்கரி

தீரன் சின்னமலை



நம் பாரத நாட்டில் கி.பி.17ஆம் நூற்றாண்டிலிருந்து அந்நியரின் தலையீடு துவங்கியது. தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்க வந்தவர்கள் நம் நாட்டின் இயற்கை வளங்கள் கண்ணை உறுத்த, அன்றிருந்த குறுநில மன்னர்களின் ஒற்றுமையின்மையால் ஏற்பட்ட  குழப்ப நிலையை சாதகமாக்கிக்கொண்டு ஆட்சியமைக்க எத்தனித்தனர். விடுதலை வேட்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட வீரமறவர்கள் பலர். இவர்களுள் முன்னோடியாகத் திகழ்ந்தவன் கொங்கு நாட்டு மாவீரன் தீரன் சின்னமலை. தன்னைப் போன்ற  சுதந்திர வேட்கை கொண்டோரை ஒன்று திரட்டி, மும்முறை படையை வழிநடத்தி எதிரிகளை நடுநடுங்கச் செய்தவன். எவரையும் வியக்கவைக்கும் வீர வரலாறு.  தம்பாக் கவுண்டர், தீர்த்தகிரி சின்னமலை என்ற பெயர்கள் கொண்ட இவர் பிறந்தது, 07.04.1756. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், கிழக்கிந்தியக் கம்பெனியாருக்குக் கோவை, ஈரோடு மாவட்டப் பகுதியில் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் தான் மாவீரன் தீரன் சின்னமலை (1756-1805). வட தமிழ்நாட்டின் சுதந்திர வேள்வியின் நாயகனாகத் தலைநிமிர்ந்து நின்று கிழக்கிந்தியக் கம்பெனியாரின் அட்டூழியமான வீரப்போரில் கலந்து கொண்ட மாவீரன் கொங்கு நாட்டு தீரன் சின்னமலை.
 18-ஆம் நூற்றாண்டு இறுதியில்  கொங்கு நாட்டில்,காவிரியின் மேற்கே உள்ள கொங்குப் பகுதியில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கத்தைத்  தடுத்து நிறுத்துவதற்காக கடும்போர் புரிந்து அதனால் வெள்ளையரால் தூக்குக்கயிற்றை முத்தமிட்டவன் மாவீரன் தீரன் சின்னமலை.


போர்வீரர்கட்குப் பயிற்சி கொடுக்கவும், போர் ஆயுதங்கள் செய்யவும் சிவன்மலை காட்டுப் பகுதியில் போர்ப் பாசறை அமைத்தார். சிவன்மலையின் வடமேற்குப்புறம் அடிவாரத்தில் அடர்ந்த காட்டிற்குள் சின்னமலை அமைத்த அனுமந்தராயன் கோயிலின் வடபுறம் போர்ப்பாசறை அமைத்திருந்த இடம் இன்றும் அடையாளச் சின்னங்களுடன் காணமுடிகிறது.
 சின்னமலையின் இளம்பருவத்திலேயே, சிலம்பப் பயிற்சி, தடிவீச்சு, வாள்வீச்சு, புலிப்பாய்ச்சு, மற்போர் முதலிய கலைகளைக் கற்று, வீரத்திலும், கொடையிலும் சிறந்து விளங்கினான். கொங்குநாடு மைசூர் உடையார்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. மைசூர் மன்னருக்கு உட்பட்ட திண்டுக்கல்லில் குதிரைப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்த மாவீரன் ஐதர் அலி. தம் அறிவுக் கூர்மை மற்றும் ஆற்றலால், மைசூர் உடையார் மரபு அரசரிடம் ஆளும் உரிமையைப் பெற்றான். கொங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரி வசூல் செய்யப்படும் பணம் அனைத்தும் சங்ககிரிக் கோட்டைக்கு வந்து, அங்கிருந்து சீரங்கப்பட்டணம் ஐதர் கருவூலத்திற்குச் சென்று சேரும். சின்னமலை வேட்டைக்குச் சென்று திரும்பும் வழியில் ஐதர் அலியின் ஆட்கள் வரிப்பணம் வசூல் செய்து கொண்டு போவதைக் கண்டு வெகுண்டு, ’மைசூரார் நம்மை ஏன் ஆள வேண்டும்’ என்ற கேள்வியை எழுப்பி அந்தப் பணத்தைப் பெற்று வந்து ஏழை எளியோருக்குப் பிரித்துக்கொடுத்துவிடுகிறான். இப்படி பலமுறை நடந்தது. சங்ககிரி திவான் மீரா சாகிப் சின்னமலையை கைது செய்து கொண்டுவருவதற்காக 100 குதிரை வீரர்களை அனுப்பினான். ஊர் பொது மக்கள் மற்றும் சிலம்பக்கூட வீரர்கள் சண்டையிட்டு அவர்களை விரட்டியடித்தனர்.

07.12.1782ல் ஐதர் அலியின் மரணத்திற்குப் பின் திப்பு சுல்தான் கர்நாடகத்தின் தலைமைப் பொறுப்பேற்று  கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிரான போரை  தீவிரப்படுத்தினார். கொங்குநாடு அப்போது  மைசூர் உடையார்களின் ஆட்சிக்குட்பட்ட திப்புவின் வசத்தில் இருந்தது. திப்புவின் படையில் சேர கொங்கு வீரர்கள் அழைக்கப்பட்டனர். சின்னமலையின் ஆற்றல் மற்றும் வீரம் மைசூர் முழுதும் பரவியிருந்தது. திவான் கிரிமிரே சாயபுவிடமிருந்து சின்னமலைக்கு உதவி வேண்டி ஓலை வந்தது அதனால் சின்னமலையின்  ஊக்குவிப்பினால் கொங்கு வீரர்கள் பலரும் சீரங்கப்பட்டணம் சென்று திப்புவின் படையில் சேர்ந்து பயிற்சி பெற்றனர்.  1799 இல் நடந்த நான்காம் மைசூர் போரின்போது,  சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் ஆகிய போர் முனைகளில் சின்னமலையின் கொங்குப்படை திப்புவிற்காகச் சிறப்பாக போரிட்டது. குறிப்பாக மழவல்லிப் போரில் 40000 வீரர்களுடன் போரிட்டு, ஆங்கிலேயருக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது இந்த கொங்குப்படை.
’கன்னட நாட்டின் போர்வாள்’ திப்பு, 04.05.1799ல் போர் முனையில் வீரமரணமடைந்ததால்,  அந்த பேரிழப்பினால் வேதனை கொண்ட சின்னமலையும் அவர் தம் கொங்குப்படையும் ஊர் திரும்பியது. திப்புவின் மைசூர் ஆங்கிலேயரின் உடமையானது.   அதற்குப் பின்னர் ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் வலிமையான கோட்டை ஒன்றைக் கட்டி அதில் சின்னமலை படை பலத்தைப் பெருக்கியபோது, திப்புவின் படைவீரர் சிலரும் வந்து ஓடாநிலையில் தங்கிவிட்டனர். திப்புவின் வீழ்ச்சிக்குப் பின்னர் கோவை மண்டலம் ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்ததாக சீரங்கப்பட்டணம் உடன்படிக்கை அறிவித்தது. அதன்படி  கொங்கு நாடு ஆங்கிலேய ஆட்சிக்கு உட்பட்டாலும், கோவைக்கும், சங்ககிரிக்கும் இடைப்பட்ட பகுதி அவர்கள்  வசப்படவில்லை. சின்னமலையின் கண்காணிப்பிலும் அவருடைய ஆதரவாளர்களின் ஆதிக்கத்திலுமே  இருந்தது. ஆனால்  ஆங்கிலேயர் அதைத் தன்வசமாக்க விரும்பினர்.
திப்பு சுல்தானின் வீரத்தளபதி மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக் ஆங்கிலேயரின்  எதிர்ப்பாளர்களுக்கிடையே பெரும் ஆற்றல்  மிக்கவராக விளங்கினார். காவிரிக்கு மேற்கில் சின்னமலையும் காவிரிக்குக் கிழக்கே ஓசூர் கானி ஜாகானையும் தலைவராக ஏற்றுக் கொள்ளுமாறு தூண்டாஜி வாக் பணித்ததை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.கோலாப்பூரில் தங்கியிருந்த தமிழக விடுதலைக்குழு ஆங்கிலேயே எதிர்ப்புக்காரர்களை ஒன்று சேர்ந்து எதிர்க்க உதவி பெற விரும்பியது. திப்புவின் எஞ்சிய படைத் தலைவர்கள் உதவியைக் கொங்குப் போராளிகள் பெற விரும்பினர்.  சிலர் ஆதரவளிக்க முற்பட்டனர்.  சிலர் தேவைப்படும் போது படையுடன் வருவதாகக் கூறினர். மருது சகோதரர்கட்கும், கொங்குத் தலைவர்கட்கும் தொடர்பை ஏற்படுத்த விருப்பாட்சிப் பாளையக்காரர் கோபால் நாயக்கர் விரும்பினார். இவர்கள் சேர்ந்து சின்னமலையின் தலைமையில் போராட முயற்சி செய்ததே ‘கோவைப்புரட்சி” என்று அழைக்கப்படுகிறது.
கோவைக் கோட்டை ஆங்கிலேயர் வசம் இருப்பது தங்களுக்கு ஆபத்து என்பதனை விடுதலைப் போராளிகள் உணர்ந்ததால்,  கோவைக் கோட்டையை மீட்டாக வேண்டும் என்று முடிவு செய்தனர்.  திண்டுக்கல் கூட்டமைப்பினர் அதற்கான  பணியைச் செய்வதெனவும், கோட்டைமீட்பு முயற்சிக்குத் தீரன் சின்னமலை தலைமை தாங்குவது எனவும் தீர்மானம் செய்யப்பட்டது. கோவைப் புரட்சி,  ஜூன் 3.1800 அன்று நடத்துவது என்று உறுதி செய்யப்பட்டது. கோவைக் கோட்டையில் ஆங்கிலேயர் படையில் முஸ்லீம் வீரர்கள் கனிசமான அளவு இருந்தனர். அதே நாளில் மொகரம்  நோன்பும் வந்ததால், முதிய முஸ்லீம் வீரர்கள் தொழுகைக்குச் சென்றுவிடுவர். இளைய முஸ்லீம் வீரர்கள் விருந்திற்கும், கேளிக்கைகளுக்கும் சென்றுவிடுவர். இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டால் எளிதாக கோட்டையை மீட்டு விடலாம்  என்று கருதினர்.  விடுதலை  வீரர்கள் பலர் சில நாட்களுக்கு முன்னரே கோவை  சென்று மக்களின் ஆதரவுடன், மக்களோடு மக்களாகக் கலந்தனர். மக்களிடமிருந்து எல்லாவகையான உதவிகளையும் பெற முடிந்தது.
ஆனால் சின்னமலை தலைமை தாங்கித் திட்டமிட்டு நடத்திய கோவைப்புரட்சி சிலரின் தவறான நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களால், நடைபெறாமலே தோல்வி அடைந்தது. இரண்டு மாத்திற்கு மேல் செய்த முயற்சிகள் வீணாயின. விடுதலை வீரர்கள் பின்வாங்கினர். பலர் தத்தம் பகுதிகட்குத் திரும்பிச் சென்றனர். ஒரு வேளை இப்புரட்சி வெற்றி பெற்று இருந்தால் அது ஆங்கிலேயேரை எதிர்த்து நடத்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின்  ஒரு  திருப்புமுனையாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. கோவைப்புரட்சிக்குப் பின்னரும் அந்த மாவீரன் சின்னமலை சோர்ந்துவிடவில்லை. தன்னுடைய ஓடாநிலைக் கோட்டையைப் பலப்படுத்தினான். இந்திய சுதந்திரப் போர் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மூன்று பெரும் போர்கள் நடைபெற்றுள்ளன. பலம் வாய்ந்த கிழக்கிந்தியப் படையை சின்னமலை சிறுபடை கொண்டும், தன்னந்தனியனாகவும் போரிட்டு வெற்றி பெற்றது வரலாறு. காவிரிப் போர் – 1801, ஓடாநிலைப் போர் – 1802, அறச்சலூர்ப் போர் – 1804, ஆகியன. இப்படி மூன்று முறை ஆங்கிலேயர் சின்னமலையிடம் படுதோல்வியுற்ற அவமானம் தாங்கமுடியாமல், அவனை எப்படியும் வீழ்த்தவேண்டும் என்று உறுதிபூண்டு, படைபலத்தை மேலும் அதிகரித்தனர். ஐதர், திப்புவை வெற்றி பெற்று, நிஜாமைப் பணியவைத்ததைக் காட்டிலும், ஆர்க்காடு, தஞ்சை அரசர்களை அடிமைகளாக்கியும், தீரன் சின்னமலை மட்டும் சவாலாகவே இருந்து வந்தான். தமிழ்நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கப் போகிறவனாகவேக் கருதப்பட்டான்.
1805ம் ஆண்டில் ஒரு நாள் சின்னமலையில் ரகசிய உளவாளியான, ஆங்கிலேயப் படையில் பணிபுரிந்த வேலப்பனிடமிருந்து வந்த இரகசியத் தகவல் மூலமாக, 2 பெரும் பீரங்கிகளுடன் ஓடாநிலை கோட்டையை தகர்க்க ஆங்கிலேயப் படை புறப்பட இருப்பதாகவும், அதை எதிர்ப்பது சாத்தியமற்றது என்று கிடைத்த தகவலால், ஓடாநிலையை விட்டு வெளியேறி, பழனிமலை தொடரில் உள்ள கருமலையில், சமையல் செய்ய நல்லப்பன் என்பவனை உடன் அழைத்துக்கொண்டு மறைந்து வாழ முடிவு செய்தார். குறிப்பிட்ட நாளில் கள்ளிக்கோட்டையிலிருந்து ஆங்கிலேயேரின் பீரங்கிகள் ஓடாநிலைக்கு மூன்று கிலோ மீட்டர் மேற்கேயுள்ள ஓலவலசு கிராமத்தில் வந்து காத்திருந்தபோது,  சின்னமலை தப்பிய செய்தி அறிந்து கோட்டைக்குள் தேடல் நடத்தியபோது, ஆங்கிலேயர்களின் கைகளில் வேலப்பன் எழுதிய கடிதம் கிடைத்தது. கோட்டை வாயிலில் வேலப்பன் சுடப்பட்டதோடு,  பீரங்கிகள் ஓடாநிலை கோட்டையை மண் மேடாகும் அளவிற்குத் தகர்த்தெரிந்தன.  செய்தி அறிந்த , கருமலையில் தங்கியிருந்த சின்னமலை துடி துடித்துப்போனார். வேலப்பனின் இழப்பு பெரும் வேதனையானாலும், அங்கேயே தங்கி , கள்ளிவலசு, விருப்பாட்சி, பழனியில் இருந்து பாளைய ஆட்கள் உதவியுடன் பீரங்கிகள் செய்ய ஆயத்தமானார்.
தனது கவலையை மறைக்க சின்னமலை விவசாயப் பணிகளிலும் ஈடுபட்டிருந்த சின்னமலையின் வீர வரலாற்றில் விதி விளையாடியது. ஆம், பணத்தாசையால் சமையல்காரன் நல்லப்பன் காட்டிக்கொடுத்துவிட்டான்.  கொங்கு நாடே கதறியழ, முன்னும், பின்னும் பீரங்கி வண்டிகள் புடைசூழ,  சின்னமலையும் அவரது சகோதரர்களும் கைது செய்யப்பட்டு சங்ககிரி கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தங்கள் படையுடன் சேர்ந்து கொண்டால் விடுதலை செய்வதாக,  ஆங்கிலேயே தளபதி மார்ஷல் கூறிய ஆசை வார்த்தையை துச்சமென மதித்து , காரித்துப்பி கடுமையாக மறுத்தான்.
ஆடிப் பதினெட்டுப் பண்டிகை நாளான ஜூலை மாதம் 31ம் நாள் 1805ம் ஆண்டு கொங்கு நாட்டு வரலாற்றின் மோசமான நாள் என்பது போல, சங்ககிரியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பத்து வாயில்களும் மூடப்பட்டு, தமிழ் வீரர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.  சங்ககிரி மலையின் உச்சியில், பொழுதுகாண்பாழிக்குக் கிழக்கில், ஆலமரத்தின் வடக்கே தயாராக இருந்த நான்கு தூக்கு மரங்கள், சின்னமலை, பெரியதம்பி, கிலேதார், கறுப்பசேர்வை ஆகிய நால்வருக்காகக் காத்திருந்தது. அங்கு மேடையேற்றப்பட்டனர். சின்னமலையின் கண் சைகையை உணர்ந்து விலகினர் தூக்கிலிடும் ஆட்கள்.  வீரமறவர்கள் நால்வரும் தங்கள் கழுத்தில் தாங்களே  தூக்குக் கயிற்றை மாட்டிக் கொண்டனர். கொங்கு நாட்டு சுதந்திரச் சுடர் அந்த வினாடி அழிந்தது.

 நன்றி : புதிய தலைமுறை
நன்றி : வல்லமை

2 comments:

  1. தீரன் சின்னமலை வரலாற்றை சுருக்கமாக விவரித்தமை சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  2. தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி நண்பரே.

    அன்புடன்
    பவளா

    ReplyDelete